நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் 2021 – இல் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்கள் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அவர், தேர்தலில் நேரடியாக களம் காணவில்லை என்றாலும் இது அவரின் அரசியல் வருகையாகவே பார்க்கப்பட்டது. இவர் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது ஒரு பொதுஜன ஆசையாக காட்டப்படுகிறதே ஒழிய தேர்தல் அரசியல் என்று வருகிற போது முடிவுகள் நேரமாறானதாக அமைகிறது.

இது வருத்தமளிக்க கூடியதாக இருப்பினும். மாற்றத்தை நோக்கிய தேடலில் எதார்த்தத்தை புரிந்து கொண்டு எதார்த்திற்கு ஏற்ப நம் பயணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது என்பதை உணர வைக்கிறது.

sagayam IAS party results

இங்கு தமிழரை தமிழர் தான் ஆள  வேண்டும் என்கிற கட்சியும் கூட, சகாயம் அவர்கள் வேட்பாளர்கள் அறிவித்த தொகுதிகளில், சகாயம் அவர்களின் முயற்சிக்கு சாதகமாக, “தன்  கட்சி சார்பாக யாரும் அந்த தொகுதிகளில் போட்டியிட மாட்டார்கள் என்றோ, அவர் அறிவித்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம் என்றோ முடிவு எடுக்கவில்லை. மாற்றத்தை முன்னிறுத்திய எந்த கட்சிகளும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளவும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை.

சகாயம் அவர்களின் முயற்சி கள எதார்த்தில் வெற்றி பெற முடியாது என்பதே நிதர்சனம். அதன் காரணமாகவே மக்கள் செல்வாக்கு உடைய ரஜினிகாந்த் போன்றவர்கள் கட்சி ஆரம்பிக்கக்கூடும் என்னும் தோற்றம் இருக்கும் போது அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் பதற்றம் சாகாயம் அவர்கள் அரசியலுக்கு வரும் போது ஏற்படுவதில்லை.ஆனாலும், சாகாயம் அவர்களும் அவரின் வேட்பாளர்களும்  எடுத்த முயற்சிக்கு  கதிர் விஜயம் குழு தலைவணங்குகிறது.

பொது ஜன பார்வையில் சகாயம் போன்ற அதிகாரிகள், நேர்மையற்றதாக கொள்ளப்படும் ஊடங்களின் வழியே நேர்மையானவராக காண்பிக்கப்பட்டு நேர்மையானவராக அறியப்படுகின்றார்கள்.

நேர்மையான அதிகாரிகள், நேர்மையான அரசியல்வாதிகள் என்று யாரையேனும் ஒருவரை  நேர்மையற்றதாக கொள்ளப்படும் ஊடகமோ  அரசியல் களமோ முன்னிறுத்தும் போது  ஓரிரு நிமிடங்கள் கொண்டாடி தீர்க்கின்றோம். கொண்டாடி தீர்த்தபின் மறந்தும் விடுகின்றோம்.நேர்மை, இங்கே கொண்டாட படக்கூடியதாக ஒன்றாக; நேர்மை, இங்கே இயல்பு அல்லாத ஒன்றாக  மாறிவிட்டதை நாம் உணர வேண்டும். அதற்கு காரணத்தை தேடினோமேயானால் நம்மில் தொலைந்த போனவற்றில் நேர்மையும் ஒன்றாக இருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

சகாயம் அவர்களை பொறுத்தவரையில் பெப்சி ஆலையை சீல் வைத்ததற்காகவும். க்ரானைட் குவாரி முறைகேடுகளை வெளிகொண்டுவந்தற்காகவும் பிரபலமாக அறியப்படுகிறார். இதில் சகாயம் அவர்கள் க்ரானைட் குவாரி முறைகேட்டை விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டதை பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 22 மார்ச் 2011 முதல் 28மே2012 வரை மதுரை ஆட்சியராக இருந்த காலத்தில், க்ரானைட் குவாரி முறைகேட்டின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், க்ரானைட் குவாரி தொடர்பாக மாதத்திற்கு ஒரு முறையேனும் நடக்க வேண்டிய District-Level Task Force (DLTF) and Taluk-Level Task Force மூலம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய ஆய்வுகளை செப்டம்பர் 2011இல்  (ஒரு முறை) மட்டுமே மேற்கொண்டதோடு 1.20இலட்சம் சதுர மீட்டர் அளவிற்கு பாறைகள் வெட்ட அனுமதியும் கொடுக்கப்பட்டு  இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டி அந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக உயர்நீதி மன்றத்தால் க்ரானைட் குவாரி முறைகேட்டை விசாரிக்க சாகயம் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது, அந்த வழக்கில் தமிழக அரசு க்ரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் 88 குத்தகைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் சட்டவிரோதமான குவாரிகளில் மீது 36 வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.

சகாயம் அவர்களின் நேர்மையை கேள்விக்குட்படுத்துவதற்காக இந்த வழக்கு தொடர்பான விவரங்களை நாம் சுட்டிக்காட்டவில்லை. இங்கு பத்து  இடங்களில் திருட்டு நடக்கிறதென்றால் அரசியல் காரணங்களுக்காக ஒன்று பெரிதுபடுத்தப்படுகிறது என்பதை எடுத்து சொல்லவும்.

மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவர் அரசியலுக்கு வரும் போது அவருக்கு என்ன தெரியும் என்ற கருதுகோள் முன்வைக்கப்பட்டு சகாயம் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் புகுத்தப்படுவதோடு, செல்வாக்கு உள்ளவர்கள் பின்னால் மக்கள் ஒரு அணியில் திரள்வதை தவிர்க்கவும் நடக்கும் அரசியல் விளையாட்டை சுட்டிக்காட்டிடவும், நேர்மையான அதிகாரிகளின் நிர்வாகத்திலும் குறைகள் இருக்கக் கூடும் என்பதனை எடுத்துக்காட்டவுமே மேற்சொன்ன வழக்கு விவரங்ககளை இங்கே சுட்டிக்காட்டினோம்.

ஊடங்ககளால், அல்லது ஒரு சில அரசியல்வாதிகளால்  திணிக்கப்படும் கருத்துக்கள் எதார்த்தத்திற்கு சற்றும் பொருந்ததாகவே உள்ளது.

தேர்தல் அரசியலை பொறுத்தவரையில்

  • மக்கள் செல்வாக்கு
  • இரு பெரும் இயக்கத்தை எதிர்க்கும் அளவிற்கு கட்டமைப்பை உருவாக்க வல்ல ஆற்றல் கொண்ட ஆளுமை

இவ்விரண்டே பிரதானமாக இருக்கின்றது. அத்தகைய ஒருவர் வரும் காலம் வந்தால் அவருக்கு என்ன தெரியும் என்பது போன்று அரசியல்வாதிகளால் நம்முள் திணிக்கப்படும் கேள்விகளை நாம் புறந்தள்ளவேண்டும். அதற்காக நேர்மையான அரசு அதிகாரிகள், அரசியலுக்கு வரக்கூடாது என்பதில்லை. அவர்கள் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் பின்னால் அணி சேர்வதே எதிர்ப்பரசியலை எதிர்கொள்வதற்கான சரியான அணுகுமுறையாக இருக்கும்.

இந்த இடத்தில் ஐயா தமிழருவி மணியன் அவர்களை பற்றி சொல்ல வேண்டும் மாற்றத்திற்கான முன்னெடுப்பில் முதல் முயற்சியாக சிறு கட்சிகளை மக்கள் செல்வாக்கு கொண்ட விஜயகாந்த்தின் தலைமையில் அணிதிரளச் செய்தார். கூட்டணி கட்சிகளின் முரண்பாடான பிரச்சார போக்கும், மாற்றத்தை தருவதாக இன்னும் சில கட்சிகள் தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரித்தததும் தேர்தலில் வாக்காளர்கள் இடையியே ஒரு குழப்பத்திற்கு காரணமாக ஆகி பழைய படி அதே இரண்டு கட்சிகள் வெற்றிபெற்றன.

ஐயா தமிழருவி மணியன் மாற்றத்திற்கான இரண்டாவது முயற்சியாக ரஜினியை அரசியல் களம் காண செய்ய வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கினார் காலம் அதற்கும் வழி செய்யவில்லை.

இளைஞர்களின், நேர்மையான அதிகாரிகளின், அரசியல் வெற்றிக்கு ரஜினி போன்றவர் நிச்சயம் தேவைப்படுகிறார். சகாயம் அரசியலுக்கு வருகிறார் என்று இங்கு யாரும் வழிவிடவில்லை. ரஜினி வரவில்லை என்று பெரு மூச்சு விட்டவர்கள் எவரும் ரஜினி சொன்னது போன்று சாதரண படித்த இளைஞர்களுக்கும் நேர்மையான அதிகாரிகளுக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. இரு பெரும் இயக்கங்கள் அல்லாத ஒரு ஆட்சி அமைய ஒரு வேலை காலம் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான ஒரு வாய்ப்பை தருமானால் நாம், ஊடங்ககளாலும் அரசியல்வாதிகளும் திணிக்கப்படும் எண்ணங்களுக்கு இடம் தராமல் ஒரு அணியாக திரள வேண்டும் என்பதையும்; சக்தி எல்லாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.அப்படியான ஒரு நிலைப்பாட்டிற்கு நாம் வந்தால் மட்டுமே மாற்றம் சாத்தியப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *