கட்சிகள் தங்குளுக்குள் மாறி மாறி குறைசொல்லிக்கொண்டு இருந்தாலும்; நிர்வாக ரீதியிலான சிக்கல்களை ஒரே மாதிரியான அணுகுமுறையுடனே தான் அணுகின்றன.சில சிக்கல்களுக்கு எல்லாரும் ஒரே மாதிரியான தீர்வைத் தான் தேட முடியும்.

அந்த வகையில் தற்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க. வின் ஆட்சி திராவிட மாடல்  ஆட்சி என்று சொல்லுவதை விட தாமரை மாடல் ஆட்சி எனலாம்.

தமிழக பா.ஜ.க.வானது  தி.மு.க.வின் இந்த தாமரை மாடல் ஆட்சியின் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதாக சொல்லிக்கொள்ளும் வரை நமக்கு எந்த விமர்சனம் இல்லை. ஆனால், தாமரை மாடல் ஆட்சியின் மிக முக்கிய சாராம்சங்களை தி.மு.க பின்பற்றும் பொழுது அதை பா.ஜ.க எதிர்ப்பதும் போராட்டம் அறிவிப்பதும் திராவிட மாடல் எதிர்ப்பாகவே தெரிகிறது.

அரசியல் கட்சிகளின் இந்த மாதிரியான அணுகுமுறைகளை மாற வேண்டும் மக்கள் அதை நோக்கி அரசியல் கட்சிகளை நகர்த்த வேண்டும். அதற்கு நாம் நிர்வாக சிக்கல்களை புரிந்து கொள்ளவேண்டும்.

 தேர்தல் முடிந்த பின்,நாம் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்த வரிகள்:

” நம் தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகள் எல்லாமுமே எப்பொழுதுமே அரசின் எல்லா நடவடிக்கைகளையும் அது சரியா, தவறா என்றெல்லாம் ஆராயாமல் எதிர் கட்சி என்கிற ஒரே காரணத்தினால் மட்டுமே எதிர்த்தே வந்து இருக்கின்றது. இந்த எதிர்ப்பரசியல் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.

நிர்வாகம் என்று வருகின்ற போது, எதிர்கட்சி ஆளும் கட்சியாகிவிட்டபின்பு அவர்கள் எதிர்த்த அநேகமான விஷயங்களை அவர்களால் ஒதுக்கிவிட முடியாது.”

இப்படி தி.மு.க.வால்  தவிர்க்க முடியாமல் போனது  தான் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் முயற்சி. இந்த பட்டியல் இன்னும் பெரியது. அது இன்னும் நீண்டு கொண்டே செல்லலாம்.

எல்லாம் சரி, இந்த தொடரில் நாம் deceptive facts  பற்றி தானே பார்த்து வருகிறோம்?

ஆம்.

இந்த மின் கட்டண உயர்வுக்கு பின், சில மாநிலங்களை குறிப்பிட்டு அந்த மாநிலங்களை விட மின் கட்டணம் இங்கே குறைவு என்கிற வாதங்களை எல்லாம் பார்க்க முடிகிறது.

இந்த மின் கட்டண உயர்வுக்கு பின், சில மாநிலங்களை குறிப்பிட்டு அந்த மாநிலங்களை விட மின் கட்டணம் இங்கே குறைவு என்கிற வாதங்களை எல்லாம் பார்க்க முடிகிறது.

இந்த கட்டண உயர்வை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கட்டண  உயர்வு என்கிற விமர்சனத்தோடு இந்த கட்டண உயர்வுக்கு எதிராக பா.ஜ.க. போன்ற கட்சிகள் போராட்டம் அறிவிப்பதையும் பார்க்க முடிகிறது.

மூச்சுக்கு முன்னூறு தரம் திராவிட மாடல் என்று மார்தட்டி கொள்ளும் தி.மு.க. எப்போதும் போல் இதற்கும் பா.ஜ.க.வை குறை சொல்ல தவறவில்லை.

மின் கட்டண உயர்வோடு,பல நிகழ்வுகளை தொடர்ப்படுத்தி பார்க்க வேண்டியது உள்ளது.

1. வாஜ்பாய் அரசிலும், மோடி அரசின் ஆரம்ப காலத்திலும் பொருளாதார ஆலோசனை குழுவில் இருந்த வல்லுநர்களை சிறப்பு பொருளாதார ஆலோசனைக்குழுவாக தி.மு.க அறிவித்தது. அதோடு, வெளிநாட்டு வங்கிகளில் வேலை பார்த்த அனுபவம் கொண்ட மேதை என்கிற அறிமுகத்தோடு ஒருவரை நிதியமைச்சராக நியமதித்தது.

தி.மு.க நியமித்த சிறப்பு பொருளாதார குழுவின் பரிந்துரைகளை பா.ஜ.க செயல்படுத்திய பொழுது எதிர்ப்பை  காட்டிய தி.மு.க. அதே நபர்களை சிறப்பு பொருளாதார ஆலோசனை குழுவாக நியமித்த பொழுதும், மேதாவி நிதிஅமைச்சரின் பத்திரிகை சந்திப்புகளை பார்த்த பொழுதும் ஆகா, தமிழகத்தில் பெரிய மாற்றம் நிகழப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கின்றது.

ஆம். மதுபான விற்பனை மூலமும், அறநிலையத்துறை மூலமும் பெரும் வருமானம் ஈட்டும் மாநிலத்தில் அரசின் கீழ் இயங்கும் துறைகளை நஷ்டத்தில் இருந்து மீட்க இந்த வல்லுனர்களிடமோ மேதாவி நிதியமைச்சரிடமோ வரி உயர்வு; கட்டண உயர்வு இவைகளை தாண்டி வேறு எந்த தீர்வும் இருப்பதாக தெரியவில்லை.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட  மத்தியில் தங்களை விட அதிக காலம் ஆட்சி செய்த காங்கிரஸை குறை சொல்வதற்கான இடம் இருக்கின்றது. எதிர்கட்சியாகவோ அல்லது ஆளும் கட்சியாகவோ தமிழக அரசில் ஏதேனும் வகையில் அரை நூற்றாண்டாக அக்கிரமித்துக்கொண்டு இருக்கும் தி.மு.கவிற்கு அதற்கான இடமும் இல்லை.ஏனெனில் இது பெரியார் மண்.

2. மறைமுக வரி கம்மியாக இருக்க வேண்டும்;மறைமுக வரி நேரடியாக மக்களை பாதிக்கும் என்றெல்லாம் பாடம் நடத்திய மாநில நிதியமைச்சரும் அடங்கிய இந்த அரசு தான் இது போன்ற  கட்டண உயர்வுகள் பொருளாதாரத்தின் மீதும் மக்கள் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நினைக்கின்றது போலும்.

நம் மாநில நிதியமைச்சர்,மத்திய அரசு  ஜி.எஸ்.டி  நிலுவையை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது என்று பேட்டிகள் தோறும் பேசி கேட்டு இருப்பீர்கள்.அவருடைய அந்த பேச்சு மத்திய அரசு தமிழகத்தின் பணத்தை வைத்துக்கொண்டு ஏமாற்றுவது போன்ற ஒரு பொது பிம்பத்தை ஏற்படுத்தும். நிர்வாக ரீதியில் இப்பொழுது செலுத்தப்பட்டு விட்ட அந்த நிலுவை தொகை எல்லாம் சாதாரணமானது தான்.

இன்றைய நிலவரப்படி, தமிழக மின்வாரிய துறை, மத்திய அரசு சார்ந்த மின் வாரியங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை  4,210 கோடி.இவையல்லாமல், மத்திய அரசு சார் நிறுவனமான REC மற்றும்  PFC க்கு தமிழக மின்வாரியம் ₹71,906.64 கோடி  கடன் செலுத்த வேண்டியுள்ளது.இந்த நிலுவைத் தொகையெல்லாம் பற்றி நம் மாநில நிதியமைச்சர் பேசுவதில்லை அப்படி பேசினாலும் குறை சொல்ல அ.தி.மு.க.வை சேர்த்துகொள்ளவார். பெருமை பேசும் நேரங்களில் நமக்கும் கேட்கும் திராவிட மாடல் முழக்கம் இப்படியான குறைகள் வெளிப்படும் பொழுது கேட்பதேயில்லை.

3. எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய கடன்களுக்காகவே பெட்ரோல் மீதான கலால் வரியை அதிகமாக வைத்து இருக்க வேண்டி இருப்பதாய் சொல்லி வந்த அதே பா.ஜ .க.வின் தமிழக தலைவர் தான்  இன்று மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் அறிவித்து இருக்கிறார்.

மற்ற கட்சிகளை  குறை சொல்லியே பழகிய அரசியல்வாதிகள் நிர்வாக குறைகளை நேரடியாக மக்களிடம் பேசுவதே இல்லை.

ஜி.எஸ்.டி  நிலுவையை பற்றி பேசும், பெட்ரோல் மீதான, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்  வரியை குறைந்துவிட்டதாக பேசும் நிதியமைச்சரிடம் மத்திய நிதித்தொகுப்பில் இருந்து மாநிலம் பெறும் மற்ற பயன்களைப் பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்பவதில்லை.

மின்கட்டண உயர்வை கண்டிக்கும் அரசியல் கட்சிகளிடமும் மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் அறிவிக்கும் தலைவர்களிடமும் மின்வாரிய கடன் சுமையை தீர்ப்பதற்கான வழிகளை நாம் கேட்பதில்லை.

இந்த கட்டண உயர்வும் கூட பெரிதாக மின்வாரியத்தின் மீதான சுமையை குறைக்க போவதில்லை. ஆனால், இந்த கட்டண உயர்வு அவசியமான ஒன்று தான்.

இந்த கட்டண உயர்வு மக்களை பாதிக்கும் என்பது உண்மை என்றாலும் கட்டணம் உயர்த்தப்படாவிட்டாலும் அரசிற்கு அதாவது மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.

மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக குறை சொல்லும் தி.மு.க.வின் குற்றச்சாட்டில் ஒரு வகையில் உண்மை இருந்தாலும்.

மின்வாரியத்திற்கு தமிழக அரசு செலுத்தவேண்டிய மானியங்களை செலுத்தாமல்; கட்டணங்களை உயர்த்தாமல்; இலவசங்களை அறிவிப்பதன் மூலம் மக்களிடம் தங்களை நாயகர்களாக காட்டிக்கொள்ள முற்படும் போக்கு இவற்றை ஏதேனும் ஒரு அமைப்பு ஏதேனும் ஒரு கட்டத்தில் தடுக்க வேண்டிய அவசியம் இருக்கவே செய்கின்றது.மத்திய அரசு சார் நிறுவனங்கள் மூலம் தமிழக மின் வாரியம் பெறும் கடன்களின் அடுத்த தவணைகள் பெறுவதற்கு கட்டண உயர்வு ஒரு pre -condition  ஆக இருப்பதாக அறியப்படுகிறது.

மத்திய அரசோ மாநில அரசோ இவையெல்லாம் ஒரு வகையில் மக்களின் பணம், அல்லது மக்களின் கடன். இந்த கட்டணங்கள் உயர்த்தப்படாமல் அது இந்த நிறுவனங்களை பாதிக்குமாயின் அதுவும் மக்களையே பாதிக்கும்.

பெட்ரோல் மீதான வரி உயர்வு சரியானது தான்.  ,ஜி.எஸ்.டி சரியானது தான்.  தி.மு.க. எதிர்த்தது. ஆனால் , இன்று தி.மு.க. அரசும் கூட ஜி.எஸ்.டி மீதான சமீபத்திய திருந்தங்களுக்கான பரிந்துரைகளை அளித்து இருக்கின்றது. பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை சொன்ன படியே குறைக்க முடியாமல் திணறுகிறது.

சிலிண்டர் மீதான மானியம் வேண்டாம் என்பவர்கள் தானாக முன்வந்து எழுதி தரலாம் என்கிற முழக்கத்தை பா.ஜ.க. முன்னெடுத்தது. பின், தகுதியானவர்களுக்கு மட்டும் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு மானியங்களை செலுத்த ஆரம்பித்து,நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ளவர்கள் மட்டுமே அநேகமான மானியங்களை பெற முடிவது போன்ற ஏற்பாட்டை செய்தது.

தாமரை மாடலின் வரி உயர்வு மானிய குறைப்பு, வங்கிக்கணக்கிற்கு நேரடியாக மானியம் செலுத்தும் முறை என்கிற அதே முழக்கங்களை  தான் இன்று திராவிட மாடல் அரசும் முன்னெடுத்துகின்றது. காரணம், இவையெல்லாம் மாநில அளவில் இன்னமும்   முழுதாய் நிறைவேற்ற படாத பொருளாதார நிபுணர்களின் பரிந்துரைகளே. பல காலமாய் மத்திய அரசு அறிவுறுத்தும் பரிந்துரைகளே.

அந்த வகையில் மின் கட்டணத்தை உயர்த்த சொல்லி அழுத்தம் கொடுத்து இருந்தால் அதுவும் சரியானது தான். மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதும் சரியானது தான்.மற்ற சில மாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்கிற வாதம் உண்மை என்றாலும், அந்த மாநிலங்களின் மின்வாரியத்தின் கடன் சுமையை விட தமிழக மின் வாரியத்தின் கடன் சுமை அதிகம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கட்டண உயர்வு வரி உயர்வு போன்ற நகர்வுகளில் சில குறைபாடுகள் இருக்கலாம் அவை மேம்படுத்தவேண்டிய தேவை இருக்கலாம் ஆனால், இது தவிர்க்கவே முடியாதது,இதை மக்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதில் எல்லா அரசியல் கட்சிகளும் தீர்மானமாக இருக்கின்றது.

அதன் காரணமாகவே, ஒவ்வொரு முறையும் இவர்களின் அரசியல் விளையாட்டு இதை சுற்றியே இருக்கின்றது.

முந்தைய ஆட்சியில் ஸ்டாலின் போராடியதும். இப்போது, பா.ஜ.க போராட்டம் அறிவித்து இருப்பதும்.

விலைவாசி ஏற்றத்தைப்பற்றி எந்தவித சலனமும் இல்லாத வகையிலான சூழல் உருவாக வேண்டும். விலை எத்தனை அதிகமாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு சமூகம் ஏற்றம் அடைய வேண்டும். அதற்கு, சரியான வேலைவாய்ப்பும் விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ற வகையிலான ஊதியத்தையும் உறுதி செய்யும் நடவடிக்கைகள் தான் அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்க வேண்டும்.

சமூகத்தில் மானியம்இல்லாமல்;  இலவசமில்லாமல்; விலைவாசி உயர்வை சமூகத்தில்,பொருளாதார ரீதியில் கடைநிலையில் இருக்கும் ஒருவரால் எதிர்கொள்கிற முடிகிற அளவிற்கு அவருக்கான வருமானத்தை உறுதி செய்யும் சூழல் இருக்க வேண்டும் அதை நோக்கிய அரசு பயணப்பட வேண்டும்.அதற்கு முதலில், அரசை நடத்தும் அரசியல்வாதிகள் மாறி மாறி குறை கூறி போராட்டம் நடத்துவதை தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட வேண்டும்.மக்கள் தான் அந்த அரசியல்வாதிகளை அந்த இடத்தை நோக்கி நகர்த்த வேண்டும்.

அது வரையில், அந்த மாற்றம் நிகழும் வரையில் நம் தளத்தில், deceptive  facts  தொடர் , செய்தி ஆய்வுகள், வாக்குறுதியும் செயல்பாடுகளும் தொடர், எல்லாம் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *