தியேட்டர்க்கு சென்று  படம் பார்ப்பது என்பது எங்கள் வீட்டில் நடக்கும் அரிய நிகழ்வு. ரஜினி படமோ கமல் படமோ வந்தால்; அந்த படம் வரும் நேரத்தில் வீட்டு சூழல் சரியாக இருந்தால்; அம்மாவும் அந்த படம் பார்க்கிற செலவை  பெரிதுபடுத்தாமல் இருந்தால்; அப்பா அதற்கு இசைந்தால்  என்று இத்தனை if condition களை மீறி தியேட்டருக்கு சென்று பார்த்த படங்கள் மிக குறைவு. ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’ வகை புது படங்களையே அதிகம் பார்த்து இருக்கின்றேன். அப்போது, நான் என்னுடைய மேனிலை பள்ளியில் இருந்தேன். தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்த என் நண்பர்கள் படத்தின் நகைச்சுவை காட்சிகளை மேலோட்டமாக விவரித்து சிரித்தவண்ணமாய் இருந்தார்கள். படத்தின் சில காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த நான், ஆனந்த விகடனில் வரும் மன்னர் ஜோக்ஸ் கருத்துக்களை பார்த்து (copy) ஒருத்தர் படம் எடுத்து இருக்கின்றார் என்றே எண்ணினேன்.

ஆனால்,படத்தை முழுதும் பார்த்தவிட்ட பின், படத்தை பற்றியும் இயக்குனர் பற்றியுமான என் எண்ணம் முற்றிலும் மாறிவிட்டு இருந்தது.

ஆனந்த விகடனில் வந்த ஜோக்ஸ்களை எழுதிய அதே நபர் இயக்கிய படம்  தான், 23ம் புலிகேசி என்பது மிக தாமதமாக இயக்குனர் சங்கரின் பேட்டியின் மூலம் தெரியவந்தது.ஆனால், அதற்கும் முன்பாகவே 23ம் புலிகேசி படம் பார்த்த நாள் முதல் சிம்பு தேவனின் ரசிகனாகி விட்டேன் எனலாம்.

 நான் சொல்லும் இந்த சிம்புதேவனின் ஊர் பெயர், பெற்றோர் பெயர், என்று எந்த சிறுகுறிப்பும் எனக்கு தெரியாது. அவருடைய முகத்தையும் கூட மிக சில நேரங்களில் அரிதாக பத்திரிகைகளில் வரும் புகைப்படங்களில் முழுமையான கவனம் அற்ற பார்வை கொண்டே பார்த்திருக்கின்றேன். மேற்சொன்ன அடையாளங்களில் என்ன பெரிதாய் இருந்துவிட போகிறது. சிம்பு தேவனின் அடையாளமாக நான் பார்ப்பது அவரின் படைப்புகளை தான். சிம்புதேவனின் ரசிகனாகி விட்டேன் எனும் போது அந்த படைப்புகளின் ரசிகனானதையே நான் சுட்டுகிறேன். அந்த படைப்புகளின் வழியாகவே சிம்பு தேவன் என்னும் பிம்பம் என் மனதில் விஸ்தரித்து இருக்கின்றது.

சமீபத்தில் அவருடைய கசட தபற  படம் பார்த்தேன், பார்த்தவுடன் படத்தை பற்றி (விமர்சனமாக இல்லாமல்) எழுத வேண்டும் என்று தோன்றியது.திரைப்படங்களை பற்றி நம் வலைத்தளத்தில் இதற்கு முன் நாம் எழுதியது இல்லை இனிமேல்  தொடர்ந்து எழுதுவோமா? என்பதும் சந்தேகமே. ஆனால், பெரிதும் கொண்டாடப்படாத சிம்பு தேவனை பற்றி நிச்சயம் எழுதியாக வேண்டும்.

ஒருவர் செய்யும் தவறை தவறு செய்தவரிடம் எடுத்து சொல்லும் போது, சில வகைகளில் எடுத்துச்சொல்ல முடியும். முதலாவது வகை  நேரடியாகவும் கோபமாகவும் சொல்வது;அது கேட்பவருக்கு கோபத்தை வர வைக்கலாம். மற்றொரு வகை,சிரித்தபடியே விளையாட்டாக சொல்வது அது விளையாட்டாக சொன்னதாக முடிந்துவிடும். இதில், சிம்பு தேவன் ஒருவர் செய்த தவறை அவரிடம் எடுத்துச்சொல்வதில் மூன்றாவது வகையை சேர்ந்தவர்.

நானும் என் நண்பனும் இதை பற்றி பேசிய போது  அவன் ஒரு நிகழ்வை பற்றி சொன்னான், சார்லி சாப்ளினின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படம், ஹிட்லரை விமர்சனம் செய்து எடுக்கப்பட்டது. அந்த திரைப்படத்தை பார்த்த ஹிட்லர் ரசித்து சிரித்ததாக சொன்னான்.

சார்லி சாப்ளின் போன்ற மூன்றாவது வகையை சேர்ந்தவர் சிம்புதேவன்.

படத்தின் தலைப்புக்காகவும்; சில வசனங்களுக்காகவும்; ஓரிரு காட்சிகளுக்காகவும் எதிர்ப்புகள் கிளப்பும் சமூகத்தை சிம்புதேவன் விமர்சிக்கும் போது, யாரும் எதிர்ப்பதில்லை மாறாக சிரிக்கிறார்கள்! ரசிக்கிறார்கள்!

“விளம்பரப்படுத்தினால் நம் ஊர் மக்கள் ஆட்டு மூத்திரத்தை கூட சுத்த இளநீர் என்று ஒரு கை பார்த்துவிடுவார்கள்” என்று அன்றைய தேதியில் நம்மிடம் இருந்த அறியாமையை விமர்சிக்கும் வேளையில் நம்மை சிரிக்கவும் வைத்துவிடுகிறார் சிம்புதேவன்.

தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு என்ற அரசின் முடிவையும் கூட அதே படத்தில் விமர்சித்து இருப்பார். இப்படி 23ம் புலிகேசி படம் நெடுகிலும் சமூகத்தின் அறியாமையையும் நம் நாட்டின் அரசியலையும் விமர்சித்து இருந்தார். அதற்காக யாரும் கோபப்படவில்லை எந்த அரசியல் கட்சியும் அவரை எதிர்க்கவில்லை, எல்லோரும் ரசித்தார்கள், சிரித்தார்கள். இது தான் சிம்பு தேவன்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என்கிற பெயரில் முழுக்க முழுக்க குழந்தைகள் ரசிக்கும்படியான குழந்தைகளுக்கான படமாக அவர் எடுத்த படத்தில், அணு ஆயுத ஒப்பந்தங்களில் வளர்ந்த நாடுகள் செய்யும் அரசியலை விமர்சிக்க அவரால் மட்டுமே முடிகிறது.

இத்தகைய விந்தைகளை ஒரு ஞானியால் மட்டுமே செய்ய முடியும். இந்த விந்தைகளை செய்ய முடிகிறது என்பதற்காக மட்டும் அவரை நீங்கள் ஞானியாக ஏற்றுக்கொள்ள வேண்டாம்.

“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.”

ஆற்றல்,செல்வாக்கு, பணம் இப்படியான செல்வங்கள் இழிவானவர்களிடமும் கூட இருக்கின்றது அருள் எல்லோரிடமும் இருப்பதில்லை அருள் கொண்டவர்களையே நாம் தெய்வமாக பாவிக்கிறோம். நாம் வணங்கும் தெய்வங்களையும் கூட அருள்மிகு என்கிற அடைமொழியோடே விழிக்கிறோம். இந்த பாடத்தை மிக மென்மையான படமாக எடுப்பதற்கு அவரால் முடிகிறது.

எந்த ஒரு சக்தியும் இல்லாத போதும் அருளுடையவரே கடவுளாக இருக்க முடியும்; கடவுளின் எல்லா சக்தியும் ஒருவர் பெற்றாலும் கூட அருள் இல்லாதவர் கடவுளாக முடியாது என்னும் ஞானஉபதேசத்தை அறை எண் 305இல் கடவுள் என்னும் படத்தில் நடத்தியிருப்பார்.

வாழ்வியலின் ஆழங்களை தேடி உணரும் ஒருவரால் மட்டுமே இத்தகைய கருத்துக்களை உள்வாங்கி உணர்ந்து வெளிப்படுத்த முடியும். இத்தகைய ஒருவர் நிச்சயம் ஞான மார்க்கத்தின் உயர் வகுப்பை அடைந்த ஞானியாக தான் இருக்க முடியும்.

அவரின் ஞான உபதேசத்தின் புது பாடம்;அரசியல் விமர்சனத்தின் புது எபிசோட் தான் கசட தபற. 

கசட தபற, அழுத்தமான விஷயங்களை அழுத்தமாக சொல்லும் வார்த்தைகளில் வரும் வல்லின எழுத்தினம். வாழ்வியலின் அழுத்தமான பாடங்களை சொல்வதே சிம்புதேவனின் கசட தபற. ஆனாலும், அதனை அவர் பாணியில் மென்மையாக சொல்லியிருக்கின்றார். வல்லினத்தை மெல்லினமாக இனம் மாற்றியிருக்கிருக்கின்றார். இது தான் அவருக்கு தெரிந்த கண்கட்டி வித்தை. நீண்ட நெடிய வசனங்களால் அவர் காட்சிகளை நெருக்குவதில்லை.அவர் படம் பார்க்க வரும் யாரையும் அவர் அழ செய்யவதில்லை. நம் உணர்ச்சிகளை தூண்டும் வண்ணம் அவரின் கதா பாத்திரங்கள் நரம்பு புடைக்க பேசுவதில்லை.விளையாட்டு காட்டி சோறு ஊட்டும் அன்னை போல அவர் சொல்ல வருவதை நம்முள் புகுத்தி விடுவார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். கசட தபற கதைகளில் வரும் கதை மாந்தர்கள் சமூகத்தின் ஒவ்வொரு நிலை மனிதர்களின் மாதிரிகள்(Samples).

137 நிமிடம் ஓடும் படத்தின் கடைசி கட்ட காட்சிகளில், எந்த தவறும் செய்யாமல் ஒருவன் மரணதண்டனை ஏற்க இருப்பதை மனம் ஏற்காமல் தவிக்கிறது. கதை ஓட்டத்தில் ஏற்பட்ட தவிப்பை விட, சிம்பு தேவனின் கதைகள் இப்படி(tragedy யாக) முடிவதில்லையே என்னும் தவிப்பே அதிகமாக இருந்தது.முடிவாக அவர் ஏமாற்றவில்லை சுபமாகவே முடித்தார்.தவறு செய்யாத ஒருவன் தண்டிக்கப்படுவதில்லை, தண்டிக்கப்படுகின்ற ஒருவன் ஏதோ ஒரு வகையில் அந்த தண்டனைக்கு பாத்திரமாகிறான் என்பதே இயற்கையின் விதி.ஒரு ஞானி எப்போதும் இயற்கை விதிகளை மீறுவதில்லை அதுமட்டுமல்லாமல் சிம்பு தேவன் நம்மை சிரிக்கவைத்தே பழகியவர் அவர் எப்படி அழுகாச்சி காவியமாக அவர் கதையை முடிப்பார்?

“யாரை கொன்றால் நாம் வாழ விரும்பமாட்டமோ அவர்களை எல்லாம் கொல்வதினால் இந்த உலகமே எனக்கு கிடைத்தாலும் வேண்டாம், மாறாக அவர்கள் என்னை கொன்றால் கூட உத்தமம்” என்று நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் போதித்த பாடம் தான் கீதை

ஆன்மாவை யாரும் கொல்ல முடிவதில்லை அழிய போகிற உடல்களை மட்டுமே நீ கொல்ல போகிறாய்.க்ஷத்திரியனாக இருந்துவிட்டு உன் கடமையில் இருந்து தவறாதே என்று ஆரம்பித்து 18 அத்தியாயங்களாக பாடம் நடத்தினார் கிருஷ்ணர்.

உயிர்களை கொல்வதை விரும்பாத தம்பதியர், கணவனுக்கு காவல்துறையில் வேலை,அதிலும் கொலை செய்யும் வேலைகளே பணிக்கப்படுகிறது என்று தன் உபதேஸத்தை ஆரம்பிக்கும் சிம்புதேவன், கண்ணன் அர்சுனனை வேறு ஒரு timeline க்கு இட்டு சென்றது போல நம்மை கதைக்குள் இட்டு செல்லுகிறார்.

அர்ஜுனனுக்கு பாடம் நடத்திய கிருஷ்ணர், ஒரு இடத்தில்,அலியின் தன்மையை அடையாதே என்கிறார். ஒரு க்ஷத்திரியன் போருக்கு வந்துவிட்டு போர் புரிய மாட்டேன் என்கிற இரட்டை மனநிலையில் இருப்பதையே அவ்வாறு சொன்னார். அத்தகைய இரட்டை மனநிலையில் இருக்கும் காவல் அதிகாரிக்கு, கடமைக்காகவும் தன் இருப்பிற்கு பங்கம் நேர்வதை தவிர்பதற்குமான போராட்டத்தில் செய்யப்படும் கொலைகள் அவசியமானதே என்று புரியவருகிறது. வாழ்வியல் நிகழ்வுகளே அந்த மாற்றத்தை அந்த காவல் அதிகாரியிடம் கொண்டுவருகிறது.இதை படித்துவிட்டு கிருஷ்ணரும் சிம்புதேவனும் கொலைகளை ஆதரிக்கிறார்கள் என்று கிளம்பி விடாதீர்கள்.இயற்கையில் எல்லா உயிரினமும் தன்னை காத்துக்கொள்ளும் ஆயுத்தத்துடனேயே பிறந்திருகின்றது. தற்காப்புக்காகவும் உணவிற்காகவும் செய்யப்படும் கொலைகளை இயற்க்கை அங்கீகரிக்கிறது. இங்கே நாட்டை காப்பாற்ற வேண்டிய க்ஷத்திரியர்கள்(காவலர்கள்) அவர்களின் கடமையாக  நாட்டின் நன்மைக்காக செய்ய வேண்டியதை பற்றியே பேசப்பட்டிருக்கின்றது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

ஆணுக்கு பெண் என்றுமே சரி சமம் கிடையாது.இயற்கையின் எந்த படைப்பும் மற்றொரு படைப்பை நிகர் செய்யாது.இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் அதற்கான பிரத்தியேக கடமைகளையும்  அந்த பிரத்தியேக கடமைகளை நிறைவேற்றுவதற்கான பிரத்தியேக அம்ஸங்களையுமே கொண்டுள்ளது.இதனை புரிந்து கொள்பவர்கள், யார் பெரியவர் என்கிற வாதத்திற்கோ அல்லது இவர் இவருக்கு சமம் என்கிற வாதத்திற்கோ செல்லுவதில்லை. இயற்கையின் ஒவ்வொரு உயிரும் மற்றொன்றை சார்ந்திருப்பது போலவே ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் சார்ந்திருக்கின்றார்கள். இதில், சில வகைகளில் பெண்கள் ஒரு படி மேலே இருக்கின்றார்கள் என்பதை நிச்சயம் ஏற்றாக வேண்டும்.யாரும் யாருக்கும் சமம் இல்லை; யாரை விடவும் யாரும் பெரியவர்கள் இல்லை என்றாலும் இயற்கை ஆண்களுக்கு விதித்த  கடமைகளை விட பெண்களுக்கே அதிக கடமைகளை விதித்து அந்த அதிகமான கடமைகளுக்கு ஏற்ப அதிகமான சக்தி அம்ஸங்களை பெண்களுக்கு தந்துள்ளது. இத்தனை தூரம் படித்த நீங்கள் இப்போது தூங்கியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இத்தனை பெரிய விஷயத்தை கண் சிமிட்டும் நேரத்தில் வரும் காட்சியில் சொல்லிமுடித்து இருப்பார் சிம்புதேவன்.கணவன் துணை இல்லாமல் குழந்தையை வளர்க்கும் ஒரு பெண்ணின் கதையை காட்டும் போது அந்த பெண்ணின் அறிமுக காட்சியிலேயே இரண்டு ஆண்கள் தூக்கி கொண்டு வரும் ஒரு சிலிண்டரை அந்த ஒரு பெண் தூக்கி செல்வதாக காட்டியிருப்பார்.நமக்கு இருக்கும் கடமைகளே நாம் பார்த்திராத நம் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருகிறது. அந்த பெண், தன்  பிள்ளைக்கு மருந்துவாங்க வைத்திருந்த நகையை திருடும் திருடனை  பிடிக்க முற்படுவது போன்ற காட்சியை வைத்து அவளின் கடமைகள் அவளை எத்தனை தூரம் உந்தி செல்லுகிறது என்று காட்சிபடுத்தியவர் அந்த காட்சியின் முடிவில் மிக எளிமையாக மதுவிற்கு அடிமையான சமூகத்தின்  பாவப்பட்ட முகத்தை காண்பித்து இருப்பார்.

தன் மகனை படிக்க வைத்து நல்ல வேலையில் சேர்த்துவிட வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் தாதாவின் மகன், தாதாவாகவே விருப்படுகிறான் அதற்காக தந்தையும் கூட கொலை செய்ய தயங்காதவனாகிறான். ஒரு காலத்தில் குழந்தைகள் புத்தகத்தை கிழித்துவிடும் என்கிற பயம் இருந்தது அது தற்போது போனை உடைந்துவிடும் என்று பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.அந்த கதைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? குழந்தைகளிடம் என்ன புகுத்துகிறோம் என்பதை விட அவர்களுக்கு எப்படியான சூழலை தருகிறோம் அவர்களிடம் எதை காண்பிக்கிறோம் என்பதே அவர்கள் யாராக வேண்டும் என்பதையும் அவர்கள் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது.தாதாவாக இருப்பதை பெருமையாக பார்த்து பழகிவிட்ட குழந்தை என்ன படித்தாலும் எப்படி நல்வழியில் சேரும்! இறுதியில் தந்தையை கொன்று தந்தையின் இடத்தை பிடித்த அந்த குழந்தை (தாதா) மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கதை முடியும். நம் நாட்டில் அரசியல் இப்படியாகவும் இருக்கின்றது என்பது நிச்சயம் மறுக்கமுடியாத உண்மை அதனை வெகு சாதாரணமாக பதிவு செய்து இருக்கின்றார்.

“நல்லவனாக நடிப்பதற்காக செய்யப்படும் நன்மைகள் கூட நமக்கு நன்மை செய்யும்” என்று பின்னப்பட்ட ஆறு கதைகளில் இருந்தும் இன்னும் இன்னும் நிறைய படிப்பினைகளை தருகிறார் சிம்புதேவன்.

சங்கிலி தொடராக இருக்கும் நம் கர்மவினைகளின் விளைவுகளை காட்டும் சிம்புதேவனின் கசடதபற மெல்லினமாக வருடுகிறது.

ஒரு கதை அல்லது கவிதை, படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் தர வேண்டும். அதை பற்றி பேசும் ஒவ்வொரு தருணமும் அது சில புதுமைகளை வெளிக்கொணர வேண்டும்.சிம்புதேவனின் கதைகள் அத்தகையதே.

கதைக்கு தேவை என்பதற்காக ஆடைகுறைப்பு,கதைக்கு தேவை என்பதற்காக முத்தக்காட்சி, கதைக்கு தேவை என்பதற்காக சதக் சதக் என ஒருவரை குத்தி ரத்தம் பீறிடும் வன்முறை இவை எதுவும் சிம்புதேவனுக்கு அவசியப்படுவதில்லை.கதைக்கு கதையே தான் தேவைப்படுமே ஒழிய மேற்சொன்னவைகள் அல்ல என்பதை அவர் எப்போதும் புறிந்துவைத்து இருக்கின்றார்.

இங்கு யாரை கொண்டாடுவது என்பதும் கூட வியாபாரமாகவும் அரசியலாகவும் ஆகிவிட்ட காரணத்தினாலேயே சிம்புதேவன் போன்றவர்கள் மீது பெரிய ஒளி படருவதில்லை.

சிம்புதேவன் எனும் மாடர்ன் புத்தரை; புதுயுக கிருஷ்ணரை; நீங்கள் கொண்டாடவேண்டாம், கவனியுங்கள். உங்களிடம் சொல்வதற்கு அவரிடம் நிறைய இருக்கின்றது.

Loading

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *