இந்த இந்திய தேசத்தில் என் சக உயிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சகலமானவர்களுக்குமாக இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அன்புள்ள என் சகதேசவாசிக்கு,
நலம், நலமே விழைகிறேன்.
73 வது குடியரசு தினத்தை இந்திய தேசம் கொண்டாட தலைப்பட்டிருக்கும் இன்றைய தினத்தில் இந்த கடிதம் உங்களை சேர வேண்டும் என என் எண்ணம்.
சிறு வயதில் எனது பள்ளிக்கூடப் புத்தகங்களில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஒற்றை வரியில் நம் பாரத தேசத்தின் வரையறையை வாசித்தவள் நான், அது உண்மை என்று மனதாற நம்பியவள்.
மொழியால், இனத்தால், உடையால், இன்னபிற பலவற்றால் மாநிலம் தோறும் நம் மக்கள் வேறுபட்டேக் கிடக்கிறோம், அந்த வேற்றுமைகளை ஊதி ஊதி தூண்டிவிட்டு நம்மை நெருப்பாகப் பற்ற வைத்து குளிர் காய ஒருக் கூட்டம் துடித்துக் கொண்டிருக்கிறது.
அந்த நயவஞ்சகக் கூட்டத்தினர் நம் மக்களின் ஒற்றுமையை வேரறுக்கக் கூறும் நஞ்சு வார்த்தைகளை இனிப்புத்தடவி மிக மிக எச்சரிக்கையாக அதை நாம் நஞ்சென்று அறியாத வண்ணம் நமக்கு நாள்தோறும் ஊட்டிக்கொண்டிருக்கின்றனர். நாமும் அந்த நஞ்சு வார்த்தைகளை எழுத்துக்களாக, மேடைப்பேச்சுக்களாக, வீடியோக்களாக, மீம்ஸ்களாக உண்டு உண்டு நம் சக மனிதனை இனத்தால், மொழியால், பண்பாட்டால் வெறுப்பதை சரி என்று நியாயப்படுத்தக் கற்றுக்கொண்டோம்.
‘பாரத தேசம் பார்க்கெலாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’ என்றானே பாரதி, ஹிப் ஆப் குழு ஒன்றின் லோகோவாக மாறியிருக்கிறானே அதே பாரதி தான், அந்த மகாகவி பாரதியே வந்து நம்மிடையே பாடி நாமெல்லாம் இந்தியர், இந்தியா என்பது முகம் தமிழகம் என்பது முகத்தில் உள்ள முக்கிய அங்கம். முகத்தில் தான் மூக்கிருக்கிறது, கண் இருக்கிறது, வாய் இருக்கிறது என்று விளக்கம் கொடுத்தாலும் கூட விளங்கிக் கொள்ளப் போவதில்லை நாம், பாரதியை தமிழினத் துரோகி, பார்ப்பான் என்றெல்லாம் இட்டுக் கட்டி ஒதுக்கி வைக்கும் மனநிலை கொண்ட மக்களாகத் தான் நாம் தற்போதைய சூழலில் மாற்றப் பட்டிருக்கிறோம்.
வேற்றுமைகளைத் தூண்டி விட்டு நயவஞ்சக நரிக்கூட்டம் நம்மை மந்தையிலிருந்து பிரித்துக் கூட்டிப் போகும் போது ‘வாவ் நான் ஸ்பெசல், மந்தை ஆடுகளிலிருந்து நான் தனி’ என்று மனதிற்குள் நினைத்தபடி நாம் நகர்கிறோம் பலி ஆடு நாம் என அறியாமலேயே.
வேற்றுமைகளை பூதாகரமாகக் காட்டி உங்களை உங்கள் சமூகத்திற்கு எதிராக சிந்திக்க வைக்கிறவன் எவனும் தலைவனே அல்ல, அவன் சமூக விரோதி. பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று பகைவனையும் நேசிக்கச் சொல்லித்தருபவனே தலைவன்.
எதிரி என்பவன் எதிர்க்கப் பட வேண்டியவன் தானே அவனை ஏன் நான் நேசிக்க வேண்டும் என நீங்கள் யோசிக்கலாம். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது, ஒரு மனிதனிடமிருக்கும் எதிரான குணங்களை எதிர்ப்பதற்கும், அந்த மனிதரை எதிர்ப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. மனிதரை எதிர்க்கிற செயன்முறையில் நாம் அந்த மனிதரின் எதிர்க்குணங்கள் நீங்கிய பின்னரும் கூட அந்த மனிதரை எதிர்த்துக் கொண்டே இருப்போம், எதிரான கருத்துகள் தவறென்று திருந்திய பின்னரும் கூட அதே மனிதரை நாம் எதிர்த்துக் கொண்டிருப்போம்.
2020 ல் இந்தியா வல்லரசாகும் என்று ஒரு புண்ணியவான் கனவுத் திட்டம் ஒன்றை கற்பனையில் வைத்திருந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம் என்று நம்புகிறேன்.
தனித்தனி மனிதர்களாய் நாம் தனிமைப் படுத்தப்பட்டால் நம்மை அடிமை செய்தல் மிக எளிது என்ற சூட்சுமம் தான் நம்மை வேற்றுமைகளின் பெயரால் பிரித்தாள முயற்சிக்கும் சூழ்ச்சி.
ஒவ்வொரு மாநிலமும் தனி நாடாக்கப் பட வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலமும் முன் வரலாம், தனி நாடாதல் சரி தான் என நாமும் கருத்து சொல்லிக் கொண்டுத் திரியலாம். ஆனால் கைலாசா நாட்டை நிர்மாணிப்பது போல வேறுபட்ட கருத்தோட்டம் கொண்ட இனக்குழுவினருக்கு தனி நாடு செய்தல் ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்பதே என் கருத்து.
ஒற்றைத் தேசத்தின் ஒரே மாநிலமாக இருப்பவனுக்கே தண்ணீர் தராத சமூகம், தேசப் பற்றைக் காரணம் சொல்லி நம்மை அப்பாலே போ அந்நிய தேசமே என்று அண்டை நாடுகள் துணையோடு போர் செய்து எதிர்க்கும். மறுபடியும் நாம் தனியாய்ப் பிரிந்த தாய்நாட்டில் ஒவ்வொரு பாகமாகப் பிரித்து தனி நாடு கேட்க முயன்று கொண்டிருப்போம்.
பிரிந்து ஒதுங்குதல் என்பது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு தனியாய்ப் போகும் மனோநிலையின் பரந்துபட்ட வடிவம் தான்.
வட நாட்டின் ஏதோ ஒரு மூலைக்குப் பணி நிமித்தமாக சில மாதங்கள் சென்றிருந்தபோது, ஹோட்டல் உணவெல்லாம் உடம்புக்கு ஆகாது என்று அறிவுரை சொல்லி, வேண்டாமென மறுத்தும் கேட்காமல் தன் வீட்டிலிருந்து எனக்கும் சமைத்து எடுத்து வந்த தோழியை நினைத்துக் கொள்கிறேன்.
நடு ரோட்டில் மயங்கி விழுந்த என்னை மீட்டெடுத்த அந்த முகம் தெரியாத வடநாட்டு நண்பனை நினைத்துக் கொள்கிறேன். இந்து மத நம்பிக்கையாளன் ஒருவன் நாட்டு நலன் பற்றி கருத்து சொன்னால் அவனை பார்ப்பனிய ஆதரவாளன் என்பதும், சங்கி என்பதும் எவ்வகையில் சரியாகும். அது தான் சரி என்று அவன் நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கை மீது தான் நாம் கோபம் கொள்ள வேண்டுமே அன்றி அவன் மேலல்ல. அவன் வரையில் அவன் நினைத்துக் கொண்டிருப்பது சரி, நாம் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. சக இஸ்லாமியப் பணியாளரிடம் , நண்பர்களிடம் விழாக்காலங்களில் இன்னமும் நாம் பிரியாணி கேட்டுக் கொண்டிருக்கிறோம் தானே. பல அப்பாவிகள் சாகக் காரணமாக இருந்த ஒருத்தன் இஸ்லாமியன் என்பதனால் , சக இஸ்லாமியத் தோழர்களை, உறவுகளை நாம் வெறுப்பது எவ்வகையில் சரியாகும்.
வட நாட்டுக்காரன் ஒருவன் தவறு செய்கிறான் என்பதற்காக உங்கள் தோழனாக/ தோழியாக இருக்கும் வடநாட்டரை தீண்டத் தகாதவனாக எதிர்ப்பது எவ்வகையில் சரியாகும்.
முன்னொரு காலத்தில் நம் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தித்தான் அந்நிய தேசத்தினர் நம் நாடு புகுந்து நம்மை அடிமை செய்து நம்மை அவர்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.
ஒற்றுமையின்மையை போதிக்கும் ஒருவரையும் நம்பாதீர்கள். நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.
விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றது என்ற வார்த்தையைக் கேட்டவுடன் கூக்குரலிட்டு ஆனந்தக் கூத்தாடிக் கொண்டுதானே இன்னமும் நாம் இருக்கிறோம்.
குடியரசு தின வாழ்த்துகள்
அன்புடன் அநாமிகா
26/01/2022