அவன், தினமும் நடந்து செல்லும் பாதை தான் அது.
அது ஒரு;
ஒரு ஒரு, மாதிரியான;
மக்களும் புளங்கும், வனாந்திரமான பாதை.
மாலை ஒரு எட்டரை மணி இருக்கும்.மதிய நேரத்தில் தலைகாட்டிய மழையில் நனைந்திருந்த அந்த பாதை, அதன் வெளி முழுதையும் சிலு சிலுவென வைத்து இருந்தது.
ஆமா! அவன் யாரு?
சரி தான். அவன் யாரு! எனக்கும் தெரியல பாருங்க.
அவன் யாரோ? நமக்கு தெரிந்தவனோ தெரியாதவனோ எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால், அந்த பாதைக்கு அவனை நன்கு தெரிந்து இருந்தது.
அவன் தினமும் நடந்து செல்லும் பாதை தானே அது. அந்த பாதைக்கு அவனை தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
அவனை தான் நமக்கு யார் என்று தெரியாது. அந்த பாதை என்னவோ நல்ல பாதை தான்.
அது எவ்வளவு நல்ல பாதை என்றால்?
சுற்றி 100 வீடுகள் இருந்தாலும் அந்த பாதை அமைதியாகவே தான் இருக்கும். தினமும் பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு இருந்தாலும் ஒருநாளும் சலித்துக்கொள்வதில்லை. எவ்வளவு நல்ல பாதை!
அவனும், தினம் அதே பாதையை தான் கடந்து செல்கிறான்.
அதே வானம்;
அதே காற்று;
அதே பாதை.
சலிக்காமல் தான் அதே பாதையில் செல்கிறானா?
இருக்காது.
நாம் தொடர்ச்சியாக ரசிக்கும் விஷயங்கள் தானே நமக்கு சலிப்பு தட்டும்.நாம் கண்டுகொள்ளாத, ரசிக்காத விஷயங்கள் மீது நமக்கு எப்படி சலிப்பு தட்டும்?! அப்படி தான் அவனுக்கு அந்த பாதை மீது சலிப்பு ஏற்படாது இருப்பதும்.
எட்டரை மணிக்கு என்ன ஆச்சு?
எட்டரை மணிக்கு.. கடையில் சாப்பிட்டுவிட்டு அவன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தான். அண்ணாந்து பார்த்த அவன் வானத்தையும் காணவில்லை.குனிந்து நடந்த போது அவன் தரையையும் காணவில்லை.
காற்று சிலு சிலுவென வந்து மோதுகிறது.கொஞ்சமும் சட்டை செய்யாமல், காற்றை விலக்கி நடந்து கொண்டே இருக்கின்றான்.
அந்த பாதையில் ஒரு அமைதி இருந்ததென்றால், அவனுக்குள்ளும் ஒரு அமைதி, அமைதியில்லாமல்.
தீடீரென்று, அவனுக்கு கிச்சு கிச்சு மூட்டியது போல ஒரு அசரீரி ஒலிக்கிறது.
அசரீரியா!
ஆம். அங்கு தான் வேறு யாருமே இல்லையே.
அவனுக்கு மட்டும் கேட்கும் படியாய் அசரீரி சொன்னது,
“என்ன! இவ்வளவு கஷ்டமாக இருக்குது தானே நினைக்கிற? இவ்வளவு கஷ்டப்படுறத பார்த்தா; ஒரு வேளை; இந்த, கதை ல எல்லாம் வர மாதிரி; இவ்வளவு கஷ்டத்தையும் கொடுத்து, கடைசில இறைவனே உன் முன்னாடி வந்து நின்னுடுவாரோ?! இருந்தாலும் இருக்கும். இல்லாட்டி ஏன் இவ்வளவு கஷ்டம்! ம்!?”
அசரீரி முடிந்தது தான் தாமதம், பைத்தியக்காரன்! மனதில் இருந்த பாரத்தை அந்த பாதையிலேயே விட்டுவிட்டு சிரித்து கொண்டே வீடு நோக்கி நடந்தான்.
சிரித்துக்கொண்டே நடந்த பைத்தியக்காரனின் மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது,
“எல்லாத்துக்கும் சிரிச்சிட்டே இருந்தா கடவுள் confuse ஆகிடுவார். இவன் நல்லா தான் இருக்கானு அதான் எதுவும் இன்னும் சரி ஆகலை”என்று
இப்போது அவனின் இந்த பைத்தியக்கார எண்ணத்திற்கும் சேர்த்து சிரித்தான்
எத்தனை பைத்தியக்காரர்களின் பாரங்கள் அந்த பாதையில் கொட்டப்பட்டு இருக்குமோ தெரியாது.அந்த பாதை, அப்படியே அழகாகவே தான் இருந்தது.
அவன் மட்டுமா பைத்தியக்காரன்? எல்லாமுமாக; எல்லோருமாக இருந்துகொண்டு எல்லாவற்றையும்; எல்லோரையும் ஒரே மாதிரி வைத்திருக்காமல்; எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வைத்திருக்காமல்; தன் போக்கிற்கு ஏதோ ஏதோ செய்து கொண்டு இருக்கும் இன்னொரு அவன் , அவனை விட பைத்தியக்காரன்.
இந்த பைத்தியக்காரன், இப்படி தான் எல்லா பைத்தியங்களையும் ஒரு பாதையில் நடக்க செய்வான். அந்த பைத்தியங்களாய் தங்கள் பாரங்களை தேர்ந்தெடுக்க செய்வான்.பிறகு அவனே வந்து கிச்சு கிச்சு மூட்டுவான் .கிச்சு கிச்சு மூட்டப்பட்ட பைத்தியங்கள் பாரங்களை பாதையிலேயே விட்டுவிடும்.
ஆனா பாருங்க! எல்லாமே நல்லா தானே இருக்கு! Nature’s (Gods’s)extreme craziness. The extreme craziness