“உங்கள் குழந்தைகள் உங்கள் மூலம் வந்தவர்கள், உங்களுக்காக வந்தவர்கள் அல்ல” – கலீல் ஜிப்ரான்
நமது மனதையும், நமது உள்ளார்ந்த குணத்தையும் உருவாக்குவதில் குழந்தைப்பருவத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. பூஜ்ஜியம் முதல் ஒன்பது வயது வரை நாம் அடைந்த அனுபவங்களின் படியே நாம் பெரும்பாலும் நம் வாழ்வை அணுகுகிறோம் என்கிறது ஒரு ஆய்வு.
மாவீரன் நெப்போலியன் போனபர்ட்-ற்கு பூனைகளைக் கண்டால் பயம் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எதற்கும் அஞ்சா நெப்போலியன் பூனைகளை கண்டு ஏன் பயப்பட்டார் என்பதற்கு அவரது குழந்தைப்பருவ வாழ்விலிருந்து நமக்கு விடை கிடைக்கிறது. அவர் கைக்குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் அவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பூனை அவரது மார்பின் மீதேறி பிராண்டி விட்டதாம். மிக அருகில் பூனையை, அதன் பாய்ச்சலை, அதன் கூரிய நகங்கள் கீறிய கீறலை, அதனால் ஏற்பட்ட வலியை குழந்தை நெப்போலியனின் ஆழ்மனம் தெள்ளத்தெளிவாக பதிவு செய்து கொண்டது. அதனால் தான் அவருக்கு பூனைகள் என்றால் பயமாம்.
ஒவ்வொரு குழந்தையும் தன்னைச் சுற்றி நடப்பவற்றை, அதனால் உருவாகும் மனப்பதிவை தனக்குள் பதிவு செய்து கொண்டே இருக்கிறது, அந்த பதிவுகளின் படியே அது தன் பிற்கால வாழ்வை வாழ முனைகிறது.
இதே போல் பலரது வாழ்வில் நிறைய சம்பவங்கள் உண்டு. கூச்ச சுபாவத்திற்கு, காரணமற்ற அச்சம் கொள்ளும் சுபாவத்திற்கு, தாழ்வு மனப்பான்மை கொள்வதற்கு, பிரச்சினைகளை எதிர் கொள்ளப் பயப்பட்டு தவறான முடிவுகள் எடுப்பதற்கு என்று இதுபோன்ற ஆழ்மன சிக்கல்கள் அத்தனைக்கும் சிறுபிராய நிகழ்வுகள் தான் பெரும்பாலும் காரணமாகின்றன.
சிற்சில நபர்களுக்கு மூத்தோர்களின் அறிவுரைகள், நல்ல புத்தகங்கள், நல விரும்பிகளின் வழிகாட்டல்கள் கிடைத்து பால்ய கால நம்பிக்கைகளையும் மனப்பதிவுகளையும் தவறு என்று புரிய வைத்து சிக்கல்களிலிருந்து தீர்வு நோக்கி நகர்வை தரலாம், ஆனால் நமக்கு ஏற்பட்ட மனப்பதிவுகளை அவற்றால் முழுமையாக அழித்து சரிசெய்துவிட முடியாது.
“நுண்ணியநூல்பலகற்பினும்மற்றுந்தன்–உண்மைஅறிவேமிகும்”
என்கிறார் திருவள்ளுவர், என்னதான் நுண்ணறிவு நூல்களை நுணுக்கமாக படித்தாலும் உனக்கிருக்கும் உண்மை அறிவு தான் மிகுதியாக இருக்கும் என்பது இதற்கு அர்த்தம். உண்மை அறிவு எனப்படும் இயல்பறிவு குழந்தைப்பருவ அனுபவங்களின்படியே அமைக்கப்படுகிறது.
எனவே சிறுகுழந்தைகளின் மனதில் ஒரு பதிவை ஏற்படுத்துவதற்கு முன் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும்.
நாம் என்ன செய்தாலும் அல்லது சொன்னாலும் அது குழந்தையின் மனதில் ஒரு பதிவை ஏற்படுத்தும் என்ற புரிதலோடான செயன்முறை, ஒரு உதாரணம் சொல்கிறேன்.
ஒரு விருந்து நிகழ்வில் நீங்கள் உங்களது குழந்தையோடு கலந்து கொள்கிறீர்கள். உங்கள் குழந்தை மேஜை மீதிருந்து ஒரு கரண்டியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. கரண்டி திடீரென்று கீழே விழுந்து விடுகிறது, உடனே நீங்கள், குழந்தையை செமயாக முறைத்து திட்டி வைக்கிறீர்கள். ஒரு வேளை அந்த கரண்டி உங்களது குழந்தையின் கையிலிருந்து தெரியாமல் கைதவறி கீழே விழுந்திருக்கலாம்.
அப்படியாக அது கைதவறி விழுந்திருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் குழந்தையிடம் கடுமையாக நடந்து கொண்டிருந்தால் உங்கள் குழந்தை இப்படியாக ஒரு மனப்பதிவை ஏற்படுத்திக் கொள்ளலாம் “கை தவறி கீழே விழுந்துவிட்டது, அதற்கு ஏன் என்னை அம்மா/அப்பா இவ்வளவு கடிந்து கொள்கிறார். என் தரப்பு நியாயம் பற்றி இவர்களுக்கு அக்கறையே இல்லை, இவர்கள் எப்போதும் இப்படித்தான் அவர்கள் செய்வது தான் சரி என நினைத்துக்கொண்டு தவறு செய்வார்கள்”என பலவாறு உங்கள் குழந்தை யோசிக்கக் கூடும். சில தவறான மனப்பதிவுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடும். அது காலப்போக்கில் உங்களுக்கே எதிராகக் கூட இருக்கக் கூடும்.
நாம் நினைப்பது போலெல்லாம் குழந்தைகள் குழந்தைத்தனமாக மட்டுமெல்லாம் யோசிப்பதில்லை, அவர்களின் சிந்தனையும், புத்தியும் பல சமயம் பெரியோர்களைவிட கூர்மையானதாக இருக்கிறது. எனவே கஷ்டப்பட்டு கல்வி புகட்ட வேண்டும் என்னும் அவசியமெல்லாம் இல்லை.
எது தவறு, எது சரி என்பதை அவர்களே புரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். குழந்தையைப் படி என்று சொல்லிவிட்டு, நாம் அவர்கள் கண் முன்னேயே சீரியல் பார்த்துக்கொண்டிருப்பதெல்லாம் வன்முறை.
குழந்தைகளின் முன்னால் பெற்றவர்கள் சண்டைப்போட்டுக்கொள்ளாதீர்கள், பிறருடன் ஒப்பிட்டுப் பேசும் அருவருப்பான செயலை செய்யாதீர்கள்.
ஏ ஃபார் ஆப்பிளோடு சேர்த்து எல்லோரும் நல்லவர்களல்ல என்பதையும் சொல்லிக்கொடுங்கள்.
என்னவானாலும் எங்களிடம் சொல் உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை விதையுங்கள். உணவுடன் சேர்த்து தைரியத்தை ஊட்டுங்கள், குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில் காட்டும் அதே அக்கறையை அவர்கள் மீது நீங்கள் காட்டும் தூய அன்பை உணர வைப்பதிலும் காட்டுங்கள். அவர்களின் அறிவு மேம்பாட்டில் காட்டும் விழிப்புணர்வை, அவர்களின் அரோக்கியத்தின் மீதும் காட்டுங்கள்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் குழந்தையின் மனதில் அவர்களின் கண்ணோட்டதிலான மனப்பதிவுகளாக பதிந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் படியே அவர்கள் இவ்வுலகை, சக சமூகத்தை அணுக இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் மனதில் பதியும் பதிவுகள் மீது நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகள் பேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள், அவர்களோடு அன்பாக பேசுங்கள்.
விலை உயர்ந்த பொம்மைகளை விட அன்பான வார்த்தைகள் பல மடங்கு சக்தி வாய்ந்தவை.