அரசியல் எனும் காட்டாற்றில் நம்மையும் அறியாமல் சிக்கி கொண்டிருக்கும் நாம் எதை எதிர்க்கின்றோம் எதனால் எதிர்க்கின்றோம் என்ற காரண காரியம் புரியாமல் பல சமயங்களில் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகளில் வாதிகளாகவும் பிரதிவாதிகளாவும் நிற்கின்றோம்.
யோகா-மதங்கள் கடந்து இந்தியர்களின் ஞான சொத்தாக இருப்பது.அதனை விருப்ப வெறுப்புகளை கடந்து. மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நாம் அணுக வேண்டும்
ஆனால், பயன்படுத்தப்படாத பரவலப்படுத்தப்படாத சொத்தாக யோக கலை இருந்து வந்தது.அதோடு மதங்களை கடந்து மற்ற நாட்டினர் யோகா பயில(தினமும் கடைபிடிக்க) காட்டிய ஆர்வம் நம் நாடுகளில் இல்லாமலும இருந்தது
இந்நிலையில்,2014ம் ஆண்டில் இந்திய பிரதமர் ஐக்கிய நாடுகள் சபையில் யோக கலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஜுன்21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்க முன் மொழிந்தார்.அதனை தொடர்ந்து ஏற்பட்ட தீர்மானத்தின் படி ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது.அதோடு யோக கலையை பரவலப்படுத்த அரசு சில நடவடிக்கைகள் எடுத்துவந்தது.அந்த நடவடிக்கைகளுக்கு மத சாயம் பூசப்பட்டதும்,அவை சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாக்கப்பட்டதும் நம் நாட்டில் நடக்காமல் இல்லை.
யோக கலை,மதங்களை கடந்து பின்பற்றப்பட வேண்டிய கொண்டாடப்பட வேண்டிய நம் கலாச்சாரத்தில் தோன்றிய ஞானம். அது மத வட்டத்திற்குள் எந்நாளிலும் அடைக்கப்பட்டுவிடக்கூடாது.இந்த பெருந்தொற்று காலம், நமக்கு அதனை (யோக கலையின் முக்கியத்துவத்தை) உணர்த்தவும் செய்துவிட்டது.
சித்த மருத்துவம் பரிந்துரைத்த நவீன மருத்துவம் ஏற்றுக்கொண்ட மூச்சு பயிற்சிகளை, பதஞ்சலியும் திருமூலரும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே எழுதி வைத்திருக்கின்றார்கள். அவர்களையும் அவர்கள் அளித்த ஞானத்தையும் சமய எல்லைகளுக்குள் நாம் அடைக்க முற்படுவதை விட பெரிய முட்டாள்த்தனம் என்னவாக இருக்க முடியும்.
சில மாநில அரசுகள் ஏற்கனவே யோக கலை கற்பிப்பதை கட்டாயமாக்கியிருந்தாலும் இந்த கலையை பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் மக்களுக்கு இன்னும் ஏற்படவில்லை.
தினங்களை கொண்டாடுவதன் மூலமும் அரசாணைகள் மூலம் கட்டாயப்படுத்துவதாலும் மட்டுமே யோக கலையை பரவலப்படுத்துவதிலோ இல்லை அதன் அடிப்படை நோக்கத்தை எட்டுவதிலோ வெற்றி காண முடியாது.மதம் மற்றும் மொழி பிரிவினைகள் கடந்து ஒவ்வொவரும் யோகம் பயல்வதிலும் தினசரி வாழ்வில் கடைபிடிப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். அது ஆர்வக்கோளாராக இருந்து சில நாட்களில் மறைந்து விடவும் கூடாது.கற்றலில் ஒரு ஆழம் வேண்டும். நம்மில் பலருக்கு பரிச்சயமான பத்மாசனத்தை பற்றி திருமூலர் விவரித்திருப்பதன் படியே தான் இங்கு பத்மாசனம் கற்பிக்கப்படுகிறதா என்றால் சந்தேகமே!
திருமந்திரம் 3ம் தந்திரத்தில் ஆதனம் கீழ் இரண்டாவது பாடல் பத்மாசனத்தை பற்றி
ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.
பொழிப்புரை :
பாதங்கள் துடைகளின்மேல் ஒன்றாகப் பொருந்துமாறு ஏற்றி, பின் நன்றாக வலித்து இழுத்து அவை துடைகளின் புறம் நிற்குமாறு
செய்து, அப்பாதங்களின்மேலே இரு கைகளையும் மலர
வைப்பின், அந்நிலை தாமரை மலர் வடிவிற்றாய்,பதுமாதனம்
என்று சொல்லுதலைப் பெறும்.
பாதங்கள் தொடைகளுக்கு வெளியே இருக்க வேண்டும் என்கிறார்.இப்படி,சின்னஞ்சிறு விஷயங்களில் கவனம் செய்யாத போதும் அல்லது சின்னஞ்சிறு விஷயங்களை உதாசீனம் செய்யும் போதும் கற்றலில் பிழை ஏற்படுகின்றது. கற்றலில் ஏற்படுகின்ற பிழை வருங்கால சந்ததியினருக்கு நாம் கற்பிப்பதிலும் தொடரும். அதனால், உறுதியேற்போம் இன்றைய தினத்தில் இந்தியர்களின் , தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த அறிவு சார் சொத்தான யோகாவை மத அடையாளங்களுக்குள் பொருத்தாமல் சரியாக கற்று எதிர்வரும் சந்ததிகளுக்கு சரியாக கற்பித்து அதனை காப்போம் என்று.