அநேகமான இடங்களில் நாம் மற்றவர்களின் தீர்மானங்களின் படி நம்மை தகவமைத்துக்கொண்டு அப்படியாகவே வாழ்ந்து வருகின்றோம். “அவனால் இதை செய்ய முடியாது, அவனுக்கு இது வராது” என்கிற மற்றவர்களின் வார்த்தைகளின் படியே அநேகமானவர்கள் தங்களை வைத்துக்கொள்கிறார்கள்.
நாம் யார் என்பதையும், நம்மால் எது முடியும் என்பதையும் நாம் தான் தீர்மானித்தாக வேண்டும். உன்னால் முடியாது என்று பிறர் சொல்லும் போது, அதை நீங்கள் எப்படி சொல்ல முடியும் என்று பிறரால் முடியாது என்று சொல்லப்பட்டதை கேள்விக்கு உட்படுத்திவிட்டு அதைத் தானே முயற்சி செய்து, முடியும் அல்லது முடியாது என்பதை தானாக உறுதிப்படுத்திக்கொள்கிறவர்கள் வெகு சிலரே.
அந்த வெகு சிலரில் ஒருவர் தான் கமலஹாசன். தனக்கு தெரியாது என்று பிறரால் சொல்லப்படும் விஷயங்களை அதெப்படி எனக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்லலாம் என்று கேள்வி கேட்டுவிட்டு அதை தானே முன்வந்து கற்றுக்கொள்வார். அதெப்படி முடியாது என்று அவரை அவரே பரிசோதனைக்கு உட்படுத்துவார். அவரின் இந்த அரசியல் களமும் கூட ஒருவித பரிசோதனை முயற்சியே, கமல் ஓட்டு வாங்க மாட்டார் என்கிற குரல்களை ஓரளவு அமைதிகொள்ள செய்து இருக்கின்றது அவரின் இந்த முயற்சி.
அவருடைய நண்பர் ரஜினிகாந்தோ இப்படியான முயற்சிகளில் நேரெதிர் திசையில் நிற்பவர். ஒரு செயலில் இறங்குவதற்கு முன்னரான சோதனைகளை அவர் மனக்கண்ணிலேயே செய்துவிட்டு முடிவை ஓரளவு யூகித்து அதன் பின்னரே இறங்க கூடியவராக இருக்கின்றார். அந்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு மேடையில் உதிர்த்த வார்த்தைகள் ‘அரசியலில் வருவதற்கு , அதில் ஜெயிப்பதற்கு பணம் செல்வாக்கு இவையல்லாமல் வேறு ஒன்றும் தேவைப்படுகிறது. அது என்னவென்று தனக்கு தெரியாது என்றும். கமல் தெரிந்து வைத்து இருந்தாலும் இனி சொல்வாரா என்பது சந்தேகம் தான்’ என்று நகைச்சுவையாக கூறுவார். அந்த ஏதோ ஒன்று அவர்களுக்கு இருவர்க்கும் தெரிந்தோ தெரியாமலோ கூட இருக்கலாம்.
ஆனால், கமலிடம் ஒன்று மட்டும் குறையவில்லை வரிசைப்படுத்தி சொல்லுமளவிற்கு நிறைய விஷயங்கள் குறைபாடாக இருந்தது. அத்தனையும் அவருக்கும் தெரிந்தே இருக்கும், இருந்தும் களத்தில் இறங்கினார்.அது தான் கமல்.பரிச்சார்த்த முறைகள் அவருக்கு புதிது இல்லை.
மூன்றாவது தேர்வு எப்போதுமே மக்களின் தேடலாக இருக்கின்றது.அந்த தேடலில் விடையாக வந்து நின்றவர்களில் விஜயகாந்தை தாண்டி இன்று வரை யாரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தேர்தல் அரசியலில் தனக்காக வாக்களிப்பவர்களை காட்டிலும் தனக்காக வாக்கு சேகரிக்க தயாராக இருக்கும் கூட்டமே ஒரு கட்சியின் பலத்தை நிர்ணயம் செய்கிறது. அந்த பலம் கமல்ஹாசன் அவர்களிடம் நிச்சயம் குறைவாகவே இருந்தது. அதோடு ஒப்பீட்டிற்காக விஜயகாந்தை அவர்களை எடுத்துக்கொள்ளும் போது விஜயகாந்த் அவர்களுக்கு அவர் சினிமாவில் நடித்த காலத்தில் இருந்தே கிராமப்புறங்களில் இருந்த வரவேற்பு 85க்கு முன்பு பிறந்த பெண்களின் வரவேற்பு இவையெல்லாம் கணிசமாக இருந்ததன் காரணமே அவரால் தன் முதல் தேர்தலிலேயே பெரிய தாக்கத்தை தர முடிந்ததற்கு காரணம்.கமலை பொறுத்தவரையில் அரசியல் பார்வையாளர்களின் கருத்தின் படியே அவரின் வாக்காளர்கள் நகர்புறத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள் அவர்களும் மொத்தமாக கமலின் பக்கம் நிற்க வாய்ப்பில்லாமல் இருந்தது அதுவே நடந்தும் இருக்கின்றது.
மேற்சொன்னவைகளோடு, ஒரு மாநில கட்சி தன் முதல் தேர்தலாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் போது அதன் வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவாகவே இருக்கும். அப்படி சந்தித்து ஓரளவு வெற்றி பெற்றாலும் கூட மக்கள் மத்தியில் இந்த கட்சியின் திறன் இவ்வளவு தான் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும். அதன் எதிரொலியாகவே அவரின் கட்சியின் வாக்கு சதவீதம் சட்ட மன்ற தேர்தலில் சரிந்திருக்கின்றது.
அவர்களின் வியூகத்தின் படி நாடாளுமன்ற தேர்தலில் அவர்களின் பலத்தை தெரிந்து கொண்டு கமல் போன்ற முக்கிய வேட்பாளர்களை நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற இடங்களில் நிறுத்தி வெற்றி பெற வேண்டும் என்பதில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டார்கள்.ஒரு வேளை ரஜினி ஆதரவு தெரிவித்து இருந்தால், கமலின் வெற்றி வாய்ப்பு அதிகரித்து இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. அது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையே ஏற்படுத்தி இருக்கும்.
வெற்றி தோல்வியை கருத்தில் கொள்ளாமல் மக்களுக்காக ஒரு பெரும் முயற்சியை எடுத்த கமல்.அனைத்தையும் முன்னரே யூகித்து பெருந்தொற்றில் இருந்து நாடு முழுமையாக மீளாத வேளையில் பிரச்சார களத்தில் தான் இறங்கினால் கூட்டம் அதிமாக கூடி இப்போதிருக்கும் நிலையை விட இன்னும் மோசமான அழிவிற்கு இட்டு சென்றிருக்க வாய்ப்பு இருந்ததை அறிந்து அரசியலுக்கு வராமல் தவிர்த்த ரஜினி, இந்த இருவரின் திட்டங்களும் முடிவுகளும் சரியானதே என்று மெய்ப்பித்திருக்கின்றது காலம்.
மூன்றாவது தேர்வை எதிர் நோக்கியிருந்த மக்கள் மத்தியில் விஜயகாந்த் கமலஹாசனை விட ரஜினி சற்றே அதிகம் செல்வாக்கு கொண்ட;பாகுபாடில்லாமல் எல்லா வகுப்பினரிடம், இவர் வந்தால் நல்லா இருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்ட நபராய் இருந்தாலும்; இந்த தேர்தலில் ரஜினியே இறங்கி இருந்தாலும் கூட, ரஜினி சொன்ன எழுச்சி வரமால் தமிழகம் மூன்றாவது தேர்வை நோக்கி நகர்வது கடினமே! ரஜினி வந்திருக்க வேண்டியதில்லை என்று சொல்லவில்லை,கமலை போன்று அவரும் வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் திராவிட கட்சிகளுக்கான மாற்று மிக சமீபமான எதிர்காலத்தில் தெரியவில்லை என்பதே.
இனம்,மொழி,மதம் இவைகளுக்குள் திளைக்கும் தேர்தல் களத்தில் யார் இறங்கினாலும் மக்கள் மாறாமல் எதுவும் மாறப்போவதில்லை தான்.
மக்கள் மாறி எழுச்சி கொண்டாலும் அந்த எழுச்சியை வெற்றியாக்க ரஜினி போன்ற ஒரு x factorதேவைப்படுகிறது.அதிலும் சிக்கல் என்னவென்றால் ரஜினி போன்ற ஒரு x factor ஆக நம்மிடம் இருப்பது ரஜினி மட்டுமே.
மக்கள் நீதி மய்யம், ரஜினி மக்கள் மன்றம்,தமிழகம், இவைகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை காலம் நமக்கு காட்டும் வரை காத்திருப்போம் மூன்றாவது தேர்வை நீக்கிய நம் கனவோடு.