பதிவிடப்பட்டது: சார்வரி வருடம் ஆனி-20 (ஜூலை 4,2020):
மத்திய அரசை, தமிழக அரசை, காவல் துறையை போதாக்குறைக்கு ரஜினியை மூச்சு விடக்கூட நேரமின்றி பழித்துக் கொண்டிருக்கிறாய் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
சற்றே ஆசுவாசம் கொள்.
கோபம் கொண்டவன் சற்றே ஒரு இடத்தில் நிதானிப்பான் அந்த இடத்தை அடைந்து விட்டோமா என்று பார். அங்கே நின்றால் இதையெல்லாம் யோசிக்க ஒரு வேலை வழி பிறக்கலாம். நிதானம் பிறந்த பின் நிச்சயம் பொறுமையும் பிறக்கும். அந்த பொறுமையோடு இந்த சிந்தனைகளுக்கு இடம் கொடு.
ஒரு நல்ல மக்களாட்சியில், நல்ல அரசியல்வாதிகளைக் கொண்ட சமூகத்தில், நேர்மறையான சிந்தனை கொண்ட சமூகம் அவசர காலத்தில் எப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று வரிசையாக அசை போடுவோம்.
நமக்கெல்லாம் வராது என்று தைரியமாய் திரிந்த நாட்களில் வேண்டாத விருந்தாளியாய் வந்த அந்த நோய்த் தொற்று அரசின் குறைபாடுகளைக் காட்டவில்லை ஒரு சமூகமாக இன்றைய தேதியில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதைக் காட்டியிருக்கிறது .
என்ன செய்தன எதிர்க்கட்சிகள்? :
அரசை குறை கூறிக்கொண்டு, மக்களை அரசிற்கு எதிராக மட்டுமே சிந்திக்க வைக்கும் எதிர்க்கட்சிகள் (இன்று நேற்று இல்லை எல்லா காலங்களிலும் இப்படியான சூழலில்) எப்படியெல்லாம் செயல் பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
எதிர்க்கட்சி தலைவர்கள், “இந்த அவசர காலத்தில் கட்சி பேதம் மட்டும் அல்ல எந்த பேதமும் இன்றி ஒரு சமூகமாக நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் அதற்கான அவசியமும் இருக்கின்றது அரசின் வழிகாட்டுதல்களை நிபுணர்களின் அறிவுரைகளை கேட்டு மக்கள் நடக்க வேண்டும் ” என்று ஒவ்வொரு நாளும் மக்களுக்கு வலியுறுத்தியிருக்க முடியும்.
அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் அரசாங்க அதிகாரிகளை அரசாங்க உதவி மையங்களை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எங்கள் கட்சி உறுப்பினர்களை தொடர்பு கொள்ளுங்கள் அரசாங்கத்தோடு இணைந்து உங்களுக்கான உதவிகளை அரசின் மூலமாகவே கிடைக்க செய்வோம் என்று சொல்லியிருக்க முடியும்.
அப்படியெல்லாம் செய்து இருந்தால் உதவிகளை அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும் என்று அரசு வலியுறுத்தியதை கேட்டு நடந்திருந்தால் சட்டமன்றம் ஒரு உறுப்பினரை இழந்திருக்காது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆபத்து காலத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய ஒழுங்குகளில் இது முதன்மையானது. ஒவ்வொருவரும் தங்களை நாயகர்களாக்கிக் கொள்ள நினைத்து கட்சி விளம்பரங்களுக்காக தன்னிச்சையாக செயல்பட்டதன் விளைவு தானோ சில கட்சி உறுப்பினர்கள் வரை நோய்த் தொற்று ஏற்பட்டது என்று தோன்றுகிறது.
இதில் கூடுதலாக பாதுகாப்பாக வீட்டுக்குள் இருந்தபடி ட்விட்டர் -ல் கண்டனத்தை பதிவு செய்து அரசியல் பண்ணுவதை என்ன சொல்லுவது.
நாம் முக்கியமாக சில நிகழ்வுகளின் பின்னால் உள்ள முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம்.
விலையேற்றமும் வரவு செலவு கணக்கும்:
சமீப காலமாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் பற்றிய விமர்சனங்களும், பக்கத்தில் உள்ள சிறிய நாடுகளுடனான பெட்ரோல் விலைகளோடு ஒப்பீடுகளும் வருகிறது அதற்கு யாரையெல்லாம் திட்ட வேண்டுமோ பரிகாசம் செய்ய வேண்டுமோ செய்து விட்டோம் ஏன் அப்படி இருக்கின்றது என்பதைக் கொஞ்சம் யோசிக்கலாமா?
ஒரு சிறிய குடும்பம் இருக்கின்றது என்றால் அந்த குடும்பம் என்ன ஆடம்பரமாக செலவு செய்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலே செலவு செய்ய முடியாது. அதுவே ஒரு பெரிய குடும்பத்தில் எவ்வளவு சிக்கனமாக செலவு செய்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவைக் குறைக்க முடியாது இப்படியான சூழலில் குடும்பத்தில் அதிகம் சம்பாதிப்பவரின் வருமானத்திற்கு ஏதேனும் வகையில் இடையூறு நேர்ந்தால் குடும்பத்தின் சுமையை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
நம் நாட்டில் மத்திய மாநில அரசுகளின் வருமானத்தில் பெரும் பகுதியானது பெட்ரோல் டீசல் விற்பனையில் கிடைக்கும் வரியை நம்பி இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. இப்படியிருக்கையில் இந்த நோய்த் தொற்று காலத்தில் பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கு காரணமாக பெட்ரோல் டீசல் விற்பனை வெகுவாக குறைந்து விட்டதையும் மறுக்க முடியாது. இப்படியான கடினமான சூழலில் அரசு உதவித் தொகை என்று இலவசமாக அதிக உதவிகளை மக்களுக்கு செய்யாமல் போனாலும் கூட கடன் செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுப்பது, நியாய விலை பொருட்கள் இலவசமாக கொடுப்பது என்று செலவுகள் அதிகரித்ததே தவிர வருமானம் எல்லா வகையிலும் முடங்கிப் போனதை மறுக்க முடியாது. வங்கிகளுக்கு வரவுகள் இல்லாமல் வங்கிகள் கடன் தருவதற்கு முன் வந்தது . பெரிய குடும்பம் போன்றதே நம் நாடும். அவசர சூழலில் எல்லா வகையிலும் செலவுகள் அதிகரிக்க அதை ஈடுகட்ட உடனடியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க கட்டாயப்படடுத்தப்படுகிறது வேறு எந்த வகையிலும் உடனடி வருமானத்தை ஏற்படுத்த முடியாத நிலையில் அரசை குறை கூறிய நேரத்தில் நம்மில் யாரேனும் இதற்கான தீர்வை முன் வைத்து இருந்திருக்கலாம் அதை விடுத்து நாம் பழிப்பதிலும் பரிகசிப்பதிலும் நேரம் கடத்தி விட்டோமே. இங்கு எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சி செய்யட்டும் ஒரு சமூகமாக நம்முடைய சிந்தனை இவ்வாறாகவே இருக்க வேண்டும்.
பக்கத்தில் இருக்கும் குட்டி நாடுகள் எவ்வளவு செலவு செய்யதாலும் இந்தியாவின் மொத்த செலவில் பாதியைக் கூட எட்ட முடியாது. அதன் காரணமாக அவர்கள் நாடுகளில் நம் நாட்டை விட சற்றே குறைவான விலையில் பெட்ரோல் டீசல் கிடைத்தால் அதில் ஆச்சரியம் கொள்ளவும் பரிகசிப்பதற்கும் ஏதும் இல்லை.
நோபாளத்தின் இந்த ஆண்டு மொத்த பட்ஜெட் 0.92 டிரில்லியன் இந்திய ரூபாய்கள். இந்தியாவின் செலவு 3807.37 பில்லியன் இந்தியா ரூபாய்கள்.
கீழ உள்ள படம் (trading economics வலை பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது) வருட வாரியாக இந்தியாவின் செலவை காட்டுவது:
மற்ற நாடுகளுடன் நாம் சில விஷயங்களை ஒப்பீடும் போது இத்தனை விஷயங்களை ஏன் கவனத்தில் கொள்ள மறந்து போனோம் .
நம் நாட்டின் செலவுகளை ஈடு கட்ட பெட்ரோல் டீசல் மீதான வரியே அதிகம் உதவுகிறது தோராயமாக இந்த ஆண்டில் 1.7 லட்சம் கோடி வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டின் மொத்த செலவில் பாதியளவு கூட இல்லை.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காலம் காலமாக விலைவாசி ஏற்றம் இருந்து கொண்டே தான் இருந்திருக்கின்றது.
ஒரு குடும்பம் கணவன் மனைவி மட்டும் என்று தொடங்கும் போது அவர்கள் எந்த புள்ளியில் தொடங்கினார்கள் இப்போது எங்கு நிற்கிறார்கள் என்று பார்த்தால், அவர்கள் குடும்பம் வளர வளர பிள்ளைகள் பள்ளிக்கு சேர்ப்பது, படிப்பு செலவு, திருமண செலவு என்று செலவுகள் அதிகரிக்கும். அவர்கள் வருமானம் கூட கூட அவர்கள் கடன் வாங்கும் திறனும் அதிகரித்திருக்கும் இதில் அவர்களின் வருமானம் மற்றும் வளர்ச்சி அவர்களுடைய செலவு மற்றும் கடன்களை எந்த வகையில் ஈடு செய்கிறது என்று பார்க்க வேண்டும். அந்த வகையில் நம் நாடானது இன்னும் செலவுகளை ஈடுகட்ட போதுமான வருமானம் இல்லாமல் இருக்கின்றது என்பதே உண்மை.
அடுத்து நம் திட்டித் தீர்த்த காவல் துறையைப் பற்றி யோசிப்போம்.
காவல்துறை – மக்கள் – ஊடகம்:
காவல் துறையில் சில அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இரு உயிர்களை பலி வாங்கியது. நம் எல்லோர் மத்தியிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தாமல் இல்லை. குற்றம் செய்தவர்கள் எந்த துறையினாராக இருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டியவர்களே என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
இந்த விஷயத்தில் ஊடகங்கள் என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற சமூகத்தின் கோபம் குறையாமல் பார்த்துக்கொண்டதோடு உணர்வுகளால் நம் கண்களைக் கட்டி சிந்திக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி பேசாமல் விட்டது.
ஒரு தவறு நடந்துவிட்டால் யாரையேனும் கை காட்டி ஒரு குற்றாவளியைப் பிடித்து அவர்களைத் தண்டிக்க சொல்வதோடு ஒட்டு மொத்த துறையையும் கேலி பேசி அவதூறு பரப்பி அந்தத் துறையின் மதிப்பைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு நிறைவடைந்து கொள்கிறோம். இந்த நேரத்தில் சில மீசைக்கார ஊடகம் பழைய நிகழ்வுகளின் உறுதிப்படுத்தப்படாத விஷயங்களை உறுதியான செய்திகளாக்கி மக்களுக்கு காவல் துறையின் மேல் மேலும் வெறுப்பை ஏற்படுத்தி தங்களை நல்லவர்களாக காட்டும் முயற்சியில் ஈடுபட்டது.
சாத்தன்குளம் வழக்கில், செய்திகளின் படி பிரிவு 188,269,294பி,353,506 (2) இந்த சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கின்றது .
இந்த ஊடகங்கள் வழக்கைப் பற்றி பேசத் தொடங்கிய போதே
மேற்சொன்ன பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது போல் குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததா என்பதை பேசியிருக்க வேண்டும், ஆனால் அது சம்பந்தமாக இவர்கள் எதுவும் பேசவில்லை.
ஒரு வேலை ஆதாரம் இல்லாமல் குற்றவாளிகள் உயிரோடிருந்திருந்தால் காவல்துறையினரால் தொடரப்பட்ட இந்த வழக்கு பொய் வழக்கு என்று முடிந்திருக்கும்.
மேற்சொன்ன பிரிவுகளின் படி சில குற்றங்கள் நடந்தும் நடக்காமலும் கூட இருந்திருக்கலாம். இப்படியிருக்க, நோய் பரப்புவதற்கு காரணமாக இருத்தல், அதிகாரிகளின் கட்டளையை அவமதித்தல், அதிகாரிகளை எதிர்த்தல், விதிமுறைகளை மீறி கடை திறந்திருக்கும் நேரம் நீட்டித்தல் போன்ற குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யும் போது எதன் அடிப்படையில் அந்த ஆதாரங்களின் படி வழக்கு பதிவு செய்ய முடிகிறது இப்படி வழக்கு பதிவு செய்யும் போதே காவல் துறையினரிடம் ஆதாரங்களை சேர்க்கும் வழக்கம் இருக்கின்றதா. அப்படி இல்லாவிடில் பொய்யாக யார் மீதும் வழக்குத் தொடுக்க முடியும் என்கிற நிலையை எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி எந்த ஊடகமும் பேசியதாக தெரியவில்லை.
கைது நடவடிக்கையின் போது சாட்சியாக ஒருவரின் கையெழுத்து பெறப்பட வேண்டும் என்று சட்டத்தில் உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு இருக்கையில் இந்த வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப்பட்டதா? அப்படி பின்பற்றப்படவில்லை என்றால் எல்லா வழக்குகளிலும் அப்படி தான் நடக்கிறதா? என்னும் கேள்வி எழுகிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மேலதிகாரிகள் இதை அவ்வப்போது கவனித்து வருகிறார்களா? அப்படி கவனித்து இருந்தால் நிச்சயம் தீடீர் என்று ஒருவரை இப்படி கைது செய்து இருக்க முடியுமா?
எல்லா வழக்குகளின் போதும் கைதிகளை தாக்குவது போன்றே இவர்களையும் தாக்கினோம் என்று உதவி ஆய்வாளர் விசாரணையில் கூறியதாக செய்திகளின் மூலம் தெரிகிறது. வழக்கமாகவே கைதிகளை இப்படி தாக்குவது நடக்கிறது என்பதை இதன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். அப்படியிருக்க கீழ் நிலையில் நடக்கும் தவறுகளை கவனித்து அவ்வப்போது திருத்த வேண்டிய மேலதிகாரிகள் அவர்கள் பணியை சரியாக செய்யவில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் நம்முடைய தேவை ஒரு சில நாட்கள் காவல் துறையின் மேல் மொத்தமாக வெறுப்பைப் பரப்பி யாரையெல்லாம் நமக்கு பிடிக்காதோ அவர்களையெல்லாம் திட்டிக் கொள்வது என்று இருந்து விட்டோமே!
ஏதேனும் காரணத்திற்காக குற்றம் செய்தவரை அல்லது சந்தேகத்தின் பெயரில் அல்லது பொய் வழக்கு தொடுத்தோ ஒருவரை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு முன்னர் அந்த நபரின் ஆரோக்கியம் பற்றி ஆய்வு செய்யப்படுகிறதா? நீதிபதி முன் ஆஜர் படுத்துவதற்குள்ளாக இயற்கையாகவே ஒருவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதில் தங்களின் குற்றம் ஏதும் இல்லை என்று காவல் துறை தற்காத்து கொள்ள ஏதும் வழி இருக்கின்றதா?
விதிமுறைகளை மீறி கடை திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டது என்பன போன்ற குற்றங்களில் குற்றம் செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றம் செய்தவர்களை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக பணிக்க முடியாதா? இது போன்ற குற்றங்களை செய்பவர்களை காவல் நிலையம் அழைத்து செல்வதற்கான அவசியம் என்ன இருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,61,118 பேர் கைது செய்யப்பட்டு 6,96,583 ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் 5,71,492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 15.99 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாகவும் காவல் துறை தகவல் வெளியிட்டதாக தெரிகிறது. இதன் மூலம் தெரிவது என்னவென்றால் மீசைக்கார ஊடகங்கள் காவல் துறை அவர்கள் போக்கிற்கு மணியம் செய்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.எச்சரிக்கை செய்யாமல் வாக்குவாதம் பண்ணாமல் விதிகளை மீறும் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்திருந்தால் அபராத தொகை வசூல் இன்னும் கூடி இருக்கும் அது பெரிய சாதனை இல்லை. மக்கள், காவல் துறை, ஊடகம் என்று எல்லோரையும் அடக்கிய அரசின் நோக்கம் மக்கள் நடமாட்டத்தை குறைத்து நோய் தொற்றை கட்டுப்படுத்துவது. வழக்கு பதிவதோ, சாலையோர கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்வதோ நோக்கம் இல்லை. இந்த விதி மீறல்கள் நமக்கு காட்டுவது நாம் நோய் தொற்றை கட்டுப்படுத்துவது என்னும் இலக்கில் முழு வெற்றி அடைய முடியாமல் போனதற்கு இப்படியான விதிமுறை மீறல்கள் தான் காரணமாக இருக்கின்றது என்பதை தான். சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும் என்று பேசி வரும் நாம் தான் சட்டங்களை மதிக்காத சமூகமாக இருக்கின்றோம் என்பது குறிப்பிட வேண்டிய விசயம்.
குற்றவாளிகள் யார் ?
மருத்துவர், தன்னை மிரட்டி காவல் துறையினர் சான்றிதழ் பெற்றதாக சொன்னதாக தெரிகிறது. இது போன்று மிரட்டி மருத்துவ சான்றிதழ் வாங்குவது முதல் முறையாக இல்லாமல் கூட இருக்கலாம். இதற்கு பின்னரும் கூட இது தொடரலாம். தடுக்க என்ன செய்யலாம் அந்த மருத்துவரையும் சேர்த்து தண்டித்தால் எதிர் காலத்தில் இப்படி நிகழாமல் தடுக்க முடியுமா நிச்சயம் உறுதியாக சொல்ல முடியாது. இது போன்ற விஷயங்களில் மருத்துவர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டார்கள் என்பதை உறுதி செய்யும் அளவிற்கு சட்ட வரைவுகள் ஏற்படுத்தப் பட வேண்டும். மருத்துவர்கள் காவல் துறையினராலோ, அரசியல்வாதிகளாலோ மிரட்டப்பட்டால் உடனடியாக அவர்கள் யாரை அணுகலாம் என்பது தெளிவுபடுத்தப் படவேண்டும் அவ்வாறு செய்த பின்பும் மிரட்டியதாக சொல்லி பொய் சான்றிதழ் வழங்கினால் அன்று மருத்துவரையும் சேர்த்து தண்டித்துக் கொள்ளலாம்.
சிறை அதிகாரி காயங்கள் இருந்ததாக மட்டும் பதிவு செய்து தன்னை தற்காத்து கொண்டது போல் தெரிகிறது சட்டப்படி சிறை அதிகாரி எந்த தவறும் செய்யாதவர் ஆகி விடுகிறார். ஆனால் இதே தவறுகள் இதற்கு முன்னரும் வருங்காலத்திலும் நிகழக்கூடும் அப்போதும் சிறை அதிகாரி இதே போல் தன்னை மட்டும் தற்காத்துக்கொள்ள முடியும். இதனை சரி செய்ய அரசு சட்ட வரைவுகளை கொண்டு வர வேண்டி நாம் வலியுறுத்த வேண்டாமா?
முன்னாள் இந்நாள் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று எந்த கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளாயினும் காவல்துறை மீது மட்டும் குற்றம் சுமத்தி தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதை நாம் ரஜினி மீது இருக்கும் கோபத்தில் கவனிக்க மறந்து போனோம்.மத்திய மாநில ஆளுங்கட்சியை சேர்ந்த அல்லது எதிர் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளிடம் ஊடகத்துறை எழுப்ப வேண்டிய கேள்விகள் இருக்கின்றது. இந்தியாவில் இப்படியான மோசமான நிகழ்வு நடப்பது முதல் முறை இல்லை அப்படியிருக்க உங்கள் கட்சி ஆட்சியில் இருந்த போது இதில் உள்ள குறைபாடுகளை நெறிப்படுத்த என்ன முயற்சி செய்தீர்கள் எதிர்கட்சியாய் சட்டமன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் எத்தனை முறை இவற்றில் இருக்கும் குறையை சுட்டிக் காட்டியுள்ளீர்கள் என்று எந்த கேள்வியையும் ஊடகங்களும் கேட்கவில்லை மக்களும் அதை யோசிக்கவில்லை. ரஜினி மீது கோபத்தில் இருக்கும் போது இதையெல்லாம் எப்படி பேச முடியும்.
தாமத கருத்தும் – தார்மீக கோபமும்:
இதையெல்லாம் விடுத்து இதிலும் தனி வழியா? சிஸ்டம் லேட்டா வந்திருக்கு என்று ரஜினி மீது கேலி பேசுவதில் ஊடகம் நம்மோடு சேர்ந்து கொண்டதா இல்லை நாம் ஊடங்களோடு சேர்ந்து கொண்டோமா!
யார் முதலில் கருத்து சொல்கிறோம் என்று இங்கு போட்டி எதுவும் நடக்கவில்லை என்று ரஜினிக்கு தெரிந்து இருக்கக் கூடும். கூடுமான வரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை கொண்டு அந்த நேரத்திற்கு தேவையான கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார் ஒரு வேலை நம்மை (தமிழர்களை) விட தமிழில் உள்ள அற நூல்களை அவரே கற்று வைத்திருக்கார் போலும். வீரம் என்பது முந்திக்கொண்டு முதலில் வருவது இல்லை. சுயம்வரத்திற்கு முன்பே காதல் கூட கொண்டிருந்தும் சுயம்வரத்தில் நான் போய் முதல் ஆளாக வில்லை வளைக்கிறேன் என்று ராமன் துள்ளிக்கொண்டு திரியவில்லை ராமனுக்கு முன் ஒவ்வொருவரும் வந்து தோல்வி அடையும் போது ஜனகர் கலக்கம் அடைகிறார் எல்லோரும் முயற்சி செய்த பின்னும் கூட நாம் மட்டும் தான் பாக்கி என்று ராமன் எழவில்லை தன் குருநாதர் கட்டளைக்கு காத்து இருக்கின்றார் விஸ்வாமித்திரர் ராமனை வில்லை வளைக்க சொன்ன பின்பும் கூட நிதானமாக ராமன் எழுவதை கம்பர் இவ்வாறு விவரிக்கிறார்.
“பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்
அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார்
மொழிந்தனர் ஆசிகள் முப் பகை வென்றார்”
அரசியலுக்கு வருவதில் இருந்த நிதானம் தொடங்கி, எதிலும் தன் கருத்துக்களை முன் வைப்பது வரையில் நெய் விட விட நிதானமாக சீறி நின்று எரியும் நெருப்பு போலவே ரஜினியும் இருக்கிறார் (கேட்டை திறக்கிறார்) அவர் வந்தாலே வாய் திறந்தாலே மற்றவர்கள் கதை முடிந்தது என்று ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள் . தேசிய ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை அதை பற்றியே பேசுகிறது. எப்போதோ கம்பர் ராமனின் வீரத்தை குறிக்கும் பொருட்டு முந்திக்கொண்டு நான் தான் முதல் ஆள் என்று இருப்பது வீரம் அல்ல, நம்பிக்கை நிதானம் இதெல்லாம் தான் வீரம் என்று தமிழைப் படிக்கக்கூடும் தமிழர்கள் புரிந்து கொள்ள எழுதப்பட்ட பாடல் ரஜினிக்கு அவர் அரசியல் செயற்பாடுகளுக்கும் இன்று பொருந்துகிறது.
ஆறுதல் தேவையானவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்கப் புறப்பட்ட நீதித் துறை அவமதிக்கப்படும் போது பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி எழுந்த கொழுங்கனல் போல எழுகிறார். குற்றம் செய்தவர்களை மட்டும் சாடுகிறார் மொத்த காவல் துறையும் சாடாமல்.(குறிப்பு: பெட்ரோல் குப்னு எரிந்து சட்னு அடங்கிவிடும் )முன்னாள் முதல்வரின் வழக்கில் தவறான தீர்ப்பு வந்த போதும் நாட்டில் எந்த துறை கெட்டு போனாலும் நீதித் துறை கெட்டுப் போகக்கூடாது அப்படி ஆகும் என்றால் அந்த நாட்டை காப்பற்ற முடியாது என்பது போன்ற கருத்தை முன் வைத்தவர் தானே அவர்.
காவல் துறை மேல் பரப்படும் வெறுப்பும் அவ நம்பிக்கையும் சமூகத்திற்கு கேடு தரும் என்று அவருக்கு மட்டும் தான் தெரிந்து இருக்கிறது.
காவல்துறை மீது பரப்பப்படும் வெறுப்பும் – குற்றங்களின் பெருக்கமும்
சமீபத்தில் வந்த செய்தி ஒன்றில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்ட ஒருவரின் வழக்கில் குற்றவாளியின் உறவினர்கள் நிலைமையை சாதகமாக்கி காவல்துறையின் விசாரணை என்கிற பெயரில் குற்றவாளியின் தந்தையை கொடுமைப்படுத்தியதாக சொல்லி கிளம்பி இருக்கிறார்கள். இனி காவல் துறை மேல் வெறுப்பும் அவநம்பிக்கையும் பரப்பப்படும் பட்சத்தில் அதைக் குற்றம் செய்பவர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள்.
அடுத்து கோவையில் காவலர் சிறுவனை தாக்கிய வழக்கில். நாம் கவனிக்க மறந்த சில விஷயம் விதிமுறை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் காவல் துறை எச்சரிக்கை மட்டும் செய்வதற்கு காரணம் என்ன? காவல் துறை நம் நண்பன் மட்டும் இல்லை ஒரு வகையில் மாமன், மச்சான், பங்காளி என்று இருக்கிறார்கள் அவர்கள் வேற்றுகிரக வாசிகள் இல்லை. அதன் பொருட்டே நம் ஊரில் இப்படி விதிமீறல்கள் எச்சரிக்கைகளாகவும் வாக்கு வாதங்களாகவும் ஆகிறது.
அந்த எச்சரிக்கையின் போது கடையை அடைக்கும் முயற்சியில் இறங்காமல் வீடியோ பதிவு செய்வதை எச்சரித்து மொபைல் -ஐ வாங்கிக்கொண்டு கிளம்புகிறார் (நிச்சயம் மொபைல் -ஐ பறிமுதல் செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பது விவாதத்திற்கு உரியது அதுமட்டுமின்றி அரசு சொன்ன ஆணையை ஏற்றுக் காவல்துறையினர் அவர்களிடம் பணிவாக சொல்வதைக் கேட்டு கடையை அடைக்காமல் மொபைலில் வீடியோ எடுக்க முனைவதன் அவசியம் என்ன ). சாலை ஓரக் கடைகளுக்கென்று விதிமுறைகள் இருக்கின்றது அதை பின்பற்றியது போன்றும் தெரியவில்லை ஆனாலும் அங்கே காவலர்கள் வழக்குப் பதிவு செய்யவோ கடையை பறிமுதல் செய்யவோ இல்லை. வண்டி சாவியை புடுங்கி அதை வாங்க முயற்சித்த, காவலரின் சட்டையை பிடிக்கும் சிறுவனை காவலர்கள் அடித்திருக்க வேண்டியதில்லை. வழக்குப் பதிவு செய்திருக்க முடியும் வழக்கில் இரண்டு பக்கமும் இருக்கும் குற்றங்கள் விசாரிக்கப்பட்டு இரண்டு பக்கமும் தண்டனை கிடைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றது ஆனாலும் கூட்டிச் சென்ற சிறுவன் மேல் வழக்கும் பதியவில்லை. விதிகள் மீறுவதற்கென்றே இருக்கிறது நம் நாட்டில். ஆனால் அவர்களோ ஏழைகள் அவர்கள் சொல்வது போன்று அவர்களுக்கு இருக்கும் செலவுகளை ஈடு செய்ய கடை நடத்தியே ஆக வேண்டும்.
கோவையில் சிறுவனை காவலர்கள் அடித்ததாக சொல்லப்படும் நிகழ்வில் குற்றம் தொடங்கும் புள்ளியாக இருப்பது நோய் தொற்று காலத்தில் இது போன்ற ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு முழுமையான தீர்வுகளை தர முடியாமல் நிற்கும் நம் அரசு, நம் சமூகம், சுற்றி வளைத்துப் பார்த்தால் நீங்களும் நானும் தான்.
ஆளுங்கட்சியின் தவறு என்றோ இல்லை, இதற்கு முன் ஆண்ட கட்சிகளின் தவறு என்றோ குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு ஆள் தேடாமல்; இன்னுமும் இத்தனை ஆண்டுகளில் உபரி வருமானம் என்றோ , இப்படி அவசர கால தேவைக்கென்றோ கையிருப்பு பணம் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் தான் இந்திய அரசும் இந்திய சமூகமும் இருக்கின்றது என்பதை நினைப்போம்.
எந்த ஒரு குறைபாடுகளையும் குற்றங்களையும் பொறுத்தவரையில் ஆங்கில மருத்துவம் போன்று எங்கு குற்றமோ குறைபாடோ இருக்கிறதோ அதை மட்டும் சரி செய்தால் போதும் என்று நினைப்பது தவறு, நம் தமிழ் மரபின் சித்த மருத்துவம் போல், வள்ளுவரின் கூற்று போல்
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”
குற்றங்களுக்கான குறைபாடுகளுக்கான ஆரம்ப புள்ளியைத் தேடி அதனைக் களைந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதே நேர்மறையான நல்ல சமூகத்திற்கு அழகு.
கொஞ்சமேனும் சிந்திப்போம்.
இளைப்பாறியது போதும். எங்க வீட்டில் இன்று தண்ணி வரவில்லை. என்ன செய்யலாம் ?
மத்திய அரசை குறை சொல்பவர்கள் ஒரு வரிசையிலும், மாநில அரசை குறை சொல்பவர்கள் ஒரு வரிசையிலும், எதிர்க்கட்சிகளை குறை சொல்பவர்கள் ஒரு வரிசையிலும் வாருங்கள். கடைசியாக எல்லோரும் சேர்ந்து ஒரு வரிசையில் இணைந்து கொள்வோம். கோரசாக கேட்போம்
“ரஜினி வீட்டில் என்ன செய்கிறார்?, அவர் புது சிஸ்டம் வாங்கினாரா இல்லையா”.
-கவி
எங்கள் வெளியீடான அரசியல் மாற்றம் தேவை என்பதை உணர்த்தும் புத்தகம் தரவிறக்கம் செய்து கொள்ள
இதையும் படியுங்கள்
http://bit.ly/helpbefore_u_share
இதையும் படியுங்கள்