நாம் எல்லோரும் நிறைய படிக்கின்றோம். அதில் சில விஷயங்களை புரிந்து கொள்கின்றோம்.ஆனால்,நாம் புரிந்து கொள்ளும் விஷயங்களையும் கூட நாம் உணர்ந்து கொள்வதில்லை. அப்படி நாம் உணர்ந்து கொள்வதற்கு, அது சார்ந்த அனுபவம் தேவைப்படுகிறது.விஞ்ஞானம் சார்ந்த,  தொழில்நுட்ப படிப்பு சார்ந்த விஷயங்களை உணர்ந்து கொள்வதற்கே நமக்கு அனுபவம் தேவைப்படுகிறது.அப்படியிருக்கையில்,திருவாசகம் போன்ற மெய் ஞான நூல்களை உணர்ந்து கொள்ளவது சாதாரணமாக நடந்துவிடாது.முதலில் நாம் அதை படிக்க வேண்டும்; வாழ்க்கையில் நாம் படித்தது தொடர்பான அனுபவத்தை பெறும் சமயத்தில் நாம் படித்ததது நம் நினைவில் இருக்க வேண்டும் அல்லது அனுபவத்தை பெற்ற சில காலத்திற்குள் நாம் அதை படிக்க வேண்டும்.இப்படி,அந்நூல்களை உணர்ந்து கொள்வதற்கு நமக்கு வாழ்வியல் அனுபவம் தேவைப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்,”தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்” என்ற. பாடலை கேட்க நேர்ந்தது.இந்த பாடலை இதற்கு முன்னரும் கூட கேட்டு இருக்கின்றேன். நான் சிறுவனாக இருந்த பொழுது, அப்பா வீட்டில் அடிக்கடி பாடுவார். அவர் பாடுவதற்கு நேரம் காலம் எல்லா தேவையில்லை அவருக்காக தோன்றும் பொழுதெல்லாம்(instinctively) பாடுவார். அப்பா, எங்களை பிரிந்து சில வருடங்கள் ஆகி விட்டது. நம் மூளை, ஒருவரின் குரலை நினைவு படுத்திக்கொள்வதில் தான் எத்தனை சிரமம்! அப்படி அப்பாவின் குரலை நினைவுபடுத்தும் பொழுது இந்த பாடலை அவர் ஆரம்பிக்கும் விதம் தான் நினைவில் வரும்.

அவர் இது போன்று நிறைய பாடுவார். நடராஜர் பத்து  பாட ஆரம்பித்தால், முழுதும் பாடிமுடிப்பார்.  இறைவன் முன் நின்று பயபக்தியோடு பாட வேண்டும் என்கிற இலக்கணங்களெல்லாம் அவர் எல்லா நேரங்களிலிலும்  பின்பற்றியது இல்லை. நாங்கள் இரவு தூங்க தயாராகி விடுவோம்,அவரும் கூட படுத்துவிடுவார், படுத்துக்கொண்டே பாடுவார்.இப்பொழுதெல்லாம் யார் பாடி கேட்டாலும் அவர் பாடுவது போல் இல்லை.

ஆனால் , நாங்கள் வளர்ந்த பின்னால், அவர் அதிகம் பாடியதில்லை.எப்படி பாடுவார்! நாங்கள் வளர வளர பிள்ளைகளான எங்கள் மூலமான நெருக்கடிகளே அவரை ஆக்கிரமிக்க ஆரம்பித்த பின், எப்படி அவர் மனம், அவர் விரும்பிய ஏதோ ஒன்றில் லயிக்கும்?

அவர் பாடும் போது அதை கேட்டுக்கொண்டிருந்தாலும் கூட, ஒரு நாளும், “நல்லா பாடுறீங்க அப்பா!அன்னிக்கு பாடின அந்த “அம்மையே அப்பா!” என்று ஆரம்பிக்கும் பாடல் பாடுங்கள்” என்று கேட்டதில்லை. அம்மாவிடம் கூட கேட்டு இருப்போம், “அன்னிக்கு வச்ச மாதிரியே குழம்பு வைங்க” என்று.

அதோடு, அவர் பாடுவதை குறைத்துகொண்ட பின்னரோ அல்லது நிறுத்திவிட்ட பின்னரோ கூட நான் அவரை கேட்கவில்லை, “ஏன் நீங்க முன்ன மாதிரி பாடுறதில்ல?”

நாம் எல்லோருமே இலகுவான மன நிலையில் இருக்கும் போது  மட்டும்  தான் நமக்கு தோணும் (instinctive action)விஷயங்களை எல்லாம் செய்யவோம்.நம் மீது அன்பு வைத்திருக்கும் எவர் மீதும் நாம் உண்மையில் அன்பு செலுத்துகிறோமா? என்றால், சந்தேகமாகவே இருக்கின்றது. காரணம், ஒரு கணம் நிதானித்து, நாம் யாருடைய சுமையையும் உணர்வதில்லை. ” அப்பா ஏன் இப்பொழுதெல்லாம் பாடுவதில்லை?” என்று எனக்கு தோன்றி இருந்தால், நிச்சயம் அப்பாவின் மனம் இப்பொழுதெல்லாம் அதிக அழுத்தத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து இருப்பேன்.அவரிடம் சென்று ஒரு நிமிடம் அப்பா அந்த பாட்டு பாடுங்களேன் என்று கேட்டு இருந்தால் ஒரு பத்து  நாள் அவர் கொண்டிருந்த அழுத்தம் ஒரு பத்து நிமிடத்தில் சரியாகி இருக்கும். “ஏன் ஒரு மாதிரி இருக்க?” “ஏன் பேச மாட்ற?” என்கிற கேள்விகள் கூட நாம் நமக்காக தான் கேட்கிறோம். அம்மாவிடம் அன்னிக்கு வச்சது மாதிரியே குழம்பு வை என்று கேட்பது போல்.அது அன்பின் அடிப்படையிலான கேள்விகள் இல்லை நம்முடைய தேவையின் அடிப்படையிலான கேள்விகள்.

இலகுவாக இருக்கும் போது, நாம் செய்யும் செயல்களே தான், நாம் மகிழ்வாக இருப்பதன் அடையாளம்(our habitual instinctive actions are the signs of our happiness). அப்படியான செயல்கள் (instinctive actions) வெகு நாட்கள் நிகழாமலேயே இருக்கும் என்றால் நிச்சயம் வெகு காலமாக நாம் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம் என்றே அர்த்தம். நம் மீது அன்பு கொண்டவர்களின் இத்தகைய நிலைகளை நாம் கவனிப்பதே இல்லை.

இப்படி பல வகையான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்த போது தான், அப்பா பாடும் பாடல்களில்  ஒன்றான “அம்மையே அப்பா!” என தொடங்கும் பாடலை தேடினேன்.திருவாசகத்தில் வரும் பாடல்.திருவாசகம் படிக்கும் பொழுதெல்லாம், நான் அதன் அர்த்தம் பற்றிய கவலை கொண்டதில்லை. அர்த்தம் புரியாமல் இருந்தாலும் எப்போதாவது படிப்பது என்று இருந்தேன்.சில நேரங்களில் சில பாடல்கள் என் கவனத்தை நிறுத்தியது உண்டு.

அப்படி இந்த பாடலும் என் கவனத்தை நிறுத்தியது. இதற்கு முன் கேட்டபொழுது இது போன்று நிகழவில்லை.இந்த முறை,அந்த பாடலை சில மணி நேரங்கள் வரை பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தேன்.

 “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

    அன்பினில் விளைந்தஆ ரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

    செல்வமே சிவபெரு மானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

    எங்கெழுந் தருளுவ தினியே”

திருவாசகம் 37-பிடித்த பத்து -3

நிச்சயமாக அப்பாவை பற்றிய எண்ணம் இல்லாமல் படித்து இருந்தால் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டு இருக்காது.

மாணிக்கவாசகர், இந்த பாடலில் இறைவனை அம்மையே என்றாலும் அப்பா என்று விழிப்பதாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.

 அம்மையே அப்பா!- தாயாகவும் ஆன தந்தையே! இங்கு அம்மையே என்பது அப்பா என்பதின் பெயரடை(adjective) மொழியாக இருக்கின்றது. அம்மா மாதிரி யாரும் அன்பு செய்ய முடியாது. ஆனால், அப்படியொரு அன்பை தருகின்ற இறைவனை அப்பா என்று அழைத்து அப்பாவை இறைவனுக்கு உவமையாக்கினார் என்றே சொல்லலாம்.அப்பா என்று அழைப்பதால் மட்டுமே எப்படி  அப்பாவை இறைவனுக்கு உவமையாக்கினார் என்று சொல்ல முடியும்?

தந்தைக்கு நிகராக யாருமே, ஏன்?  தாய் கூட தந்தைக்கு  நிகர் ஆக முடியாது. தாய்க்கு நிகராகவும் யாரும் இருக்க முடியாது. இங்கே தந்தையே தாயாகவும் இருக்கின்றான் இவனுக்கு யார் தான் ஒப்பாக முடியும் என்பதனால். ஒப்பிலா மணியே என்கிறார் மாணிக்கவாசகர்.

“அன்பில் விளைந்த ஆரமுதே”

 “அன்பில் விளைந்த ஆரமுதே” அமுதம் நீண்ட ஆயுளை தரும் என்பார்கள் அன்பை தவிர நீண்ட ஆயுளை எது தர முடியும்? சொல்லுங்கள்.

உதாரணமாக, மன அழுத்தம், பயம் கோபம் போன்ற உணர்வுகள் நிச்சயம் உடலுக்கு பாதிப்புகளையே செய்யும் மாறாக ஒருவர் உங்களிடம் அன்பாக ஒரு வார்த்தை பேசினால், அந்த ஒரு வார்த்தை உங்கள் மனதிலும் உடலிலும் எத்தகைய நல்ல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் செய்கிறது. நாம் அனைவரும் மருத்துவரிடம் செல்லும் போதும் அனுபவம் வாய்ந்தவரை விட அன்பான மருத்துவரையே தானே தேடுகிறோம்.

அன்பு தான், ஆயுளை நீட்டிக்கும் அமுதம். அதனால் தான் அன்பில் விளைந்த ஆரமுதே என்றார்.இதில் இன்னும் ஒரு அழகு கூட இருக்கின்றது. திருமூலர் அன்பு தான் சிவம் என்கிறார். சிவம் தொடக்கமும் முடிவும் இல்லாதது. அது போன்றதே அன்பும். எல்லாவற்றிக்கும் தொடக்கமாக இருக்கும் சிவத்தின் தொடக்கம் சிவமாகவே தான் இருக்க முடியும். அப்படி தான் அன்பும். அன்பின் தொடக்கம் அன்பாகவே இருக்க முடியும். அன்பில் இருந்து தான் அன்பு விளையும். நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்துங்கள். அவர் உங்களிடம் பதிலுக்கு அன்பு செலுத்துவார். அந்த மகிழ்ச்சியில் அந்த நாளில் எல்லோருடனும் கூட அன்பாக நடந்து கொள்வார். இது ஒரு nuclear fusion போல பெருகிக்கொண்டே தான் இருக்கும். அன்பு பெருகிக்கொண்டே போனால் அது எத்தனை பேர்களை மகிழச் செய்யும்! எத்தனை பேர்களின் வாழ்நாளை நீட்டிக்கும்! அன்பாய் நின்று அன்பாகவே பெருகி அமுதமாக ஆன இறைவனை, பிள்ளை மீது அன்பை கொட்டும் அப்பாவிற்கு உவமைப்படுத்தினார் என்று கொள்ளமுடியும் தானே?

தந்தை எப்படி? என்று அறிமுகப்படுத்திவிட்ட மாணிக்கவாசகர், மகனின் நிலையோடு தன்னை பொருத்திக்கொள்கிறார்.

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

    செல்வமே சிவபெரு மானே

அநேகமாக மகன்கள், மகன்களாக இருக்கும் பொழுது எதை பற்றிய கவலையும் கொள்வதில்லை. வீணான செயல்களிலேயே தான் அதிகம் பொழுதை கழிப்பார்கள். தந்தையின் அன்பும் கூட அவர்களுக்கு பெரிதும் விளங்குவதில்லை. மகன்கள் எப்படி இருந்தாலும் மகன்களை உயர்ந்த நிலை அடைய செய்யவதிலேயே தான் தந்தைகளின் முனைப்பு இருக்கும்.மேலும், ஒரு ஆண் தான் சம்பாதிக்கும் செல்வங்கள் மீது நிச்சயம் பெரிய மோகம் கொள்வதில்லை.நாமே சமைத்து நாமே சாப்பிட வேண்டுமென்றால் எப்படி இருக்கும்!அது போலவே தான், இயல்பில் ஆண்களுக்கு அவர்கள் சம்பாதிக்கும் செல்வம் மேல் பெரிய மோகம் இருப்பதில்லை.ஆனால், தனக்கான தேவைகள் தந்தை மூலமாக நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கும் போது அவன் எல்லாவற்றின் மீதும் ஆசை கொள்கிறான்.அப்படியிருக்க ஒரு ஆணின் நிகரற்ற செல்வமாக தந்தை தானே இருக்க முடியும்.அதனாலேயே தான் தந்தையான இறைவனை செல்வமே என விளிக்கிறார்.

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

என்ற வரிகளில் புலையன் என்பதற்கு கீழ்மகன் என்றும் புரோகிதன் என்றும் அர்த்தம் கொள்ளலாம். இரண்டு அர்த்தமும் இந்த பாடலின் கருப்பொருளுக்கு சரியாக பொருந்தும். புரோகிதர்கள் இறைவனை ஏற்றுவது போல, வீண் பொழுது கழித்தாலும் மகன்கள் தந்தையை ஏற்றவே செய்வார்கள். அந்த அடிப்படையில் புலையன் என்கிற வார்த்தைக்கு இரு அர்த்தங்களும் கொள்ள முடியும்

தந்தையின் (இறைவனின்) அன்பிற்கு தகுதியில்லாமல் வீணான செயல்கள் செய்யும்  கீழ் மகன் எனக்கு, எத்தனை பெரிய செம்மையான சிவபதம் அளித்த என் தந்தையான செல்வமே சிவபெருமானே உன்னை பிடித்துகொண்டேன். ஒரு குழந்தை தன் அப்பாவை பற்றி கொண்டது போல நான் பற்றிக் கொண்டேன் இனி எங்கும் போக முடியாது என்கிறார் மாணிக்கவாசகர்.

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று சும்மாவா சொன்னாங்க.காதலின் அத்தனை வடிவங்களையும் அத்தனை முகங்களையும் திருவாசகத்திற்குள் வைத்து இருக்கும் பொழுது எப்படி உருகாமல் இருக்க முடியும்.

அப்பா எத்தனை அன்பு கொண்டவராக இருந்தார்; நாம் எப்படி வீணான செயல்களில் பொழுதை கழித்தோம்; அப்பா இருந்ததால் தானே அப்படி இருக்க முடிந்தது; அந்த அப்பாவிடம் ஒரு நாளும் நாம் அன்பாக இருந்ததில்லையே (பாசம் வேறு அன்பு வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்) இனி அப்பாவை எங்கும் விட்டு விடக்கூடாது என்று  ஒரு பிள்ளையுடைய  realization point  போன்றதே மாணிக்கவாசகருடையதும். அன்பின் வடிவமாகவே இருக்கின்ற இறைவனை விட்டுவிட்டு வீணான செயல்களில் அல்லவோ நான் பொழுதை கழித்து இருக்கின்றேன் இனி உன்னை விட மாட்டேன் என்று  இறைவனை பற்றிக்கொள்கிறார்.

அப்பாவிடம் நானும் கூட அன்பாக இருந்திருந்திருக்கலாம். இருந்திருந்தால் அந்த அமுதம் அவர் வாழ்நாளை நீட்டித்து  இருக்கும்.இப்போதும் அவர் இல்லாதது ஒரு இழப்பவாக தோன்றுகிறது. காரணம், பாசம் பற்று. அன்பு இருந்தால் அவர் இல்லாதது என்னுடைய இழப்பாக தெரியாது, அவரின் விடுதலையாகவே தோன்றியிருக்கும்.அவர் குரலில் இந்த பாடலை நினைவுபடுத்திக்கொள்வது கூட சிரமமாகவே இருக்கின்றது. அன்பும் அப்பாவும் சிவமாக!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *