வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

ஆம், நீங்கள் நினைத்தது சரி தான். அது ஒரு பாடலில் வரும் வரி தான்.இந்த கட்டுரையை நீங்கள் மேலும் படிப்பதற்கு முன்னர், உங்களுக்கு அறிவிக்க வேண்டியது என்னவெனில், நவீன் உலகால் adults only என்று வகைப்படுத்தப்படும் content ஐ உள் அடக்கியது இந்த கட்டுரை.

சமீபத்தில் வெளியான ‘ புஷ்பா ‘ திரைப்படத்தில் வரும் பாடல், பலரின் பாராட்டையும் சிலரின் எதிர்ப்பையும் பெற்று இருக்கின்றது. என்னுடைய பார்வையில் அது ஒரு நல்ல பாட்டு.

கவிஞர் விவேகா, மிக சாதாரணமான வார்த்தைகளை கொண்டு தான், தன்னுடைய அநேகமான பாடல்களை இயற்றி இருக்கின்றார்.இந்த பாடலும் அப்படியானதே. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஆஸ்தான கவிஞர் என்று அவரை சொல்லலாம். அவரின் படங்களில் எப்படியும் விவேகா ஒரு பாடலாவது எழுதும் வாய்ப்பை பெற்று விடுவார்.

“ஒ சொல்றியா மாமா

ஒ ஓ சொல்றியா மாமா”

எனும் விவேகா அவர்கள் எழுதிய இந்த பாடல் தான், பலரால் ரசிக்கப்படும் அதே வேளையில் சிலரின் எதிர்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கின்றது.

விவேகாவின் இந்த பாடலுக்கு சில ஆண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்து, பாடலை எதிர்த்து வழக்கு தொடரவும் செய்து இருக்கின்றார்கள்.

சில உண்மைகள் மிக வெளிப்படையாக பேசப்படும் பொழுதுகளில் இப்படியான எதிர்ப்புகளை சந்திக்கவே செய்யும்.

இந்த பாட்டு ஒரு confessionஐ போன்றது என்று நான் நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுது, “நான் எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை, கிளப்பில் நடனம் ஆடும் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து ஆண்களை பற்றி எழுதப்பட்டதே இந்த பாடல், நிர்பயா வழக்கில் குற்றம் செய்தவர்களும் ஆண்கள் தான்” என்று விளக்கம் அளித்து சமாதானம் சொல்லியிருக்கின்றார் விவேகா.அவரின் இந்த விளக்கத்திற்கு பின்னர் இதை confession ஆக கொள்ள முடியாது. இதே பாடலைப் பற்றி அல்லு அர்ஜுனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதில் சொல்லியிருப்பது உண்மை தானே என்று முடித்துக்கொண்டார்.

கவிஞர் வாலியிடம் கேட்டு இருந்தால் அவரும் அல்லு அர்ஜுன் போல மிக வெளிப்படையாகவும் நேர்மையாகவும் அந்த பாடலில் என்ன தவறு இருக்கின்றது என்று கேட்டு இருப்பார். நாம், இன்றைய தேதியில் பல விஷயங்களை vulgar வகையறாக்களில் சேர்த்து ஒதுக்கி வைத்து இருக்கின்றோம். கவிஞர் வாலியை பொறுத்தமட்டில் எதுவும் vulgar கிடையாது.அவருக்கு எல்லாமே புனிதம் தான்.நாம் vulgar என்று வகைப்படுத்தி வைத்திருக்கும் விஷயங்களையும் நாம் ஒதுக்கிவிட முடியாத படி அவரால் அழகாய் சொல்லிவிட முடியும்.

 ஒரு பேட்டியில், “கவிதை எழுதுவதெல்லாம் வரம்;இறைவன் அருள்  இல்லாவிடில் எழுத முடியாது” என்கிறார் வாலி.

அதை கேட்ட மாத்திரத்தில், “என்ன இவருக்கு மட்டும் special அ வரம் கொடுத்தாங்களா? எல்லோருமே தான் கவிதை எழுதுகிறார்கள்” என்று நினைத்தேன். அந்த சமயத்தில் வாலி எழுதிய பாடல்களை பற்றி எல்லாம் நான் அதிகம் தெரிந்திருக்கவில்லை.

வாலியை கவனிக்க தொடங்கிய பின்,வாலி போன்று கவிதை எழுத வரம் வாங்கி தான் வந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

வாலியைப்பற்றி இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.ஆனால், கட்டுரை வாலியை பற்றியது அல்ல. ஆண்களின் வாக்குமூலம் பற்றியது.இயற்கையான இயல்பை பற்றியது.

வாலி எழுதிய பாடலின் இடையில் வரும் வரி தான் இந்த கட்டுரையின் தலைப்பில் நீங்கள் பார்த்தது.

 
 "பூனையில் சைவம் கிடையாது
 ஆண்களில் இராமன் கிடையாது
 புரட்சிகள் ஏதும் செய்யாமல்
 பெண்ணுக்கு நன்மை விளையாது
 கண்ணகி சிலை தான் இங்கு உண்டு
 சீதைக்கு தனியா சிலை ஏது "
  

இந்த பாடல், என் நினைவிற்கு வரும்பொழுதெல்லாம்,மேலே உள்ள இந்த வரிகள் தான் முதலில் என் நினைவிற்கு வரும்.

உண்மையை பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.ஆண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய இந்த வரிகள், கிட்டத்தட்ட ஒரு ஒப்புதல் வாக்குமூலம்.

இது வெறும் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமில்லை; இது தான் இயற்கை இது இப்படி தான் இருக்கும் என்பதை நவீன சமூகத்திற்கு நினைவுப்படுத்தும் வரிகள்.

பூனைக்கு நாம் தான் பாலும் சோறும் வைத்து பழக்கினோம். இயற்கையில் பூனை இனத்தில் எல்லா விலங்குகளும் அசைவ உணவையே உண்ணும் carnivores.இது எப்படி இயற்கையோ அதை போன்றதே தான் ஆண்களில் ராமன்கள் இருக்க முடியாது என்பதும்.

இதை சரியாக புரிந்து கொள்ள, நீங்கள் ராமனை புரிந்து கொள்ள வேண்டும்.

 
 வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
 "இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச்
 சிந்தையாலும்தொடேன்" என்ற, செவ் வரம்
 தந்த வார்த்தைதிருச் செவி சாற்றுவாய் 

சீதையை சந்தித்த அனுமனிடம் சீதையை சொல்லிய செய்தி,”என்னை திருமணம் செய்து கொண்ட நாளில், என்னுடன் இருந்த பொழுதில், ‘இந்த இப்பிறவியில் இருமாதரை சிந்தையிலும் தொடேன்’ என்று அவர் எனக்கு அளித்த வரத்தை அவர் காதில் சொல்லி நினைவுபடுத்து”என்பதை சொல்லும் பாடல் தான் மேலே உள்ள பாடல்.

இரு மாதர் என்பது திருமாலின் மற்ற இரு மனைவியர் என்றும் உரை ஆசிரியர்கள் கூறுவதுண்டு. அதன் அடிப்படையில் பார்த்தாலும், இந்த இப்பிறவியில்(இராமாவதாரத்தில்), சீதையை தவிர்த்து மனைவியராகவே இருந்தாலும் வேறு ஒரு மாதரை சிந்தையிலும் தொடேன் என்று சீதைக்கு உறுதியளித்து அதன்படியே ராமன் வாழ்ந்தான் என்பதை அறிந்த கொள்ள முடிகிறது.

ராமாயணத்தை கதை என்றே கொண்டாலும், ராமனுக்கு வேறு பெண்களையும் மணம் முடித்துவைத்து அவர்களை திருமாலின் மற்ற இரு மனைவியரின் அவதாரம் என்று நியாயப்படுத்தியிருக்க முடியும் தானே?அப்படி செய்யவில்லை என்னும் பொழுது,ராமன் சிந்தையிலும் பிற பெண்களை தொட நினைக்காத ஒருவனாக இருந்தான் என்று நிச்சயம் எடுத்துக்கொள்ள முடியும். அது ஒரு விரதம் போன்றது.பசி போன்ற இயற்கையான உந்துதலை கட்டுப்படுத்தும் உண்ணா நோன்பினை போன்றது.

இரண்டு வரி தான்,

“பூனையில் சைவம் கிடையாது

ஆண்களில் ராமன் கிடையாது”

என்று

 இயற்கையாகவே ஆண்களின் சிந்தை ஒரு பெண்ணை மட்டும் நினைக்க கூடியது அல்ல என்கிறார் வாலி. அது உண்மையும் கூட. மனிதர்கள் மட்டும் இல்லை இயற்கையில் உயிரினங்களின் design அப்படித்தான் இருக்கின்றது.

வாலியின் வரிகளில், கவிஞர் விவேகா சமாதானம் சொல்லியது போல் சமாதானம் சொல்ல இடம் ஏதும் இல்லை, இந்த பாடல் ஆண்களை பற்றி ஒரு ஆண் எழுதி, ஒரு ஆணே பாடும் வகையில் காட்சிபடுத்த பட்ட பாடல்.

எல்லா ஆண்களும் அப்படித்தானா? என்று கேட்பீர்கள் என்றால், நிச்சயம் எல்லோரும் அப்படித்தான்.கணவர்,தந்தை,சகோதரர், என்று ஆண்கள் எல்லோரும் அப்படித்தான்.

ஆனால், இவர்களை நீங்கள் grade வாரியாக பிரித்துவிடலாம். A grade இராமன், B grade ராமன் என்று. இதை இன்னும் விவரமாக எழுதிக்கொண்டு இருந்தால், திருவாசகம் பற்றி தொடங்கும் பொழுது இந்த கட்டுரை ஒரு பத்து பக்கத்தைத்தாண்டி இருக்கும். கவிஞர் வாலிக்கு முன்னால் இதை பற்றி எழுதிய கண்ணதாசன் இதை இன்னும் சூசகமாக எழுதியிருந்தார்.

 
 
 "ஒருத்தி ஒருவனை
 நினைத்து விட்டால்
 அந்த உறவுக்குப் பெயரென்ன
 காதல்
 அந்த ஒருவன் ஒருத்தியை
 மணந்து கொண்டால்
 அந்த உரிமைக்குப் பெயர் என்ன
 குடும்பம்"
   

ஏன்? ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால் என்று எழுதியிருக்கலாமே? என்ற கேள்விக்கு ஒருத்தி தான் ஒருவனை நினைப்பாள். ஒருவன் ஒருத்தியை நினைக்கமாட்டான் என்று பதிலளித்தாராம் கண்ணதாசன்.

வாலி மற்றும் கண்ணதாசனின்,வரிகள், இது தான் இயற்கை என்று சொல்லமுற்பட்டு இருந்தாலும்,இரண்டும் மிக தைரியமான confession.

ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் ஒரு நாள், “திருவாசகம் படிச்சு வெகு நாட்கள் ஆகிவிட்டது” என்றெண்ணி, எப்போதும் போல் அர்த்தம் புரிந்ததோ இல்லையோ, என் போக்கிற்கு திருவாசகம் படித்து கொண்டு இருந்தேன்.இதற்கு முன் அப்படி திருவாசகம் படித்த பொழுது, இறைவனின் திருப்பாதத்தை கட்டி தழுவி  தன் தலை மேல் வைத்து “எம் பெருமான் பெருமான்” என்று கத்த ஆசை என்று மாணிக்கவாசகர் எழுதியது என்னை ஏதோ செய்தது போல கீழ்வரும் இந்தப்பாடல் என்னை நிறுத்தி ஏதோ செய்தது .

“வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே

ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய்

வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே.”

திருவாசகம்-05 திருச்சதகம்-19

உடம்பை பெற்ற உயிர்களுக்கு இயல்பாக இருக்கும் உணர்வுகளில் ஒன்று தான் காமம். ஒரு வகையில் அடிப்படை தேவைகளில் ஒன்று.

ஜட இயற்கையின் தோற்றமான இந்த உடம்பின் ஜட இயற்கை(material) சார் ஆசைகளை விட்டவர்களே இறைவனை அடைகிறார்கள்.

காமம் என்னும் வார்த்தைக்கு அதிதீவிர ஆசை என்றே பொருள். அப்படியென்றால் எல்லாவிதமான ஆசைகளையும் நாம் ஏன் காமம் என்று சொல்வதில்லை?

காரணம், மற்ற ஆசைகளில், தீவிரம் ஏற்படுவதற்கு துளியும் வாய்ப்பு இல்லை. car வாங்க வேண்டும்;வீடு வாங்க வேண்டும்; பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எந்த விதமான ஆசையும் உங்கள் உடம்பிற்கான தேவையோடு நேரடி தொடர்புடையது அல்ல. மற்ற ஆசைகளை உங்களால் சுலபமாக துறந்துவிட முடியும்.

ரஜினியின் பாபா, திரைப்படத்தில்,நமக்குள் இருக்கும் கடவுளை அறிந்துகொள்ள அதாவது கடவுளை அடைய,  ஆசை பயம் இவை இரண்டையும் துறக்க வேண்டும் என்று மஹா அவதார் பாபா சொன்னவுடன் , ரஜினி ஒரு கேள்வி எழுப்புவார், “எனக்கு ஆசையும் இல்லை பயமும் இல்லை நான் ஏன் இன்னுமும் கடவுளை அடையவில்லை” என்று.

அப்போது,ஆசை  இருக்கின்றது என்பதை உணர்த்த, முதலில் பெண்களை தோன்ற செய்திருப்பார்கள்.  பிறகு, பயம் இருக்கின்றது என்பதை  உணர்த்த, ஒரு பெரிய நாகத்தை தோன்ற  செய்திருப்பார்கள்.

மனித உடலின் இயல்புக்கு அப்பாற்பட்ட ஆசைகளை துறந்துவிடுவது சுலபம். பணம்,பொருள் மீதான ஆசைகளை எவரும் சுலபமாக துறந்த விட முடியும்.மனித உடலின் இயல்போடு தொடர்புடைய பாலின பற்றை துறந்துவிடுவது அத்தனை சுலபம் இல்லை.மேலே உள்ள காட்சியில் அதை சொல்லவே முற்பட்டு இருப்பார்கள்.

உடலோடு இருக்கும் பொழுது, உடலின் இயல்பால் தனக்கு ஏற்படும் எண்ணங்களை கவனித்து தன் நெஞ்சை தானே பலித்து இறைவனை நாட சொல்வது போல அமைக்கப்பட்ட பாடல் தான்.

 "வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய
 பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே
 ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய்
 வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே." 

இதுவும் ஒரு ஆணின் ஒப்புதல் வாக்குமூலம் தான்  , “ஊன் எல்லாம் உருகும் படி புகுந்தாண்ட இறைவன் இன்று போய்  வான்(space) உளான் அவனுக்காக உருகாமல் மன்மதனின் மலர் கணைக்காகவும் பெண்களுக்காகவும் உருகுகிறாயே நீ ஏன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்” என்று மனித உடலின் இயல்பில் இருந்து விலக்கி கொண்டு தன் நெஞ்சை இறைவனை நாட அறிவுறுத்தும் அதே வேளையில் என் மனம் இப்படியெல்லாம் இருக்கின்றது என்பதை சொல்லும் வாக்குமூலம்.

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி , தலைக்கு மேல் சஹஸ்ரஹாரத்தில் இருக்கும் அன்பின் வடிவமான இறைவனை அடைவதை தான் யோகத்தில் பேரானந்த நிலையாக சொல்கிறார்கள். அன்பின் வடிவமான இறைவனை அப்படி அடையும் பொழுதில் உடல் உருக தானே செய்யும். இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய மாணிக்கவாசகர், இன்று போய் வான்(space-சஹஸ்ரஹாரம்-வெளி) உளான் என்று குறிப்பிட்டது தன் உடலோடு தன்னை ஆட்கொண்ட இறைவன் மீண்டும் தனக்கு வெளியில் இருப்பதை சுட்டியே வான் உளான் என்றார்.

விஞ்ஞானத்திற்கு ஒரு வழக்கம் உண்டு. For understanding, என்று சில கற்பனைகளை சேர்த்துக்கொள்வார்கள்.latitude, longitude, equator என்பதெல்லாம் கற்பனை கோடுகள். சில கணக்கீடுகளுக்காகவும் புரிதலுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறாகவே எல்லாமுமாக இருக்கும் இறைவனின் வெவ்வேறு நிலைகளையும் வெவ்வேறு செயல்பாடுகளையும் உணர்த்த, எல்லாவற்றையும் ஒவ்வொரு தெய்வமாக முன்னோர் உருவகப்படுத்தி வைத்தார்கள்.

அப்படியான ஒருவன் தான் மன்மதன். எல்லாம் இறைவன் செயல் என்கிற பொழுது,ஜட இயற்கையின்  பாலின ஈர்ப்பும் இறைவன் செயலாக தானே இருக்க முடியும்.அதனால், அந்த உணர்வையும் இறைவனாக வைத்தார்கள். அதற்கான இறைவனான மன்மதனின் மலர் கணை என்று பாடலில் குறிப்பிடப்பட்டது நிஜமானது அல்ல பாலின உணர்வுகளை சுட்டும் கற்பனை கணைகள்.

கவனிக்கத்தக்க இன்னுமொரு விஷயம், வேனில் வேள் என்கிற வார்த்தை. வேனில் வேள் என்றால் வசந்த காலத்திற்கு தலைவன் என்று பொருள். மன்மதன் என்று நேரடியாக சொல்லாமல்.மன்மதனுடைய designation ஐ சொல்வது போல் இருக்கின்றது. இதை ஏன் இங்கே குறிப்பிட வேண்டும்?

பாலின ஈர்ப்பும் ஆசையும் எல்லா நேரங்களிலும் எல்லா சூழல்களிலும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை.சமயங்களில் தோன்றுவது கூட இல்லை.உடலின் இயல்பான விஷயங்கள் காலம் மற்றும்  மற்ற சூழல்களின் தாக்கத்திற்கு ஏற்ப வெளிப்படுவது என்பதை உணர்த்தவே வசந்தகாலத்திற்கு தலைவனானவனின் கணைக்கு என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.

வாலி, கண்ணதாசன் இவர்களை போல, மாணிக்கவாசகர் இது தான் இயற்கை என்று ஏற்றுக்கொள்கிறார். ஆனால், மாணிக்கவாசகரின் தவிப்பு எத்தகையது என்றால், “எனக்கு ஏன் இதெல்லாம் தோணுது; எனக்கு இதெல்லாம் வேண்டாம் இறைவனை சேர்ந்தால் போதும்” என்பதை போன்றது.

பசிக்கின்ற குழந்தை, அம்மா! எனக்கு ஏன் பசிக்குது என்று  கேட்பதை போன்றது.

அடுத்த பாடலில்,

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே

    வல்வினைப்பட்

டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை

    ஏத்தாதே

சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன்

    பல்காலும்

வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய

    வெள்ளத்தே

திருவாசகம்-05 திருச்சதகம்-20

இந்த ஜட இயற்கையினால் ஏற்படும் ஆசையை துறக்காமல் இருந்தால் அந்த வினையினால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்து வினைக்கடலில் மூழ்க வேண்டும்; அவ்வாறு வினைக்கடலில் மூழ்காமல் காக்கும் இறைவனின் ஏத்தாமல் இருந்தால் நிச்சயம் வினைக்கடலில் மூழ்குவது உறுதி என்று தன் நெஞ்சை தானே கடிந்து கொள்கிறார்.

இந்த பாடல் எப்படி இருக்கு பாருங்களேன்!  ஒரு குழந்தையை கடிந்து கொள்ளும் பெற்றோரின் கண்டிப்பை போல அமைந்து இருக்கின்றது.

“நீ நல்லா படிச்சா நல்ல வேலைக்கு போகலாம் இல்லாட்டி எங்களுக்கு என்ன! சொல்றதை கேட்டா கேளு” இதே போன்ற தொனியில் ஒருவரால் தன் நெஞ்சை தானே கண்டித்து கொள்ள முடியுமா என்ற வியப்பை தருகிறது மேலே உள்ள பாடல் .

கவிதை, கதை என்று எதுவானாலும் உருகி உருகி எழுதப்படும் வரிகளே நம்மை உருக செய்யும். திருவாசகத்தை பொறுத்தவரையில் வார்த்தைக்கு வார்த்தை உருகி உருகியே தான் எழுதியிருக்கின்றார் மாணிக்கவாசகர். இந்த பாடல்களை பேச்சு வழக்கில் நினைத்துப் பாருங்கள் நிச்சயம் உருகி விடுவீர்கள்.

எல்லாம் சரி, நீயும் அப்படித்தானா? என்று கேட்டு விடாதீர்கள்.நான் பெரும் தைரியசாலி எல்லாம் இல்லை(ஹா ஹாஹா). ஏதோ ஒரு தைரியத்தில் இந்த பாடலைபற்றி எழுத வந்து இந்த கட்டுரையை எழுதிவிட்டேன். என்னை மட்டும் இல்லை எந்த ஆண்களையும் கேட்டு விடாதீர்கள்.

கவிஞர் விவேகா எழுதிய ஓ சொல்றியா மாமா பாடலின் அழகே அது தான். ஆண்கள் இப்படி தானே என்று சொல்லிவிட்டு அந்த பெண்,”ம்” சொல்றியா மாமா, “ம்ம் ம்ம்ம் ” சொல்றியா மாமா என கேட்கும் படி எழுதவில்லை.

ம்-என்றால் ஆம்

ம்ம் ம்ம் -என்றால் இல்லை

இந்த இரண்டும் இல்லாமல், “ஓ” சொல்றியா மாமா “ஓ ஓ” சொல்றியா மாமா என்று எழுதியிருப்பார். ஆண்கள் மறுக்கவும் மாட்டார்கள் ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள் என்றே அமைந்து இருக்கின்றது அந்த பாடல்.

ஆண்கள் இயற்கையில் அப்படித்தான் ஆனால், அவர்களை நீங்கள் grade வாரியாக பிரித்து விடலாம் (ஹா!ஹா!)

இயற்கையான விஷயங்களை ஏற்காமல் மறுக்கும் பொழுதுகளில் தான் குழப்பங்கள் நிகழ்கிறது. அந்த குழப்பங்கள் குற்றங்களாகிறது. நம் முன்னோர்களை பொறுத்தவரையில் இயற்கையை ஏற்று அதற்கேற்றாற் போல வாழ்க்கைமுறையை அமைத்து வைத்து இருந்தார்கள்.அவர்கள் இயற்கையை கட்டுப்படுத்த நினைக்கவில்லை; காலத்தையும் கட்டுப்படுத்த நினைக்கவில்லை; சூழல்களை கட்டுக்குள் வைத்து இருந்தார்கள்.அவர்கள் எதையும் குறுகிய கண்ணோட்டத்தோடு அணுகவில்லை.

ஆண்கள் அப்படித்தான் என்பது இயற்கை என்பதற்காக ஆண்கள் மீது வெறுப்போ சந்தேகமோ என்பது இல்லாமல், எது எது எப்படி எப்படி இருக்க வேண்டுமோ அது அதை அப்படி அப்படி அமைத்து எது எது எந்த காலத்தில் நிகழ வேண்டுமோ அது அதை அந்த அந்த காலத்தில் நிகழ்த்தி வந்தார்கள்.

ஆனால், நாமோ மேதாவித்தனமாக, “இது ஏன் இப்படி இருக்கனும்; அப்படி இருக்க வேண்டியது இல்லை” என்று இயற்கையை ஏற்றுக்கொள்ளாமல்; மறுத்து; இயற்கைக்கு முரணான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றோம்.

 சமீபத்தில் பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட்டு இருப்பதும் அப்படியான முரண்களில் ஒன்றே.(ஏன் என்று படிக்க கீழே உள்ள தலைப்பை கிளிக்குங்கள்)

பாலியல் வன்கொடுமைகளுக்கான நிரந்தர தீர்வு

குறைந்த பட்சம் இப்படியான் விஷயங்களை vulgar என்கிற வகைக்குள் பூட்டி வைக்கும் narrow minded சமூகமாக இல்லாமல் நம் முன்னோர்களை போன்று இந்த விஷயங்களை அணுகினால் குறைந்த பட்சம் தற்கொலைகளையாவது தடுத்துவிட முடியும்.

இதில் நாம் அலசுவதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது.வேறு ஒரு தலைப்பில் இன்னும் விவரமாக அலசலாம்.

One thought on “திருவாசகம்-10: பூனையில் சைவம் கிடையாது”
  1. “பூனையில் சைவம் கிடையாது

    ஆண்களில் ராமன் கிடையாது”

    இதை எழுதியது வாலி கிடையாது .வைரமுத்து !

    Btw i am big fan of Vaali!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *