வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.
திருவாசகம் பற்றிய தொடரின் முந்தைய பகுதியை நாம் எழுதி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.அந்த மூன்று மாதங்களும் நேரம் ஒதுக்க முடியாத சூழல்களோடு கடந்துவிட்டது.
(மாணிக்கவாசகர்: நீ ரஜினி புராணம் பாடியும் நாளாச்சு!)
சரி தான்! நம் வலைதளத்தில் ரஜினி புராணம் பாடியும் நாளாகிவிட்டது. ஹா! ஹா! ஹா! ஹா!
ரஜினியை பற்றியோ திருவாசகம் பற்றியோ பார்ப்பதற்கு முன் கவிதைகளைப் பற்றி பார்க்கலாம்.
எங்கள் தமிழ் ஐயா ராஜேந்திரன், எப்போதும் வகுப்பை உயிர்ப்புடன் வைத்து இருக்க கூடியவர்.
அவருக்கு முன் நான் சந்தித்த தமிழ் ஆசிரியர்கள், தமிழ் பாடத்தில் வரும் சிறுகதையை வெறுமனே வாசித்துவிட்டு, அல்லது யாரேனும் மாணவர்களை வாசிக்க சொல்லிவிட்டு, பாடத்தை நடத்திமுடித்துவிட்டதாக கணக்கில் சேர்த்துக்கொள்வார்கள். தமிழ் தெரிந்த; தமிழை தாய்மொழியாய் கொண்ட மாணவர்களுக்கு, துணைப்பாடத்தில் வரும் சிறுகதைகளை விளக்கி சொல்வதற்கு எந்த ஒரு அவசியமும் இல்லை என்கிற பொழுது, வெறுமனே வாசிக்க தானே முடியும்!
உரைநடை பாடத்தில் வரும் கட்டுரைகளையும் கூட அப்படியாக மட்டுமே தான் அணுக முடியும். இப்படி ஒரு எண்ணம் எனக்கும் இருந்தது.
ஆசிரியர்கள் என்னை எழுந்து பாடத்தை வாசிக்க சொன்னால்,பாடத்தை அத்தனை வேகமாக வாசித்து, ஒரு உரைநடை முடிக்க வேண்டிய நேரத்தில் மூன்று உரைநடை பாடத்தை ஆசிரியர்கள் முடித்த கணக்கில் சேர்த்துக் கொள்ள உதவிடுவேன்.
அதில் ஒரு பெருமிதம் வேறு.
பெருமிதம் என்னும் போர்வையில் இருந்த அந்த கர்வத்தை தமிழ் ஐயா ராஜேந்திரன் உடைக்கிறார்.
ஒரு நாள் வகுப்பில், அவர் என்னை வாசிக்க சொன்ன பொழுது, வேகமாக எழுந்து வேகமாக நான் வாசிக்க தொடங்கிய வேகத்திலேயே என்னை நிறுத்தினார்.
அவர் சொன்னார், “நான் உன் level(மாணவர்கள் நிலைக்கு) இறங்கி வந்து புரியனும் ன்னு பாடம் எடுக்கிறேன். நீ எனக்கு மேல(Professor level க்கு) போய் யாருக்கும் புரியக்கூடாதுன்னு வாசிக்கிற நீ உட்காரு ”
சிறுகதைகளை, யாரேனும் ஒரு மாணவரை எழுப்பி, நிதானமாக வாசிக்க செய்து, மற்றவர்களை கவனிக்க சொல்வார். கதையை வாசித்து முடித்த பின், அங்கே ஒரு கலந்துரையாடல் நடக்கும். கதாசிரியர் இந்த கதையை ஏன் இப்படி முடித்தார்? இந்த கதாபாத்திரம் ஏன் இப்படி செய்தது? இப்படியான கேள்விகளுக்கான பதில்களை மாணவர்களிடம் வைத்து ,”B” section மாணவர்கள் என்ன என்ன கருத்துக்களை முன் வைத்தார்கள் என்றெல்லாம் சொல்லி, ஒரு கதையை, ஒரு கருத்தை எப்படியெல்லாம் அணுக முடியும் என்பதை ஒவ்வொரு மாணவர்களும் தெரிந்து கொள்ளும்படியான சிந்தனையை தூண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்தும் நெறியாளராக அவர் இருப்பார் .
பதினோராம் வகுப்பின் தமிழ் உரைநடை பகுதியில் கவிதையை பற்றிய ஒரு கட்டுரை. அந்த பாடத்தை வாசிக்க செய்வதற்கு முன் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.கவிதை என்றால் என்ன?கவிதை எப்படி இருக்க வேண்டும்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை தருகிறார்கள்.
அந்த வகுப்பில் மற்றொரு கேள்வியை வைக்கின்றார். முதன் முதலாக செய்யுள் வடிவ கவிதைகளை எளிமையாக ஆக்கியவர் யார் என்று? என்னுடைய மனதில் பாரதியின் பெயர் இருந்தது. அவர் சட்டென்று பாரதிக்கும் வெகு காலம் முன்னவரான கம்பரின் பெயரை சொல்கிறார். கேள்விகளை முன்வைத்து மாணவனுக்கு கணிக்க முடியாத அல்லது அதுவரை ஒரு மாணவன் அறிந்திருக்காத பதில்களை தந்து ஆச்சரியப்படுத்தும் ஆசிரியர்களில் அவர் ஒருவர். ஒரு மாணவன் ஆசிரியர் பார்த்து வியக்கும் வண்ணம் ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்று நல்லாசானுக்கான இலக்கணமாக நன்னூல் கூறுகிறது.
எப்படி கம்பர்! என்னுடைய ஆச்சரியத்திற்கு அவரே விடையளிக்கிறார், “கவிதை எளிமையானது. ‘நான் நடந்து வந்தேன்’ என்பதை ‘வந்தேன் நான் நடந்து’ என்றால் கவிதை.கம்பர் கவிதைகளில் இத்தனை எளிமையாகவே தான் செய்தார்.
கண்டனன் கற்பினுக்கினியை கண்களால்கண்டனென்,
கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்
இலங்கை சென்று கண்ணால சீதையை பார்த்தேன். இது தான் விஷயம்” என்று சொல்லி முடித்தார்.
மண்டைக்குள்ளேயே மண்டையை ஆட்டிவிட்டு, ஆமா ல என்று மேலும் அவர் பேசுவதை தொடர்ந்து கவனித்தேன்.40 நிமிடங்கள் ஒரு மாணவன் தன்னை மட்டுமே கவனிக்க முதல் 10 நிமிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்து இருந்தார்.
தொடர்ந்து பேசியவர், கம்பர் காலத்தில் இருந்து சினிமா காலத்திற்கு வந்துவிட்டார்.
பெண்ணின் ஆசைகளை ஒரு பெண்ணையே எழுத வைத்த முதல் இயக்குனர் கெளதம் மேனன் என்று சொல்லி அந்த இயக்குனரை பாராட்டுகிறார். என் மனதில் இதென்ன பாட்டு என்று ஓடியது.. வசீகரா! என் நெஞ்சினிக்க பாடல் தான் அது.
(ரீமாசென்னை பார்க்க வேண்டும் என்று நினைக்கிற வயதாக இருந்தாலும் அந்த பாட்டு வந்தா சேனல் ஐ மாற்ற வேண்டிய காலம் அது.நம்ம எங்க வரிகளை கவனித்தோம்.)
மேலும் தொடர்ந்த தமிழ் ஐயா , “வைரமுத்து பெண்ணின் ஆசை என்று எத்தனையோ ஆசைகளை எழுதினார். பெண்ணுடைய ஆசைகள் இப்படியெல்லாம் தான் இருக்க வேண்டும் என்பதை ஆண் எப்படி தீர்மானம் செய்ய முடியும்? உணர்ச்சிகளின் உணர்வுகளின் extreme தான் கவிதை. அந்த பாடலில் தனக்கு பிடித்த வரிகள் என்று அவன் பொய் சொல்லுவான். அது பொய் ன்னு எனக்கு தெரியும் ஆனாலும் எனக்கு அது தான் வேணும்” என்றார்.
“குளுகுளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையே தான் எதிர்பார்க்கும்”
மேலும், கவிதைகளையும் பாடல்களையும் பற்றி பேசிய அவர்,கவிதையின் வெவ்வேறு பரிமாணங்களை பேச திரைப்பாடல்களையே எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டார். நடிகர் டி.ராஜேந்தர், தான் ஒரு பாடல் முழுதும் இல் பொருள் உவமையணியை பயன்படுத்தியவர் என்றார். அது என்ன பாடல் என்று நீங்களே தேடுங்கள்.
இப்படி சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தவர் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம். உவமைகளை கொண்ட ஒரு கவிதை, ஒவ்வொருவரின் அனுபவத்திற்கும் பார்வைக்கும் ஏற்ப வேறு வேறு பொருள்களை தந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
உவமைகளை கொண்ட கவிதைகளின் அழகே அது தான். உவமைகள் அல்லாத கவிதைகளும் அப்படி இருப்பதுண்டு.
உங்களுக்கே கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கலாம். நீங்கள் முன்னமே கேட்ட ஒரு பாடலின் ஒரு வரி, தீடீரென்று ஒரு நாள், உங்களுக்கு புதிய அர்த்தத்தை கொடுக்கலாம்.
அருணாச்சலம்- ரஜினி படம்.
அந்த படத்தில் வரும் அறிமுக பாடலை பற்றி பேசும் பொழுது இயக்குனர் சுந்தர்.சி ரசிகர்களுக்கான பாடலாக அந்த பாடலை அமைக்க வேண்டும் என்று தான் அமைத்திருருந்ததாகச் சொன்னார்.
பாடலாசிரியர் வைரமுத்துவும் பாடலை ரஜினி ரசிகர்களை நோக்கி பாடும் பாடல் போன்றே அந்த பாடலை எழுதி இருப்பார் .பாடலை படமாக்கும் பொழுது, ரஜினி சொன்னதன் பெயரில் அங்கே ஒரு லிங்கத்தை அமைத்து, அந்த லிங்கத்தை பார்த்து ரஜினி பாடுவதாக சில வரிகளும் அடுத்த சில வரிகள் கேமரா வை (ரசிகர்களை ) பார்த்து பாடுவதை போலவும் படமாக்கி இருப்பார்கள்.
ஒரு பாடல், ஒரு கவிதை, அங்கே இரண்டு விதமாக அணுகுவதற்கு இடம் அளிக்கின்றது. ஒன்று ரஜினி தன் ரசிகர்களை சுட்டி பாடுவது போலவும்; அடுத்து ரஜினி இறைவனை நோக்கி பாடுவது போலவும் அமைந்து இருக்கும்.
என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும் நீதான் என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான் என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான் என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான் ஆ என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான் என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான் எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான் என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான் அருணாச்சலம் திரைப்படம் அறிமுக பாடலில் வரும் வரிகள்
அப்பா,பிரிந்து போன சில வருடங்கள் கழித்து இந்த பாடலை கேட்ட பொழுது இந்த வரிகள் என்னை நிறுத்தியது. இப்பொழுதும் கூட இந்த வரிகளைப் பற்றி எழுத முற்பட்ட பொழுது, சில நொடிகள் என்னை மறந்து; என்ன செய்துகொண்டு இருந்தேன் என்பதையும் மறந்து சிலையாகித் தான் போனேன்.
“என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான்.என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான்”
ரஜினி, தன் ரசிகர்களை தன்னுடைய உயிராக நினைத்து பாடுவதாக எழுதப்பட்ட வரி. அதை ரஜினி, கடவுளை நோக்கி பாடப்பட்ட வரியாக மாற்றுகிறார்.
என்னுடைய அனுபவம், மகன், தந்தை உறவோடு அந்த வரிகளை பொருத்திக்கொள்கிறது.
கைதி திரைப்படத்தில் ஒரு வசனம், “ஒரு புள்ளைய மட்டும் பெத்துட்டா நமக்கெல்லாம் சாவே கிடையாதுல சார்“. இந்த வசனம் தான் அந்த பாடல் வரி.
ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் மறுபதிப்புத்தானே!
ஒரு குழந்தையின் உடலும் உயிரும் பெற்றோர்களிடம் இருந்து தானே வருகிறது.பெரியம்மா மாதிரியே இருக்கும் அண்ணன் மகள், அம்மாச்சி மாதிரி இருக்கும் சித்தி பையன் என்று உடலும் உயிரும் கொண்ட நாம் ஒவ்வொருவரும் அழிவதேயில்லை மாறாக தோன்றி மறைகின்றோம்.
இதை நான் ஒரு கவிதையாக எழுதினேன்.
(மாணிக்கவாசர்: அதைச் சொல்லு! அதுக்குத்தான் இவ்வளவு கதையா?)
தமிழ் ஐயா சொன்ன, ‘வந்தேன் நான் நடந்து’ என்கிற idea வை வைத்துக்கொண்டு தான் கவிதை எழுதுவதாகச் சொல்லி ஓட்டிக்கொண்டு இருக்கின்றேன்.
நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கும் நம்முடைய அன்பிற்குரியவர்கள் எங்கும் அழிந்து போய்விடவில்லை. We are they. They are we.
ஆனால், நம்மால் அதனை விளங்கிக்கொள்ள முடிவதில்லை.இன்னும் நூறாண்டுகளுக்கு பின் பிறக்க போகும் உங்களது எள்ளு பெயரனாகவோ பெயர்த்தியாகவோ நீங்களே தான் இருக்கப்போகிறீர்கள்.
அவர்கள், இன்று; இந்த நொடி; உங்களுக்குள் தான் இருக்கின்றார்கள் அல்லது உங்கள் பிள்ளைகளுக்குள் இருக்கின்றார்கள்.
300 வருடத்திற்கு முன்னர் உங்கள் சந்ததியில் இருந்த ஒருவரின் Nth மறுபதிப்பாக நீங்கள் இருக்கக்கூடும்.
300 வருடம், 500 வருடம், ஆயிரம் வருடம் என்று இப்படியே பின்னோக்கி சென்றால், அங்கே யார் இருப்பார்? அதற்கு மாணிக்கவாசகர் விடை சொல்கிறார்.
“எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே” இந்த ஒரு வாசகம் தான் இந்த பாடலைப் பற்றி என்னை எழுத வைத்தது.ஒரே ஒரு வரி,நம்மை மூழ்கடிக்கும் அளவிலான ஆழத்தைக் கொண்டது.
இறைவன் எங்கும் எதிலும், நிறைந்திருக்கின்றான் என்பதை சொல்ல வந்த மாணிக்கவாசகர், கடவுள் இருந்தா கூட்டிட்டு வந்து காட்டுங்க? என்கிற நாத்தீகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார்.
கடவுள் எல்லாவற்றிக்குள்ளும் இருக்கின்றார்; நமக்குள்ளும் இருக்கின்றார்; நாம், எள்ளு என்றால்; இறைவன் எண்ணெய். உடலோடு இருக்கும் நம் நிலை எள்ளுக்கும் உடலை பிரிந்து இறைவனை அடையும் நிலை எண்ணெய்க்கும் ஒப்புமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்றே நான் எடுத்துக்கொள்கிறேன்.
எள்ளுக்குள் இருக்கும் எண்ணெயை எப்படி நம்மால் கண்டுணர முடியாதோ? எள்ளால் எப்படி எண்ணெயை காணவே முடியாதோ. அப்படியாகவே இறைவன் இருக்கின்றான், ‘ஜட உலகின் அறிவால் உணர முடியாத நிலையில்’. material world இல் இருக்கும் senses and equipments க்கு புலப்படாத நிலையில். ஆனாலும், அந்த ஜட உலகிற்குள்ளேயே அந்த ஜட உலகமாகவே தான் இருக்கின்றான்.
இன்னும் பிறக்காத நம் உடலின், நம் உயிரின் வேறு அம்ஸங்கள் (நம் சந்ததிகள்)நமக்குள் இருப்பதை எப்படி நாம் அறியாது இருக்கின்றோம். எள்ளுக்குள் இருக்கின்ற எண்ணெயை அறியாதது போல.அது போலவே இறைவன் எல்லாவற்றிக்குள்ளும் இருப்பதை உணர முடியாமல் இருக்கின்றோம்.
எல்லாவற்றிக்கும் முதலாக இருக்கும் இறைவன் தானே இதிலும் முதல்வனாக இருக்க முடியும். 300 வருடம், 500 வருடம், ஆயிரம் வருடம் என்று இப்படியே பின்னோக்கி சென்றால் அங்கே இறைவனே தானே இருப்பார். அப்படி பார்க்கும் பொழுது. இயற்கையின் ஒவ்வொரு presence உம் இறைவனே தான். நம்முடைய முப்பாட்டனுக்கு முப்பாட்டனின் மறுபதிப்பு தான் நாம் என கொண்டால் அவர்களுக்கும் முந்தய இறைவனின் மறுபதிப்பு தானே நாமும் இயற்கையின் ஒவ்வொரு material உம்.
பூ,பூச்சி,மரம்,கல், மிருகம், மனிதன், மனிதன் உருவாக்கியதாக நினைத்துக்கொண்டு இருக்கும் எல்லாவற்றிக்குள்ளும் உயிராக, பலமாக இருப்பது இறைவன் தானே! அதற்கு முந்தைய வரியில் மாணிக்கவாசகர் சொல்லும், மேல்-கீழ்-நடு என்று எங்கும் இறைவன் இருக்கின்றான் என்பது, ஓவ்வொரு அணுவிலும் மேல் கீழ் நடு என்று இறைவன் நிறைந்திருக்கின்றான் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.பிரபஞ்சத்தை மூன்றாக பிரித்தால் மேல் கீழ் நடு என்று யாவுளும் இறைவன் நிறைந்து இருக்கின்றான் என்றும் எடுத்துக்கொள்ள முடியும். உங்களின் முன்னோரான மேலோர் பின்னோரான கீழோர் என்று யாவுளும் இறைவனே இருக்கின்றான் இறைவன் நிறைந்து இருக்கின்றான் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.
அது எப்படி இருக்கின்றான்? எள்ளும் எண்ணெயும் போல்.
“எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே”என்கிற வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் அது ஒரு கவிதை கூட கிடையாது. வெறும் வாசகம். இத்தனை ஆழம் கொண்டதாக இருப்பதாலேயே திருவாசகம் ஆனது.
கற்பனை அல்லாத உண்மைகளே கவிதைகளை இன்னும் அழகாக்கிறது. பெண்ணின் ஆசையை பெண்ணே(தாமரை) எழுதிய பொழுது இருந்த அழகை போல். பெண்ணின் ஆசையை பெண்ணே எழுதும் வரை உண்மையை (மெய்யை )அறியாத வரை கற்பனை நமக்கு அழகாக இருந்திருக்கும்(இருக்கும்). கடவளைப்பற்றிய மெய்களை அதனை உணர்ந்த ஒருவர் எழுதி வைத்திருந்து அதனை நாம் படிக்காத வரை கற்பனைகளே தான் அழகாக இருக்கும்.
அதோடு உணர்ச்சிபெருக்கின் வெளிப்பாடு தான் கவிதை என்று பார்த்தோம். திருவாசகம் உணர்ச்சிப்பெருக்கின் extreme யே தான். திருவாசகத்தில் அநேகமான பாடல்கள் அந்தாதி போன்றே அமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்தாதி போல் ஒரு கவிதையையோ செய்யுளையோ நூலையோ இயற்ற; மனிதன், ஆனந்தம்,ஏக்கம்,ஆசை என்று ஏதேனும் ஒரு உணர்வின் தீவிரத்தில் இருக்க வேண்டும். இறைவனை சேர வேண்டும் என்ற ஏக்கத்தின், ஆசையின் extreme , இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஆனந்தத்தின் extreme என்று இத்தனை extreme இல் இருந்த மாணிக்கவாசகர் எழுதியது தான் திருவாசகம்.
“எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே”
இப்பொழுது உங்கள் முன்னோர்களின் மறுபதிப்பாக உங்களை உணர்ந்து; இறைவனின் மறுபதிப்பாக உங்களை உணர்ந்து, இந்த வரிகளை படியுங்கள்.
“என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான்
என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான்”