இன்று, உங்கள் எல்லோரிடமும் சொல்வதற்கு ஒரு இரகசியம் வைத்து இருக்கின்றேன். திருவாசகமே கூட இரகசியம் தான்,அது ஒரு மறை ஞான நூல். வாழ்க்கை அனுபவமோ, இறை அனுபவமோ இன்றி அதனை உணர்ந்து கொள்வது சிரமமே. ஆனால் ஒன்று, ரகசியங்கள் ரகசியங்களாகவே இருந்துவிடுவதில்லை.
“வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.” பைபிளின் இந்த வசனம், படித்த நொடி முதலாகவே என் மனதில் பதிந்து விட்டது. சில விஷயங்களை நினைவில் சேர்த்துக்கொள்ள நாம் பிரயத்தனப் பட வேண்டியதில்லை தானாகவே அது மனதில் ஒட்டிக்கொள்ளும்.
பொன்னி மிஸ், திருவாசகம் என்கிற வார்த்தையை எனக்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர்.என்னுடைய மூன்றாம் வகுப்பு தமிழாசிரியர். அந்த ஒரு வருடம் மட்டுமே தான் அவர்கள் என்னுடைய தமிழாசிரியராக இருந்திருந்தாலும், என்னுடைய தமிழ் ஆசிரியர்களில், என் நினைவில் வரும் முதல் இரண்டு தமிழ் ஆசிரியர்களில் ஒருவராக அவர் இருக்கின்றார்.குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் போது (நீ குழந்தையா? என்று கேட்காதீர்கள். அது அப்ப),குழந்தைகளின் கவனத்தை பெறுவதற்கு ஒரு தனி திறன் வேண்டும், பொன்னி மிஸ் என் நினைவில் இருப்பதற்கு அவரின் அந்த திறன் கூட காரணமாக இருக்கலாம்.
அந்த வருடம் தமிழ் பாடத்தில் இந்த திருவாசக பாடல் இருந்தது.
மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இத்தனை எளிமையான ஒரு திருவாசக பாடலை வைத்தவரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.திருவாசகம் என்றால் இந்த ஒரு பாட்டு மட்டும் தான் என்றெல்லாம் நினைத்து இருக்கின்றேன்.சில வருடங்கள் கழித்து அப்பா வைத்திருந்த திருவாசகப் புத்தகத்தில் இந்த பாடலை தேடியும் இருக்கின்றேன். அந்த வருடம், அதே பாடத்தில் “திருவாசகத்திற்கு உருகார் வேறு ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்றும் படித்த ஞாபகம். இதில் உருகுவதற்கு என்ன இருக்கின்றது என்று பெரிய மனுஷத்தனமான எண்ணம் அந்த குழந்தைக்கு எழாமல் இல்லை.
“வானம் ஆகி;மண்ணும் ஆகி; வளி என்றால் காற்று,காற்றுமாகி;ஒளியாகி;ஊன் என்றால் உடம்பு உடம்பாகவும் ஆகி; உயிராகி; உண்மை இன்மை ஆகி எல்லோருக்கும் அரசனாகி எல்லோரையும் ஆட்டுவிக்கும் இறைவா! எல்லாமுமாக இருக்கும் உன்னை நான் என்னவென்று சொல்லி வாழ்த்துவது!” இவ்வளவே தான் குழந்தைகளுக்கு கற்று தர முடியும். அவ்வளவே தான் பொன்னி மிஸ் அவர் பாணியில் குழந்தைகள் மனதில் பதியும் வண்ணம் குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து சொல்லிக்கொடுத்தார்.
சரி,”அவ்வளவு தானா! இது தான் நீ சொல்ல வந்த ரகசியமா?” என்றால், இல்லை.மூன்றாம் வகுப்பில் இருந்து மூன்று வருடம் கழித்து நான் வேறு ஒரு பள்ளிக்கு சென்றுவிட்டேன். இதற்கு இடையில் ஒரு மங்கை, பொன்னி மிஸ் இருக்கும் பள்ளிக்கு வந்து சேர்கிறாள். அவளுக்கு என்ன சொல்லி அறிமுகம் கொடுக்கலாம் என்று வார்த்தைகளை தேடினால், எந்த வார்த்தையும் “சரி, இது நல்லா இருக்கு ” என்கிற எண்ணத்தை என் மனதிற்கு கொடுக்கவில்லை.11-14வயது பெண்களை தான் மங்கை என்கிறார்கள் அதன் காரணமாக மனம் ஒப்பாமல் மங்கை என்றேன்.
சில வருடங்கள் கழித்தே நாங்கள் சந்தித்துக்கொள்கிறோம்.ஆனாலும், நட்பு ரீதியிலான பழக்கம் கூட ஏற்படவில்லை.ஆங்கிலத்தில் acquaintance என்கிறார்களே அந்த வகை நட்பு தான் இருந்தது.அந்த பெண்ணிடம், என்னை அறியாமல் நான் கவனித்த சில விஷயங்கள் இன்னும் கூட நினைவில் இருக்கின்றது.தினமும் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும் கூட அப்படி பார்த்துக்கொள்ளும் போது நான் எதனையும் உணரவில்லை இனி பார்க்க முடியுமா? என்கிற சந்தேகத்திற்கு பின்னான சந்திப்பில் தான் ஒன்றை உணர்ந்தேன். நமக்கே தெரியாமல் நமக்கு அந்த பெண்ணை பிடித்து விட்டது என்று.அதனை உணரும் போது எனக்கு ஒரு 15,16 வயது இருக்கும். அது ஒரு வேளை காதலாக இருக்குமோ என்றெல்லாம் நினைத்து இருக்கின்றேன்.அந்த வயதில், ஏன்! அதற்கு சில வருடங்களுக்கு பின்னரும் கூட அதைப் பற்றி யாரிடமும் பேசியதில்லை.அந்த பெண்ணிடமும் கூட இதை பற்றி சொன்னதில்லை.ஏதேனும் ஒரு வகையில் அந்த பெண்ணின் இருப்பே(presence by any means) போதுமானதாக இருந்தது எனக்கு. பார்த்தால் ஒரு உற்சாகம்; பேசி விட்டால் இன்னும் உற்சாகம் அடைவது; அந்த பெண்ணை பற்றி ஏதேனும் செய்தி கேட்டறிந்தாலும் கூட உற்சாகம் அடைவது என்று சிறிதும் பாலின ஈர்ப்பு சார்ந்த எண்ணங்களோ ஆசைகளோ அற்ற ஒரு பொம்மை காதல். ஒரு குழந்தை பொம்மையின் மீது கொள்ளும் விருப்பம் போன்றது. அந்த பெண்ணிடம் இருந்து பதில் அன்போ திருமண பந்தமோ என்று எதையுமே எதிர்பார்க்காத unconditional love. இப்படியான காதல் தான் உங்களின் கலை ஆர்வத்தை தட்டி எழுப்பம்(தூக்கம் வருது உன் கதையை எப்ப முடிப்ப நீங்க பேசுறது கேட்குது).இப்படி என் மனதில் ரகசியமாக இருந்த காதல் கவிதைகளாக வெளிப்பட்டது.
நான், கவிதை எழுத ஆரம்பித்தற்கு என்னுடைய தமிழ் ஐயா ராஜேந்திரன் அவர்கள் தான் காரணம்,ஆனால், என்னை காதல் கவிதைகள் எழுத வைத்தது; என் கவிதைகளின் தரத்தை மேம்படுத்தியதெல்லாம் அந்த பெண் தான்.இது அந்த பெண்ணுக்கே தெரியாது. அது தான் ரகசியம்.பள்ளி முடிந்து கல்லூரியில் சேர்ந்த பின்னர், ஒரே ஒரு முறை மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதற்கு இடையில் நான் கல்லூரியில் இருந்த பொழுதில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.
“அழகாய் இருப்பதெல்லாம்
அவள் போல் தெரிந்தது
என் கண்களுக்கு
என் கண்களுக்கு தெரிந்தவைகள்
எல்லாம் அழகாய் இருந்தது.”
அளவு கடந்து ஒருவரை நேசிக்கும் பொழுது தான் இது போன்று நிகழும்.
உதாரணமாக, நம் வீட்டில் ஒரு குழந்தை இருக்கும் பொழுது, எங்காவது யாருடையவரின் குழந்தையாவது ஏதேனும் செய்ய கண்டால் அது நம்முடைய குழந்தையையே தான் நினைவுபடுத்தும்.தொடரின் முதல் பகுதியில் ஒன்றை சொல்லியிருந்தேன்,”காதலின் அத்தனை வடிவங்களையும் அத்தனை முகங்களையும் திருவாசகத்திற்குள் வைத்து இருக்கும் பொழுது, திருவாசகத்தை படித்து எப்படி உருகாமல் இருக்க முடியும்!”
நான் சொன்ன இந்த வகை காதலில் யார் மீது நாம் அன்பு கொண்டு இருக்கின்றோமோ; யார் மீது காதல் கொண்டு இருக்கின்றோமோ; அவர்களின் ஏதேனும் ஒரு வகையிலான இருப்பே(presence) நம்மை மகிழ்விக்கும்.உங்களுக்கு பிடித்த பிரபலங்கள் மீதான உங்களின் காதல் எப்படியானதோ? அந்த வகையை சேர்ந்தது இந்த காதல்.அவர்களை பற்றி கேள்விப்பட்டால்; அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால்; அவர்களாக ஏதேனும் செய்தால் என்று உங்கள் அன்பிற்கும் காதலுக்கும் கைமாறாக அவர்கள் அன்பு செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கூட இல்லாமல் நமக்குள் ஏற்படும் காதல். அன்பே செய்ய முடியாத பொம்மைகளின் மேல் குழந்தைகள் கொள்வது போன்ற காதல்.
அப்படியானதொரு காதலை, இறைவன் மீது கொண்டிருந்ததன் காரணமாகவே, அனைத்திலும் இருக்கும் இறைவனை மாணிக்கவாசகரால் காண முடிந்தது. அவர் காணும் அனைத்திலும் இறைவனே இருந்தார்.அவர் நினைக்கும் போதெல்லாம் இறைவன் அவரிடம் பேச போவதில்லை. அவர் நினைக்கும் போதெல்லாம் இறைவன் அவருக்கு காட்சி அளிக்க போவதில்லை ஆனாலும், அவர் இறைவனையே நினைத்து மனதால் இறைவனிடமே பேசிக்கொண்டு இருந்தார். unconditional love,அந்த காதலின் காரணமாக ஏதோ ஒரு வகையில் இறைவன் அருகில் இருக்க இறைஞ்சுகிறார். அவருடைய காதலின் வெளிப்பாடு தான் திருவாசகம்.
அதிலும் இந்த பாடல் முழுதும் காதலின் வெளிப்பாடு தான். காதலால்,நம் சிந்தை முழுதும் ஒருவர் ஆக்கிரமிக்கின்ற பொழுது, காணும் எங்கெங்கிலும் அவரே தான் நமக்கு தெரிவார்.வானம், மண், கண்ணுக்கு புலப்படாத காற்று, ஒளி, ஊன், உயிர் என்று எல்லாவற்றிக்குள்ளும் இருக்கும் இறைவனை மாணிக்கவாசகர் காண்பது இறைவன் மீது அவர் கொண்ட காதலினால் தான் சாத்தியப்பட்டு இருக்கின்றது.
என்னுடைய கவிதைக்கும் இந்த பாடலுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருக்கின்றது. ஒருவர் மேல் கொள்ளும் அதீத அன்பினால் ஏற்படும் மாயையினால் வரும் தோற்றத்தை வெளிப்படுத்துவதே என் கவிதை. என் மனதிற்கு தான் யாரேனும் ஒருவர், அந்த பெண் போல தலை வாரியிருந்தால் , அல்லது சின்னதாய் பொட்டு வைத்து அதற்கு மேல் சந்தனம் வைத்து இருந்தால் அந்த பெண் போல தெரிந்ததே அன்றி, உண்மையில் அது அப்படி இல்லை என் மனதில் ஏற்பட்ட மாயம் மட்டுமே. ஆனால், மாணிக்கவாசகர் உள்ளதை உள்ளபடியே காண்கிறார். நமக்கு வெறும் வானமாகவும் மண்ணாகவும் தெரிவது, அவருக்கு கடவுளாகவே தெரிந்து இருக்கின்றது.
இந்த பாடல் கடவுள் மேல் இருந்த காதலால் எல்லாவற்றிக்குள்ளும் இருக்கும் இறைவனை மாணிக்கவாசகரால் காண முடிந்தது என்பதை மட்டும் சொல்லவில்லை. மேலும் என்ன சொல்லப்பட்டு இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வானம், மண், என்று ஒவ்வொன்றும் எப்படி வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பதை கவனிக்க வேண்டும்.
இந்த உலகம்; இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் என்ன இருந்து இருக்கும்! ஒன்றுமே இருந்து இருக்காது(nothing but emptiness). ஆனால், அப்போதும் இறைவன் இருந்தான். அந்த ஒன்றுமே இல்லாததுமாகவும் இறைவனே தானே இருந்திருப்பான். அந்த ஒன்றுமே இல்லாதாக இறைவன் இருப்பதை தான் வான் (space ) ஆகி என்றார்.பின், அவரின் ஞானத்தின்படி மண் தான் உருவாகி இருக்கின்றது என்கிறார்.உண்மையில் மண் தான் உருவாகி இருக்க முடியும். இறைவன் வானாகி அதிலிருந்து மண்ணாகி அந்த மண்ணிலிருந்து வளியாகி, வளி, ஒளியாகி (ஒளி தான் உயிர்) அந்த உயிர் தோற்றத்திற்கு பின்னரே தான் உடல் தோன்றி வளர்கிறது.அந்த உடல் வளர்ந்த பின்னரே நாம் அறிவிற்கு எட்டிய உயிர் தோன்றி வளர்கிறது. இப்படி படைப்பின் ரகசியத்தை சொல்லி வந்து உண்மையாய் இன்மையுமாய் என்று இல்லாததும் இல்லாத ஒரு நிலையிலும் இருக்கின்றான் இறைவன் என்கிறார்.இத்தனையும் சிவ புராண பகுதியில் வரும் ஒரு எளிமையான பாடலுக்குள் வியந்து பாடி வைத்திருக்கின்றார். அவரை விட இப்பொழுது எனக்கு தான் பெரிய வியப்பாக இருக்கின்றது. இந்த பாடலை அறிவியல் பாடத்தில் வைக்காமல் தமிழ் பாடத்தில் வைத்து இருக்கின்றார்களே! என்று.
from space(வான்)-> particles which are solid state of matter(மண்)-> matter in solid state, when excited by energy becomes gas (வளி)-> Matter in gaseous state, when excited by energy becomes light and finally that light becomes source of living beings.
நான் ஒரு space விட்டுக்கிறேன். வியப்பில் இருந்து மீள முடியவில்லை.
இப்படி இறைவன் தானே எல்லாமுமாக ஆகி, தானே எல்லாவற்றையும் தோற்றுவித்து,தானே தன்னிலிருந்து அனைத்தையும் தோற்றுவித்ததால் அவனே அதற்கு தாயாகவும் நிற்கிறான் (நின்றாயை).அதோடு,தான் தோற்றுவித்த எல்லாவற்றுக்கும் அவனே அரசனாகி எல்லாம் அவனுடையது (யான் எனது) என்று எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவனாக இருக்கின்றான். இவனை நான் என்ன வென்று சொல்லி வாழ்த்துவேன் என்று வியக்கிறார். இந்த “யான்எனதென் றவரவரைக்” என்பதை இறைவன் எல்லாவற்றையும் ஒரு அரசன் போல் தன்னுடையது (யான் + எனது +என்று +அவர்+ அவரை) என்று கூத்தாட்டுகிறான் என்றும். யான்எனதென் றவரவரைக்=யான் +எனது+ என்றவர்+ அவரை என்று பிரித்து நான் என்ற அகந்தையும் என்னுடையது என்ற மமதையும் கொண்டவர்களை கூத்தாட்டுவான் என்றும் பொருள் கொள்ள முடியும். ஆனால், எல்லோரையும் அவனே இயக்குவதால் முன் சொன்ன பொருளே மிகவும் பொருந்துகிறது.
இந்த பாடலின் பெரிய அழகே, இறைவனை சுட்டும் போது, ‘வானாகி’ என்று தொடங்கி கூத்தாட்டு ‘வானாகி’ நின்றாயை என முடிக்கிறார். கூத்தாட்டுபவனாகி நின்றாயை என்று சொல்லி இருக்கலாம் தானே? ஏதுமற்றதில்(space) தொடங்கி ஏதுமற்றதில்(space) முடியும் ஒன்றாக இருப்பதற்கு, எல்லை என்று என்ன இருக்க முடியும்! (how you define boundary of a space? but space starts and ends with a space). அதை சுட்டவே வானாகி என்று தொடங்கி வானாகி என்று முடிகிற படி வார்த்தை கொண்டு, தொடக்கமும் முடிவும் அறியமுடியாத எல்லையில்லாதவனாக இறைவன் இருக்கிறான் என்பதை எடுத்துச் சொல்கிறார்.அவ்வாறாக இருந்து, உயிர் உள்ளது; உயிர் அற்றது என்று எல்லாவற்றிக்கும் தாயாக நிற்கிறான் . அவனை என்ன சொல்லி வாழ்த்துவேன்! என்று களிப்போடு காதலோடு வியக்கிறார்.
எல்லாவற்றிக்குள்ளும் இறைவன் இருந்தாலும் எல்லாவற்றையும் அவனே படைத்து இருந்தாலும் கூட அவன் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.இந்த பிரபஞ்சம் முழுதும் நிறைந்து இருப்பது தான் இறைவன். இந்த பிரபஞ்சம் முழுதும் நிறைந்து இருப்பது வான் (space) உங்களுக்கு அருகிலும் உங்களுக்குள்ளும் வெளியும் என்று எல்லா புறமும் தொடக்கமும் முடிவுமாக இருப்பது வான் (space) தான். அதன் காரணமாகவே, பாடலில் இறைவன் என்னவாகவெல்லாம் இருக்கிறான் என்று சுட்டும் போது வானாகி என்று தொடங்கி வானாகி என்ற வார்த்தை கொண்டே முடித்திருப்பார்.
இப்ப ஒரு நிமிடம் உங்களை சுற்றி இருக்கும் space ஐ பாருங்கள் மாணிக்கவாசகர் சொல்லும் கடவுளை நீங்களும் உணர்வீர்கள்.
(ஆம் என்றால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சர்ப்பிரைஸ் பண்ணுங்க 🙂 )
உட்பொருள்கள் மறைந்து இருப்பதாலேயே தான் திருவாசகம் போன்ற நூல்கள் மறைநூல்கள் எனப்பட்டது. ஆனால், மறைஞானம் இவருக்கு மட்டும் எப்படி கிடைத்தது? இதெல்லாம் இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது! இவர் மட்டும் எப்படி எல்லாம் தெரிந்து கொண்டார்? காதல்.இறைவன் மீதான காதல். இதெல்லாம் மாணிக்கவாசகர் எப்படி தெரிந்து கொண்டு எழுதினார் என்பதையும் அவரே சொல்கிறார்.
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பன்யான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
ஒருவர் நம் சிந்தை முழுதும் ஆக்கிரமிக்க வேண்டும் என்றால் அவர் மீது நமக்கு நிபந்தனையற்ற காதல் இருக்க வேண்டும்.மாணிக்கவாசகர் சிந்தை முழுதும் இறைவன் மீது இருந்தது.அவர் காதல் முழுதும் இறைவன் பால் இருந்தது.அவருக்கு மறை ஞானம் புலப்பட்டது.இப்பொழுது பைபிள் வசனத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன்.”வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.”
காதலை ஏதேனும் வகையில் வெளிப்படுத்தி விட வேண்டமென்பதற்காகவே தான் கவிதைகள் எழுதப்படுகிறது. மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தான் திருவாசகம் போன்ற மறை ஞான நூல்கள் படைக்கப்பட்டு இருக்கின்றது. இப்பொழுதெல்லாம் இரண்டையும் நாம் படிப்பதில்லை அதனால் இரண்டுமே ரகசியமாகவே இருந்து வருகிறது.