திருவாசகம் தொடர் படித்து வரும் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
ஆம். இங்கு அனைவருமே குழந்தைகள் தான்.நம் எல்லோருள்ளும் ஒரு குழந்தைத் தன்மை இருக்கும். அந்த தன்மை இருக்கின்ற வரையில் தான் நம்மிடம் ஆனந்தம் இருக்கும்.அது வெளிப்படும் தருணங்களில் தான் நாம் ஆனந்தமாக இருப்போம்.வாழ்க்கை அனுபவம் அல்லது இறை அனுபவம் இல்லாமல் திருவாசகத்தை உணர்ந்து கொள்ள முடியாது என்று முன்னம் சொல்லியிருந்தேன். இந்த திருவாசகப் பாடலை உணர்ந்து கொள்ள நீங்கள் உங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தன்மையை தூசு தட்ட வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதன் காரணமாகவே இந்த கட்டுரைக்கு இப்படி ஒரு அறிமுகம்.
ஒரு குழந்தை எப்படி திருவாசகம் படித்து இருக்கும்! படித்தாலும் அது எப்படி அதனை உணர்ந்திருக்கும்!
கடவுள் நம்பிக்கையில் ஊறி திளைத்த பெற்றோருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை பள்ளியில் சேர்த்ததோடு அல்லாமல் ஒரு குரு குலத்திலும் சேர்த்து விடுகிறார்கள்.அம்மா அப்பாவிடம் இருக்கும் கடவுள் நம்பிக்கையோடு குரு குலத்தில் இருக்கும் குருமார்கள் வழிபடும் முறைகளாலும் ஈர்க்கப்பட்டு, பக்தி இருந்தததோ இல்லையோ; தாய், தந்தை, குருமார்கள் வழிபடுவதை பின்பற்றி அந்த குழந்தையும், ஒன்றுமே புரியாவிட்டாலும் பாட்டு பாடுகின்றது; மந்திரங்கள் ஓதுகிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் அந்த குழந்தை தன்னை சுற்றி பார்த்த விஷயங்களை imitate செய்தது.அந்த குழந்தை ஒரு பத்து வயதை தாண்டிய பொழுது ஒரு நாள் வீட்டில் இருந்த திருவாசகத்தை எடுத்து, “நாமாக ஒரு ராகத்தில் வாய்க்கு வந்த படி வாசிப்போம்” என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து வாசித்து கொண்டு இருந்தது.திருவாசகத்திற்கு என்று மரியாதை இல்லாமல் அத்தனை பாடல்களை வாசித்தும் அந்த குழந்தை ஒரு இடத்திலும் உருகவில்லை.
மாணிக்கவாசகர் நேரில் கண்டு இருந்தால் இப்படி கூட சொல்லியிருப்பார் “நான் உருகி உருகி பாடி வைத்ததை நீ பாட்டுக்கும் ஓன் பாட்டுக்கு வாசிக்கிற” என்று. ஆனால், உண்மையில் மாணிக்கவாசகர் நேரில் கண்டு இருந்தாலும் அப்படி நினைத்திருக்க வாய்ப்பில்லை. அவர் மீண்டும் சிவனை நினைத்து உருகியிருப்பார். குழந்தை இப்படி வாசித்து கொண்டே இருந்த பொழுது ஒரு பாடலை பாதி வாசித்து கொண்டு இருந்தபொழுதிலேயே ‘சட்’ என நிறுத்தி, ஒரு ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தில்(excitement இல்) ‘என்ன ஆச்சு’ என்பது போல சுற்றியும் பார்த்துக்கொள்கிறது . குழந்தை ஒரு நொடியில் உருகி தான் போனது.அது என்ன பாட்டு? அப்படி என்ன அந்த பாடலில் இருந்திருக்கும்? இது தான் அந்த பாடல்.
இந்த பாடலை படிக்கும் பொழுது உங்களுக்குள் ஏதேனும் நிகழ்ந்ததா? உங்களுக்குள் இருந்த குழந்தைத்தன்மையை தூசு தட்டாமல் படித்து இருந்தால் நிச்சயம் எதுவும் நிகழ்ந்திருக்காது. அந்த வயதில் அந்த பாடலை படிக்கும் வாய்ப்பு எனக்கு அமையாமல் போயிருக்குமேயானால் நானும் ஒரு வித பூரிப்பை அடைந்திருக்க மாட்டேன்.(அப்ப நீ தான் அந்த குழந்தையா அப்பவே நினைச்சேன். உன்ன குழந்தைன்னு சொல்லிக்க எங்களையும் சேர்த்துக்கிட்ட).
அப்பாவிடம் ஒரு திருவாசகம் புத்தகம் இருந்தது. அதோடு, அவர் நினைவில் இருக்கும் நடராஜர் பத்து, தேவாரத்தில் சில பாடல், திருவாசகத்தில் சில பாடல் என்று அவர் பாடும் போது, அந்த சிறுவயதில் நான் ரசித்து இருக்கின்றேன்.நான் பார்த்த ஒன்று இரண்டு திருவாசகப் புத்தகத்தில் நடராஜர் படமே இருந்தது.படித்தால் ஆனந்தம் தரும் ஒரு நூலின் அட்டையில், பார்த்தால் ஆனந்தம் ஒரு படம் தானே இருக்க முடியும்.நீங்கள் ஏதும் கவலையில் இருந்தால் நடராஜர் படத்தை அல்லது சிலையை சில நிமிடம் பாருங்கள் உங்கள் மனநிலை ஆனந்தம் அடையும் .அதனால் தான் அது ஆனந்த கூத்து எனப்பட்டது.
நடிகர் ரஜினியை சிறு வயதில் இருந்தே பெரிதும் ரசித்து வருகிறேன்.அவர் பொது மேடைகளிலும் படங்களிலும் பட்டை இட்டிருப்பது போல ஆசையோடு பட்டை இட்டுக்கொள்வேன்.நான் சொன்ன குரு குலம் என்னுடைய ஆசிரியரின் வீடு. லல்லி மிஸ், ராஜி மிஸ் என்று இரண்டு பேர். என்னை என் தாயார் குரு குலத்தில் கொண்டு விடுவது போல அவர்கள் வீட்டில் என் அனுமதி இல்லாமலேயே கொண்டு விட்டுவிட்டார். காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு அவர்கள் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். மீண்டும் வீட்டிற்கு திரும்பி பள்ளிக்கு சென்று பள்ளி முடிந்தவுடன் உடை மாற்றிக்கொள்ள மட்டும் வீட்டிற்கு சென்று விட்டு குருகுலத்தை நோக்கி ஓட வேண்டும்.”சரி, சரி, இதெல்லாம் எதுக்கு சொல்ற?” அதைத்தானே கேட்க வருகிறீர்கள்.
ஒரு குழந்தைக்கு என்ன போதிக்கிறோம் என்பதை விட என்ன மாதிரியான சூழலை தருகிறோம் என்பதே அந்த குழந்தை தானாக எதை தேட வேண்டும் என்பதை தீர்மானிக்க செய்கிறது.இந்த லல்லி மிஸ் ராஜி மிஸ் அதிகாலையிலே எழுந்து ஒரு பூஜையை செய்து முடித்துவிட்டு தான் வேலையை ஆரம்பிப்பார்கள்.எனக்கு சில ஆசை. அந்த சிறுவயதில், பார்க்கின்ற எல்லாவற்றையும் imitate செய்கின்ற வயதில், அவர்களை போன்று அதிகாலையில் பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அப்பா மாதிரி உருகி உருகி திருவாசகம் பாட வேண்டும் என்று ஆசை.ரஜினி மாதிரி பட்டை இட்டு கொள்ள வேண்டும் என்று ஆசை.குழந்தைகள் எதை ஆசை பட வேண்டும் என்பதை அவர்களின் சூழலே தான் தீர்மானிக்கின்றது. இவர்கள் செய்ததெல்லாம் நான் செய்ய ஆரம்பித்து செய்து கொண்டிருந்த பொழுது தான், ஒரு நாள் மாலையில் ரஜினியை நினைத்து பட்டையிட்டுக்கொண்டு அந்த திருவாசக புத்தகத்தை கையில் எடுத்து என் போக்கிற்கு வாசிக்க தொடங்கினேன். ‘சிவன் அதை செய்வார் இதை செய்வார்’ என்கிற எதிர்பார்ப்பு இல்லை; தமிழில் பெரும் அறிவு ஒன்றும் இல்லை; ஒரு ஆசை மட்டுமே. அப்படி வாசித்து கொண்டே இருந்து போது, “எம் பெருமான் பெருமான்” என்கிற வார்த்தைகளை படித்த நொடியில் நிறுத்தினேன். அதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. என் கற்பனையில் நடராஜரை கட்டி தழுவி “எம்பெருமான் பெருமான்” என்று மாணிக்கவாசகர் ஆனந்தத்தில் தளுதளுப்பது தெரிகிறது. ஒரு குழந்தை தன் அம்மாவை கட்டிக்கொண்டு; அப்பாவை கட்டிக்கொண்டு “எங்க அம்மா” “எங்க அப்பா” என்று உரிமை கொண்டாடி மகிழ்வது போல “கடவுள் மேல் ஒருவரால் இத்தனை பாசம் கொள்ள முடியுமா! “என்று வியக்கிறேன்.இது வரை மட்டுமே அன்று நிகழந்தது.
நீங்கள் உங்கள் மனக்கண்ணில் நினைத்து பாருங்கள், நடராஜரை கையால் கும்பிட்டு தொழுது; தூக்கி நிற்கும் காலை தன் தலையில் வைத்துக்கொண்டு “எம் பெருமான் எம் பெருமான்” என்று சொல்ல வந்து சொல்ல முடியாமல் “எம்பெருமான் பெருமான்”(ஆனந்தத்தின் எல்லையில் வார்த்தைகள் பாதி வாராது தான்) என்று ஒருவர் சொல்வது தெரியும் பொழுது எப்படி இருக்கும்?
இது போன்ற ஒரு காட்சி தான் என் மனக்கண்ணில் தோன்றியது.
இதை உங்களுக்கு சொல்ல வேண்டும் என்றவுடன் இதற்கு உதாரணமாக சொல்ல ஒரு திரைப்பட காட்சி என் நினைவிற்கு வந்தது(சுத்தி சுத்தி நான் எங்க போவேன் ரஜினி படம் தான்).
படையப்பா படம், சொத்தெல்லாம் தன் தம்பிக்கு எழுதி கொடுத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு, சிவாஜி ரஜினியை பார்த்து, “நான் வாழ்ந்த இந்த வீட்டில் கடைசியா ஒரு முறை உக்காந்துட்டு வரேன்” என்று சொல்லி, அவர் தத்தி தத்தி ஓட ஆரம்பிக்கும் பொழுது, “அம்மா வேணும்” என்று தேம்பி தேம்பி அழும் குழந்தையின் அழுகை போன்ற pattern இல் ரஹ்மான் இசை ஒலிக்க; வீட்டு வாசலில் போய் உட்கார்ந்து அந்த தூணை கட்டி பிடிக்கும் பொழுது சிவாஜி காட்டுகின்ற உணர்வு தான் மாணிக்கவாசகருடையது. அப்பொழுது லட்சுமி,”என்னங்க இது குழந்தை மாதிரி”என்பார். சிவாஜி தான் மாணிக்கவாசகர் என்றால், அந்த தூண் தான் நடராஜர்.ஒரு குழந்தை போல இறைவனை கட்டிக்கொண்டு “எம் பெருமான் பெருமான்” என்று கத்த ஆசையாய் இருக்கின்றதாம்.அதில் அந்த “எம் பெருமான் பெருமான்” என்பதை அதே உணர்வோடு அதே modulation இல் வாசிக்க முடிந்தவர்கள் பாக்கியவான்கள். இந்த காட்சியின் ஆரம்பத்தில், அந்த வீட்டிற்குள்ளும் ஒரு நடராஜர் இருப்பார் அது தான் beauty. இந்த காட்சியோடு ஒப்பிட்டு ஒருத்தர் இந்த பாடலை விளக்க வேண்டும் என்பதற்காக கூட அங்க ஒரு நடராஜர் சிலையும் இருந்திருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது.(it all just happens in its own way. Actually in god’s way)
சிவாஜி செய்ததை மாணிக்கவாசகர் செய்யவில்லை. அப்படி செய்ய ஆசை தான் பட்டேன் என்கிறார்.நாம் ஆசைப்பட்டதை செய்வதை விட யார் மீது அந்த ஆசை கொண்டோமோ அதை அவரிடமே சொல்வதில் தானே அத்தனை ஆனந்தமும் இருக்கின்றது.கவிதைகள் அதன் காரணமாகவே தானே இயற்றப்படுகிறது( ஆனால், யாரிடம் சொல்ல கவிதை எழுதுறோமோ அவர்கள் படிக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளவே சரியாக முடியவில்லை ஹா!ஹா!). ஆசைப்பத்தில் ஒரு பாடலில்,உன் ஆயிரம் பேர்களையும் சொல்லி என் பெருமான் என்று உன்னை துதிக்க ஆசைப்பட்டேன் என்றெல்லாம் சொல்கிறார்மாணிக்கவாசகர். (நமக்கும் ஆசை தான் பேர் சொல்வதற்கு).காதல் sir.சரி,இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு விஜய் பாடல் ஞாபகம் வந்திருக்க வேண்டுமே?
அந்த காட்சியோடு ஒப்பிட்டு கொண்ட பின் இன்னும் சில விஷயங்கள் தோன்றியது. எதையும் என்னுடையது என்று உரிமை கொண்டாடுவது மமகாரம் என்கிறார்களே? இறைவனை, “என்னுடைய இறைவன் எம்பெருமான்” என்று உரிமை கோருவது மமகாரத்தில் வாராத? மீண்டும் படையப்பா படத்திற்கு போவோம். கதையின் படி பொருட்செல்வமான எந்த சொத்தும் தனக்கு வேண்டாம் என்ற ஒரு மனிதனுக்கு அந்த வீட்டின் மேல் என்ன அப்படி ஒரு ஆசை இருந்திருக்கும்! அது ஆசை இல்லை. பிறந்தது முதலாக தன்னுடனே இருந்த வீடு அதை எப்படி பிரிவது. நானும் அந்த வீடும் வேறு வேறு இல்லையே என்கிற தவிப்பு.
வானாகி மண்ணாகி நாமும் ஆகி இறைவனே நிற்கிறான் என்பதை உணர்ந்த மாணிக்கவாசகர், இறைவனை பார்த்து “நம்ம ஒண்ணா தானே இருந்தோம்; நான் உன் கூட தானே இருந்தேன் இப்ப இந்த மனித உருவில் உன்னை விட்டு நான் பிரிந்திருப்பது போல இருக்கின்றதே” என்று நினைக்கும் போது (realization); இறைவனிடம் இருந்து தோன்றி, இறைவனை விட்டு இந்த ஜட இயற்கையினால் பிரிந்து இருக்கிறோமே என்பதை உணர்கின்ற பொழுது வருகின்ற தவிப்பு தரும் ஆசை. கட்டி தழுவி “எம்பெருமான் பெருமான்” என்று கத்த தூண்டும் ஆசை.இது மமகாரம் ஆகாது.
திருவையாற்றில் நடராஜர் சிலை இருக்கிறதா? என்பது எனக்கு தெரியாது.ஆனாலும், இந்த பாடலை படிக்கும் பொழுதில் இறைவனின் நடராஜர் உருவத்தை கண்டு பாடியது போலவே தான் எனக்கு தோன்றியது.
எல்லாமே இறைவன்; எல்லாவற்றிக்குள்ளும் இறைவன் என்று எல்லாவற்றிலும் இறைவனை காண முடிந்த மாணிக்கவாசகர் ஏன் கோவில் கோவிலாக சென்று இப்படியெல்லாம் ஆசைப்பட்டேன் என பாடுகிறார்? கண்ணில் தென்படாத காற்றிலும் (வளியாகி) இறைவனை பார்த்தார் என்று தானே போன பகுதியில் பார்த்தோம்.இதை எப்படி புரிந்துகொள்வது?
ஒரு நாள்,என் மனைவி கணக்கு எழுதிகொண்டிருந்தவள், என் பெயரையும் அவள் பெயரையும் சேர்த்து எழுதி சந்தோசப்பட்டு கொண்டாள். நான் பக்கத்திலேயே தான் இருந்தேன்! நான் கேட்கவும் செய்தேன், “நானே பக்கமாய் தானே இருக்கிறேன், பெயரை எழுதி அப்படி என்ன சந்தோசம் கண்டாய்” என்று. காதல் இப்படி தான். அது ஒரு அறிவுசார் பைத்தியக்காரத்தனம் (intelluctual foolishness). காதலிப்பவர்களாலும் கூட காரணம் சொல்ல முடியாது.
ஆனால்,உதாரணம் சொல்லலாம். அண்ணாத்த படம் பற்றிய எதிர்மறை விமர்சனத்திற்கு ரசிகர் ஒருவர் அளித்த பதில்,”ரஜினியின் போஸ்ட்டரையே 3 மணி நேரம் பாப்போம் எங்களிடம் வந்து கதை பழசு னு சொல்றீங்க யாருடா நீங்க எல்லாம்” இது தான் அந்த பதில்.
“அப்ப போஸ்டர் மட்டும் பார்க்க வேண்டியது தானே?” போஸ்டரில் பார்க்கும் பொழுது ஒரு மகிழ்ச்சி என்றால்; திரையில் காணும் போது ஒரு வித மகிழ்ச்சி.குரலை கேட்கும் பொழுது; நேரில் காணும் பொழுது என்று ஒவ்வொரு விதமாக ரஜினியை காணும் பொழுதும் ஒரு ஒரு விதமான மகிழ்ச்சி(பொம்மை காதல் மாதிரி). மாணிக்கவாசகர் இறைவனின் தீவிர ரசிகன். இறைவன் எப்படியெல்லாம் இருக்கிறானோ அப்படியெல்லாம் பார்த்துவிட என்ற வெறி கொண்ட ரசிகன்.பழைய இறைவனை ஒவ்வொரு நிலையிலும்; ஒவ்வொரு உருவிலும்; ஒவ்வொரு முறையிலும் புதிதாக காண கோயில் கோயிலாகவும் திரிந்து பாடியிருக்கின்றார்.
இன்னொரு தீவிரமான ரசிகர் இதை பற்றி என்ன சொல்கிறார் என்றால்,
இது தளபதி ல வர பாட்டு தானே? ஆமா. உண்மையில், திருநாவுக்கரசர் தேவாரம். இந்த நடராஜர் உருவத்தில் இறைவனை காண்பதற்காகவே மனித பிறவி எடுக்கலாம் என்கிறார். அந்த காலை தூக்கி நின்ற திருக்கோலத்தை காண அத்தனை ஆனந்தமாய் இருக்கிறதாம் இவர்களுக்கு. எனக்குமே அப்படி தான் இருக்கு. உங்களுக்கு எப்படி இருந்தது என்பதை நீங்களும் கூட எங்களுக்கு சொல்லுங்களேன்! “editor@kathirvijayam.com ;-)” ற்கு மின்னஞ்சல் மூலமாக