இந்த கட்டுரையை எவ்வாறு தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை. அதனால்,உங்களிடம் ஒரு கேள்வி? கேட்டு தொடங்கலாம் என்று ஒரு எண்ணம்.

கண்ணீர் எப்போது வரும்?

ஒன்று நாம் உடையும் போது வரும் அல்லது, அன்பால்; ஆனந்தத்தால் நாம்உருகும் போது வரும்.

ஆமாம் தானே? ஆமாம் தான்.

இதற்கு என்ன காரணம்? இந்த இரண்டு தருணங்களிலும் நம் மனதிற்கும் புத்திக்கும் என்ன செய்வது என்று தெரியாது.அப்படி தெரிந்தாலும் அதை செய்ய முடியாது என்பதையும் அது தெரிந்து வைத்திருக்கும். அதனால், சரி அழுது விடு என்று நம்மை அழ வைத்துவிடும்.

ஒரு கவிதை, அதை படித்துவிட்டு, உங்களுக்கு என்ன புரிகிறது என்று சொல்லுங்கள்.

"கத்தி காற்றை கிழித்து விட தோன்றுகிறது
என்ன செய்ய!
கிழிந்தே போனாலும் காற்று பேச போவதில்லை
நான் வேண்டும் தொணியில்
இறுக பற்றி கொள்ள தோன்றும் போது
ஊடுருவ முயல்கிறேன் நிலத்தையும் காற்றையும்
ஆனாலும் எதை பற்றி கொள்வேன்
ஒன்று ஐந்தான பின்"

ஏதேனும் புரிந்ததா?

நம்மை சுற்றி, நாம் அன்பு வைத்தவர்களோ அல்லது நம் மீது அன்பு கொண்டவர்களோ தான் அதிகம் இருப்பார்கள்.

“இல்லை! இல்லை! என்னை சுற்றி அப்படி யாரும் இல்லை!” என்று நீங்கள் சொல்வீர்களானால், நீங்கள் இருப்பது நிச்சயம் ஒரு சிறையாக இருக்க வேண்டும்.இந்த அன்பானவர்களை;அன்பிற்குரியவர்களை பிரிந்த பின் நம் புத்திக்கு என்ன செய்யவேண்டும் என்பதே தெரியாது.

நமக்கு எரிச்சல் வரும்;
கோபம் வரும்;
அழுகை வரும்;
இதெல்லாமே இயலாமையின் வெளிப்பாடு. அப்படி ஒரு இயலாமையின் வெளிப்பாடு தான் அந்த கவிதை.

அப்பா,என் அன்பிற்குரியவரா? என்று கேட்டால் நிச்சயம் எனக்கு அதில் சந்தேகம் உண்டு.ஆனால்,அன்பானவர்.என் மீது அன்பானவர்;எங்கள் மீது அன்பானவர்.

ஒரு நாள்;
அப்பா, தீடீரென்று சுயநினைவை இழக்கிறார். மருத்துவமனை அழைத்து சென்றோம்.மருத்துவர் உயிர் இல்லை என்கிறார். அந்த வார்த்தைகளை முதலில் என் காதுகளில் தான் விழுகிறது.வேறொரு மருத்துமனைக்கு கொண்டு செல்கிறோம். அங்கே மருத்துவர் வந்து ஒரு பக்கம் பரிசோதித்து கொண்டிருக்கும் போது; நான் ஒரு பக்கம் எங்கோ சென்று கொண்டிருக்கின்றேன்.சுற்றியும் தேடுகிறேன். ஆனால், அழவில்லை. சுற்றியும் தேடும் போது அந்த இடத்தில் இருந்த எதுவும் என் கவனத்தில் இல்லை.எதை தேடுகிறேனோ அது எப்படி இருக்கும் என்று தெரியாது. அதை நிச்சயம் என்னால் கண்டுபிடிக்கவும் முடியாது.மீண்டும் அப்பாவின் உடல் அருகே சென்றேன்; மருத்துவர் முடிவே செய்துவிட்டார்.

இது அன்று முடிந்துவிட்டது.அதன் பின்னர் நடக்க வேண்டியவைகளையும் நடந்து முடிந்துவிட்டது.

அப்பாவிடம் இருந்த உயிரை தான் அன்று பைத்தியக்காரன் போல தேடினேன்.எனக்கு தெரியும், அங்கு அந்த நேரத்தில் இருந்தது வெறும் உடல் தான் என்று.
அதற்கு அடுத்த ஒவ்வொரு நாளும் தீடீரென்று கோபம் வரும்.தெருவில் புரண்டு கத்த வேண்டும் போல இருக்கும்.
இந்த கோபம் எதனால் வந்தது?
அப்பா இல்லை என்பதாலா ? இல்லை. அப்பா என்னுடன் எப்படி இருந்தாரோ அப்படி இல்லை என்பதால்.

“இதை மாற்றவே முடியாதா ?;வழியே இல்லையா? ” இது போன்ற சிந்தனைகள், நான் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களில் எல்லாம் அடிக்கடி வரும்.

ஏன் இப்படி?

“அப்பாவை காணோம்! ஆனாலும், உனக்கு எல்லாம் நல்லா போய்கிட்டு இருக்கு! எப்படி உன்னால் சிரிக்க முடியுது? நல்லா சொகுசா இருக்க முடியுது?” இப்படி கேள்விகள் எனக்குள் எழும்,
சில வருடங்கள் இப்படியே தான் இருந்தது. இப்போதும் கூட சில நேரங்களில்.அப்படித் தான் இருக்கின்றது.

ஒருநாள், அப்பாவை கட்டிபிடித்துக்கொள்ள வேண்டும் இருந்த பொழுது, தரையோடு தரையாக தனியறையில் படுத்து உருண்டு சத்தமிடாமல் அழுது கொண்டே தேடுகிறேன்.(அப்பா தான் இல்லையே எங்கிருந்து கட்டிப்பிடிப்பது).அன்று எழுதிய கவிதை தான் அது.

“காற்றே கிழியும் வண்ணம் கத்த வேண்டும் போல இருக்கின்றது; கிழிந்தே போனாலும் அப்பாவின் குரலை காற்று ஒலிக்க போவதில்லை.கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருக்கின்றது;பஞ்ச பூதங்கள் சேர்ந்து ஒன்றாக ஆன உடல் மீண்டும் பஞ்ச பூதங்களாக பிரிந்து அந்த அந்த பூதங்ககளோடு சேர்ந்து நிற்க எதை கட்டிக்கொள்வேன் ” இது தான் அந்த கவிதை.

(உன் சோக கதையை கேட்க வந்தோமா இல்லை திருவாசகம் பற்றி படிக்க வந்தோமா?வந்துட்டேன்.)

நம்முடைய வழக்கில் சிவலோக பதவி அடைந்தார் என்கிறோமே; அது எப்போதும் நம் கற்பனையில் snow effect இல் மலைகளின் நடுவே சிவனும் கணங்களும் இருக்கும் இடமாக தானே நினைத்துக்கொண்டு இருக்கின்றோம். நிச்சயம் அப்படி இருக்க முடியாது. இந்த பிரபஞ்சம் தான் சிவ லோகம். இந்த பிரபஞ்சமே சிவன் தான். உயிர் அவனில்(சிவனில் இருந்து – பிரபஞ்சத்தில் இருந்து) இருந்து தோன்றி அவனிடம் செல்கிறது.உடல் பஞ்ச பூதங்களால் செய்யப்பட்டு மீண்டும் பஞ்ச பூதங்களிடமே கலந்து விடுகிறது.இந்த பஞ்ச பூதமுமே சிவன் தான். நாம் வெவ்வேறு வடிவங்களை தான் ஏற்கிறோமே தவிர நாம் மறைவதேயில்லை.சிவனிடம் இருந்து தோன்றி சிவனிடமே ஒன்றி விடுவதால் அப்படி சொல்லி பழகியிருக்கின்றோம். we take human form from this universe(god) and after this life we again merge with this universe(god).

வானாகி;மண்ணாகி;ஒளியாகி;உடம்பாகி; உயிராகி;உண்மை இன்மை ஆகி. கடைசியில் மீண்டும் வானாகி.வெற்றிடத்தில் இருந்து தோன்றி வெற்றிடத்தில் முடிவது.சிவனில் தோன்றி சிவனில் முடிவது.(இந்த வெற்றிடத்தோடு ஒன்றி விட்ட அப்பாவை எப்படி தேடுவது!)

இந்த வானாகி மண்ணாகி பாடலுக்குள் எத்தனை ஆச்சரியங்கள்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ⁠

மண்,நீர்,காற்று,வெற்றிடம்(வானம்-எல்லாவற்றிக்குள்ளும் வெற்றிடம் இருக்கும்),வெப்பம்(நெருப்பு) இவைகளை கொண்டு ஒருவர் பொம்மை செய்யலாம் பானை இன்னும்

என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்.அத்தனையையும் அவர் உடைத்து விட்டு; மண்,காற்று, நீர் இவற்றை மீண்டும் அவற்றோடு சேர்த்து; அதிலிருந்து மீண்டும் ஒரு பானையை, அவரால் உருவாக்க முடியும். அந்த பானை செய்கின்றவர் தான் இறைவன், அவரே தான் அதிலிருக்கும்; வான்,மண்,நீர்,காற்று,நெருப்பு; அதைகொண்டு அவர் மாணிக்கவாசகரையும் நம்மையும் புல்லாக்கி, பூண்டாக்கி, புழுவாக்கி, மரமாக்கிபல மிருகங்களாக்கி, பறவையாக்கி, பாம்பாக்கியும், கல்லாக்கி, மனிதராக்கியும், பேயாக்கி, பூதகணங்களாக்கி, வலிய அசுரராக்கி, முனிவராக்கி, தேவராக்கி எல்லாப் பிறவிகளிலும் பிறக்க வைத்து இறுதியில் அவனோடு சேர்த்துக்கொள்கிறான்.

மாணிக்கவாசகர் முக்தி பெற்று இறைவனை அடைந்தார் அதனால் இப்படி சொல்கிறார்

 “எல்லா பிறப்பும் பிறந்து எம் பெருமானே! இப்பொழுது உண்மையாகவே, உன் அழகிய திருவடிகளைக் கண்டு வீடு பெற்றேன்”.

இன்று இந்த பாடலை பற்றி எழுத நினைக்கவேயில்லை 🙂 ஆனால்,என்னுடைய கவிதைக்கு அர்த்தம் சொல்ல வந்து இந்த பாடலை பற்றி எழுதியிருக்கின்றேன்.

அவ்வப்பொழுது திருவாசகத்தை எடுத்து random ஆக வாசிப்புத்துண்டு. திருவாசகம் கீதை போன்ற நூல்கள், நாம் ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும், ஒவ்வொரு அனுபவத்தையும் புரிதலையும் கொடுக்கும்.அப்படி ஒரு நாள் திருவாசகம் வாசிக்கும் பொழுது அதில் இருந்த இந்த வாக்கியம் என்னை திகைக்கச் செய்து, என்னை நிறுத்தியது.

“தேடுகின்றில்லை தெருவு தோறும் அலறில்லை” இது தான் அந்த வாக்கியம்.

மீண்டும் என்னுடைய கதைக்கு கொஞ்சம் சென்றுவிட்டு வருவோம்.

அப்பா தான் வளர்த்தார்; நமக்காக நிறைய கஷ்டங்களை தாங்கிக்கொண்டார்;இன்று அவர் இல்லாமல் அவருடைய அத்தனை வருட உழைப்பின் பலனை நாம் மட்டும் அனுபவிக்கின்றோமே என்ற எண்ணம்;  “எங்கே அவர்?” என்று என்னை தேட செய்யும். தேடினாலும் கிடைக்கமாட்டார் என்ற புரிதல் தெருவில் புரண்டு அழுக சொல்லும்.ஆனாலும்,நான் கத்தியதில்லை.தெருவில் புரண்டு தேடியதில்லை.தனியாக தரையில் புரண்டு தேடியிருக்கின்றேன்.ஆனாலும், இங்கே, இந்த உலகத்தில், நாம் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம் என்கிற வெறுப்பு தோன்றும்.”ஏன் சம்பாதிக்க வேண்டும்? ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?” என்று தோன்றும்.என்ன செய்தால் அப்பாவை மீண்டும் பார்க்கலாம் என்று தோன்றும். என்ன செய்தாலும் பார்க்க முடியாது. காரணம் அவரும் இங்கேயே தானே இருக்கின்றார்.(he merged with this universe)

ஒருவருடைய absence நம்மை சோகத்திலும் பரிதவிப்பிலும் ஆழ்த்தும்  என்றால், நாம் அவரை சார்ந்திருந்ததனாலும்; “அவருக்கு நாம் என்ன செய்தோம்?” என்கிற குற்ற உணர்வினாலும் தான். நமக்காக எவ்வளவோ செய்த அப்பாவுக்கு நாம் ஒன்றுமே செய்யவில்லையே. ஒன்றும் செய்ய முடியவும் இல்லையே என்கிற எண்ணம் மங்காமல் என்னை பரிதவிப்பில் ஆழ்த்தும்.

இதை ஒத்த ஒரு உணர்வை இறைவன் பால் கொண்ட அன்பில் மாணிக்கவாசகர் வெளிப்படுத்தியிருப்பதை கண்டால் மனம் திகைக்க தானே செய்யும். 

ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்

    கன்பிலை என்புருகிப்

பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை

    பணிகிலை பாதமலர்

சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை

    துணையிலி பிணநெஞ்சே

தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை

    செய்வதொன் றறியேனே 

05 திருச்சதகம்-பாடல் எண் : 31
ஆடுகின்றிலை;  கூத்து உடையான் கழலுக்கு அன்பும் இல்லை; எலும்பு உருக பாடுகின்றதும் இல்லை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; மலர் போன்ற அவன் பாதங்களை தலையில் சூடுகின்றிலை; மலர்களை அவன் பாதங்களுக்கு சூட்டுகின்றதுமிலை;
துணையில்லாத  பிணநெஞ்சே;தேடுகின்றிலை தெருவு தோறும் அலறிலை; எனக்கு என்ன செய்யவென்றே தெரியவில்லை என்று பரிதவிப்பில் அவர் மனதையே அவர்  கடிந்துரைக்கின்றார் 

நம்மை தோற்றுவித்து; நமக்கு தேவையானதை செய்து; நம் மீது  அன்பு செய்த தந்தையை தேடுகிறோம்.அதையே செய்யும் இறைவனும் தந்தை தானே அவனை ஏன் தேடாமல் விட்டோம்!

பாசம், பற்றுக்களை கடந்த மாணிக்கவாசகர் தேடுகிறார்.இறைவன் என்னும் தந்தை மீது அன்பு கொண்டு தேடுகிறார்.

அந்த பாடலில் உள்ள வார்த்தைகள் எல்லாம் நிகழ்கால வினைகளை குறிப்பவை (present continuous tense). இறைவனை காணாமல் தேடாமல் இருக்கும் தருணங்களில் அதை தான் செய்வதில்லையே என பரிதவிக்கின்றார்.அவர் குறிப்பிட்ட அந்த வினைகளை அவர் செய்யாமல் இல்லை.தந்தை பிரிந்த மகன் மகன் அழுவது போன்று அவ்வப்போது அதில் ஏதேனும் ஒன்றை அவர் செய்யாமல் இருந்திருக்க மாட்டார். திருவாசக பாடியவர் எலும்பும் உருக படவில்லையே என பரிதவிக்கிறார் என்றால் இந்த வினைகள் அவர் செய்யாமல் இருந்த தருணங்களில் தன் மனதை அவர் கடிந்துரைப்பதையே காட்டுகிறது.

இறைவனை எங்கும் கண்டவர். எல்லாவற்றிலும் இருப்பது இறைவன் தான் என்று உணர்ந்தவர். ஏன் தெரு தெருவாக அலறி தேடாமல் இருக்கின்றேன் என்று பரிதவிக்கின்றார்? பதில் இது தான்.


இத்தனை அழகாக, உயிர் எங்கு தோன்றி, எங்கு சேர்க்கிறது; இறைவன், உடல்களை பஞ்ச பூதங்களில் இருந்து எப்படி தோற்றுவித்து மீண்டும் எப்படி பஞ்சபூதங்களோடு சேர்க்கிறான் என்று எடுத்து சொல்லி; தந்தை மறையவில்லை எல்லாமுமாக இருக்கும் சிவனோடு ஒன்றிவிட்டார் என்று கதை அளந்த நான், காற்றுகுள்ளும் மண்ணுக்குள்ளும், இந்த பரந்த வெற்றிடத்திற்குள்ளும் என் தந்தையை தேடாமல் இருக்க போவதில்லை.
அது போலவே தான் மாணிக்கவாசகர், பாசம் பற்று கடந்து, இறைவனே தான் தன் தந்தை என்று இருந்தவர்.எல்லாவற்றிக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்கிற ஞானம் அவருக்கு இருந்தாலும் தேடவே செய்வார்.

இறைவனை நினைத்து உடைந்தும் உருகியும் அவ்ர் எழுதிய திருவாசகத்தை பற்றி சில நாள் கழித்து மீண்டும் அலசுவோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *