எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் ஆரம்பித்த தொடர். இறைவன் அருளால், இத்தனை வேகமாய் 6வது பகுதியை அடைந்து இருக்கின்றது. இந்த தொடரை எழுதுவது, ஒரு போதை போல ஆகிவிட்டது. எந்த ஒரு தொடரை எழுதும் போதும், இப்படியான அனுபவம் ஏற்பட்டதில்லை. மாணிக்கவாசகர், எழுதச்  சொல்லி உந்துகிறார். அவரின் உந்துதலால் எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.அவரின் உந்துதல் குறையாத வரை இந்த தொடரின் வேகம் குறைய போவதில்லை.

“உன்னிடம் மாணிக்கவாசகர் பேசிக்கொண்டா இருக்கின்றார்?” ஆம்.

உங்களுக்கு ஒருவர் ஒரு sms  அனுப்புகிறார் என்றால், அந்த செய்தி அவருடைய குரலில் தான் உங்கள் மனதில் ஒலிக்கும். அப்படியிருக்க எழுத்துக்கள் மூலமாக அந்த நபர் உங்களிடம் பேசுகிறார் என்று தானே அர்த்தம்.அப்படிதான் இதுவும்.

நீங்கள் திருக்குறள் படித்தீர்கள் என்றால் திருவள்ளுவர் உங்களுடன் பேசுவார்.நீங்கள் கீதை படித்தீர்கள் என்றால் கிருஷ்ணர் உங்களுடன் பேசுவார். இங்கே அவர்களின் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களோடு பேசுகிறது. நாம் நம்முடைய எண்ணங்களை தூய்மைப்படுத்திக்கொள்ள இத்தகையவர்களின் எண்ணங்களோடு பேசிக்கொண்டே இருக்க வேண்டும். மு.வரதராசனார்,தங்கைக்கு எழுதிய கடிதத்தில் நல்ல நூல்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்கிறார். சரி தான். நல்ல நூல்கள் ஒவ்வொரு முறைப்படிக்கும் பொழுதும் நமக்கு ஒவ்வொரு வகையான புரிதலை தருவதோடு ஒவ்வொரு முறையும் நம்மை அடுத்த நிலைக்கு மேம்படுத்தும்.

இந்த தொடரின் மற்ற பகுதிகளை படிக்காமல் இருந்தால்.அந்த பகுதிகளை படித்துவிட்டு மேலும் படியுங்கள்.

இறைவன் மீதான காதலின் வெளிப்பாடு தான் திருவாசம் என்றும். காதலின் எல்லா வகைகளும் திருவாசகத்தில் எடுத்தாளப்பட்டு இருக்கின்றது என்றும் சொல்லி இருந்தோம்.

தாய்க்கும் பிள்ளைக்குமான  காதல்;

தந்தைக்கும் பிள்ளைக்குமான காதல்;

பொம்மை காதல்;

கணவன் மனைவிக்கு இடையிலான அல்லது காதலன் காதலிக்கு இடையிலான காதல்;.

மனிதர்கள் மிருகங்கள் மீது கொள்ளும் காதல்.

மேற்சொன்ன இந்த வகைகள் எல்லாம் ஒரே மாதிரியான உணர்வுகளை கொண்டது இல்லை. நிறைய வேறுபாடுகள்  இருக்கின்றது.ஆனால், அவை எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு உணர்வை ஒரு பாடலில் வெளிப்படுத்திருயிக்கின்றார். அதை பற்றி பார்க்கும் முன்னர், எப்போதும் போல் சில கதைகள் பேசலாம்.

நீங்கள் நாய் வளர்த்து இருக்கின்றீர்களா?நானும் கூட வளர்த்தில்லை.ஆனால்,சிலர் வளர்த்து பார்த்து இருக்கின்றேன்.’சிவனே!’ என்று எங்கோ ஒரு நாய்க்கு பிறந்து, தன் போக்கிற்கு திரிந்து இருக்க வேண்டிய நாயை பிடித்துக்கொண்டு அல்லது வாங்கிக்கொண்டு வந்து, அன்போடும் ஆசையோடும் வளர்ப்பார்கள்.அதை நாய் என்று சொல்லக்கூடாது.தெருவில் இருக்கும் மற்ற நாய்களும் அதை சேர விட மாட்டார்கள்.குடும்பத்தில் ஒருவராகவே அது வளர்ந்துவரும். “அம்மா யாரு? அப்பா யாரு?” என்றெல்லாம் மறந்து போகும்.அந்த நாயும் அவர்கள் மேல் அத்தனை பற்று கொள்ளும்.இப்படி போய்க்கொண்டு இருக்கும் போது, தீடீரன்று  அந்த நாய் ஏதேனும் சேட்டை செய்துவிடும். அடித்து விரட்டி இரண்டு நாள் வீட்டிற்குள் விடாமல் வெளியில் கட்டிவைப்பார்கள்.அந்த நாய் அந்த இரண்டு நாளும், “என்ன டா ஒதுக்கி வச்சுட்டீங்க” என்பது போல பார்க்கும். இது ஒரு கதை.

சின்ன குழந்தைகள்,அவைகளின் உலகமே அம்மாவும் அப்பாவும் தான். அவர்கள் யாரை காட்டுகிறார்களோ, அவர்களெல்லாம் தான் அவைகளின் உலகம்.இயல்பில், அம்மாவும் அப்பாவும் அன்பானவர்கள் தான். சமயங்களில் இந்த குழந்தைகள் ஏதேனும் சேட்டை செய்துவிட்டால், இரண்டு அடி அடித்து, “என்கிட்ட வராதே” என்பார்கள்.அப்போது அந்த குழந்தை “உன்ன எனக்கும் பிடிக்கும் தானே!” என மருகும். “உன்ன எனக்கு பிடிக்கும் என்னை ஏன் நீ அடித்து விரட்டுகிறாய்” என்னும் அந்த குழந்தை மொழி அவர்களுக்கு புரிவதில்லை. சில குழந்தைகள், “என்ன உனக்கு பிடிக்காதா என்றே கேட்டுவிடும்” அப்படி கேட்டாலும் அந்த குழந்தையை மீண்டும் எப்போது அரவணைக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை பெற்றோரால் மட்டுமே எடுக்க முடிகிறது.இது இன்னொரு கதை.

(மாணிக்கவாசகர்: நான் எழுதின ஒரு பாட்டுக்கு எத்தனை கதை டா சொல்லுவ)

எனக்கு ஒரு 5 வயது இருக்கும். அப்பொழுதெல்லாம் அடிக்கடி அப்பா, அம்மாவிடம் கோபித்துக்கொள்வார்.அப்பாவை தான்  ரொம்ப பிடிக்கும். ஆனால்,சண்டை வந்தால், எப்போதும் அம்மா பக்கம் தான். ஒரு நாள் காலையில், அப்பா, கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பிவிட்டார்.நானும் அம்மாவும் பின் தொடர்ந்து சென்றோம்.கோபித்துக்கொண்டு கிளம்பியவர் ஒரு உணவகத்திற்குள் சென்றார்.அம்மா வெளியிலேயே நின்றுவிட்டு என்னை உள்ளே அனுப்பி அப்பாவை கூட்டி வரச் சொன்னார்.நான் உள்ளே சென்று, உணவகத்தின் வாசலை பார்த்தபடி; வாசலில் நிற்கும் அம்மாவை பார்த்தபடி   அப்பாவுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டு அவரிடம் பேச போனேன். அவர், ஒரு சிறிய புன்னகையுடன்,  “என்ன சாப்பிடுகிறாய்” என்று கேட்டார்.இருவரும் சாப்பிட ஆரம்பித்து விட்டோம்.

(மாணிக்கவாசகர்: அடப்பாவி!)

அந்த மொத்த காட்சியிலும், ‘நான் என்ன சாப்பிட்டேன்? அப்பா என்ன சாப்பிட்டார்? அப்பா முகம் எப்படி இருந்தது?’ என்று எதுவும் என் நினைவில் இல்லை. இன்றும் நினைவில் இருப்பது அம்மாவுடைய முகம்.ஒரு பாவப்பட்ட ஜீவன் போல நாங்கள் சாப்பிட்டு முடித்து வெளியில் வரும் வரை காத்துகொண்டு இருந்தார்.

(மாணிக்கவாசகர்: அம்மா ரோட்ல நிக்கும் போது உன்னால எப்படி சாப்பிட முடிஞ்சுச்சு.

நான்:அப்பா சமாதானம் ஆகிட்டாருங்க ஹா!ஹா!)

அதன் பின் மூவரும் சேர்ந்து வீடு திரும்பிவிட்டோம்.கதையில் இதுக்கு அப்பறம் என்ன நடந்தது என்பது பாட்டுக்கு தேவை இல்லை.

இந்த பொம்மை காதல் விஷயத்தில், எனக்கு பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும்;பேச வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும்;பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றெல்ல்லாம் தோன்றும். ஆனால், இது எதுவுமே அதிகம் நடந்ததில்லை.

அந்த சமயங்களில் நான் நினைப்பதுண்டு,”நாம் ஒருவரை பற்றியே அதிகம் சிந்தித்துக்கொண்டு இருக்கின்றோம் என்றால் அவர்களும் நம்மை பற்றி சிந்திக்க மாட்டார்களா? நமக்கு ஒருவரை பிடித்து இருக்கிறதென்றால் அவருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் தானே? ஒருவேளை நாம் அவர் மீது அன்பு கொண்டது போல அவருக்கு நம் மீது அன்பு இல்லையோ?”

இப்படியெல்லாம் யோசித்து இருக்கின்றேன்.

(மாணிக்கவாசகர்: அப்பறம் சொல்லு!நீங்க அந்த சின்ன பொட்டும்  அதுக்கு மேல  சந்தனமும் வச்ச பொண்ணு நினைக்காதீங்க.ரஜினி, திரிஷா இவர்களை சொன்னதாக கூட எடுத்துக்கொள்ளலாம். பிரபலங்கள் மீது ஏற்படும் one way அன்பு போன்றது.குழந்தைகள் பொம்மை மீது……… இதெல்லாம் விட்டுட்ட)

காதலின் வெவ்வேறு வடிவங்களை உங்களுக்கு சொன்னேன். ஆனால், சூழல் ஒன்று தான். இறைவனை காதலிக்கும் மாணிக்கவாசகர் இதே போன்று ஒரு சூழலில் இருந்து இறைவனை பார்த்து ஏக்கத்துடன் ஒரு கேள்வி கேட்கிறார்.

நாயேன் அடிமை உடனாக

    ஆண்டாய் நான்தான் வேண்டாவோ

“அடிமை நாய் போல உன்னிடம் கிடக்கும் வண்ணம் வந்து என்னை ஆட்கொண்டாய் இப்ப நா உனக்கு வேண்டாமா”

இப்பொழுது அந்த கதைகளை நினைத்து பாருங்கள், நாய் தன் தாயோடு இருந்திருக்கும். அதை வளர்க்கிறேன் என்கிற பெயரில் வீட்டில் கொண்டு வந்து வைத்து, அந்த நாய், நம்மையே உலகம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது; நாம், கோபத்தில் ஒரு நொடி அந்த நாயை ஒதுக்கினாலும் அந்த நாய் எப்படி ஒரு வேதனையும் ஏக்கமும் கொள்ளும்.

பிள்ளைளை நாம் தான் பெற்றுக்கொள்கிறோம், தன் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த கூட பழகாத அந்த குழந்தையை ஒரு கணமேனும் நாம் வெறுத்து ஒதுக்கும் பொழுது அந்த குழந்தை என்ன நினைக்கும்?

சொந்த பந்தங்கள் பேசி முடித்த திருமணம் தான்.ஆனாலும், அப்பாவாக தான் அம்மாவை மணம் செய்துகொண்டார் எனலாம்.அந்த ஒரு நாள், அந்த சில மணி நேரம்,அம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும்!

இருவர் சம்மதித்து நடந்து இருந்தாலும்.ஒருவரின் சம்மதம், கேட்காமலேயே திருடப்பட்டதாக இருந்தாலும்.கணவன்கள் சில சமயங்களில் இப்படிதான் இருக்கின்றார்கள். நானும் கூட சில சமயங்களில் அப்படி தான்  நடந்துகொள்கிறேன்.

“நான் வேண்டாமா உனக்கு!” (எவ்வளவு பெரிய emotion-கடவுள்கிட்ட கேட்கிறாருங்க மனுஷன்)

“நான் வேண்டாமா உனக்கு!”

தானாய்  நம்மை ஈர்த்து,சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் பொம்மைகள், பேசாமல் இருந்துவிட்டால்! (நமக்கு தான் ரஜினிட்ட பேசணும் போல இருக்கு ரஜினி நம்மகிட்ட பேச போறாரா என்ன! ஹா!ஹா!)

தாயாய் முலையைத் தருவானே

    தாரா தொழிந்தாற் சவலையாய்

நாயேன் கழிந்து போவேனோ

    நம்பி யினித்தான் நல்குதியே

தாயே யென்றுன் தாளடைந்தேன்

    தயாநீ என்பால் இல்லையே

நாயேன் அடிமை உடனாக

    ஆண்டாய் நான்தான் வேண்டாவோ

திருவாசகம் 50 ஆனந்த மாலை பாடல் எண் : 5

இதற்கு முந்தைய இருவேறு பகுதிகளில், தாயோடு இறைவனை ஒப்பிட்டதை பார்த்தோம். மாணிக்கவாசகர், இறைவனை தாயோடு ஒப்புமைப்படுத்தும் பாடல்களில் நாம் பார்க்கும் மூன்றாவது பாடல்.உவமை ஒன்று தான். ஆனாலும், மூன்று பாடல்களிலும் வெவ்வேறு விஷயங்களை சொல்கிறார்.

1, பால் நினைத்து ஊட்டும் தாய் என்னும் இடத்தில், “குழந்தையின் தேவையை காலமறிந்து நிறைவேற்றும் தாயை விட இறைவன் நம் தேவையை காலமறிந்து பூர்த்தி செய்கிறான்” என்கிறார்.

2. வானாகி மண்ணாகி பாடலில், எல்லாமுமாக இருக்கும் இறைவன் தன்னில் இருந்தே எல்லாவற்றையும் தோற்றுவித்ததால்; அவனே உயிர்களுக்கு தாயாக நிற்கிறான் என்கிறார்.

3.தாயாய் முலையைத் தருவானே! என்ன சொல்கிறார்?

(மாணிக்கவாசகர்: உன்னை சொல்லச்சொல்லி சொன்னா.. அவங்களை கேள்வி கேட்கிற…)

ஓவ்வொரு தாயும் தன்னையே கொடுத்துத்தான் தன் பிள்ளையை வளர்கிறாள். பிரபஞ்சம் முழுதும் இறைவனே எல்லாமுமாக இருக்கின்றான். அப்படி இருக்கும் அவன், தன்னில் இருந்து உயிர்களை தோற்றுவித்து;தன்னையே கொடுத்து அவைகளை வளர்கிறான் அதனை சுட்டவே,”தாயாய் முலையைத் தருவானே”என்கிறார். தன்னையே தருவது என்பதை உடல் சார்ந்ததாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது.தாய், தாயான நொடியில் இருந்து தான் காலம் முழுதையும் தந்துவிடுகிறாள்.

(தாயுமானவனே!!!!!!)

” ‘தருவோனே’ என்று ‘ ஏன் முடிக்கவில்லை?” என்று ஒரு கேள்வியை நாம் கேட்டால், நமக்கு கிடைக்கும் பதில்:

“தன்னையே தரும் தாயை விடவும் ;

இறைவனை விடவும்;

வானை விடவும்;

உயர்ந்ததும் பரந்ததும் என்ன இருக்கின்றது!

அதனால் கூட தரு-‘வானே’ என்று முடித்துஇருக்கக்கூடும்.

தாரா தொழிந்தாற் சவலையாய்

நாயேன் கழிந்து போவேனோ

    நம்பி யினித்தான் நல்குதியே

நீ என்னை கவனிக்காமல் விட்டால்?என்னை ஒதுக்கினால்? சவலை பிள்ளையாய் ஒழிந்து விடமாட்டேனா! ஏங்கி விட மாட்டேனா! இனியேனும் கொஞ்சம் கருணை காட்டேன்! (மாணிக்கவாசகர்: extra bit சேர்கிற மாதிரி இருக்கு)

தாயே யென்றுன் தாளடைந்தேன்

    தயாநீ என்பால் இல்லையே

வீடுகளில் குழந்தைகள் நீங்க அக்காவிற்கு தான் எல்லாம் செய்வீங்க அண்ணனுக்கு தான் எல்லாம் செய்வீங்க என்று மருகுவது போல “தயாநீ என்பால் இல்லையே” என்கிறார்.  ” தாயே யென்றுன் தாளடைந்தேன்” என்ற இந்த வரியில், ‘தாயே’ என்பது, இறைவனையே கேட்டு, நீ தான் வேண்டும் என்று உன் தாள் அடைந்தேன் என்பது போல உள்ளது.(தா-கொடு என்னும் அர்த்தத்தில்) தன்னையே தரும் இறைவன் என விழித்து அவனையே கேட்டு அவன் காலை பிடித்தது போல அமைந்து இருக்கின்றது இந்த ‘தா’யே  என்னும் வார்த்தை.

காலை பிடித்தும் இரங்காமல் இருக்கிறாயே இறைவா! நான்தான் வேண்டாவோ!

 நான்தான் உனக்கு வேண்டாவோ!

.  (மாணிக்கவாசகர்:finishing emotional ல தான் இருக்கு ஆனால், எல்லாரும் கடைசி வரி வரை படிக்க மாட்டாங்க பாத்துக்கோ!நாலு வரி பாட்டு அஞ்சு பக்கத்துக்கு எழுதினா யாரு படிப்பா)

நீளமானது தான். இந்த கதைகளை மீண்டும் படித்து. அந்த பாடலை மீண்டும் படியுங்கள். மு.வரதராசனார் சொன்னது போல மீண்டும் மீண்டும் படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *