வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். தொடரின் கடைசி இரண்டு பகுதிகளில் கொஞ்சம் கசப்பான ஏக்கம், பிரிவு போன்ற விஷயங்களை பற்றி பார்த்ததால்; இந்த பகுதியில், மிக அழகான ஒரு குட்டி கதை ஒன்றை உங்களுக்கு சொல்லலாம் என்று இருக்கின்றேன்.
(மாணிக்கவாசகர்: சம்மந்தமே இல்லாத கதை சொல்ல தானே, வணக்கம் எல்லாம் சொல்லி இந்த அறிமுகம்)
பள்ளிப்பருவத்தில் ஒரு பையன்.
அவன், “கடவுள் இல்லை” என்று கூறித்திரியும் சில அதிமேதாவிகளின் தாக்கத்தால், கடவுள் வழிபாடு அனைத்தும் மூடத்தனம் என்கிற தீர்மானத்தோடு, “நான் கோவிலுக்கு போறது சாமி கும்பிடுறதெல்லாம் விட்டுட்டேன்” என்று பெருமை பேசிக்கொண்டு திரிந்த காலம்.
ஒரு நாள், பெரியவர்களின் வற்புறுத்தலால் வனாந்திரத்தில் இருக்கும் ஒரு சிவன் கோவிலுக்கு செல்கின்றான்.
“சரி, சொன்னாங்க போய்ட்டு வருவோம்” என்கிற மனநிலையில் சென்றவன், அங்கு நடந்த வழிபாடுகளை எல்லாம் கவனிக்கவில்லை. பூஜை முடியும் வரை நின்றுவிட்டு கிளம்பிவிடலாம் என்கிற என்னனத்தில் ஒரு ஓரமாய் நின்று கொண்டு இருக்கின்றான்.
பூஜை முடிகிறது. பிரசாதம் விநியோகிக்கிறார்கள். அவன் அதையும் கூட வாங்க முற்படவில்லை.
பிரசாதம் வாங்கிக்கொண்டு, ஆளுக்கொரு பக்கமாய் நகர்கிறார்கள். சீரற்ற முறையில் மனித தலைகள் அங்கிமிங்கும் கையில் பிரசாதத்தோடு நின்றுகொண்டும் நடந்துகொண்டும் இருக்கின்றது.
அந்த சீரற்ற கூட்டத்திற்கு இடையில்;
அவன் சற்றும் எதிர்பாராத வேளையில்;
நல்ல ஈரமான சந்தனத்தை விரலில் தொட்டுக்கொண்டு;
அவனை நோக்கி வந்த ஒருத்தி, அத்தனை குளிர்ச்சியான ஈரமான அந்த சந்தனத்தை; அவன் நெற்றியின் புருவ மத்தியில் அவள் விரல் ஒட்டாத படிக்கு , ஒட்டிவிட்டு விலகினால்.
பனிமலை அளவிலான குளிர்ச்சி; குண்டூசி அளவில் உங்கள் புருவமத்தியை தீண்டும் நொடியில் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?
அவனுக்கு இப்போது எந்த மனித தலைகளும் தெரியவில்லை. அவன் காதுகள் எதையும் கவனிக்கவில்லை.
“வானம் எப்படி இருக்கும்! பூமி எப்படி இருக்கும்! அவை எல்லாம் எங்கே இருக்கின்றது? ” அத்தனையும் மறந்து போனான்.
அவன் இழுத்த மூச்சு காற்று; அவன் நெஞ்சை நிரப்பி; நின்று, நிதானமாய்; அவன் செல்களை மகிழ்வித்து அவன் புன்னகைகளை கட்டி இழுத்துக்கொண்டு வெளியே வந்து, அவன் வெளி(space) முழுதையும் ஆனந்தத்தில் நிரப்புகிறது.
அந்த வயதில் இருக்கும் ஒருவன், உலகை மறந்து போகும் தருணம் இப்படியானதாகத்தான் இருக்கும். இத்தனையும் ஒரு நொடியில் நிகழ்ந்து மாறுகின்றது.
அந்த பெண் அவனுக்கு பக்கமாய் (அவன் space க்குள்) வந்த நொடியிலியே இந்த மாயங்கள் நிகழ ஆரம்பித்து; சந்தனம் வைக்கப்பட்ட நொடியியில் ,அந்த ஒரு புள்ளியில் மட்டுமே அவன் கவனம் குவிந்திருந்தது.
அவள் எந்த பக்கம் இருந்து வந்தாள்; எந்த பக்கம் நகர்ந்தாள் என்று எதையும் அவன் கவனிக்கவில்லை. அந்த பெண்ணும் கோவிலுக்கு செல்வாள் என்பதை அறிந்திருந்தாலும்; பெரியவர்கள் வற்புறுத்தாமல் அவன் சென்றிருக்க வாய்ப்பில்லை. அந்த பெண், அங்கு தான் இருக்கின்றாள் என்றும் தெரிந்தும்; அவன், அவள் எங்கு நிற்கிறாள்? என்ன செய்துகொண்டு இருக்கின்றாள்? என்பதை கவனித்துக்கொண்டும் இருக்கவில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் பல வருடங்களாக பரிச்சயமாணவர்களாக இருந்தாலும் அவர்களுள் நட்பு என்று சொல்லிக்கொள்ளும் அளவில் கூட எந்த உறவும் இல்லை.அந்த பெண் மீது தான் கொண்டிருந்த அன்பையும் மிக சமீபமாகவே அவன் உணர்ந்திருந்தான் என்றாலும், அவன் எதையும் எப்போதும் வெளிக்காட்டிக்கொண்டதில்லை. குழந்தை வயதில் ஏற்படும் தவறான எண்ணங்களற்ற குழந்தைத்தனமான அன்பு அது.
இப்படியான சந்தர்ப்பத்தில் தான்,அவள், அவன் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம்; அவன் நெற்றியை தொட்டுவிடாத படிக்கு, அவனுக்கு சந்தனமிட்டுவிடுகிறாள். அவளின் விரல் நுனிக்கும்; அவனுடைய புருவமத்திக்கும்; நூலினும் மெல்லிய இடைவெளி நிச்சயமாய் இருந்தது.இரண்டிற்குமான அந்த இடைவெளியில் சந்தனம் மட்டுமே இருந்தது.அவன் வெளியெங்கும் ஆக்கிரமித்த அவள் அதனை ஆனந்தத்தால் நிரப்பி சென்றாள்.
இந்த காட்சி எத்தனை அழகானது! அத்தனை அழகானது, இறைவன், உடலோடு இருக்கும் ஒருவரை ஆட்கொள்ளுதல் என்பது. உடலோடு இருக்கும் யாராலும் இறைவனோடு ஒன்றி விடமுடியாது.இறைவனால் ஞானம் அடைகின்றவர்கள்;ஒரு எல்லைவரை மட்டுமே தொட்டு வருகிறார்கள். மாணிக்கவாசகர், ராமகிருஷ்ணர், ரமணர் போன்றவர்கள் உடலோடு அந்த எல்லையை தொட்டவர்களே.அவர்களுக்கும் இறைவனுக்குமான இடைவெளி என்பது அந்த பெண்ணின் விரல் நுனிக்கும் அவன் நெற்றிக்கும் இருந்த இடைவெளி அளவிலானது. அந்த இடைவெளியை நிறைத்து இருப்பது அவர்களின் பூத உடல் மட்டுமே.
பள்ளிக்காலம் முடிந்த பின் , அந்த பெண்ணை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படாத என்று இருந்தவன்; மீண்டும் சந்திக்க கிடைத்த வாய்ப்புகளை அவனே வீண் செய்கிறான்.வீண் செய்துவிட்டு மனதால் தேடுகிறான்; மீண்டும் என்று காண்போமோ! என்று. அப்படி தேடும் பொழுதிலும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னை பொறுத்திக் கொண்டு அதற்குள்ளே இருந்தபடியே அவளை கண்டுவிட வேண்டுமென்று விழைகிறான்.
(மாணிக்கவாசகர்: உன் கதையை முடிச்சுட்டியா? என் கதைக்கு வருவோமா? சம்பந்தம் இல்லாத கதையை சொல்லி என்ன அதுல சம்பந்தப்படுத்திட்ட!)
இறைவன் பல காலமாகவே உயிர்கள் அத்தனைக்கும் பரிச்சியமானவனாக இருக்கின்றான். இறைவன் மீது நேசமே கொண்டிருந்தாலும், நாம் எப்போதும் அதை வெளிகாட்டிக்கொள்வதில்லை. இப்படித்தான் மாணிக்கவாசகரின் கதையும்; அவர் பாட்டுக்கும் ஒரு ஓரமாக பாண்டிய மன்னனின் அமைச்சர்களில் ஒருவராய் வேலை செய்துகொண்டவரை இறைவன் தேடிச்சென்று ஆட்கொள்கிறான்.நாமாக தேடினாலும் அவன் அருள் இல்லாமல் அவனை அடைய முடியாது.அதன் காரணமாகவே சிவபுராணம் ஆரம்பிக்கும் பொழுதே அவன் அருளால் அவன் தாழ் வணங்கி என்கிறார் மாணிக்கவாசகர் .
நான் சொன்ன அந்த கதையில் வரும்,அந்த பெண் தான் சிவன்.அந்த பையன் தான் மாணிக்கவாசகர்.இப்பொழுது எண்ணிப்பாருங்கள்,இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தருணம் எத்தனை ஆனந்தமாய் இருந்திருக்கும்! அவர் இந்த ஜட உலகையும் அது சார் ஆசையையும் அந்த நொடியிலேயே மறந்திருப்பார். அந்த தருணத்தில் இருந்து இறைவனை அவர் தேடாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
மேலை வானவரும் அறியாதது ஓர் கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே ஞாலமே விசும்பே இவை வந்து போம் காலமே உனை என்றுகொல் காண்பதே 05-திருச்சதகம் பாடல் எண்: 43(கைம்மாறு கொடுத்தல்)
இந்த பாடலில் எனை ஆட்கொண்ட கூத்தனே! உன்னை மீண்டும் என்று காண்பேன்( உனை என்றுகொல் காண்பதே”) என்கிறார் மாணிக்கவாசகர். வானவரும் அறியாத ஓர் கோலமாய் இருக்கின்ற இறைவன் தன்னை ஆட்கொண்டான்; அவனை நான் என்று காண்பேன்! எனத் தேடுகிறார் மாணிக்கவாசகர்.
“இறைவன் மிகப்பெரியவன்”. அத்தனை பெரிய இறைவனை, மனிதன் மட்டும் அல்ல வானவரும் கூட எப்படி அறிந்துகொள்ள முடியும்!
எறும்பால் எப்படி யானையின் மொத்த உருவத்தையும் அறிந்துகொள்ள முடியும்!
இந்த மொத்த பிரபஞ்சத்தில் பூமி, எத்தனை சிறியது! அதில் வாழும் உயிரினங்கள் இன்னும் எத்தனை சிறியது! அப்படியிருக்கும் பொழுது பூமியை விட பெரிதான வானத்தை சேர்ந்த வானவரும் அறிந்து கொள்ள முடியாத நீ(இறைவன்); என்னை ஆட்கொண்டாய் இது என்ன கூத்து! என்பதை வெளிப்படுத்தவே இந்த இடத்தில் “என்னை ஆட்கொண்ட கூத்தனே” என்கிறார்.
(மாணிக்கவாசகர்:அதாவது மத்தவங்கள விட்டுட்டு அந்த பொண்ணு அவனுக்கு சந்தனம் வச்ச மாதிரி, அதுவும் கூத்து தானே அதை சொல்லலை)
ஐன்ஸ்டின், space(வெற்றிடம்) மற்றும் time (காலம்)கொண்ட ஒரு நான்கு பரிமாண மாதிரியை(model ) கொண்டு இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் நட்சத்திரங்களும் அதில் தான் இருக்கின்றது என்று விளக்கி இருக்கின்றார். அதோடு அவர், இந்த காலத்திற்குள் (time) மற்றவை தோன்றி மறையும் என்று விளக்கி இருக்கின்றார். ஐன்ஸ்டினுக்கு முந்தையவர்கள் பிரபஞ்சத்தை முக்கூட்டு பரிமாணமாகவே கருதி வந்தார்கள்.
(ஒரு புரிதலுக்காக சொல்லவேண்டுமெனில் space உடைய மூன்று பரிமாணத்தையும் நான்காவது பரிமாணமாக காலத்தையும் சேர்த்து ஒரு பாய் மாதிரி செய்தால், அதற்குள் இந்த மொத்த அண்டமும் சுருட்டி வைக்கப்பட்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளலாம்)
அவர்களுக்கும் முந்தைய மாணிக்கவாசகர், எந்த ஒரு மாதிரியையும்(model) எடுத்துக்கொள்ளவில்லை, எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யவில்லை.அவர் சொல்கிறார்.
ஞாலம் என்பதற்கு அந்தரத்தில் தொங்கும் பொருள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். அந்த வகையில் ஞாலம் என்பதை நாம் வாழும் உலகத்தை மட்டும் சுட்டியதாக கொள்ள முடியாது.விசும்பு என்பதற்கு ஆகாயம் என்று மட்டும் அர்த்தம் இல்லை. இந்த இரண்டு வார்த்தைகள் கொண்டு இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை கோள்கள் நட்சத்திரங்கள் என்று அனைத்தையும் சுட்டுகிறார். இவை அனைத்தும் காலவெளியில் தோன்றி மறையக் கூடியது. இவை அத்தனையுமாய் இருப்பதும் இறைவன் தான்; இவை அத்தனையும் தோன்றி மறையும் பிரபஞ்சத்தின் நான்காவது பரிமாணமான காலமும் கடவுள் தான் என்பதை உணர்ந்தவர் பாடுகிறார்
மேலை வானவரும் அறியாத ஓர் கோலமே யெனை ஆட்கொண்ட கூத்தனே ஞாலமே விசும்பே இவை வந்துபோம் காலமே உனை யென்றுகொல் காண்பதே . |
முந்தைய பாடலை ‘என்று கொல் காண்பதே’ என்று முடித்த அவர். இந்த பாடலில் இறைவனை எப்படி காண முடியும் என்பதை சொல்கிறார்.
உயிரினங்களுடைய கண்களால் குறிப்பிட்ட அலைநீளம் (wavelength)கொண்ட ஒளியினை மட்டுமே காண முடியும். இறைவன் அந்த சாதாரண கண்களால் பார்க்க முடியாத பேரொளி அவனை காணவேண்டுமெனில் ஞானக்கண்ணால் தான் காண முடியும் என்கிறார்.
வெப்பம் தராத குளிர்ந்த ஒளியை கண்களால் எப்படி காண முடியும்! கண்ணை மூடிக்கொண்டு உணரத்தான் முடியும்.
(மாணிக்கவாசகர்: “சந்தனமிட்டு விட்ட அந்த விநாடித்துளிகளில் ஏற்பட்ட உணர்வை போல” இப்படி சொல்லத்தானே அந்த கதையை சொன்ன)
அடுத்த அடிகளில் ,பறவைக்குஞ்சு, கூட்டை விட்டு பறக்க முடியாதது போல அல்லது முட்டையை விட்டு வெளி வர முடியாதது போல, இறைவனுடன் சேர முடியாததற்கு காரணமாக(இடைவெளியாக) இருக்கும் இந்த பொய்யான உடம்பெனும் கூட்டை விட்டு இறைவனை சேர வழி தெரியாமல் இருக்கிறேனே என்கிறார்.
அந்த பெண்ணை தேட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும்,மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், கூட்டை தாண்ட முடியாத பறவை போல சில உடைக்க முடிந்த எல்லைகளை தானே உடைப்பதற்கு பெரும் முயற்சிகள் செய்யாமல் விடுகிறான்.
அது போல்,மாணிக்கவாசகருக்கு இறைவனை அடைய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கின்றது, ஆனால், புலன்கள் மீதும் புலன் நுகர்ச்சி பொருள்கள் மீதும் பற்று கொண்ட இந்த உடம்பை தானாக விட்டுவிட்டு, “இறைவனை எவ்வாறு சேருவது?” என்கிற வழி தெரியாமல் இருக்கின்றார். அதை அவர் இறைவனிடமே சொல்கிறார். காரணம்,நானாக உன்னை வந்து சேரும் வழி தெரியவில்லை நீயாக என்னை ஆட்கொண்டது போல உன்னிடம் சேர்த்துக்கொள் என்பதாகத்தானே இருக்க முடியும். அதோடு, பறவை நிச்சயம் கூட்டைவிட்டு ஒரு நாள் வெளியில் பறக்கும் அது போலவே உடம்பைவிட்டு ஆன்மா இறைவனை அடையும். அந்த ஒருநாள் எப்போது என்கிற ஏக்கத்தோடு இறைவனை கேட்கிறார்,“உன்னை காண்பது எந்நாளோ! உன்னை சேர்வது எந்நாளோ!” ((கதைகளில் மாணிக்கவாசகர் உடம்பை கூட பூமியில் விடாமல் ஒரு பேரொளியில் ஐக்கியமாகி இந்த உலகை விட்டு நீங்கியதாக சொல்கிறார்கள்))
இங்கு இருக்கும் எல்லாவற்றிக்குள்ளும் அன்பின் வடிவமான ஒரு காதல் இருக்கின்றது; அந்த அன்பாக கடவுளே தான் இருக்கின்றார். இப்படி,எல்லாவற்றிக்குள்ளும் இறைவனே தான் இருக்கின்றார் என்னும் பொழுது, அறிவியலை கொண்டு கடவுளை மறுக்கும் school boys களுக்கு நாம் சொல்லிக்கொள்வது, “அறிவியலும் கடவுள் தான்”
“Science without religion is lame, religion without science is blind.”- ஐன்ஸ்டீன்
(மாணிக்கவாசகர்: கடைசி வரை எந்த சிவன் கோவில் ல திருநீற விட்டுட்டு சந்தனம் கொடுத்தாங்கன்னு நீங்க கேட்கலை. ஆனால் சந்தனம், குளிர்ச்சி, school boy ,நாத்திகம், காதல், மெய் மறக்கும் தருணம், ன்னு எல்லாத்தையும் சம்பந்தப்படுத்திட்டான் பாருங்க! எல்லாம் அவன் கதை தான். அதாவது அந்த அவன் அருளால், இந்த அவன் எழுதிய கதை ஹா!ஹா! சீக்கிரமே நான் எழுதின இன்னொரு பாட்டை இந்த அவனுக்கு சொல்லிக்கொடுத்து எழுத சொல்றேன்.bye!)
எல்லாம் அவன் அருள்! எல்லாமே அவன் அருள்!