வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களுக்கும். இதுவரையில் காதலின் வெவ்வேறு முகங்களையும் மாணிக்கவாசகர் கடவுள் மீது கொண்டு இருந்த பற்றையும் கடவுள் பற்றியும் பார்த்து வந்தோம்.

இதுவரை நாம் பார்த்த, தந்தை மகன் மீது கொள்ளும் காதல்; தாய் பிள்ளைகள் மேல் கொள்ளும் காதல்; நம்முடைய பொம்மை காதல், இவையெல்லாம் ஒரு வகையில் unconditional love.
மேற்சொன்ன வகைகளில் சில எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இவையெல்லாம் நிச்சயம் unconditional love வகையை சார்ந்ததே.இந்த வகை காதல்களில் நிச்சயமாக ஒரு இடைவெளி இருக்கவே செய்யும்.

அதோடு, நிபந்தனையுடன் கூடிய இடைவெளிக்கு இடமளிக்காத காதல் இருக்கின்றது.
“என்னை விட்டு நீ எங்கயும் போகக்கூடாது.இல்ல, என்னை கூட்டிட்டு போ” என்கிற நிபந்தனைகளை கொண்ட காதல்.பார்த்தால் போதும்; பேசினால் போதும் என்று “போதும்”என்கிற பெரிய மனசு கொண்ட காதல் வகைகளில் சேராத காதல்.

திருமணம் செய்து இருந்தீர்கள் என்றால் இந்த காதலை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

நம்ம கதைக்கு போவோமோ!

நம் கதையின் தலைவி ஒரு நிறுவனத்தில், ஒரு துறையில் வேலை செய்துகொண்டு இருக்கின்றாள்.அந்த நிறுவனத்தில் வேறொரு துறையில் பணிசெய்ய தலைவன் வந்து சேர்கிறான்.
அவன் சேர்ந்த துறையில் இருந்த தலைவியின் தோழிகளும் தோழர்களும் அவளிடம், “புதுசா ஒருத்தர் வந்து இருக்கார்” என்று அவனைப்பற்றி அவளிடம் பேசுகிறார்கள். அவனைபற்றி இவர்கள் கேட்டுக்கொண்ட கதைகளையெல்லாம் அவளிடம் பேசுகிறார்கள்.

(மாணிக்கவாசகர்: தம்பி! நம்ம தொடர் திருவாசகம் பற்றியா? அல்லது எதுவும் சுயசரிதையா?)

இருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாக அறிமுகம் செய்துகொள்ளவில்லை. அவன் பணிக்கு சேர்ந்த ஓரிரு நாட்களிலேயே இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.

அவள், இவனுடைய துறையில் இருந்த அவளுடைய தோழிகளை பார்க்க வந்த நேரத்தில், அவளின் சின்ன பொட்டும் அதற்கு மேல் இடப்பட்டிருந்த சந்தனமும் அவனுடைய கவனத்தை ஈர்க்கிறது. காரணம்,வெகு காலமாய் சின்ன பொட்டும் அதற்கு மேல் மெல்லிய கோடு இட்டது போல சந்தனமும் இருக்கும் நெற்றியை தான் அவன் தேடிக்கொண்டிருந்தான்.அதே நெற்றி இல்லை என்றாலும் அவன் கவனம் ஈர்க்கப்பட அதுவே காரணமாக இருந்தது.

அவன் கவனம் ஈர்க்கப்பட்டு. அவளை அவன் பார்த்த அதே நொடியில் அவளும் அவனைப்பார்க்கிறாள்.இவர்கள் பேசிக்கொள்ளாத வார்த்தைகளை நிச்சயம் அந்த கண்கள் பேசிக்கொண்டு இருந்திருக்கும். எல்லா முதல் சந்திப்புகளிலும்,மிக எதார்த்தமாக கண்களும் கண்களும் சந்தித்துக்கொள்வதில்லை.

இப்படி ஒரு பெண் உன்னை காதலித்தால் எப்படி இருக்கும் என்று அவன் வெளியில் (space இல்) ஒரு அசரீரி ஒலிக்கிறது.அந்த ‘இப்படி ஒரு பெண்’ என்பதில் பொட்டும் சந்தனமும் தவிர எதையும் அவன் கவனித்து இருக்கவும் இல்லை கேட்டறியவும் இல்லை. “அதெல்லாம் எப்படி நடக்கும்!” என்கிற பதிலோடு அவன் வேலைகளை அவன் கவனிக்கலானான்.

அசரீரி, அவன் காதலிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அவள் காதலித்தால் எப்படி இருக்கும்! என்றே சொன்னது. இறைவன் யார் தன்னை எப்படி சேர வேண்டும் என்பதை இப்படி தான் தீர்மானிப்பானோ என்னவோ! அடியார்களை அவனே தீர்மானித்தாலும் அவர்களாக அவனை காதல் செய்து அவனிடம் வந்து சேர்வதை தான் விரும்பியிருப்பான் எனத்தெரிகிறது.

தலைவனைப்பற்றி மற்றவர்கள் சொல்லக்கேட்டே அவள், அவன் மீது காதல் கொள்கிறாள்.இத்தனைக்கும் அவர்களின் முதல் சந்திப்பிற்கு பின்னர், அவர்கள் அதிகம் பேசிக்கொள்ளவோ சந்தித்துக்கொள்ளவோ இல்லை.
அவளுக்கு அவன் மீது காதல் எப்படி மலர்ந்தது என்பதை வார்த்தைகளால், அத்தனை அழகாக என்னால் சொல்ல முடியவில்லை.
தேவாரத்தில் ஒரு பாடல். ஒருவரை பற்றி நாம் கேள்விப்படுவதினாலேயே ஏற்படும் காதல் பற்றிய பாடல்.

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்

    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

தேவாரம்-025 திருவாரூர்-பாடல்-7

ஒரு பெண்,

அவனுடைய பெயரை கேட்கிறாள். அவன் எப்படி இருப்பான் என்று கேட்கிறாள்.அவன் ஊரை கேட்டு அறிகிறாள். இதையெல்லாம் கேட்டே அவன் மீது காதல் கொள்கிறாள்.காதல் கொண்டவள் அவன் மீது பித்துக்கொள்கிறாள்.அன்னை தந்தையை மறந்து போகிறாள்.தன்னையும் மறந்து.தலைமகற் சேர்தல் தலைமகட்கு இல்லை என்னும் ஆசாரங்களை மறந்து. தன் பெயரை அவனுக்கு உரியவள் என்றாக்கிக்கொள்கிறாள்.

நிச்சயம் ஆண்களால் இப்படி காதல் கொள்ளவும் வெளிப்படுத்தவும் முடியாது.
இத்தைகைய காதலை, இன்னும் தொடர்புபடுத்திக்கொள்ள ஒரு உதாரணம்.

வீட்டில் திருமணத்திற்கு வரன் பார்ப்பார்கள். அப்போது வரை யார் மீதும் விருப்பம் கொள்ளாத பெண். முதலில் வரனின் பெயரை தான் கேட்பாள்.கேட்பது கேள்விகளாய் கேட்டு அறிவதில்லை.வீட்டில் பேசிக்கொள்வார்கள்; அவர்களாக வரனின் பெயரை இவளிடம் வந்து சொல்வார்கள்.
இப்படியே,அவன் எப்படி இருப்பான் என்பதை கேட்டு;பின் ஊர் கேட்டு; அவன் மீது காதலும் வந்துவிடும், அந்த காதலால் தாய் தந்தையரை பிரிந்து அவனுக்கே உரித்தானவளாக தன்னை ஆக்கிக்கொண்டு; தன் பெயரை கூட மாற்றிக்கொண்டு(தன் நாமங் கெட்டாள்) அவனே கதி என்று இருப்பது தான் காதல் வகைகளிலேயே உயர்ந்தது.
அதன் காரணமாக கூட சிவனின் பெருமை பேச வந்த நாவுக்கரசர்,அவன் பெயர் கேட்டாலே அவன் மீது காதல் வந்துவிடும் என்று பெயரின் சிறப்பை ஊரின் சிறப்பை எடுத்துச்சொல்ல பெண் ஒரு ஆண் மீது காதல் கொள்ளும் வித்ததோடு ஒப்புமைப்படுத்துகிறார்.

நிச்சயமாக எந்த ஒரு ஆணும் தன்னையே அர்பணித்துக்கொள்கின்ற வகையிலோ தன்னையே மாற்றிக்கொள்கின்ற வகையிலோ காதல் கொள்வதில்லை.அம்மா, அப்பா, ஊர், சுற்றம் என்று அத்தனையையும் காதலுக்காக, திருமணத்திற்காக துறப்பதை பெண்களால் மட்டுமே செய்ய முடியும்.

இப்போது மீண்டும் அந்த பாடலை ஒரு முறை வாசித்து பாருங்களேன்!

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்

    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

தேவாரம்-025 திருவாரூர்-பாடல்-7

அனைத்தையும் துறந்து, இறைவனே கதி என்று கிடக்க;இறைவன் மீது காதல் கொள்ள இறைவனின் பெயரை கேட்டால் போதாதா! இறைவனின் பெருமைகளை கேட்டால் போதாதா! என்று நாவுக்கரசர் கேட்பது போல இருக்கின்றது.

மீண்டும் கதைக்கு வருவோம்.

தலைவனைப் பற்றி கேள்விப்பட்டே அவன் மீது காதல் கொண்டவள் அவனிடம் பேச தொடங்குகிறாள். தன் காதலை வெளிப்படுத்துகிறாள். அவளின் காதல் மிகையாகி, அவள் விடும் மூச்சுக்காற்றில் உபரியாக வெளியேற, அந்த காற்று ஊரில் உள்ள அத்தனை காதுகளுக்கும் இவர்கள் காதல் கதையை கொண்டு சேர்க்கின்றது.
காற்றில் ஊர் சுற்றிக்கொண்டு இருந்த இவர்களின் காதல் கதை, அவளின் வீட்டை ஒருநாள் அடைகிறது. அன்றிலிருந்து வீட்டிலேயே அடைபட்டு கிடக்கின்றாள் அவள்.

இத்தகைய சூழலில், அவனிடம் அவள் இப்படியாக சொல்கிறாள். “எல்லாருக்கும் தெரிந்துவிட்டது; உன்னை காதலிக்கிறேன் என்பதை உறவினர்களும் அறிந்துகொண்டார்கள்; எல்லோரும் என்னை ஏசுகிறார்கள்; என்னை வேலைக்கும் அனுப்புவதில்லை; இனியும் என்ன இருக்கின்றது; இன்னமும் கூட நீ வேண்டுமென்றே இருக்கின்றேன்.உன்னை சேர வேண்டும் என்று இருக்கின்றேன்; என்னை கூட்டிட்டு போ; இனி நான் இங்கு இருந்து என்ன செய்ய! “

நம் எல்லோருக்கும் பல ஆசைகள் இருக்கும்;பல கனவுகள் இருக்கும்; நம் எண்ணங்கள், நம்மை எதை எதையெல்லாமோ செய்ய தூண்டும்; ஆனால், அது அத்தனையையும் நாம் செய்து விடுவதில்லை.நம் கனவுகளை ஆசைகள் நிறைவேற்றிக்கொள்ள கூட சமயங்களில் நாம் முற்படுவதில்லை. நமக்கு பிடித்தவர்களிடம் பேசுவதற்கு கூட நாம் அதிகம் யோசிப்பதுண்டு. இத்தனைக்கும் காரணமாக இருப்பது, “மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்ன சொல்வார்கள்?” என்கிற எண்ணம் தான். காதல் அந்த எண்ணத்தை உடைத்தெறிகிறது. யார் என்ன சொன்னால் என்ன! என்கிற நிலைக்கு நம்மை தள்ளிவிடுகிறது.ஒன்றை அடைந்தே தீர, எதை பற்றியும் யார் சொல்வதை பற்றியும் கவலை கொள்ளாத நிலைக்கு நம்மை உந்தித்தள்ள அந்த ஒன்றின் மீது அத்தனை பெரிய காதல் இருக்க வேண்டியது அவசியமாகிறது.


மாணிக்கவாசகர் இறைவன் மீது கொண்ட காதலும் அப்படியானதாகவே இருக்கின்றது.

பேசப் பட்டேன் நின்னடி யாரில்

    திருநீறே

பூசப் பட்டேன் பூதல ரால்உன்

    அடியானென்று

ஏசப் பட்டேன் இனிப்படு கின்ற

    தமையாதால்

ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன்

    அடியேனே

திருவாசகம்-05 திருச்சதகம்-82(ஆனந்த பரவசம்)

“ஊரில் எல்லோரும் இவன் சிவனடியார் ஆனான் என்று பேசுகிறார்கள்;அமைச்சர் பதவியை துறந்து, ஞானாசிரியரால் திருநீறு பூசப்பட்டு, சிவனடியார் ஆனதை எல்லோரும் ஏசுகிறார்கள்; இனி இந்த உலகில் எனக்கு என்ன இருக்கின்றது; இன்னுமும் நீ ஆட்கொள்ளவே ஆசைப்பட்டேன் ” என்கிறார்.

இதை விட்டுவிட்டு அதை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், இதை விடுவதற்கு யாரும் துணிவதில்லை, அதை செய்யவும் யாரும் முற்படுவதில்லை.

(மாணிக்கவாசகர்: சொல்லு, “நான் கூட வேலையெல்லாம் விட்டுட்டு எதை எதையோ பண்ணலாம்னு தான் நினைக்கிறேன்” சொல்லு.சொல்லிப்பாரு)

மாணிக்கவாசகர் , தான் துறக்க நினைத்த எல்லாவற்றையும் துறக்கிறார். காதலுக்காக; திருமண பந்தத்திற்காக, பெண்கள் தன் தாய் தந்தையர் விட்டு வருவது போல உலக பற்றுகளை துறந்து;முதல் படியாக, “என்ன பெரிய அமைச்சர் வேலை!” என்று தன் பணியை துறந்து சிவனடியார் ஆனதை இறைவனிடம் எடுத்து சொல்லி,

“உனக்காக தான்;
உன் மேல இருக்க ஆசையினால தான் உலக ஆசையை விட்டேன் பாத்தியா !”
என்று ‘என்னை உன்னோடு சேர்த்துக்கொள்’ என்கிற நிபந்தனையோடு இறைவனை அவர் காதல் செய்கிறார்.

“உனக்காக தான் அம்மா அப்பாவை விட்டு வந்தேன்; உனக்காக தான் ஊரார் கேலிகளையும் பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டு இருந்தேன்” என்பதற்கும்; “உனக்காக தான், உன்மேல் கொண்ட ஆசையினால் தான் உலக ஆசையை துறந்தேன்” என்பதற்கும் பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை.இரண்டுமே காதலின் உட்சபட்ச நிலை.தலைவனிடம் ஒன்றாக கலந்து விட வேண்டும் என்கிற நிலை.இறைவனிடம் ஒன்றாக கலந்து விட வேண்டும் என்கிற நிலை.

merging- extreme state of love.அன்பே சிவன் என்கிற அந்த சிவனின் அருவுருவ வழிபாடான லிங்க வடிவமும் அதையே (merging) வெளிப்படுத்துகிறது.

“இனிப்படு கின்ற
தமையாதால்”
என்கிற வாசகத்தில் இனி என்னை பேசுவதற்கு என்ன இருக்கின்றது;
இனி இந்த உலகத்தில் என்ன இருக்கின்றது;
என்கிற உணர்வுகள் வெளிப்படுகிறது. காதலனை தவிர்த்து தான் அதற்கு முன் காதலித்த அனைத்தின் மீதான பற்றையும் துறந்துவிட்ட நிலை.

பேசினா பேசட்டும் என்கிற நிலை.மற்றவர்களுக்காக நம் ஆசைகளையும் கனவுகளையும் நாம் ஏன் துறக்க வேண்டும் என்கிற துணிவு.மாணிக்கவாசகரின் ஆசை, இறைவன் மீதும் துணிவு, உலக பற்றை துறப்பதிலும் இருந்து இருக்கின்றது.

இனிமேல் என்னை, என்ன புதிதாக பேசிவிடுவார்கள்?
இனிமேல் எனக்கு இங்கு என்ன வேலை இருக்கின்றது?
இனிமேல் நான் ஏன் இங்கு இருக்கு வேண்டும்?

வயதானவர்கள், வாழ்க்கையை வாழ்ந்து கடந்துமுடித்தவர்களிடம் இத்தகைய உணர்வுகள் வெளிப்பட்டு பார்த்து இருப்பீர்கள். ஞானம் அடைந்து இறைவன் மீது பற்றுக்கொண்ட மாணிக்கவாசகர் வாழ்க்கையில் வாழ்வதற்கு என்ன இருக்கின்றது? என்று இறைவனிடம் தன்னை சேர்த்துக்கொள்ள சொல்லி கேட்கின்றார்.

“இங்க பாரு, எல்லாரும் என்னை ஏசுறாங்க; இதெல்லாம் நிறைய கேட்டுட்டேன். ஆனாலும், உன்னை அடைய வேண்டும் என்கிற ஆசையில் இப்படி பட்டையோடு திரியிறேன். என்னை கூட்டிட்டு போ”

இப்படியெல்லாம் மாணிக்கவாசகர் கேட்டாலும் இறைவன் எப்படி கூட்டிச் செல்வார்! பாதையை காண்பித்து;இறைவனை சேருவதற்கான வழிவகைகளை உருவாக்கி; தானாக இறைவனை நோக்கி வர செய்து சேர்த்துக்கொள்வார்.

(மாணிக்கவாசகர்: மக்களே! என் நிலைமையை விடுங்க அந்த பொண்ணு நிலைமையை நினைத்து பாருங்க)

இத்தனை தூரம் எழுதிவிட்ட பின் இந்த கட்டுரையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் நிற்கிறேன். ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்ட பின் அங்கே முடிவு என்ற ஒன்று எங்கே இருக்க போகிறது!அதுவும் முடிவில்லாத இறைவனோடு கலந்துவிட்ட பின். காதலால் முடிவில்லாமல் தொடரும் உயிர்களை போல். (நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவாது இன்னொரு உயிர் தான டி -credits கமலஹாசன்)ஒன்றிவிடுவது என்பது முடிவில்லாத நிலைக்கே தான் நம்மை செலுத்துகிறது.

இந்த கட்டுரையோடு ஒன்றிவிட்ட மனம் எப்படி முடிக்கவேண்டும் என்பதை அறியாமல், முடித்துக்கொள்ளாமல் இப்படியே நிறுத்திகொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *