சமீபத்தில் மக்களவை உறுப்பினரான சு.வெங்கடேசன் அவர்கள் தன் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொரோன தடுப்பு மருந்து வாங்குவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தாக செய்திகள் வெளி வந்தது.
தொகுதி மேம்பாட்டு நிதி என்பது தொகுதியின் உட்கட்டுமான வசதிகளை பெருக்குவதற்கு மட்டுமே பயன்படக்கூடியதாகும். இந்த நிதியானது உறுப்பினரின் பரிந்துரையின் பெயரில் அந்த அந்த மாவட்ட நிர்வாகங்களின் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும். மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர் ஒருவரின் கீழ் 5 வருடத்திற்கு 5 கோடி ஒதுக்கப்படுகிறது.
இந்த தொகை ஒரு வகையில் மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் மாநிலங்களுக்கு வழங்கப்படுவது. மத்தியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் மத்திய அரசாங்கம் மோசம் செய்கிறது என்று மாநில கட்சிகள் குற்றம் சாட்டும் பொழுது மத்திய அரசாங்கம் மூலம் வரும் முதலீடுகள் மற்றும் இது போன்ற தொகுதி மேம்பாட்டு நிதிகளை யாருமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தில் (MPLAD) உள்ள குறைபாடுகள்:
மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்து 788 உறுப்பினர்கள் கீழ் வருடத்திற்கு ஒவ்வொருவருக்கும் 5 கோடி என 5 வருடத்திற்கு மொத்தமாக 19,700 கோடி தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுகின்றது. மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்து தமிழகத்திற்கென்று மட்டும் வருடந்தோறும் 285 கோடி என 5 வருடங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. நிர்வாக ரீதியிலான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தாலும் நிர்வாகத்தில் உள்ள நிரப்பப்படாத இடைவெளிகளாலும் இந்த திட்டம் மக்களுக்கு சரியான வகையில் பயன்படவில்லை என்றே கூறலாம்.
அதோடு, அநேகமான உறுப்பினர்கள் கட்சி பாகுபாடின்றி, இந்த தொகையை அவர்கள் பதவி காலம் முடியும் தருவாயிலேயே பேருந்து நிற்காத இடத்தில் பேருந்து நிறுத்தம் கட்டுவது, பராமரிக்க ஏற்பாடுகள் செய்யாமல் தண்ணீர் மேல் நிலை தொட்டிகள் கட்டுவது போன்ற திட்டங்களை தேர்தலை ஒட்டி செய்வதாகவும் ஒரு குற்றசாட்டு பரவலாக இருக்கின்றது. அது அல்லாமல், இந்த திட்டத்திலும் ஊழல் இல்லாமல் இல்லை என்று மக்கள் சலித்துக்கொள்கிறார்கள்.
சில ஆய்வுகளின் படியும், சில CAG அறிக்கைகள் படியும் இந்த நிதி சரியான வகையில் செலவிடப்படுவதில்லை என்றும் அறியமுடிகிறது. இத்திட்டத்தின் கீழ் சில கட்டுமானங்களுக்கு(பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், அரசு அலுவலங்கள், தனியார் கல்வி நிலையங்கள்) அனுமதி இல்லை அவைகளும் கூட இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது. மசூதிகள் தேவாலயங்ககள்,கோவில்கள் கூட கட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது. 2004-09 கால கட்டத்தில் மட்டும் இத்திட்டத்தில் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 15049 வேலைகளில் 14828 பயனாளர்களை சென்றடையாமல் இருந்திருக்கின்றது.
மேற்சொல்லப்பட்டது போன்ற பிரச்சனைகளை (CAG அறிக்கைகள் மற்றும் பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியதை மேற்கோள் காட்டி) 2019 -ல் மாநிலங்களவை இணைத்தலைவர் (Deputy Chairman) ஹரிவன்ஸ் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண உறுப்பினர்கள் அவர் அவர் யோசனையை தெரிவிக்கலாம் என்று கடிதம் எழுதியிருந்தார்
இந்நிலையில் தான், கொரோன தோற்று ஏற்பட்ட போது மத்திய அரசாங்கம் உறுப்பினர்களின் ஊதியத்தில் 30 சதவீதம் குறைத்ததோடு இந்த MPLAD திட்டத்திற்கான நிதியை தற்காலிகமாக இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து அதனை கொரோனா பெருந்தொற்று மேலாண்மைக்கு பயன்படுத்த முடிவு செய்தது. இதன் மூலம் 7500 கோடி மிச்சமாகும் என்று தெரிவித்து இருந்தது. இதற்கு திருமாவளவன் போன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.இந்த MPLAD திட்டத்திற்கான நிதியை தற்காலிகமாக இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்ததன் படி இந்த நிதியை கொண்டு கொரோன சோதனை கருவிகள் வாங்குவதற்கும் ஆக்சிஜன் ஆலைகள் நிறுவவுவதற்கும் மேலும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.
நிலைமை இவ்வாறாக இருக்கையில் தான், மக்களவை உறுப்பினர், சு.வெங்கடேசன் அவர்கள், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியை தொகுதி மக்களுக்கு தடுப்பூசி வாங்க பயன்படுத்த அனுமதி கோரியிருக்கின்றார். நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு மத்திய அரசாங்கம் தடுப்பூசி வழங்கி வருவதும் மாநில அரசுகளை 18-44 வயத்துக்குட்பட்டோருக்கு தடுப்பூசிகளை நேரடியாக வாங்கிக்க கொள்ளச்சொன்னதும் குறிப்பிடத்தக்கது. 4 கோடி தடுப்பூசி வாங்குவதற்கு முதல் மாநிலமாக உத்தரப்பிரதேஷம் ஒப்பந்தம் கூறியிருந்த நிலையில் சில உற்பத்தியாளர்கள் அந்த மாநில அரசிற்கு பதிலளித்துள்ளனர் முதல் மாநிலமாக உற்பத்தியாளர்களளை அணுகியது அந்த மாநிலத்திற்க்கு ஒரு அனுகூலமாக அமையக்கூடும் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவித்து இருக்கின்றது.