அவரை நான் அதற்கு முன்பே எங்கள் நிறுவனத்தில் பார்த்திருக்கிறேன், ஆனால் அவர் பெயர் கூடத் தெரியாது. ஒரே நிறுவனத்தில் தான் பணி செய்கிறோம் என்றாலும் “நிறுவனத்தில் அவரது பணி என்ன?” என்கிற விவரம் கூடத் தெரியாது ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.
எண்ணெய் நிறுவனங்களின் பொறியியற் கட்டுமானப் பணிகளை செய்யும் இந்த நிறுவனத்திற்குள் நான்கு வருடத்திற்கு முன்பு நான் பணியில் சேர்ந்தபோது எனக்கு 26 வயது. நான் பிறந்த வருடத்தில் (1990-ல்) இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார் அவர். நியோ என்கிற அந்த 66 வயது இளைஞரை நான் கவனிக்க ஆரம்பித்தபோது என்னை நானே கவனிக்க ஆரம்பித்தேன் என்று சொன்னாலும் அது மிகையாகாது.
ஓரு வருடத்திற்கு முன்பு நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கட்டுமானப் பணி அதில் பணிபுரிந்து கொண்டிருந்த அனைத்து பணியாளர்களுக்கும் ,எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. விரைந்து முடிக்க வேண்டும், அதிகம் செலவு செய்யக் கூடாது, சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று பல வகைகளில் அழுத்தம். அழுத்தத்தைத் தாண்டி அழுத்தம் கொடுத்து வேலையை செய்து கொண்டிருந்தோம். எங்கள் அனைவரது நேரத்தையும் முழுமையாக ஆக்கிரமித்த திட்டப் பணி (Project) அது. திட்ட மேலாளர் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை தங்களது சிறப்பான வேலைத்திறனைக் கொடுத்து வேலை செய்து கொண்டிருந்தார்கள், ஆனாலும் அழுத்தம் குறைந்தபாடில்லை, வேலையும் முடிந்த பாடில்லை. யாவரும் தங்கள் தகுதிக்கு மீறிய திறனைக் கொடுத்து பணி செய்தும் ஏதோ ஒன்று போதவில்லை. சிரிக்க மறந்து ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டும் கடிந்து கொண்டும் பணி செய்து கொண்டிருந்த நாட்கள் அவை.
எங்களது திட்ட மேலாளரால் (Project manager) சரியாக பணியை முடிக்க முடியவில்லை என்று வாடிக்கையாளர்(client) தரப்பில் எங்கள் நிறுவனத்தில் புகார் ஒன்று வைக்கப் பட. அதன் காரணமாக கூடுதல் மேலாளராக வருகிறார் அவர் .
அவர் தான் நியோ, நமது திட்டப்பணிக்கு கூடுதல் மேலாளராக வந்திருக்கிறார் என்றார்கள் என்னுடன் பணிபுரிந்த சக பொறியாளர்கள் நானும் அவரும் ஒருவரையொருவர் நேரடியாக அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பும் நேரமும் அமையவில்லை, நிர்வாக அமைப்பில் எனக்கும் அவருக்கும் இருந்த இடைவெளியும் இதற்கு காரணம்.
நியோ என்னை அவரது புன்னகையால், செயல்களால், வார்த்தைகளால் அவரை நோக்கி ஈர்த்தார். அது நாள் முதலாகவே அவரை நான் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். அவரை கவனிக்கத் துவங்கியதால் என்னையும் கவனிக்க ஆரம்பித்தேன்.
நான் என்ன செய்து கொண்டிருந்தேன்
தினசரி, எதுவோ சரியில்லாதது போன்ற ஒரு உணர்வுடன், நான் எல்லாவற்றையும் சரியாகத் தான் செய்கிறேன், எப்படி எல்லாமும் தவறாகிறது என்ற கோபத்துடன், என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய விசயங்கள் என் கட்டுக்குள் இல்லை என்ற வருத்தத்துடன், என் கை கொள்ளாத அளவிலான காரியங்களில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு என் பிடி தளர்ந்திருப்பதாக நினைத்து அவநம்பிக்கை கொண்டபடி., வாடிக்கையாளர் தரப்பில் இருந்து எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும், புகார்களையும் ஏற்க மறுத்து அவர்களிடம் வாததத்திற்கு நின்று கொண்டு இருந்தேன்.
அதே வேளையில் நியோ என்பவரோ எங்கள் திட்டப்பணி நடக்கும் இடத்திற்கு தனது காரை தானே ஓட்டியபடி வருகிறார். சின்னச் சின்ன வார்த்தைகளால் எல்லோரையும் சிரிக்க வைக்கிறார். வாடிக்கையாளர் தரப்பில் இருந்து எங்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களையும் குறைகளையும் நக்கலும் நையாண்டியுமாக எங்களிடம் சொல்லி அந்த அவச்சொற்களால் அவநம்பிக்கை கொண்டிருக்கும் எங்களை உற்சாகப் படுத்துகிறார்.
அவர் பணியிடத்திற்கு வந்தபிறகு அவரைப் பார்த்துவிட்டாலே , ஏதோ அதிசயத்தைக் கண்டதுபோல் பணி அழுத்தம் குறைந்து காணப்படுகிறேன், நான் மட்டுமல்ல மற்ற மேலாளர்களும் பொறியாளர்களும் கூட.அவர் வந்தபிறகு யாருடைய பணி சுமையும் குறையவில்லை, அழுத்தம் மட்டும் ஏதோ ஒரு வகையில் குறைந்து இருந்தது.
அந்த திட்டப் பணி துவங்கியபோது என்னைச் சுற்றி எல்லாமே எதிர்மறையாக இருப்பது போன்ற உணர்வுடன் இருந்தேன். அந்த எதிர்மறை சூழலுக்குள் வந்து சிக்கிக் கொண்டவர் தான் நியோவும்.
கட்டுப்பாடற்று எல்லா திசைகளிலும் சிதறி ஓடிக்கொண்டிருந்த ஆற்று வெள்ளத்தை, சீராக அதே நேரத்தில் வேகம் குறையாமல் ஒரு நிதானத்துடன் ஓட வைக்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, “இவரால் எப்படி முடிகிறது!” என்ற ஒற்றைக் கேள்வி என் மனம் முழுதும் வியாபித்திருந்தது.
அவரைப் போலவே, எப்பேர்ப்பட்ட எதிர்மறைச் சூழலையும் நேர்மறையானதாக மாற்றத் தக்க ஒரு ஆளுமையாக நானும் வளர வேண்டும் என விருப்பம் கொண்டது என் மனம்.
எனது விருப்பப் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் அந்த விருப்பத்தை எப்படி நிறைவேற்ற வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் எனக்கு எந்தவித திட்டமுமில்லை.
திட்டப்பணியில் செயல்பாட்டில் இருந்த குறைபாடுகளையும், சிக்கல்களையும் சரிசெய்துவிட்டு. அடுத்த சில மாதங்களில் நியோ தனது பணி ஓய்வை அறிவித்தார்
அந்த திட்டப்பணியில் எனக்கு நியமிக்கப்பட்டப் பணி நிறைவடைந்த காரணத்தால் நான் வேறு ஒரு திட்டப் பணிக்கு மாற்றப்பட்டேன். நியோ அவர்களைப் போல எதிர்மறை சூழலை நேர்மறையானதாக மாற்றும் ஆளுமையாக பரிணமிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் பலனாக என்னுடைய பழைய பரிணாமத்தின் புதிய வடிவமாக தற்போதைய திட்டப் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இந்தப் பணி இப்போது நிறைவடையும் நிலையில் இருக்கின்றது, இன்று மீண்டும் நியோ, ஒரு ஒளிப்பதிவின் வழியாக எங்களை சந்திக்க வந்திருந்தார், அவரால் எப்படி எதிர்மறை சூழல்களை தான் விரும்பும் சாதகமான சுழலாக மாற்ற முடிகிறது என்பதன் ரகசியத்தை சொல்லும் விதமாக.
கடந்தமுறை பணியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டுச் சென்றவர், இந்த முறை உலக வாழ்க்கையிலிருந்து ஓய்வை அறிவிக்க வந்தார். அந்த ஒளிப்பதிவில் (வீடியோவில்) அவர் பேசியது கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அவர் பேசியதன் சுருக்க வடிவம்:
“எனது சகோதரர்களே, சகோதரிகளே, எனதருமை நண்பர்களே, இந்த வீடியோ பதிவை நீங்கள் பார்க்கும் இந்த நேரம், நான் இந்த உலகை விட்டுச் சென்றிருக்கக்கூடும். நான் இதுவரை பல திட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கின்றேன் நான் உங்களுக்கு மனவருத்தத்தை தந்து இருந்தால் அதற்காக என்னை மன்னியுங்கள், நான் உங்களுக்கு ஏதேனும் நல்லது செய்து இருந்தால் அதை நீங்கள் உங்கள் மனதோடு வைத்துக்கொள்ளுங்கள். எனது ஓய்வானது வாழ்வின் ஒரு பகுதியே உங்கள் எல்லாரையும் விட கொஞ்சம் முன்னதாக என் ஓய்வு இருக்கிறது, என்னுடன் படித்த என் தொடர்பில் இன்னமும் இருக்கும் நண்பர்கள் மன்னித்துக் கொள்ளுங்கள், இனி நான் நம் சந்திப்புகளில் கலந்து கொள்ளப்போவதில்லை, நான் செய்தது சரியோ, தவறோ அது பற்றி எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை ஏனென்றால் இனி என்னால் அதை எதுவும் செய்ய முடியாது. இந்த வாய்ப்பில் உங்கள் அனைவருக்கும் கடைசியாக நான் சொல்லிக்கொள்வது I Love You, Bye, Bye”
நியோவால் எப்படி முடிந்தது?
அவரின் இந்த பேச்சு எனது கேள்விக்கான விடையாக இருந்தது.
“உள்ளதை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நகர்ந்து கொண்டு இருப்பது”, அது தான் விடை “நியோவால் மட்டும் எப்படி முடிகிறது” என்னும் கேள்விக்கான விடை.
மரணத்தை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு போய் வருகிறேன் என்று ஒரு விடியோ பதிவு செய்து நண்பர்களுடனும், உறவுகளுடனும் பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம்.
நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களே நம் கோபத்திற்கும் சோகத்திற்கும் மற்றும் பகவத் கீதை சொல்லும் அனைத்து விதமான ரஜோ மற்றும் தமோ குணங்களுக்கும் காரணமாக அமைகிறது.
ரஜோ மற்றும் தமோ குணங்கள் தான் கோபம், பதட்டம், அச்சம், மனக்குழப்பம், அறியாமை, பொறாமை என்றெல்லாம் வடிவெடுத்து நம்மை ஆட்டுவிக்கிறது.
எதிர்மறை சூழலை , நேர்மறையான சூழலாக மாற்றிக்கொள்வதற்கு நாம் செய்ய வேண்டியது “உள்ளதை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்ளல்” “accept it in a way it is” இந்த வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு புரிந்தது போலவே உங்களுக்கும் புரிந்து இருக்கும் ஆனாலும் ரஜோ மற்றும் தமோ குணங்கள் நம்மை ஆட்டுவிக்கிறது.
காரணம் இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை நாம் உணரவில்லை. வெறுமென புரிந்து கொண்டுள்ளோம், புரிந்து கொண்டது மறந்து போகும் உணர்ந்து கொண்டது மறப்பதில்லை.
உதாரணமாக: எனக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ, சோகம் வருகிறதோ அப்போதெல்லாம் நான் என்னை இழக்கிறேன் கடந்த காலத்தில் நிகழ்ந்த மாற்ற முடியாத விஷயங்களே கோபத்திற்கும் சோகத்திற்கும் காரணமாக அமைகிறது. ஒருவர் நம்மை இகழ்ந்தவுடன் , அதற்கு அடுத்த நொடியில் நமக்கு வரும் கோபத்திற்கும் முன்னால் அவர் இகழ்ந்தது கடந்த காலம் ஆகிவிடுகிறது.
“அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை எல்லாம் தப்பாவாகவே நடக்குது”, “நான் நியாயமாகத் தானே இருக்கிறேன் எனக்கு ஏன் இப்படி நடக்குது”.
இப்படி நாம் புலம்பும் அத்தனையும் நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நம்மை பற்றிய உண்மைகளே. இந்த உண்மையை இன்று நியோ என்னும் கர்ம யோகி எனக்கு நினைவு படுத்தியிருக்கிறார். நியோ பகவத் கீதையில் சொல்லப்பட்ட கர்ம யோகம் என்ற அந்தப் பகுதியை படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் முடிவுகளைப் பற்றி கவலை கொள்ளாமல் செய்யும் செயல்களில் கவனம் செலுத்தும் அவர் ஒரு கர்ம யோகி தான்.
எல்லோரும் அவர் இன்று நம்முடன் இல்லை என்கிறார்கள் கீதையில் ஒரு வரி இருக்கிறது “நீயும் நானும் இல்லாமல் இருந்த காலம் என்று ஒன்று எப்போதும் இருந்தததில்லை” (கீதை ஒவ்வொரு நாளும் புது பாடங்களை தருவதுண்டு நீண்ட காலமாய் மீண்டும் மீண்டும் வாசித்தாலும் சில விஷயங்களை வாழ்கை நிகழ்வுகளே நமக்கு கற்றுத் தருகிறது “நீயும் நானும் இல்லாமல் இருந்த காலம் என்று ஒன்று எப்போதும் இருந்தததில்லை” இந்த வரியில் இருக்கும் உண்மையை என் தந்தையின் இழப்பிற்குப் பின் படித்த போதே உணர்தேன்.).
ஒருவன் கர்ம யோகியாக எப்படி இருக்க முடியும் என்பதை கீதை அறியாத நியோ வாழ்ந்து காண்பித்து சென்று இருக்கிறார் கர்ம யோகி ஆவதற்கு முதல் படி ஏற்றுக்கொள்வது.
எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்னது போல் ஞானிகள் காட்டுக்குள் காவி கட்டியவர்களாய் மட்டுமே இருக்க மாட்டார்கள் அத்துடன் விழிப்புணர்வுடன் உடலை விடுவது நியோ போன்ற கர்மா யோகிகளால் முடிவதற்கான காரணம் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வது.
பாபா திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் “ஆசை, பயம் இது இல்லாதவர்கள் கடவுளை அடையலாம்” என்று. எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒருவரிடம் ஆசை பயம் இரண்டும் இருக்க முடிவதில்லை. விழிப்புணர்வோடு உடலை விட்டு கடவுளை அடைய தியானம் செய்ய வேண்டியதில்லை ஏற்றுக்கொள்ள பழகினால் போதும், நியோ என்னும் ஞானி நினைவு கூறும் பாடம் இது தான்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.