வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.
ஆன்மீகம் பற்றிய ஒரு தொடர். அதில் இப்படி ஒரு தலைப்பு. இது தேவை தானா? இதை வேறு எப்படியும் சொல்லியிருக்க முடியாதா?எல்லாவற்றிக்கும் ஒரு தேவை இருப்பது போல இந்த தலைப்பிற்கும் ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது.
கட்டுரையை முழுதும் படித்துவிட்டு மிகச் சரியாக பொருந்த கூடிய உங்களுக்கு தோன்றும் தலைப்பை சொல்லுங்கள்.
நம்முடைய மனம் இருக்கின்றதே! அதைவிட, யாரும்; எதுவும்; சாமர்த்தியமாகவும் திறமையாகவும் செயல்பட முடியாது. ஞாயிற்றுக்கிழமை பிராத்தனைக்கூட்டத்தில் நீங்கள் இருக்கும் பொழுதே உங்களை ஹாலிவுட் வரை அழைத்து செல்லும். நீங்கள் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் பொழுது, ‘உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் இருக்கை சும்மா தானே இருக்கு’ என்று அங்கே ரஹ்மானையும் இளையராஜாவையும் கொண்டு வந்து அமர்த்திவிடும்.
7ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த பொழுது, ஐந்தாவது period கணக்கு period. அதாவது, சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்திற்குள்ளான period. எப்படியாவது கவனிக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ,”அதெப்படி மனித அறிவால் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இடைவேளை நேரம் போக சுமார் 8 மணி நேரம் பாடம் கவனிக்க முடியும்” என்று என்னை நானே நியாயப்படுத்திக்கொண்டு மனதை அதன் போக்கிற்கு விட்டு விடுவேன்.
12ம் வகுப்பின் போது, நம்ம பாரதியார் பாட்டை ரீமிக்ஸ் பண்ண வேண்டும் என்கிற நினைப்பில், அதுக்கு rhythm எப்படி வர வேண்டும் என்று , TR போன்று வாயில் டிரம்ஸ் வாசித்து கொண்டு இருந்த போது head master பார்த்துவிட்டு “என்ன டா பண்றன்னு” கேட்டதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.
இப்பொழுது அங்கிருந்து அப்படியே என்னுடன் 2005-06 academic year க்கு வந்தீர்கள் என்றால். நான் பத்தாம் வகுப்பில் இருக்கின்றேன். matriculation syllabus. period வரையறைகள் எல்லாம் கிடையாது. இன்னிக்கு physics ன்னா நாளைக்கு maths இது தான் கணக்கு.
ராஜேஸ்வரி என்கிற ராஜி மிஸ், ரொம்ப நல்ல மிஸ். அன்றைய தேதிக்கு 5000 ரூபாய் கூட சம்பளமாக பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால், அத்தனை ஈடுபாடோடு அந்த ஆசிரியர் பணியை செய்தார்கள்.
எப்போதும் போல், எல்லா maths class களையும் நான் கவனிப்பதில்லை. ரெண்டு period கவனித்து இருந்தால், ரெண்டு period மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்து பேட்டி கொடுத்து கொண்டு இருப்பேன். இந்த நிலையில், 1st பேப்பர் 2nd paper என்று, கணக்கு பாடம் இரண்டு பிரிவுகளாக இருந்தது.
எப்போதும், இப்படியான கவனச்சிதறல்கள் எனக்கு பிரச்சனையாக இருந்ததே இல்லை. எடுத்துக்காட்டு கணக்குகளை பார்த்து நானே கற்றுக்கொள்வேன், அதில் சிரமம் இருந்தாலும் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது. இல்லாவிடில் tution இல் இருக்கும் சீனியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று இருந்து விடுவேன்.
இந்த சூழலில்,அவ்வப்போது ஒரு தீடீர் ஞானம் பிறக்கும். அப்படித்தான் அன்றும் நடந்தது. school prayerக்கு முன்பாக நடந்த கணக்கு வகுப்பில் ராஜி மிஸ் trigonometry இல் ஒரு பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். ஆயிரத்து ஒன்றாவது முறையாக “இனிமே எல்லா maths class உம் கவனிக்கிறோம்” என்கிற ஞானம் பிறந்தது. ஞானம் பிறந்தவுடன் முழுமை அடைவதில்லை.
பல சந்தேகங்களையும் கேள்விகளையும் தாண்டித்தான் அது முழுமை அடைகிறது.எனக்கு சந்தேகம் வந்தது, “மிஸ் ஒரு doubt, அதெப்படி miss வந்துச்சுன்னு” ஒன்னு கேட்டுப்புட்டேன்.
ராஜி மிஸ் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. உச்சு கொட்டி, “எல்லாம் prayer க்கு கிளம்புங்க டா” என்று சொல்லிவிட்டு பாடத்தை பாதியில் நிறுத்திவிட்டார்.
அது ஒன்றுமில்லை, “அதற்கு முந்தைய வகுப்பில், நான் மாநில அளவில் முதல் இடம் பிடித்து பேட்டி கொடுத்து கொண்டு இருந்த போது பாடத்தை கவனித்து இருந்தால் எனக்கு அந்த சந்தேகம் எழுந்து இருக்காது. அதை அப்பவே சொல்லிக்கொடுத்துட்டாங்க நீ இப்ப வந்து கேக்கிற!” என்றான் நண்பன் ஒருவன்.
எப்போதும் போல, நான் அந்த கணக்கை கற்றுக்கொள்ளாமல் எல்லாம் விடவில்லை. அதே வகுப்பில், எந்த வகுப்பையுமே கவனிக்காத நண்பர்களும் எனக்கு இருக்கத்தான் செய்தார்கள்.
முந்தைய வகுப்பில் என்ன நடந்தது என்பதை அறியாமல், நான் சந்தேகம் கேட்டது போல, தூக்கத்தில் இருந்து எழுந்தது போல் ஆதியும் அந்தமும் அறியாமல், சந்தேகத்தை எழுப்புகிறவர்கள் தான் நம் பாரத மணித்திருநாட்டில் தங்களைத்தாங்களே பகுத்தறிவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் பெரியாரியவாதிகளாக இருக்கின்றார்கள்.
ஒரு பகுத்தறிவாளி என்பவன், நிச்சயம் ஆன்மீகவாதியாக மட்டும் தான் இருக்க முடியும். ஒரு ஆன்மீகவாதி எதையும் பகுத்தும் சேர்த்தும் அறிகின்றான்.அவன் தன் சந்தேகத்தை எப்படியேனும் யாரிடமேனும் கேட்டு தெளிவு அடைந்து விடுகிறான்.
தெளிவு அடையாதவர்கள் அந்த இடத்திலே நின்று விடுகிறார்கள் பெரியாரியவாதிகளாய்.
இன்றைய இந்த பெரியரியவாதிகள், வாழ்த்தும் அல்லது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளும் விவேகானந்தர் போன்றவர்களே பகுத்தறிவாளிகள். விவேகானந்தருக்கும் சந்தேகம் எழுகிறது.அந்த சந்தேகங்களை கேள்விகளாய் மட்டும் வைத்துவிட்டு அவர் தன்னை தானே பெரிய அறிவாளியாக காட்டிக்கொள்ளவில்லை.
விவேகானந்தருக்கும் “கடவுள் இருக்காரா? இருக்கார் ன்னா எங்க இருக்கார்?” இப்படியான கேள்விகள் எல்லாம் எழுந்து இருக்கின்றது.
முந்தைய வகுப்பில் நடத்தியதை கவனிக்காமல் போனாலே ஒன்றும் புரியாது. ஆதி அந்தம் இல்லாத கடவுளைப் பற்றிய புரிதல் மட்டும் எப்படி சுலமாக சாத்தியமாகும்.கணக்கு பாடம் மாதிரி தான். இதில் பகுத்தறிவாதிகள் நான் ஏன் algebra trigonometry எல்லாம் படிக்க வேண்டும் என்று கேட்டுவிட்டு நின்றுவிடுகிறார்கள். கடைசிவரையில் அந்த கணக்கு எங்கு எப்படி பயன்படுத்தப்படும் நாம் அதை எப்படி எங்கு உபயோகப்படுத்தலாம் என்பதை அறியாமல் இருந்துவிடுகிறார்கள்.
விவேகானந்தர் கடவுள் இல்லை என்று கொடி பிடித்துக்கொண்டு நிற்கவில்லை. செருப்பை வீசுகிறவர்கள் இரண்டு செருப்பையும் வீசிவிட்டால், “நமக்கு ஒரு ஜோடி செருப்பு கிடைக்கும்” என்று நினைத்து கடவுள் இல்லை என்கிற கோஷம் எழுப்பவில்லை.
விவேகானந்தர், அன்றைய தேதியில் பாரத்தில் இருந்த சமய நம்பிக்கைகள் மீதான தன் சந்தேகங்களை எழுப்புகிறார். நண்பர்கள், பெரியவர்கள் என்று எல்லாரிடமும், தன் கேள்விக்கான பதிலை தேடுகிறார். கடைசியில், கடைசியில் கடவுளிடமே டியூஷன் சேர்கிறார். அந்த tution இல் இருந்த சீனியர் தான், அவரை கடவுளிடம் சேர்த்துவிடுகிறார்.
அந்த சீனியர் தான் ராம கிருஷ்ண பரமஹம்சர். இந்த இருவரின் சந்திப்பை பற்றி அநேகமான கருத்துக்கள் நிலவி வருகிறது.ஆனால், அதில் உண்மை என்னவெனில், விவேகானந்தர் சாமானியமாக ராம கிருஷ்ணரை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு கார் வாங்க செல்கின்றோம், ஓட்டிப்பார்க்க சொல்கிறார்கள்.அந்த காரில் என்ன இருக்கு ஏது இருக்கு என்று பகுத்து அறிந்து அதில் எது நமக்கு ஒத்து வருகிறதோ அதைத்தான் வாங்குகின்றோம். அது போல ராமகிருஷ்ணரையும் அவர் கருத்துக்களையும் பகுத்தறிந்து,அதன் பின்பு தான் விவேகானந்தர் ராமகிருஷ்ணரை ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்.
இறைவன் எல்லாருள்ளம் இருக்கின்றான்; உன்னுடைய நண்பனுக்குள்ளும் இருக்கின்றான்; உன்னுடைய எதிரிக்குள்ளும் இருக்கின்றான். இது தான் விவேகானந்தர் பெற்ற பால பாடத்தின் சுருக்கம்.
நாத்தீகம் என்பதை ஆன்மீக தேடலின் படி நிலையாக அல்லாமல், அரசியல் நோக்கங்களுக்காக கொள்கைகளாக பரப்புபவர்கள் எப்போதும் பதிலை தேடுவதில்லை. பெரியாராக அறியப்படும் ஈ.வே.ராவும் கூட திருமந்திரமோ திருக்குரானோ பகவத் கீதையோ பைபிளோ படித்து அறிந்து இருக்கவில்லை.
எல்லாரையும் சமமாக காண வேண்டும் என்கிற சமூக நீதி பாடமும், இறைவன் ஒருவனே என்கின்ற பாடமும், அவர் அவர் விருப்பத்திற்கேற்ற நம்பிக்கையின் படி செயல்படலாம் என்கிற வழிகாட்டுதலும் எல்லோரையும் அடக்கிய secularismமும் நாத்தீவாதிகளின் கேள்விகளுக்கான விடைகளும், பகவத் கீதையிலும் திருமந்திரத்திலுமே இருக்கின்றது. பகவத் கீதையில் கிருஷ்ணரின் உபதேசத்தை அர்ஜுனன் அப்படியே வேதவாக்காக எடுத்து கொள்ளவில்லை. என்னை ஏன் நீ குழப்பமடைய செய்கிறாய் என்று கேள்விகள் மேல் கேள்விகளாக ஆடுகிறான்.
யாரோ சொல்வதை பிடித்துக்கொண்டு நானும் பகுத்தறிவாளி என்று பிதற்றுவோரின் அத்தனை கேள்விகளுக்கும் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய பாரத பழம் பெரும் நூல்களில் தெளிவான பதில்கள் இருக்கவே செய்கின்றது.
ஆனால், ஆ.ராசா போன்ற அரசியல்வாதிகளுக்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் நவீன காலத்திலும் கடைபிடித்த தீண்டாமைக்கு சமய நம்பிக்கைகள் மீது பழி சுமத்துபவர்களுக்கும், முன்பு என்ன சொல்லப்பட்டு இருக்கின்றது. முந்தைய வகுப்பில் என்ன நடந்தது என்பதை பற்றி தெளிவு தேவைப்படுவதில்லை. அவர்களின் தீர்மானமான சந்தேகங்களுக்கு பதில்களும் தேவைப்படுவதில்லை.
நாதீத்தகம் என்னும் பெயரில் அரசியல் பிழைப்பு நடத்த இவர்கள் எப்போதும் வெறுப்பையே தான் பரப்புவார்கள்.
இப்படியெல்லாம் நடக்கும் பொழுது, இந்த பெரியாரியவாதிகள் மீது கோபம் வரும்.
சமயங்களில் சந்தேகம் வரும்.”ஏன் இவர்கள் பகுத்தறிவு என்னும் பெயரில் முட்டாள்த்தனங்களையும் பொய்களையும் மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள்?” என்று. நம்முடைய எல்லா சந்தேகங்களுக்கும் என்றோ யாரோ ஏற்கனவே விடை அளித்து இருப்பார்கள்.
எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுள், இந்த பொய்யர்களுக்குள்ளும் இருக்க தானே செய்வார்! அப்படியென்றால் இவர்களின் வேலை தான் என்ன?
“யோ யோ யாம் யாம் தநும் ப⁴க்த: ஸ்²ரத்³த⁴யார்சிதுமிச்ச²தி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்²ரத்³தா⁴ம் தாமேவ வித³தா⁴ம்யஹம்”
யார் எந்த தேவர்களை வழிபட விரும்புகிறார்களோ அவர்களுக்கு அந்த தேவர்கள் மீதான நம்பிக்கையை நானே வலுப்படுத்துகிறேன்.
பகவத் கீதை 7-21
நீங்கள் இயேசு,சாய் பாபா, மாரியம்மா என்று எந்த தெய்வத்தை நம்பினாலும் அந்த நம்பிக்கை இந்த பிரபஞ்சத்தின் மேலான ஒரு சக்தியால்(கடவுளால்) தான் உங்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது. நீங்கள் விரும்பும் வடிவில் உங்கள் நம்பிக்கையை அவரே பலப்படுத்தி, அவரே உங்கள் வேண்டுதல்களை பூர்த்தி செய்கின்றார். கடவுள் இல்லை என்பதும் கூட ஒரு வகை நம்பிக்கை தான். ஒரு வகையில் அது தான் உச்ச பட்ச மூட நம்பிக்கை.
இப்படியான நம்பிக்கைகளும், அரசியல் இலாபங்களுக்காக கொள்கை எனும் பெயரில் மற்றவர் நம்பிக்கைகளில் மூக்கை நுழைப்பவர்கள் செயல்களும் கூட கடவுளின் செயலாகவே தான் பார்க்கப்பட வேண்டும். இறைவன் படைப்பில் எல்லாவற்றிற்கும்; இறைவனே கலந்து இருக்கும் இந்த படைப்பின் ஒவ்வொரு அங்கத்திற்கும்; இங்கே ஒரு வேலை இருக்கத்தான் செய்கிறது.
காட்டில் பிணந்தின்னி கழுகுகள் இல்லை என்றால், காடு பிணங்களால் நிறைந்து அங்கு வாழும் உயிர்களுக்கு பல தொற்றுக்களை ஏற்படுத்தும் என்கிறார்கள். அப்படித்தான் இந்த சமூகத்தில் பெரியாரியவாதிளின் வேலையும்.இறைவன் படைப்பில் புனிதமற்றது என்று எதுவும் இல்லை. அந்த வகையில் இதுவும் புனிதனமானதே.
கடவுள் பற்றிய தேடலில் இருக்கும் ஒருவன் தன்னை தானே சோதித்துக்கொள்ள பயன் படும் கருவிகளே இவர்கள்.
புத்தகத்தில் என்ன இருக்கின்றதோ அதை நாம் அப்படியே புரிந்துகொள்வதில்லை நம் அறிவு நிலையின் அடிப்படையிலேயே தான் அந்த புரிதல் இருக்கும். நம்முடைய புரிதலை நாம் அடுத்தவருக்கு சொல்லி அவர் மற்றொருவருக்கு சொல்ல, கடைசி ஆளிடம் கருத்து சேரும் போது, அங்கே கருத்து புரிதலில் பெரும் இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியை நிரப்ப எல்லோரும் புத்தகத்தை தேட வேண்டும், எல்லோரையும் புத்தகத்தை தேட செய்யும் வேலையை செய்வதற்காகவே இந்த பெரியரியவாதிகள் என்னும் பொய்யர்களும் இறைவனால் சிருஷ்டிக்கப் பட்டு இருக்கின்றார்கள். அப்படியான ஒரு பெரியார் சிருஷ்டிக்கப்பட்டு இன்றோடு 144வது ஆண்டு. அந்த பெரியாரை மரியாதையோடு நினைவு கூறுவோம். வாழ்க பெரியார் புகழ்! வளர்க்க ஆன்மீகம்!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
வகுப்பை கவனித்திருக்காவிட்டாலும் சந்தேங்களை சந்தேங்ககளாகவே விட்டுவிட்டால் fail ஆகி விடுவோம். பெரியாருக்கு ஒரு கும்பிடு போட்டு ஆன்மீக தேடலில் மனதை செலுத்துங்கள் உண்மையான சமூக நீதியை ஆன்மீகமே போதிக்கின்றது.
மீண்டும், வாழ்க பெரியார் புகழ்! அந்த புகழும் சேரட்டும் இறைவன் ஒருவனுக்கே