ரஜினி ஒரு முறை மேடையில்  பேசும் போது  சொன்ன ஒரு விஷயம், “உடம்பு முதுமை அடையறது தடுக்க முடியாது.ஆனா மனசை  இளமையா வச்சுக்க முடியும்; வச்சுக்கலாம்”. இதை அவருக்குமே யாரோ சொன்னதாக அவர் சொன்ன மாதிரி ஞாபாகம்.நம் எல்லோருக்கும் யாராவது, ஏதவாது சொல்வாங்க,நாமும் கூட நிறைய வாசிக்கின்றோம் ஆனால், நம்மில் யாரும் அதையெல்லாம் எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால், ரஜினி, அவர் படிக்கின்ற கேட்கின்ற பார்க்கின்ற எல்லா நல்ல விஷயங்களையும் எடுத்துக்கொள்கிறார்;பின்பற்றுகிறார்.அவர் பின்பற்றுவதை எடுத்துச்சொல்வதாலேயே அவரின் பேச்சிற்கும் அவருக்காக எழுதப்படும் பாடல்வரிகளும் மதிப்பு ஏற்படுகிறது.

ஒரு கவிஞன் எழுதும் எந்த வரிகளும் அவனிடம் இருந்து பிறப்பதில்லை. மாறாக, அவன் எதை எழுதுகிறானோ எதை பாடுகின்றானோ அதுவே அவனுக்கு அந்த வரிகளை தருகிறது.ரஜினிக்காக எழுதப்பட்ட வரிகளும் அப்படியானதாகவே இருக்க முடியும்.

அவர் அவரின் நாற்பதுகளில் இருந்த போது எழுதப்பட்ட “இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது”வரியும் சரி எழுபதை நெருங்கிவிட்ட ரஜினிக்காக இன்று எழுத்தப்பட்ட”இரும்பு சோகமா கைய கட்டி உக்காந்தா உடைஞ்சு துரும்பா சில்லு சில்லு கொட்டும் பார் உழைப்பை மதிச்சு கால்  எடுத்து வச்சாலே இளமை முழுசா உன்கூடவே ஒட்டும் பார்” வரியும் சரி ரஜினி எனும் ஆளுமையால் பிறந்த வரிகளாகவே இருக்க முடியும்.அவர் மற்றவர்களுக்கு எடுத்து சொன்னது போலவே  இன்றும் இளமையாக தன் மனதை வைத்துக்கொண்டிருக்கின்றார்.

மனதை இளமையாகவே வைத்துக்கொள்வது எப்படி? அல்லது மனது இளமையாகவே இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இந்த கேள்விகளுக்கு என்னிடம் இருக்கும் சுலபமான பதில்,”ரஜினி மாதிரி இருங்க அதுவே போதும்”. அதுக்காக நாம் நம்மை மாற்றிக்கொள்ளவோ,  நம் தனித்துவத்தை விட்டுக்கொடுக்கவோ வேண்டியதில்லை. நம்மை மாற்றிக்கொள்ளாமல் நம் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல் எப்படி ரஜினியை போல் இருப்பது? நாம் குழந்தைகளாக  இருந்தபொழுது எப்படி இருந்தோம் அப்படி இருந்தாலே போதும்.

குழந்தையாகவே எப்படி இருப்பது? எல்லாவற்றையும் புதிதாக ரசிப்பது; புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளவது; ஆசைகளை, நடந்து முடிந்த சண்டைகளை நம்மோடு வைத்துக்கொள்ளாமல் இருப்பது இப்படியாக குழந்தைகளாக இருந்த போது  எப்படி இருந்தோமோ அப்படியாகவே  நம் மனதை வைத்துக்கொண்டால் போதும் எப்போதும் இளமையாக இருக்கலாம்.ரஜினி தன்னை அப்படி தான் வைத்துக்கொள்கிறார். அது தான் மனிதனின் இயல்பும் கூட, நாம் வளர வளர அந்த இயல்பில் இருந்து நம்மை தூர விலக்கிக்கொண்டதால் இயல்பாக இருக்கும் ரஜினி போன்றவர்கள் நமக்கு  பேரதிசயமாக தெரிகிறார்கள்.

நாம் புதிய விஷயங்களை எந்த அளவில் வரவேற்று ரசிக்கப் பழகியிருக்கின்றோம் என்பதை சினிமா படல்களை உதாரணமாக கொண்டு விளக்கிவிடலாம். பாகவதர் காலத்து இசைப்பிரியர்களாக நாம் இருந்திருப்பின் எம்.எஸ்.வி யின்  பாடல்களை ஆரம்பத்தில் ஏற்க மறுத்திருப்போம் இப்படியாகவே எல்லாக்காலங்களிலும், காலம் நம்மை ஒரு புதுமை நோக்கி அழைத்து செல்லும் போது நம்மால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. இது எல்லோருக்கும் நடக்கின்றது. என்னுடைய பால்ய வயதில் என் வீட்டு பெரியவர்கள் என்னிடம் பழைய பாடல்கள் வைக்க சொல்லும் போது இப்போதெல்லாம் என்ன பாட்டு போடுறாய்ங்க என்பது போன்ற வசவுகளோடு பழைய பாடல்களின் பெருமிதங்களை சொல்லி நீயும் கேளு எது நல்லா இருக்கு என்பது போன்ற வாதங்களோடு பழைய பாடல்கள் வைக்கச் சொல்லி கேட்டதுண்டு ஒரு பத்து வருடம் கடந்திருக்கும் இப்போது புதுமை என்கிற பெயரில் பாடல்களில் செய்யப்படும் விஷயங்களை நான் பெரிதாய் ரசிப்பதில்லை. அப்படியான தருணங்களில் என்னை நானே கேட்டுக்கொள்வதுண்டு “நமக்கு வயசாயிடுச்சா?” ஆனால், ரஜினி தன்னை எப்போதும் ஒரு நல்ல ரசிகனாக வைத்துக்கொள்கிறார் அவர் பழையதை புதிது போல் ரசிப்பது போலவே புதியவைகளை புதியவர்களை ரசிக்கின்றார், ஏற்றுக்கொள்ளகிறார் .இளையராஜா, இசையில் ஞானி. அவரின் எல்லா பாடல்களும் அருமையானதாவே இருக்கும். ஆனாலும், அவர் ரஜினிக்கு இசை அமைத்த பாடல்கள் வேறு ரகம். அதில் இருக்கும் ஆற்றல் உற்சாகம் எல்லாம் அவரின் மற்ற பாடல்களை விட சற்றே மேலே இருக்கும். தன் படங்களுக்கு இளையராஜா நன்றாக தான் இசை அமைத்துக்கொண்டிருக்கின்றார் நாம் ஏன் வேறு ஒரு புது இசைமைப்பாளரிடம் செல்ல வேண்டும் என்பது போன்ற conservative எண்ணம் ரஜினிக்கு எப்போதும் இருப்பது இல்லை. காலம் தரும் புதுமைகளையும் புதியவர்களையும் இளையராஜாவுக்கு நிகராக ரசிக்கிறார் மதிக்கிறார் ஆனால்,  யாரையும் யாருடனும் ஒப்பிடுவதில்லை.

இளையராஜாவுக்கு பின் தேவா, ரஹ்மான்,சந்தோஷ் நாராயணன், என்று அனிருத் வரை இசைமைப்பாளர்கள், இயக்குனர்கள் என்று எல்லாவகையிலும் காலம் தரும் புதுமைகளை அவர் ஒதுக்காமல் தன்னோடு சேர்த்துக்கொள்ளகிறார் திரையில் இன்றும் அவர் புதிதாய் மின்னும் நட்சத்திரமாய் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். மனதளவில் முதுமையடைபவர்களோ காலம் தரும் புதுமைகளை ஏற்க காலம் எடுத்துக்கொள்கிறார்கள். குழந்தை போலவே இருக்கின்ற மனசு பழையதை புதியது போலவே ரசிக்கும் அதே வேளையில் புதுமைகளை தன்னோடு சேர்த்துக்கொண்டு அதனை இன்னும் அதிகம் நேசிக்கும்.

குழந்தைகளிடம் இருக்கும் மற்றொரு விஷயம் : குழந்தைகள் எப்போதும் தங்களை தாழ்த்திக்கொள்வதில்லை. அதே வேளையில், அவர்களின் சுய பாராட்டுகளும் பெருமிதங்களும் ஒருபோதும் தலைக்கனமாக ஆனதில்லை. ரஜினியும் அப்படியானவராகவே இருக்கின்றார்.எந்திரன் படத்தில் ஒரு பாடல் படப்பிடிப்பின்  போது  அவர் நடந்துகொண்டவிதத்தை பார்த்த எனக்குள்ளும் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. நடன இயக்குனர் சொல்லிக்கொடுத்த அசைவுகளை ஒத்திகை பார்த்துவிட்டு,அதை சரியாக செய்துமுடித்த பின் எல்லோருடனும் அவரும் கைதட்டி சிரித்தபடியே “நல்ல  வந்திருச்சுல” என்பது போன்று தன்  உற்சாகத்தை வெளிப்படுத்தியிருப்பார். நூறு படங்களுக்கு மேல் நடித்துவிட்ட; உச்சத்தில் இருக்கின்ற ஒரு நடிகர், ஒரு சாதாரண நடன அசைவு அது செய்யமுடியாமல் போனால் தான், தான் வருந்த வேண்டும்; வெட்கப்பட வேண்டும் என்றில்லாமல் அன்று தான் புதிதாக அந்த வேலையை செய்வது போலவும்; புதிதாக எதையோ சாதித்துவிட்டது போலவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒருவிதமான குழந்தைத்தனமே ஆகும்.முதிர்ச்சி என்னும் பெயரில் நாம் அந்த குழந்தைத்தனங்களை ஒளித்துக்கொண்டு நம்மை யாரோ பெரிய ஆள் போல் காட்டி கொள்ள முற்படுவதாலேயே நம் மனம் நமக்கு எதிரானதாகி நாம் மனதளவிலும் முதுமை அடைந்தவராக ஆகிறோம்.ஒருவிதத்தில் நம்மை சுற்றியிருப்பவர்கள் அதற்கு காரணமாகி விடுகிறார்கள்.நாமும் யாரோ சிலருக்கு சுற்றியிருக்கும் ஒருவராகவே இருந்து கொண்டு “இது கூட செய்ய முடியாத! இதை கூட செய்ய தெரியாத!” என்று யாரோ ஒருவரின் மனதில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மைக்கும் யாரோ ஒருவரின் தேவையற்ற மனஅழுத்தத்திற்கும் காரணமாகிவிடுகிறோம்.

“எனக்கு இது வராது என்னால் இதை செய்ய முடியாது” என்பது போன்ற எல்லா எண்ணங்களுக்கும் யாரோ ஒருவரால் நமக்குள் ஏற்படும் எண்ணங்களே அந்த யாரோ ஒருவராக நாம் யாருக்கும் இருந்துவிடக்கூடாது என்ற கவனம் நம் எல்லோருள்ளும் இருக்க வேண்டும். அதே வேளையில் அந்த யாரோ ஒருவர் நம்மை பற்றி நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தீர்மானங்களுக்கு காரணமாகி விடக்கூடாது.

உத்³த⁴ரேதா³த்மநாத்மாநம் நாத்மாநமவஸாத³யேத்|

ஆத்மைவ ஹ்யாத்மநோ ப³ந்து⁴ராத்மைவ ரிபுராத்மந​: ||6-5||{பகவத் கீதை}

விளக்கம்:மனதின் உதவியுடன் ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக்கொள்ளக்கூடாது மனமே ஒருவனின் நண்பனும் பகைவனும் ஆவான்.

மனதளவில் தங்களை குழந்தைகளாய் வைத்துக்கொள்பவர்கள் எப்போதும் தங்களை தாழ்த்திக்கொள்வதில்லை. ரஜினி மனதளவில் குழந்தையாக இருப்பதினாலேயே 100 படங்களுக்கு மேல் ஆடி விட்ட பொழுதும் கூட “நமக்கு இதென்ன புதுசா ” என்னும் அகங்காரம் இல்லாது  இருப்பதினாலேயே அந்த வேலையை செய்து முடித்தபின் தன்னை தானே உயர்த்தி கொள்ளவும் உற்சாகப்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்(ரோமர் 12-2)

Do Not Conform Any Longer To The Pattern Of This World, But Be Transformed By The Renewing Of Your Mind. Then You Will Be Able To Test And Approve What God’s Will Is–his Good, Pleasing And Perfect Will.(Roman 12-2)

குழந்தைகள் யாருக்காகவும் வேடம் தரிப்பதில்லை. அதன் காரணமாகவே கால வெள்ளத்தில் கடவுள் நமக்கு வைத்திருக்கும் புதுமைகளை ஏற்பதற்கு தயாராக அவர்களின் மனங்களை வைத்துக்கொண்டிருப்பதாலேயே மகிழ்வுடன் உயர்கிறார்கள். ஒரு நிலையில் உயர்ந்து விட்ட பின் நம் மனதின் அந்த குழந்தைத்தன்மையை, இயல்பை இழந்துவிடுவதாலேயே நமக்காக காத்திருக்கும் அற்புதங்களை இழந்துவிடுகிறோம்.தேவையற்ற காரணங்களுக்காக நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தேவைகளுக்காகவே நாம் வேடம் தரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறோம்.ரஜினியும் அவரை போன்றவர்களும் அப்படியான நிர்பந்தத்திற்க்குள் அவர்களை புகுத்திக்கொள்வதில்லை. அதன் காரணமாகவே இயல்பில் இருந்து விலகாமல் மனதை இளமையாக வைத்துக்கொள்ள முடிகிறது.

குழந்தைகளாக இருந்த நம்மிடம் பொறாமை இருந்ததில்லை.

இந்த பொறாமை நம்மிடம் எப்போது எப்படி வருகிறது ? நாம் நம்மை கவனிக்காமல் மற்றவர்களை கவனிக்க தொடங்கும் போதும்; நாம் யாரோ ஒருவர் போல ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதும் என்று நம் மீதான கவனத்தை நாம் பிறர் மீது செலுத்த ஆரம்பிக்கும் போதே இந்த பொறாமை நம்மை அறியாமல் நமக்குள் விதைக்கப்படுகிறது.
இன்று இருக்கும் நடிகர்களில் கதாநாயகனாக நடிப்பவர்களில், கண்களிலேயே எல்லா விதமான உணர்ச்சிகளையும் பார்வையாளர்களுக்கு கடத்தக்கூடிய அளவிற்கு திறமை கொண்ட நடிகரை அவரின் நடிப்பிற்காக நாம் கொண்டாடியதில்லை மாறாக அவரை அவரின் ஸ்டைலிற்காக கொண்டாடித்தீர்க்கிறோம். அதற்காக அவர் வருத்தப்பட்டுக்கொண்டிருந்து சிறந்த நடிகர்களாக நடிப்பிற்க்காக அதிகம் பேசப்படும் நடிகர்களை போல் நம் நடிப்பு ஏன் பேசப்படுவதில்லை என ஏங்கிக்கொண்டிருக்கவில்லை.மாறாக யார் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலும் முதல் ஆளாக பாராட்டிக்கொண்டு இருக்கின்றார்.

ஸ்ரேயான் ஸ்வதர்மோ விகுண பர – தர்மாத் ஸ்வம்ஸ் தாத்

ஸ்வதர்மே நிதானம் ஸ்ரேயா பர – தர்மோ பயாவஹா !

யாரோ ஒருவர் செய்வது மேலானதாக இருப்பினும் நம் சுயத்தை இழந்து அந்த யாரோ ஒருவர் போல ஆகா விரும்பி அவர் செய்வதை நாம் செய்வதை விட நாம் செய்துகொண்டிருப்பதை சிறப்பாக தொடர்வதே நன்று என்பதேயே ஆன்மீகம் சொல்கிறது.

3 – அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.

English:- For By The Grace Given Me I Say To Every One Of You: Do Not Think Of Yourself More Highly Than You Ought, But Rather Think Of Yourself With Sober Judgment, In Accordance With The Measure Of Faith God Has Given You.

4 – ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,

English:- Just As Each Of Us Has One Body With Many Members, And These Members Do Not All Have The Same Function,

பைபிள் கீதை என்று இரண்டிலும் சொல்லப்பட்ட இந்த கருத்தில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை விட யாரால் சொல்லப்பட்டது என்கிற வாதமே மத சண்டைகளில் முடிகிறது என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதன்படி நடக்கும் ஆன்மீகவாதிகள் இந்த மத விளையாட்டுகளுக்குள் சிக்காதவர்களாகவே இருக்கின்றார்கள் ரஜினியை போல்.

மதசார்பற்ற ஆன்மீக அரசியல் என்ற போது பலரும் அதற்கு மதச்சாயம் பூச முற்பட்டார்கள்.ஆன்மீக வழியில் வாழ்ந்து ஒரு பெரிய உயரத்தை அடைந்து அதில் நிலைத்தும் காட்டிய ஒருவர் நிச்சயம் ஆன்மீகம் அரசியல் எப்படி இருக்கும் என்பதனையும் காட்டுவார். கிடைத்ததை வெறுக்கமால், கிடைக்காதற்காக ஏங்காமல், புதியதை ரசித்து ஏற்றுக்கொண்டு யார் மீதும் பொறாமை இல்லாமல் வாழ்ந்து வைரமுத்து அவருக்காக எழுதிய வரிகளை இன்னமும் மெய்ப்பித்துக்கொண்டிருக்கின்றார்.இனிமை அவரை விட்டு போகவேவில்லை போகவும் செய்யாது. நாமும் ஆன்மீக வழியில் நின்றால் இனிமை நம்மை விட்டும் என்றுமே போகாது; மனதிற்கு முதுமையும் வாராது.அந்த இனிமை மனிதருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *