அவர் பெயர் சதீஸ் கண்ணா, இயற்பியலின் காதலன்;என்னுடைய பள்ளிக்காலத்தில், 11ம் வகுப்பு இயற்பியல் பாடங்களை கற்பிக்க வந்த ஆசிரியர். அவர் காதலியான இயற்பியலின் மீது எங்கள் வகுப்பில் இருந்த 50 பேரில் ஒருவருக்கு கூட ஈடுபாடு வரவில்லை;மாறாக இதை எப்படி இவர் விருப்பப்பாடமாக எடுத்து படித்து முடித்தார் என்கிற எண்ணம் வேண்டுமானால் சிலர் மனதில் இருந்திருக்க கூடும். அவரின் இயற்பியல் வகுப்பில், ஒரு முள் கடிகாரம் இருந்திருந்தால் அதனுடைய சத்தம் 100 காதுகளையும் நிரப்பியிருக்கும்; அதுவும் இல்லாமல் போன அவரின் வகுப்புகளில் அத்தனை அமைதி. அவர் மட்டுமே ஏதோ செய்துகொண்டிருப்பார்.அவர் மீது காரணமின்றி ஏற்பட்ட விருப்பத்தின் காரணமாக, சுவாரசியம் துளியும் இல்லாத அந்த இயற்பியல் வகுப்பை, அவ்வப்போது நான் கவனிப்பதும் கவனிக்காத வகுப்புகளை அவரிடம் தனியாக சென்று கற்றுக்கொள்வதுமாக இருந்தேன். ஒரு விஷயத்தை நாம் தெரிந்துகொள்ளவோ கற்றுக்கொள்ளவோ முதலில் நாம் அதனை அல்லது அது சார்ந்த ஒன்றை விரும்ப வேண்டும் அல்லது குறைந்தபட்சம் வெறுக்காமல் இருக்க வேண்டும். நம் மூளை நம்மை அப்படியாகவே வைத்து இருக்கின்றது நாம் வெறுக்கும் எதை பற்றியும் நாம் அறிந்து கொள்ள முற்படுவதில்லை.
ஒருநாள் ஏதோ நடத்திக்கொண்டிருந்தவர் இடையில் இவ்வாறாக சொன்னார், “Earth rotates from west to East (மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழலும் பூமி)”. அவர் இப்படி சொன்ன பின்பும் கூட 49 ஆன்மாக்களின் ஆழ்நிலை தியானம் கலையவில்லை. பொதுவாக ஒரு ஆசிரியர் கவனம் தவறும் போது அந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல அத்தனை மாணவர்களும் சார், நீங்க சொன்னது தப்பு என்று கூவியிருப்பார்கள்.ஆனால் , அன்று நான் ஒருவன் மட்டுமே முதலில் தியானத்தை கலைத்து “Sir, earth rotates from east to west (பூமி கிழக்கிலிருந்து தான் மேற்கு நோக்கி சுழலகிறது)” என்றேன்.என் குரல் கேட்டு மற்றவர்களின் தியானமும் கலைந்து விட்டது,ஒரு பெருமித்ததோடு அவரின் எதிர்வினைக்காக காத்திருக்கின்றேன்.ஒரு பாராட்டு, அல்லது sorry அல்லது Yes you are right இப்படி ஏதேனும் ஒன்று அவரிடம் இருந்து வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் வேறு ஒரு பதிலை தருகிறார்.
“In view of 3 dimension west to east is also right (முப்பரிமாண கண்ணோட்டத்தில் பூமி மேற்கில் இருந்துகிழக்கு நோக்கி சுழலுகிறது என்பதும் சரியே)”சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பூமியின் மேற்கு முனை கிழக்கு முனை நோக்கியும் கிழக்கு முனை மேற்கு முனை நோக்கியும் நகர்கிறது.
இப்பொழுது,மீண்டும் 49 பேரும் தியானத்திற்கு சென்றுவிட்டார்கள்;சதீஸ் கண்ணா,இயற்பியல் மீதான அவரின் காதலை கரும்பலகை வழியே மீண்டும் வழிய விட தொடங்கினார்; நான் மட்டும் அவர் சொன்ன பதிலில் நின்றுவிட்டேன்.
அவர் சொன்னது சரி தான். ஏதுமற்ற வெளியில் அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் பூமியின் ஒரு முனையை மேற்கு என்றும் மறுமுனையை கிழக்கு என்றும் கொண்டால்; பூமி, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சுழலகிறது என்பதும் சரி தான்; மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழல்கிறது என்றாலும் சரி தான்.இப்படியெல்லாம் யோசித்தால் திசைகள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் திசைகள் இருக்கிறதா என்றெல்லாம் எனக்குள் கேள்வி எழுகிறது.வான வெளியில், கிழக்கு எது,மேற்கு எது.
என்னுடைய ஆசிரியரின் கவனச்சிதறலை சுட்டிக்காட்டி பாராட்டை பெற நினைத்த நான் ஏமாற்றம் அடைந்தேன். அந்த தருணத்தில் என் மனம் இன்னொருவரை தேடியது. சதீஷ்கண்ணா சொன்னது சரி என்றால் என் மனம் தேடிய அந்த நபர் தவறாக தான் இருக்க முடியும். அவரிடம் சொல்ல வேண்டும் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பதெல்லாம் குருட்டுத்தனமாது என்று.
நான் யாரை தேடினேன் என்பதை சொல்லும் முன், அந்த வயதில் நான் எப்படியனவாக இருந்தேன் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். “கடவுள் என்று ஒருவர் இல்லை. சமய நம்பிக்கைகள் அத்தனையும் மூடத்தனமானது.” இத்தகைய எண்ணங்களை புதிதாக ஏற்று இருந்த பதின்மவயது பெரியவனாக இருந்தேன். “அறிவியல் இத்தனை வளர்ந்துவிட்டது இன்னும் இதையெல்லாம் நம்புகின்றீர்களா?” என்னும் அறிவாளிகளின் கூட்டத்திற்குள் என்னை சேர்த்துக்கொள்வதே அறிவு என்று எண்ணி, “சின்ன வயசுல தான் கோவில் சாமி இதெல்லாம் நம்பினேன் இப்ப இதெல்லாம் நம்புறது இல்ல” என்பதை பெருமையாக பேசிக்கொண்டிருந்தேன்.
அன்று இயற்பியல் வகுப்பில், என் எண்ணம் என் தந்தையை தான் தேடியது.வீட்டில் சாமி சிலைகள் ஒரு பக்கம், புத்தகங்கள் ஒரு பக்கம் என்று வாங்கி குவித்து வைத்து இருந்த என் தந்தையை தான் தேடினேன்.அவரிடம் வாதம் செய்வதற்கு எனக்கு ஒரு விஷயம் கிடைத்துவிட்டது சமயநம்பிக்கைகளில் திசை முக்கியமானது.அதோடு, அவர் ஜோதிடம் கற்று இருந்தார், அதிலும் திசைகள் முக்கியமானது.
அதெல்லாம் மூட நம்பிக்கை நான் அறிவாளியா இருக்கேன் நீங்க இன்னும் இதையே நம்பிக்கொண்டு இருங்கள் என்று சொல்வதற்கு எனக்கு ஒரு கருத்து கிடைத்துவிட்டது. அன்று வரை என் தந்தை படித்து தெரிந்திருந்த எந்த ஒரு புத்தகத்தின் அட்டையையும் கூட நான் பார்த்ததில்லை. ஆனால், அன்று நான் அந்த புத்தகங்கள் பொய்களின் மூட்டை என்று நிரூபணம் செய்ய முற்பட்டு இருந்தேன்.
என் தந்தையிடம் சென்றேன், கிழக்கு எது என்று கேட்டேன் சுழன்று கொண்டிருக்கும் பூமியில் நின்று கொண்டு அவர் காட்டிய திசை நகர்ந்து கொண்டிருக்க அது தான் கிழக்கு என்று எப்படி சொல்கிறீர்கள் என்று இயற்பியல் வகுப்பில் நான் பெற்ற ஞானத்தை அவருக்கு சொல்லி வானத்தில் திசைகள் எப்படி அடையாளப்படுத்த முடியும்? காரணம், நீங்கள் கிழக்கு என்று காலையில் காட்டும் திசை பூமி சுழல மாலையில் மேற்கு ஆகிவிடுகிறது.வட்டமான பூமியில் இருந்து நீங்கள் காட்டும் கிழக்கில் தான் மேற்கு இருக்கிறது. நியூஸிலாந்தில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்தால் பூமியின் மேற்கை வந்தடைகிறோம்.இதில் நீங்கள் எதை கிழக்கு என்பீர்கள்? என்று அறிவாளித்தனமான கேள்வியை கேட்டு விட்டு. பூமியை வட்டமாக எடுத்துக்கொண்டால் 360 பாகையில் இத்தனை பாகையில் இருந்து இத்தனை பாகை வரை கிழக்கு என்று அவர் விளக்க முற்பட்டதை உள் வாங்காமல். அவரின் சமயநம்பிக்கைகளையும் நான் படிக்காத அவரின் புத்தங்களையும் பொய் என்கிற தீர்மானத்தோடு. ஆசிரியர் விட பெரிய அறிவாளியாகவில்லை என்றாலும் அப்பாவை விட பெரிய அறிவாளி ஆகிவிட்டோம் என்ற மமதையோடு அன்று உறங்க சென்றேன்.
நம்மில் அநேகம் பேர் இப்படியாக தான் இருக்கின்றோம். நாம் விரும்பாத விஷயங்களை பற்றி நாம் தெரிந்த கொள்ளமுற்படுவதே இல்லை. பிறந்தது முதலாகவே நாம் பெரியவனாக ஆகி விட்டோம் என்கிற ஒரு எண்ணம் நமக்குள் இருந்து, வாழ்வின் கடைசி வரை ஒவ்வொரு கட்டத்தை கடந்த பின்னரும் எவ்வளவு சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டு இருக்கின்றோம் என்று நினைத்துக்கொள்கிறோம்.கொஞ்சம் வளர்ந்துவிட்டால்;கொஞ்சம் படித்துவிட்டால் பெற்றோர்களிடம், “உங்களுக்கென்ன என்ன தெரியும்?” என்று கேட்பதற்கு நாம் தயங்குவதில்லை. இவையல்லாமல் நம்மில் பலர் நாம் தெரிந்துகொள்ள முற்படாத விஷயங்களை அதிகம் தெரிந்துகொண்டதாக எண்ணி எதிர்க்கவும் வெறுக்கவும் செய்கின்றோம்.அதை யாரேனும் விளக்க முற்பட்டால் அதை கேட்பதற்கும் நாம் தயாராக இருப்பதில்லை.
தலைப்பிற்கும் மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் என்ற தொடருக்கும் சம்மந்தமில்லாத ஒன்றை பேசி வருவதாக நினைக்க வேண்டாம்.
மனிதன் எந்த ஒரு விஷயத்தையும் கற்று தெரிந்துகொள்வதற்கு அவனிடம் அதன் மீது ஒரு ஆர்வம் இருக்க வேண்டும், குரு பக்தி இருக்க வேண்டும்;அதோடு விருப்பு வெறுப்புகளை கடந்த கற்றுக்கொள்வதற்கான பக்குவமும் வர வேண்டும்;உண்மை ஞானத்தை பற்றிய தேடல் இருக்க வேண்டும்.இதெல்லாம் இருக்கும் ஒருவனுக்கு ஒரு விஷயத்தின் உச்சகட்ட உண்மையை புரிய வைக்க பொய்கள் தேவைப்படுகிறது.
உதாரணமாக, இன்றும் நாம் முதல் வகுப்பு குழந்தையிடம் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்ற பொய்யை தான் கற்பித்து கொண்டு இருக்கின்றோம்.உண்மையில் சூரியன் உதிப்பதில்லை பூமி சுழலுவதால் அப்படி தோற்றம் ஏற்படுகிறது.இதுவும் கூட உண்மையை பற்றிய தேடலின் ஒரு கட்டமே இதற்கு அடுத்த கட்டமும் இருக்கின்றது.
உண்மையை நோக்கி நகருவதற்கு, குருபக்தி அவசியமாகிறது. என் தந்தை மீது எனக்கு அன்பு இருந்தது; பாசம் இருந்தது; நிச்சயம் பக்தி இருக்கவில்லை. அதோடு என்னுடைய அந்த வயதில் அவர் படித்திருந்த அல்லது அவர் நம்பிக்கொண்டிருந்த சமயநம்பிக்கைகளை நான் வெறுத்து இருந்தேன்.வெறுப்பின் காரணமாக அவற்றை பற்றி எதுவும் அறியாமலேயே அவைகளை பொய் என்று வாதிட்டேன். சமய நம்பிக்கைகளை வெறுக்காமல் இருந்திருந்தாலோ; தந்தை மீது பக்தி இருந்திருந்தாலோ அன்று அவர் சொன்ன பதிலை கேட்கும் பொறுமை என்னிடம் இருந்து இருக்கும்.
முன் சொன்ன சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து, இயற்பியல் வகுப்பில் நட்சத்திர கூட்டம்(constellation) பற்றி வருகின்ற பாடத்தை கற்ற பின் மீண்டும் என் தந்தையை தேடுகிறேன். நட்சத்திர கூட்டம் ராசி மண்டலங்கள் இருப்பதை அறிவியல் ஒப்புக்கொள்கிறது என்றால் நிச்சயம் என் தந்தை நம்பும் அவர் கற்று வைத்திருக்கும் விஷயங்களிலும் ஏதோ உண்மை இருக்கிறது என்று தேடலானேன். இந்த முறை பக்தியோடு அவரிடம் மன்றாடுகிறேன், “எனக்கு ஜோதிடம் கற்றுக் கொடுங்கள்”. அவர் வைத்திருந்த, படிக்காமலேயே பொய்களின் மூட்டை என்று நான் தீர்மானித்து இருந்த புத்தங்ககளை படிக்கத் தொடங்குகிறேன். அன்றைய தினத்தில் இருந்து,எதையும் பொய் என்கிற தீர்மானத்தோடு நின்றுவிடாமல் அறிவியலிலும் ஆன்மீகத்திலும் கற்றவைகளை ஒப்புமைப்படுத்தி எதையும் வெறுக்காமல் உண்மையின் அடுத்தடுத்த படிநிலைகளை தேடி பயணப்பட தொடங்கினேன்.
நாம் ஒரு உண்மையை கற்றுக்கொள்ள ஒரு பொய் அவசியமாகிறது. அந்த பொய்யை ஏற்று கற்றுக்கொள்ள அதை கற்று தருபவர் மீதான பக்தி அவசியமாகிறது. பக்தி ஒருவிதத்தில் கண்மூடித்தனமானது, நீங்கள் ஒருவர் மீது பக்தி கொள்ளும் போது அவர் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்க தயங்க மாட்டீர்கள். பக்தி வந்தால் மட்டுமே உங்கள் அறிவின் வளர்ச்சிக்கு ஏற்ப கற்று தருவதற்காக உங்கள் மீது திணிக்கப்படும் பொய்களை அதாவது உண்மைக்கு முந்தைய நிலைகளை நீங்கள் ஏற்க பழகுவீர்கள்.
இப்படியான கற்றலில் எல்லோரும் எல்லாப்படிநிலைகளையும் கடக்க வேண்டியதில்லை; கடக்க முடிவதும் இல்லை. மிக சாதாரணமான ஒருவருக்கு சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்கிற அளவிலான கற்றல் போதுமானது. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பும் விஞ்ஞானிக்கு திசைகளை பற்றி அதைவிட ஆழமான புரிதல் அவசியமாகிறது.அந்த விஞ்ஞானி, திசைகள் பற்றிய அவரின் அத்தனை புரிதலையும் சாதாரணமான ஒருவருக்கு கற்று தர முற்பட்டால் நிச்சயம் சாதாரணமான ஒருவர் குழம்பி போவார்.அப்படியாகவே குறிப்பிட்ட எல்லைக்களுக்குள் கடவுளை பற்றிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி வைத்திருப்பவர்களுக்கு கடவுள் பற்றிய முழுமையான ஞானம் குழப்பத்தை ஏற்படுத்தும்.
கீதையில் 12 அத்தியாத்தில் 5ஆவது ஸ்லோகத்தில் கிருஷ்ணர் உடம்பை பெற்ற ஆன்மாவிற்கு (மனிதர்களுக்கு) கடவுளின் உருவமற்ற நிலையை புரிந்துகொள்வது கடினமானதாகும் என்கிறார்.
புரிந்து கொள்ளகடினமாக இருப்பவைகளை புரிந்து கொள்ள பொய்கள் அவசியமாகிறது.
அதன் காரணமாகவே,கடவுள் பற்றிய உண்மையை பொய்களை கொண்டே ஆன்மீகம் கற்று தருகிறது. முதலில் ஒரு பொம்மையையோ சிலையையோ காண்பித்து இது தான் கடவுள் என்கிறது. பின் கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்கிறது.எல்லாவற்றையும் அவரே தீர்மானிக்கிறார் என்கிறது பின், அவர் தீர்மானத்தின் படி நாம் செய்யும் தவறுகளை தண்டிப்பார் என்கிறது. ஆன்மீக கற்றலில் முதல் நிலை பாடங்களில் பொய்களே ஆதிக்கம் செலுத்துகிறது.
இது தான் கடவுள். இப்படி தான் இருப்பார் என்று உருவங்களை காட்டி பொய்களை கொட்டி பொய்களை கடந்து வருகின்றவனுக்கு உண்மைகளை தெளிவிக்கிறது ஆன்மீகம்.
இவற்றை புரிந்து கொள்ளாத கடவுள் மறுப்பாளர்கள், “கடவுள் இல்லை கடவுளை பற்றிய கதைகளெல்லாம் மூட நம்பிக்கைகள்” என்று பரப்பவுது எத்தகையது எனில், சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று நம்பிக்கொண்டு இருப்பவனிடம்.சூரியன் ஒன்றும் உதிப்பதில்லை பூமி தான் சுழல்கிறது என்பதை போன்றது.
அத்தகைய கடவுள் மறுப்பாளர்கள் ஆன்மீகம் சார்ந்த எந்த ஒரு உண்மையையும் தேடும் பக்குவமில்லாத, தாங்கள் தெரிந்து வைத்திருப்பது தான் இந்த பிரபஞ்சத்தின் உச்சபட்ச உண்மை என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள். அவர்களின் அத்தகைய நம்பிக்கையும் கூட மூட நம்பிக்கையே.
பிரபஞ்சத்தில் தன் அறிவுக்கு எட்டியது தவிர வேறெதுவும் இல்லை என்கிற எண்ணம்;பதில்களை தேடாமல் கேள்விகளை அடுக்கிவிட்டால் நாம் அறிவாளிகளின் கூட்டத்தில் ஒருவனாகி விடுவோம் என்கிற மமதை;இவையெல்லாமே ஒருவரை கடவுள் மறுப்பாளர் ஆக்கிறது. உண்மையில் சமயங்கள் (மதங்கள்) என்ன சொல்லி தருகிறது என்ற தேடல்களுக்குள் அவர்கள் செல்வதில்லை.
ஒரு விஞ்ஞானி பெறும் உயர்ந்தபட்ச அறிவு பொய்யான ஒரு பாடத்தில் தொடங்குவதை போன்றதே கடவுள் பற்றிய நம்பிக்கைகளும் உருவவழிபாடுகளும். அறிவியலின் உயர்ந்தபட்ச அறிவை பெறும் விஞ்ஞானியை போன்றவர்களே ஆன்மீகத்தேடலில் ஞானம் அடைகின்றவர்கள். ஒரு விஞ்ஞானியை தவிர்த்து மற்றவர்களுக்கு அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான அளவு அறிவியல் அறிவு போதுமானதாக இருப்பதை போலவே ஆன்மீக அறிவும். அதனால், நீங்கள் எதை கடவுள் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றீர்களோ அதனை தீவிரமாக நம்புங்கள்(so believe strongly in what you believe) ஒருவேளை நீங்கள் நம்புவதை நிறுத்துவீர்களானால் தேடுவதை நிறுத்தாதீர்கள்(if you stop believing don’t stop searching). கேளுங்கள் அப்போது கிடைக்கப்பெறுவீர்கள்(Ask , you will find answers).தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்.
நம்புவதையும் தேடுவதையும் நிறுத்தியவர்களே கடவுள் மறுப்பாளார்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளை கடப்பது அத்தகையவர்களுக்கு சுலபமாக இருப்பதில்லை.
ஒரு பெருந்தொற்றிக்கு எதிராக போராடும் அறிவியல் உலகம் இன்னுமும் நிச்சயமற்ற ஒரு நிலையில் தடுமாறிக்கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் கூட நிச்சயமற்ற நிலைகளை கடக்க நேரிடும் அத்தகைய நிச்சயமற்ற நிலைகளை தடுமாற்றம் இன்றி கடக்க இதுவரை இல்லை என்றாலும் இனிமேல் நம்புங்கள் கடவுள் இருக்கிறார் என்று.
ஜட உலகில் சாதாரணமான வாழ்க்கையை நடத்தும் ஒவ்வொருவருக்கும் கடவுள் மீதான நம்பிக்கை அவசியமாகிறது. ஜட உலகில் இருந்து விடுதலை பெற நினைப்பவர்கள் வேண்டுமானால் கடவுளை பற்றிய உட்சபட்ச உண்மையை தேடட்டும். ஆனால் , அவர்களுக்கும் அந்த உண்மை முழுவதுமாக விளங்கப்போவதில்லை என்கிறது கீதையும் திருமந்திரமும்.எல்லைகளுக்கு அடங்கிவிடாத கடவுளை நீங்கள் தேடவோ புரிந்துகொள்ளவோ முற்பட வேண்டாம் மூடத்தனமாக நம்புங்கள்.