என் தந்தையின் நண்பர் ஒருவர், பார்க்க நல்லா திடகாத்திராம தெரிய கூடிய உருவம், நல்ல அடர்த்தியான பெரிய மீசை,பெரும்பாலான சமயங்களில் சவரம் பண்ணாத தாடியோட இருக்க முகம்.
நாங்கள் குடியிருந்த வீட்டு தெருவில் இருந்து அவர் வந்து கொண்டிருக்கின்றார்.நிச்சயம் அவர் அப்பாவை பார்க்க வந்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்க வேண்டும்.
அப்போது நான், அவருக்கு எதிர் திசையில் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.தீடீரென்று,அவருக்கு பின்னால் இருந்த தெரு வீடு எல்லாம் ஒரு பெரிய வெளிச்சத்தில் மறைந்து அவர் மட்டுமே தெரிகிறார். என்ன நடக்கிறது என்று நான் யூகிக்கும் முன்னர். என்னால் நடக்கமுடியாமல் போகிறது.சட்டென்று என் நினைவிற்கு வந்த விஷயம்,”இவரும் தான் இறந்துவிட்டாரே!”
எனக்குள் ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது,உடனடியாக அங்கிருந்து செல்ல வேண்டும். ஆனால், அந்த இடத்தில் இருந்து என்னால் நகர முடியவில்லை.
“இல்லை, இது கனவாக தான் இருக்க முடியும்” என்று தீர்மானித்து, அந்த இடத்தில் இருந்து மீண்டு வர முயற்சி செய்கிறேன்.திறக்க முடியாத என் கண்களை பெரும் முயற்சிக்கு பின் பாதி கண்கள் திறந்த படி பார்த்தால், நான்,தனியாக தூங்கிக்கொண்டிருந்த என்னுடைய அறையில் தான் இருந்தேன். ஆனால்,இன்னமும் கூட என்னால் அசையமுடியவில்லை கண்கள் பாதி மூடியே இருக்கின்றது.என் தலையை திருப்ப முடியாதபடி யாரோ என் தலையை பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.நான் தனியாக இருந்த அறையில் யாரோ இரண்டு ஆண்கள்,ஒருவர் என் இடதுபுற தலைமாட்டிலும், மற்றவர் வலதுபுற கால்மாட்டிலும் அமர்ந்திருந்தார்கள். என் கழுத்தை திரும்பி அவர்கள் யார் என்று என்னால் பார்க்க முடியவில்லை. என்னால்,அசைய முடியாமல் இருந்த பொழுது மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து, என் அருகில் இருந்த தலையணையை தூக்கி நான் திரும்பி பார்க்க முடியாத திசையில் இருந்தவர் மீது வீசுகிறேன். என்னால் எழுந்து நிற்க முடியவில்லை; தலையணை என் அருகிலேயே விழுகிறது; அத்தனை பலமின்றி இருக்கின்றேன்.தலைக்கு மேல் ஒரு பாம்பு “அறைக்குள் பாம்பு எப்படி வந்தது!” என்று நினைப்பதற்குள்ளாக அது சுருண்டு என் தலையில் ‘பொத்’ என விழுகிறது.தலையில் நல்ல அடி அந்த பாம்பு அத்தனை கனமாக இருந்தது. ஆனால், ஒன்றும் செய்யமுடியவில்லை.
முடிவில் ஒரு வழியாக கண்களை முழுதாய் திறந்துவிட்டேன்.அறையில் என்னைத் தவிர யாரும் இல்லை, வீட்டிலேயே நான் மட்டும் தான் இருந்தேன். நான் தூக்கி வீசிய தலையணை வைத்த இடத்தில் வைத்தது போலவே இருந்தது.கனவில் இருந்து விழித்துக் கொண்டதாக நினைத்தபின்னும் கனவில் தான் இருந்திருக்கின்றோம் என்பதை உணர்ந்தேன்.
சிறிது நேரம் வரை எதை பற்றிய சிந்தனையும் இல்லாமல் இருந்து விட்டு எழுந்து தண்ணீர் அருந்திவிட்டு வந்த போது என் மீது லேசாக காற்று பட்டால் கூட சில்லென்று இருந்தது. Adrenaline rush -உடம்பெல்லாம் ஒரு மாதிரி சிலிர்த்து இருந்தது அது காற்றைக்கூட உடம்பின் மீது பட அனுமதிக்கவில்லை.ஸ்ஸ்ஸ்ப்ப்பா!தூங்குவோம்!
நீங்களும் கூட தண்ணி குடித்துவிட்டு மிச்சத்தை படியுங்கள்.
ஒன்றரை கிலோ அறிவு! என்னென்ன வேலை செய்கிறது!இல்லாத ஒன்றை நடக்காத ஒன்றை நடந்ததாக தத்ரூபமாக காட்டி எத்தனை பயம் காட்டிவிட்டது.எழுந்த பின்னும் கூட என் தலையை தடவிக்கொண்டேன் அத்தனை நிஜமாக இருந்தது கனவில் வாங்கிய அடி.
எல்லாருக்கும் இது போன்ற தத்ரூபமான கனவுகள் வந்து இருக்கும்.யாருமே நம்மை அழைக்காத போது யாரோ மிக சத்தமாக நம்மை அழைப்பது போல.கீழே விழுவது போல என்று கனவு எல்லாருக்கும் வர கூடியதே.
இந்த கனவில் என்ன நடக்கிறது.இல்லாத ஒன்றை நம் அறிவு இருப்பதாக காட்டுகிறது.நம் காதுகள் கேட்காத ஒலியை;நம் கண்கள் காணாத ஒளியை;நம் தோல் உணராத ஸ்பரிசத்தை இப்படி நடக்காத ஒன்றை; இல்லாத ஒன்றை நம் அறிவு இருப்பதாக காட்டி நம்மை ஏமாற்றுகிறது.ஒரு வகையில் இங்கே ஏமாற்றுவதும் ஏமாறுவதும் இரண்டும் நம் அறிவு தான்.
இந்த கனவு தான் ஜட இயற்கையில்(material world) நாம் வாழும் வாழ்க்கை. பாட்ஷா படத்தில் பிளாஷ்பேக் க்குள் பிளாஷ்பேக் வருவது போன்று கனவுக்குள் கனவு கண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
“இல்லாததை இருக்கிறது மாதிரி காண்பித்தால், அது கனவு! நான் பார்க்கிறதையும் கேட்கிறதையும் என் அறிவு காட்டும் போது அது எப்படி கனவு ஆகும்.இப்படி யோசித்தால், வாழ்க்கையையே கனவென்று நீங்கள் சொல்வதை எப்படி ஏற்க முடியும்?” இப்படி ஒரு கேள்வி எழலாம்.
சென்ற பகுதியில் ஒரு இயற்பியல் வகுப்புக்கு சென்றது போல, மீண்டும் ஒரு இயற்பியல் வகுப்புக்குள் செல்லலாம். அடிப்படையில் ஒலி, ஒளி இரண்டும் ஒன்று. இரண்டுமே ஒரு அதிர்வு, ஒரு அலை(கதிர்வீச்சு).
இங்கு நாம் காண்கின்ற கேட்கின்ற என்று இங்கு இருக்கும் எல்லாமே ஒன்று தான். அதிர்வுகள்(vibes),அலைகள்(waves).
ஒலி அலையின் நீலம்(wavelength) அதிகமானது,ஒளி அலையின் நீலம்(wavelength) குறைவானது. அலைநீளத்தின் படி மனித கண்களால் குறிப்பிட்ட சரகத்திற்குள் (rangeகுள்) உள்ள கதிர்வீச்சுகளை(rays) தான் காண முடியும். காதுகளால் குறிப்பிட்ட சரகத்திற்குள் உள்ள சத்தங்களை தான் கேட்க முடியும்.
அலையின் நீலம் (wavelength)அதிகரிக்க அதிகரிக்க அது சத்தமாக நம் காதுகளில் ஒலிக்கிறது.குறைய குறைய வண்ணமாக நம் கண்களில் தெரிகிறது.இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் தான்.
அடிப்படையில் இது எல்லாம் ஒன்று தான் என்று உணர்த்தும் கருவி நம் உடம்பில் இல்லை அல்லது நாம் உணரவில்லை.ஒரு காட்சி, அது நாம் காண்பது போலத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.அதே ஒரு ஒலி நாம் கேட்பது போல தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
வேறு கிரங்களில் ஏதேனும் உயிர்கள் இருந்தால் அவர்களின் கண்களுக்கு நம் காதுகளில் சத்தமாக கேட்கும் அலை(waves) ஒளியாக தெரிய வாய்ப்பிருக்கின்றது.
போன பகுதியில், மூட நம்பிக்கையை பற்றி பேசியிருந்தோம்.கடவுளை நம்புவது மூட நம்பிக்கை என்பவர்கள், கண்களால் பார்ப்பதையும்;காதால் கேட்பதையும் மட்டும் மெய் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள். உங்கள் கடவுள் இருந்தால் அவரை நேரில் வர சொல்லுங்க பார்ப்போம் என்கிற வகையறாக்கள்; அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் கருவிகள் சொல்வதையே நம்புகிறவர்கள்; எல்லாவற்றுக்கும் விஞ்ஞான சான்று கேட்பவர்கள். விஞ்ஞானமும் கூட பொய்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை அறியாதவர்கள்.
அவர்களுக்கும் சேர்த்து ஆன்மீகம் சொல்வது என்னவெனில், “நீ பார்ப்பது கேட்பது எல்லாமே பொய்”.
மாயா! மாயா! மாயா! எல்லாம் மாயா! சாயா! சாயா! சாயா! எல்லாம் சாயா!
பாபா படத்தில் வரும் பாடல் வரிகள் தான் அது.
பாபா படத்தில் ரஜினி பேசிய ஆன்மீகத்தையும் நாம் புரிந்துகொள்ளவில்லை. ரஜினி முன்மொழிந்த அரசியலையும் புரிந்துகொள்ளவில்லை. ஒருவர் புரிந்த கொண்ட விஷயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது தான் நம் பார்வையில் அவர் பைத்தியமாக, மெண்டலாக தெரிகிறார். அப்படி பலரின் பார்வையில் ரஜினி மெண்டல் என்ற அளவிலேயே நின்று விட்டார்.சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். தலைப்புக்கு வருவோம்.
நம்முடைய இந்த புலன்கள்(senses) ஜட இயற்கையோடு(material world) கொள்ளும் தொடர்பினால் ஏற்படும் இன்பம் துன்பம் என்பது பருவகாலம் போல தோன்றி மறைவது என்கிறார் கிருஷ்ணர்.புலன்கள் ஜட இயற்கையோடு கொள்ளும் தொடர்பினால் உடலுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை பற்றி, மனித குணங்கள், உணர்ச்சிகள் பற்றியெல்லாம் இன்னும் சில இடங்களில் பேசுகிறார்.
இதில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது, இங்கே நம் புலன்கள் காட்டும் எதுவும் மெய்யில்லை.எல்லாமே நம் கனவு போல தான். புலன்களும் மனமும் நமக்கு காட்டுவதை நிஜம் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றோம்.
முன்பு சொன்னது போல நம் கண்களால் நாம் பார்க்கும் ஒரு காட்சி நாம் பார்ப்பது போல தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நம் கண்களுக்கு அது அப்படி தெரிகிறது.இப்படி நம் புலன்களை கொண்டே இந்த பிரபஞ்சத்தையும் வாழ்க்கையையும் அணுகும் நாம் புலன்கள் காட்டும் பொய்களின் அடிப்படையில் ஆசை,பயம்,கோபம்,போன்ற உணர்வுகளை கொள்கிறோம்.அவை எல்லாமே தேவையற்றது.
நம் புலன்கள் நமக்கு காட்டுவது மட்டும் தான் இந்த பிரபஞ்சம் என்று நம்பிக்கொண்டிருப்பதை விட மூடத்தனம் வேறு இல்லை.முந்தைய பகுதியில் சொன்னது போல, இதையெல்லாம் புரிந்து கொள்வது நிச்சயம் கடினமாக தான் இருக்கும். அதற்காக தான் ஆன்மீகம் பக்தி என்னும் வழியை காட்டுகிறது.
நீ எதை கடவுளாக நம்புகிறாயோ; யாரை கடவுளாக நம்புகிறாயோ; அவரிடம் சரணாகதி அடைந்துவிடு என்கிறது.நம் புலன்களால் புரிந்து கொள்ளமுடியாத கடவுளை புலன்களை கொண்டு அடைவதற்கான வழி பக்தி ஒன்று தான். ஆன்மீகம் சொல்லும் ஞானங்களை புரிந்து கொண்டு கடவுளை அடைய, பாபா படத்தில் சொல்வது போன்று ஆசை பயம் இரண்டையும் துறக்க வேண்டும். உடம்பை பெற்று இருக்கும் மனிதன் ஜட இயற்கையின் பொய்மையை புரிந்து கொண்டாலும் பயத்தை துறப்பது சிரமமானதாகும்.கனவில் இருக்கும் ஒருவனுக்கு எல்லாமே கனவு என்று தெரிய வரும் போது இருக்கின்ற பயம், அவனை உண்மையில் நிலையில் இருந்து மீண்டும் கனவிற்கு அழைத்து செல்லும் தூக்கத்தை விரும்ப செய்வது போல. ஒரு நாள் நீங்கள் பார்க்கின்ற கேட்கின்ற எல்லாமே பொய் என்று உங்களை ஒருவர் வேறு உலகத்திற்கு அழைத்து சென்றால் நிச்சயம் பயம் வரும் தானே?இந்த உலகம் பொய் இதை விட்டு செல்ல வேண்டும் என்னும் எண்ணத்தை தடுப்பது இந்த உலக வாழ்க்கை மீது கொண்டுள்ள ஆசையும் அதை விட்டுவிடக்கூடாது என்கிற பயமும் தானே?
ஆனால், மாணிக்கவாசகர் பயப்படவில்லை,ஏங்குகிறார். காரணம், சரணாகதி.
கேட்டாரும் அறியாதான் என்று நம்மை தான் சொல்கிறார்.கடவுளை பற்றி எத்தனை கேட்டாலும் எவ்வளவு படித்தாலும் நம்மால் அறிய முடியாத கடவுள்,மாணிக்கவாசகருக்கு காணாததையெல்லாம் காண்பித்து கேட்காததையெல்லாம் கேட்பித்து, அவரை பிறப்பு இறப்பில் இருந்து மீட்தாக சொல்லும் பாடல்.இப்படி வேறு ஒரு உலகத்தின் எல்லை வர சென்ற மாணிக்கவாசகர், இறைவன் தன்னை இந்த உடலோடு விட்டுவிட்டு எங்கே சென்றான் என்று ஏங்கி தேடுவதே திருவாசகம்.
இறைவனிடம் சரணாகதி அடைந்த ஒருவரால் மட்டுமே தான், நம் புலன்கள் கேட்காத காணாத மெய்களை காணும் போதும் கேட்கும் போதும் பயமில்லாமல் இருக்க முடியும்.சரணாகதி நிலைக்கு பக்தி தான் வழி. அந்த பக்தியின் வாயிலில் ஜட உலகில் கடவுள் என்கிற பெயரில் நமக்கு காட்டப்படும் பொய்கள் தான் நிற்கிறது.கடவுளைத் தவிர இங்கு எதுவுமே உண்மை இல்லை என்கிற போது பொய்யும் கடவுள் என்று கடவுளை ஏதோ ஒரு வழியில் நம்புவது சரியாக தான் இருக்க முடியும். அதனால், நாம் நம்பாவிட்டாலும், நம்மிடம் பக்தி இல்லாவிட்டாலும் அறிவு விஞ்ஞானம் என்கிற பெயரில் பக்தி மார்க்கத்தில் இருக்கும் ஒருவரை குழப்பாமல் இருக்க வேண்டும்.ஏனெனில் நாம் நம்பும் இந்த உலகம், விஞ்ஞானம், எல்லாம் பொய்களால் செய்யப்பட்ட உலகமே ஆகும்.