என்னுடைய வரலாற்று பாடம், சரியாக எந்த வகுப்பு பாடம் என்று நினைவு இல்லை.7 முதல் 9ம் வகுப்பிற்குள் இருக்கும்.அந்த புத்தகத்தில் சிந்து சமவெளி நாகரீத்திலும் கூட சிவனை வழிபட்டார்கள் என்பது போன்ற வாசகம் இருந்தது, இதை பற்றி பல்வேறு பார்வைகளும் கருத்துக்களும் இருந்துவருகிறது.சிவனைப் பற்றி நம் புராணங்கள் சொல்லாத கதைகள் இல்லை.
பாரதம் பல்வேறு முகங்களை பெற்று பல குழுக்களாக ஆன பின்பும் கூட இங்கு எல்லாக்குழுக்களும் பொதுவாக இருப்பது சிவம் என்பது மட்டுமே.பாரதம் முழுவதும் சிவம் என்பது பரவி இருந்தாலும் கூட தென்பகுதியில் தான் அநேகமான சிவாலயங்கள் இருப்பதாக தெரிகிறது.சிதிலமடைந்ததும் அழிந்தும் போனதும் போக மீதம் இருக்கும் கோவில்களை கணக்கில் கொண்டாலே.ஊருக்கு ஒரு சிவாலயம் இருக்கிறது எனலாம்.
யார் இந்த சிவன்,பரந்துபட்ட பாரத சமூகத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் பரவியிருக்கும் இந்த சிவன் யார்?
இந்த கேள்வி எனக்கு சிறு வயதிலேயே வந்துவிட்டது.தென்னாடு முழுதும் இருக்கும் சிவன் கோவில்களில் சிவனுக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள் எல்லாம் சிவனுடைய பெயராக எப்படி இருக்க முடியும். அதே போல் அந்த கோவில்களில் இருக்கும் அம்மனுக்கு வழங்கப்படும் பெயர்கள் எல்லாம் பார்வதியாக(சக்தியாக) எப்படி இருக்க முடியும்.ஒரு கட்டத்தில் நானாக ஒரு முடிவுக்கு வந்தேன்.அந்த முடிவிற்கான அடிப்படையாக நான் எடுத்துக்கொண்டது, மீனாட்சி அம்மன் கோவிலை மட்டும் தான், பாண்டிய மன்னனின் மகளுக்கு எழுப்பப்பட்ட கோவில். உலகில் உள்ள எல்லா மனித சமூகத்திலும் அரசர்கள், முனிவர்கள், சமூகத்தின் காவலர்கள்(சிறு தெய்வ வழிபாடு) இவர்கள் நினைவாக ஆலயங்கள் மாடங்கள் இவைகள் கட்டும் வழக்கம் இருந்து இருக்கின்றது அரேபியர்களும் கூட நபிகளுக்கு முந்தைய காலத்தில் சிலைகளை வழிபட்டு வந்ததாக தெரிகிறது. முன்னோர்களுக்காக எழுப்பப்பட்டஆலயங்கள் போன்றதே சிவாலயங்களும் என்று நானாக தீர்மானித்து கொள்கிறேன், இந்த சிவாலயங்கள் அந்த ஊர்களில் வழங்கப்படும் பெயர்களில் வாழ்ந்தவர்களாக இருக்க கூடும் இதை மொத்தமாக யாரோ எல்லாம் சிவன் என்று நம்மிடம் சிவம், சிவன் என்னும் கருத்தை திணித்து இருக்கின்றார்கள் என்றெல்லாம் தீர்மானித்துக்கொண்டேன். முதிர்ச்சியற்ற நிலையில் இருந்த என்னுடைய புரிதல் அது.
உண்மையில் யார் தான் இந்த சிவன்?அதனை நம் பாரத சமூகம் எவ்வாறு எல்லாம் வரையறை செய்து வைத்து இருக்கின்றது என்பதை அலசுவதே இந்த பகுதி.
இறைவனுக்கு நான்கு நிலைகள் இருப்பதாக நம் சைவ நூல்களில் சொல்லப்பட்டு இருக்கின்றது என்று இலங்கை ஜெயராஜ் அவர்கள் தன்னுடைய சொற்பொழிவு ஒன்றின் இடையில் குறிப்பிட்டார். அந்த நான்கு நிலைகள்:உருவம், அருவம், அருவுருவம், சொரூபம் என்பதாம். உருவ வழிபாடு என்பது இறைவனை ஒரு உருவத்திற்குள் வரையறை செய்து வழிபடுவது.அருவம் என்பது உருவமில்லாத நிலை, இறைவனை மனத்தால் நினைத்து வழிபடுவது. அருவுருவம் என்பது உருவமாகவும் இல்லாமல் அருவமாகவும் இல்லாமல் நிலை, லிங்கவழிபாடு. சொரூப நிலை, இந்த நிலையை பற்றி இறைவன் துணை அல்லாமல் மனித நிலையில் இருந்து புரிந்து கொள்ளுதல் அரிது என்கிறார் திருநாவுக்கரசர். “இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே” என்று சொல்ல முடியாத ஒன்று தான் இறைவன்(சிவன்) என்கிறார் திருநாவுக்கரசர்.
மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான் ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன் ஓரூர னல்லன் ஓருவம னில்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே
இந்த சிவனின் தோற்றத்தை பற்றி பேசும் கதைகள், பிரபஞ்சத்தில் ஏதுமில்லாது இருந்த போதும் சிவன் இருந்தான் அவன் தானாக தோன்றினான் என்கிறது.
கட்டுரை எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் கொண்டிருப்பது போல இருக்கின்றது தானே? இறைவனை படித்து புரிந்து கொள்ள முற்படும் போது இப்படியான தடுமாற்றம் இயல்பானதே.இந்த இடத்தில் பைரேட்ஸ்ஆப் தி கரிபீயன் திரைப்பட வசனம் ஒன்று நினைவிற்கு வருகிறது.
சில பதில்களுக்கான தேடலில் நாம் நம்மை தொலைக்காமல் அந்த பதில்களை நாம் பெறுவதில்லை.தன்னை தொலைப்பவர்களே கடவுளை அடைகிறார்கள். தான் என்னும் அஹங்காரம், என்னுடையது என்ற மமகாரம் இன்றி நான் என்பதை தொலைப்பவர்களே இறைவனை அடைகிறார்கள்.சரி,தலைப்புக்கு வருவோம்.
இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கூறிலும் இறைவன் வியாபித்து இருக்கின்றார்.அந்த ஓவ்வொரு கூறிலும் ஆண் பெண் என்று இரு வகை தன்மைகள் இருக்கின்றது. ஆண்-சிவன்; பெண்-சக்தி.
ஆண்-வஸ்து அல்லது ஜடம் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் ஆங்கிலத்தில்’matter’ என்பார்களே அது;பெண்-ஆற்றல் ‘energy’ என்பார்களே அது.இந்த இரண்டும் எங்கு இருந்து வந்தது, ஏதுமற்ற வெறுமையில்(’emptiness’) இருந்து. அந்த வெறுமையும் சிவன் (இறைவன்)தான்.
என்னுடைய புரிதலின் படி இந்த கருத்தியலின் அடிப்படையை கொண்டே சிவன் சக்தி என்னும் இறைக்கோட்பாட்டை நம் பாரத கலாச்சாரம் முன்னிறுத்துயிருக்க கூடும்.
உதாரணமாக சிவன் சக்தியின் சேர்க்கையே படைப்பின் மூலம் என சொல்லும் திருமந்திரம் அன்பு தான் சிவம் என்கிறது.இந்த கருத்துக்களின் அடிப்படையில் சிவனையும் சக்தியும் ஒரு வட்டத்திற்குள் ஒரு material form குள் அடைத்துவிட முடியாது என்பது திண்ணம்.
விஞ்ஞானத்தின் ஆகப்பெரும் ஊகமான, பெருவெடிப்புக் கோட்பாடு தான் விஞ்ஞானத்தின் படி படைப்பின் மூலம். இந்த பெருவெடிப்பு ஏற்பட அங்கே சிவன்(matter) சக்தியின்(energy) சேர்க்கை அவசியமாகிறது.திடமான வஸ்து(matter) ஆற்றலினால்(energy) உந்தப்பட்டால் தான் வெடிப்பு நிகழ முடியும்.இப்படியாக பிரபஞ்சத்தில் எந்த ஒரு படைப்பு நிகழ்வதற்கும் அங்கே சிவன்(matter) சக்தியின்(energy) சேர்க்கை அவசியமாகிறது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய சுவாரசியமான விஷயம் ஒன்று இருக்கின்றது.நம் கலாச்சாரம் நமக்கு சொல்லும் கதைகளில், “சிவன் சக்திக்கு பாதியை தந்தான்; சிவனுக்குள் தான் சக்தியும் இருக்கின்றது” சொல்லப்பட்டு இருக்கின்றதே தவிர.சக்தி சிவனுக்கு பாதியை தந்தாள் என்றோ அல்லது சக்திக்குள் தான் சிவன் இருக்கின்றான் என்றோ சொல்லவில்லை.
காரணம்,ஒரு வஸ்துவில் (matter) நிச்சயம் ஆற்றலும்(energy) இருக்கும். ஆனால், ஆற்றலுக்குள்(energy) வஸ்து(matter) இருப்பதில்லை.
சிவத்திலிருந்து சக்தி வெளிப்படுகிறது.சிவத்தினுள்ளே தான் சக்தியும் இருக்கின்றது. Every matter has energy in it. But, matter is not within energy.
தென்னாட்டு சிவாலயங்களில் சிவனை நாம் ஸ்தாபித்து முறையும் கூட இதை சுட்டுகிறது எனலாம்.சிவாலயங்களில் சிவன், ஆண் மற்றும் பெண் அடையாளங்கள் சேர்ந்த லிங்க வடிவில் இருக்கும் பொழுது சக்தியை தனியாக பெண் வடிவமாக மட்டுமே இருத்தியிருக்கின்றார்கள்.லிங்க வடிவமாக இருக்கும் சிவன் சக்தியும் சேர்ந்த நிலையில் இருக்கின்றார் (matter with energy).
ஆனால், திருவிளையாடல் படம் பார்த்த நம் எல்லோருக்குமே தெரியும், “சக்தி இல்லையேல் சிவன் இல்லை சிவன் இல்லையேல் சக்தி இல்லை” செம்ம ல! அதுவும் சரி தான்.ஆக்கவும் முடியாத அழிக்கவும் முடியாத ஆற்றல், ஏதுமற்றதாகவும் எல்லாமுமாகவும் இருக்கும் சிவத்துள் அடங்கி இருக்கின்றது.சிவம் எல்லாமுமாக வியாபித்து இருக்க ஆற்றலே பிரதானமாய் இருக்கின்றது. energy is within matter and matter is in its form because of energy in it.
மேற்சொன்னது தான் சிவன் என்றால், வேதங்களையும் ஆகமங்களையும் சமஸ்கிருதம் தமிழ் என்று இரு மொழிகளையும் தந்தது யார்?
சைவ நூல்களின் படி அவற்றையும் தந்து சிவனே. இதனை நாம் இரு வகைகளில் அணுக முடியும். ஒன்று, இறைவன் ஜடத்தோற்றம் (material form)கொண்டு உயிர்களுக்கு வழிகாட்டும் பொருட்டு யோகம் ஆகமம் இவற்றை ரிஷிகளுக்கு கொடுத்திருக்க முடியும் என்று கொள்ள முடியும். கதைகளும் அப்படியாகவே சொல்லப்பட்டு இருக்கின்றது. தெற்கு நோக்கி அமர்ந்து தன் சீடர்களான ரிஷிகளுக்கு பரமஞானத்தை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
வேறு ஒரு பார்வையில், மொழியை பொறுத்தவரையில் அது ஆற்றலின் வடிவம்(form of energy-sound energy) அதனை சிவன்(matter) சக்திக்கு(energy) சொல்லி உலகம் உய்ய செய்தான் என்கிறார்கள்.அந்த ஆற்றல்(energy) உயிர்களின் ஜட உடம்பில்(matter) இருந்து வெளிப்படுவது இவ்வாறாக உயிர்களை இறைவன் பேச செய்தது அப்படியாக சொல்லப்பட்டது என்று கொள்ளலாம்.ஆகமங்களை பொறுத்தவரையில், மெய்யுணர்வினால் இறையை உணர்ந்தவர்களுக்கு உணர்த்தப்பட்டதே அந்த ஆகமங்கள் என்று கொள்ளலாம்.இப்படி நாம் சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை,கதைகளிலும் கூட சிவன் அமைதியாகவே இருந்தார் ஒரு வார்த்தை கூட பேசாமல் ரிஷிகளுக்கு ஞானம் உபதேசிக்க பட்டதாக சொல்லப்படுகிறது.
மொழிக்கு நான்கு நிலைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.அவை நுண்மை, பொதுமை, இடைமை, பருமை என்பதாகும். அவை முறையே,
சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி` என வடமொழியிற் சொல்லப்படும். இடைமை , பருமை என்னும் நிலைகளிலேயே மொழி தமிழ் சமஸ்கிருதம்எ ன்கிற வேறுபாட்டை அடைகிறது. ஆகமங்களை சிவனிடம் இருந்து பெற்றவர்கள்,மொழியின் வேறுபாடற்ற; வார்த்தைகளற்ற நுண்மை நிலையில் பெற்றதாக அறியப்படுகிறது. அந்த நிலையில் ஆகமங்களை உணர்த்த இறைவன் ஜட தோற்றம் பெற வேண்டியதில்லை அதனை பெறுபவர்கள் மெய்யுணர்வில் நிலைத்தால் போதுமானது.அந்த ஆகமங்களை சித்தர்கள் யோகிகள் இடைமை என்னும் மொழி நிலையில் பெற்று மக்களுக்கு பருமை என்னும் நிலையில் ஒலி வேறுபாடுகளுடைய மொழியில் தந்து உள்ளார்கள்.
மொழிகளின் நான்கு நிலைகளை போன்றதே சிவம் என்பதை நாம் வரையறுத்து வைத்திருக்கும் நான்கு நிலைகளான உருவம்,அருவுருவம்,அருவம்,சொரூபம்.
மொழியின் நுண்மையான நிலையை போன்றதே இறைவனின் சொரூபம் நிலை ஜட உடம்போடு புரிந்துகொள்ளமுடியாதது. ஜட உடம்பிற்கு புரிய வேண்டிய மொழியின் பரு நிலை இறைவனால் (இறைவனால்-சிவனால்-இயற்கையால்) ஏற்படுத்தப்பட்டது போன்றதே சிவனை நம் கலாச்சாரம் வரையறுத்து வைத்து இருக்கும் உருவநிலை மற்றும் அருவுருவ நிலை.
“என்ன தான் சொல்ல முற்படுகிறர்கள்? ஒன்றும் விளங்கவில்லை” என்றால் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்.”இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே” என்று நிச்சயம் வரையறுத்து சொல்ல முடியாத ஒன்று தான் சிவம்.வரையறைகளுக்குள் அடங்கிவிடாததும் சிற்றறிவினால் விளங்கிக்கொள்ள முடியாததுமே சிவம்.