வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். ஆன்மீகம் பற்றிய தொடரிலும் கூட அரசியலா? என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது.

இந்த கட்டுரைக்கு என்ன தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. ‘வலதுசாரி கடவுள்’  என்பது ஓரளவு நெருக்கமாக இருக்கும் என்பது எம் எண்ணம். கட்டுரையை முழுதும் படித்துவிட்டு என்ன தலைப்பு சரியாக இருக்கும் என்று சொல்லுங்கள்.

கடவுள் மீதான நம்பிக்கை இல்லாமல் இருந்த நாட்களில், என்னுள் சில மேதாவித்தனமான கேள்விகள் எழுந்திருக்கின்றது.இன்றும் பல மேதாவிகள் அந்த கேள்விகளோடே தான் இருக்கின்றார்கள்.நாம் எப்போதும் சொல்வது போல், பதில்களை தேடும் கேள்விகள் நிச்சயம், பதில்களை கண்டடையும். வாதம் செய்ய வேண்டுமென்பதற்காக மட்டும் எழுப்பப்படும் கேள்விகள், எந்த காலத்திலும் பதில்களை அடைவதில்லை.

என்னுடைய 13-16 வயதுகளில் தான், என்னுள் நாத்தீக சிந்தனைகள் இருந்தது.பள்ளியில் பதினோறாம் வகுப்பில் இருந்த பொழுது நடந்தேறிய சில நிகழ்வுகள் தான்,கடவுள் பற்றிய கதைகளில், “எது உண்மை? எதுவெல்லாம் உண்மை?” என்னை தேட செய்தது.

அதே அந்த பதினோறாம் வகுப்பின் பொழுது, தேர்வு எழுத வேண்டி, ஒரு நாள், வேறு ஒரு வகுப்பறைக்கு செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு சுவற்றில், ஒரு திருக்குறள் எழுதப்பட்டு இருந்தது. அந்த குறளை வாசித்த மாத்திரத்தில் என் மனம்,”ஆமா ல” என்றது.நாம் படிக்கும் விஷயங்கள் அல்லது கேட்கும் அறிவுரைகள் நம் மனதிற்கு உரைக்க வேண்டுமெனில், அதை நாம் அனுபவித்து இருக்க வேண்டும். அது என்ன குறள்? என்ன அனுபவம்? என்பதைப்பற்றி சொல்வதற்கு முன்னால், ஒரு கதை. நம் எல்லோர்க்கும் பரிச்சயமான, நம் காதுகளில் ‘பூ’ சுற்றிய கதை.

எல்லாம் தெரிந்த கடவுளுக்கு, ‘நாரதர் என்னும் ஒருவர், ஒரு பழத்தோடு நம் வீட்டுக்கு வருகிறார். அது இரண்டு ஆண் பிள்ளைகள் கொண்ட நமக்கு சிக்கலை உண்டாக்கும்’ என்று தெரியாமல் போகிறது. அல்லது தெரிந்தும் தடுக்காமல் விட்டுவிடுகிறார்.

இறைவன், நாரதரை தடுக்கவும் இல்லை; தடுக்க நினைக்கவும் இல்லை. நாரதர், ஒரே ஒரு பழத்தோடு வந்தும் விடுகிறார். அதை ஒருவருக்கு தான் கொடுக்க வேண்டும்; பிரித்து எல்லாம் கொடுக்கக்கூடாது என்கிறார்.

நீங்கள் சிந்தியுங்கள், இன்றும் இந்த கதை சொல்லப்பட்டு வந்தாலும், இந்த கதையை இந்த காலத்தில் படமாக ஆக்கியிருந்தால், சட்டையை மாட்டிக்கொண்டு வந்து என்ன சொல்லியிருப்பார்கள் ?

“என் வீட்டுக்கு யாரவது திண்பண்டம் வாங்கி வந்து, இப்படி தான் சாப்பிடணும் அப்படி தான் சாப்பிடனும் என்று சொல்லியிருந்தால், நீயே எடுத்துட்டு போ சாமி! எங்களுக்கு ஒன்னும் வேணாம்” என்று சொல்லி விமர்சித்து கல்லா கட்டியிருப்பார்கள்.

சரி, கதைக்கு வருவோம், யாராவது ஒருவருக்கு தான் பழம், நானே எடுத்துக்கொள்கிறேன் என்று இறைவன் எடுத்துக்கொண்டு இருக்கலாம்; அதுவும் நடக்கவில்லை. “ஊருக்குள் இருக்கும் எல்லா தெருக்களையும் சுற்றி யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு தான் பொண்ணு” என்று வானவராயனுக்கும் வல்லவராயனுக்கும் எஜமான் திரைப்படத்தில் போட்டி வைத்தது போல், உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு தான் அந்த பழம் என்று நம்ம கணேஷுக்கும் சுப்ரமணிக்கும் போட்டி அறிவிக்கிறார்கள். கணேஷ் வீட்டிற்குள்ளேயே அம்மாவையும் அப்பாவையும் சுற்றி வந்து, மயிலேறி உலகம் சுற்ற போன சுப்பிரமணி வீடு திரும்பும் முன் பழத்தை வாங்கிக்கொள்கிறார்.

“இறைவன் நாரதரை ஏன் தடுக்கவில்லை?

தானே அந்த பழத்தை ஏன் எடுத்துக்கொள்ளவில்லை? 

தந்தைக்கு உபதேசம் செய்யும் அளவிற்கு ஞானமிருந்தும் சுப்பிரமணிக்கு ஏன் அந்த சிந்தனை தோன்றவில்லை? “

என்கிற பல கேள்விகளுக்கு விடையாக அமைகிறது கதையின் கருத்து.

மாணவப்பருவத்தில், தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்பது தான் நம்முடைய அதிகபட்ச வேண்டுதலின் மையமாக இருந்திருக்கும்.

“நான் பாஸாக வேண்டும்”

“நான் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் “

“நான் பெயிலாகிட கூடாது” என்று அவரவர் அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப வேண்டியிருப்போம், கடவுளிடம் வேண்டுவதிலும் கூட பல சமயங்களில் நம்மிடம் ஒரு கஞ்சத்தனம் இருக்கவே செய்கிறது.

“என் கடனெல்லாம் தீர்ந்துவிட வேண்டும்” என்று வேண்டிக்கொள்பவர்கள் என்னை பெரிய பணக்காரனாக்கி விடு என்று வேண்டுவதில்லை. சத்தியமாக கோவிலுக்கு செல்லும் அத்தனை மனங்களின் வேண்டுதலும் தன்னை ஒரு எல்லைக்குள் வைத்துக்கொள்கிறது.இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்,

"வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
       உள்ளத் தனையது உயர்வு " என்று.

இது தான் நீ பதினோறாம்  வகுப்பில் வாசித்த குறளா?

இல்லை.

உங்களில் எத்தனை பேர் தேர்வுக்கு முன்னர், இறைவனை வேண்டி இருக்கிறீர்கள்? என்னவெல்லாம் கேட்டு இருப்பீர்கள்? தேர்வை விட்டுத்தள்ளுங்கள். வாழ்க்கையில் என்னவெல்லாம் வேண்டும் என்று கேட்டு இருப்பீர்கள். எல்லாமே நடந்ததா ? நடந்து இருக்காது.

நான் பலமுறை 100 மதிப்பெண் வேண்டும் என்று இறைவனை கேட்டு இருக்கின்றேன். எல்லா முறையும் எல்லா பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்ததில்லை. இது போன்ற சமயங்களில் தான் மனம் நாத்தீக சிந்தனைகள் பக்கம் செல்லும்.

சாஅ… மி! கா..அ ..ப்பாஅ…த்து! என ஆரம்பித்து,”first rank  வேணும்; 100 mark எடுக்கணும்; காசு வேணும்; வீடு வேணும்”

இப்படி  ஒவ்வொருவரும்  என்னென்ன வேண்டிக்கொள்வார்கள்! அத்தனை பேர் கேட்பதும் நடந்துவிட போகிறதா? கடவுளுக்கு எத்தனை காதுகள் இருக்கும்? அவர் எதை கேட்பார்? அவருக்கு என்ன மொழி புரியும்?

கடவுள் என்ன செய்வார்? அப்படி ஒருவர் இருக்கின்றாரா? என்ற கேள்விகளோடு இருந்த காலத்தில் தான் அந்த குறளை முதன்முதலாக பார்த்தேன்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
 மெய்வருத்தக் கூலி தரும்"

“yes! He is right.” அந்த வயதில் இந்த குரலை படித்த மாத்திரத்தில், இது தான் தோன்றியது.

என் பள்ளிக்காலத்தில் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தும்; பலமுறை இறைவனை வேண்டியும் கூட மூன்று முறை மட்டுமே நூறு மதிப்பெண்கள் எடுத்து இருந்தேன். அந்த மூன்று முறையும் குறிப்பிட்ட அந்த பாடங்களில் வேறு ஒருவரும் நூறு மதிப்பெண்கள் எடுக்கவில்லை.

மூன்றாம் வகுப்பு,சமஸ்கிருத பாட மாத தேர்வு,அந்த தேர்வுக்கு முன்னதாக எதிர்பாராத விதமாக விடுமுறை நீட்டிக்கப்படுகிறது. திட்டமிட்டு தேர்வுக்கு முன்னர் மூன்று நாள் விடுமுறை என்று இருந்தால், என்னுடைய டியூஷன் மிஸ் என்னை வேறு ஒரு பாடத்தை படிக்க சொல்லியிருப்பார்.மூன்று நாளும் அதே பாடத்தை மீண்டும் மீண்டும் படித்து எழுதி பயற்சி செய்கிறேன். “ஹனுமான்” என்கிற வார்த்தையை எல்லோரும் பிழையாக எழுதியிருந்தார்கள். அந்த ஒரு வார்த்தை தான் நான் ஒருவன் மட்டும் நூறு மதிப்பெண் எடுக்க காரணமாக அமைந்தது.மூன்று நாளும் ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் பயற்சி செய்யாமல் இருந்திருந்தால்,எத்தனை கடவுள்களை வேண்டியிருந்தாலும் நூறு மதிப்பெண் எடுத்து இருக்க வாய்ப்பில்லை.

ஒன்பதாம் வகுப்பு,கணக்கு பாடத்தில்,statisticsபற்றிய பாடம்,எனக்கு ஒரு டியூஷன் மிஸ் அமைந்தார்கள்,டியூஷன்  முடிந்து வீட்டிற்கு சென்று தினம் ஒரு கணக்கு வீட்டில் எழுதி வந்து காண்பிக்க வேண்டும். statistics பாடம் நடத்தப்பட்ட அந்த மாதம் முழுதும் ஒரே மாதிரியான கணக்கு தினமும் எழுதி பழக்கப்பட்டுவிட்டது.தேர்வுக்கு முன்னர்,கடவுள் ஒரு வேலை செய்கிறார். எனக்கு தெரியாத ஒரு கணக்கை எப்படி செய்வது என்று நண்பனிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். தேர்வில் அந்த கணக்கும் வருகிறது, நண்பனிடம் கேட்டு தெரிந்துகொண்டதை வைத்து அந்த கணக்கை போட்டால்,விடை தவறாக வருகிறது. ஒரு சந்தேகத்தில்,தேர்வுக்கு சற்று முன்னரே கேட்டு தெரிந்து கொண்ட அந்த கணக்கின் விடையை சரியாக எழுதிவைத்தேன். அந்த கணக்கிற்கான விடையை மற்ற எல்லோரும் தவறாக எழுதியிருந்தார்கள்.எனக்கு அதை கற்றுக்கொடுத்த என் நண்பனையும் சேர்த்து.

ஏற்கனவே, மூன்று கதை சொல்லிவிட்டதால், மூன்று நூறுகளில் ஒரு கதையை, cut செய்துவிடலாம்.

அன்பு தான் கடவுள் என்கிறார்கள். ‘இந்த கடவுள் ஏன் எல்லோரிடமும் அன்பாக இருப்பதில்லை’ என்கிற எண்ணம் நமக்கு பல சமயங்களில் எழுந்திருக்கும். அவர், எல்லா மாணவர்களையும் எல்லா தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் எடுக்க செய்து இருந்தால் என்ன? எல்லோரையும் ஆகப்பெரும் பணக்காரர்களாய் ஆக்கியிருந்தால் என்ன? சரி இது எதையும் செய்ய வேண்டாம், அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் ஆளுக்கொரு ஞானப்பழம் கிடைக்கும் படி செய்து இருந்தால் என்ன?

பொதுவான விஷயங்களை, இயற்கை(இறைவன்) எல்லோருக்கும் பொதுவாகவே வைத்து இருக்கின்றது. ஞானப்பழம் போன்ற உயர்வான விஷயங்களை, அப்படி வைப்பதில்லை என்றாலும், வாய்ப்புகளையும், வழிகளையும் அது பொதுவாகவே வைக்கின்றது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
 செய்தொழில் வேற்றுமை யான்

மேலே உள்ள குறளில், தொழில் என்பது, நம் செயல் அனைத்தையும் குறிக்கின்றது. நம் முயற்சி, நாம் நடந்துகொள்ளும் விதம், என்று அனைத்தையும் குறிக்கின்றது. இதையே தான் கீதையும் சொல்கிறது. அவரவர் குணங்களையும் செயல்களையும் பொறுத்து; இறைவன், வேறுபாடுகளை  உருவாக்கி வைத்து இருக்கின்றார் என்று.

கீதை 04:13

வள்ளுவர் சொன்னது போல, தெய்வத்தால் ஆகாது என்றாலும், இறைவனால் மற்றுமொரு ஞானப்பழத்தை உண்டுபண்ணி விட முடியாது என்று கொண்டாலும், நாம் செய்யும் முயற்சி, அதற்கான பலனை நிச்சயம் தரும்.விநாயகர் முருகன் என்று இருவரும் முயற்சி செய்தார்கள் தானே?என்கிற அடுத்த நிலை கேள்வி எழும்.

வாய்ப்புகள் ஒரே மாதிரியாக அமைந்தாலும்.நாம் அனைவரும் ஒரே மாதிரியான வழிகளை தேர்வு செய்வதில்லை. அதோடு, எல்லோரிடமும் ஒரு தனித்துவம் இருக்கும். நம்முடைய பலம், பலவீனம் இரண்டுமே  நம்முடைய தனித்துவம் தான். பலம் நம் அகங்காரத்தை வளர்க்கிறது.பலவீனம் நம்முடைய அகங்காரத்தை உடைக்கிறது.

முருகன், தன்னிடம் மயில் இருக்கின்றது. அதனால், நமக்கு தான் பழம் கிடைக்கும் என்கிற “over confidence” உடன் இருந்ததன் காரணமாகவே, ஒரு போட்டி என்று வந்த நேரத்தில், அவர் smart  ஆக யோசிக்கவில்லை. ‘EGo’ நம்முடைய நிதானத்தை பலியாக்கி விடும். விடை தவறாக வருகிறது என்று தெரிந்து இருந்தாலும், எனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த என் நண்பனுக்கு, நமக்கு தெரிந்த கணக்கு தானே என்கிற எண்ணம், நாம் செய்வது தான் சரி என்கிற அகந்தையை தந்திருக்கும்.

என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு, கணக்கு தேர்வுக்கு முன்னதாக 5 நாள் விடுமுறை. “நமக்கு தான் எல்லாம் தெரியுமே” என்கிற எண்ணம்.முயற்சியும் பயற்சியுமின்றி தேர்வை சந்திக்கின்றேன். அத்தனை கணக்குகளையும் எப்படி செய்வது என்று தெரியும்.மகிழ்ச்சியுடனும் ஆணவத்துடனும், முதல் கணக்கை ஆரம்பித்து அதில் மட்டுமே அதிகம் நேரம் எடுத்துக்கொள்கிறேன். வெற்றியின் உச்சத்தை அடைவதற்கான வாய்ப்பு எல்லோரையும் போல், எனக்கும் இருந்தும், அதனை நான் தவறவிடுகிறேன்.

இறைவனுக்கு/இயற்கைக்கு, எல்லோரும் பிள்ளைகள் தான். சில பிள்ளைகள் நம்ம கணேஷ் மாதிரி  பெருத்த பிள்ளைகளாக இருக்க, சில பிள்ளைகள் குடு குடு என ஓடும் வண்ணம் இருப்பதோடு, extra fitting ஆக மயில் வேறு வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இங்கு இரண்டு விதமான பிள்ளைகளும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். ஆனால், அகந்தை இல்லாத,முயற்சியை கொண்ட பிள்ளை தான் உயர்வான விஷயத்தை அடைகிறது.

“செய்தொழில் வேற்றுமை யான்”

தொழில்-verb . நம்முடைய actions. நாம் செய்யும் வேலையை மட்டும் இது குறிக்கவில்லை. பணிவு,பொறுமை,அகந்தை இல்லாமல் இருத்தல் என்று நம்முடைய ஒவ்வொரு actions ஐயும் குறிக்கின்றது. நம்முடைய செயல்கள் என்பது நம்முடைய குணங்களின் வெளிப்பாடு. கதையில் நம்ம சுப்ரமணி short tempered,அவசரமான முடிவுகளை எட்டுபவராகவும் இருக்கின்றார்.

ஒருவருடைய முயற்சி மற்றும், திறன் சார்ந்து ஏற்றத்தாழ்வுகள் இருப்பது இயல்பே என்னும் கருத்தை கொண்டவர்கள் தான் வலதுசாரியினர்.அந்த வகையில் இறைவனும் இயற்கையும் வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்களே!

நாத்தீகவாதிகள் ஏற்றுக்கொள்ளும் அறிவியல் சொல்லும், “survival of  the fittest” கருத்தும் இதையே தான் சொல்கிறது. மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்ள முடிந்த உயிரினங்களால் தான் இன்னும் அழியாமல் இருக்கின்றது. அகந்தை கொண்டவர்களிடம் தங்களை சரியான வகையில் மாற்றிக்கொள்ளும் ‘adaptability’ இருப்பதில்லை.நம்முடைய பலம், எல்லா இடங்களிலும் பொருந்திப்போகாது என்று அவர்கள் விளங்கிக்கொள்வதில்லை.

இந்த adaptability உடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர் முற்படுபவர்களே உயர்வை அடைகிறார்கள்.parallel evolution concept ஐ போல. எல்லா குரங்களும் மனிதர்களாகிவிடவில்லை என்பதை சொல்வதே ‘parallel evolution’. ஏன் இறைவன் எல்லா குரங்களையும் மனிதர்களாக்கவில்லை? அகந்தை இல்லாத தன்னை மாற்றிக்கொள்ள தயாராகும் முயற்சி-striving for excellence with egoless adaptability கொண்ட குரங்கள் தான் அறிவியல் கூற்று படி மனிதர்களாகி இருக்கின்றது.

இயற்கையின் எல்லா செயல்களிலும், அதாவது கடவுளின் எல்லா செயல்களிலும் அன்பு மட்டுமே தான் இருக்கின்றது. தேர்வுக்கு முன்னர் 5 நாட்கள் இருந்தும்; ஒரு பயிற்சியும் எடுத்துக்கொள்ளாத ஒரு மாணவன், 200/200 மதிப்பெண் எடுத்துவிட்டால். அது, அவனை விட அதிகம் முயற்சி செய்த, இறைவனின் பிள்ளையான மற்றுமொரு மாணவனுக்கு இறைவன் செய்யும் வஞ்சனை என்று ஆகாதா?இறைவனின் அன்பு இப்படி தான் இருக்கின்றது. இயற்கையின் design இப்படித்தான் இருக்கின்றது.

ஆனாலும் ஒரு வகையில், இறைவன், நாம் கேட்பதை தான் நடந்து கொண்டு இருக்கின்றார்.

ஒரு முறை, மதுரையில் இருந்து தேனி சென்ற பொழுது, “இந்த சாலையின் இருபுறமும்  எத்தனை அழகாக இருக்கின்றது. இந்த சாலையில் அப்படியே நடந்து வர வேண்டும்” என்று நினைத்தேன். மறுநாள்,கலவரம். பேருந்துகள் ஓடவில்லை.”தம்பி!இப்ப நடங்க”  என்று தேனியில் இருந்து மதுரை திரும்பும் பொழுது வெயிலில் நடக்கவிட்டார் இறைவன்.(ஹாஹா)

கேளுங்கள்அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்-பைபிள் ,மத்தேயு 7:7

ஆனால், நமக்கு என்ன வேண்டும் என்று நமக்கு கேட்க தெரிவதில்லை.அதனால், இறைவனிடம் நமக்கு வழியை காட்ட சொல்லி கேட்க வேண்டும்.

பைபிள் யோவான் 14:6 
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.

ஒரு நிமிஷம், நம்ம சுப்பிரமணி, இறைவனை நினைத்து, “போட்டியில் ஜெயிக்க எனக்கு வழியை காட்டுங்கள்” என்று கேட்டு இருக்கலாம். நாம தான் ஜெயிக்க போகிறோம் என்கிற மமதையில் சுப்பிரமணி அதை செய்யவில்லை.

ஞானத்தை; உயர்வை; அடைவதற்கான வழியாக இறைவனே தான் இருக்கின்றார். அந்த இறைவன், அகந்தை இல்லாத அன்பின் உறைவிடமாக இருக்கின்றார்.கணேஷிடம் அன்பு இருந்ததால் தான், அவரிடம் அப்படி ஒரு எண்ணம் தோன்றியிருக்கின்றது.

மூன்று விஷயங்கள்

1. ஆசைகள் இருக்க வேண்டியது தான். அதற்கு எல்லைகள் தேவையில்லை.”வெள்ளத்தனைய மலர் நீட்டம்” என்றதை போல் எண்ணங்களை/ஆசைகளை உயர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.ஆனால், என்ன ஆசைப்படுகிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.இனி, கடவுளிடம் கார் வேண்டும் என்று கேட்டால்,நல்லா  ஒரு volvo, rolls  royce இப்படி கேளுங்கள்.

2. அப்படி நீங்கள் கேட்டாலும் அவர் முயற்சி இருப்பவர்களுக்கு தானே அவர் தருவார். அதனால், அந்த முயற்சி செய்வதற்கான பலத்தை கேளுங்கள்.

3. உங்களிடம் பலம் இருந்து முயற்சி செய்தாலும், உங்களை போன்றே பலம் கொண்ட அதே மாதிரியான முயற்சியை செய்தவரை விட நீங்கள் முன்னேறுவது எப்படி? இறைவனிடம் வழியை கேளுங்கள்.

எதையுமே கேட்பதற்கு, அங்கே “ego” இல்லாமல் இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ego ,மட்டுமில்லை இறைவனிடம் ஒன்றை கேட்கும் பொழுது உங்களுடைய எல்லா எல்லைகளையும்(constraints and boundaries) ஒதுக்கிவிட்டு கேளுங்கள்.

கேளுங்கள்அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.ஆனால், அதை பெற்றுக்கொள்வதற்கு உங்களிடம் smart ஆன முயற்சி இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதனால், கடவுளிடம் smartness ஐ வேண்டுங்கள்.அகந்தை இல்லா ஞானத்தை வேண்டுங்கள்.  

இப்ப சொல்லுங்கள். முயற்சியின் அடிப்படையிலும், செயலின் அடிப்படையிலும்,குணங்களின் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி வைத்து இருக்கும் கடவுள், வலது சாரி தானே?(ஹாஹா).

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *