வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். விதியை பற்றி எழுத முடிவு செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், எழுத வேண்டும் என்கிற விதி இன்று தான் வந்து இருக்கின்றது.

“பொய் சொன்னா;

தப்பு செஞ்சா;

சாமி கண்ணை குத்தும்!”

நம்மில் பலரும் பெற்ற முதல் ஆன்மீக போதனை இதுவாக தான் இருக்கும்.

 எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மேற்சொன்ன போதனைக்கு அடுத்த நிலை போதனையாக இருப்பது இது தான்,

“நன்மை செய்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள், தீமை செய்பவர்கள் நரகத்தை அடைவார்கள்”.

ஒரு நாள், காலையில், அம்மா டீ போட்டு எடுத்துவந்து, அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் கொடுத்துவிட்டு தானும் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது நான், “இறைவனால் தீர்மானிக்கப்பட்ட விதிப்படியே எல்லாம் நடக்கின்றது என்றால் அந்த விதியின் படி ஒருவர் செய்யும் தீமைகளுக்காக ஒருவர் ஏன் நரகத்தில் தண்டிக்கப்படவேண்டும்?” என்று கேட்டேன்.

“அதுக்கு தான், இதை இதை செய்ய வேண்டும் இதை இதை செய்யக்கூடாது என்று சொல்றோம். அதை கேட்டு நடக்க வேண்டும்” என்றார் அப்பா. அவரின் அந்த பதிலில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.காரணம், அதையும் இறைவனே தானே தீர்மானித்து இருக்க வேண்டும்?

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் என்னும் இத்தொடரின் சென்ற பகுதியில், இறைவன் எல்லாருக்குமான வாய்ப்புகளை சமமாக வைத்து அவரவர் எண்ணங்களுக்கும் முயற்சிகளுக்கும் ஏற்பவே நன்மைகள் செய்கிறான் என்று எழுதியிருந்தோம். அதை படித்த வாசகர் ஒருவர், என்ன முயற்சித்தாலும் ஒருவர் விதிப்படி தானே எல்லாம் நடக்கும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்? அந்த கேள்வி தான் மேலே சொன்ன நிகழ்வை எனக்கு நினைவூட்டியது.

விதியை பற்றி எழுத நினைத்தோம், இன்னும் எழுதவில்லை என்கிற எண்ணம் எழும் பொழுதெல்லாம், நானே சில எண்ண முடிச்சுகளுக்குள் சிக்கிக்கொண்டேன்.அந்த முடிச்சுகளை பற்றிய தெளிவு எனக்கு இருப்பதாக நானே நினைத்துக்கொண்டு இருந்தாலும், அதை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்துவது எப்படி!

அந்த வாசகர் கேட்டது சரி தான்.

“வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

      உள்ளத் தனையது உயர்வு”

என்றும்

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

 மெய்வருத்தக் கூலி தரும்”

என்றும் எழுதிய அதே வள்ளுவர். ஊழ் என்று ஒரு அதிகாரம் முழுதும் விதியைப்பற்றி எழுதியுள்ளார்.திருவள்ளுவர், அவர் கருத்தில் அவரே முரண்படுகிறாரா? நிச்சயமாக இல்லை.

தாய் தந்தையர் சேரும் பொழுதே ஒருவனின் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது என்ற திருமூலர், ஆயுளை நீட்டி நோயில்லாமல் வாழ வழி சொல்கிறார்.எதை எடுத்துக்கொள்வது?!

தீர்மானிக்கப்பட்ட ஒன்றை மாற்றுவது எப்படி!

அன்று அப்பா சொன்ன பதிலில் எனக்கு திருப்தி இல்லை தான். ஆனால், அந்த கேள்விக்கான பதில் கிடைக்காமல் இல்லை.

அப்பா, ஒரு ஜோதிடரும் கூட.அவர், ஜோதிடம் சார்ந்த புத்தங்களை வாங்கி சேர்த்து தொடர்ந்து படித்துக்கொண்டே தான் இருந்தார்.ஜோதிடம் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டு அவரிடம் கற்று தர ச் சொன்ன பொழுது, ஒரு ஜாதகத்தை எப்படி கணிப்பது என்பதை மட்டுமே கற்றுக்கொடுத்தார். ஜாதகத்தின் பலன்களை கணிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்க முடியாது அதற்கு நிறைய படிக்க வேண்டும். நிஜத்தில் ஒருவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை கவனித்து, படித்ததோடு தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டும் என்றார்.

நிஜத்தில் ஒருவர், தன்  வாழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றது என்பதை கவனித்துவந்தாலே விதியை சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

இந்த விதியை பற்றி நானும் என் நண்பனும் பேசிக்கொண்டு இருந்த பொழுது.அவன் சொன்னான், “இப்படி செய்தால் இப்படி நடக்கும் அது தான் விதி”

ஆம். அதுவே தான் விதி. கடவுள்,யாருடைய விதியையும் உட்கார்ந்து எழுதிக்கொண்டு இருப்பதில்லை. கடவுள் அல்லது இயற்கை சில நியதிகளை ஏற்படுத்தி வைத்து இருக்கின்றது.

Set of rules-அது தான் விதி. இப்பொழுது உங்கள் மனதில், “simple அ சொல்லணும்ன்னா கர்மா” என்று தோன்றும். (இப்படி செய்தால் இப்படி நடக்கும்) அதுவும் விதி. Set of rulesஇல் முதன்மையானது.

ஜோதிடத்தில் பூர்வ புண்ணியத்தின் படியே ஒருவரின் விதி அமைகிறது என்கிறார்கள். இங்கே பூர்வ புண்ணியம் என்பது நிச்சயம் முன் ஜென்ம வினையாக இருக்காது என்பது என் எண்ணம்.பூர்வம் என்பதற்கு முன்னதாக என்ற பொருள் இருக்கின்றது. அதன் படி, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதாகவே இருக்க முடியும்.

கீதையில், கர்ம யோகம், ஞான விஞ்ஞான யோகம், ராஜா வித்யா ராஜா குஹ்ய யோகம் ஆகிய யோகங்களை புலப்படும் உண்மை,  “இந்த நியதிகளையும் (set of rules) , இயற்கையும் ( nature or character of living beings)  இறைவனே  ஏற்படுத்தியிருந்தாலும் இவை இறைவனை  கட்டுப்படுத்துவதில்லை. ஆனால், இறைவனும் கூட தனது  திவ்ய ரூபத்தில்(மனித உருவில்) தோன்றும் பொழுது இந்த விதிக்கப்பட்ட நியதிகள்(set of rules) படியே செயலாற்ற முடியும்”என்பதே..

அதர்மத்திற்காக சகுனி செய்த வேலைகளை நேர் செய்ய அதே வேலைகளை தர்மத்திற்காக கிருஷ்ணர் செய்கிறார், குரு வம்சம் பேரழிவை சந்திக்கின்றது. அதன் விளைவாய் அவருடைய யாதவ குலம் அழிந்து போகிறது.

இங்கே செயல்களும் அதன் விளைவுகளும் மட்டுமே இருக்கின்றதே அன்றி, ‘சரி’ ‘தவறு’ என்கிற வேறுபாடு இல்லை.காந்தாரி சாபமிடாமல் இருந்திருந்தாலும் கூட கிருஷ்ணரின் செயலுகளுக்கான விளைவுகளாய் யாதவ குலம் அழிந்து இருக்கும்.

நாம் ஒவ்வொருவரும் இப்படியாகவே  யாரோ ஒருவருக்கு நன்மை செய்கிறோம் என்கிற பெயரில் யாரோ மற்றொருவருக்கு தீமையையே செய்கின்றோம். நிச்சயம் அதன் விளைவில் இருந்து நாம் தப்ப முடிவதில்லை. இறைவனே மனிதனாக தோன்றினாலும் கூட, இது தான் விதி(rule). அதன் பொருட்டே, நித்திய அமையத்திக்கான வழியாக அஹிம்ஸையை போதிக்கின்றார் கிருஷ்ணர்.

இதில் தர்மம் (ஒழுங்கு-in order) என்பது இயல்பு, அதர்மம்(ஒழுங்கின்மை-disorder) என்பது இயல்பில் இருந்து விலகிய பொறாமை, பொறாமையினால் வரும் ஆற்றாமை என்று தமோ ரஜோ குணங்களால் விளையும் செயல்கள்.

நம்முடைய செயல்கள், out of orderஇல் இருக்கும் பொழுது தான் நமக்கு தமோ, ரஜோ குணங்களால் ஏற்படும் கோபம் போன்ற உணர்வுகள் ஏற்படுகிறது. இதைத்தான் ஒளவையார் “இயல்பலாதன செய்யேல்” என்கிறார்.

இந்த set of rulesஇல் முக்கியமான ஒன்று, உடல் தோன்றி மறையும் இயல்புடையது. இறைவனாலும்  கொடுக்க முடியாத ஒன்று அழிவற்ற உடல். இரணியன் கதையில், இரணியன் அழிவற்ற உடலை கேட்கும் பொழுது, அது விதிகளுக்கு புறம்பானது என்கிறார் கடவுள்.

இந்த உடல் முழுதும் பரவியிருக்கும் ஆன்மா (energy-ஆற்றல்) தோற்றமில்லாதது, அழிவற்றது தூய்மையானது. சுகம்,துக்கம், வலி வேதனை இது எதுவும் ஆன்மாவை பாதிப்பதில்லை. போர் முனையில் குழப்பத்தில் இருக்கும் அர்ஜுனனுக்கு (சாங்கிய யோகத்தில்) தன் போதனையை இதை சொல்லியே ஆரம்பிக்கின்றார் கிருஷ்ணர்.

அப்படியென்றால், நிச்சயமாக நரகம் மற்றும் அதை சார்ந்து சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் உருவகங்களே (metaphors). உடலற்ற ஆன்மா எப்படி வருந்தும்! தான் செய்யும் செயல்களுக்கு ஒரு உடல் எப்படி வருந்த போகிறது என்பதை சொல்லும் உருவகங்கள் தான் நரகம் மற்றும் அதை சுற்றி சொல்லப்பட்ட கதைகளும். தன் தம்பியின் மனைவியை தன் மடியில் அமர செய்ததற்காக துரியோதனன் தன் தொடை கிழிக்கப்பட்டு இறந்து போகிறான்.செயல்களை அல்லது செயல்களின் பலன்களை துறந்த யோகிகள் அவர்களின் விருப்பதத்தோடு உடலை விடுகிறார்கள். மற்றவர்களின் ஆன்மா, அவர்கள் உடல் செய்த செயல்களின் விளைவின் படியே உடலை பிரிகிறது.

இப்படி ,ஒரு உடல் அனுபவிக்கும் இருக்கும்  சுக துக்கங்களை எடுத்துச் சொல்லும் prediction tool ஆகவே ஜோதிடமும் இருக்கிறது.

பூமியில் ஒரு உடல் தன் தர்ம செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கும் காலம், பூமி, அந்த உடலுக்கு சொர்கமாகவும்; அதர்ம செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கும் காலம் பூமி, அந்த உடலுக்கு  நரகமாவும் இருக்கிறது. எல்லா பலன்களையும் அனுபவித்து முடித்துவிட்ட உடல் மீண்டும் பஞ்ச பூதத்தோடு கலக்கின்றது.

Set of rules இன் படி, பாவ செயல்களால் மட்டும் உடல் வருந்துவதில்லை.உதாசீனங்களாலும் கூட அது வருந்துகிறது.

தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் இருப்பது; அதிகமாக தூங்கவது, சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, அதிகமாக சாப்பிடுவது என்று நாம் செய்யும் உதாசீனங்களாலும் கூட உடல் வருந்தும். உடலை மையப்படுத்தியே செயல்கள் இருப்பதால், உங்கள் உடலை நீங்கள் எப்படி வைத்துக் கொள்கிறீர்கள் என்பது கூட உங்கள் மற்றும் உங்கள் சந்ததியின் விதியை(destiny) தீர்மானிக்கின்றது.இதுவும் விதியே.

கடவுள் நம் ஒவ்வொருவரின் விதியை எழுதிக்கொண்டிருக்கும் ஒரு novel writer இல்லை. நம் செயலுகளுக்கான விளைவுகளுக்கு சாட்சியாக விளங்கும் ஒரு referee தான் கடவுள்.

“You are creator of your own destiny- swami Vivekananda”

நடந்து முடிந்ததை யாராலும் மாற்ற இயலாது; நடக்க இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், நடக்க இருப்பதை நாமே தான் தீர்மானித்துக் கொண்டு இருக்கின்றோம்.

நம்முடைய விதியை எல்லா வகைகளிலும் நாம் மட்டுமே தீர்மானிப்பதில்லை. நம்முடைய உடல் என்பது நம்முடைய பெற்றோர்களின் உடலின் நீட்சி.அதோடு திருமந்திரத்தில் சொல்லியிருப்பது போல தாய் தந்தையர் கூடும் காலத்தில் அவர்களின் நிலையை பொறுத்தே குழந்தையை ஆயுள், மற்றும் குணங்கள் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.குணங்களே செயல்களை தீர்மானிக்கின்றது.அறிவியிலின் படியும் கூட genetically transferred characters and disease என்று பிறக்கும் போதே எண்ணற்ற விளைவுகள் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

இப்படி,உடலை பெற்ற ஒரு ஆன்மா தன் வாழ்க்கையை தொடங்கும் முன்னரே சில விளைவுகள் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.அதோடு,நம்முடைய தீர்மானிக்கப்படாத விளைவுகளை (விதியை) உருவாக்குபவர்களாக நாமே இருந்தாலும் கூட, நாம் அதை விழிப்புணர்வோடு செய்வதில்லை.

ஒரு காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மரக்கட்டை போல முன் வினையின் விளைவுகளுக்கு ஏற்ப செயலாற்றி அந்த செயலுகளுக்கான விளைவுகளில் இருந்து தப்ப முடியாமல் விதியே! என கிடக்கின்றோம்.

So, how to become master of our destiny? நம்முடைய விதியை நாமே தீர்மானித்துக்கொள்வது எப்படி?

இதை இதை செய்ய வேண்டும் இதை இதை செய்யக்கூடாது என்று சொல்லிவைக்கப்பட்டு இருப்பதன் படி நடந்தோமானால், நம்முடைய விதியை நாமே தீர்மானிக்க முடியும்.

உங்கள் வாழ்க்கையை கவனிக்க தொடங்குங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *