தாமரை மலர்ந்துவிட்டது என்று ஒரு புறம் பா.ஜ.க. ஆதரவாளர்கள் மகிழ்ந்திருக்க மறுபுறம் அ.தி.மு.க. முதுகில் ஏறி பா.ஜ.க. வெற்றி பெற்றதாக விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றது.இரண்டு பெரிய இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் தமிழகத்தில் மக்கள் மூன்றாவது தேர்வை தேடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த மூன்றாவது தேர்வை, அணியை தேடுபவர்களில் ஒரு சாராரை பா.ஜ.க. தன் வசப்படுத்த ஆரம்பித்து பல காலம் ஆகிவிட்டது.
பா.ஜ.க.வை பொறுத்தவரையில் அவர்கள் கடந்த 2016 தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருக்கின்றார்கள் அதோடு 2.86 சதவீத வாக்குகளையும் பெற்று இருக்கின்றார்கள். இது, அந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம். 2016ல் அவர்கள் வாங்கிய வாக்கு சதவீதத்தையே யாரும் கவனித்ததாக தெரியவில்லை நோட்டாவிடம் தோற்றதே பெரிதாக பேசப்பட்டது.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களெல்லாம் இவ்வாறாகவே கவனிக்கப்படாமல் போகிறது.2016 தேர்தலுக்கு முன்னர் தனித்து போட்டியிடும் அளவிற்கு பா.ஜ.க. தமிழக்தில் வளர்ந்திருக்கவில்லை ஒரு கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட பணபலத்தை விட முக்கியமாக ஆள் பலம் தேவைப்படுகிறது.தேர்தலை சந்திக்க மாவட்டம், வட்டம், என எல்லா இடங்களிலும் அந்த கட்சிக்கான தேர்தல் பணிகளை செய்ய நிர்வாகிகள் தேவைப்படுகிறார்கள்.இத்தகைய கட்டமைப்பை ஒரு நாளில் அவர்கள் உருவாகிவிடவில்லை என்றாலும் அவர்கள் தமிழகத்தில் வளர்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கான அடையாளமாக தான் இது பார்க்கப்பட வேண்டும்.
ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது அனேகமாக எல்லா கட்சிகளிலும் பொதுவானதாகவே இருக்கின்றது. மிகவும் பொதுமைப்படுத்தி சொல்ல வேண்டுமானால் நல்லது செய்வோம் என்கிற கோஷமே அது.
ஆனால், ஒரு கட்சியோ இயக்கமோ தோன்றுவதற்கும் தோன்றி வளர்வதற்கும் தனித்தனியான காரணங்கள் தேவைப்படுகிறது.அதன் காரணமாகவே இங்கு கட்சிகளின் முகம் வெவ்வேறானதாக இருக்கின்றது.
உதாரணத்திற்கு,சீமானின் மற்ற கருத்துக்கள் கதைகளை விட தமிழரை தமிழர் தான் ஆள வேண்டும் என்கிற கோஷமே பிரதானமாக பார்க்கப்படுகிறது. அதுவே அந்த இயக்கத்தின் முகமாகவும் இருக்கின்றது. தமிழர்களை ஆள்வது தமிழர்கள் இல்லை என்கிற கண்ணோட்டத்தில் அங்கே தமிழரை தமிழர் ஆள வேண்டும் தேவை இருக்கின்றது என்கிற முன்மொழிவுடனே தான் நாம் தமிழர் என்னும் இயக்கம் சீமானால் மறுகட்டமைக்கப்படுகிறது.ஒரு இயக்கம் தோன்ற ஏதேனும் ஒரு கண்ணோட்டத்திலாவது ஒரு தேவை இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஒரு இயக்கம் பிறந்த பின் அது வளர்வதற்கு ஒரு எதிர்ப்பு அவசியமாகிறது. நாம் தமிழரை பொறுத்தவரையில் எடப்பாடி ஆட்சியின் போதே அவர்களின் பிரதான கோஷம் மங்க தொடங்கி அவர்களுக்கான முக்கியத்துவம் குறைகிறது.
பா.ஜ.க. வை எடுத்துக்கொண்டோமேயானால், பாரத்தின் கலாச்சாரம் பண்பாடு இது போன்றவைகளை மீட்டெடுக்கும் மீட்பராக பாதுகாவலனாக அந்த கட்சி தன்னை முன்னிறுத்தி கொள்கிறது.கலாச்சாரம் பண்பாடு போன்றவைகள் மதம் என்னும் சிறு கூட்டுக்குள் நாம் அடைத்துவிட்டதன் காரணமாய் மதவாத இந்து கட்சி என்கிற தோற்றமே பா.ஜ.க.வின் முகமாக இருக்கின்றது. அவர்களின் இந்த முகம் வளர அங்கே அந்த பண்பாட்டிற்கு கலாச்சாரத்திற்கு ஒரு பங்கம் ஏற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. பங்கம் நேராத வரையில் பாதுகாவலர்க்களுக்கான தேவை இருப்பதில்லை.
தமிழகத்தை பொறுத்தவரையில் நம் கலாச்சாரம் பண்பாடு, போன்றவற்றின் மீதான பொய்யாக ஏற்படுத்தப்பட்ட பிம்பங்களும் அந்த பொய்யான பிம்பங்களை சுட்டிக்காட்டி அதன் மீது நடக்கும் தாக்குதலுகளுமே பா.ஜ.க. போன்ற கட்சிகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமைகிறது என்பதை மறுத்துவிட முடியாது.
தேர்தல் அரசியலை பொறுத்தவரையில் நம் நாட்டில் உணர்வுகளுக்கே மக்கள் அதிகம் இடம் தருகிறார்கள்.அரசியல் களத்தில் அந்த உணர்வுகள் சாதி, மதம், இனம், மொழி,சமயங்களில் அனுதாபம் என்று பல வடிவங்களில் வேலை செய்கிறது.மதம் என்னும் கூட்டுக்குள் இருக்கும் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்படும் பங்கம் கட்டுக்கதைகளால் கட்டமைக்கப்பட்டு அது மத உணர்வுகளை சீண்டும் அளவிற்கும் உடைக்கும் அளவிற்கும் பலம் பொருந்தியதாக வளர்ந்தது தமிழகத்தில் பா.ஜ.க. போன்ற கட்சியின் வளர்ச்சிக்கு காரணம். அந்த கட்சியின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றசாட்டுகளை போல மத உணர்வுகளுக்கு செயற்கை குந்தகம் விளைவித்து அதை காக்க வந்தவர்களாய் காட்டிக்கொள்வதற்கான அவசியம் அவர்களுக்கு இங்கு(தமிழகத்தில்) இல்லை. இங்கு இயற்கையாகவே அது நடக்கின்றது.
தேர்தலுக்கு முன்னர் வரை அ.தி.மு.க. பலமற்று இருக்கின்றது என்றவர்களே பா.ஜ.க. விற்கு கிடைத்த ஓட்டுக்கள் அ.தி,மு.கவின் ஓட்டு என்கிறார்கள். அதில் உண்மை இருந்தாலும் உண்மையின் மறுபக்கத்தில் இந்த தேர்தலில் அ.தி.மு.க வின் பலமாக பா.ஜ.க இருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது. இல்லை பா.ஜ.க., அ.தி.மு.கவின் பலவீனம் என்றால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் ஒரு கட்சியின் பலவீனம் தான் அந்த கட்சியின் பலமாகவும் இருக்க முடியும்.சிறுபான்மை ஆதரவு என்கிற பெயரில் ஒரு சாராரை தாக்குவது போலான அரசியல் கருத்துக்களே ஒரு சாரார் மத்தியில் அந்த கட்சியின் பலமாகவும் மறுபக்கம் பலவீனமாகவும் ஆகின்றது என்பதை அரசியல்வாதிகளும் அரசியல் பார்வையாளர்களும் புரிந்தே வைத்திருப்பார்கள்.
தாமரை மலராது என்கிற கோஷங்களை விடுத்து. தாமரை மலர ஆரம்பித்திருக்கிறது என்பதை தமிழகமும் திராவிட தமிழ் தேசிய அரசியல்வாதிகளும் உணர வேண்டும்.வாரிசு அரசியலை விமர்சனம் செய்கின்றவரே வாரிசு அரசியல் செய்வது எப்படி எடுபடாமல் போகுமோ அது போல மதவாத சக்தி என்னும் விமர்சனம் வைக்கும் அரசியல்வாதிகள் தங்கள் மீது எந்த மதத்தின் சாயமும் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டும்.அதோடு குறிப்பாக மத உணர்வுகளுக்கு பங்கம் ஏற்படாத இடங்களில் தான் மதவாத சக்திகளாக கருதப்படும் இயக்கங்களுக்கான தேவை இல்லாமல் போகும். தேவை இருக்கின்ற வரையில் தேவை வளர்கின்ற வரையில் உணர்வுகளுக்கு பங்கம் வருகின்ற இடங்ககளில் அந்த உணர்வுகளை காக்க வந்த மீட்பராக காட்டிக்கொள்பவர்கள் வளர்ச்சி அடையவே செய்வார்கள்.தாமரை மலர்ந்து கொண்டு இருக்கின்றது!