உங்களிடம் சில கேள்விகள் கேட்டுவிட்டு இந்த கட்டுரையை தொடர வேண்டும் என்று எண்ணுகிறேன்.
- பெரியார் எப்படி இருப்பார்?
- கலைஞர் எப்படி இருப்பார்?
- புரட்சி தலைவர் எப்படி இருப்பார்?
- புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா எப்படி இருப்பார்?
இந்த கட்டுரையை வாசிக்க முடிந்த அளவிற்கு உங்களுக்கு தமிழ் தெரிந்திருந்தால் நிச்சயம் மேற்சொன்ன ஆளுமைகள் எப்படி இருப்பார்கள் என்பது உங்கள் மனக்கண்ணில் தோன்றி இருக்கும். இப்பொழுது உங்களுக்கு இன்னும் ஒரு கேள்வி,
“கக்கன் எப்படி இருப்பார்?”
நீங்கள் தினசரி அரசியலை செய்திகள் மூலம் பின்பற்றுபவராக இருந்தாலும் கூட உங்கள் மனக்கண் முன், கக்கன் அவர்களின் உருவம் தெளிவில்லாமல் கூட தோன்றியிருக்க வாய்ப்பு இல்லை.கக்கன் என்பவர் நேர்மையானவர் என்பது வரையில் வேண்டுமானால் நீங்கள் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றது.
சிக்கனமான கக்கனைப் பற்றி இந்த சமூகமும் சிக்கனமாகவே அறிந்துவைத்து இருக்கின்றது, அல்லது தமிழக அரசியல் வரலாற்றை தீர்மானித்து நமக்குள் திணித்தவர்கள் கக்கனைப்பற்றி மிக சிக்கனமாகவே நமக்குள் திணித்து உள்ளார்கள் எனலாம்.இதற்கு நிச்சயமாக கக்கன் மட்டுமே பொறுப்பாக முடியும். எப்படி என்பதை முடிவில் சொல்கின்றேன்.
கட்டுரையின் தொடக்கத்தில் நான் இவர்களை தெரியுமா? என்று முன்வைத்த கேள்விகளில் ஒருவரின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனாலும் அவர்களை உங்களுக்கு தெரிந்து இருந்தது.அதுவே தியாக சீலர் எப்படி இருப்பார்? என்று ஒரு கேள்வியை முன் வைத்து இருந்தால், நிச்சயம் கக்கனை பற்றி நீங்கள் நினைத்து இருப்பீர்கள் என்று சொல்ல முடியாது.ஆங்கிலேயே அரசை எதிர்த்து உயிர் நீத்த ஒரு சிலரை தாண்டி,சுதந்திர போராட்ட காலத்தின் white collar கைதிகளையே நாம் அதிகம் தியாகிகளாக அறியப்பெற்று இருக்கின்றோம். அதனால் தியாக சீலர் என்றவுடன் கக்கன் நம் நினைவிற்கு வராமல் போவதில் ஒரு நியாயமும் இருக்கின்றது என தேற்றிக்கொள்ளலாம்.
வெகு நாட்கள் கழித்து ஒரு புத்தகத்தை எடுத்த கையோடு படித்து முடித்தேன்.எடுத்த கையோடு படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரசியமான புத்தகமா ? என்று கேட்பீர்கள்.நிச்சயமாக சுவாரசியமான புத்தகம் இல்லை. நேர்மையில் என்ன சுவாரசியம் இருந்து விட போகிறது! அகில இந்திய வானொலியில் பணியாற்றிய இளசை சுந்தரம் அவர்கள் எழுதிய அந்த புத்தகத்தின் பெயர் “தியாக சீலர் கக்கன்”. கக்கன் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை புத்தகமாக தொகுத்த அவர் முயற்சிக்கு நிச்சயம் தலைவணங்க வேண்டும் .
கக்கனை பற்றி படித்து கொண்டிருக்கும் போதே இப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டுமா?இவர் ஏன் இப்படி இருந்தார்?நேர்மையாக இருக்க வேண்டும் தான், அதற்காக தன்னை பற்றியும் தன் குடும்பம் பற்றியும் எந்த சிந்தனையும் இல்லாமல் எப்படி ஒருவரால் வாழ முடிந்தது என்று பல விதமான எண்ணங்கள் அலையாடியது. அப்போது, என் நண்பன் ஒருவன் சொன்ன “altruism” என்பதை பற்றி நினைவு வந்தது.சுயநலம் இல்லாமல் மற்றவர் நலுனுக்காக தங்களையே அர்பணிப்பதன் பெயர் தான் altruism.அதற்கு சிறந்த உதாரணம் கக்கன்.அவர்,நேர்மையாக இருந்தார் என்பதை தாண்டி தன்னை பற்றியும் தன் குடும்ப நலனை பற்றியும் துளியும் சிந்திக்காத ஒருவராக இருந்தார் என்றே தெரிகிறது.
என்னுடைய பள்ளிக்காலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, பெரியார் என்று இவர்களை பற்றியெல்லாம் தமிழ் பாடப்புத்தகத்தின் உரைநடை பகுதியில் படித்து இருக்கின்றேன். இதில் பெரியார்,கருணாநிதி,அண்ணா போன்றவர்கள் பெயர் அல்லது சிலைகள் திரும்பிய திசையெல்லாம் தென்பட்டு இருக்கின்றது.இவர்களை தமிழக நலுனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்று கொண்டாலும் கூட, அவர்களுக்கு சற்றும் குறைவில்லாத; அவர்களை விட மேன்மை பொருந்திய;தேசிய உணர்வுமிக்க கக்கன் போன்றவர்களைப் பற்றி நமக்கு பெரிதாக கற்பிக்கப்படாததை அரசியல் தீண்டாமை என்றே பார்க்க முடிகிறது.
இன்று சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடுபவர்களாக தங்களை கட்டிக்கொள்பவர்கள் கூட ஒடுக்கப்பட்டவர்களின் நலுனுக்காக ஆக்கபூர்வமான செயல்களை செய்த கக்கனை அதிகம் நினைவுகூறுவதில்லை.
இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று சிந்திக்கும் போது,இலங்கை ஜெயராஜ் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது நாட்டை ஆள்பவர்களிடம் ரஜோ குணம் இருக்க வேண்டும், காந்தி அந்த அரசியலுக்குள் வந்து இருந்தால் தோல்வி கண்டு இருப்பார், அவர் சாத்வீக குணம் கொண்ட முனிவர் என்றார்.என்னுடைய எண்ணத்தின் படி காந்தியிடம் கூட ரஜோ குணம் இருந்திருக்கும்.ஆனால், கக்கனிடம் துளியும் ரஜோ குணம் இருந்ததாக தெரியவில்லை.
ஒரு கட்சியோ அல்லது அமைப்போ ஒருவரை நினைவு கூற அல்லது ஒருவரை கொண்டாட; அவர், அதிகமான மக்கட் தொகை கொண்ட சமூகத்தை சேர்ந்தவராகவோ அல்லது தான் வாழ்ந்த காலத்தில் தன்னை பின் தொடரும் பெரிய கூட்டத்தை(அமைப்பை) ஏற்படுத்தி கொண்டவராகவோ இருக்க வேண்டியதாக இருக்கின்றது.இவையல்லாது போனால், எதையேனும் தீவிரமாக எதிர்த்தவராகவாவது இருக்க வேண்டும்.
கக்கனை பற்றி சமூகம் அதிகம் அறிந்து கொள்ளாததற்கு கக்கன் அவர்களே தான் காரணம் என்று சொல்லி இருந்தேன்.அது ஏன் என்றால்?
குறிப்பிட்ட ஒரு சாராரை எதிர்ப்பதோ அல்லது தாழ்த்துவதோ ஒடுக்கப்பட்ட சமூகத்தை முன்னேற்றிவிடாது, ஆக்கபூர்வமான செயல்களே முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதை தன் வாழ்வின் மூலம் புரிய வைக்கும் கக்கன் அவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடுகிறேன் என்கிற பெயரில் யாரையும்; எந்த சமூகத்தையும்;எந்த மதத்தையும்; எந்த நிலையிலும் எதிர்க்கவோ அல்லது இழிவுபடுத்தவோ இல்லை. மாறாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைப்பதற்கு செய்ய வேண்டியதை மட்டுமே செய்து வந்து இருக்கின்றார். அவர், இப்படி சாத்வீக குணம் நிறைந்த பெரியாராக நாகரிகத்துடன், கூட்டம் சேர்க்கும் அல்லது பணம் சேர்க்கும் கவர்ச்சி அரசியலில் ஈடுபடாததன் காரணமாகவே அவர் காலத்திற்கு பிந்தைய அரசியலில் அவரை வைத்து அரசியல் செய்ய எந்த வாய்ப்பும் ஏற்படுத்தி தராததன் காரணமாகவே தமிழக அரசியல்வாதிகள் அதிகம் கொண்டாடாத; புதுயுக அரசியல் தீண்டத்தகாத அல்லது தீண்டமுடியாத அரசியல் ஆளுமையாக இருந்ததினாலேயே அவரை பற்றி சமூகம் தெரிந்து கொள்ள முடியாமல் போனது.
இங்கு நம்மில் பலர் பெரியார் மீது பெரிய நேசம் கொண்டவராக இருக்கலாம்;சிலர் திராவிட தமிழ் தேசிய கொள்கைகள் மீது பிடிப்பு கொண்டவராக இருக்கலாம்; இன்னும் சிலர் மத எதிர்ப்பு தான் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கான வழி என்று நம்பிக்கொண்டு இருப்பவராக கூட இருக்கலாம்.
நாம் இப்படியாகவெல்லாம் இருப்பதற்கு காரணம், கக்கன் போன்ற தேசியவாதிகள் பற்றி நமக்கு தெரியாமல் பார்த்துக்கொண்ட அரசியல் தீண்டாமையே ஆகும்.