ஒரு தேசம், ஒட்டுமொத்த தேசமாக தன்னை மாற்றிக்கொள்ளாமல், அது எவ்வித மாற்றமோ முன்னேற்றமோ அடையப்போவதில்லை.

இங்கு நம்மில் யாருக்கும் எதனை எதிர்க்க வேண்டும் எதனை கொண்டாட வேண்டும் என்கிற வேறுபாடு தெரியவில்லை அல்லது தெரியாது வகையில் நம்மை அரசியல்வாதிகள் வைத்து இருக்கின்றார்கள்.

அரசியல்வாதிகளை மட்டும்  தனித்து குற்றம் சாட்ட என்ன இருக்கின்றது? அவர்களும் இதே இந்த சமூகத்தில் இருந்து தானே முளைக்கிறார்கள்!

மறைந்த நடிகர் விவேக், ஒரு படத்தில் ஒரு வசனம் பேசுவார், அந்த திரைப்படமும் வசனமும் சரியாக என் நினைவில் இல்லை. அந்த வசனத்தின் கருத்து இது தான், “எங்க ஊரில் அரசாங்கமாக பார்த்து ஏதேனும் நல்ல திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சிகள் அதனை செயல்படுத்த விடமாட்டார்கள்”

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், குறிப்பிட்ட அளவு வருமானம் இருக்கும் குடும்பங்கள், ரேஷன் பொருள்கள் வாங்குவதில்லை. முக்கியமாக அரிசி வாங்குவதில்லை, அவர்களுக்கு  ஒதுக்கப்படும் அரிசி கடத்தப்பட்டு மக்கள் பணம் விரயமாகிறது என்று குறிப்பிட்ட அளவு வருமானம் இருக்கும் குடும்பங்களின் குடும்ப அட்டைக்கு “H “முத்திரை குத்தி உங்களுக்கு அரிசி கிடையாது என்கிற துணிச்சலான முடிவை எடுத்தார்.அதன் பிறகு, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதும் அதிலும் தூரமாக இருக்கும் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதும் பெற்றோர்கள், அவர்களின் குடும்ப வருமானம் பற்றி தெரிந்து எடுக்கும் முடிவு, இப்படியிருக்க தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏன் இலவச பயண அட்டை வழங்கி மக்கள் பணத்தை விரயம் செய்ய வேண்டும் என்று அதனை ரத்து செய்தார்.

எதிர்கட்சிகள் எப்போதும் போல .இந்த முடிவுகளை விமர்சனம் செய்யாமல் இல்லை.

இப்படியான முடிவுகள், மக்களுக்கு எதிரானதாக தோன்றினாலும் இது மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகளே.

இந்த முடிவுகளை எடுத்த பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருடைய கட்சி படுதோல்வி அடைகிறது.

தனது அந்த துணிச்சலான முடிவுகளை திரும்பபெற்றுகொள்கிறார்.இங்கே தவறு யாருடையது?

குறிப்பிட்ட வருமானத்திற்கு மேல் இருக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் அரிசி இல்லை; தனியார் பள்ளி மாணவர்களுக்கு  இலவச பயண அட்டை இல்லை  என்ற அவரின் முடிவுகளில்  குறைபாடுகள் இருந்திருக்கலாம் அதில் சில மாற்றம் செய்யவேண்டி இருந்திருக்கலாம். ஆனால், முற்றிலும் விலக்கி கொள்ளப்படவேண்டிய அளவிற்கு மக்களுக்கு விரோதமான முடிவுகள் இல்லை. ஆனால், சில வருடங்களுக்கு பின்னர், குடும்ப அட்டைகளுக்கு வகைப்படுத்துதல் மேம்பபடுத்தப்பட்டு அதன் அடிப்படியில் தான் தற்போது விநியோகம் நடைபெறுகிறது.

அந்த திரைப்படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. “H” முத்திரை நிகழ்வு நடந்தும் பல வருடங்கள் ஆகிவிட்டது.  இன்று வரை அதே நிலை தான் தொடர்கிறது. இந்த நிலை இன்னுமும் கூட தொடரும் என்பதையே பிரதமரின் சமீபத்திய அறிவிப்பு காட்டுகிறது.

நீண்ட வருடங்களுக்கு பின்னர், 2014இல்  தனிபெருபான்மையுடன், மோடி தலைமையில் ஒரு வலுவான ஆட்சி மத்தியில் அமைந்தது. ஒரு ஆட்சியின் வலிமை பெரும்பான்மை ஆதரவை பொறுத்தது இல்லை. அந்த ஆட்சியில் எடுக்கப்படும் துணிச்சலான முடிவுகளே அந்த ஆட்சியின் வலிமையை எடுத்துகொள்ளும் அளவுகோல். துணிச்சலான முடிவுகளை எட்ட பெரும்பான்மை அவசியமாகிறது.மன்மோகன் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல தொய்விற்கு அவர்கள் தனிப்பெருபான்மை பெறாமல் இருந்ததையும் ஒரு காரணமாக சொல்ல முடியும்

காங்கிரஸ் தன்னை மறுசீரமைத்துக்கொள்ளாமல்,தேசிய அரசியலில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிட போவதில்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், ஒன்று அவர்கள் தங்களை மறுசீரமைத்துக்கொள்ள வேண்டும்; அல்லது பா.ஜ.க. வலுவிழக்கும் வரை காத்து இருக்க வேண்டும். காங்கிரஸ் இன்று வரை இரண்டாவது யுக்தியை கையாள்வதாகவே தெரிகிறது.

இந்த  நிலையில் தான், பா.ஜ.க. தலைமையிலான அரசு தன் வலிமையை இழக்க தொடங்கி இருக்கின்றது.துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் இருந்து பின்வாங்கி, வாக்கு வங்கியை கணக்கில் கொள்ளும் முடிவுகளை எடுக்க தொடங்கி இருக்கின்றது.

ஆட்சி அமைத்த புதிதில், வாக்கு வங்கியை பற்றி கவலை கொள்ளாமல், சரியான தகுதியாவனர்களுக்கு மட்டும் அரசு மானியங்கள் கிடைக்க செய்ததில் ஆரம்பித்து, கச்சா எண்ணெய் விலை குறைந்த பொழுதும் செலவினங்களை கணக்கில் கொண்டு  வரியை உயர்த்தியது என்று எப்போதும் நிர்வாக ரீதியில் ஒரு நாட்டிற்கு அவசியமான துணிச்சலான முடிவுகளையே தான் எடுத்து வந்தது.வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுக்கொள்ள போவதாக அறிவித்து இருப்பதன் மூலம்,வரலாற்றில் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதோடு, நாங்கள் மீண்டும் வாக்கு வங்கி அரசியலை நோக்கி திரும்புகிறோம் என்று  நாட்டுக்கு அறிவித்து இருக்கின்றது பா.ஜ.க. தலைமையிலான இந்த அரசு.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசால் முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் கூட இடம்பெற்றிருந்த வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டதற்கு தான் இன்று ராகுல் காந்தி தொடங்கி அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை வாழ்த்து தெரிவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

எந்த ஒரு திட்டமும், சட்டமும் முன்மொழியப்படும் பொழுது அது சார் ஆக்கபூர்வமான விவாதங்கள் இங்கே அதிகம் நடைபெறுவதேயில்லை. மாறாக, அந்த திட்டத்தையோ சட்டத்தையோ முற்றிலும் எதிர்க்கும் முற்றிலும் திரும்ப பெற சொல்லும் குரல்களே எப்போதும் அதிகம் ஒலிக்கின்றது. அந்த குரல்களை நாயகத்துவப்படுத்துவதில் தான் நாமும் முனைப்பு காட்டுகின்றோம்.

இந்த மாதிரியான அணுகுமுறை, எந்த ஒரு தேசத்திற்கும் ஆரோக்கியமானது அல்ல.துரதிஷ்டவசமாக நம் தேசம், அரசியல்வாதிகள் தலைமையில் அத்தகைய அணுகுமுறையையே எப்பொழுதும் கையெலெடுக்கிறது. அப்படியான ஒரு அணுகுமுறையின் வெற்றியை கொண்டாடுவது அறியாமை என்பதையும் அறியாமல் இருப்பது வேதனை.

சில நாட்களுக்கு முன், லக்கிம்பூரில் நடந்த வன்முறை குறித்த தினமணியின் தலையங்கத்தில் சுட்டி காட்டியிருந்தது போல நல்ல திட்டமாகவே இருந்தாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை தான். திட்டங்கள் மக்களின் நன்மைக்காகவே என்று உணர்த்த வேண்டியது அரசின் கடமை. அதில் இந்த அரசு தோல்வியடைந்து விட்டது.

லக்கிம்பூர் வன்முறை பற்றி தினமணியில் வந்த தலையங்கம்

வேளாண் சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கம்; அரசு நடத்திய பேச்சு வார்த்தை  மற்றும் அந்த சட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றம் கொண்டு வர அரசு தயாராக இருந்ததை எல்லாம் நினைவு கூறிய பிரதமர், இறுதியாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் ஆதரவை எங்களால் பெற முடியவில்லை; ஒரு பிரிவு விவசாயிகளுக்கு சட்டத்தினால் ஏற்படும் நன்மைகளை எங்களால் புரியவைக்க  முடியவில்லை என்று தன் உரையில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

நடைமுறைபடுத்தத்தப்படாத சட்டங்களை எதிர்த்து போராடும் ஒரு சமூகம், காலத்திற்கேற்ற மாற்றங்களை அனுசரித்து எப்படி முன்னேறும்!

இங்கே நாம் கவனிக்க வேண்டியது. போராடியவர்கள் விவசாயிகளே ஆனாலும், இந்த போராட்டமும் கூட ஒரு சர்வாதிகார போக்கே ஆகும்.குறிப்பிட்ட ஒரு பிரிவு விவசாயிகள் எப்படி நாட்டின் அத்தனை விவசாயிகளின் குரலாக இருக்க முடியும்? அத்தனை விவசாயிகளையும்  ஒருங்கிணைத்து அத்தனை பேரிடமும் சட்டத்தின் சாதக பாதகங்களை எடுத்துச்சொல்லி; அத்தனை விவசாயிகளின்   ஒப்புதலும் பெறாமல் நடந்த போராட்டத்தை நிச்சயம் ஒட்டுமொத்த விவசாயிகளின் போராட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது.

  லக்கிம்பூரில் நடந்த வன்முறை குறித்த தினமணியின் தலையங்கத்தில் எழுப்பட்ட சந்தேகத்தை உங்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

“வடக்கு எல்லையில் நிலவும் பதற்றத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப “பெரும் நிலச்சுவான்தார்களான” பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை வேண்டுமென்றே அரசு அனுமதித்ததோ என்கிற ஐயப்பாடு ஆரம்பித்தில் இருந்தே உண்டு.”

விவசாயிகளிலும் பெரும் நிலச்சுவான்தாரர்களான ஒரு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளின் போராட்டம்  தான்  ஒட்டுமொத்த  விவசாயிகளின் போராட்டமாக காண்பிக்கப்பட்டு இருக்கின்றது.நம்முடைய உணர்வுகள் இந்த சாதக பாதகத்தை பற்றி நிச்சயம் அலசவில்லை ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் அதில் பாதகங்கள் இருந்தால் அதை திருத்தவும் மாற்றவும் முடியும் என்கிற போது ஆரம்ப நிலையிலேயே போராட வேண்டிய அவசியத்தை பற்றியும் நம் உணர்வுகள் சிந்திக்க விடவில்லை.

இந்த சட்டங்களை எதிர்த்த எந்த தரப்பினரும் சட்டத்தின் சரத்துகளையும் அம்ஸங்களையும் குறிப்பிட்டு இந்த சரத்தால் இந்த அம்சத்தால் இப்படி ஒரு பாதிப்பு நிகழும் என்று எந்த scenario வையும் தங்களின் வாதமாக எடுத்து வைத்ததாக தெரியவில்லை.

நிர்வாகம், மக்கள் நலன், இவைகளை தாண்டி அரசியல் கட்சிகள், மக்கள் முன்னிலையில் தங்கள் பிம்பங்களை நிலைநிறுத்திக்கொள்ள செய்யும் அரசியலில் நல திட்டங்களும் புது சட்டங்களும் பலியாகிறது. இது காலம் காலமாக தொடர்ந்து நடைபெறுகிறது.

இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது மக்களாகிய நாமே தான். இன்று படித்த படிப்பிற்கு சொந்த மாநிலங்களில்,சொந்த ஊர்களில்  வேலை இல்லாமல், வெளிமாநிலங்கள் வெளியூர்களில் வேலை பார்த்துவிட்டு விடுமுறைக்கு ஊருக்கு திரும்பும் பொழுது நான்கு வழி சாலையில் ஏற்படும் வாகன நெரிசலில் சிக்கி அதனை குறைபட்டு கொள்ளும் நாம் தான் எட்டு வழி சாலைகள் யாருக்காக என்கிற கேள்விகளை எழுப்புகிறோம். நம்மிடம் விவசாய நிலம் இருந்தாலும் பொருளாதார ரீதியில் நிலையான பாதுகாப்பான குடும்ப சூழலை ஏற்படுத்திக்கொள்ள உதவும் மாத சம்பள வேலைகளை விரும்பும் நாம் தாம் திட்டங்களின் சாதக பாதகங்களை அறியாமல் எதிர்ப்பு குரல் எழுப்புகிறோம்.

ஒரு புது திட்டமோ சட்டமோ கொண்டுவரப்படும் பொழுது, அது நம்மை விட சிறந்த நிபுணர்களால் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டு; எதிலுமே சாதகம் பாதகம் இருக்கும் என்பதையும் உணர்ந்து; அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த திட்டங்களும் சட்டங்களும் செயல்பாட்டிற்கும் வந்த பின்னர், அதில் ஏற்படுத்த வேண்டிய மேம்பாடுகளை நாம் சுட்டிக்காட்டலாம். அதில் தவறில்லை.  அரசும் தொடர்ந்து அந்த திட்டங்களினாலோ சட்டங்களினாலோ ஏற்படும் சாதக பாதகங்களை ஆராய்ந்த்து அதனை மேம்படுத்த வேண்டும். நேர்மையான ஆரோக்கியமான சமூகத்தில் இப்படி தான் நடக்க வேண்டும்.

நேர்மையும் ஆரோக்கியமுமற்ற நாம், எப்போதும் இப்படியாக இருந்து புது திட்டங்களை, சட்டங்களை ஒதுக்கி; அதை வெற்றியாக கொண்டாடி வருகிறோம்.நிச்சயமாக இன்று பா.ஜ.க. எதிர்க்கட்சியில் இருந்திருந்தாலும் இதே காட்சிகள் அரங்கேறியிருக்கும்.

மக்களாட்சியின் தூய்மையையும் நேர்மையையும் தீர்மானிக்கும் இடத்தில்  எதிர்கட்சிகளே தான் இருக்கின்றன. இன்றைய ஆளும் கட்சி உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்கட்சிகளாக இருக்கும் பொழுது, மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று  செய்யும் குழப்பங்களாலாலயே தான், மக்களுக்கு எது சரி?எது தவறு? என்கிற பேதம் புரியாமல் போய்விடுகிறது. அதன் காரணமாகவே மக்களின் நலனுக்காக கொண்டுவரப்படும் திட்டங்களும் சட்டங்களும் கட்சிகளின் உந்துதலால் மக்களாலேயே எதிர்க்கப்படுகிறது.

 மேலும் பிரதமர்,தன்னுடைய உரையில் கடன் வாங்கிக்கொண்டு நாட்டை விட்டு ஓடியதை பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு கடன்கள் மீட்கப்பட்டத்தை பற்றி யாரும் பேசுவதில்லை என்று கவலை தெரிவித்து இருந்தார். உண்மை தான், கடன் வாங்கிவிட்டு வெளிநாடு தப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு; அவர்களின் சொத்துக்களும் அமலாக்க துறையால்  முடக்கப்பட்டு; அந்த அந்த வங்கிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது தான். அதை மக்கள் கவனிக்கமாட்டார்கள் தான், மக்களை கவனிக்கவிடமாட்டார்கள் தான். காரணம், எதிர்க்கட்சியாக இருந்து பொழுது உங்கள் கட்சி செய்த அதே அரசியல் ஆளும் உங்கள் கட்சிக்கு எதிராக நடப்பதில் கவலை கொள்ளவோ ஆச்சரியம் தெரிவிக்கவோ என்ன இருக்கின்றது!

ஒரு நல்ல ஜனநாயக நாடு என்பதற்கான முன்னுதாரணமாக நாம் திகழ வேண்டுமெனில், கட்சிகள் தாங்கள் ஆட்சியில் இல்லாத பொழுது நிர்வாக சிக்கல்களை நேர்மையாக அணுக வேண்டும். மக்கள், கட்சிகளை; மிக முக்கியமாக  எதிர்க்கட்சி பொறுப்பில் இருக்கும் கட்சிகளை, அந்த இடம் நோக்கி நகர்த்த வேண்டும்.அது நடக்காத வரை நல்ல திட்டங்களும் சட்டங்களும் காலம் கடந்தே தான் நிறைவேறும். நிச்சயம், திரும்ப பெறப் பட்ட இந்த சட்டங்களை, காலம் மீண்டும் கொண்டு வரும். அதை ராகுல் காந்தியையே கூட கொண்டு வரலாம். யார் மூலம் இந்த சட்டங்கள் மீண்டும் செயல் வடிவம் பெறும் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *