சார்வரி -ஆனி 14(28 ஜூன் 2020):வாங்க சொல்லலாம், போலீஸ் அராஜகம் ஒழிக! ஆமா! ரஜினி ஏன் சொல்லல

ரஜினி சொல்லாவிடில்  என்ன! போலீஸ் ஒழிக! போலீஸ் அராஜகம் ஒழிக!

என் மனம் ஆறவில்லை இந்த போலீஸ்காரர்கள்  ஆட்டத்திற்கு ஒரு முடிவு தேவை.

ஒன்றை சொல்ல மறந்து போனேன், எல்லா போலீஸ்காரர்களும் மோசமானவர்கள் அல்ல ஒரு சிலர் தான் லஞ்சம் வாங்குகின்றனர் ஒரு சிலர் தான் கொடூரமாக நடந்து கொள்கின்றனர்.ஒரு சில போலீஸ்காரர்கள் தான் மோசமானவர்களாக இருக்கின்றார்கள்.

அந்த ஒரு சிலர் எல்லா இடங்களிலும் இருக்கின்றார்கள்.

 அந்த ஒரு சிலர் போலீஸ்காரர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்.

  1. தரமில்லாத சாலையில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி லஞ்சம் வாங்குகின்றார்கள்,வண்டியை நிறுத்தாமல் செல்பவர்களை துரத்தி உதைக்கிறார்கள். சாலைகளை  சீரமைக்காத போது,தலைகவசம் இல்லாதவர்களையும் காப்பீடு இல்லாதவர்களையும் நிறுத்தி லஞ்சம் பெறும் அதிகாரம் யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு. சாலைகளில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காப்பீடு புதுப்பிக்காமல் ஒரு 5 பேர் ஆவது வருவார்கள் என்று மீனுக்கு கொக்கு காத்திருப்பது போல் காத்திருக்கின்றார்கள்.
  2. நோய்  தொற்று பரவும் காலங்களில் அரசாணையை மதிக்காதவர்களை, நிலைமையின் தீவிரத்தை உணராமல் இருப்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு.

அவசர காலங்களில் விதிகளை மீறுபவர்களிடம் எதற்காக  இவர்கள்  பேசிக்கொண்டும் எச்சரித்து கொண்டும்  இருக்கிறேன் என்ற பெயரில் வாக்குவாதம் புரிகிறார்கள்.வீட்டில் சென்று அவர்கள் வேலையை பார்க்காமல்.

  • சமூக பரவலை தடுக்க மாவட்ட எல்லைகளில் போலி அனுமதி சீட்டு அல்லது அனுமதி சீட்டு இல்லாதவர்கள் வண்டியை நிறுத்தி கேள்வி கேட்கும் உரிமையை யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு.

இந்த பாவம் எல்லாம் சும்மா விடுமா! இப்படி பாவங்களை சேர்த்துக்கொண்டு போவதாலேயே ரௌடிகளால் சமயங்களில் போலீஸ்காரர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். நோய் தொற்றும் நேரத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள். விழா சமயங்களில் குடும்பத்துடன் நேரம் கழிக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.கர்மா சும்மா விடுமா?

இந்த போலீஸ்காரர்களையெல்லாம் கேள்வி கேட்க அரசியல்வாதிகள் இல்லை என்றால் நம் நிலைமை இன்னும் மோசமாக அல்லவா  ஆகி விடும். முன்னாள் ஆளுங்கட்சி முன்னாள் எதிர்க்கட்சி முன்னாள் மத்திய அமைச்சர்களை கொண்ட கட்சி என்று  அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லவர்களாக இருக்க இந்த போலீஸ்காரர்கள் எத்தனை கொடூரம் மிக்கவர்களாக இருக்கிறார்கள் . அந்த கட்சிக்காரர்கள் சொல்வது போல் குற்றம் புரிந்த போலீஸ்காரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

குற்றம் புரிந்தால், போலீஸ்காரர்! என்ன போலீஸ்காரர்!  யாராயினும் எத்தனை பெரிய பதவிகளில் இருந்தாலும்  சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையையாக தண்டிக்க வேண்டும்.

ஆனால்  தவறு செய்யும் சிலரை எப்படி தடுப்பது, தண்டிப்பது என்பது தான் கேள்வியாக உள்ளது.

  1. ஒருவர் தலைக்கவசம் இல்லாமல் வண்டி ஓட்டி வருகிறார் சில நல்ல  போலீஸ்காரர்கள் அவருக்கு அபராதம் விதித்து அதற்கான ரசீதை தருகிறார்கள். அவர்கள் நிறுத்தி அபராதம் விதித்த இடத்தில் இருந்து மீண்டும் அவர் தலைக்கவசம் இல்லாமல் தான் வண்டி ஓட்டுகிறார் வீடு வரைக்குமோ அல்லது கடை வரையிலோ.அவர் தான் அபராதம் கட்டிவிட்டாரே, இல்லாட்டி பாவம் ஒரு மோசமான போலீஸிடம் மாட்டிக்கொண்டு லஞ்சம் கொடுத்துவிட்டு வந்து இருப்பார்.
  2. சிக்னல்(சமிக்கை) இல் நிறுத்தாமல் ஒருவர் செல்லுகிறார் அவர் சென்ற சிறிது நேரத்தில் சிக்னல் மாறிவிடுகிறது. சிக்னல் இல் நிறுத்தாமல் செல்லுவதை பெரிய குற்றமாக பார்த்து அவர் பின்னால்  போலீஸ்காரர் சென்றால் அவர் கவனித்து கொண்டிருக்கும் சாலையை யார் பார்த்துக்கொள்வது இவரை போன்ற நல்ல போலீஸ்காரர் அந்த வண்டி போன வேகத்தில் வண்டி எண்ணை  பார்ப்பது பற்றி கூட கவலை பட மாட்டார்கள்.கவலை பட்டாலும் கூட எப்படி பார்த்திருக்க முடியும் வண்டிக்காரர் தான் பறந்து விட்டாரே.
  3. போலீஸ்காரர்கள் சோதனைக்கு என்று நிறுத்தும் போது நிறுத்தாமல் செல்லுபவர்கள் அவசரத்தின் காரணமாக தானே அப்படி சென்றிருப்பார்கள்.
  4. நான் ஒரு போலீஸு எனக்கு மரியாதை இல்லாமல் நீ வண்டியை நிறுத்தாமல் எப்படி செல்லலாம். வா! யார் பெரியவன் என்கிற மனநிலையில் துரத்தி சென்று ஒரு விபத்தை ஏற்படுத்தும் கொடூரமான மோசமான போலீசை என்ன மாதிரி தண்டிக்கலாம்.
  5. அவசர காலங்களில் நோய் தொற்று தீவிரமாக பரவும் காலங்களில் அரசின் உத்தரவுகளை மதிக்காமல் கடை திறந்து வைத்து இருப்பவர்கள். வயிற்று பிழைப்பிற்காக தானே செய்கிறார்கள்.

குழப்பம் இது தான்,

அபராதம் செலுத்திய பிறகு தலைக்கவசம் இல்லாமல் வண்டி ஒட்டி செல்கிறவர்கள்;

சிக்னல் இல் வண்டியை நிறுத்தாமல் சென்றவர்;

ஏதேனும் குற்றம் புரிந்தவர்கள் கூட நிறுத்தாமல் செல்ல வாய்ப்பிருக்கும் போது,வண்டியை நிறுத்தாமல் செல்லுகிறவரை உதாசீனப்படுத்தும் போலீஸ்காரர்;

வண்டியை நிறுத்தாமல் செல்லுகின்ற அல்லது  ஏதோ ஒரு காரணத்தினால் போலீசை உதாசீனப்படுத்திவிட்டு செல்லுகின்றவரை துரத்தும் நோக்கில் விபத்தை ஏற்படுத்துகின்ற போலீஸ்காரர்.

வயிற்று பிழைப்பிற்காக சட்ட விதிகளை மதிக்காமல் கடை நடத்துபவர்கள்;

இவர்கள் எல்லாம் தவறு செய்தவர்கள் தானா? இவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் தானா? இதையெல்லாம் எப்படி சரி செய்வது .

அதைப்பற்றி நாம் ஏன் கவலை பட வேண்டும் அதையெல்லாம் கவனித்துக்கொள்ள நமக்கு எத்தனை நல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். பத்திரிகை அறத்தை பேணும் எத்தனை பத்திரிகைகள் இருக்கின்றது.

நாம் ஒரு விஷயத்தை மட்டும் மறந்து விட கூடாது கோபத்தை மட்டும் விட்டு விடக்கூடாது (விட்ற்றாத டா தம்பி!).போலீஸ் ஒழிக! போலீஸ் அராஜகம் ஒழிக! (எல்லாரையும் இல்லை ஒரு சில போலீசை). விசாரணை என்று கூட்டி  செல்பவர்களின் உயிர்க்கு உத்தரவாதம் இல்லாத போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.விசாரணை என்று கூட்டி செல்கிறார்கள் தற்கொலை செய்துகொண்டாதாக சொல்கிறார்கள்.விசாரணை என்று கூட்டி செல்லுகிறார்கள் தீடீர்னு என்று மாயமாய் இறந்து விட்டதாக சொல்லுகிறார்கள்.

உயிர் இழப்புக்கு காரணமாக இருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்க பட வேண்டும்.குற்றவாளிகள் காவலர்காளாக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும் .ஒரு குற்றம் நடந்து விட்டால் நம்முடைய முக்கிய குறிக்கோள் குற்றவாளிகளை கண்டுபிடித்து அல்லது ஒருவரை(காவலர்களை) மட்டும் குற்றவாளிகளாக ஆக்கி தண்டனை பெற்று தருவது. அது மட்டும் நடந்து விட்டால் நீதி வென்றது என்றும் நான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த மீம்ஸ் க்கு ஒரு அர்த்தம் உண்டானது என்றும் ஆசுவாசம் கொள்வேன். எனக்கு குரல் கொடுத்த அரசியல்வாதிகளுக்கு  தான் அடுத்த முறை என் ஓட்டு (போலீஸ் க்கு மட்டும் போடவே மாட்டேன்).நான் கோபம் கொண்டிருந்த போது  என்னை போலவே கோபம் கொண்ட அந்த செய்தி ஊடகத்தை மட்டுமே ஆதரிப்பேன்.

இரண்டு ஆடுகள் சண்டையிட்ட  போது  என்ன சண்டை என்று எந்த ஆடும் கேட்கவில்லை நரி தான்  கேட்கிறது.மந்தை ஆடுகள் அந்த சண்டையை மறந்து ,சண்டை ஏற்பட்டதற்கான காரணம் மறந்து மீண்டும் ஒரு நாள் அதே நிலையில் மற்றுமொரு நரிக்கு வாய்ப்பு கொடுக்க காத்திருக்கும். இந்த கதை ஏன் இப்ப ஞாபகம் வருது!

சரி,மறுபடி இதே மாதிரி நடந்தால் என்ன செய்வது?மக்கள் முன்பு போல் இல்லை, மீம்ஸ் மூலமாகவும் சமூக வலைத்தளங்களில் வரும் வீடியோக்கள்  மூலமாகவும் அரசியல் கற்று கொண்டுவிட்டார்கள். தமிழரை தமிழர் மட்டுமே ஆள்வது தான் முடிவு என்பதில் தெளிவாக உள்ளார்கள். போலீஸ் வேலைக்கு  தமிழர்களை மட்டும் பணியமர்த்தினால் இதையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வர முடியுமோ என்னவோ.

மக்களின் இந்த எழுச்சியும் மாற்றமும் அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் இல்லை அவர்களும் தங்களை மறுசீரமைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

நிச்சயம் முன்னாள் எதிர்க்கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் , அவர்கள் எதிர்கட்சியாய் இருந்த சமயத்தில் எத்தனை முறை காவல் துறை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் இறந்து போயிருக்கின்றார்கள் என்பதை முன்னாள் ஆளும்கட்சிக்கு சுட்டிக்காட்டி இதற்கான நிரந்தர தீர்வுகளை அரசுக்கு பலமுறை எடுத்து சொல்லியும்  முன்னாள் அரசு இதற்கான தீர்வுகளை செய்யவில்லை என்பதை நினைவுபடுத்துவார்கள். கொஞ்சம் தாமதமாக செய்வார்கள், முதலில் பணியிடை நீக்கம், பின்பு விசாரணைக்கு உத்தரவு, ஈடுத்தொகை அறிவிப்பு, ஆறுதல், இதையெல்லாம் முடித்துவிட்டு நிரந்தர தீர்வுகளை பற்றி வெகு விரைவாக முடிவு செய்வார்கள்.

முன்னாள் ஆளுங்கட்சியும் சளைத்தது இல்லை,நல்லது செய்வதில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தானே.அவர்கள் ஆட்சி நடந்த காலத்தில், இப்படி பிரச்சனைகள் வராமலிருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி இப்போதைய அரசு அதை பின்பற்றவும் இல்லை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தவும் இல்லை என்பதை விரைவில் தெளிவுபடுத்துவார்கள்.  கொஞ்சம் தாமதமாக செய்வார்கள். முதலில் கண்டனம்,ஈடுத்தொகை அறிவிப்பு, கூடவே இருந்து ஆறுதல் சொல்லுவது சி.பி.ஐ விசாரணை வேண்டுவது இதையெல்லாம் முடித்துவிட்டு அவர்கள் காலத்தில் கொண்டு வந்த வரையறைகள் அல்லது அதற்கு முன்னாள் இருக்கும் மேம்படுத்தப்படாத வரையறைகள் எப்படி மீறப்பட்டது என்பதை பேசுவார்கள்.

மேலே சொன்னது முன்னாள் உறுப்பினர்களை,அமைச்சர்களை கொண்ட எல்லா நல்ல கட்சிகளுக்கும் பொருந்தும்.

செய்தி ஊடகம்,அவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வு போன்று எந்த துறையில் இருப்பவர்களுக்கும் பொறுப்பு இருப்பதில்லை.

காவல் துறையில் இன்றைய தேதி வரை எத்தனை உயிர் இழப்புகள்  நடந்து இருக்கின்றது;

அவ்வாறு நடந்த பின் அரசை நடத்தும் அரசியல் கட்சிகள் நீண்ட கால தீர்வுகளாக எதையெல்லாம் செய்தார்கள் அதில் என்னவெல்லாம் மேம்படுத்த பட வேண்டும்;

 காவல் துறையினருக்கு இது போன்ற விஷயங்களில் உள்ள சவால்கள் என்ன?என்பதை பற்றியும்(சட்டப்படி கைது செய்ய வேண்டிய இடங்களில் அபராதம் விதிக்க வேண்டிய இடங்களில் எச்சரிக்கை செய்யும் போது ஏற்படும் வாக்குவாதங்களை எப்படி தவிர்ப்பது என்றும்);

யாரேனும் இரண்டு காவலர்களை பணியிட நீக்கம் செய்வதோ இல்லை சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை அளிப்பதோ மட்டும் தீர்வாகாது என்றும்;

எல்லா இடங்களிலும் காவல் துறை மீது ஏற்படுகின்ற நம்பிக்கையின்மைக்கும் வெறுப்புக்கும்  காவல்துறை மட்டும் பொறுப்பாக முடியாது என்றும்;

அரசியல்வாதிகளாக ,காவல்துறை அதிகாரிகளாக ,ஊடகமாக , ஒரு ஒட்டு மொத்த சமூகமாக நாம எண்ணங்களை அணுகுமுறைகளை ஒவ்வொரும் எப்படி தன்னை மாற்றி கொள்ள வேண்டும் என்பதை பற்றியும்.(சிஸ்டம் கெட்டு போச்சு மக்கள் எண்ணங்களை மாத்தணும் னு எல்லாரும் சேர்ந்து தான் செய்யணும் னு யாரோ சொன்னதை ஞாபகப்படுத்துவார்கள்);

ஒரு காவல்துறை அதிகாரி அரசு மருத்துவரை மிரட்டி சான்றிதழ் பெறுவதை வருங்காலத்தில் எப்படி தடுக்கலாம் என்றும்;

சிறையில் அடைப்பதற்கு முன் சிறை அதிகாரி செய்யும் சோதனைகளில் ஏற்பட கூடும் இது போன்ற உதாசீனத்தை எப்படி தடுப்பது என்றும்;

நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளிகளின் நிலைமை நீதிபதியால் பார்க்க முடியாமல் போனதை எப்படி தடுக்க வேண்டும் என்பதையும்;

மக்களின் உணர்வுகளை இன்னும் தூண்டும் விதமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை உறுதியாக பரப்பும் மீசைக்கார ஊடகங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் சீக்கிரமே பேசுவார்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படும் செய்தி ஊடகத்தை சேர்ந்தவர்கள்

நேற்று தான் ரஜினி இன்னும் கருத்து சொல்லவில்லை என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது என்று நினைவுபடுத்தியிருக்கிறார்கள். அவர்களும் நம்மள மாதிரி தானே! கோபத்தில் இருக்கிறார்கள் . நிதானமாக யோசித்து அவர்கள் பொறுப்பை உணர்ந்து மேலே சொன்னதை எல்லாம் செய்வார்கள்.

ஏப்பா! அதுக்காக ரஜினி கேட்டை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள்  உட்கார்ந்து கொண்டு ஒரு ட்வீட் கூட போடா மாட்டாரா? வந்து என்ன சொல்லிவிட போகிறார், “துப்பாக்கி சூட்டின் போது, என்ன தப்பு நடந்திருந்தாலும் துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்க கூடாது அதே நேரத்தில் போராட்டம் எல்லாவற்றிக்கும் தீர்வாகாது” னு சொன்னது போல்

” u see, உயிர் போயிருக்கு, கண்டிப்பா நீதி கிடைக்கணும்,  தப்பு செஞ்சவங்கள I mean,அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட போலீசை தண்டிக்கனும், govt  வந்து as per law என்ன செய்யணுமோ அதை செய்ய வேண்டும் னு  கேட்டுக்கிறேன் .அதே நேரத்தில் நாம மொத்தமா போலீஸ் மீது ஒரு வெறுப்பை பரப்பக்கூடாது.அது நாட்டுக்கு நல்லது இல்லை வன்முறை எந்த வகையில் யாரிடமும் இருக்க கூடாது அதை நான் எப்பவும் ஆதரிக்க மாட்டேன்” 

இப்படி அவர் எதாவது சொல்ல போக “நாடே கொந்தளிச்சுட்டு இருக்கு, மீடியா எல்லாம் விவாதம் நடத்துது, இவர் உடனே ஒரு கண்டனம் கூட தெரிவிக்காம இப்ப வந்து போலீஸ்க்கு ஆதரவா பேசுறார் .அவர் கிடக்குறார் மென்டல்” என்று  இப்படி பிரச்சனை என்ன என்பதை மறந்து விட்டு அவரை எதிர்க்க எல்லாரும் கிளம்பவா!

 “இடையில் தலைவரை மெண்டல்னா சொன்ன!”

ஊருக்குள்ள அப்படி தான் பேசிக்கிறாங்க னு சொல்றேன் ப்பா பூமி தட்டையானது ஊரே சொல்லிட்டு இருக்கும் போது,  உருண்டை சொன்னவனை மெண்டல் னு தானே சொல்லுவாங்க. Mentally Challenged ஐ யாரும் அப்படி சொல்றதில்லை mentally advanced தான் அப்படி சொல்றாங்க.

“அரசியல் ஜோக்கர் னு வேற கேலி பேசிக்கிறாங்க”

 அது உண்மை தான், ஜோக்கர் தான் ஆட்டத்தோட போக்கை மாற்றக்கூடியது. என்ன! Rummy சேரனும் (மக்கள் ஒரு அணியில் எழுச்சி பெற்று சேரனும்) னு அப்ப தான் ஜெயிக்க முடியும் னு சொல்றார்.

மாமா மச்சான்கள் எல்லாம், நீ ஜெயிக்கணும் இல்லை நான் ஜெயிக்கணும் ணு இருக்காங்க ஆட்டத்துக்கு வெளிய சித்தப்புக்களையும்(ஓட்டை பிரிக்கும் கட்சிகள்) வச்சுக்கிட்டு ஏமாத்துறாங்க. ஜோக்கர் மட்டும் வச்சுக்கிட்டு மக்கள் ஜெயிக்க முடியாது என்பதை தான் எழுச்சி வர வேண்டும் என்கிறார். இப்ப இல்லைனா அடுத்து ஆட்சியிலும் இதே போல ஒரு குற்றத்திற்காக சமூக வலைத்தளங்களில் நம் கோபத்தை கொப்பளித்துக்கொண்டிருக்க வேண்டியது தான் நம் நிலைமை  வாங்க அப்பவும் சொல்லலாம், போலீஸ் அராஜகம் ஒழிக!

One thought on “வாங்க சொல்லலாம், போலீஸ் அராஜகம் ஒழிக! ஆமா! ரஜினி ஏன் சொல்லல!”
  1. இங்கு, இதுதான் அரசியல், அரசியல் சாணக்கியத்தனம் என்று கட்டமைக்கப்பட்டு, மக்களின் மனங்களிலே ஊன்றப்பட்டு, வேரூன்றிவிட்டது.
    இதுவன்று, மக்களின் நலன் சார்ந்ததுதான் அரசியல், என்று ஒருவர் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?!.
    “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’, என்று முன்னோர் சொன்னதை மறந்து, ‘கருத்து கந்தசாமிகளாய்’ , எதைப்பற்றியும், எல்லாம் தெரிந்ததுபோல் கருத்துப் பிதற்றல்கள் அல்ல கருத்துத் திணிப்புகள் செய்வோரால்தான் இவ்வளவு கோளாறுகளும்.
    இங்கு, ஆளும் கட்சி , எதிர்கட்சி, உதிரிக்கட்சி….. அவற்றைச் சார்ந்தோர், பெரும்பாலான ஊடகங்கள், சமூக ஆர்வலர் என்று கூறிக்கொள்வோர்,மற்ற பலருக்கும் பணம் செய்வதொன்றே குறி என்றுதான் செயல்படுகின்றனர். அதற்காக எவ்வளவு கீழான எல்லைக்கும் செல்லத் தயாராயுள்ளனர். இப்படிப்பட்ட “நிர்வாண” சமூகத்தில் “கோவணம்” (அல்ல முழு ஆடை) அணிந்தவன் “அரசியல் ஜோக்கர்தான்” அல்ல “மெண்டல்தான்”.
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *