ஒரு அரசியல் தலைவராக கலைஞரின் மகன் என்னும் அடையாளம் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வித அழுத்தத்தையும் நிர்பந்தத்தையுமே ஏற்படுத்தியிருந்தது. அத்தனை அழுத்தங்களைத் தாண்டி இப்பொழுது அவர் பெற்றிருக்கும் வெற்றி அவருக்கு ஒரு இளைப்பாறுதலை தரலாம். ஆனால் அதற்கு அவர் அதிகமான நேரம் எடுத்துக்கொள்ள முடியாது. அவர் ஏற்று நடத்த வேண்டிய பொறுப்புகள் ஏரளாம்.பொறுப்புகளை விட சவால்கள் ஏராளம்.
அதேபோல எப்பொழுதும் தங்களை சிறுபாண்மையினரின் பாதுகாவலனாக முன்னிறுத்திக் கொள்ளும் அவர் கட்சிக்கு இருக்கும் சவால்களும் ஏராளம். நம் தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகள் எல்லாமுமே எப்பொழுதுமே அரசின் எல்லா நடவடிக்கைகளையும் அது சரியா, தவறா என்றெல்லாம் ஆராயாமல் எதிர் கட்சி என்கிற ஒரே காரணத்தினால் மட்டுமே எதிர்த்தே வந்து இருக்கின்றது. இந்த எதிர்ப்பரசியல் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.
நிர்வாகம் என்று வருகின்ற போது, எதிர்கட்சி ஆளும் கட்சியாகிவிட்டபின்பு அவர்கள் எதிர்த்த அநேகமான விஷயங்களை அவர்களால் ஒதுக்கிவிட முடியாது. இன்றைய கட்டத்தில் தி.மு.க எதிர்த்த ஆனால் நிர்வாக ரீதியாக ஒதுக்க முடியாத விஷயங்கள் ஏராளம் அதனையெல்லாம் செயல் தலைவராக இருந்த தலைவர் ஸ்டாலின் அவர்கள் எப்படி கையாள்கிறார் என்பது மக்களால் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கும்.
அதுமட்டுமின்றி தேசிய கட்சியான காங்கிரஸ் இன்னும் தேசிய அளவில் பெரிய எழுச்சி பெறாமல் இருக்கின்ற வேளையில் சிறுபான்மையினர் ஆதரவு என்கிற பெயரில் மத்தியஅரசாங்கத்தை நிர்வாக ரீதியில் எடுத்ததற்கெல்லாம் எதிர்த்துக்கொண்டு இருக்கவும் முடியாது என்கிற நிலைமையில் மத்தியில் ஆளும் கட்சியை எதிர்ப்பதே சிறுபாண்மையினர் ஆதரவு நிலை என்கிற மனோநிலையே இன்னும் பரவலாக இருக்கும் பொழுது தன் ஆதரவாளர்களை சிதறாமல் தக்கவைத்துக்கொள்வது என்பது பெரிய சவாலாக அமையும்.
சட்டசபை, மக்களவை,மாநிலங்களவை என்று எல்லா இடங்களிலும் தி.மு.க விற்கு என்று ஒரு பெரிய பலம் கிடைத்த பின்னர் முக்கியமான பிரச்சனைகளில் முன்பு இருந்த முதல்வர்களை போன்று மத்திய அரசிற்கு கடிதம் எழுதிவிட்டு நழுவி விட முடியாது.
இப்படியாக தேர்தலுக்கு முன்னர் எதிர்கொண்ட சவாலை விடவும் இனி ஸ்டாலின் எதிர்கொள்ள போகும் சாவல்களே அதிகம்.
ஸ்டாலினை பொறுத்தவரையில் 80, 90களுக்குப் பின் இருந்த தமிழக அரசியலில் வெறும் எதிர்ப்பு என்று இல்லாமல் அரசியல் தலைவர்களுக்குள் பரஸ்பர அன்பு மரியாதை இணக்கம் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களில் முதலானவர் என்று கூட சொல்லமளவிற்கு, தன் விருப்பத்தை ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஜெ.ஆட்சி பொறுப்பேற்ற போது அந்த நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய அந்த விருப்பத்திற்கு தானே ஒரு தொடக்கமாகவும் இருந்தார். அவரின் இத்தகைய பண்பு தான் அவர் கூட்டணி கட்சிகளை கையாள உதவியது. அவர் மீது வைக்கப்படும் பரிகாசமான விமர்சங்களைத் தாண்டி ஒரு கட்சியை வழி நடத்துகின்ற ஆளுமை தனக்கு இருக்கின்றது என்பதை அவர் காட்டிவிட்டார். ஆட்சி நடத்துவதை விட சவாலானது ஆட்சியில் இல்லாத போது கட்சியை ஊக்கப்படுத்தி முன் நின்று நடத்தி ஒரு வெற்றிக்கு அழைத்து செல்வதென்பது. அத்தகைய பெரும் சவால்களை ஜெயித்து விட்ட தலைவர் ஸ்டாலின் முதல்வராக தன் முன் இருக்கும் சவால்களையும் வென்று விடுவார் என்று நம்புவோம்.
அதோடு மக்களாகிய நாம் எப்பொழுதும் ஆளுகின்றவர்களை, அரசாங்கத்தையும் குறைகூறியே பழகிவந்து இருக்கின்றோம். அந்த மனநிலையை கொஞ்சம் மாற்றிக்கொண்டு நிர்வாக ரீதியிலான சிக்கல்களை புரிந்து கொள்ள முற்பட்டு அரசிற்கு நம் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கொடுப்பதில் தவறில்லை. ஆனால்,எப்பொழுதும் போல ‘இவர் அதற்கு தகுதியானவர் இல்லை’, ‘இந்த அரசாங்கம் என்ன செய்தது’ என்றெல்லாம் இகழ்ந்து கொண்டும் பரிகாசம் செய்து கொண்டும் இருப்பதால் எதுவும் மாறப்போவதில்லை.
மக்களும் அரசாங்கத்தின் அங்கம் என்பதை புரிந்துகொண்டு புது அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கடமை மக்களுக்கும் இருக்கின்றது.
முதல்வராக பதவியேற்கவிருக்கும் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எங்களுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.