காலம் எல்லாவற்றையும் மாற்றவல்லது. அது நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் அர்த்தங்களை கூட மாற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. ஒரே மாதிரியான அர்த்தங்களை உடைய வெவ்வேறு அர்த்தம் கொண்ட வார்த்தைகளை, தங்கள் சுயத்தை இழக்கச் செய்து புது அர்த்தங்களை தந்து விடுகிறது.

உதாரணமாக, student, pupil, disciple,எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அர்த்தம் உடைய வெவ்வேறு அர்த்தம் கொண்ட வார்த்தைகள். அதில் pupil என்கிற வார்த்தை மறைந்தே விட்டது எனலாம்.pupil என்கிற வார்த்தை கிட்டத்தட்ட மறைந்தே விட்டபடியால் student என்கிற வார்த்தை தன் சுயத்தை இழந்து இருக்கின்றது எனலாம். காலம் இப்படியான மாற்றங்களையும் விளையாட்டுகளையும் வார்த்தைகள் அளவில் நிறுத்திக்கொள்ளவதில்லை. ஆனாலும் இந்த மாற்றங்களை காலம் செய்ய எடுத்த கொள்ளும் கால அளவை கொண்டே இங்கே நிலைத்திருப்பதும் தோன்றி மறைவதும் மாறுவதும் நிகழ்கிறது.அதோடு காலம், இது மாதிரியான மாற்றங்களை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக நிகழ்த்துவது இல்லை.

style என்கிற வார்த்தைக்கு பாணி என்றே அர்த்தம். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும். நீங்கள் உங்கள் போக்கிற்கு ஒரு விஷயத்தை செய்தால் அதுவும் கூட ஒரு வித style தான். ஆனால், இந்தியர்களுக்கு ஸ்டைல் என்றால் ரஜினி என்றே கேட்கும் அளவிற்கு காலம் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை ரஜினி என்னும் கருவி கொண்டு மாற்றி இருக்கின்றது. ஸ்டைல் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டால் ரஜினி அவரின் இயல்போடு சாதாரணமாக நிற்பதை, நடப்பதை பேசுவதை எல்லாம் சுட்டிக்காட்டி விளக்க கூடிய அளவிற்கு ‘style ‘ என்னும் வார்த்தைக்கான அர்த்தத்தை காலம் மாற்றி வைத்து இருக்கின்றது.இப்படி ஸ்டைல் என்னும் வார்த்தைக்கான அர்த்தத்தை மாற்றிய காலம் அதனை 4 தசாப்தங்கள் தாண்டி நிலைக்க செய்யவும் செய்து இருக்கின்றது.

ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த்.சிறுவயதில் இருந்தே பிடித்த நடிகர் ஆகிப்போனார். நான் சொல்லும் அந்த சிறுவயதில் நடிகர் என்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது.ஆனால், ரஜினியை தெரியும்.

“ரஜினி மாதிரி தலை சீவி இருக்காங்களா அவங்க தான் டா எங்க அப்பா”

பள்ளி முடிந்து தங்கள் பிள்ளைகளை கூட்டிச் செல்ல காத்திருக்கும் பெற்றோர்கள் மத்தியில் என்னுடடைய தந்தையை கிண்டர் கார்டன்(KG) நண்பர்களிடம் இப்படியாக தான் அறிமுகம் செய்தேன்.

80களில் எல்லோரும் அப்படி தான் தலை வாரியிருப்பார்கள். நான் பிறந்த 90களில் ரஜினி தன் hair style ஐ மாற்றியிருந்தார்.ஆனாலும், 80களில் இருந்த ரஜினியின் hair ஸ்டைல் யே நான் அதிகம் நேசித்தேன்.என்னுடைய அந்த சிறு வயதில் எனக்கு அந்த ஹேர் ஸ்டைல் அப்பாவின் hair ஸ்டைல் போல தெரிந்ததால் பிடித்து இருக்கும். ரஜினியை கவனிக்க ஆரம்பித்ததற்கு பிடிக்க ஆரம்பித்தற்கும் அது கூட காரணமாக இருக்கலாம்.

ஆனால், ஒருவரை நமக்கு பிடிக்க வேண்டுமென்றால்; அவரை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.கவனிக்க வேண்டுமென்றால் அவரை பற்றிய அறிமுகம் நமக்கு கிடைக்க வேண்டும். இங்கு பெரும்பாலோனோர் விருப்பும் விஷயங்கள், மற்றவர்களின் விருப்பங்களால் அவர்களுக்கு அறிமுகமானதாகவே இருக்கின்றது. காப்பி மட்டுமே குடித்து பழகிய குடும்பத்தில் பிறந்து வளரும் ஒரு குழந்தை தேநீரை விரும்பவதற்கான சாத்தியம் மிக குறைவு என்பதை போல.

எங்களுடைய வீட்டில் யாரும் தீவிரமான ரஜினி ரசிகர்கள் இல்லை. நான் பிறந்த 90 களின் ஆரம்ப கட்டத்தில் தொலைக்காட்சியும் கூட ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாகவே இருக்கும். தெருவுக்கு ஒரு வீட்டில் தொலைக்காட்சி இருந்தால் ஆச்சரியம்.ஆனாலும், இந்த ரஜினி எப்படி எனக்கு அறிமுகமானார்! அத்தனை சிறு வயதிலேயே எப்படி எனக்குள் வந்தார்!

காரணம், அந்த கால கட்டத்தில் தமிழகம் முழுதையும் ரஜினி ஆக்கிரமித்து வைத்து இருந்தார்.எங்கள் ஊரில் ரஜினியை காண தொலைக்காட்சி தேவை இல்லை, தியேட்டர் தேவை இல்லை. திரும்பும் திசை எல்லாம் ரஜினி தென்படுவார் என சொல்லுமளவிற்கு தெருவிற்கு ஒரு ரஜினி படத்தையேனும் போஸ்டர் வடிவிலோ வரையப்பட்ட கட் அவுட் வடிவிலோ இன்றளவிலும் கண்டு விட முடியும். அனேகமாக எல்லா சலூன் கடைகளிலும் அவர் படம் இருக்கும். 10இல் 7 ஆட்டோக்களில் அவர் படம் இருக்கும்.

இப்படி அந்த கால கட்டத்தில் நான் பார்த்த ரஜினியின் படங்களில் அவர் 80களில் இருந்த மாதிரியான தோற்றத்தை காட்டும் படங்களாகவே இருக்கும்.அதை பார்க்கும் பொழுதில், “இவர் நம்ம அப்பா மாதிரி தலை சீவி இருக்கின்றார் என்று தோன்றும்”.

இப்படி,ஏதோ ஒரு வகையில் அறிமுகமாகி, ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டு விட்ட ரஜினி மீதான இந்த ஈர்ப்பு,இன்றும் மாறாமல் அதே புதுமையோடு இருப்பதை நினைக்கையில் எனக்கு இன்னும் வியப்பாக இருக்கின்றது.

எனக்கு 6 வயது இருக்கும், வீதியெங்கும் ரஜினியின் அண்ணாமலை படத்தின் ஸ்டிலோடு சைக்கிள் சின்னமும் உதய சூரியன் சின்னமும் போட்ட துண்டு சீட்டுகளோடு தேர்தல் பிரச்சாரம் நடந்தது, அந்த வயதில் அண்ணாமலை படம் கூட நான் பார்த்திருக்கவில்லை. ஆனால், ரஜினி என்கிற வார்த்தை தேர்தல் பற்றியும் கட்சிகளை பற்றியும் ஒரு அறிமுகத்தை தந்தது. நான் வளர்ந்த கால கட்டத்தில் ரஹ்மான் தான் ரஜினி படங்களுக்கு இசை அமைத்திருந்தார்.அதனாலேயே ரஹ்மான் பிடித்த இசைமைப்பாளராகி போனார். ரஜினி படங்களுக்கு பாடல் எழுதும் வைரமுத்து பிடித்த பாடலாசிரியராகி போனார்.

கல்லூரிக்காலத்தில் ரஜினி ஹிட்ஸ் DVD வாங்க சென்ற பொழுது ;எனக்கு, இளையராஜா ரஜினிக்கும் கமலுக்கு இசைமைத்த படங்களின் தொகுப்பே கிடைத்தது. அந்த DVD வாங்குவதற்கு முன்பு வரை இளையராஜாவை நான் கவனித்தது கிடையாது.

ஒரு சிறுவனுக்கு; இன்னும் சொல்லப்போனால் ஒரு குழந்தைக்கு; சினிமா,தேர்தல், இசை, கவிதை, போன்றவைகளுக்கு அறிமுகம் தந்த ரஜினிக்கான அறிமுகமாக ரஜினியே தான் இருந்தார்.

நடிகர்களில், ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சிறப்பை சொல்லுவார்கள் அது அவர்களின் அடையாளமாக கூட ஆகி இருக்கின்றது. ரஜினியின் அடையாளமாக நீங்கள் எதையும் சுட்டி விட முடியாது. ஸ்டைல் தான் அவரின் அடையாளம் என்பீர்கள் என்றால். நிச்சயம் இல்லை. கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை ரஜினியை கொண்டு காலம் மாற்றி வைத்து இருக்கின்றது.ரஜினி அந்த வார்த்தைக்கு அடையாளம் தந்து இருக்கின்றாரே தவிர அது அவரின் அடையாளம் இல்லை.

ரஜினியை ஏன் பிடிக்கும்? என்கிற கேள்விக்கு அவரின் நடிப்பு, அவர் செய்கின்ற நல்ல விஷயங்கள், அவர் ஸ்டைல் என்று எதை சொன்னாலும் அது பொய்யாக தான் இருக்கும். மேற்படி விஷயங்களை கவனிக்க முதலில் அவரை பிடித்திருக்க வேண்டும்; அதற்கு அவரை கவனிக்க வேண்டும்; அவரை கவனிப்பதற்கு அவரை கொஞ்சமேனும் பிடித்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் பார்த்தால், ரஜினியை ஏன் பிடித்தது என்கிற கேள்வி, கேள்வியாகவே தான் இருக்கும்.பிடிக்கும் அவ்வளவு தான்.

இப்படி பிடித்துப்போய் கவனிக்க தொடங்கிய ரஜினியின் நடிப்பை பற்றி ஏன் யாருமே பெரிதாக பேசுவதில்லை என்று நினைத்திருக்கிறேன்.நடிப்பதற்கென்றே அங்குலம் அங்குலமாக காலம் செதுக்கி வைத்து இருக்கும் ஒரு கலைஞனின் நடிப்பை பற்றி ஏன் யாரும் பெரிதாக பேசுவதில்லை என்று சமயங்களில் கோபப்பட்டு இருக்கின்றேன்.

இங்கு, நடிப்பிற்கும் சினிமாவிற்கும் சில இலக்கணங்களை வகுத்து கொண்டு இருக்கும் ஜீனியஸ்களில் பலர் கமர்ச்சியல் சினிமாக்களை சினிமாக்களாக மதிப்பது கூட கிடையாது. நடிப்பில் உள்ள technicalities ஐ தெரிந்து கொண்டால் தான் அந்த நடிகரின் நடிப்பு திறன் தெரியும் என்கிற பேச்சுக்களையும் கேட்டு இருக்கின்றேன். இப்படியாக சினிமாவை பற்றிய மேதாவித்தனங்களோடு மட்டும் நடிப்பு திறனை ஒப்புமைப்படுத்துவது சமைக்க தெரிந்தவர்களுக்கு தான் மட்டும் அதன் சுவை தெரியும் என்பதை போன்றது.

இதையெல்லாம் தாண்டி ரஜினியின் நடிப்பு திறனை பற்றி பேசுபவர்களும் கூட ஆறிலிருந்து அறுபது வரை , முள்ளும் மலரும் என்று தேடிப்பிடித்தே திரைப்படங்களை சொல்வது வியப்பாகவே இருக்கின்றது.

இது, இப்படி தான் இருக்கும் என்று அதை அப்படியே தத்ரூபமாக வெளிப்படுத்துவது தான் நடிப்புத் திறன் என்றால்,அதனை எல்லா நடிகர்களையும் போல ரஜினியும் சிறப்பாகவே செய்து இருக்கின்றார். ஆனால் , எப்படி இருக்கும் என்றே தெரியாத ஒன்றை இது இப்படி தான் இருக்கும் என்று உங்களை நம்ப வைத்து கதையோடு உங்களை ஒன்றிவிட செய்யும் நடிப்பை ரஜினியை தவிர யாராலும் வெளிப்படுத்திவிட முடியாது.

“நானா உங்கள உருவாக்க சொன்னேன்;

நானா எனக்கு உணர்வு கொடுக்க சொன்னேன்;

நானா சனா வ முத்தம் கொடுக்க சொன்னேன்” என்று, ஒரு எந்திரம் ஏங்கினால் இப்படித்தான் ஏங்கும் என்பதை நம்ப வைத்து உங்களை கதையோட்டத்தோடு ஒன்றி இருக்க செய்வது நடிப்பு திறனின் உச்சம் இல்லையா?

நம் உணர்வுகளின் உச்சத்தில் நம் மனம் சொல்லும் அத்தனையும் நம்மால் நிகழ்த்திவிட முடியாது. அவையெல்லாம் நிகழ்ந்தால் இப்படிதான் இருக்கும் என்பதையும் நம்பும்படியாக செய்வதை நடிப்பு திறன் என்று சொல்ல முடியாதா? ஒருவர் மீது உங்களுக்கு கோபம் ஏற்படும் தருணங்களில் உங்கள் மனம் செய்ய நினைக்கும் செய்ய முடியாத விஷயங்களை ரஜினி செய்யும் பொழுது அதை நம்பும் படியாகவே செய்கிறார்.

தன் தங்கையையும், தன் தம்பியையும் தாக்கிய ஒரு ரவுடி கும்பலை குழாயை பிடுங்கி ஒருவர் அடிக்கும் அசாதாரணமான காட்சியில் சிலிர்த்து போகிறோமே தவிர, அது எப்படி முடியும் என்கிற கேள்வி அந்த தருணத்தில் நமக்குள் எழாமல் பார்த்துக்கொள்வது அவரின் நடிப்பு இல்லாமல் வேறு என்ன! குழாயை பிடுங்கி அடிப்பதற்கு முன்னர் அவர் கண்களில் காட்டிய கோபம், அந்த அதிர்வு, அவர் மரத்தையே பிடுங்கி அடித்து இருந்தாலும் நம்மை நம்ப செய்து இருக்கும். அத்தனை கோபத்தில், மனித மனம், “நம்மால் எது முடியும்? முடியாது?” என்கிற சிந்தனைக்குள் செல்வதில்லை. இப்படி நம் மனதின் extreme உணர்வுகளின் பிரதிபலிப்புகளை ரஜினி திரையில் காட்டுவதாலேயே எல்லோராலும் கொண்டாடப்படுகிறார். ஆனால், அதற்கு அவரின் நடிப்பு தான் பிரதானமாக இருக்கின்றது என்பதை தான் யாரும் பெரிதாக பேசுவதில்லை.


சமீபத்தில் வந்த தர்பார் படத்தில், பார்க்காமலேயே அசாத்தியமாக சண்டை இடுவதை ரஜினியை தவிர யார் செய்து இருந்தாலும் நம்பும் படியாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

இப்படி,அவரின் நடிப்பிற்கு சான்றாக சினிமா மேதாவிகளால் கமர்ச்சியல் படங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட படங்களில் இருந்தே பல உதாரணங்களை சொல்ல முடியும்.

ஒரு காட்சியில், இப்படி தான் நிற்க வேண்டும் என்றால்; அந்த நடிகர், அவர் கையை எப்படி வைத்து இருக்கின்றார்; காலை எப்படி வைத்து இருக்கின்றார்; இறுக்கமாக நிற்கின்றாரா; தளர்வாக நிற்கின்றாரா என்பதை தாண்டி என்ன மாதிரியான அதிர்வோடு நிற்கின்றார் என்பதும் இருக்கின்றது.

எல்லா உணர்வுகளுக்கும் ஒரே மாதிரியாக நின்றாலும் கூட ரஜினியால் ஒவ்வொரு உணர்வுக்கும் ஏற்ப அதிர்வுகளை வெளிப்படுத்த முடியும்.
தர்மத்தின் தலைவன் படத்தில் தம்பிக்கு முன்னால் நிற்பது.
படிக்காதவன் படத்தில் அண்ணன் என்று தெரிந்தும் அண்ணனிடம் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் நிற்பது.
படையப்பா படத்தில் மகளுக்காக திருமணம் பேச போன இடத்தில் ஏமாற்றத்துடன் நிற்பது.
தளபதி படத்தில் நண்பன் தன்னுடன் வர சொல்லி கேட்கும் பொழுது நெகிழ்ச்சியுடன் நிற்பது.அதே படத்தில் காதலி முன்னால் நிற்பது என்று நிற்பதில் காட்டும் வேறுபாட்டாலேயே அவரால் வெவ்வேறு உணர்வுகளை நமக்குள் கடத்த முடியும். நடிகர்களில், கண்களாலேயே எல்லா உணர்வுகளையும் கடத்த வல்லவரான ரஜினிகாந்தால் கேமரா அவரது முதுகை காண்பித்து கொண்டு இருக்கும் பொழுதும் அந்த உணர்வுகளை கடத்த முடியும்.

அதன் காரணமாகவே நடிப்பதற்காகவே அங்குலம் அங்குலமாக காலம் செய்து வைத்த கோலம் ரஜினி என குறிப்பிட்டோம்.

படிக்காதவன்,தளபதி, பாட்ஷா, படையப்பா, எந்திரன்,தர்மத்தின் தலைவன், என்று அவரின் கமர்ச்சியல் படங்கள் எல்லாவற்றையும் கூட அவரின் நடிப்பிற்கு உதாரணமாக எடுத்துச் சொல்ல முடியும்.

“சரி, நல்ல நடிகர் தான் யார் இல்லை என்றார்கள் அவர் இந்த சமூகத்திற்காக என்ன பெரிதாக செய்துவிட்டார் கொண்டாடுவதற்கு” என்கிற சமூக அக்கறை கொண்ட கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இப்படியான கேள்விகள் பதிலை வேண்டி கேட்கப்படுவதில்லை. இப்படியான கேள்விகள் வெற்று வெறுப்பின் வெளிப்பாடு. பதிலை தேடும் கேள்விகள் தானாக பதிலை அடைந்துவிடும். வெற்று வெறுப்புகளால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு முன்னால் எத்தனை பதில்கள் இருந்தாலும் அந்த கேள்விகள் கேள்விகளாகவே தொடரும்.

ரஜினியின் அரசியலுக்கு எதிரான விமர்சனம், மக்களுக்கு எதிரான அரசியல் #3

ஒருவர் சமூகத்திற்காக போராடுவதை விட; சமூகத்திற்காக பண உதவிகளை செய்வதை விட; மேலானது எது என்றால், தான் எடுத்து கொண்ட கடுமையை ஆத்மார்த்தமாக செம்மையாக செய்வது.தங்கள் கடமைகளை அப்படி செம்மையாக செய்யும் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு பெரிய உதவியை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.அதோடு நாம் நம் நிலையை உயர்திக்கொள்ளும் பொழுது அது இந்த சமூகத்தை தானாக உயர்வடைய செய்கிறது.

நீங்கள் தினமும் செல்லும் பேருந்தை சரியான நேரத்திற்கு இயக்கும் ஒரு ஓட்டுநர் பல நாள் சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாமல் இருந்திருந்திருக்கலாம்.உங்களுடைய குழந்தைகளின் படிப்பிற்காக நேரம் ஒதுக்கும் ஒரு ஆசிரியர் தன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாமல் போயிருக்கலாம்.
இப்படி நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடைமையை செய்வதன் மூலமாகவே இந்த சமூத்திற்காக பெரும் உபகாரத்தை செய்வதோடு பெரும் தியாகங்களை செய்து கொண்டு தான் இருக்கின்றோம்.
அந்த வகையில், ரஜினிகாந்த் இந்த சமூகத்திற்காக ஆகப்பெரும் பணியை தன் கடமையாக எடுத்து செய்து இருக்கின்றார்.

நம்மால் ஒருவரை அழச் செய்ய முடியும். சிரிக்க வைத்துவிடவும் முடியும். ஒருவருக்கு பண உதவி கூட செய்ய முடியும்.ஆனால், ஒருவரை மகிழ்விப்பது என்பது அத்தனை சாதாரணமானது அல்ல. சிரிக்க வைப்பதற்கும் மகிழ்விப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றது.

இந்த சமூகத்தை நான்கு தசாப்தங்களுக்கு மேல் ஒரு மனிதர் மகிழ்வித்து வருகிறார். அதோடு, தன் மதிப்பை உயர்திக்கொண்டதன் மூலம் சினிமா வியாபாரத்தை பெருக்கி அது சார் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் பெரும் அளவில் வளர்த்துவிட்டு இருக்கின்றார். ரஜினி படங்களுக்கு கோடிகளில் முதலீடு செய்யப்படுகிறதென்றால் அந்த கோடிகள் பலரின் வேலைவாய்ப்பாக இருக்கின்றது என்று தானே அர்த்தம்.
இதுவே அவர் இந்த சமூகத்திற்கு செய்த மிக பெரும் உதவி இல்லையா?

ரஜினியின் நடிப்பை பற்றியும் அவர் இந்த சமூகத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்த நன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கலாம்.

அரசியலுக்கு ரஜினி போன்ற ஒருவரின் தேவை இருப்பது பற்றியும் ரஜினியின் அரசியல் vision ஐ பற்றியும் நாம் நிறையவே அலசி இருக்கின்றோம்.

என்ன எடுத்து சொன்னாலும், அவர் மீது பரப்படும் வெறுப்புகள் ஒரு பக்கம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.அப்படி வெறுப்பவர்களுக்கும் தான் ஒரு பேசுபொருளாக இருந்து நன்மையே செய்கிறார்.அப்படி தன்னை வெறுப்பதினால் தான் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் மகிழ்ந்துவிட்டு போகட்டும் என்று இருக்க முடிகிறது.அரசியல்வாதிகள் அவதூறு வழக்கு தொடர்வதை போல் அவர் அவதூறு வழக்கு தொடர்வதில்லை.எதிர்மறையான விஷயங்களை முக்கியத்துவபடுத்தாமல் இருப்பதும் ஒரு மனிதன் சமூகத்திற்கு செய்யும் மிக உபகாரம் ஆகும்.அது மட்டும் இல்லாமல் இப்படி வெறுப்பவர்களையும் நேசிப்பவராகவே ரஜினி இருக்கின்றார்.

ரஜினியாக எனக்கு அறிமுகமான இந்த ரஜினி, எனக்கு எப்போதும் ரஜினியாகவே தான் இருந்து இருக்கின்றார். அவரை தலைவர் என்று அதிகம் சொல்லிக்கொண்டது இல்லை. “அவர் என்ன நமக்கு தலைவர் என்கிற அகந்தை கூட காரணமாக இருக்கலாம்” சிறு வயதில் இருந்து எனக்குள் இருந்து வந்த அகந்தையும் மீறி ஒரு கட்டத்தில் எனக்குள் ஒரு முதிர்ச்சி வந்த பிறகு என்னையும் கூட அவரை தலைவராகவே ஏற்க செய்துவிட்டார்.

leader is one who leads you to a path.leader is one who inspires you in many ways.

27ல் வயதில் வேலை முடித்து திரும்பும் பொழுது சோர்ந்து போய் வீட்டிற்கு வந்தால், இந்த மனிதன் இத்தனை சிகிக்சைகளை தாண்டி இன்னும் வேலை செய்கிறார். நமக்கு என்ன சோர்வு வேண்டி கிடக்கு என்கிற எண்ணத்தை நமக்குள் விதைப்பதற்கு பெயர் தான் inspiring.

இப்படி நம்மை மகிழ்வித்து கொண்டு பலரை inspire செய்கின்ற அந்த மனிதர் வேண்டும் நல்லதெல்லாம் நடக்கட்டும்.
அவர் இன்னும் மகிழ்வோடு இருக்கட்டும்.

இதற்கு முன் எப்பொழுதும் நான், அவரை ‘தலைவா’ என்று விளித்ததே இல்லை.ஆனால், இப்ப எல்லாம் ரொம்ப ஆசையா இருக்கு.

happy birthday தலைவா!… happy birthday !…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *