இத்தனை பெரிய வெறுப்பை, எதிர்ப்பை உமிழ்த்திருக்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை. ஆனால், அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் இருக்கின்றது. “800” பட விவகாரம் கடந்த சில வாரத்தில் எதிர்மறையாக பெரிதாக்க பட்ட விஷயங்களில் பலரின் கவனத்தை ஈர்த்த ஒன்று.
ஒரு படத்தை எதிர்ப்பது என்பது சமீப தசாப்தங்களாக ஒரு வித பரப்புரை யுக்தி ஆகிவிட்டது.
சினிமா என்றில்லை நாம் கடந்து வரும் எதுவும் நம்மை பாதிக்காமல் இல்லை. ஒரு நாளில் நம்மை சந்திக்கும் புதியவர்கள்;நம்மை சுற்றி நிகழும் சம்பவங்கள்; நாம் படிக்கும் புத்தகங்கள்; நாம் பழகும் நபர்கள் என்று நாம் கடக்கும், கடந்து கொண்டிருக்கும் எதுவும் நம்மை பாதிக்காமல் இல்லை. ஆனாலும், இவை எதுவும் நம்மையோ; நம் கருத்துக்களையோ அடியோடு மாற்றிவிடுவது இல்லை. நம்முடைய தன்மைகளுக்கு ஏற்பவே, நாம் உள்வாங்கும், நம்மை சுற்றி இருக்கும் அல்லது நாம் கடக்கும் விஷயங்கள் நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் தீவிரமும் அதன் விளைவாய் நம்மில் ஏற்படும் மாற்றமும் நிகழ்கிறது. இப்படியிருக்க நாம் நம்மை அறியாமல் நமக்கு ஒத்துவராத, நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எத்தனையோ விஷயங்களை அனுமதித்து கொண்டிருக்கின்றோம் அல்லது தடுக்க முடியாமல் விட்டு விடுகிறோம். நம் கவனத்தில் பெரிதாக நிறக்காத விஷயங்கள் கூட மிக அரிதாக நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது ஆனால் நம் கவனத்தில் நிற்காத விஷயங்கள் பெரும்பாலும் நமக்குள் ஒரு தாக்கத்தை அல்லது மாற்றத்தை ஏற்படுத்துவதில் தோல்வியே அடைகின்றன.
நாம் கடக்கும் விஷயங்களில் நாம் எதிர்பவைகளே பெரிதும் நம் கவனத்தில் நின்று விடுகிறது. இப்படி நம் கவனத்தில் நிற்கும் விஷயங்கள் நம்மில் ஒரு தாக்கத்தை அல்லது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது மிக எளிதாகி விடுகிறது .
இதன் காரணமாய் நாம் எதை எதிர்க்கிறோம் எதற்காக எதிர்க்கிறோம் என்பதில் நம்முடைய கவனம் இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது.
உதாரணமாக, ஒரு திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு – அதில் கதாநாயகன் சிகரட் பிடிப்பது போன்ற ஒரு படம் வெளியிடப்படுகிறது. அந்த படத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தவர்களுக்கும் அந்த நடிகரின் ரசிகர்களுக்கும் இன்னும் அநேகமான மக்களுக்கும் அவர்களின் கவனத்தில் அது ஒரு சாதாரண திரைப்படத்தை பற்றிய செய்தியாகவே இருந்திருக்கும். இயல்பாகவே பலரின் கவனத்தை பெறும் அந்த போஸ்டரில், சிகரெட்டு பெரிதாக யாருடைய கவனத்திலும் நின்றிருக்க வாய்ப்பில்லை. தாமும் அந்த திரைப்படத்திற்கும், அந்த நடிகருக்கும் கிடைத்த கவனத்தைப் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் படத்தில் சிகரெட் இருப்பதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் போதும் அது பெரிய விவாதம் ஆக்கப்படும் போதும் தான் திரைப்படத்தை பற்றிய கவனமும் அந்த நடிகர் பற்றிய கவனமும் எதிர்ப்பை கிளப்பியவர் மீது இருந்த கவனமும் மாறி நம்மை அறியாமல் நம் எல்லோருடைய கவனத்தில் மத்தியிலும் சிகரெட் வந்துவிடும். இது நாம் கவனிக்க வேண்டிய நம்மைப் பற்றிய உளவியல் ரீதியிலான உண்மை.
இப்படி யோசித்தால் எதையுமே எதிர்க்க கூடாது என்கிறாயா? அப்படி இல்லை. எதை எதிர்க்கிறோம்? எதற்காக எதிர்க்கிறோம்? எப்படி எதிர்க்கிறோம் என்பதில் இருக்கிறது. நிராகரிப்பும் ஒருவித எதிர்ப்பு தான்.
ரஜினியை கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். அவர் எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்கவில்லை தான் அதே வேளையில் தன்னை நோக்கி வரும் எதிர்ப்புகளை அவர் நிராகரிக்கிறார் அவர் பதில் எதிர்ப்பு காட்டினால் நிச்சயம் அவர் மீதான எதிர்ப்புக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டு விடும், தெரிந்தோ தெரியாமலோ அவர் அதற்கு வாய்ப்பு அளிப்பதில்லை.
சமூகத்தில் மாற்றப்பட வேண்டிய முன்னேற்றம் தேவைப் படுகின்ற எத்தனையோ விஷயங்கள் இருக்க சினிமாக்கள் மீதான எதிர்ப்பு என்பது எல்லாரும் கவனிக்கும் ஒரு கண்ணாடி மாளிகையின் மீது கல் எறிந்து கவனத்தை நம் மீது திருப்பி கொள்ளும் முயற்சி கல் எறிந்தவர் மீதான கவனம் பெரிதாய் நீடிப்பதில்லை மாறாக கல் எறியப்பட்ட இடத்தின் மீதே கவனம் அதிகமாகிறது. பெரியவர்களுக்கான (A ) படம் என்று வரையறை செய்து வெளியிடப்படும் படத்தின் அருவறுப்புக்களை ஒருவர் விமர்சனம் செய்யும் வரை பலர் கவனித்திருக்க வாய்ப்பில்லை அப்படியான படங்களுக்கான இடத்தை சமூகத்தில் நாம் எப்போதோ கொடுத்துவிட்டோம், சமூகத்தில் அதற்கான இடத்தை தனியே கொடுத்துவிட்ட பிறகும் கூட அப்போதிலிருந்து இப்போது வரை அப்படியான படங்கள் பார்ப்பதை ரகசியமாகவே வைத்துக்கொள்கிறோம்.
ஆனால், பெரியவர்களுக்கான(A) படம் என்பதை தெரிந்தே அல்லது ஏதேனும் காரணத்தால் அந்த படத்தை பார்த்து விட்டு வந்து கண்டனம் தெரிவிப்பதும் விமர்சனம் செய்வதும் இயல்பாக அந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அது போன்ற படங்களுக்கு என்று இருக்கும் ரசிக கூட்டத்தை தாண்டி அந்த படத்தை பற்றிய அறிமுகத்தை கொடுத்துவிடுகிறது.
அப்படியான விமர்சனங்களை வைப்பவர்களிடம் கேட்க நினைப்பது ஒன்று தான் “யோக்கியனுக்கு இருட்டு ல என்ன வேலை”இப்படியான அனாவசிய எதிர்ப்புகள் கிளப்புகிறவர்களை நாம் நிராகரிப்பதே சரி.
800 பட விவகாரத்திற்கு வருவோம். 800 படத்தை பொறுத்தவரையில் படத்தின் கதை திரைக்கதை என்று எதைப்பற்றிய விவரமும் தெரியாமல் கதை முத்தையா முரளிதரன் பற்றியது என்றதுமே எதிர்க்க கிளம்பிவிட்டோம். தமிழர் நாங்கள் என்று கூறிக்கொண்டே தமிழர் ஒருவர் மீது அதீத வெறுப்பை உமிழ்த்திருக்கின்றோம்.
சிறுவனாக இருந்தபோது இலங்கை அரசியல் விவகாரங்கள் போர் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியாமல் இருந்த காலத்தில் இருந்தே இலங்கை கிரிக்கெட் அணியின் மீது ஈர்ப்பு இருந்ததில்லை. அன்றைய கட்டத்தில் தமிழ் ஊடகம் ஒன்றின் மூலம் முத்தையா முரளிதரன் ஒரு தமிழர் என்று அறிந்த போது மனதில் ஒரு மகிழ்ச்சி. தமிழர் ஒருவர் சாதனையாளராக இருக்கிறார் என்று. ஆனாலும், விளையாட்டு வீரர் என்ற முறையில் அவரை பெரிதும் நேசித்ததில்லை. தமிழர், விளையாட்டு வீரர் ஒருவரின் வாழ்க்கை கதையை திரைப்படமாக்குவதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்! இதில் நாம் அடைந்துவிட்ட லாபம் என்ன? விஜய் சேதுபதி என்கிற தமிழ் நடிகர் ஒருவர், கிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? கிரிக்கெட் ஐ பற்றிய அறிமுகம் இருக்கும் எத்தனையோ நாடுகளில் தமிழ் நடிகர் ஒருவருக்கும் , தமிழ் திரைப்படம் ஒன்றிக்கும் ஒரு பெரிய அறிமுகமும் அங்கீகாரமும் கிடைத்திருக்கும். கிரிக்கெட் உள்ள வரை தமிழ் நடிகர் விஜய் சேதுபதி பற்றிய பேச்சு இருந்திருக்கும். அப்படி நடக்க விடாமல் தடுத்ததை தவிர்த்து வேறு என்ன சாதித்துவிட்டோம்?
முத்தையா முரளிதரன் அவர்கள் அளித்த தன்னிலை விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருந்தது. அதோடு, அவர் விஜய்சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவும் செய்தார். முரளிதரன் அளித்த விளக்கத்தில், தமிழகத்தில் தங்களை சே குவேராவின் தம்பிகளாக காட்டி கொள்பவர்களும் சிரியா போன்ற நாடுகளில் நடக்கும் போர்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்துவிட்டு இன்னொரு பக்கம் நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் என்று கூவிக்கொண்டிருப்பவர்களும் கவனிக்க வேண்டிய ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்.
“என் வாழ்நாளில் இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என்று முரளிதரன் குறிப்பிட்டது பல்லாயிரக்கணக்கானனோர் கொலை செய்யப்பட்டதற்காக அல்ல அத்தகைய கொடூரங்கள் இனி நிகழாது, போர் முடிவுற்றது என்பதற்காக”என்று. அவரின் அந்த வார்த்தைகளில் உள்ள உண்மை அவர் இடத்தில் இருந்து சிந்தித்தால் நிச்சயம் நமக்கு புரிந்துவிடும். ஆனால், விடுதலை புலிகளையும் ஈழ தமிழர்களையும் காட்டி அரசியல் நடத்தும் ஊரில் நமக்கு புரிய விடமாட்டார்கள்.
போர்க்காலத்தில் தன் உடன் இருக்கும் நண்பன் மறுநாள் உயிரோடு இருப்பானா? மாட்டானா ? என்பதும், வீட்டில் இருந்து வெளியில் செல்பவர்கள் வீடு திரும்புவார்கள் என்பதும் நிச்சயமில்லாத சூழலில் முரளி போன்றவர்கள் இருந்த போது, ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை வைத்து இங்கு அரசியல் செய்பவர்களும் சரி, கன்னடன் கையில் ஆட்சியை தர தமிழர்கள் முட்டாள்கள் இல்லை; நாங்கள் பிரபாகரன் வாரிசுகள்! இராவணன் பிள்ளைகள்! என்று வீர வசனம் பேசிக்கொண்டிருக்கும் நாமும் சரி நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தோம்;பள்ளிக்கு கல்லூரிக்கு பயமில்லாமல் சென்றுகொண்டிருந்தோம்; சினிமா எடுத்துக்கொண்டிருந்தோம்; சினிமா பார்த்து கொண்டிருந்தோம். ஆனால், முரளி போன்ற சாமானியர்கள் பீதியிலேயே தான் தங்கள் நாட்களை கடந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.உலக அரசியலில் விடுதலை போராளிகளாக ஏதேனும் சக்திகளால் வளர்த்துவிட படும் எந்த ஒரு இயக்கமும் கால சூழல்களும் அரசியல் சூழல்களும் மாற்றம் கொண்ட பின் அதே சக்திகளால் அழிக்கப்படுவது நடந்துகொண்டே தான் இருக்கின்றது. இதில் அரசியல் சூழல்களின் மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்கள் இயக்கங்களுக்கு ஆதரவு அளித்த சக்திகள் அவைகளின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள ஆரம்பிக்கும் பொழுதே அந்த இயக்கங்கள் அதன் பிடிவாதங்களை மக்களுக்காகவேணும் தளர்த்தியிருக்க வேண்டும்.
“போரும் போராட்டங்களும் மனிதன் பிறந்த நாளில் இருந்து இன்று வரையில் அரசியல் ஆதாயங்களுக்காகவும் அதிகார பசிக்காகவுமே நடக்கின்றது. முரளி போன்ற சாமானியனுக்கு போர் இல்லாத போராட்டம் இல்லாத அமைதியான பாதுகாப்பான வாழ்க்கையே தேவைப்படுகிறது”. இந்த வரிகளை எழுதும் போது சில எண்ணங்கள் தோன்றுகிறது தமிழ் மன்னர்கள் தெற்காசிய கண்டங்களை வென்று ஆட்சி புரிந்ததாகவும் இந்தியாவை முகலாயர்கள் ஆட்சி புரிந்தாகவும் சொல்லும் வரலாறு தான் ஆட்சி , அடிமை என்கிற வார்த்தை பிரயோகங்களை நாம் கவனிக்க வேண்டும்.ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள் என்றும் விடுதலை போராடி பெற்று தரப்பட்டது என்றும் சொல்லித்தரப்படுகிறது. இந்திய அரசர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்த முகலாய மன்னர்களையும் சேர்த்து யாரும் அவர்களின் அதிகாரம் பறிக்கப்படுவதற்கு முன்பு வரை ஆங்கிலேயர்களை எதிர்த்தது போன்று தெரியவில்லை ஒரு சாமானியன் அவன் வாழ்வதற்கான தகுதியான சூழலை கொடுக்கும் தலைவனை தேட மட்டுமே செய்கின்றான். அவர்கள் தேடும் அல்லது தேடிய தலைவனின் முடிவே அவர்களின் அமைதியை குலைக்குமானால் அப்படியான தலைவனின் வீழ்ச்சியை அவர்களால் கடந்துவிடவும் முடிகிறது. குடும்ப தலைவர்களை இழக்கும் குடும்பங்களை கூட காலம், காலத்திற்கு ஏற்ற அடுத்த அடிகளை எடுக்க வைக்கிறது. அப்படியான காலத்திற்கும் அரசியல் சூழலுக்கும் ஏற்ற அடுத்த கட்ட மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தருணத்தில் அந்த தலைவர் இருந்த போது இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை அவர் இருந்திருந்தால் என்று பேசிக்கொண்டு ஆக்கபூர்வமான செயல்களை தடுத்துவிடுவதில் யாருமே எந்த ஆதாயமும் அடையப்போவதில்லை.
கடலில் தத்தளித்து முடிவாய் தன்னோடு மிஞ்சியவர்களோடு கரை சேர்ந்தவனை பார்த்து, கடலில் இறங்காதவர்கள் எல்லாம் சேர்ந்து “நீ கரை சேர்ந்ததை நினைத்து எப்படி மகிழ்ச்சி கொள்ளலாம்?” என்று கேட்பது எத்தனை அறிவான செயலோ அத்தகையதே 800 படத்தின் மீதான; முரளிதரன் மீதான வெறுப்பும் எதிர்ப்பும் .
லைக்கா பட தயாரிப்பு நிறுவனம் தமிழில் படம் எடுக்க ஆரம்பித்த போது அதில் விஜய் நடிக்க கூடாது என்று எதிர்த்தார்கள் இப்போது, முரளிதரன்.யாரை எதிர்க்கிறோம்? என்ன காரணத்திற்காக எதிர்க்கிறோம்? இத்தகைய எதிர்ப்புகளாலும் வெறுப்புகளாலும் ஆக்கப்பூர்வமாக என்ன நடந்துவிட போகிறது?
எதிர்க்கப்பட்டவர்கள் தமிழர்கள், தங்கள் துறையில் சாதித்த, தமிழர்களாவே இருந்த தமிழர்கள். எதிர்ப்பவர்கள் தமிழை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள். தங்கள் துறையில் பெரிதாக சாதிக்க முடியாமல், அவர்கள் இப்போதிருக்கும் துறையிலும் ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்க முடியாத, எதிர்ப்புகளை காட்டி மட்டுமே விளம்பரம் சம்பாதிக்க முடிந்த, வெறும் அரசியல்வாதிகள். இதில் மக்களாகிய நம்மையும் கூட்டு சேர்த்துக்கொள்கிறார்கள் இத்தகையவர்களின் பேச்சுக்களால் உணர்ச்சி பொங்க வெறுப்பையும் எதிர்ப்பையும் உமிழ்வதற்கும் முன் சற்றே சிந்திப்போம். அன்பு -தமிழரின் உடைமை. தமிழ்! தமிழ்! என்று பேசிவிட்டு தமிழர்களையே எதிர்க்கும் அரசியலில் சிக்காமல் வெளியில் நிற்போம். தமிழ் பேசுகிற தமிழனாகவே வாழ்கிற தமிழனாக அடையாளப்படுத்தப்படுத்திக்கொள்கிற தங்களை ஈடுபடுத்திக்கொண்ட துறையில் சாதித்து நிற்கும் தமிழர்களை ஆதரிப்போம்.