சமீபத்தில்,மின்வெட்டு பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்,

“மின்வெட்டு பிரச்சினையை தொடர்ந்து சரி செய்து வருகிறோம். முந்தைய அரசு கடந்த டிசம்பருக்குள் மரங்கள், செடிகளை அகற்றவில்லை. தேர்தலை மனதில் வைத்து பராமரிப்பு பணிகளை செய்யமால் கிடப்பில் விட்டுவிட்டனர். இதனால் பல இடங்களில் மின் கம்பிகள் இருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ந்து உள்ளன. கிளைகள் இந்த கம்பிகளுக்கு இடையே செல்வதால் அவ்வப்போது கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுகிறது. மேலும், அணில்கள் இந்த கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின் கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது”என்றார்.

இதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அமைச்சரின் கருத்து ஒரு பக்கம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுவருவதையும், தி.மு.க ஆதரவாளர்களும் அ.தி.மு.க பா.ஜ.க. போன்ற கட்சிகளை விமர்சிப்பது மட்டும் தான் நடுநிலை என்று நினைத்துகொண்டிருப்பவர்களும் அணிலால் பாலம் கட்ட முடிகிற போது மின் தடை ஏற்படுத்த முடியாதா? என்கிற எதிர்கருத்துக்கள் பதிவிடப்பட்டுவருவதையும் காணமுடிகிறது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விமர்சனங்களும் எதிர்கருத்துகளும்

இதனை தொடர்ந்து சட்டசபையில் நடந்த விவாதத்தில், பராமரிப்பு பணிகளை கடந்த ஆட்சி செய்ய தவறியதால் தான் மின்வெட்டு ஏற்படுவதாக அமைச்சர் அளித்த விளக்கத்திற்கு, “பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் இருந்ததால் மரங்கள் வெட்டப்படாததால் தான் மின்வெட்டு ஏற்படுகிறது என்றால் கடந்த ஒன்பது மாதங்களில் மின் வெட்டு ஏற்படாதது ஏன்?” என பதில் கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சி உறுப்பினர் பன்னீர் செல்வம் அவர்கள்.

அதற்கு தொடர்ந்து விளக்கம் அளித்த அமைச்சர் அவர்கள்,  முந்தைய ஆட்சி காலத்திலும் மின்வெட்டு இருந்தது எனவும் பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் இருந்ததால் பராமரிப்பு பணிகளில் கூடுதல் சுமை ஏற்பட்டு இருப்பதாகவும் பல இடங்களில் மின்மாற்றி பழுதுஅடைந்து இருப்பதாகவும் மரங்கள் இல்லாத இடங்களிலும்  பராமரிப்பு செய்யப்படாததால் மின்காப்ப இழை (fuse) பழுதுபட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.எத்தனை முறை மின்வெட்டு ஏற்பட்டு இருக்கின்றது என்பதை குறிப்பிட்ட அவர் அது எந்த காலசட்டத்திற்குள் (timeline)ஏற்பட்டது என்பதை குறிப்பிடவில்லை.அத்தனையும் திட்டமிடப்படாத மின்வெட்டா அல்லது loadshedding ஐ சேர்த்தா என்பதை பற்றி அவர் குறிப்பிடவில்லை எதிர்கட்சி உறுப்பினர்களும் விளக்கம் கேட்கவில்லை.

சட்டசபையில் மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் அளித்த விளக்கம்

அணில்களால் மின்வெட்டு ஏற்படுவது சாத்தியமா?

மரங்கள் வெட்டப்படாமல் இருந்தாலும் கூட இரண்டு மின்கம்பிகளுக்கு இடைப்பட்ட தூரத்தை இணைக்கும் அளவிற்கு அணில்களின் நீளமோ எடையோ இல்லை என்பது பகுத்தறியும் திறன் கொண்டவர்கள் அறிந்ததே.அமைச்சர்கள் என்பவர்கள் அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் தகவலைகளையே மக்களுக்கு கடத்துவார்கள். சட்டசபை விவாதங்களை பொறுத்தவரையில் உறுப்பினர்கள் தங்களின் கேள்வியை முன் கூட்டியே தெரிவித்துவிடுவார்கள். இது தான் மரபு.

விலங்குகள், பறவைகள்,கூட்டமாக இரண்டு மின்கம்பிகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை குறைக்கவோ இணைக்கவோ செய்வது என்பது மிக அரிதான ஒன்று அதிலும் குறிப்பாக அணில்களால் மின்வெட்டு என்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அரிதானது என்று சொல்ல முடியும்.ஒரு வேளை அப்படி ஏற்பட்டால், சலசலப்பை ஏற்படுத்தும் அளவில் நீண்ட நேரம் நீடிக்க கூடிய மின்வெடிற்கு அது காரணமாகாது.அதோடு நாம் அணில்களை அதிகம் பார்த்து பழகிய நாட்களில் இருந்து வெகு தூரம் வந்து விட்டோம்.அணில்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என்பதையும் நாம் இங்கே நினைவு கூற வேண்டும்.

பராமரிப்பு பணிகள் எப்படி நடைபெறும்.

அமைச்சர் அவர்கள் கூறியது போல, பராமரிப்பு பணிகள் வேண்டுமென்றே செய்யாமல் இருக்க முடியாது. அதே போன்று வெட்டப்படாத மரங்களால் ஏற்படும் மின்வெட்டு அதிக நேரம் நீடிப்பதில்லை.தற்போதைய மின்வெட்டுக்கான காரணங்களை அலசுவதற்கு முன் மின்வாரியத்தில் பராமரிப்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பார்க்கலாம்.

மின்வாரியத்தில், மின்கம்பிகள் பராமரிப்பு துறையின்(LINES) கீழ் ஒரு உதவி பொறியாளர் தலைமையிலான குழு மின்கம்பிகளின் பாதையில் வளர்ந்திருக்கும் மரங்களை ஆய்வு செய்து மின்கம்பியை உரசக்கூடும் மரக்கிளைகளை வெட்டும் பணிகளை செய்து வருவார்கள். இவர்களின் அன்றாட பணி இது மட்டுமே ஆகும். இந்த பணிகள் வேண்டுமென்றே செய்யப்படாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதோடு அமைச்சர் சொன்னது போன்ற அளவிலான இடங்களில் மரங்கள் வெட்டப்படாமல் அவை தொடர்ந்து மின்கம்பிகளை உரசும் வண்ணம் இருக்குமானால் அது கிரிட் இன் நிலைத்தன்மையை (grid stability)பாதிக்கும். அமைச்சர் சொன்ன அளவிலான பணிகள் எப்போதும் நடைபெறும் சராசரி பராமரிப்பு பணிகளின் அளவாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. அதோடு சில மின்கம்பிகளை ஒட்டி வளரும் மரங்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது மட்டுமே வெட்ட முடியும். வேண்டுமென்றே பராமரிப்பு பணிகள் தவிர்க்கப்பட்டு இருக்க வாய்ப்புகள் இல்லை. ஊரடங்கின் காரணமாக மின்கம்பிகள் பராமரிப்பு (line maintenance)பணிகளில் தொய்வு ஏற்பட்டு அது சராசரி அளவிலான பராமரிப்பு பணியை சற்றே அதிகப்படுத்தியிருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. மின் கம்பிகள் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தால் அதற்கு ஊரடங்கு காரணமாக இருக்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால், ஊரடங்கின் போது மின்வாரியம் மின் கம்பிகள் பராமரிப்பு பணிகளை எப்படி நிர்வகித்தது என்பதை பற்றிய விவரங்கள் விவாதிக்கப்படவில்லை.

அதோடு காற்றினால் மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு மின்வெட்டு ஏற்படும் போது, சில நிமிடங்களில் மீண்டும் மின் இணைப்பை கொடுப்பார்கள் அப்போது மீண்டும் எந்த வித பாதிப்பு இல்லை என்றால் காற்றினால் ஏற்பட்ட மின் வெட்டு என்று அனுமானித்துக்கொண்டு அந்த பாதையில் உள்ள மின்கம்பிகளை ஆய்வு செய்ய சொல்லி பணிப்பார்கள்.

மாறாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்து கிடந்து மரக்கிளைகளால்  மின்வெட்டு ஏற்படுமாயின் மீண்டும் மின் இணைப்பை கொடுக்க முயற்ச்சிக்கும் போது அவர்களால் இணைப்பை கொடுக்க முடியாது.அத்தகைய சூழலில் உடனடியாக அதை ஆய்வு செய்ய நேரிடும், பாதிப்பின் தாக்கத்தை பொறுத்து சரி செய்வதற்கான நேரம் எடுத்துக்கொள்ளப்படும்.

மேற்சொன்னவைகள் அல்லாமல் நன்கு வளர்ந்த மரக்கிளைகள் மின்கம்பிகளை தொடர்ந்து பல மாதங்கள் உரசிக்கொண்டிருக்க வாய்ப்புகள் இல்லை. மின்கம்பிகளை உரசும் அளவில் கிளைகள் வளரும் போதே காற்றினால் மரக்கிளை மின்கம்பிகளில் பட்டு அவ்வப்போது ட்ரிப் ஆகும்(இது அதிக நேரம் நீடிக்காது) உடனே ஊழியர்கள் பிரச்னையை புரிந்து கொள்வார்கள் உடனடியாக மின்கம்பிகள் பராமரிப்பு குழுவிற்கு அது தெரிவிக்கப்படும்.

காலம்காலமாக கட்சி வேறுபாடின்றி மின்வாரியத்திற்கு கீழான மொத்த மின்கம்பிகளையும் பராமரிப்பதற்கு ஆட்கள் போதுமானவர்களாக இருக்கிறார்களா? என்பதை பற்றி ஆய்வு செய்து ஆட்கள் சரியான திட்டமிடுதலோடு அதிகரிக்கப்பட்டதாக தெரியவில்லை.

மின்மாற்றி(transformer) பராமரிப்புகளை பொறுத்தவரையில் உயர் அழுத்த (highvoltage) அதிக திறன் கொண்ட மின்மாற்றிகள்(transformers) மாதாந்திர பராமரிப்பு பணிகளின் போது  பராமரிக்கப்படும். மின்மாற்றி பராமரிப்புக்களை பொறுத்தவரையில் எண்ணெய் மாற்றுவது (Oil top up or replacement) போன்ற பணிகளே நடைபெறும் சிறிய மின்மாற்றிகள் (small power transformers) குறிப்பிட்ட கால அளவில் சிறப்பு பராமரிப்பு பணிமனைக்கு அனுப்பப்பட்டு எண்ணெய் மாற்றுவது மாற்றுவது சோதனை செய்வது போன்றவைகள் நிகழும்.

தினமும் நடக்கும் பராமரிப்பு பணிகள் பல மாதங்களாக நடைபெறாமல் இருந்தது உண்மை என்றால் மின்வாரிய பராமரிப்பு துறை வேலையே செய்யவில்லை என்றே கொள்ளமுடியும். ஆனால், இயல்பில் அது சாத்தியமில்லை. அவ்வாறு நடந்திருந்தால் விளைவுகள் மோசமானதாக இருந்திருக்கும். பெருந்தொற்றை பொருட்படுத்தாமல் அவர்கள் பணி செய்ததின் காரணமாகவே இத்தனை நாள் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமலும் ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்யப்பட்டுக்கொண்டும் இருக்கின்றது.

தமிழகம் முழுதும் இயல்பாக நடைபெறும் பராமரிப்பு பணிகள் அமைச்சர் சொன்ன கணக்கின் அளவில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதை  மின்வாரிய பணியாளர்கள் அறிந்திருப்பார்கள்.அதோடு பராமரிப்பு பணிகள் சரியாக நடந்துவந்தாலும் கூட மின்மாற்றி பழுதடைவது போன்றது தவிர்க்க இயலாதது என்பதை மின்சார துறையை சேர்ந்தவர்கள் அறிந்திருப்பார்கள். இதை பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேலதிக கேள்விகள் கேட்டதாக தெரியவில்லை. காரணம்,அமைச்சர்களுக்கு தகவல்களை திரட்டி தரும் வேலையை செய்ய அதிகாரிகள் இருக்கின்றார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அப்படியில்லை, ஆட்சியில் இருந்தபோது இதை பற்றி தெரிந்து வைத்திருந்தால் ஒரு வேலை இதை பற்றிய மேலதிக விளக்கங்களை அரசிடம் கேட்டிருக்க முடியும். சபையில் அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை. தமிழக சட்டசபை வெகு காலமாக கட்சி மாற்றி கட்சி குறை சொல்லும் கூடாரமாகவே இருப்பது கவலைக்குரிய விஷயம்.

மின்தடைக்கு வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்

 முந்தைய தி.மு.க அரசின் போது ஏற்பட்ட மின்தடைக்கு இலவச தொலைக்காட்சி எப்படி காரணமாக அமைந்திருக்க கூடும் என்பதை பற்றி “தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்” என்னும் நூலில் பேசியிருப்பார்கள். அதே போன்று அணில், மரங்கள் அல்லாமல் தற்போது ஏற்படும் மின்தடைகளுக்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்பதை பற்றி மின் பொறியாளர் ஒருவரிடம் கேட்டறிந்தோம் அவர் கூறிய விளக்கம் பின்வருமாறு:

“முதலில் இந்த மின்வெட்டு எங்கெல்லாம் ஏற்பட்டது; எத்தனை மணி நேரம் ஏற்பட்டது; என்பதை பற்றிய தகவல்கள் எங்கும் பகிர்ந்துகொள்ளப்பட்டது போன்று தெரியவில்லை. சட்டசபையிலும் உறுப்பினர்கள் அதை பற்றி விவாதித்தாக தெரியவில்லை. அதை தெரிந்து கொள்ளாமல் அமைச்சரின் விளக்கத்தினை முழுதும் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ முடியாது. மின்வாரியம் என்றில்லாமல் எல்லா நிறுவனங்களிலும் நடக்கும் தவறுகளுக்கான காரணங்கள் தவறுகள் செய்வபவர்களிடம் இருந்தே தான் பெறப்படுகிறது.தவறுகளுக்காண மூல காரணங்களை தவறு நடந்த இடத்தில் இருந்தே  பெறப்படும் போது அது ஆய்வுக்கு உட்டபடுத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.  அமைச்சர் அவர்கள் முன்னாள் ஆளும் கட்சியான அ.தி.மு.க வை குறை கூறும் போது இங்கு பலருக்கு ஐஸ் வைத்தது போலவும் சிலருக்கு எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்க கூடும். ஆனால்,இங்கு நாம் கவனிக்க வேண்டியது, இயல்பாக நடக்கும் பராமரிப்புகளில் ஏற்பட்ட தொய்வு தான் மின் வெட்டு ஏற்பட காரணம் என்று அதிகாரிகளோ மின்வாரிய பொறியாளர்களோ அமைச்சரிடம் தெரிவித்தால் அமைச்சர் இயல்பாக நடைபெறும் பணிகளை செய்யக்கூடாது என்று யாரும் உங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்களா? என்று கேட்டிருக்க வேண்டும் என்பதையே. கடந்த ஆட்சியை குறை சொல்ல ஒரு பதில் கிடைத்துவிட்டதாக அவர் திருப்தி அடைந்திருக்க கூடாது. பராமரிப்பையே வேலையாக செய்யும் ஒரு துறையே மின்வாரியத்தில் இருக்கும் போது அவர்கள் பணியில் ஏற்பட்ட தொய்விற்கு ஆட்சியாளர்கள் மீது பழி போடும் அரசியலை இங்கு நாம் ரசித்து கொண்டிருந்தால் நிர்வாகத்தில் உள்ள சரியான பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் முடியாது; களையவும் முடியாது.

 பராமரிப்பு பணிகள் எப்போதும் போல நடைபெற்றிருந்தாலும் கூட மின்சாதனங்கள் பழுதடைய காரணங்கள் இருக்கின்றது. அதிலும் ஊரடங்கு காரணமாக மின்பகிர்மானத்தில் (Power distribution)ஏற்பட்ட மாற்றங்கள், grid நிலைப்பு தன்மையை பராமரிப்பதை மின்வாரியத்திற்கு பெரிய சவாலாக மாற்றியிருக்கும்(to maintain grid stability would be challenging when there is uncertain changes in the demand). உதாரணமாக ஒரு பகுதியில் ஒரு நாளைக்கு 1 மெகா வாட் நுகரப்படுகிறது. மற்றொரு பகுதியில் 10 மெகாவாட் நுகர்ப்படுகிறது என்று கொண்டோமேயானால் ஊரடங்கின் காரணமாக 10 மெகா வாட் நுகரப்படும் பகுதியில் 2 மெகா வாட் மட்டுமே தேவைப்பட்டிருக்கும் 1 மெகா வாட் தேவைப்பட்ட இடத்தில் 3 மெகா வாட் என்கிற அளவில் தேவை அதிகரித்து இருக்கும். இது ஒரு வகையில் துல்லியமாக கணிக்க முடியாதது.மின்தேவையில் ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட மாறுதல்கள் ஓரளவிற்காவது கணிக்கப்பட்டதா? அதற்கு ஏற்றாற்போல் மின்பகிர்மானத்தை நிர்வகிக்க திட்டங்கள் மின்வாரியத்திடம் இருந்ததா? என்பதை பற்றிய விளக்கமே நமக்கு தேவைப்படுகிறது.மின் தேவையில் ஏற்படும் கணிக்கப்படாத, கணிக்கமுடியாத மாறுதல்கள் நிலைத்தன்மையை (grid stability) பாதிக்கவல்லது. அது மின்சாதனங்களை நிச்சயம் பழுதடைய செய்யும். நிலைத்தமையோடு இயங்கும் போதே சில காரணங்களால் நல்ல நிலையில் இருக்கும் மின்மாற்றி(transformers) தீப்பற்றுவது, insulators வெடித்து சிதறுவது போன்றவை நிகழ்திருக்கின்றது. மின்தடைக்கான நிச்சயமான காரணங்கள் ஆராயப்பட்டது போன்று தெரியவில்லை. ஆனாலும், நிலைமைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்து இருப்பது சற்றே நம்பிக்கை அளிக்கிறது. பராமரிப்பு பணிகளின் மேலாண்மையை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. இன்று வரை எந்த அரசும் அதை பற்றி பேசியதாகவோ அதற்கான முயற்சிகள் எடுத்ததாகவோ தெரியவில்லை. அதோடு,மின்வாரியத்தில் பராமரிப்பு பணிகளுக்கான திட்டமிடுதலும் பணிகளை பதிவு செய்யும் முறைகளிலும் மாற்றம் தேவைப்படுகிறது.” என்று அவர் தெரிவித்தார்.

சரியான தணிக்கை மற்றும் ஆய்வு இல்லாமல் மேலோட்டமாக முந்தைய ஆட்சியின் பராமரிப்பு பணிகளை சரியாக நடக்கவில்லை என்னும் விமர்சனம் நம் மாநிலத்திற்கு புதிது இல்லை. இதற்கு முந்தைய காலத்திலும் நம் மக்கள் கேட்டு பழகியிருப்பார்கள் .தினமும் நடக்கும் பராமரிப்பு பணிகளை (routine works) ஒரு வருசத்துக்கு யாரும் வேலை செய்யக்கூடாது என்று எந்த அரசும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. இயல்பில் அப்படி நடந்தால் அதுoperationயும் gridஇன் நிலைப்பு தன்மையையும்(grid stability) பெரிதும் பாதித்து இருக்கும். அதோடு,அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்களையே அமைச்சர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் கல்வி பின்னணி மின்சார துறை சார்ந்தது இல்லை. மக்களாகிய நாம் எனக்கு அ.தி.மு.க வை பிடிக்காது பா.ஜ.க. வை பிடிக்காது, ஐ! யாரோ அந்த கட்சிகளை அசிங்கப்படுத்தி பதிவிட்டு இருக்கின்றான் என்று உள்ளூர மகிழ்ந்து அதை பகிர்வதும் அமைச்சர் சொன்ன ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு மீம் போட்டு அவமரியாதை செய்யவதையும் தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தவறாக வழிநடத்தும் செய்திகளை மற்றவர்களிடம் சேர்க்கும் வேலையினை நாம் செய்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.அதோடு நிர்வாக ரீதியான பிரச்சனைகளின் மூலகாரணங்களை தேடி அறிந்து கொள்ள நாம் முற்பட வேண்டும். அதை நாம் செய்ய தவறும் பட்சத்தில் இன்னும் 60 ஆண்டுகள் கழித்து இதே இரண்டு கட்சிகள் போன ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகளை சரி செய்கிறோம் என்று மீண்டும் பழைய காட்சிகளே அரங்கேற்றுவார்கள்.அரசியலில், மக்களே நுகர்வோர்கள் ஆவார்கள். நுகர்வோர்களின் தேவையும் ரசனையுமே அந்த நாட்டில் அல்லது ஊரில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் தரத்தை நிர்ணயம் செய்கிறது.நம்முடைய தரம், எதையும் தேடி வாசித்து தெரிந்து கொள்ள முற்படமாட்டோம்; எனக்கு பிடிக்காத அரசியல் கட்சிகளை வசைபாடும் விமர்சிக்கும் பதிவுகளே நடுநிலையானது என்கிற மனநிலையில் இருந்துகொண்டு மிக மேலோட்டமான அரசியல் விமர்சனங்களை மனதில் ஏற்றி அரசியல் பேசிக்கொண்டு திரியும் அளவில் மட்டுமே இருந்துவிட்டால் அனைத்து சாதியினரும் மணியடிக்க(அர்ச்சகராக) முடியும் (ஏற்கனவே எல்லா சாதியினரும் அர்ச்சகராக இல்லாமல் இல்லை) ஆனால் சில குடும்பங்களால் மட்டுமே மணியம் (ஆட்சி) செய்ய முடியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *