“முரட்டு காளை படத்தில் இருந்து ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்றார்; படையப்பா படத்தில் இருந்து ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்றார்;நான் விரல் சப்பிகொண்டிருந்த வயதில் இருந்து வருகிறேன் என்றார்” என்று ஆளாளுக்கொரு கதைகளை அளந்துவந்தார்கள்.

ஆனால், அரசியலுக்கு வருவது  தொடர்பான கேள்விகளுக்கு ரஜினி, எப்போதும் ஒரே பதிலை தான் அளித்து வந்துள்ளார்.

93இல் விகடனில் வெளிவந்த பேட்டியில் அரசியல் மாற்றத்திற்கு புரட்சி ஒன்றே தான் வழி என்று தெரிவித்து இருந்தார். 2020லும் அதையே தான்,மக்களிடம் எழுச்சி வரட்டும் நான் கட்சி தொடங்கி இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்கிறேன் எனக்கு பதவி மீது ஆசை இல்லை என்றார்.

உண்மை தான், தேசிய கட்சியான காங்கிரஸ் அவரை தேடிச்சென்று பதவி கொடுத்தும் அதை மறுத்து, அவர் அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்தார். அரசியல் தொடர்பான படங்களில் நடிப்பதையும் கூட தவிர்த்து வந்து இருக்கின்றார். 1999இல் வெளிவந்த முதல்வன் படம் ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை, அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்திருந்தால் ரசிகர்களை ஏமாற்றுவதற்காக அரசியல் பேசுபவராக அவர் இருந்து இருந்தால் அது போன்ற படங்களில் நடித்து இருந்து இருப்பார்.மிக சமீபமாக வெற்றிமாறன் சொன்ன அரசியல் சார் கதையும் கூட நிராகரித்தவர் ரஜினி.

விகடனில் வெளிவந்த பேட்டி

93இல் தினத்தந்தியில் வெளி வந்த அவர் பேட்டி

படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டதன் காரணத்தை அவர் விளக்கிய பின்னும் அரசியலில் ஈடுபடுவதற்காக படங்களை குறைந்து கொண்டீர்களாக என கேட்கப்பட்ட கேள்விக்கு  அவர் அளித்த பதில்:

“நோ.. நோ.. நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என பலமுறை சொல்லிவிட்டேன்.இப்போதும் சொல்கிறேன் நான் அரசியலுக்கு வர தயாராக இல்லை” நிருபர் விடாமல் ஏன் என்று அடுத்த கேள்வியை முன் வைக்க அதற்கு அவர் அளித்த பதில்:

“ஏனென்றால் நம் நாட்டு அரசியல் அப்படி . அரசியல்வாதிகளால் நாடு கெட்டு போச்சு அவர்களுக்கு வசதியாக அரசியல் சட்டம் இருக்கு முதலில் அரசியல் சட்டம் மாறனும்.

மறுபடியும் காந்தி மாதிரி ஒரு தலைவன் உருவாகனும் புரட்சி நடக்கணும் வெள்ளைக்காரன்கிட்ட இருந்து நாட்டை வாங்கி நம்மகிட்ட கொடுத்தமாதிரி அரசியல்வாதிங்க கிட்ட இருந்து நாட்டை வாங்கி படிச்சவங்களா, புத்திசாலிங்களா, இளைஞர்களா பாத்து அவங்ககிட்ட நாட்டை ஒப்படைக்கணும் .அப்ப தான் நாடு உருப்படும்.ஆனா இதெல்லாம் நடக்க கூடியதா என்ன? இதை நான் என் வள்ளி படத்துலையே சொல்லி இருக்கேன்”(வள்ளி படத்தை எழுதி தயாரித்தவர் ரஜினிகாந்த்).

தினத்தந்தியில் வெளிவந்த ரஜினியின் பேட்டி

ஜெயலலிதா அவர்கள் மீது விமர்சனம்

1991-1996 காலகட்டத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது தன்னை மட்டுமே முன்னிறுத்திய ஜெவின் அதிகார மேட்டிமைத்தனம் மக்கள் எல்லோராலும் வெறுக்கப்பட்டது,விமர்சிக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அவர்கள்மீது  தயங்காமல் விமர்சங்களை வைத்தார் ரஜினிகாந்த். நக்கீரன் இதழில் வெளிவந்த பேட்டியிலும் கூட ஜெயலலிதா அவர்களின் சர்வாதிகார போக்கை பற்றி சொல்லியிருப்பார். ஜெயலலிதாவும் இருந்த சிவாஜிக்கு  செவாலியர் விருது வழங்கும் விழாவில் சிவாஜியை பெருமைப்படுத்த வேண்டிய விழாவிலும் தன்னை பெரிதாக முன்னிறுத்திக்கொள்ளும் ஜெயலலிதாவின் போக்கை அவர் கண்டித்து தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் யாருக்கும் ஆட்சியில் உள்ள குறைபாடுகளை விமர்சிக்க உரிமை இருக்கின்றது. ரஜினியும் அதே உரிமையில் தான் விமர்சனம் செய்தார்.இந்நிலையில் இரண்டு கட்சிகளுக்கு மாற்றை தேடிக்கொண்டு இருந்த தமிழகம், ரஜினி கட்சி ஆரம்பித்தால் நல்லது என்று நினைக்க தொடங்கியது. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழகம் தான் எதிர்பார்த்து இருந்ததே தவிர அரசியலுக்கு வருவேன் என்றோ கட்சி ஆரம்பிப்பேன் என்றோ 2017க்கு முன்னர் அவர் ஒரு போதும் சொன்னதில்லை.

1996, மற்றும் 1999 தேர்தல்

1996 தேர்தலில் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அவருக்காக காத்திருந்தது. வைகோ தனக்கு ரஜினியின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.இந்நிலையில் காங்கிரஸ் தனியாக நின்றால் ஆதரவு தருகிறேன் என்றார். ஆனால், காங்கிரஸ் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தது.அதன் காரணமாக மூப்பனாரை தனி கட்சி தொடங்க செய்து மூப்பனார்க்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டில் தான் ரஜினி இருந்தாரே தவிர நேரடியாக அரசியலுக்கு வருவது பற்றியோ கட்சி தொடங்குவது பற்றியோ 1996 இல் அவர் பேசவில்லை. அதன் தொடர்ச்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது.ரஜினி அமெரிக்காவில் இருந்த போது தமிழ் மாநில காங்கிரஸ் தி.மு.க வுடன் கூட்டணி சேர்ந்து அது ரஜினியின் ஆதரவு பெற்ற கூட்டணியாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு முதலில் ரஜினியிடம் இருந்து வரவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவில் இருந்து வந்த பின்னரும் மூப்பனார்க்கு தன்னுடைய ஆதரவு என்று தெளிவுபடுத்தினார்.

1999 பாராளுமன்ற தேர்தலிலும் அதே கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அந்த தேர்தலில் தி.மு.க. பா.ஜ .க வுடனும் அ.தி.மு.க. காங்கிரஸ் உடனும் கூட்டணி வைத்து இருந்தது. 1999இல் தான் படையப்பா வெளியானது. அந்த சமயத்தில் அவர் ஆதரவு பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.கவின் ஆட்சி நடைப் பெற்று வந்தது.

1990கள் தொடங்கி அவர் படம் நடிப்பதை குறைத்துக்கொண்டார் .1990இல் இருந்து 1999வரை தன் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சி தொடங்க போவதாகவோ அல்லது அரசியலில் ஈடுபடப்போவதாகவோ அவர் தெரிவிக்கவில்லை என்பதற்கு மேற்கூறியவைகளே சான்று.தன் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அரசியல் (பேசுகிறார்) பேசினார் என்பதை விட அபத்தமான வாதம் (விமர்சனம்)எதுவும் இருக்க முடியாது.

2002 பாபா பட பிரச்சனை

2001 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த பா.ம.க. , 3 வருட இடைவெளிக்கு பின் தன்  சொந்த தயாரிப்பில் ரஜினி நடித்து வெளிவந்த பாபா படத்திற்கு பிரச்சனை தந்தது புகைபிடிப்பதற்கு எதிரான பிரச்சாரமாக அதை அவர்கள் முன்னெடுத்தார்கள்.அதே வேளையில், அவர்கள் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. வின் 2001-2006 ஆட்சி காலத்தில் தான் சில்லறை மதுவிற்பனையை அரசு கையிலெடுத்து. 2002 இல் படம் வெளி வந்த பின் அரசியல்வாதிகளால் நடந்தேறிய பிரச்சனைகளில் ரசிகர்களும் சில இடங்களில் தாக்கப்பட, அதற்கு ரஜினி எதிர்வினை ஆற்றினார். 2001 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து 2004 பாராளுமன்ற தேர்தலை சந்தித்தது.

அதற்கிடையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு  பேருந்து இலவச பயண சலுகையை ரத்து செய்தது, அரிசி வாங்காத ரேஷன் அட்டைகளுக்கு ‘H’முத்திரை குத்தியது என்று அரசாங்கத்தின் நிதி சுமையை குறைக்கவும் ரேஷன் அரிசி கடத்தலையும் தடுக்கவும் அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.இப்படியான சூழலில் தான் 2004 பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.விற்கு எதிரான நிலைப்பாட்டை ரஜினி எடுத்தார்(பா.ம.க கூட்டணியை மொத்தமாக அவர் எதிர்க்கவில்லை) .ஆனாலும் ஆளும் அ.தி.மு.க. மீது ஏற்பட்ட வெறுப்பு தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற வைத்தது. 2004 தேர்தலிலும் அவர் கட்சி தொடங்கப்போவது குறித்து எதுவும் பேசவில்லை.நேரடி அரசியலுக்கு வருவது குறித்தும் எதுவும் பேசவில்லை. 2002 இல் பாபா படம் வெளியாகவிருக்கும் சூழலில் ஏற்பட்ட பிரச்சன்னைகளுக்கு எதிர்வினை ஆற்றினாரே தவிர, “அரசியலுக்கு வர போறேன் வாங்க வந்து என் படம் பாருங்க என்று அவர் பேசியதில்லை”.

2006 தொடங்கி 2011 வரை கலைஞரின் ஆட்சி. இந்த காலகட்டத்தில்  ரஜினி, எந்த கட்சிக்கும் ஆதரவோ  எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.இந்த கால கட்டத்தில் அவர் 3 வெற்றிப்படங்களை கொடுத்தார். அதில் சிவாஜி படத்தின் வெற்றி விழாவில் அப்போதைய முதல்வர் கலந்து கொண்டு இருந்தார்.

தமிழக தேர்தல் வரலாறு

அ.தி.மு.க. தொடங்கிய நாள் முதல் இன்று வரை அ.தி.மு.க. பலவீனம் அடையும் சூழல் ஏற்படும் போது மட்டுமே தி.மு.க.விற்கு காலம் வெற்றியை கொடுத்து இருக்கின்றது.தி.மு.கவிற்கு என்று இருக்கும் வாக்கு வங்கி எந்த அளவிற்கு பெரிய மாற்றம் ஏற்படாத ஒன்றோ அதே போன்றதே தி.மு.க.விற்கு எதிரான வாக்கு சதவீதமும்.

1977இல் எம்.ஜி.ஆர். முதல்வரானதில் இருந்து 1988 வரை தி.மு.க.வினால் ஆட்சிக்கு வர முடியவில்லை. 1988இல் அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது அது அ.தி.மு.க.வின் வாக்குகளை இரண்டாக பிரித்தது.வாக்குகளை இரண்டாக பிரிப்பது என்பதை விட ஒரு கட்சி இரண்டாக பிரிவது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். கட்சியின் ஓட்டு சேகரிக்கும் நிர்வாக கட்மைப்பும் பிளவுபடும்.இந்த சூழல் தி.மு.க.விற்கு சாதகமாக ஆனது. 1989 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வென்றது.மீண்டும் 1991இல் அ.தி.மு.க.வின் இரு அணிகள் சேர்ந்த பின் தி.மு.க.தோல்வியை தழுவியது.91~96க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதா சர்வாதிகார போக்கை கடைபிடிக்காமல் இருந்திருப்பாரேயானால் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புகள் இருந்திருக்குமா? என்பது சந்தேகமே. ஜெயலலிதா அவர்களின் சர்வாதிகார போக்கு, மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த வெறுப்பலை, மூப்பனார் அவர்களுக்கு ஆதரவு அளித்து தனி கட்சி தொடங்க சொன்ன ரஜினி, தனி கட்சி ஆரம்பித்து தி.மு.க. தலைமையில் மூப்பனார் கூட்டணி அமைந்தது எல்லாம் சேர்த்து தான் தி.மு.கவிற்கு தேர்தல் வெற்றியை தந்தது.மீண்டும் 2006 இல் விஜயகாந்த் கட்சி தொடங்கியவுடன் தே.மு.தி.க. 8.4%சதவீத வாக்குகளையும் பா.ஜ.க. 2% சதவீதம் வாக்குகளையும் பெற்று 10% சதவீதம் வாக்குகள் பிரிக்கப்பட்டு தி.மு.க கூட்டணிக்கு வெற்றியை தந்தது 2006இல் பெரும்பான்மை பெறாமல் 96 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்திவந்தது.2011இல் தே.மு.தி.க.வை தன்னுடன் அ.தி.மு.க. சேர்த்துக்கொண்ட பின் மீண்டும் அ.தி.மு.க. பிளவு படும் வரை தி.மு.க. காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.2021 இல் நேரடியாக சுமார் 23 தொகுதிகளில் தினகரன் பெற்ற வாக்குகள் அ.தி.மு.க.விற்கு கிடைத்திருக்கமானால் 90க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றிருக்கும் இந்த குழப்பம் ஏற்படாமல் இருந்திருந்தால் பெரும்பான்மை வெற்றியை கூட அ.தி.மு.க. பெற்று இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் படியே தேர்தல் முடிவுகள் இருந்தது.

ரஜினி மீது அவதூறு பரப்பும் அரசியல்

இந்த இரு பெரும் கட்சிகளும் தங்கள் பலம் பலவீனங்களையும் மக்கள் தங்கள் மீது கொண்டு இருக்கும் வெறுப்பையும் உணர்ந்திருந்தது.2006இல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் இரு பெரும் இயங்கங்களை விழித்துக்கொள்ள செய்கிறது. சீமான் வளர்த்தெடுக்கப்படுகிறார். திராவிட கழகங்களின் வளர்ப்பு; 2008இல் நாம் தமிழர் இயக்கத்தை மறுகட்டமைப்பு செய்கிறார். ஈழத்தமிழ் அரசியல் தமிழகத்தில் மறுவடிவம் கொள்கிறது. 2011 இல் அ.தி.மு.க வாய்ப்பளித்தால் கலைஞருக்கு எதிராக போட்டியிடுவேன் என்று விருப்பம் தெரிவிக்கிறார். 2016 தேர்தலுக்கு முன்னரே தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணி பிரிகிறது. ஜெயலலிதா அவர்கள் சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் தமிழக அரசியலில் மூன்றாம் இடம் என்பதை தாண்டி இரண்டாம் இடத்திற்கே ஆளில்லாத தோற்றம் ஏற்படுகிறது. அந்த சூழலில் தான் விஜயகாந்த் அவர்களுக்கு எதிராக ஊடகங்கள் வேலை செய்ததும் அண்ணன் சீமான் அடிக்கடி தொலைக்காட்சி பேட்டிகளில் தென்படுவதும் நடந்தேறியது.இதற்கிடையில் ரஜினி வருவாரா என்ற கேள்வி மீண்டும் எழுந்து ரஜினி மீது கவனம் திரும்ப, சீமான் வெகு தீவிரமாக களத்தில் மூன்றாவது அணியாக வர கூடியவர்களை தாக்குகிறார்.தனித்தமிழ்நாடு என்கிற திராவிட முழக்கத்தின் 2.0 ஆக சீமான் வெளிப்படுகிறார்.ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர்.க்கு எதிராக தி.மு.க. கையாண்ட அதே யுக்தி, கட்சி ஆரம்பிக்காத ரஜினிக்கு எதிராக சீமான் போன்றவர்கள் மூலம் தீவிரப்படுத்தப்பட்டது. இரு பெரும் இயக்கங்களுடன் இன்று வரை மாறி மாறி கூட்டணி அமைத்த பா.ம.க.2016 இல் தனித்து போட்டியிடுகிறது.பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. ஜெயலலிதா, குற்றவாளி என்று தீர்ப்பு வந்த பின் அவர் சந்திக்கும் தேர்தல். இந்த தேர்தலுக்கு முன் அரசியலில் ஈடுபட வாய்ப்பிருக்கும் என்று அரசியல்வாதிகள் அஞ்சிய ரஜினி மீது வெறுப்பும் அவதூறும் பரப்பட்டது போலவே 2011 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு நாங்களும் அணில் உதவியது போல உதவியதாக சொன்ன நடிகர் விஜய்க்கு எதிராகவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 2011க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் தான் ரஜினி மீது பெருமளவில் அவதூறும் வெறுப்பும் பரப்பட்டது. இதற்கிடையில் 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் ரஜினியை வந்து சந்தித்து சென்றது குறிப்பிட தக்கது.நம் மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் தங்கள் மீது கொண்டிருந்த அவநம்பிக்கையே ரஜினி மீது பெறப்பட்ட பொய்யான அவதூறுகளுக்கு வெறுப்புக்கும் காரணம் என்று சொல்ல முடியும்.2011க்கும் 2016க்கும் இடையில் சீமான் எத்தனை முறை ஊடங்களில் தோன்றினார் அதே வேளையில் விஜயகாந்த் எப்படி விமர்சிக்கப்பட்டார் என்பதை கவனித்தவர்களுக்கு  அதே கால கட்டத்தில் ரஜினிக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டதின் உள்நோக்கம்  புரியும்.இத்தனை பகீரத முயற்சியின் விளைவாய் 2016 தேர்தலில் இரு பெரும் கட்சிகளும் தங்களை மீண்டும் நிலைநிறுத்திக்கொண்டது.ஜெ. அவர்களின் மறைவிற்கு பின்னான அரசியல் குழப்பங்களை தொடர்ந்து 2017இல் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர் சீமான் போன்றவர்களையும் ஊடகங்களையும் கொண்டு இன்னும் தீவிரமாக வெறுப்புகளையும் அவதூறுகளையும் ரஜினி மீது பரப்பினார்கள்.நேரடியாக ரஜினியை விமர்சித்தால் அது அவர்களின் வாக்குகளை பாதிக்க வாய்ப்பு இருப்பதை அவர்கள் புரிந்து வைத்து இருந்தார்கள். சரத்குமார்,பா.ம.க. சீமான் போன்றவர்களை கொண்டே ரஜினிக்கு எதிரான பிரச்சாரங்களை இவர்கள் மேற்கொண்டார்கள்.இந்த மூன்று பேரும் ஏதேனும் ஒரு வகையில் இரு பெரும் இயக்கங்ளுக்கு தொடர்புடையவர்களாகவும் சாதகமாக இருந்தவர்களுமாகவே இருந்திருக்கின்றார்கள்.மூன்றாவது தேர்வை நோக்கிய மக்களின் தேடலின் பதிலாக சீமான் என்றைக்கும் இருந்ததில்லை இருக்கப்போவதும் இல்லை. அவருடைய கணைகள் 2016 தேர்தலின் போது விஜயகாந்தையும் 2017 க்கு பின் மிக தீவிரமாக ரஜியையும் தாக்கியது. விளைவு, தற்போது வலுவான மூன்றாவது அணி என்று யாரும் இல்லாத சூழலில் சீமான் எதிர்பார்த்த அவர் போட்டியிட்ட மூன்றாவது இடத்தை அடைந்து இருக்கின்றார். அவரால் இதுவரை எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை; இனியும் முடியாது என்பதே நிதர்சனம்.அவருக்கான பணியை இரண்டு தேர்தல்களில் அவர் சிறப்பாகவே செய்தார். தேர்தலுக்கு முன்னர் சசிகலா அவர்களையும் தேர்தலுக்கு பின்னர் ஸ்டாலின் அவர்களையும் சந்தித்தும் (மரியாதை நிமித்தமாக)நட்பு பாராட்டி கொண்டார் அதில் தவறு ஒன்றும் இல்லை.

2016இல் வாக்காளர்களை குழப்பியது போன்ற தேர்தல் வியூகங்களை வகுக்க அரசியல்வாதிகளுக்கு இனி எந்த தேவையும் இருக்க போவது இல்லை. 2016 தேர்தலுக்கு முன்னர் தே.மு.தி.க.வை பிளவு படுத்தியவர்களால் எதையும் செய்ய முடியும். புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளை திருப்தி செய்து தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டால் போதும் யாரையும் பலவீனப்படுத்திவிடலாம்.ஏற்கனவே அரசியலில் இந்த கூத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.இவை அனைத்தையும் கவனித்து வந்ததன் காரணமாகவே மக்களிடம் எழுச்சி வர வேண்டும் என்பதை 90கள் தொடங்கி ஒருவர் சொல்லி வந்தார்.மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் புதிய கட்சிகள் சந்திக்கும் கட்சி தாவல் பிரச்சனை உட்பட அரசியல்வாதிகளின் எல்லா வியூகங்களும் தகர்க்கப்படும். பெரிய கட்டமைப்பை கொண்ட கட்சிகளை தங்களின் வேர்களை ஆழமாக கொண்டிருக்கும்  இரண்டு பெரும் கட்சிகளை தேர்தலில் வெற்றி கொள்ள மக்கள் ஒரு அணியில் திரள வேண்டும் அது ரஜினிக்கு மட்டும் புரிந்து என்ன செய்ய இங்கு ரஜினியையே புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருக்கையில், மக்களுக்கு எதிராக நடக்கும் அரசியல் விளையாட்டுகளை எப்படி புரிதல் எப்படி சாத்தியப்படும்

அரசியல் பற்றிய புரிதலில் குழந்தைகளாக இருக்கும் சமூகம்

சமூகத்தில் அநேகமான கருத்துக்கள் நம்மை அறியாமல் நமக்குள் புகுத்தப்படும் கருத்துகளுக்காகவே இருந்திருக்கின்றது.இதை நாம் உணர தொடங்கினாலே உண்மைகள் புலப்படும்; பிம்பங்கள் உடைபடும். நம்மை பற்றி நாம் கொண்டிருக்கும் அநேகமான தீர்மானங்களும் கூட யாரோ ஒருவர் நமக்குள் புகுத்தியதாகவே இருக்கின்றது.ரஜினி மீதான வெறுப்பு; மூன்றாவது தேர்வை நோக்கிய மக்கள் மத்தியில் இருக்கும் குழப்பம்; கால சூழலுக்கு ஏற்ப கட்சிகள் மீது திணிக்கப்படும் வெறுப்பு என்று அநேகமான கருத்துக்கள் நமக்குள் புகுத்தப்பட்ட கருத்துக்கள் என்பதை மக்கள் உணராமல், ரஜினி போன்றவர்கள் அரசியல் களம் கண்டு வெற்றி பெற்று இருந்தாலும் மாற்றம் சாத்தியப்பட்டு இருக்குமா என்பது ஐயமே!
எது எப்படியோ மாற்றத்திற்கான வாய்ப்பு மிக சமீபமான எதிர்காலத்தில் இல்லை என்று தீர்மானம் ஆகிவிட்டது.ஆனால்,ரஜினியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தவர்கள் இனி என்ன செய்வார்கள் என்று தான் தெரியவில்லை. கூத்தாடி, சொட்ட மண்டை, கிழவன் என்று விமர்சித்தவர்கள் எந்த காலத்திலும் எதையும் நின்று ஆராய்ந்து தெரிந்து கொண்டு தெளியப்போவதில்லை. அவர்களுக்கு 54வயதான சீமான்,66வயதான தி.மு.கவின் ஆதரவாளர் தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர்,68 வயதான ஸ்டாலின் ஏன் அவர்களின் தந்தையின் வயது கூட மறந்திருக்கும்.ரஜினி மட்டுமே அவர்கள் பார்வையில் கிழவன்.
ரஜினி கிழவன் தான். கிழவன் என்றால் தலைவன் என்ற பொருள் உண்டு.அந்த வகையில் தன்னை வெறுத்தவர்களாலும் தலைவர் என்றே அறியப்பட்டு இருக்கின்றார் தலைவர் ரஜினிகாந்த்.

கட்சி தொடங்காவிட்டாலும் அரசியலில் ஈடுபடாவிட்டாலும் பல விஷயங்களில் ஒரு பாதையை உருவாக்கி வைத்து குறிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கேள்வியோடு நடிகர்களை பின் தொடர செய்த அவர் கிழவன் தான்.
ஆந்திரா தமிழகம் என்று இரு மாநிலங்களின் அரசியலில் ஆளுமை செலுத்த கூடிய அளவில் இருக்க முடிந்த அவர் கிழவன் தான்.தேசிய கட்சிகளை தன் வாசல் தேடி வர செய்த அவர் கிழவன் தான். குறிஞ்சி நிலத்திற்கு உரிய முருகனை குறிஞ்சிக்கிழவன் என்கிறது தமிழ், மக்கள் மனங்களை இன்றும் ஆளும் மக்களுக்குரிய மக்கள் உடைய ரஜினி, கிழவன் தான்.
இப்படியான விமர்சனங்களை ரஜினி மீதிருந்து இவர்கள் விலக்கி கொள்ள சில காலம் ஆகலாம். அவர்களிடம் பத்து விரல்கள் இருந்தும் ரஜினியின் விரலே அவர்களுக்கு சுவையாக இருந்தது. சுவை கண்டவர்கள் அந்த போதையில் இருந்து மீண்டு வருவது சிரமமே.தமிழகமும் கூட ஒரு அரசியல் மாற்றத்திற்கு தயாராவது என்பதும் சிரமமே.
அரசியல் பற்றிய புரிதலில் இன்னும் விரல் சப்பும் குழந்தைகளாகவே சமூகத்தின் பெரும் பகுதி இருக்கும் வரை, மக்கள் அணி அணியாக பிரிந்து கிடப்பார்கள் என்பது திண்ணம் அப்படி பிரிந்து கிடக்கும் வரை ரஜினி சொன்ன புரட்சியும் அரசியல் மாற்றமும் ஏற்படபோவதேயில்லை. கால சூழல் பலரது வாழ்வில் அவர்கள் நினைத்தை நினைத்தது போலவே சாத்தியபடுத்தவதில்லை பலரின் காதல்,வேலை,திருமணம் போன்ற கனவுகள் நினைத்தது போல சாத்தியப்படுவதில்லை.அப்படியாகவே கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை என்று குறிப்பிட்டு விலகிக்கொண்டார் ரஜினி.ஒருவர் மட்டும் நினைத்து என்ன செய்ய!

ரஜினியின் பழைய பேட்டிகள்

நக்கீரனில் வெளிவந்த ரஜினியின் பேட்டி -1
நக்கீரனில் வெளிவந்த ரஜினியின் பேட்டி -2
நக்கீரனில் வெளிவந்த ரஜினியின் பேட்டி -3
நக்கீரனில் வெளிவந்த ரஜினியின் பேட்டி -4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *