தலைப்பை எழுதிவிட்ட பின் சின்னதாய் நகைத்து கொண்டேன்.காரணம் அந்த பாவி நான் தான்(நான் என்பதை படிக்கும் நீங்களும் தான். ஹி!! ஹி!!).அப்பா மூலம் அறிமுகமான மற்றுமொரு திருவாசக பாடல்,பிடித்த பத்தில் வரும் ஒன்பதாவது பாடல்.

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்

    பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

    உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த

    செல்வமே சிவபெரு மானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

    எங்கெழுந் தருளுவ தினியே

37 பிடித்த பத்து-9

முதல் ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கட்டுரை எழுதினால், நம்முடைய மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் எனும் தொடரின் மற்றுமொரு பகுதியை முடித்து விடலாம்.

“பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்

    பரிந்துநீ பாவியே னுடைய”

சிறு வயதில் அப்பா பாடிக் கேட்கும் பொழுதில், இது ஒரு பாடல் என்றளவிலேயே தான் கடந்திருக்கின்றேன். இது திருவாசகத்தில் வரும் பாடல் என்பது கூட தெரியாது. பின்னொரு நாளில், ஒரு தருணத்தில் அப்பா நினைவாக இந்த பாடலை படிக்க எடுத்த போது, நான் எழுதிய கவிதை ஒன்றின் இடையில் வரும் வரிகளும்(நானும் கவிதை எல்லாம் கூட எழுதுவேன் ங்க) நபிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றும் நினைவிற்கு வந்தது.

“‘பசி’ ன்னு வயிறு சொல்லும் முன்ன

நீ சமச்சு வச்ச போது

நான்  தூக்கி எறிஞ்ச தட்டை

இப்போ நெடு தூரம் வந்து  தேடுறேன்மா.”

இது தான் அந்த கவிதையின் ஒரு பகுதி

13 வருடங்களுக்கு முன் விடுதியில் இருந்த பொழுது  எழுதியது.அம்மாவுடன் இருக்கும் பொழுதில், நம்முடைய எந்த தேவை பற்றியும் நாம் கவலை கொள்ளவேண்டியதில்லை. நமக்கு எப்ப எப்ப என்ன என்ன தேவையோ அப்ப அப்ப அது அது சரியாக கிடைத்துவிடும்.

 சரி,நபிகள் என்ன செய்தார் என்பதற்கு வருவோம்.நபிகளிடம் ஒரு வழக்கம் இருந்ததாம்.தனக்கு அன்றைக்கு கிடைக்கும் பணத்தில்  (செல்வமோ, காசுகளோ) தனக்கான தேவை போக இருக்கும் மீதியை   அன்றைய நாளில் யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு வழங்கிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றார்.ஒரு நாள், அவரின் மனைவி குடும்பத்தின் எதிர்கால தேவைக்கு என்று கொஞ்சம் பணத்தை எடுத்து வைத்து இருக்கின்றார். அன்றைய பொழுது சாய்ந்த பிறகு அவரால் தூங்க முடியவில்லையாம். “என்ன டா இது தூக்கம் வர மாட்டேனுது” என்று பார்த்தவருக்கு மனைவி கொஞ்சம் பணம் சேர்த்து வைத்து இருந்தது தெரிய வந்து இருக்கின்றது.உடனே மனைவியிடம் இருந்த அந்த பணத்தை வாங்கிக்கொண்டு  வீட்டிற்கு வெளியில் சென்று உதவி தேடி தேடிக்கொண்டிருப்பவர்களை பார்த்து அவர்களிடம் அந்த பணத்தை கொடுத்துவிட்டு தூங்க சென்றாராம்.

அவருடைய மனைவி அவரிடம், “நமக்கு என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் இருந்தால், நாளை நம்முடைய தேவைக்கு என்ன செய்வது என்று கேட்டு இருக்கின்றார்”.

அதற்கு நபிகள் சொன்ன பதில், “இன்று அவனுடைய தேவையை எப்படி இறைவன் என் மூலம் பூர்த்தி செய்தானோ அப்படி எனக்கான தேவையை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அவன் அறிந்தே இருக்கின்றான்”

இந்த கதையை நான் படித்த பொழுது எனக்கு ஒரு இருபது வயதிற்குள் இருந்திருக்கும், ஆனாலும், அது என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கதைகளாகவும் உவமைகளாகவும் கேட்டறியும் போது , பெரிய பெரிய விஷயங்களை உணர்ந்து கொள்ள வயது பெரிய தடையாக இருப்பதில்லை.

இயேசுவின் உபதேசங்கள், கதைகளாகவும் உவமைகளாவும் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். பைபிளில் கூட நபிகளின் அந்த வாழ்க்கை நிகழ்வு சொல்லும் பாடம் உவமை மூலம் சொல்லப்பட்டு இருக்கின்றது.

“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?”

மத்தேயு 6-26

நிஜம் தான் இந்த பிரபஞ்சம் இப்படி தான் இயங்குகிறது. எல்லோருடைய தேவையும் தீர்க்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது.

கட்டுரையின் தொடக்கத்தில் என்னையும் சேர்த்து உங்களையும் பாவி என்றதற்கு சிலர் கோபம் கொண்டிருக்க கூட வாய்ப்பு இருக்கின்றது.போன பகுதியில், அம்மையே அப்பா!என்னும் பாடல் பற்றி பார்த்தோம். அதில், இறைவனை தந்தையோடு ஒப்பிடும் போது, தன்னை கீழ்மகன் என்று ஒப்புமைப்படுத்தும் வார்த்தையை மாணிக்கவாசகர் பயன்படுத்தியிருந்ததை பார்த்தோம். இந்த பாடலில் தன்னை  ஏன்  பாவியேன் என்கிறார்? அதிலும் குறிப்பாக அம்மாவை பற்றி பேசும் பொழுது மிக குறிப்பாக பால் நினைந்து ஊட்டும் தாய் என்று குறிப்பிட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்!

பாவியாகவே இருந்தாலும் தாய் தன் பிள்ளையின் தேவை உணர்ந்தே தான் செயல்படுகிறாள். எல்லா பிள்ளைகளும் தாய்க்கு பாவியாகவே தான் வாய்கின்றது பிறப்பதற்கு முன்பு இருந்தே தன்னை வருத்தும் ஒரு ஜீவி மீது அத்தனை அன்பு கொண்டு, எது எது எப்ப எப்ப தேவையோ அது அதை நினைந்து அப்ப அப்ப செய்கின்ற தாயை விடவும் சிறந்த அன்பு செய்யும் இறைவன் என்பதை சுட்டவே “பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப் பரிந்துநீ” என்கிறார். இதில் இன்னுமொரு அழகு, எந்த ஒரு தாயும் தன் பிள்ளை விரும்பி கேட்பதெல்லாம் செய்துவிடுவதில்லை. ஆனால், பிள்ளையின் தேவையை பற்றியே நினைத்து அதை தொடர்ந்து நிறைவேற்றுவதை கடனாக கொண்டிருப்பாள். அது போல, இறைவன் நாம் வேண்டுவதெல்லாம் நிறைவேற்றாமல் போனாலும் நம் தேவையறிந்து அந்த தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு தானே இருக்கின்றான். நாம் இறைவனுக்கு நன்றி சொல்லாமல் விட்டாலும் இறைவனை துதிக்காமல் போனாலும் பெரும் பாவங்களையே செய்தாலும் என்ன தேவையோ அதை கொடுத்துக்கொண்டு தானே இருக்கின்றான்.

எப்படி ஒரு குழந்தைக்கு தனக்கு என்ன வேண்டும் என்பது தெரியாதோ, அது போலவே இருக்கும் என்னுடைய  தேவையை   அறிந்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே செய்கிறாய் உனக்கு எத்தனை அன்பு என்று மாணிக்கவாசகர் வியந்து இருக்கின்றார். அதன் காரணமாகவே

 பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்

    பரிந்துநீ பாவியே னுடைய என்கிறார்.

இரண்டே இரண்டு வரிகள். இந்த வரிகளின் ஆழத்தை சுருக்கி எழுதி முடிக்க மனம் வரவில்லை. இதை நினைக்க நினைக்க, அப்படியே மாணிக்கவாசகரை கட்டி அணைத்து முத்தம் தர வேண்டும் போல் இருக்கின்றது.மிக எளிமையாக சொல்ல வேண்டுமென்றால்

“நான் பாவி; என்னுடைய தேவை என்ன என்பது எனக்கு தெரியாது; நீ (தாய்-தாயைவிட சிறந்த தாயான இறைவன்) அன்பு செய்யும் அளவிற்கு உன்னிடம் நான் (பிள்ளை-மாணிக்கவாசகர்) அன்பு செய்யவில்லை; என்னுடைய தேவையை அறிந்து சரியான காலத்திற்கு அந்த தேவையை நிறைவேற்றியும் விடுகிறாய். ஆனால், நான் பாவியாக இருக்கின்றேன்.”

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

    உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த

    நாம், இயல்பில் அழுத்தத்துடனும் கோபத்துடனும் இருக்கும் பொழுது தான் நம் உடல்(ஊன்) இறுக்கமாக இருக்கும். அதுவே நம் மீது யாரேனும் அன்பு செய்தால்! அந்த அன்பால் நாம் நெகிழ்ந்து போனால்!அது உருக தானே செய்யும்! அதோடு,நம் எல்லோரிடமும் இறைத்தன்மையும் இருக்கும் ராட்சத தன்மையும் இருக்கும்.

மிக மோசமான  ராட்சத தன்மை கொண்டவரிடம்  நாம் அன்பு செய்தால், அவரும் கூட நம் மீது அன்பு செலுத்தி விடுவார் அன்பு அவருக்குள் இருக்கும் இறைத்தன்மையை வெளிக்கொண்டு வரும்.நமக்குள் இருக்கும் அன்பு தான் அந்த இறைத்தன்மையே.

உயிர் ஒளிவடிவாக இருப்பதாகவே நம் கலாச்சாரம் சொல்கிறது.அந்த ஒளியின் உள்ஒளியாக இருப்பது இறைவனே (அன்பே) தான்.

இப்பொழுது ஒரு குழந்தை உணர்கிறது, “அம்மா!நான் உன்னை எவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கின்றேன். எத்தனை பெரிய பாவி நான்! ஆனாலும், எப்படி என் மீது உன்னால் இத்தனை அன்பு செய்ய முடிகிறது!”என்று. இது போன்ற அன்பை உணரும் தருணத்தில் அந்த குழந்தையின் ஊன் உருக தானே செய்யும்!

அது போல, “நான் என்ன பாவங்கள் செய்து இருந்த போதிலும் அன்பு செய்து; என்  ஊனை உருக்கி என் உள் உள்ள அன்பாகிய ஒளியை பெருக்கி; ஆனந்தம்  தரும் தேனை சொரிந்து; என்  வெளியின் வெளி எங்கும் சூழ்ந்து நிறைந்து  இருக்கும் உன்னை, தன் தாயை எப்பொழுதும் பிடித்து கொண்டு இருக்கும் சிறு பிள்ளை போல் தொடர்ந்து உன்னை விடாமல் பிடித்துகொண்டேன் என் செல்வமே சிவபெருமானே  இனி நீ எங்கு செல்வாய்?!” என்று குழந்தையாகவே மாறி உருகுகிறார் மாணிக்கவாசகர்.

இதில், ஆனந்தம் ஆய தேன் என்பதை ஆனந்தமாகிய தேன் என்றும் ஆனந்த தரும் மாய தேன் என்றும் பொருள் கொள்ளலாம். புறம்புறந் திரிந்த என்பதை வெளியின் வெளியில் எங்கும் என்ன சூழ்ந்து நின்ற என்று பொருள் கொள்ளலாம். வேறுவிதமாக, என் புறத்தன்மை முழுதையும் மாற்றிவிட்ட என்றும் பொருள் கொள்ளலாம்.திரிந்து என்பதற்கு தன்மை மாறுதல் என்றும் பொருள் கொள்ள முடியும்.

அன்பை உணர்ந்து நமக்குள் இருக்கும் அன்பு பெருகிய பின் நம் புறத்தன்மை, புறச்சூழல் மாறத்தானே செய்யும்.

நபிகள் கதை, பைபிள் வசனம்,பால் நினைந்து ஊட்டும் தாயை விட சிறந்த இறைவன் என்னும் திருவாசகம் இவைகளிலெல்லாம் சொல்லப்பட்டது போல இயற்கை அன்னை(mother nature) அல்லது கடவுள் அல்லது காலம் என்று நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும்,(அது அல்லது) அவர் உங்களின் தேவையை காலமறிந்து நிறைவேற்றிக்கொண்டு தான் இருக்கின்றார். எப்படி ஒரு குழந்தை தன் தாயின் கவனத்தை தாண்டி செல்ல முற்பட்டு சிக்கலில் சிக்குமோ, அது போலவே நாம் இயற்கையை; இறைவனை மீறி அவன் கவனத்தை தாண்டி செல்ல முற்பட்டு  நமக்கு என்ன தேவை என்று தெரியாமல் நாமாக செய்யும் காரியங்களினால் சிக்கலுக்கு சிக்கி அதன் பின்னர் அம்மா! அப்பா! இறைவா! என்று கதறுகிறோம்.

முடிவாக ஒன்றை சொல்லி கட்டுரையை முடிப்போம் லவ் யு மாணிக்கம்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *