வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.
நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்; அண்டத்துக்குள் அண்டத்தோடு அண்டமாகவே புது புள்ளியை நோக்கி. புதிதான புள்ளியில் புதிதாக ஆக்குகிறது நம்மை புதிதாக விட்ட புது நொடி ஒன்று, புது நொடி நோக்கி நகர புது ஆற்றல் கிடைப்பதற்கெனவே. புதிததான பின்பும், பின் நொடி நோக்கி நின்று; புதிததான நம்மை இழக்காமல் சிரிப்போம்; புதிததான நொடி அது ஒவ்வொன்றிலுமே. வாசகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2020 புத்தாண்டு அன்று எழுதப்பட்ட ஒரு கவிதை. “புத்தாண்டு என்பது எல்லா நாட்களையும் போல் இன்னும் ஒரு நாள் தானே? கால கணக்கீடுகள் மனிதன் உருவாக்கியது தானே?” என்கிற கேள்விகளுக்கு பதிலாய் வந்த கவிதை எனலாம்.பள்ளியில் maths டீச்சர் சொல்வது போல இது (இந்த கவிதை)புரிந்தால் தான் உங்களுக்கு இது (இந்த கட்டுரை) புரியும்(ஹாஹா).
இது நான் எழுதிய கவிதை என்றாலும் என்னுடைய கவிதை என்று உரிமை கொண்டாடுவதில் எந்த நியாயமும் இல்லை.காரணம், வேறு ஒரு மொழியில்; வேறு வார்த்தைகளால்; இதே போன்ற அர்த்தத்தில் யாரோ ஒருவரை கொண்டு காலம் இதே கருத்தை இதற்கு முன்னரும் வெளிப்படுத்தியிருக்க கூடும்.இதைப்பற்றி எழுதும் பொழுது,என்னுடைய நண்பர் ஒருவர், அவர் எழுதிய புத்தகத்தின் முன்னுரையில் எழுதிய இருந்த வரிகள் நினைவிற்கு வருகிறது.
"என்னை கருவியாக கொண்டு காலம் தன்னை எழுதுகிறது"
சரி, தான் இங்கு நாம் நடத்தும் எதையும் நாம் நடத்துவதில்லை. இந்த பேரண்டத்தில் என்றோ நிகழ்ந்த பெரு வெடிப்பில் உருவான “star dust ” தானே நாம் எல்லோரும்.அண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நம்முடைய எந்த செயலுக்கும் நாம் எப்படி காரணமாக முடியும்.
இங்கு நமக்கு ஏற்படும் எந்த விதமான சிந்தனைகளும் நமக்கு ஏற்படும் சிந்தனைகள் அல்ல. அவை இந்த அண்டத்தின் பேரறிவு நம் மூலமாக வெளிப்படுத்த முனையும் சிந்தனைகள். ஆம்,இந்த உலகையே கட்டி ஆளும் மனிதனின் intelligence ஐ நம் முன்னோர்கள் சிற்றறிவு என்றே விளிக்கிறார்கள்.
இந்த அண்டத்தில், எல்லாம் ஏதோ ஒரு ஒழுங்கில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது என்றால் அந்த ஒழுங்கை கட்டுப்படுத்துவது தானே பேரறிவாக இருக்க முடியும். அந்த பேரறிவின் கட்டளைகளை தானே நம் சிற்றறிவு ஏற்று நடத்தும்.
இதை புரிந்து கொள்ள,நாம் நம் உடலை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.நம் உடலின் ஒவ்வொரு cell உம் ஒரு உயிர். ஒவ்வொரு cell களுக்கும் தன்னளவில் என்ன செய்ய வேண்டும் என்கிற அறிவு இருக்கும்.இந்த cell களை எல்லாம் கட்டுப்படுத்துவது, பல cellகள் இணைந்த நம் மூளை தானே.அது போல தான்.இந்த அண்டத்தில் வாழும் உயிர்களின் அறிவு ஒரு cell என்றால் இந்த மொத்த நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தும் ஒரு கூட்டு அறிவு அல்லது கூட்டு சக்தி எதுவோ அதை தான் பேரரறிவு என்று சொல்லி வைத்து இருக்கின்றார்கள்.
இயற்கை அல்லது காலம் அல்லது இறைவன் என எப்படி கொண்டாலும் எல்லாவற்றையும் நிகழ்த்திக்கொண்டிருப்பது எதுவோ அது தான் அல்லது அதனுடைய அறிவு தான் இந்த பேரரறிவு.
இந்த இயற்கை தன்னை பற்றிய உண்மைகளை தானே தனக்கு தெளிவிப்பது தான் அறிவியல் கண்டுபிடிப்புக்கள். இதில், கவிதை, கலை, இசை என்று எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ள முடியும். ஒருவர் புதிதாக ஒரு இசையமைக்கிறார் என்றால், அது அவரின் சிற்றறிவில் பிறந்த இசை இல்லை. இந்த பிரபஞ்சத்தின் பேரறிவு அவர் மூலமாக இந்த உலகிற்கு கொடுக்க முனைந்த இசை. மனிதனையும் சேர்த்து இந்த உலகமும் இயற்கை தானே. அந்த வகையில் தனக்கு தானே இயற்கை செய்து கொள்ளும் வேலைகள் இவை.
நம்முடைய மூளை ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சில வேலைகளை கொடுத்து செய்ய வைக்கின்றது. அப்படி அந்த வேலைகளை செய்யும்உறுப்புக்கள் தாங்களே தான் அந்த வேலைகளை எப்படி செய்வது என்று கண்டு அறிந்தோம் என்பது எத்தகையதோஅப்படியானதே மனிதர்கள் தங்கள் சிந்தனைகளுக்கு காப்புரிமை கேட்டு நிற்பது என்பதும்.
இதைப்பற்றி ஏன் இவ்வளவு எழுத வேண்டும்? அறிவியல் உலகின் கூற்றின் படி 1660 க்கும் 1670க்கும் இடைப்பட்ட காலத்தில் தான் இனப்பெருக்கத்திற்கு முக்கிய கூறுகளாக இருப்பது விந்தணுவும் முட்டையும் என்பதை மனித சமூகம் அனுமானித்து இருக்கின்றது.ஆனால், அதற்கும் முந்தைய காலத்தவரான திருமூலர், அவர் எழுதிய திருமந்திரத்தின் இரண்டாம் தந்திரத்தில் கர்ப்பக்கிரியை பகுதியில்,விந்தணு பற்றியும் முட்டை பற்றியும் சொல்லியிருப்பதோடு இன்னுமும் நவீன அறிவியல் உலகம் கண்டறியாத விஷயங்களையும் சொல்லி வைத்து இருக்கின்றார். இதைப்பற்றி, என் நண்பரிடம் சொன்ன பொழுது, அவர் சொன்னார்,”திருமூலர் தான் இதை முதலில் சொன்னார் என்று நாம் சொல்லிவிட முடியாது அதற்கும் முன்னரே கண்டறியப்பட்டு இருக்கலாம்” என்று.
அவர் சொன்னது சரி தான்.
திருமூலர் போன்றவர்களை பொறுத்தவரையில் எல்லாம் சிவம், அவர் எழுதி வைத்த எதையும் அவர் தான் கண்டுபிடித்ததாகவோ தன்னால் அறியப்பட்டதாகவோ சொல்லிக்கொள்ள மாட்டார்.எல்லாம் சிவன் அறிவித்ததாகவே சொல்வார். அவரைப்போன்றவர்கள் அனைத்துமாக இருப்பது எதுவோ அதை தான் சிவம்/சிவன் என்கிறார்கள்.நவீன உலகத்தவருக்கு இது புரிவதே இல்லை. மனிதன் தானும் இயற்கையின் அங்கம் என்பதையே மறந்தும் போனான்.
சமயங்களில், எனக்கு ஒரு எண்ணம் ஏற்படுவதுண்டு, “மனிதன் இயற்கையை அழித்து கொண்டு இருக்கின்றான் என்னும் கூற்று எப்படி சரியாக இருக்க முடியும் அவனும் இயற்கை தானே?” என்று
“எல்லாம் அவன் செயல்” -எத்தனை சுருக்கமான மற்றும் ஆழமான வாசகம்.
கிருஷ்ணர், அர்ஜுனனிடம் இதை தான் தெளிவுப்படுத்த விரும்புகிறார். “நீ யாரையும் கொலை செய்யப்போவதாக நினைக்கவேண்டாம்.நீ வெறும் கருவி மட்டுமே” என்கிறார். கருவியாக மட்டுமே இருக்கும் மனிதன் எப்படி தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கும் சிந்தனைகளுக்கும் காப்புரிமை கோரலாம்!
நம்முடைய எந்த செயல்களுக்கும் நாம் உரிமை கொண்டாடுவது என்பது கூடாது. அப்படி உரிமை கொண்டாடுவதற்கு பெயர் தான் அகங்காரத்தின் விளைவான மமகாரம். அந்த மமகாரம் தான் சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அறிவுசார் காப்புரிமை பெற்று சம்பாதித்து கொண்டே இருக்கின்றது.அது சமூகத்தின் சமநிலையை ஏற்கனவே பெரிதும் பாதித்துவிட்டது.
சமீபத்தில்,குனிந்த புருவமும் பாடலை நம் பக்கத்தில் பதிவேற்றியதற்கு,காப்புரிமை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
திருநாவுக்கரசர் எழுதிய பாடலுக்கு எப்படி யாரோ ஒருவர் உரிமை கொண்டாட முடியும்! ஒரு பாடல் என்று எடுத்துக்கொள்கிற பொழுது, பாடல் எழுதியவர், பாடியவரின் குரல், என்று எல்லாவற்றிக்கும் சேர்த்து இசைமைத்த ஒருவர் மட்டும் எப்படி உரிமம் கூற முடியும்.
இளையராஜா அவர்களை வம்பு இழுக்கிறேன் என்று நினைக்கவேண்டாம்.அவர் எனக்கும் பிடித்த இசைமைப்பாளர் தான்.
ஒருவரின் உழைப்பிற்கும், intelligenceகும் கிடைக்க வேண்டிய வெகுமதி நிச்சயம் அவருக்கு கிடைத்தே ஆக வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒருவர் உழைப்பை கொண்டு எந்த உழைப்பும் இல்லாமல் மற்றவர் ஆதாயம் ஈட்டினால் அதுவும் தடுக்கப்பட வேண்டும்.தமிழ் திரை இசையை பொறுத்தவரையில் அருணகிரி நாதரின் திருப்புகழ் யாரோ பெயர் தெரியாதவரால் இயற்றப்பட்ட நாட்டுப்புற பாடல், கும்மி பாடல் என்று யார் யாரோ உருவாக்கியதை எடுத்து தங்கள் இசையாக காட்டிக்கொள்ளும் வேலைகளும் நடக்கின்றது.இதையெல்லாம் தடுக்கவோ நெறிப்படுத்துவோ முடியாது. அது அவசியமும் இல்லை.
ஆனால், இந்த காப்புரிமை விஷயம் கலை, இசை, இவைகளை தாண்டி அறிவியல் உலகில் சில அட்டூழியங்ககளை செய்கிறது.அதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.
அறிவியல் உலகு மட்டுமில்லை; எல்லா இடங்களிலும் யார் ஒருவர் முதலில் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார் என்பதை விட யார் அதற்கு முதலில் உரிமை கொண்டாடினார் என்பதை பொறுத்து தான் இவர்களால் இது கண்டுபிடிக்கப்பட்டது என நமக்கு கற்பிக்கப்படுகிறது.
உதாரணமாக, ஒரே மாதிரியான கதை, இருவர் மனதில் தோன்றியிருக்க கூடும். யார் முதலில் பதிவு செய்கிறாரோ அவர் தான் அதற்கு உரிமை கொண்டாட முடிந்தவராகி விடுகிறார். கட்டுரையில் ஆரம்பத்தில் சொன்னது போல ஒரே மாதிரியான சிந்தனை வெவ்வேறு நபர்களுக்கு ஒரே காலத்தில் அல்லது வெவ்வேறு காலத்தில் நிச்சயம் ஏற்படக்கூடும்.காரணம்,இந்த அண்டத்தின் பேரறிவு அப்படி தான் இயங்குகிறது.
பூமி உருண்டையானது என்பதை கிரேக்கர்கள் கண்டுபிடித்தார்கள் என்று கற்பிக்கப்படுகிறது. உலகம், பூமி தட்டையானதா அல்லது உருண்டையானதா என்பதை வாதம் செய்துகொண்டு இருந்ததற்கு வெகு காலம் முன்னரே; பாரத சமூகம், அண்டம் என்ன வடிவிலானது என்பதை கண்டறிந்து வைத்து இருக்கின்றது. என் நண்பர் சொன்னது போல பாரத சமூகம் தான் கண்டறிந்தது என்று கூறுவதும் கூட சரியாகாது. இயற்கை தான் என்ன வடிவில் இருக்கின்றோம் என்பதை எப்படி தெரியாமல் வைத்து இருக்கும்!
திருவாசகம்-திருவண்டப் பகுதியின் முதல் பாடல்.
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5 சிறிய வாகப் பெரியோன் தெரியின்
பாடலின் பொருள்:ஆராயுமிடத்து அண்டம் எனப்படும் பேருலகின் பகுதியாகிய, உருண்டை வடிவின் விளக்கமும் அளத்தற்கரிதாகிய தன்மையும் வளமான பெருங்காட்சியும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து நின்ற அழகைச் சொல்லுமிடத்து நூற்றொரு கோடியினும் மேற்பட்டு விரிந்துள்ளன, அவை, வீட்டில் நுழைகின்ற சூரிய கிரணத்தில் நெருங்கிய அணுக்களை நிகர்க்கச் சிறியவையாகும்படி பெரியவனாய் இருப்பவன்.
இந்த பாடல், இந்த அண்டம் எத்தகையது எத்தனை பெரியது என்று சொல்லி, இறைவனோடு ஒப்பிட்டால் அண்டம் அனுவின் சிறியது என்று சொல்கிறது.
பாடலை எழுதிய மாணிக்கவாசகர்,ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவர் தான். ஆனால், ‘அண்டம்’ என்கிற வார்த்தை தொன்மையானது. இந்திய சமூகத்தின், பழமையான; ஒன்றோடு ஒன்று தொடர்புடைய;பல வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளும் இருமொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் என இரண்டிலும் ஒரே அர்த்தத்தில் கையாளப்படும் வார்த்தை.
தமிழ் சம்ஸ்கிருதம் இரண்டையும் பிரதானமாக கொண்டு படையெடுப்புக்களால் நிகழ்ந்த கலப்பு, சிதைவு என்று மாற்றம் கொண்டு இருக்கும் பல மொழிகளில் இந்த வார்த்தை ஒரே அர்த்தத்தை தான் தருகிறது.
என்ன அர்த்தம்? ஹிந்தியில் “அண்டா” என்றால் முட்டை என்று அர்த்தம். முகலாய படையெடுப்பிற்கு பின் பல வார்த்தைகள் தன் விகுதியை இழந்து ஹிந்தி மற்றும் உருது என இரு வேறு மொழிகளானது. அப்படித்தான் பாரத சமூகம் பயன்படுத்திய ‘அண்டம்’ ‘அண்டா’ என்று ஆனது.
இன்றும் தட்டையான அடிப்பகுதியில்லாத ஒரு பெரிய உருளை பாத்திரத்தை (cylinder with spherical base )தமிழ் சமூகமும் அண்டா என்றே அழைக்கிறது.தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் universe ஐ குறிக்கும் வார்த்தை ஒன்றே அதன் வடிவத்தை(Shape) எடுத்துச் சொல்லும் காரணப் பெயராக அமைந்து இருக்கின்றது.எந்த ஒரு வடிவத்திற்கும் ஒரு முடிவு இருக்க வேண்டும். மாணிக்கவாசகர் உட்பட நம் முன்னோர் பலர் அண்டத்தை முடிவில்லாதது என்று சொல்லியிருந்த பொழுதும் அதன் வடிவத்தையும் அறிந்து சொல்லியிருப்பது ஆச்சரியமே.
இவையெல்லாம் யாரோ ஒருவரின் கண்டுபிடிப்பு என்று அடக்கிவிட முடியாது அவ்வாறு செய்யவும் கூடாது.கடவுள் அல்லது இயற்கை என்னும் பேரரறிவு நம்மிடம் வெளிப்படுத்தும் உண்மைகளாகவே கொள்ள வேண்டும்.
இதை மனித சமூகம் உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் மட்டுமே காப்புரிமை என்னும் பெயரில் நிகழும் அட்டூழியங்களை குறைத்து சமூகத்தில் ஒரு சம நிலை ஏற்படுத்த முடியும்.
அப்படியென்ன அட்டூழியங்கள் நிகழ்கிறது என்று கேட்பீர்களானால்,
நீங்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்துவிட்டு உங்கள் நிறுவனத்தின் பெயரில் ஒரு காப்புரிமை வாங்கி வைத்துக்கொண்டால், காலத்திற்கும் அந்த நிறுவனம் உங்களுக்கு வருமானம் ஈட்டித் தரும்.காலத்திற்கும் வருமானம் ஈட்டித் தரும் என்பது, நீங்கள் ஒரு முறை உழைத்ததற்கும்; இயற்கை உங்கள் அறிவின் மூலம் அந்த மருந்தை வெளிப்படுத்தியதற்கும்; மற்றவர்கள் அவர்கள் உழைப்பின் மூலம் சம்பாதித்த பொருளை ஒவ்வொரு பயன்பாட்டின் பொழுதும் கொடுக்க வேண்டும் என்பதாகும்.
பெருந்தொற்று ஒன்றிற்கு ஒருவரால் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படுகிறது என்றால், இயற்கை அவர் மூலம் தன் சமநிலைக்கு ஏற்பட்ட குந்தகத்தை சரி செய்ய விளைகிறது என்று தானே அர்த்தம். அப்படியிருக்க இது அட்டூழியம் தானே!
மொழி அடிப்படையில், மனிதர்களை பிரிப்பது. இதை நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என்று அதை கொண்டு காலத்திற்கும் மற்றவர் உழைப்பை அபகரிப்பது இவற்றிக்கெல்லாம் மனித சமூகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் இயற்கை தனக்கு தானே செய்து கொள்ளும் சாதகம். அதனை தனிமனிதர்களோ நிறுவனமோ சாதகமாக்கி கொள்வதைப்பற்றி மனித சமூகம் இனியாவது சிந்திக்கட்டும்.
இயற்கை(கடவுள் ) எல்லாவற்றையும் எல்லாவற்றிக்கும் பொதுவாகவே வைக்கிறது.அதில் எதையும் யாரும் உரிமை கொண்டாடுவது இயற்கைக்கு எதிரானதாகும். நம் உடம்புக்குள் சமநிலை குலையும் பொழுது எப்படி உடம்பு அதை சரி செய்ய தன்னுடைய சில cell களை தாக்குமோ அது போலவே இயற்கையும் சம நிலையை குழைப்பவர்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருப்பதை ஒவ்வொருவரும் நினைவு கொள்ளவேண்டும்.
(மாணிக்கவாசகர்: universe பத்தி நான் பேசிக்கிறேன் சொல்லி முடிச்சுருக்கலாம்! ஏன்டா சம்மந்தம் இல்லாத கதையெல்லாம் பேசி..international politics குள்ள என் பாட்டை இழுத்துவிடுற .இதுல கவிதை வேற! இருடா உன்ன!)