சூரியனின் வெளிச்சமில்லாத இடங்களில் நாம் தேடும் எதுவும் எதுவும் கிடைப்பதேயில்லை. அன்று அந்த மாலை வேளையில், ஷாரா அவள் வீட்டிலும்; வீரா அவன் வீட்டிலும் அவர்களுக்கு கிடைக்காத ஒன்றை;அது அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்று தெரியாமல் தேடினார்கள்.
பதினாறு வருடங்களில் ஒரு முறை கூட அந்த புகைப்படத்தை வீரா பெரிதாக லட்சியம் செய்திருக்க மாட்டான். பாத்திரங்களையும் உபயோகப்படுத்தாத சாமான்களையும் அடைத்து வைத்து இருந்த அறையில், ஒரு பெட்டி இருந்தது;அந்த பெட்டியில் பழைய புகைப்படங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது; அந்த அடுக்குகளில், கடைசி புகைப்படமாக அவன் தேடிய புகைப்படம் இருந்தது. கண்ணாடி உடைந்து இருந்தததால் அந்த புகைப்படம் கொஞ்சம் சேதமாகி இருந்தது.
‘ஸ்ரீ கலா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்’ “LKG ‘A'” என்று அந்த புகைப்படத்தின் சட்டத்தில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டு இருந்தது. முதல் வரிசையில் இடதுபுறத்தில் முதல் ஆளாக இருந்தது ஹுசைன். அவனை வீரா நிச்சயமாக மறக்க மாட்டான்.அந்த புகைப்படம் எடுத்ததற்கு அடுத்த வருடமே ஹுசைன் வேறு பள்ளிக்கு மாறியிருந்தான். அந்த சமயத்தில், வீராவை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில் ஹுசைனை பார்த்த வீராவின் அம்மா ஹுசைனை பார்த்து, ” என்னடா புது ஸ்கூல் நல்லா இருக்கா ?” என்று நலம் விசாரித்த படி அவன் புத்தங்களை வாங்கிப்பார்த்து ஆச்சர்யாமானார், “என்ன டா first standard புக் வச்சிருக்க!”
“எனக்கு வயசு கூட இருக்குன்னு எங்க வீட்ல என்னைய first standard ல போட சொல்லிட்டாங்க”என்றான் ஹுசைன்.
வீராவிற்கு புரியவில்லை. “எப்படி! ஒரே வருடத்தில் இரண்டு வகுப்பு முன்னேறினான்” . ஒரு வருடத்திற்கு முன்னர், காலையில் பள்ளிக்கு செல்லும் வேளையில், ஹுசைனை அவர்கள் பார்த்த அந்த இடத்தில், வீராவின் அம்மா ஒருவரிடம் பேசியது வீராவின் நினைவிற்கு வந்தது, “இப்ப தான் ஸ்கூலுக்கு அனுப்பினோம் அதுனால வீராவை மறுபடி ஒரு வருஷம் ‘LKG’ லையே போட சொல்லிட்டேன்” .
“எப்படி! என்னை மட்டும் மறுபடி ‘LKG’ ல போட்டுட்டு அவனை UKG படிக்காம first standard போட்டாங்க” வீரா ஆச்சரியமாக கேட்டான்.
“அவன் நல்லா படிச்சதால அவனுக்கு டபுள் ப்ரோமோஷன் கொடுத்துட்டாங்க. நீயும் நல்லா படி” இப்படியான பொய்களை இலகுவாக உண்மை போல் பேசுவதற்கு அம்மாக்களால் மட்டுமே முடியும். பிள்ளைகளை சாப்பிட வைக்க அவர்கள் உருவாக்கும் கற்பனை வில்லனைகளை நீங்கள் ஹாலிவுட் படங்களிலும் கூட கண்டிருக்க மாட்டீர்கள்.
அந்த புகைப்படத்தில், ஹுசைன் நின்றிருந்த அந்த வரிசையில் இருந்த அத்தனை பேரும் சிறுவர்கள்.அதற்கு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் சிறுவர்களே. அந்த வரிசையில் குட்டியாய், ஒரு முகம், அந்த முகம் நிறைய டால்க்ம் பவுடர், நெற்றியில் பெரிதாய் திருநீறு அந்த முகத்தை பெரிதும் சட்டை செய்யாமல் வீராவின் கருவிழி அதற்கடுத்த வரிசைக்கு நகர்ந்தது. வீரா சட்டை செய்யாத அந்த முகத்தை தான் தினமும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்கின்றான்.அதை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.அதே வரிசையில் ராஜசேகர், விஸ்வா, கண்ணா, என்று பின்னாளில் விஸ்வாவுடன் சேர்ந்து படித்தவர்களும் இருந்தார்கள்.
முன் வரிசையில் நடுநாயகமாய் அந்த மிஸ் அமர்ந்திருந்தார்கள்.
“அவங்க பேர் என்ன?” யோசித்துவிட்டு அந்த ஆசிரியைக்கு இருபுறமும் இருந்த முகங்களை ஒவ்வொரு முகங்களாக மிக கவனமாக கடந்தது வீராவின் கருவிழிகள்.ஷாரா அந்த புகைப்படத்தில் இருந்தால் அந்த வரிசையில் தான் இருக்க வேண்டும்.
“ஷோபனா ! ப்ரியா! இவய்ங்க எல்லாம் LKG ல நம்ம கூடவா படிச்சாய்ங்க! இதெல்லாம் யாரு ன்னு தெரில!…ப்ச்!ஊ!.. அந்த நெற்றி! கண்டிப்பா கண்டுபிடிக்க முடியாது! அப்பவே அப்படி இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இல்லை! இல்லை! எப்படி நமக்கு தெரியாம இருக்கும்! இந்த போட்டோ ல இருந்தா நிச்சயமா நமக்கு தெரியும். இல்லை இதுல அவ இல்லை” இப்படி பல சிந்தனைகளுக்கு பின் அவள் அந்த படத்தில் இல்லை என்று தீர்மானித்துக்கொண்டான் வீரா.
ஷோபனாவும் ப்ரியாவும் பின்னாளில் வீரா படித்த பள்ளியில் படித்தவர்கள். ஆனால், அவர்கள் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது. வீரா கல்லூரியில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.இப்படி, வீராவவுடன் அந்த மழலை வகுப்பில் இருந்த ஒவ்வொருவரும் ஒரு வகுப்பு முந்தியும் பிந்தியும் இருந்தார்கள்.
“நீ! ஸ்ரீ கலா ல படிச்சீயா? நான் அங்க தான் அஞ்சாவது வரை படிச்சேன்” என்று ஷாரா ஆச்சரியமாக சொன்னாள்.
‘LKG ல இருந்தே! குஷி படம் மாதிரி ல இருக்கு!செம!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட வீராவிற்கு அத்தனை சந்தோசம்.
அப்ப நம்ம,”LKG ல ஒண்ணா ஒரே கிளாஸ் ல தான் இருந்திருப்போம்” இதை அத்தனை அவசரமாய் சொன்னான் வீரா.அவன் அத்தனை அவசரமாய் சொன்னதற்கு ஒரு காரணம் தான் இருந்தது, இன்னும் மூன்று மாதங்களில் ஷாரா பொறியியல் பட்டப்படிப்பை முடிக்கப்போகிறாள். அதே பொறியியல் படிப்பை வீரா முடிக்க இன்னும் பதினைந்து மாதங்கள் இருக்கின்றது.
அப்படின்னா? அப்படித்தான்…
“இருவரும் ஒரே பள்ளியில் ஒரு வகுப்பறையில் இருந்திருக்கின்றோமா!” என்கிற ஆச்சிர்யத்தில், அவனை அவளும் அவளை அவனும் தேடவே அந்த புகைப்படத்தை தேடினார்கள்.ஆனால்,அவர்களுக்கு அந்தப் புகைப்படம் மட்டுமே கிடைத்தது.
வீராவிற்கு ஒன்று புரிந்தது. அவனுடைய அந்த “LKG A” புகைப்படத்தில் அவள் இல்லை என்றாலும் அவளுடைய “LKG” புகைப்படத்தில் அவன் இருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று.
“நான் பார்த்தேன். நீ அது ல இல்ல டா!” என்ற ஷாராவிடம் “அது LKG ல எடுத்ததா?” என்று வீரா கேட்க
“இல்ல அது first standard ல” என்றாள்.
“நீங்க LKG ல எடுத்த போட்டோ வ தேடுங்க” என்றான் வீரா. வீரா எப்போதும் அவளை ஒருமையில் அழைத்தது இல்லை.கதை சொல்லிவந்த நானே தான் வீராவை அப்படி பேச வைத்தேன். இனி வரும் பகுதிகளில் வீரா ஷராவிடம் எப்படி பேசினானோ அப்படியே நீங்களும் படிப்பீர்கள்.
“நீங்க 90 தானே நானும் 90 தான் அப்ப இரண்டு பேரும் ஒரே கிளாஸ் ல தான் இருந்திருப்போம்”. வீராவிற்கும் தெரியும் அவள் அவனை விட மூத்தவள் என்று. ஆனாலும் அவன் அந்த சமயத்தில் அவனை ஏமாற்றிக்கொண்டது இப்படித்தான்,”இரண்டு பேரும் தொண்ணூறு தானே!”
ஆனால், அவர்கள் இருவரும் ஒரே வகுப்பில் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று வீரா நம்பியதற்கு ஒரு காரணம் மட்டுமே இருந்தது. யாரோ ஒருவரிடம் வீராவின் அம்மா சொன்ன அந்த வார்த்தைகள் “வீராவை மறுபடியும் LKG ல போடா சொல்லிட்டோம்!”
“நான் LKG first year படிச்ச போது நம்ம ஒரே class ல இருந்திருப்போம்”என்று எப்போதும் அவளிடம் பேசும் பொழுது “வாங்க! போங்க!” என்பதோடு நிறுத்திக்கொள்வான் வீரா. கல்லூரி காலத்தில் பேச தொடங்கிய பொழுது இந்த குழப்பத்திற்காகவே அவளிடம் அதிகம் ஆங்கிலத்தில் பேச தொடங்கினான்.
“English எல்லாம் பயங்கரமா இருக்கு! ” அவளை மெச்சி அவன் அனுப்பிய இந்த மெசேஜ்க்கு, “நீ தான் டா பேச ஆரம்பிச்ச நாள் ல இருந்து ரொம்ப high class English லையே மெசேஜ் பண்ற” என்று பதில் அனுப்ப வீராவிற்கு ஒரே பூரிப்பு.
“credits to Raji Miss and star movies” என்பதோடு வீரா முடித்திருக்கலாம்அதற்கடுத்து இன்னொரு மெசேஜ் ஐ அனுப்பிவைத்தான். “Bit lazy to type in tamil” என்கிற இந்த வெங்காய மெசேஜ் இல் முழுமையான உண்மை இல்லை;ஆனால்,அது பொய்யும் இல்லை. ‘நீங்கள்’ என்பதும் ‘நீ’ என்பதும் ஆங்கிலத்தில் பொதுவாக ‘you’ என்று நின்றுவிடுகிறது.
வெங்காய உரிக்க கூட இலாயக்கில்லாம இருந்தாலும் நம்மை சுற்றி இருக்கும் நான்கு பேர் நம்மை “genius” என்று அழைக்கும் பொழுது வருகின்ற போதையில் இருந்த வீராவால், அந்த வயதில் அந்த போதையில் இருந்து மீள முடியாமல் இருந்ததும் கூட High class English message களுக்கு காரணமாக இருந்தது. வீராவிற்கு குட்டிக்கரணம் அடிக்க தெரியாது. பைக் ஓட்ட தெரியாது; சண்டை போடா தெரியாது. ஆனால்,ஆசிரியர் கணக்கை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கணக்கின் விடையை கண்டு சொல்ல தெரியும். அதைப்பார்த்தவர்கள் அத்தனை பேருக்கும் வீரா ‘genius’ ஆக தெரிந்தான். அதை ஷாரா பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமைந்ததே இல்லை. ‘Genius ‘ அந்த வார்த்தை தந்த போதையில் இருந்த வீராவிற்கு, ஷாராவிற்கும் அவன் அப்படியே தெரிய வேண்டும் என்கிற ஆசை. அவனுக்கு ஷாரா தான் genius.ஷாராவிடம் இருக்கும் முயற்சியையும் perfection ஐயும் எப்போதும் மெச்சி இருக்கின்றான்.
ஆங்கில புலமைபற்றிய அவர்களின் பேச்சு தொடர்ந்து.
“உங்க அளவுக்கு எல்லாம் இங்கிலீஸ் தெரியாது. எனக்கு ஞாபகம் இருக்கு ஒரு complex வாக்கியத்தை simple ஆக மாத்தணும் எனக்கு இதை எப்படி மாத்தணும் தெரில. அப்பறம் நீங்க தான், He is director of that film ன்னு”
“எனக்கு ஞாபகம் இல்ல டா”
“இருக்காது! எனக்கு இருக்கு! எப்பவும் இருக்கும்! அந்தsentence அப்படியே சரியா சொன்னேன் தெரில”
இந்த உரையாடல் அத்தனையும் ஆங்கிலத்தில் நடந்து கொண்டு இருந்தது.
“when is your birthday?” இந்த கேள்வியை சாதாரணமான ஒரு நாளில் சாதாரணமான ஒரு நேரத்தில் உங்களிடம் யாரும் கேட்க மாட்டார்கள். அப்படி கேட்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் சாதாரணமானவராக இருக்க மாட்டீர்கள்.
எப்ப உங்க பிறந்த நாள் என்று ஷாராவிடன் கேட்க நினைத்த வீரா கேட்ட கேள்வி தான், “when is your birthday?” அவள் ஒரு தேதியை அனுப்பியிருந்தாள்.
“இந்த தேதியை நான் உங்கள் ஸ்கூல் டி.சி. யில் எல்லாம் தேடியிருக்கின்றேன். ஒருநாள் உங்க ஸ்கூல்.. அந்த டி.சி..மொத்தமா எல்லாருடையதும் … ஆனால், அது ல பிறந்த தேதி இல்லை” என்பதை ஆங்கிலத்தில் அவளுக்கு மெசேஜ் ஆக அனுப்பி வைத்தான் வீரா.
இப்படி,வீராவும் ஷாராவும் பேசிக்கொள்வதை பார்ப்பவர்களுக்கு , அது ஏதோ hints developing பயிற்சி கேள்வி போல தான் இருக்கும்.
ஷாரா : இருந்திருக்குமே டா
வீரா : இல்லை.
ஷாரா சொன்னது போன்று அவளுடைய பள்ளிமாற்று சான்றிதழில் அவள் பிறந்த தேதி இருக்கவே செய்தது.அந்த பள்ளியின் அருகில் தான் வீராவின் வீடு, தினமும் அந்த ஆசிரியர் வீராவின் அம்மாவிடம் பேசிவிட்டு செல்வது வழக்கம். அன்று காலையில் அவர் பள்ளிக்கு கிளம்பி வந்த பொழுது அவருடைய பையையும் தனியாக பெரிய ஒரு ஏடு ஒன்றையும் வீரா வீட்டில் வைத்துவிட்டு, “கோவிலுக்கு போயிட்டு வந்து எடுத்துக்கிறேன்” என்று அருகில் இருந்த கோவிலுக்கு சென்று விட்டார்.
இறைவன் செயல், அத்தனை வருடத்தில் ஒருநாளும் ஒருபோதும் அப்படி நடந்ததில்லை. “வீட்டிற்கு எதிரில் இருந்த பள்ளிக்கு தினமும் வந்து செல்லும் ஷாராவை இனிமேல் எப்படிப் பார்ப்பது? அவளும் 90 இல் பிறந்தவள் தானா?” என்கிற கேள்விகளோடு இருந்த வீராவின் கண்களில் அது பட்டது.
இறைவனே வழிகளை ஏற்படுத்திக்கொடுத்தாலும் நாம் கண்களை மூடிக்கொண்டு இருந்தாலோ பதற்றமாக இருந்தாலோ அந்த வழி நம் கண்களுக்கு தெரிவதில்லை.
“TC note.. இதுல நிச்சயமா Date of birth இருக்கும்'” வேகமாக அதை திறந்தான் வீரா, ஒரு பக்கத்தில் இரண்டு பேரின் மாற்று சான்றிதழ் இருந்தது.அவன் எத்தனை வேகமாக பக்கங்களை திருப்பினாலும் அந்த பெயர் அவனை நிறுத்திவிடும் என்பது அவனுக்கு தெரியும். அதே போல அவனை அந்த பெயர் நிறுத்தியது. அவன் கருவிழிகள் இடது புறத்தில் இருந்து வலது புறமாக நகர்ந்து அதே வேகத்தில் மேல் இருந்து கீழாக நகர்ந்தது. யாருமே அவனை கவனிக்கவில்லை என்றாலும் யாரோ அவனை கவனிப்பது போல் இருந்தது. யாரும் அவனை பார்ப்பதற்குள்ளாக; ‘அதில் என்ன பார்க்கிற?” என்று அவனை யாரும் கேட்பதற்குள்ளாக,மிக முக்கியமாக கோவிலுக்கு சென்ற ஆசிரியர் வருவதற்குள்ளாக; அவன் அதை மூடி வைக்க வேண்டும். அவளுடைய அந்த பெயர் அதையே சில நொடிகள் பார்த்துவிட்டு அவசரமாக தேடிய வீராவின் கண்களில் எந்த தேதியும் பதியவில்லை.
அந்த TC இல் அவன் பார்த்து நினைவில் வைத்திருந்ததையெல்லாம் அவளிடம் சொன்னான்.
“நீ எப்ப டா பிறந்த?” இந்த கேள்வியை ஷாரா கேட்டதில் அவனுக்கு ஒரு சந்தோசம் ஆனாலும், பதில் சொல்வதில் ஒரு தயக்கம்.
“நானும் 90 தான்” என்று முடித்துக்கொண்டவனை ஷாரா விடவில்லை.
“தேதி சொல்லு”என்றாள்.
அவள் அவளுடைய பிறந்த தேதி சொன்ன மாத்திரத்திலேயே வீராவிற்கு இத்தனை இடைவெளி இருக்கின்றதே என்கிற கவலை. அவர்கள் இருவரும் பிறந்த மாதங்களுக்கு இடையில் மூன்று மாதங்கள் இருந்தது.
“மூணு மாசம்! எங்க மூணு மாசம்! சரியா அஞ்சு மாசம்!”
“இடையில் மூணு மாசம் தான் இருக்கு”
“மூணு மாசத்துக்கு 90 நாள் ஆனா, இங்க இருக்கிறது 150 நாள்”
வீரா மனதிற்குள்ளேயே இரண்டு பேர் அடித்துக்கொண்டார்கள்.
ஷாரா குழந்தைப்பருவத்தில் சேர்ந்திருந்த அதே பள்ளியில், அதே வகுப்பில்,ஷாரா அங்கு தான் இருக்கின்றாள் என்று தெரியாமலேயே அழுது கொண்டே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான் வீரா. மூன்று வருடங்களில் வீரா வேறு பள்ளிக்கு மாறியிருந்தான். காலமும் இறைவனும் அவர்களின் வேலையை தொடங்கினார்கள். அடுத்த நான்கு வருடங்களில் ஷாராவை வீரா படித்த பள்ளியில் சேர்த்தார்கள். அது தெரியாமல், தெரிந்திருந்தாலும் கூட காலம் ஆடிய விளையாட்டில் வீரா மீண்டும் வேறு பள்ளிக்கு செல்ல. அடுத்த ஒரு வருடத்தில் வீரா ஹிந்தி படிக்கச் சென்ற இடத்திற்கு ஷாராவை அனுப்பிவைக்கிறார் கடவுள் .
இப்படி,வீரா இந்த உலகத்திற்கு வருவதற்கு முன்னதாகவே ஷாராவை அனுப்பி வைத்த இறைவன்;பள்ளியில் வீராவை வரவேற்பதற்காக அங்கே ஷாராவை வைத்திருந்த இறைவன்; வீரா செல்லும் இடங்களுக்கெல்லாம் ஷாராவை அனுப்பி வைத்த இறைவன், ஷாராவை வீரா கவனிக்க தொடங்கிய பின், ஷாராவை வீரா தேட தொடங்கிய பின் அவளை அவன் பாதையில் தூரமாக கொண்டு செல்லத் தொடங்கினார். அனாலும், காலமும் இறைவனும் அதையும் முழுமையாக செய்துவிடவில்லை.ஷாரா பற்றிய செய்திகள் எப்போதும் வீராவின் காதுகளை எட்டிவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார் இறைவன்.வீரா கேட்காமலேயே அவளைப்பற்றிய செய்திகள் அவன் காதுகளை எட்டியது. அவள் எந்த ஊர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள் என்பதை தெரிந்துகொண்டிருந்தான்.ஆனால், அதே ஊரில் படிக்க வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. அந்த ஊரில் உள்ள கல்லூரிகளின் பெயர்களை அலசினான். பெண்களுக்கான கல்லூரி ஒன்று இருந்தது, அங்கு தான் சேர்த்திருப்பார்கள் என்று தீர்மானித்துக்கொண்டான்.அதன் காரணமாக அவன் நம்பிக்கை இழந்து அதே ஊரில் படிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
ஆனாலும் அவன் அதோடு விடவில்லை. இறைவனும் அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. ஸ்ரீ மூலம் அவர்களை மீண்டும் பேச வைக்கிறார். முன்பு இருந்ததை விட அவர்களின் நட்பை கொஞ்சம் வளரச் செய்கிறார். அதைத்தான் கதையின் ஆரம்பத்தில் படித்தீர்கள்.இதுவரைக்கும் அதைத்தான் படித்தீர்கள்.
இதற்கு பிறகு காலமும் கடவுளும் இவர்களை என்ன செய்தது.இந்த மூன்று மாத இடைவெளியை ஷாரா எப்படி எடுத்துக்கொண்டாள்?
இந்த காதல் இங்கேயே முடிந்துவிட்டதா? இனி எப்படி தொடரும்.
இருவரில் ஒருவரேனும் மனதில் இருப்பதை பேசினார்களா ? தொடர்ந்து படியுங்கள் மக்களே!