2011 மார்ச்-3ம் தேதி,இரவு ஒன்பது மணி.
அந்த ரயில் நிலையத்தின், அந்த நடைமேடையில் அவர்கள் ஐந்து பேர் மட்டுமே இருந்தார்கள். அந்த ஐந்து பேரில் ஒருவன் மட்டும் எப்போதும் போல், முழுக்கை சட்டை அணிந்து கொண்டு அந்த இரண்டு புருவங்களை இணைத்து திருநீறு இட்டு, எப்போதும் ஏந்திக்கொண்டிருக்கும் அந்த பெரும் புன்னையோடு இருந்தான். அது நம்முடைய வீராவே தான்.
அந்த நேரத்தில், அந்த நடைமேடையின் அண்டையில் ஒரு ரயில் நின்றுகொண்டிருந்தது. அந்த ரயில் கிளம்புவதற்கு இன்னும் நேரமிருந்தது. வீரா செல்வாவின் தோள் மீது தன் இடது கையை போட்ட படி நிற்க அவனுக்கு வலது புறத்தில் சரவணன் நிற்க இவர்கள் மூவருக்கும் முன்னாள் விமல் நின்றுகொண்டிருந்ததை, தன்னுடைய xpress மியூசிக் மொபைலில் படம் பிடித்துக்கொண்டிருந்தான் சுதாகர்.
அவர்கள் அந்த ரயில் பெட்டியில் ஏறுவதும் இறங்குவதும் படிப்பிடிப்பதுமாகவே இருந்தார்கள். அந்த மொத்த ரயிலிலும் அன்று இரவில் பயணிக்க இருந்தது ஒரு பத்து பேர் தான், அதில் இவர்கள் இடம்பிடித்துக்கொண்ட அந்த பெட்டியில் இவர்களைத் தவிர யாருமே இல்லை.
அன்று அவர்கள் பிடித்த அத்தனை படங்களிலும் வீராவின் முகத்தில் அத்தனை ஒளி இருந்தது. அங்கு ஒளிர்ந்த அத்தனை மின் ஒளியும் அவன் மீது பட்டு ஒட்டி தன்னை ஒப்பிட்டுக்கொண்டு திரும்ப அந்த பிரதிபலிப்பில் அவன் இன்னும் ஒளிர்ந்தான்.
விமல் போனில் இருந்து வீரா அனுப்பிய,”Halo” மெசேஜ் க்கு ஷாராவிடம் இருந்து பதில் வந்தது.
“phone ல காசு இருக்கு ல டா?” சத்தமாகவும் சந்தோஷமாகவும் ரயில் பெட்டிக்கு உள்ளே இருந்து வீரா கேட்க நடைமேடையில் இருந்து ஜன்னல் வழியே வீராவைப் பார்த்து “ஆன்” என்று சத்தம் கொடுத்தான் விமல்.
“இப்ப தான் college ல இருந்து வந்தீங்களா” என்ற போது வீராவிடம் இருந்து கொட்டி வழிந்த புன்னகைகள் தண்டவாளத்தில் உருண்டோடி ஷாராவைச் சேர்ந்திருக்கும்.வீரவால் சிரிக்காமல் ஷாராவிடம் பேச முடிவதேயில்லை.
இந்த சிரிப்பு அவனை அவளிடம் காட்டிக்கொடுத்துவிடுமோ என்கிற அச்சமும் தயக்கமும் எப்போதும் வீராவிற்கு இருந்திருக்கிறது.அது இப்போதும் இருந்து கொண்டு இருந்தது.
“என்ன ஊருக்கு! நாளைக்கு வெள்ளிக்கிழமை என்ன லீவு?” ஷாரா கேட்டாள்.
“நாளைக்கு sports day இருந்து ஒன்னும் பண்ணப் போறதில்லை எல்லாம் ஊருக்கு போலாம் ன்னு ஒரு நாள் அங்க ஒரு நாள் friend ஊருக்கு பரமக்குடி பக்கம்”அந்த ரயில் பெட்டிக்குள் நடந்தபடியே பேசிக்கொண்டிருந்தான் வீரா.
அவர்களுடைய பேச்சின் இடையில் வீரா அவளின் அண்ணன் பற்றி கேட்க,அவள்,”வேலைக்கு கிளம்பிட்டு இருக்கான். பேசுறீயா?” என்றதும் வீராவிற்கு கொஞ்சம் பயம்.
சாதாரணமாகவே ஷாராவிடம் பேசும் பொழுது வீரா சாதாரணமாக இருப்பதில்லை. ஷாராவின் அண்ணனும் வீராவும் முன்னமே நட்பு கொண்டவர்கள் என்றாலும் கூட அவன் ஒரு நாளும் ஷாராவிடம் பேச முயற்சித்தது போன்று அவள் அண்ணனிடம் பேச முயற்சித்ததில்லை.இப்போது அவளிடம் சாதாரணமாக பேசிக்கொண்டிருப்பதாகவே ஷாரா நினைக்க வேண்டும் என்கிற எண்ணத்திலேயே வீராவால் இயல்பாக இருக்க முடியவில்லை. இப்போது அவள் அண்ணனுக்கும் எந்த சந்தேக எண்ணங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்கிற எண்ணங்களால், உள்ளே படபடப்பும் வெளியே அதை மறைக்கும் புன்னைகையுமாய், “கொடுங்க பேசுவோம் அவருக்கு ஒரு குட் மார்னிங் சொல்லுவோம்” என்றான் வீரா.
போனை அவள் காதில் வைத்துக்கொண்டு சத்தமாய் அவள் அண்ணன் பேர் சொல்லி அழைத்தாள் அந்தச் சத்தம் மறுமுனையில் இருந்த வீராவின் காது துளைகள் வழியே சென்று மூளையின் இடுக்குகளிலெல்லாம் பரவி அவனை பரவசமாக்கியது. ஷாராவும் வீராவும் பேசிக்கொள்ளும் தருணங்களில், போனை வைத்துக்கொண்டே அவள் அருகில் உள்ள மற்றவர்களிடம் பேசுவதை நாள் முழுதும் கேட்டுக்கொண்டிருக்க சொன்னாலும் வீரா கேட்டுக்கொண்டிருப்பான். ஷாராவின் குரல் வீராவின் மூளை இடுக்குகளில் பரவிக்கொண்டிருந்த போதே, “என்ன வீரா ண்ணே எப்படி இருக்கீங்க!” என்று கொஞ்சம் நக்கலாக ஷாராவின் அண்ணன் குரல் அங்கே பதிய பறந்து கொண்டிருந்த வீரா கொஞ்சம் கீழ் இறங்கி வந்து, “நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க” என்றான்.
“எங்கள்ட்ட எல்லாம் பேச மாட்ற அதுக்கும் மட்டும் அடிக்கடி போன் பேசுவ போல ” வீரா ண்ணே என்று விளையாட்டாய் ஒலித்த அதே நக்கல் தொனியில் இந்த கேள்வியும் வந்துவிடுமோ என்கிற அச்சம் உள்ளூர இருந்தாலும் வீரா அதைகாட்டிக்கொள்ளவில்லை.
ஷாராவின் அண்ணன் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்த அவசரத்தில், அதிகம் பேசவில்லை. போனை மீண்டும் ஷாராவிடம் கொடுத்து விட்டு நகர்ந்த பிறகு “சொல்லு” என்று ஷாராவின் குரல் ஒலிக்க வேக வேகமாய் துடித்துக்கொண்டிருந்த வீராவின் இதயம் கொஞ்சம் வேகமாய் துடித்தது. அப்போதும் மிக சாதாரணமாகவே இருப்பது போல், “உங்க அண்ணனுக்கு குட் மார்னிங் சொல்ல மறந்துட்டேன் நான் சொன்னேன்னு ஒரு குட் மார்னிங் சொல்லிடுங்க நாளைக்கு பேசுவோம்” என்றான் வீரா.
“ஏன் குட் மார்னிங் ன்னு கேட்கல” வீரா இன்னும் இயல்புக்கு நிலைக்கு திருப்பியிருக்காததால் குழந்தை போல இந்த கேள்வியை கேட்டான்.
“அவன் பகல் ல தூங்கி night ல வேலைக்கு போறதால தான? ” மிக சாதாரணமாக சொன்னாள் ஷாரா. இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் இருந்த வீரா, “சரி! நான் விமல் ட்ட போனை கொடுக்கிறேன் நாளைக்கு ஊருக்கு வந்துட்டு அம்மா நம்பர் ல இருந்து பேசுறேன்” என்று முடித்தான் வீரா.
பெண்ணின் மனது பெண்களுக்கு தெரியுமோ தெரியாதோ; ஆண்களின் புத்தி ஆண்களுக்கு கொஞ்சேமெனும் தெரிந்துவிடும்.வீராவின் கவலை, எந்த சிக்கல்களும் பிரச்சனைகளும் ஷாரா அவனிடம் நட்பு பழுகுவதை தடுத்துவிட கூடாது என்பது. ஷாராவிடம் கூட ஷாராவை அவனுக்கு அத்தனை பிடிக்கும் என்பதை அவன் சொல்லாமலேயே இருப்பதற்கும் அதுவே தான் காரணம்.
அவளிடம் பேசிய இந்த கொஞ்ச நேரத்தில் ஆயிரம் படபடப்புகள் இருந்தாலும் அத்தனையும் மீறி அத்தனை சந்தோசமாய் இருந்தான் வீரா . அது அன்று அவர்கள் பிடித்த அத்தனை புகைப்படங்களிலும் பிரதிபலித்தது. அவளிடம் பேசியதற்காக மட்டும் அவன் மகிழ்ந்திருக்கவில்லை. இன்னும் 3 நாட்கள் பேசிக்கொண்டே தான் இருக்க போகிறோம் என்கிற மிதப்பில் மகிழ்ந்து இருந்தான்.
அந்த இரயில் கிளம்பியது, அந்த பெட்டி முழுதும் வெறுமையாய் இருந்தும் வீரா கதவின் அருகே நின்றுக்கொண்டிருந்தான். ரயிலை விடவும் வேகமாக அவன் மனம் ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.அந்த ரயில் வீராவின் ஊருக்கு பக்கமாக வந்துவிட்டது.
“அவள் தூங்கியிருப்பாள்” வாசலில் நின்றுகொண்டிருந்த வீராவிடம் வீராவின் மனம் சொல்லிக்கொண்டிருந்த பொழுதே ஊர் எல்லைக்குள் அந்த ரயில் வந்துவிட்டது. அந்த பாலத்தை கடந்துவிட்டால் அவர்கள் இறங்கப் போகும் ஊரின் ரயில் சந்திப்பு வந்துவிடும்.
அந்த பாலத்தை ரயில் கடந்துகொண்டிருந்த பொழுது,”இந்த பக்கம் இருக்க area ல தான் அவங்க வீடு; ஆனா இன்னும் கொஞ்சம் தூரம் போனும்” செல்வாவிடம் வீரா சொன்னான்.
வீராவின் மனம் இங்கிருந்து கொஞ்ச தொலைவில் இருக்கும் ஏதோ ஒரு வீட்டில் தான் அவள் உறங்கிக்கொண்டிருப்பாள் என்றது. பாலம் முடியப்போகிறது. அவன் பார்வை அந்த திசையை விட்டு மாறவில்லை. அவன் கண்களும் இமைக்கவில்லை. காலையில் அவள் கல்லூரிக்கு கிளம்பிவிடுவாள் என்கிற ஞாபகம், அவளிடம் பேச மாலை வரை காத்திருக்க வேண்டும் என்கிற ஏக்கத்தை வீராவிற்கு கொடுத்தது.
அவர்கள் ஐவரும் வீராவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
காலையில் மீனாட்சி அம்மனிடம் இருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள்.செல்வா இயேசு இல்லாத கோவில்களுக்குள் செல்வதை விரும்புவதேயில்லை. வீராவிற்கு கையெடுத்து கும்பிட்டு எல்லாம் கடவுளை வணங்கும் வழக்கமெல்லாம் இல்லை. விமலுக்கு எல்லா கோவிலும் ஒன்று அங்கே போவது போகாமல் இருப்பது எல்லாமே ஒன்னு. ஆனாலும், வீரா நண்பர்களை கூட்டி வந்து ஊர் சுற்ற ஆரம்பிக்கும் போதெல்லாம், மீனாட்சியிடம் இருந்து ஆரம்பிப்பது தான் அவன் வழக்கம்.
அங்கு ஆரம்பித்த அவர்கள் ஊரில் பாதியை நடந்தே சுற்றினார்கள். பிற்பகலின் பிற்பகுதியில் அவர்கள் அந்த சிறுவர் பூங்காவை அடைந்து இருந்தார்கள்.வீரா, சிறு வயதில் பார்த்த அந்த பூங்காவில் இப்போதெல்லாம் குழந்தைகளோடு குடும்பங்கள் அதிகம் வருவதை விட காதலர்களே அதிகம் வந்திருப்பதை கவனித்தான்.
வெயில் மங்க தொடங்கியிருந்தது. அத்தனை நேரமும் நண்பர்களுடன் இருந்தாலும் இந்த மாலை நேரத்திற்காக காத்திருந்த வீரா கொஞ்ச இருள் சூழத் தொடங்கியதும். தன் கால் சட்டை பையில் இருந்த போனை எடுத்துப் பார்த்தான்.மணி இன்னும் ஆகவில்லை. அவள் இன்னும் கல்லூரியில் இருந்து வந்திருக்க மாட்டாள் என்று மீண்டும் போனை உள்ளே வைத்துவிட்டு, “சுதாகர்!இங்க நிக்கிறேன் என்னை இப்படி ஒரு போட்டோ எடு” என்றான் வீரா.
அவர்கள் அங்கிருந்து அருகில் இருந்த வேறு ஒரு பூங்காவிற்கு சென்றார்கள். அந்த பூங்கா சிறுவர்களுக்கானது இல்லை. அது காதலர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது போல் இருந்தது.
மரக்குடையின் கீழ்,மூன்று பேர் உட்கார இறுக்கமாக; இரண்டு பேர் உட்கார தாராளமாக இடம் இருக்கும் அளவில் நாற்காலி பலகைகள். பஞ்சு மெத்தைகளில் இல்லாத சுகம் தரும் புல் படர்ந்த வெளி என்று அந்த பூங்கா காதலர்களுக்கானதாகவே இருந்தது.
பூங்காவை சுற்றி நான்கைந்து புகைப்படங்களை பிடித்துக்கொண்ட ஐவரும், காலையில் இருந்து ஊர் சுற்றிய களைப்பில், புல் வெளியில் படுத்துக்கொண்டார்கள்.
மேலே வானம்; கீழே புல் வெளி ;நடுவில் வீரா. படர்ந்த புல் வெளி மேல் , கால்களை நீட்டிய படி, நட்சத்திரங்களை எண்ணாமல் பார்த்தபடி, படுத்துக்கிடந்தான். அவன் நெஞ்சுக்குமேலே அவன் கைகள் இருந்தது, அந்த கைகளுக்குள் மொபைல் இருந்தது அந்த மொபைலில் ஷாரா வின் மெசேஜ் இருந்தது. ஷாரா எப்போதும் போல் அவள் வீட்டில் இருந்தாலும் வீராவின் நெஞ்சுக்குள் பத்திரமாக இருந்தாள்.
“இங்க வந்து இருக்கீங்களா! செமையா இருக்கு” அவர்கள் மெசேஜ் வாயிலாக பேசிக்கொண்டிருந்த போது வீரா கேட்டான்.
“இல்ல டா ” என்று பதில் வருவதற்குள் அடுத்த மெசேஜை தட்டி முடித்திருந்தான் வீரா.
“மேல stars கீழ புல் வெளி இப்படி இடத்தில யார் கூடவாவது வந்தா நல்லா இருக்கும் நான் என் friends ஓட சுத்திட்டு இருக்கேன்” வீராவின் இந்த மெசேஜ் படித்த வேகத்தில் ஷாரா பதிலனுப்பினாள்.
“நீ சொல்றதெல்லாம் பார்த்தா யாரையோ லவ் பண்ற மாதிரி தெரியுதே”
வெட்கத்தில் நெளிந்த வீராவின் உதடுகளில் நட்சத்திரங்கள் மின்னியது, வானம் அவன் கண்களுக்கு பக்கமாக வந்து மோதாமல் திரும்பியது.வேகமாக பதிலனுப்பிய ஷாராவின் இந்த மெசேஜ் க்கு வீராவால் பதில் சொல்ல முடியவில்லை.ஒரு பக்கம் வானம் அவனை மோதிக்கொண்டிருக்க, மறுபக்கம் வெட்கத்தில் அவன் அந்த புல் வெளி அழுந்த தன்னை வானத்திடம் இருந்து தூரமாக்கி கொண்டிருந்தான்.
“என்ன வீரா ஒரே புன்முறுவலா” இருக்கு சுதாகர் நக்கலாக வீராவை கேட்க, உதடுகளை பிரிக்காமல் அந்த உதடுகளை சேர்த்து வைத்திருக்கவும் முடியாமல்,”திரும்பிக்கொண்டு வீரா பெரும் மூச்சு விட
“அவங்க அவங்க மெசேஜ் அனுப்பிருப்பாங்க” என்றான் செல்வா
“அது தான் அப்ப இருந்து மெசேஜ் பண்ணிகிட்டே தான வாரான்”என்றான் சரவணன்.
“முக்கியமானவங்க என்ன மெசேஜ் அனுப்பினாங்க தம்பு” விமல் பங்குக்கு அவன் ஒரு பக்கம் .
ஒரு கையில் போன், ஒரு பக்கம் தன்னை மோதிக்கொண்டிருக்கும் வானம்,எல்லா பக்கமும் நண்பர்கள், வீராவின் முகத்தில் வழிந்து கொண்டிருந்த வெட்கம் வடியும் திசை அறியாமல் தவித்து அவன் முகத்திலேயே தேங்கி கிடக்க,”அப்படியா தெரியுது?” என்று கேட்டு மெசேஜ் அனுப்பினான் வீரா.
“ஆமா இங்க வரைக்கும் தெரியுது” வெட்கம் கரைந்த மகிழ்ச்சியில் பெரும் மூச்சு விட்டுக்கொண்டிருந்த வீரா இந்த மெசேஜ் பார்த்த நொடியில் மூழ்கியே விட்டான்.
“அப்படி எல்லாம் இல்லையே இங்க இருக்க எனக்கு தெரில” ஷாராவிடம் அவனால் உண்மையும் சொல்ல முடியவில்லை, பொய்யும் சொல்ல முடியவில்லை. யாரையோ என்ன யாரையோ உன்னைத்தான் என்று தெரியவில்லையா என்று கேட்க சொல்லி அவன் மனதின் ஒரு ஓரமாய் மெல்லிதாய் ஒரு குரல் கேட்டிருக்கும். அவளும் கூட அவனே சொல்ல வேண்டும் என்று இதை கேட்டிருக்கக்கூடும். தம்பு என்று சீண்டியதும் அவன் வேகமாக அவளை அழைத்து அப்படி அழைக்கவேண்டாம் என்று பதறிய போதுசிரித்துக்கொண்டே அவனை சீண்டிய ஷாராவுக்கு முன்னேமே வீராவின் மனம் தெரிந்து கூட இருக்கும்.அவன் மறுக்க வேண்டும் என்பதற்காகவே அவள் தம்பு என்று சீண்டியிருக்க கூடும். இது எதுவுமே இல்லாமலும் கூட இருக்கலாம்.
“என்ன தான் டா அனுப்பினாங்க ! இவ்வளவு சிரிப்பா இருக்கு; ஒரே வெட்கமா இருக்கு!” செல்வா கேட்டான்.
“நீ சொல்றதெல்லாம் பார்த்தா யாரையோ லவ் பண்ற மாதிரி தெரியுதே”வீரா காண்பித்த இந்த மெசேஜை செல்வா படித்து முடிக்கும் பொழுதே அவன் உதட்டின் ஓரத்திலும் ஒரு புன்னகை அந்த புன்னகை மாறாமல் செல்வா கேட்டான் ,”நீ என்ன அனுப்பின?”
“அப்படி லாம் இல்ல ன்னு அனுப்பினேன்” செல்வாவின் முகம் பார்க்காமல் இந்த பதிலை சொன்னபடி எழுந்தான் வீரா.
அன்றைய தினம் முழுதும் நடந்தே அவர்கள் ஊர் சுற்றியிருந்தார்கள். ஆனால், அந்த சோர்வு எதுவும் வீராவிடம் இருக்க போவதில்லை. இன்னும் அவனை நடக்கச் சொன்னாலும் நடப்பான்.அவனுடைய மொத்த நாளையும் அவன் மகிழ்ச்சியோடு கடக்க ஷாராவிடம் இருந்து வரும் ஒத்த மெசேஜ் போதுமானதாக இருந்து விடுகிறது.அவளிடம் இருந்து வரும் சாதாரணமான மெசேஜ் களே அவன் சோர்வை நீக்கி அவனை பரவசப்படுத்தும் பொழுது. இப்போது அவர்கள் பேசிக்கொண்டதை பற்றி விளக்கி சொல்லவேண்டியதில்லை.
நாளை சனிக்கிழமை ஷாராவுக்கு விடுமுறை. அவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டார்களா? நாள் முழுதும் பேசிக்கொண்டே கழித்தார்களா? இன்னும் இருக்கும் வீராவின் இந்த விடுமுறை எப்படி கழிந்தது?
தொடர்ந்து படியுங்கள்.