வருஷம் 2013. டிசம்பர் மாதம்.
“வீரா சாரை பார்க்கணும்” ஒரு மாணவனின் அம்மா கேட்டதும்;
“இயந்திர ஆய்வகத்துக்கு போய் பாருங்க”என்று எப்போதும் தமிழில் மட்டுமே பேச வேண்டுமென்று சபதம் மேற்கொண்டிருக்கும் அலுவலக பணியாளர் சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது;
“எலக்ட்ரிகல் department ல வந்து இருக்க புது சார் ஆ?” என்று அங்கிருந்த மற்றொரு பணியாளர் கேட்கவும் தலையாட்டினான் பிரதீப்.
“அம்மா வ machines lab கூட்டிட்டு போ தம்பி ” என்றார் அவர்.
கல்லூரி வாளகத்திற்குள் தனித்தீவு போல இருக்கும் நீண்ட பெரிய கூடாரம் அது. உள்ளே நுழைந்து பத்தடி தூரம் போனால், அங்கு ஒரு மேசையும் நாற்காலியும் இருக்கும்.அந்த நாற்காலியில் ஒரு இன்ச் இடம் கூட விட்டுவைக்காமல் அத்தனையும் தானே ஆக்கிரமித்து தான் வீரா சார் எப்போதும் உட்காருவார்.
அந்த பெரிய கூடாரத்தில் தான் machines லேப் இயங்கி வந்தது. அந்த கல்லூரிக்கு வீரா சார் புதுவரவு என்பதாலும் வீரா சார் நம்மைப்போன்று எல்லோரிடமும் பேசுவபவராக இருப்பதில்லை என்று நினைத்துக்கொண்டும், அவருக்கு அங்கே இடம் ஒதுக்கியிருந்தார்கள்.
அதே கல்லூரியில் டிப்ளமோ பயின்றுவிட்டு லேப் அட்டெண்டடராக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த கார்த்தி ஒரு வாரமாக வேலைக்கு வரவில்லை. வீரா சாருக்கு வேலைகளில் ஒத்தாசையாகவும் பேச்சு துணைக்கும் இருந்தது கார்த்தி தான். அங்கு பணிபுரியும் எல்லோரும் வீராவிடம் பேசுவார்கள் என்றாலும். வீரா சாருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்த தனித்தீவு அவரை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி வைத்து இருந்தது.
அந்த தனித்தீவில், இப்போது கார்த்தியும் இல்லை. வீரா மட்டும் தனியாக தேர்வுத்தாள்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்த போது, “தனியா என்ன பண்ணிட்டு இருக்க வீரா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்த கவிதாவிடம் , “பேப்பர் கரெக்ஷன் Mam” என்று பதிலளித்துவிட்டு வீரா வேலையை தொடர்ந்தான்.
“எல்லாம் கிளாஸ்க்கு போய்ட்டாங்க அங்கையும் சும்மா தான் இருந்தேன்; அதான் நீ என்ன பண்ணிட்டு இருக்க உனக்கு help பண்ணலாம் ன்னு வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே வீரா பக்கத்தில் இருந்த நாற்காலியை அவன் மேசைக்கு எதிர்புறம் எடுத்து போட்டு அதில் சம்மணமிட்டு உட்கார்ந்தாள் கவிதா.
கவிதா அதே கல்லூரியில் பணிபுரியும் மற்றொரு லேப் அட்டெண்டர். கல்லூரி கலாச்சாரம், வீராவை விட வயதில் மூத்தவர்களும் கூட வீராவை சார் என்றே அழைத்தார்கள். கவிதாவின் கலாச்சாரம் எல்லோரிடமும் இயல்பாக பழகி வயது வித்தியாசம் இல்லாமல் அவர்களை பேர் சொல்லி உரிமையாக அழைப்பது.
“கொடு வீரா! நான் டோட்டல் பண்ணறேன்” என்று வீரா திருத்திக்கொண்டிருந்த தேர்வுத்தாள்களை வாங்கி மொத்த மதிப்பெண்களை போட்டுக்கொண்டிருந்தாள் கவிதா.
“நீ ரொம்ப சீரியஸ் அ வேலை பாக்கிற எனக்கு போர் அடிக்கும், சரி! அந்த பொண்ணு பேர் மட்டும் சொல்லு” என்று பேச்சை தொடங்கினாள் கவிதா
“எந்த பொண்ணு MAM?” அத்தனை நேரம் வேலையில் மட்டுமே கவனமாகவும் இறுக்கமாகவும் இருந்த வீராவின் முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை எட்டிப்பார்த்தது.
“இவ்வளவு நேரம் சீரியஸ் அ இருந்த மூஞ்சி ல என்ன ராஜா அது!” வீராவை நக்கலடித்துவிட்டு
“அது தான் அந்த கண்ணாடியின் காதல்” என்று கவிதா சொல்வதற்கு முன்னமே வீராவிற்கு கவிதா யாரைப்பற்றி கேட்கிறாள் என்று தெரியாமல் இல்லை.
“பேர் மட்டும் கேட்காதீங்க MAM! பாட்டெல்லாம் எழுதி வச்சுருக்காய்ங்க” என்று மாணவர்களின் தேர்வுத்தாளை கண்டு சிரிப்பது போல் காட்டிக்கொண்டான் வீரா.
“பேர் ல என்ன தான் இருக்கு! பேர் சொல்றது ல என்ன?”கவிதா பொய் கோபத்துடன் கேட்டதற்கு,
“நமக்கு தான் அவங்கள பிடிக்கும்! அவங்க சும்மா தான் நம்மகிட்ட பேசினாங்க. அவங்கள பிடிக்கும்னு அவங்க பேரை சொன்னா கரெக்ட்டா இருக்காது” ஒரே அந்த பல்லவியை பாடினான் வீரா.
“யோவ்!எனக்கு யாருன்னே தெரியாது.நான் போய் யார்ட்ட என்னன்னு சொல்லப்போறேன்? பேர் சொன்னாலும் என்ன நடக்கபோகுது!” கொஞ்சம் கொஞ்சும் கோபத்துடனும் சலிப்புடனும் கவிதா கேட்டாள்.
“சரி ஒரு புதிர்! அதுக்கு விடை கண்டுபிடிசீங்கன்னா அது தான் அவங்க பேர்” என்று முடிப்பதற்குள்
“வேணாம் சாமி!என்கிட்ட ஏற்கனவே அந்த கேள்வியை கேட்டு நான் அதுக்கு பதில் தேடி இன்னும் கண்டுபிடிக்கலை நீ பேரே சொல்ல வேணாம்” என்று சிரித்துக்கொண்டே கையெடுத்து கும்பிட்டாள் கவிதா.
“அது என்னது அது? நாளின் கடைசி வெளிச்சத்துக்கு எது opposite? அதுக்கு என்னென்ன பேர் இருக்கோ அதுல ஒன்னு அந்த பேர் ல பாதி.. இந்த கேள்வியை வேற யாருகிட்டயும் கேட்டுறாத” மீண்டும் நக்கலடித்தாள் கவிதா .
“சரி வீரா! அதை விட்டுடுவோம் நான் ஒரு situation சொல்றேன். அந்த கண்ணாடியின் காதல் கவிதை மாதிரி ஒரு நல்ல கவிதை எழுதித்தா!” கொஞ்சம் வெட்கபட்டுக்கொண்டே கேட்ட கவிதாவிடம் “நான் அப்படியெல்லாம் எழுதினது இல்ல Mam” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் வீராவின் கவனம் வேலையில் தீவிரமானது.
“ஐயோ!இந்த பேப்பர் ல எவ்வளவு டோட்டல் எண்ணினேன் மறந்து போச்சு” என்ற கவிதாவிடம் இருந்து பேப்பரை வாங்கிக்கொண்டு “நானே பாத்துக்கிறேன் கொடுங்க” என்று வீரா அந்த தேர்வுத்தாளை வாங்கிக்கொண்டான்.
“சரி! situation கேட்டுட்டு நீ சொல்லு உடனே கூட எழுதி தர வேணாம்” என்று மீண்டும் கவிதா கேட்டதும் தலையசைத்து சம்மதம் சொன்னான் வீரா.
“நமக்கு ரொம்ப பிடிச்சவங்க” என்று கவிதா தொடங்கியதும் வீராவின் எண்ணம் ஷாராவிடம் போனது.
“நம்மள்ட்ட பேசிட்டு இருந்துட்டு தீடீர்னு பேசாம போய்டுறாங்க. ஏன் பேசலை ன்னு தெரியல” என்று கவிதா சொல்லிக்கொண்டிருந்த பொழுதே
கையில் வைத்திருந்த அந்த சிவப்பு பேனாவை எடுத்து பக்கத்தில் இருந்த வெற்றுக் காகிதத்தில் மனதில் தோன்றியதை சொல்லிக்கொண்டே எழுத ஆரம்பித்தான் வீரா,
அவள் பேசவும் செய்கிறாள்!
இருந்தும் ஏனோ பேசாமல் இருக்கிறாள்
அவள் பேசியும் இருக்கிறாள்
இருந்தும் ஏனோ பேசாமல் இருக்கிறாள்
என்று வீரா முதல் வரியை சொன்னதுமே கவிதா குதூகலம் அடைந்து “வீரா செம…அவள் பேசவும் செய்கிறாள்……. என்கிட்ட பேசலை அவள் பேச மாட்டா ன்னு பாத்தா அவ பேசுறா ஆனா என்கிட்ட பேசலை! இந்த மண்டைக்குள்ள என்னய்யா வச்சிருக்க? இதுல அவள் ன்னு இருக்கிறதை நான் அவன் ன்னு மாத்திக்கிறேன், கோழி கிறுக்கிற மாதிரி கிறுக்காம பேப்பர் அ கொடு நான் எழுதறேன்” என்று கவிதா பேப்பரை கேட்டதற்கு வீரா கொடுக்கவில்லை.
“நானே எழுதறேன்” என்ற வீராவின் எண்ணங்கள் பின்னோக்கி சுழன்றது.
அக்டோபர் 29ம் தேதி சனிக்கிழமை 2011ம் வருஷம்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ப்ரெஸ்னன் கையில் பந்து இருந்தது. அந்த மாலை ஆறரை மணிக்கு போட்டி தொடங்கியிருந்தது.
காலையில் இருந்து ஷாராவிற்கு மெசேஜ் அனுப்பிய வீராவிற்கு ஷாராவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சில மாதங்களாக அவள் வீராவிடம் பேசவே இல்லை.மாலை ஒரு ஐந்து மணிக்கு, மீண்டும் ஒரு “குட் ஈவினிங்” அனுப்பிவிட்டு காத்துக்கொண்டிருந்தான் வீரா. எந்த பதிலும் இல்லை, ஆறு மணிக்கு ஒரு,’Hi’ அனுப்பினான். ஆறரை மணி வரை ஒரு பதிலும் இல்லை.
அவளிடம் இருந்து பதில் வந்ததும் அவளை அழைத்து இப்போதெல்லாம் ஏன் பேசுவதில்லை ? என்று கேட்க வேண்டும் என்று சில மாதங்களாகவே காத்துக்கொண்டிருந்தான் வீரா. போட்டி ஆரம்பித்ததும் நாற்காலியை தொலைக்காட்சி முன் எடுத்து போட்டு, அதுவரை அந்த நாள் முழுதும் கையில் வைத்துக்கொண்டிருந்த மொபைலை நாற்காலியின் கால்களுக்கு பக்கத்தில் வைத்து போட்டியை காண தயாரானான். இடையிடையில் ஷாராவின் இருந்து மெசேஜ் வந்திருக்கின்றதா என்று பார்த்துக்கொண்டான்.
ஷாராவிற்கு என்ன ஆனது. நாம் என்ன தவறு செய்தோம். ஏன் ஷாரா நம்மிடம் பேசுவதில்லை என்று வீராவிடம் ஆயிரம் கேள்விகள்.இந்த கேள்விகள் எல்லாம் வீராவின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தால் அவன் முழுமையாக அந்த போட்டியையும் கவனிக்கவில்லை.
இந்த கேள்விகளில் மூழ்கியிருந்த வீரா கொஞ்சம் நினைவிற்கு வந்த பொழுது தான்,இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ப்ரெஸ்னன் கையில் பந்து இருந்தது.fielding செட் செய்துகொண்டிருந்தார்கள்.மனதில் இருந்த எண்ணங்கள் தந்த சோர்வுடன் வீரா மொபைலை கையில் எடுத்தான். “1 unread message” என்று இருந்தது. வேகமாக திறந்தான்.அது ஷாரா அனுப்பியிருந்த மெசேஜ் தான்.
அவளும் ‘hi’ அனுப்பியிருந்தாள், மணியை பார்த்தான், மணி ஏழு இருபத்தைந்து , ஏழு மணிக்கெல்லாம் அவள் அந்த Hi அனுப்பியிருந்தாள்.
“sorry just checked the phone, just saw your message”
“Had I seen your message,I would have replied immediately”
“how are you”
“ஏன் பேசலை தூங்கிட்டீங்களா”
“நாளைக்கு பேசுவீங்களா ”
“sorry again”
பதற்றத்துடனும் மகிழ்ச்சியுடனும் அடுத்தடுத்து வரிசையாக வீரா மெசேஜ் செய்தான். ஷாரா கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.
என்ன தான் ஆச்சு? ஏன் ஷாரா வீராவிடம் பேசுவதில்லை? வீராவிற்கும் தெரியாது.
2011 ஆகஸ்ட் மாதம். தொடர்ந்து ஐந்து நாள் விடுமுறை. ஐந்து நாள் ஷாராவிடம் பேசலாம் என்று ஆவலோடு ஊருக்கு கிளம்பினான் வீரா. ஷாரா வேலைக்குச் செல்ல ஆரம்பித்து சில மாதங்கள் ஆகியிருந்தது.
வெள்ளிக்கிழமை மாலை அவள் வேலை விட்டு வீடு திரும்பும் நேரத்திற்காக காத்திருந்தான் வீரா.
வீடு திரும்பிய ஷாரா ,வீராவிடம் அதிகம் பேசவில்லை, “வேலை கிடைச்சா கோவிலுக்கெல்லாம் போகனும்ன்னு அம்மா வேண்டிக்கிட்டாங்க அதனால இந்த லீவு ல நிறைய கோவிலுக்கு போறோம்” என்று ஷாரா சொன்னதை கேட்ட நொடியில் வீரா சோர்வுற்றான்.
இந்த விடுமுறையிலும் பேச முடியாது என்று அவனுக்கு உரைத்தது. அந்த சோர்வில் அவன் இருந்த பொழுதே, “தூங்க போறேன்” என்று சொல்லி பேச்சை சுருக்க முடித்துக்கொண்டாள் ஷாரா.
அந்த விடுமுறை முழுதும் ஷாராவின் ஆன்மீக சுற்றுப்பயணம் முடிவதற்காக காத்துக்கொண்டிருந்த வீரா நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தான்.
அந்த விடுமுறையின் கடைசி நாள் மாலை மங்கி இரவு நெருங்கிக்கொண்டிருந்தது.வீரா ஊருக்கும் கிளம்பவில்லை. அவர்கள் பயணம் முடிந்து வீடு திரும்பியிருப்பார்கள் என்று எண்ணி ஷாராவிற்கு மெசேஜ் அனுப்பினான்.
“just entered home feeling tired” அன்று ஷாராவிடம் இருந்து வந்த முதல் மெசேஜ் இது தான்.
“refresh பண்ணிட்டு rest எடுங்க” என்று மனமில்லாமல் ஷாராவிடம் சொல்லிவிட்டு போனை கீழே வைக்காமல் மீண்டும் காத்துக்கொண்டிருந்தான் வீரா. அந்த நாளும் முடியப்போகிறது, ஐந்து நாள் விடுமுறை முடியப்போகிறது. மீண்டும் அவளிடம் பேச அடுத்த விடுமுறை வரை காத்திருக்க வேண்டும்.வீராவால் பொறுத்திருக்க முடியவில்லை.அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு ‘Hi’ அனுப்பிவைத்தான்.
அந்த மெசேஜ் ஷாராவின் இன்பாக்ஸை அடைந்த வேகத்தில் அவளிடம் இருந்து குட் நைட் மெசேஜ் வந்தது. போன் அவள் கைகளிலேயே தான் இருந்திருக்க வேண்டும்.
வாசலில் நின்று காத்துக்கொண்டிருக்கும் பொழுது அவன் முகத்திற்கு நேராக பட்டென்று ஓங்கி கதவை சாத்தியது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது . உடைந்து போனான் வீரா. அவன் அவனுக்குள் குறுகிப்போனான்.ஷாரா என்ன பேசினாலும் மகிழ்ந்து கொண்டிருந்த வீராவை ஷாராவிடம் இருந்து வந்த குட் நைட் அடித்து நொறுக்கியது. மணி ஏழரை தான் ஆகியிருந்தது. வீட்டில் வீரா மட்டுமே தான் இருந்தான். அவன் இருந்த அறையின் விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது.அவளிடம் பேச வேண்டுமென்று காத்துக்கொண்டிருந்த பொழுது உணராத இருளை அவன் உணர தொடங்கினான். போனை கையில் வைத்துக்கொண்டு படுத்திருந்தான் வீரா. அவன் கைகள் நடுங்கியது, அந்த குட் நைட் மெசேஜை அவன் மூடவில்லை. அவன் பெருவிரல் அந்த மெசேஜ் தொட்டுக்கொண்டிருந்தது. அவனுக்கு என்ன பதில் அனுப்புவது என்றும் தெரியவில்லை.
‘tired இருக்கேன் நாளைக்கு பேசலாம்’ என்று ஷாரா எதுவுமே பேசவில்லை. அவன் பேச தொடங்கியதுமே பேச்சை முடிக்கும் வண்ணம் குட் நைட் அனுப்பி வைத்தாள்.
உங்களை எனக்கு பிடிக்கும் என்பதை சொன்னால் கூட அவள் பேசாமல் இருந்திவிடுவாளோ என்று மிக கவனமாகவே தான் ஷாராவிடம் பேசிக்கொண்டிருந்தான் வீரா.அவள் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தால் போதும்; அந்த சந்தோஷம் எப்போதும் கூட கெட்டுவிடக்கூடாது என்று அவளிடம் தன் மனதை வெளிகாட்டிக்கொள்ளாமல் இருந்தான் வீரா.
வீராவிற்கும் ஷாராவிற்கும் இடையில் எந்த சண்டையும் ஏற்படவில்லை. வீரா ஷாராவை அதிகம் தொந்தரவும் செய்ததில்லை.
special one என்று ஷாரா சொன்னதெல்லாம் வீராவின் நினைவிற்கு வந்தது.
என்ன ஆச்சு? என்ன நடந்தது? ஏன் ஷாரா தீடீரென்று வீராவை ஒதுக்குவது போல் பேசினாள்,அந்த இரண்டு நாள் ஆன்மீக பயணத்தில் என்ன நடந்தது? உண்மையில் கோவில்களுக்கு சென்றதால் தான் அவள் பேசவில்லையா அல்லது வீராவை ஒதுக்க அப்படி சொன்னாளா வீராவிற்கு ஒன்றும் தெரியாது. அந்த குட் நைட் மெசேஜ் க்கு பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து ஷாரா அனுப்பிய அந்த ஒரு மெசேஜ் க்கு உடனடியாக பதில் அனுப்பாமல் உடனடியாக அவளை அழைத்துப்பேசாமல் இருந்ததை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டான் வீரா.
அந்த இரண்டு நாள் ஆன்மீக பயணத்தில் என்ன நடந்தது? என்ன ஆச்சு? ஷாராவின் வீட்டில் உள்ளவர்கள் வீராவிடம் பேசுவதற்காக ஷாராவை கடிந்து கொண்டார்களா? அல்லது வீரா தன்னை காதலிக்கின்றானோ என்கிற எண்ணம் வந்து ஷாரா வீராவை ஒதுக்க முடிவு செய்தாளா? வீராவிடம் பேசுவதை அவளும் விரும்பினாள் தானே? இல்லை அதெல்லாம் வீராவின் மனப்பிரமையா? வீராவின் அம்மா ஷாராவிடம் பேசி, அவனிடம் பேச வேண்டாம் என்று சொன்னார்களா? ஷாராவின் புது நண்பர்கள் வீராவிடம் பேச வேண்டாம் என்று நிர்பந்தித்தார்களா?ஷாராவுடன் பணிபுரிபவர்கள் அவளிடம் காதலைச் சொல்லி அந்த காதலை ஷாரா ஏற்றுக்கொண்டிருப்பாளா? அதனால் தான் வீராவிடம் பேசவில்லையா?
என்ன தான் ஆச்சு?
இத்தனை கேள்விகளும் வீராவின் மண்டைக்குள் நிற்காமல் ஓடத் தொடங்கியது. அவன் ஆழ்மனம் இதைத்தவிர வேறொன்றும் நினைக்கவில்லை. என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் அவன் ஆழ்மனதின் அடியாழத்தில் அவனுள் அவனே பத்து பேராக பத்து திசையில் நின்று கேள்விகளை அடுக்கிக்கொண்டிருந்தான். எந்த கேள்விகளுக்கும் விடை கிடைக்கவில்லை.ஷாராவே மீண்டும் பேசி என்ன நடந்தது என்று வீராவிடம் சொன்னால் தான் உண்டு.
இத்தனை கேள்விகளும் எண்ணங்களும் பாரங்களும் தான் கவிதா கேட்ட அந்த கவிதையாக வீரா மனதில் வந்து விழுந்தது.
அவள் பேசவும் செய்கிறாள்!
இருந்தும் ஏனோ பேசாமல் இருக்கிறாள்
அவள் பேசியும் இருக்கிறாள்
இருந்தும் ஏனோ பேசாமல் இருக்கிறாள்
அவள் பேசிக்கொண்டிருந்த நாட்களில்
“பேசாமல் இருந்து விடுவாயா”என்று கேட்ட பொழுது
“பேசாமல் எங்கு போவேன்” என்று மறுத்தவள்.
“இனி பேசமாட்டேன்” என்பதையும் பேசாமலே தான் சொல்கிறாள்
பேசாமல் இருந்துவிடுவாள் என்று தெரிந்திருந்தால்
பேசிய நாட்களிலேயே கேட்டிருப்பேன் -அவள்
பேசாமல் இருப்பதற்கான காரணத்தை
அவள் பேசும் பொழுது அவள் வார்த்தைகளின் இடையில் ஒளிந்து கொண்டு எனை ரசிக்க வாய்த்த அவளின் மௌனம்
அவள் வார்த்தைகளை ஒளித்து வைத்து விளையாடுகிறது.
காரணம் தெரியாமல் அவளை நேசித்தேன்-இன்று
காரணம் தெரியாமல் காத்து இருக்கின்றேன்
அவள் மௌனத்தை உடைக்கும் வார்த்தை எதுவாக இருக்கும் என்கிற தேடலில்…..
வீராவின் இந்த தேடல் முடிவிற்கு வந்ததா. அவள் மீண்டும் அவனிடம் பேசினாளா? பேசும் பொழுது என்ன நடந்தது என்று சொன்னாளா ?ஏன் பேசவில்லை என்று சொன்னாளா? தொடர்ந்து படியுங்கள் ..