வருஷம் 2012.

 

வியாழக்கிழமை  இரவு பெங்களூருவில் வீரா ஏறிய பேருந்து, வெள்ளிக்கிழமை காலை ஆறுமணிக்கெல்லாம் ஊர் வந்து சேர்ந்தது.அத்தனை சீக்கிரம் ஊர் வந்து சேர வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

 

போனை எடுத்து மணியை பார்த்தான், ஷாரா கிளம்புவதற்கு இன்னும் ஒரு மணி நேரதிற்கும் மேல்  இருக்கிறது. அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெளியே வந்த வீரா, நகர பேருந்துகள் நிற்கும் நிறுத்தத்திற்கு வந்து நின்றான். அங்கு நின்று கொண்டிருந்த  நான்கு நகர்பேருந்துகளில் எதில் ஏறியிருந்தாலும் அவன் அடுத்த 30 நாற்பது நிமிடங்களில் வீடு சென்று சேர்ந்திருப்பான்,

 

ஆனால், அவன் எந்த பேருந்திலும் ஏறவில்லை. யாருமே காத்திருக்க வழியில்லாத பேருந்துகள் நிரம்பி வழியும் அந்த பேருந்து நிறுத்தத்தில் வீரா மட்டும் இடம் பார்த்து உட்கார்ந்து காத்துகொண்டு இருந்தான்.

 

“ஒரு கோல கிளி சோடி தன்னை

தேடுது தேடுது மானே...”

அருகில் இருந்த டீ கடை எப்.எம் இல் இந்த பாடல் ஒலிக்க தொடங்கியது. காற்றில் கரைந்து ஒலித்துக்கொண்டிருந்த அந்த பாடல் வீராவின் காதுகளை தொட்ட நொடியில் வீராவிற்கு மூன்று வயது ஆனது.

மாமாவுக்கு “ரஜினி பாட்டு பாடு” என்று கொஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தார் வீராவின் ஆச்சி. மூன்று வயது வீரா கொஞ்சம் கோபமாக இருந்தான்.

“அவர் மைக் இருந்தான் தான் பாடுவார்” என்று சமாளித்தார் வீராவின் ஆச்சி.

“மைக் தானே இந்தா!”  கீழே இருந்த வேப்பஞ் சுள்ளியை எடுத்து வீராவிடன் நீட்டினார் கதிர்வேல்.

 

வீராவின் ஆச்சி வீட்டிற்கு பக்கத்தில் வசித்தவரின் தம்பி கதிர்வேல். அவர் அவருடைய  அண்ணனை பார்க்க வந்திருந்த பொழுது இதெல்லாம் நடந்துகொண்டிருந்தது.

காரணம், அந்த நாட்களில் ரோட்டு கடையில் வாங்கிய தன் முகத்தை விட பெரிதான அந்த கருப்பு கண்ணாடி ஒன்றை அணிந்து கொண்டு கையில் சீப்பை வைத்துக்கொண்டு தன்னை ரஜினியாக பாவித்துக்கொண்டு,

 

“ஒரு சோழ கிளி சோடி தன்னை தேடுது  தேடுது மானே”

என்று தனக்கு தெரிந்த முதல் வரியை மட்டும் அதையும் கூட தவறாக வீரா பாடிக்கொண்டு இருப்பான் இருந்த காலம் அது.

 

வருடங்கள் எத்தனை வேகமாக ஓடியிருக்கிறது என்று நினைத்து  ஒரு சிறு பெரு மூச்சு விட்டான். “படிச்சு முடிச்சு இப்ப வேலை தேடிட்டு இருக்கோம்! வேலை எங்க தேடுறோம்! மறுபடி பார்க்கிற வரைக்கும் mind அதைப்பத்தி மட்டும் தான் யோசிக்குது” வீரா மனதிற்குள் இருந்து வீரா இதையெல்லாம் பேசிக்கொண்டு இருந்தான்.

 

பெங்களூருவில் இருக்கும் சித்தி வீட்டில் தங்கி வேலைத் தேடிக்கொண்டிருந்து இப்போது ஊர் திரும்பியிருக்கும் வீரா தான் தற்போது பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருக்கின்றான்.

 

ஓடிக்கொண்டிருந்த அவன் எண்ணங்கள் அவனுக்கு சொன்னதெல்லாம் உண்மை தான். வேலை தேடிக்கொண்டிருந்தாலும். அவன் ஆழ்மனம் தீவிரமாக தேடியது என்னவோ ஷாராவைத்  தான்.

வீராவின் எண்ண அலைகள் கொஞ்சம் ஓய்ந்தவுடன் அங்கு ஓடிக்கொண்டிருந்த இந்த பாடல் வரிகள் அவன் காதுகளுக்கு கேட்டது.

 

“ரெண்டும் ஊர சுத்தி

தேர சுத்தி

ஒன்னா போனது

அது ஒன்னா இருந்த காலம் இப்போ

எங்கே போனது”

 

ஏதோ கவனத்தில் இருந்த வீரா சட்டென்று திரும்பி பாடல் ஒலித்துக்கொண்டிருந்த திசையை பார்த்தான். அவன் மனதில் அந்த வரிகள் மீண்டும் ஒலித்தது.

“அது ஒன்னா இருந்த காலம் இப்போ

எங்கே போனது”

அந்த வரிகள் அவன் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் பொழுதே கடையில் அடுத்த வரி ஒலிக்க தொடங்கியிருந்தது.

“நாலு பக்கம் தேடி தேடி

நல்ல நெஞ்சு வாடுதடி

கூவுகிற கூவல் எல்லாம்

என்ன வந்து தாக்குதடி”

மூன்று வயதில் ரஜினிக்காக மட்டும் ரசித்த இந்த பாடல். 22 வயதில் ஷாராவை தேடிக்கொண்டிருக்கும் அவனுக்கு, அந்த பாடல் அவனுக்காகவே எழுதிய போன்ற உணர்வை தந்தது. அதனால் அந்த பாடல் அவன் மனதிற்கு இன்னும் நெருக்கமாக ஆனது.

பாடலின் இடையிசை ஒலிக்கத் தொடங்கியதும் அவன் எண்ணங்கள் மீண்டும் அலைபாயத் தொடங்கியது. ஷாராவைத் அவன் தேடிய நாட்களை எல்லாம் அவன் மனக்கண்ணில் அது ஓட்ட தொடங்கியிருந்தது.

‘மீண்டும் அவளை எப்போது காண்போம்? அவளிடம் மீண்டும் பேசுவது எப்படி?’ இது தான் அவன் ஆழ்மனதில் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தது. பெங்களூருவில் இருந்த நாட்களில்,காலை எழுந்து குளித்து கிளம்பி ஒவ்வொரு நிறுவனமாக  சென்று resume கொடுத்துவிட்டு, இணையத்தில் ஷாராவைத்  தேடுவது தான் வீராவின் வேலையாக இருந்தது.

 

“என்ன engineer மேடம் ரொம்ப பிஸியா?” என்று அவன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு ஷாராவிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.

 

அவள் கல்லூரி இணையத்தளம், அவள் பணிபுரியும் நிறுவனத்தின் இணையத்தளம் என்று ஒவ்வொன்றையும் அலசுவதே அவன் வேலையாக இருந்தது.டெலிபோன் directory கொண்டு அவள் வீட்டின் விலாசத்தை கூட எடுத்துவைத்துக்கொண்டான். ஆனால், அதை அவன் பயன்படுத்தப்போவதில்லை.

 

அந்த landline நம்பருக்கு கால் செய்யவும் கூட துணிவில்லாத அவன் எப்படி நேரடியாக வீட்டிற்குச் செல்ல போகிறான். இணையத்தை அவன் அலசியதில், அவளின் கல்லூரி இணையத்தளத்தில் இருந்த அவளுடைய ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஒன்று கிடைத்தது.முதன் முதலாக வீரா கண்ணில் கிடைத்த ஷாராவின் புகைப்படம் அது தான். அத்தனை சிறிய அந்த புகைப்படத்தில் இருக்கின்றதா இல்லையா என்கிற அளவில் பெரிதும் தெரியாத அளவில் அவள் நெற்றியில் இருந்த அந்த சந்தனம் தான் வீராவின் கண்களுக்கு முதலில் தெரிந்தது.

 

மெல்லிதாய் அவள் வைத்திருக்கும் அந்த சந்தனத்தில் என்ன இருக்குமோ தெரியவில்லை! அந்த புகைப்படத்தில் இன்னும் மெல்லிதாக அது இருந்தும் கூட வீராவிடம் இருந்து இன்னும் மெல்லிதான புன்னகையை அது வாங்கிக்கொண்டது.

 

Shara என்று தட்டி, நான்கு folder களுக்கு அடியில் அந்த சின்னப் புகைப்படத்தை ஒளித்து வைத்துக்கொண்டான்.அது அவள் பள்ளிக்காலத்தில் எடுத்தாததாகவோ அல்லது முதலாமாண்டு எடுத்ததாகவோ இருக்க வேண்டும்.

 

வீரா facebookயிலும் கூட அவளைத் தேடாமல் இல்லை. அவனுக்கு தெரிந்த அவள் நண்பர்கள் தோழிகள் பெயர்களை எல்லாம் தேடினான். அவன் கண்ணில் மீண்டும் ஒரு புகைப்படம் சிக்கியது. நீங்கள் கற்பனை செய்து பார்க்காத உருவில் தெய்வம் உங்கள் முன் தோன்றினால் எப்படி இருக்கும்! வீராவிற்கு அப்படித்தான் இருந்தது. அந்த தேவதை, அந்த புகைப்படத்தில் தேவதை போலவே  இருந்தாள்.அந்த புகைப்படத்தில் அவளுடன் இருந்தவர்கள் நெற்றியிலும் கூட சந்தனம் இருந்தது. அது எதுவும் அவள் நெற்றியில் இருக்கும் சந்தனம் போல் இல்லை.அவர்கள் நெற்றியில் இருந்த சந்தனம், சரஸ்வதி பூஜை அன்று புத்தங்களுக்கு வைக்கும் பொட்டு போல் மொத்தமாய் இருந்தது. அவளிடம் மட்டுமே தான் அவள் எப்போது ஏந்திக்கொண்டிருக்கும் அந்த தெய்வீக புன்னகையும் இருந்தது. அவளைப்பார்க்கும் யாருக்கும் அந்த புன்னகை தொற்றிக்கொள்ளும். வீராவிற்கு சொல்ல வேண்டியதேயில்லை.அதைத் நினைத்த இந்த மாத்திரத்திலும் அவன் புன்னகைத்து கொண்டிருந்தான்.

 

இப்படி அவளைத்தேடி அவள் சார்ந்த விவரங்களை சேகரித்து கொண்டிருந்த வீராவிற்கு ஒரு வேலையும் அமையவில்லை.

“விட்ட குறையோ

தொட்ட குறையோ

இந்த உறவு

என்ன முறையோ”

 

பாடலின் இரண்டாம் சரணம் முடிவில் இந்த வரி ஒலித்த பொழுது  special one என்று அவள் அனுப்பிய மெசேஜ் அவன் நினைவிற்கு வந்ததும் இடது பக்கமாய் திரும்பி கொஞ்சம் புன்னைகளை உதிர்த்தான் வீரா.

மீண்டும் பல்லவி ஆரம்பித்தது வீராவும் கூட ஆரம்பித்த இடத்திற்கு வந்து நின்று அவளை அவன் மீண்டும் தேடிக்கொண்டிருக்கின்றான்.

“ஒரு கோல கிளி

சோடி தன்னை

தேடுது தேடுது மானே

அது திக்க விட்டு தெசையை விட்டு

நிக்குது நிக்குது முன்னே”

 

அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த யாருமே வீராவை கவனிக்காத போதும் கூட அங்கு இருந்த எல்லோரும் அவனை கவனிப்பது போன்ற எண்ணம் அவனுள்.

 

“ஒரு மணி நேரமாக ஒருத்தன் எந்த பஸ் லையும் ஏறாம உட்க்காருறான் நிக்கிறான் நடக்குறான் ன்னு யாரும் நினைப்பாங்களா?” இப்படியான பல சந்தேக கேள்விகள் வீராவின் மனதில் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்தது.

 

வீரா எங்கும் எப்போதும் யாருக்காகவும் இப்படி நின்றுகொண்டிருந்ததில்லை.இப்படிக்  காத்துக்கொண்டிருந்ததில்லை.அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது. “கிளம்பி விடலாமா” என்று யோசித்துக்கொண்டிருந்த பொழுதே “இன்னும் சில நிமிடங்கள் தான்” என்று நினைத்துக்கொண்டான். ஒரே இடத்தில் உட்காராமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான்.

 

அவன் காத்துக்கொண்டிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அடுத்த இரண்டு நிறுத்தத்திற்கு அருகில் தான் ஷாராவின் வீடு இருந்தது. அவள் வேலைக்குச் செல்வதற்கு அந்த நிறுத்தத்தில் தான் பேருந்தில் ஏற வேண்டும் என்று நினைத்துதான் காத்துக்கொண்டிருந்தான் வீரா.

 

அவன் கணித்து வைத்திருந்தது போலவே ஒண்ணே கால் மணி நேரம் கழித்து அவள் அலுவலகம் செல்லும் பேருந்து வந்து நின்றது. அதில் ஏறி கடைசி வரிசையில் படிக்கட்டின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

 

“ஊருக்கு போயிட்டு வந்தேன். டெய்லி இதுல தான் வேலைக்கு போவீங்களா? இங்க தான் வீடா?” இதெல்லாம் அவளிடம் கேட்க வேண்டும்; எதார்த்தமான சந்திப்பாகவே அது அமைய வேண்டும் என்றே தான் அந்த பேருந்து நிறுத்தத்தில் காத்துகொண்டு இருந்தான். இல்லை என்றால் அவள் ஏறும் அந்த பேருந்து நிறுத்தத்திற்கே சென்று காத்துகொண்டு இருந்திருப்பான்.

 

பேருந்தில் பெரிதாக கூட்டம் ஒன்றுமில்லை.பேருந்து கிளம்பியது. மெதுவாக ஓடிக்கொண்டிருந்த அந்த பேருந்தில் இருந்த வீராவின் இதயம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. பேருந்து வலது பக்கம் திரும்பியது அங்கு வரப்போகும் நிறுத்தத்தில் தான் ஷாரா ஏறப்போகிறாள் என்று அவன் இன்னும் இதயம் வேகமாக துடித்தது.

 

அவன் எதிர்பார்த்த அந்த நிறுத்தம் வந்தது. அந்த நிறுத்தத்தில் ஒருவரும் இல்லை. அத்தனை வேகமாய் துடித்துக்கொண்டிருந்த வீராவின் இதயம் ஒரு நொடி நின்று மெதுவாக துடிக்க ஆரம்பித்தது. அவன் சட்டென்று வலது பக்கம் திரும்பினான். அங்கு தான் எங்கோ அவள் வீடு இருக்க கூடும் என்று திரும்பினான். “அந்த வெள்ளை கலர் பெயிண்ட் அடிச்ச வீடா தான் இருக்குமோ?” அங்கு இன்னும் நிறைய வீடுகள் இருந்தது. வீராவின் கண்கள் அத்தனை வீடுகளையும் அலசிக்கொண்டிருந்த பொழுதே பேருந்து நகர்ந்து இடது பக்கம் திரும்பி விட்டது.

 

ஒரு மணி நேரம் அவனுள் இருந்த நம்பிக்கை ஒரு நொடியில் உடைந்து போனது.

வீடு வந்து சேர்ந்தவனுக்கு இன்னும் கொஞ்ச நாள் resume  கொடுக்கும் வேலையும் இல்லை.

 

அவனுக்கு ஷாரா அவள் தோழிகளுடன் இருந்த படத்தை வரைந்து அவளை மீண்டும் சந்திக்கும் பொழுது அவளிடம் காட்ட வேண்டும் என்று தோன்றியது.அல்லது அவள் பிறந்தநாளுக்கு அதை அனுப்ப வேண்டும் என்று ஆசை வந்தது.

 

வீராவிற்கு ஏன் இந்த ஆசை? ஷாராவிற்கு வரைவது  பிடிக்கும். அவள் நெற்றியில் வைக்கும் சந்தனத்தில் இருக்கும் நேர்த்தியும் perfection உம் அவள் வரையும் ஓவியங்களிலும் இருக்கும்.வீராவும் கூட வரைவான் என்றாலும் ஷாரா அளவிற்கு அவன் ஓவியங்களில் perfection இருப்பதில்லை என்று அவனுக்கு ஒரு எண்ணம். அது உண்மையும் கூட.

வீரா சேகரித்து வைத்து இருந்த ஷாராவின் பொக்கிஷங்களில் அங்கங்கே அவள் வரைந்த ஏதோ ஒரு ஓவியம் இருக்கும்.நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் நம் உயிர் கொஞ்சம் இருக்கும். SPB இல்லாத பொழுது அவர் பாடல்கள் கேட்கும் பொழுது soulful voice என்கிறார்களே அது போல.

அவள் வரைந்த ஓவியங்களிலும் அவள் எழுத்துக்களிலும் இருந்த அவள் உயிரின் சாரங்களை அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.இப்போது இவன் உயிர் கொண்டு அவள் படம் வரைய போகிறான்.

 

தேவதை போலவே அந்த தேவதை இருந்த புகைப்படத்தை தான் அவன் வரைவதற்கு எடுத்துக்கொண்டான்.அதில் அவள் புடவை கட்டியிருந்தாள். அந்த புகைப்படத்தில் ஐந்து பேர் இருந்தார்கள். வீராவின் கண்களுக்கு ஷாராவைத் தவிர யாருமே தெரியவில்லை.ஷாராவின் கண்களையும் சந்தனத்தையும் தாண்டி எதுவும் தெளிவாக தெரியவில்லை.

 

மிகவும் கவனமாக வரையத் தொடங்கினான். அவள் முகத்தின் outline ஐ இல் இருந்து ஆரம்பித்து மிக கவனமாக அந்த நெற்றியையும் கண்களையும் அந்த கண்களுக்கு நடுவில் அந்த நெற்றியில் இருந்த சந்தனத்தையும் வரைந்தான்.

 

“ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது

உற்றுப் பார்க்கும்

ஆளின் கண்ணில் உள்ளது” 

என்று வைரமுத்து அவர் வரிகளில் சொன்னது போலவே வீராவின் ஓவியத்தில் அந்த நெற்றியும் கண்களும் சந்தனமும் ஜீவன் கொண்டது. வீராவின் கவனம் அது வரை மட்டும் தான் இருந்தது.

 

அந்த நெற்றியும் கண்களும் சந்தனமும் வரைந்து முடித்து விட்ட அவன் வரைந்த அந்த ஓவியத்தில் வேறு எதுவும் உயிர்ப்போடும் அந்த புகைப்படத்திற்கு நெருக்கமாகவும் இல்லை.

 

அந்த கண்களைத் தாண்டி அவனால் உண்மை நெருக்கமாக அவளின் மூக்கை கூட வரைய முடியவில்லை. அவளின் தெய்வீகமான அந்த சிரிப்பை யாராலுமே வரைய முடியாது என்று சமாதானம் சொல்லிக்கொண்டான் வீரா.

 

ஊரில் இருந்த அந்த கொஞ்ச நாளில் வீரா ஷாராவைப்பார்த்தானா ?அவன் வரைந்த அந்த ஓவியத்தை ஷாராவிற்கு அனுப்பி வைத்தானா? ஷாரா கண்களில் அந்த ஓவியம் சிக்கியதா ? தொடர்ந்து படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *