நம்முடைய அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், நேபாள், என்று ஒவ்வ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு காரணங்களால் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தது.அது பற்றிய செய்திகளின் கீழே பலர், இந்தியாவில் இது நடப்பது வெகு தொலைவில் இல்லை கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருந்தார்கள், அதிகாரத்திற்காக சொந்த நாட்டின் மீது அரசியல் வெறுப்புகளை பரப்பும் அரசியல்வாதிகள் விதைத்த விஷ விதைகளின் வெளிப்பாடுகள் தான் அது போன்ற கருத்துக்கள்.
இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை உள்நாட்டு போராக மாறுவதற்கு இந்தியா போன்ற மற்ற நாடுகள்,உள்நாட்டு கிளர்ச்சியார்களுக்கு அளித்து வந்த ஆதரவே தான் காரணம். அதே இலங்கையின் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததற்கு காரணம், ஆதரவளித்து வந்த நாடுகள் அந்த ஆதரவை நிறுத்திக்கொண்டது தான். இப்படியாக அநேகமான உள்நாட்டு போர்களும் கிளர்ச்சிகளும், விஸ்வரூபம் எடுக்க வெளி சக்திகளின் உந்துதலோ ஆதரவோ தான் காரணமாக அமைகிறது. நம்மூர் ஜல்லிக்கட்டு போராட்டம் தூத்துக்குடி போராட்டம் சி.ஏ.ஏ. போராட்டம் என்று எல்லாப் போராட்டங்களும் அதிகார பசிக்கொண்ட அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டு இயக்கப் பட்ட போராட்டங்களே தான். அதில் மக்கள் அவர்களை அறியாமல் அரசியல் போரில் அம்புகளாக அரசியல்வாதிகளுக்கு பயன்பட்டார்கள். அதே அரசியல் கூட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த சில நாட்களில் மாட்டுக்கறி வேண்டுமென்று கொடி பிடிக்க ஆரம்பித்தது .
எப்படி தமிழகத்தில் வாரிசு கட்சி, ஊடங்களை தங்களின் நேரடி அல்லது மறைமுக ஆளுகைக்குள் வைத்துக்கொண்டும் தங்களுக்கு எதிராகவே சில உதிரி கட்சிகளை வைத்துக்கொண்டும், வாக்குகளை பிரித்து அவர்களுக்கு வேண்டியதை சாதித்துக்கொண்டு அவர்கள் விரும்பும் கருத்துக்களை நம்முடைய தன்னெழுச்சி கருத்துக்களாக நம்மையே நினைக்க வைத்து நம் மீது திணிக்கிறார்களோ, அது போலவே தான் சில வளர்ந்த வல்லரசு நாடுகள் அவர்களுக்கு அனுகூலமான வியாபார ரீதியிலான முடிவுகளுக்காக, மற்ற நாடுகளின் அரசியல் எப்படி இருக்க வேண்டும், மற்ற இரண்டு நாடுகளின் ராஜாங்க ரீதியிலான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆட்டுவிக்கப் பார்க்கிறார்கள், ஆங்கிலத்தில் orchestrated என்பார்கள். அந்த அளவில் சில வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் எல்லா விஷயங்களிலும் நேரடியாகவும் மறைமுகாவும் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறது.
சமீபத்தில் நேபாள அரசு, சமூக வலைத்தளங்களை நெறிப்படுத்துவதற்கு சட்டமியற்றி அதனை தொடர்ந்து, எல்லா வலைத்தளங்களை அவர்கள் நாட்டில் பதிவு செய்யச் சொல்லி, புது சட்டத்த்திட்டங்களை பின்பற்ற சொல்லி, அதற்கு கால அவகாசமும் கொடுத்திருந்தது. அந்த கால அவகாசம் முடிந்தும் பதிவு செய்யாத facebook யூட்யூப் போன்ற வலைத்தளங்களை முடக்கியது.அது தான் அந்த நாட்டில் எழுந்த பெரிய போராட்டத்திற்கான trigger point. நேபாள அரசின் மீது வேறு சில குறைகளோ குற்றச்சாட்டுகளோ இருந்திருக்கலாம். ஆனால், போராட்டம் பெரிதாகி வெடித்தது இந்த புள்ளியில் தான்.போராட்டத்தில் நடந்த வன்முறையை பார்க்கும் பொழுது, அந்த நாட்டின் அரசுக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் ஆதரவு இருந்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது.
நேபாள அரசு,முகநூல் போன்ற இந்த வலைத்தளங்கள், நேபாள நாட்டு குடிகள் மூலம் பெறும் வருமானத்திற்கான வரியை நேபாள அரசுக்கு கட்ட வழி வகை செய்யவும்,பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாத்திடவும், குற்ற விசாரணைகளில் அரசுக்கு தகவல்களை தந்து உதவவும்,பொய்யான செய்திகளை தடுக்கவும் இந்த முகநூல் போன்ற வலைத்தளங்களை நிர்பந்தித்து சட்டமியற்றியது, அதை குறித்த காலக்கெடுவுக்குள் பின்பற்ற தவறிய வலைத்தளங்களை தடை செய்தது, இந்த தடை பெரிய போராட்டத்திற்கான திரியை பற்ற வைத்த நெருப்பாய் இருந்தது தான் முரண். ஆழமாக பார்த்தால் நாட்டு நன்மைக்காக இயற்றப்பட்ட சட்டம்.
சமீபத்தில், அமெரிக்கா இந்தியா அமெரிக்காவை வஞ்சிக்கிறது, அமெரிக்காவிடம் இந்தியா நிறைய விற்கிறது. ஆனால், அமெரிக்காவிடம் இருந்து கொஞ்சமாக வாங்குகிறது என்று சொல்லியிருந்தது.இது எப்படி சரியாகும்?!
கல்லூரி நாட்களில் செய்தி தாள்களில் ஒரு செய்தி படித்தேன். அதில் தெரிந்துகொண்டதாவது, அப்போது இந்த கோழிக்கறியில் அமெரிக்கர்கள் கோழியின் மார்பு கறியை தான் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள். அதனால், கோழிக்காலுக்கு அவர்களின் சந்தையில் தேவை இல்லாமல் இருந்தது. அதனால், அவர்களுக்கு வேண்டாத அவர்கள் சந்தையில் விற்காத கோழிக்காலை நம்மிடம் தள்ளிவிட வேண்டும் என்று நம்மை பல வகையில் நிர்பந்தித்தார்கள்.அப்பொழுது மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தார். நாம் பறவைக்காய்ச்சலை எல்லாம் காரணம் காட்டி இந்த நிர்பந்தத்தை ராஜாங்க ரீதியாக தவிர்க்கப் பார்த்தோம், உலக வர்த்தக அமைப்பில் புகார் செய்தார்கள், தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தது, வரிகளை உயர்த்துவது மற்ற ராஜாங்க ரீதியிலான நடவடிக்கை மூலம் அவர்களுக்கு வேண்டாத கோழிக்கால் நம் உள்ளூர் வியபாரிகளை பாதிக்காமல் பார்த்துக்கொண்டோம். அவர்களின் அகராதியில் வேண்டாததை நம்மிடம் தள்ளிவிட்டு லாபம் பார்க்க நினைப்பது வஞ்சனை இல்லை, இந்தியாவை, இந்தியர்களை ஒரு சந்தையாக பாவித்து இந்தியர்கள் உழைப்பையும் டாலர் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்வது வஞ்சனை இல்லை. அவர்களின் பொருள்களுக்கு நாம் வரி விதிப்பது தான் வஞ்சனை. இந்த கொரோனா தடுப்பூசியான பைசரை ஐ ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் நம்மை வாங்க சொல்லி நிர்பந்தித்தார்கள், அதற்கு நம் ஊர் ஆசாமிகளும் கூட உலகமே பைசரை ஏற்றுக்கொண்டது நம் ஊரு இப்படி செய்கிறது ரஸ்யாவின் அஸ்டரா ஜென்காவை மற்றும் எப்படி ஏற்றுக்கொண்டது என்று மோடியை பழித்துக்கொண்டிருந்தார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்ற நாடுகளுடனான வர்த்தக உறவு என்று பார்த்தோமேயானால், ரஸ்யா எப்பொழுதும் இந்தியாவிற்கு ஆதரவாக இருந்திருக்கிறது.ரஸ்யாவுடனான உறவை எப்போதும் பேணிக்கொள்வது தான் இந்தியாவிற்கு நன்று.
ஒரு வருடத்தில், தோராயமாக ஆயிரத்தி ஐநூறு கோடிக்கும் மேல் ஹாலிவுட் மூலம் மட்டும் இந்தியர்களின் பணம் அமெரிக்க முதலாளிகளுக்கோ வெளிநாடுகளுக்கோ சென்றுகொண்டிருக்கிறது. இப்படி பல வழிகளில்,வளரும் நாடான இந்திய குடிகளின் உழைப்பு ஏற்கனவே வளர்ந்த அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பாலூட்டிக்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு ஓ.டி.டி. வந்து அவர்களின் பழைய டிவி சீரியல்கள் மூலமும் நம்மிடம் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள். கிறுக்குத்தனமான ரீலிஸ்களோ அல்லது நற்செய்திகளோ அல்லது திரைப்படமோ பாடல்களோ, உழைப்பு இந்தியர்களுடையது, அவர்கள் ஒரு தளத்தையும் சர்வரையும் வைத்துக்கொண்டு லட்சம் லைக்கு இவ்வளவு என்று கூலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த கூகிள், மெட்டா போன்ற நிறுவனங்கள் தோராயமாக 50,000 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்கள், அப்படி வரும் வருமானத்தின் குறிப்பிட்ட பகுதியை குறைவான வரிவிதிக்கும் நாடுகளுக்கு திருப்பிவிட்டு, அந்த நாடுகளுக்கு வரி கட்டுகிறார்கள். தற்போது அது கொஞ்சமாக மாறத் தொடங்கியிருக்கிறது.இருந்தாலும் இந்தியாவில் வரும் பெரும் பகுதி வருமானத்திற்கு அறிவுசார் சொத்துரிமை என்று சொல்லி அவர்கள் இந்தியாவிற்கு வரி கட்டுவதில்லை.
இன்று மாலை, மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர், இந்தியர்கள் இந்திய பொருள்களை வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.அது எத்தனை தூரம் சாத்தியம் என்று நாம் பார்க்க வேண்டும். நேபாள் இந்த விஷயத்தில் ஒரு தவறிழைத்தது, பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் வலைத்தளங்களை ஒரே நாளில் தடை செய்தது தான் அந்த தவறு. சீனா இந்த விஷயத்தில் ஆரம்பம் தொட்டே சரியான முடிவுகளை எடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் இந்த டிஜிட்டல் பொருள்கள், தளங்கள் விஷயத்தில், அவர்கள் உலகத்தை அவர்கள் அனுமானித்துக்கொண்டார்கள்.மற்ற நாடுகளின் வலைத்தளங்களை சார்ந்து அவர்கள் இருக்க வேண்டிய நிலை இல்லாதவாறு ஆரம்பம் தொட்டே பார்த்துக்கொண்டார்கள். இந்தியாவும் ஆரம்பம் தொட்டே இதில் கவனமாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கொண்டு வரப்போகிறோம் கொண்டு வந்துவிட்டோம் என்றார்கள். ஆனால், அங்கையும் கூகிள் பே போன்ற அமெரிக்க நிறுவனத்தின் ஆதிக்கம் இல்லாமல் இல்லை. ஒரு வகையில் இந்த டிஜிட்டல் platform கள் மூலம் நம்முடைய அத்தனை தகவல்களும் வேறு நாட்டு முதலாளிகளிடம் இருக்கிறது எனலாம். இதன் மூலம் நம் நாட்டில் நகரும் ஒவ்வொரும் அனுவையும் அந்த நாடு கண்காணிக்க வாய்ப்பு இருக்கிறது.பொய்யான செய்திகளை பரப்புவது பற்றியோ ஒரு தனி நபரை ஏகத்துக்கும் சாடும் வெறுப்புரைகள் பரப்படுவது பற்றியோ நீங்கள் ஒரு புகார்(ரிப்போர்ட்) அளித்து பாருங்கள். இந்த பதிவு எங்கள் கொள்கைகளை மீறவில்லை என்கிற பதில்வரும்.நம்முடைய அத்தகைய புகார்கள் யாரால் ஆய்வு செய்யப்படுகிறது என்று தெரியாது. இன்றைய நிலையில் தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது தி.மு.க. கொண்டு வரும் ஒரு நல்ல திட்டத்தை பற்றியே கூட பொய்களை பரப்ப முடியும் அது தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கின்ற கட்சி ராஜாங்க ரீதியாக நலன் கருதி எடுக்கும் முடிவுகளின் மீதும் கூட அநேகமான சமயங்களில் வெறுப்பு பரப்பப் படுகிறது. ரஷ்யா உடனான நம்முடைய நீண்ட கால நட்பு ரஷியா விடம் எண்ணெய் வாங்குவதால் நாடு அடையும் பயன் பற்றி சிந்திக்காமல் அதையே ஒரு கூட்டம் விமர்சித்துக்கொண்டிருக்கிறது.நமக்கு என்ன காட்ட வேண்டும், நாம் எதை படிக்க வேண்டும் என்று நம் ஊரில் ஒரு நான்கு பேரை காசுக்கு வைத்துக்கொண்டு அவர்களால் தீர்மானிக்க முடியும். அவர்கள் அதை செய்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.
உள்ளூரில் சுகாதார பணியாளர்கள் போராடிய பொழுது ஒழிந்து கொண்ட பிரகாஷ் ராஜ் அமீர் போன்றவர்கள் அமெரிக்காவை கண்டித்து போராட்டம் செய்கிறார்கள். அந்த செய்தி எங்கு பரவலாக உலவுகிறது என்று பார்த்தால், பேஸ்புக், யூடுயூப், ட்விட்டர், எல்லாம் அமெரிக்க நிறுவனங்கள்.இது ஒரு வகையில் அவர்கள் வீட்டிற்குள் இருந்து அவர்களை பற்றி பேசுவதை போன்றது.
டிஜிட்டல் விஷயத்தில் இந்தியா தற்சார்ப்பை நோக்கி நகரவேண்டும்,அதில் பல சிக்கல்கள் இருக்கிறது தான். நாம் எல்லோரும் ஜிமெயில்க்கும் மைக்ரோசாப்ட்க்கு ஆண்ட்ராய்ட்க்கும் பழக்கப்பட்டு விட்டோம் தான். கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மாற வேண்டும். உழைப்பு அறிவு எல்லாம் நம்மிடம் இருக்கிறது, இந்தியர்கள் மற்ற நாடுகளுக்காக அல்லாமல் இந்தியாவிற்காக உழைக்கும் நிலையை நோக்கி நாடு நகர வேண்டும்.
பிரதமர் சொல்வது போல் இந்தியர்கள் இந்திய பொருள்களை வாங்க வேண்டுமென்றால் செய்யலாம் தான். ஏற்கனவே, நம் ஊர் ராயல் என்பீல்ட், பஜாஜ், மாருதி, மஹிந்திரா என்று நம்மூர் வாகன சந்தையில் பெரும்பான்மை இந்திய நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. சில நேரங்களில், சில இந்திய நிறுவனங்களின் தாய் நிறுவனமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கிறது. அந்த நிறுவனங்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு தான் இருக்கிறது.இதெல்லாம் மாற சில காலம் ஆகலாம். அதற்கு அரசாங்கம் அதன் பங்குக்கு பல கொள்கை மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
நாம் இப்படி எல்லா துறைகளிலும் தற்சார்பு நிலையை அடைகிறோமோ இல்லையோ! மேற்கத்திய பெரிய கொண்டை நாடுகளின் ஆதிக்க கைகளுக்கு வெளியே நாம் நம்மை வைத்துக்கொள்ளவேண்டும். தற்சார்பு நிலையை நோக்கி நகரும் முன், ஆசியா நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் எப்போதும் நண்பர்களிடம் சொல்வதுண்டு, ஐரோப்பிய ஒன்றியம் போல ஆசிய ஒன்றியம் அமைய வேண்டும் என்று. ஆதிக்க நாடுகளின் கை பாவைகளான ஆசியர்களுக்கு பெரிதும் உதவாத உலக நாடுகள் அமைப்பு நமக்கு தேவை இல்லை. ஆசியாவிற்கு என்று ஒரு வர்த்தக அமைப்பு, ஆசியாவிற்கு என்று ஒரு மனித உரிமை ஆணையம், ஆசியாவிற்கு என்று ஒரு சுகாதார அமைப்பு உருவாக வேண்டும்.நினைத்து பாருங்கள். இந்தியா, ஜப்பான், ரஷியா, சீனா போன்ற சக்திகள் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டால் எப்பிடியிருக்கும் என்று.
ஆனால், சிக்கல் என்னவெனில் ஆசியா நாடுகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது தான்.அதற்கும் இந்த பெரிய கொண்டை நாடுகள் ஏதேனும் ஒரு வகையில் காரணமாக இல்லாமல் இருக்காது.இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் நாம் நிறைய உதவிகள் செய்திருக்கிறோம். ஆனால், அரசியல் மட்டத்திலும் கூட அந்த நாடுகளில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகள் அவ்வப்பொழுது எழுகிறது. சீனாவை பொறுத்தவரையில் ஆதிக்கம் செலுத்துவதில் கிழக்கு அமெரிக்காவாக ஆகப் பார்க்கிறார்கள். சீனா ஆசியா நாடுகளின் மீது எதிர்மறையான வகையில் ஆதிக்கம் செலுத்தும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.அது ஆசிய நாடுகளுக்கு ஒரு நம்பகமான நட்பு நாடக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை விட இன்னமும் ஆசிய நாடுகளின் மக்களின் நிலை தான் பன் மடங்கு பின் தங்கி உள்ளது. அதற்கு வியாபார ஒப்பந்தங்கள் என்கிற பெயரில் மேற்குலகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கமும் ஒரு காரணமாக இருக்கிறது.இது மக்களுக்கு புரிய வேண்டும். உள்நாட்டு அரசியல் ஊழல் மற்ற குறைகள் வேறு இந்த பிரச்சனை வேறு. இதில் மக்கள் ஒன்று பட்டு நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டும். அரசிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.அரசும் கொள்கை மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
ஆசியர்கள் உழைப்பு வளர்ந்த நாடுகளை மேலும் வளர்க்காமல் ஆசியர்களுக்கு பயன்பட வேண்டும். பெரிய கொண்டை நாடுகளின் ஆதிக்கத்தை மாற்ற ஆசிய ஒன்றியம் அமைய வேண்டும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.