நேற்றிரவு கரூரில் நடந்த சம்பவம் பற்றிய செய்தியை படித்தது முதல் மனதில் ஒரு கனமும் அச்சமும் இயலாமையில் வெளிப்பாடான கோபமும் தொற்றிக்கொண்டது.இந்த அரசியல் களம் எத்தனை பயங்கரமானதாக இருக்கிறது? ஒரு மாற்றத்திற்கு எத்தனை பெரிய அச்சுறுத்தல்களை தருகிறது.

 சிறு வயது முதலாகவே தெருக்களிலோ சாலைகளிலோ நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு எதிரான மனநிலை தான் என்னுள் எப்போதும் இருந்திருக்கிறது. நான் வளர்ந்த பகுதியில் அநேகமான சமயங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருக்கூட்டங்கள் நடக்கும், ஒரு பெரிய தெருவில் சிறிய மேடை போட்டுக்கொண்டு கீழே ஒரு பத்து நாற்காலி போட்டு அந்த கூட்டம் நடக்கும், மிக சிறிய கூட்டமே என்றாலும், யார் இவர்கள் வழியை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற சலிப்பும் வெறுப்பும் தான் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. சாலைகளிலோ தெருக்களிலோ கூட்டங்கள் நடத்த எப்போதும் யாரையும் எந்த கட்சிகளையும் அனுமதிக்க கூடாது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. அது சிறிய அளவிலேனும் மக்களுக்கு அசௌகரியத்தை தான் ஏற்படுத்தும். ஆனால், நம் நாட்டில் அரசியலுக்கு என்று ஒரு டெம்ப்ளட்டை உருவாக்கி வைத்துவிட்டார்கள்.  அந்த டெம்ப்ளட்குள்  தான் யார் ஒருவரும் அரசியல் செய்யவேண்டும் என்கிற நிர்பந்தத்தை ஏற்படுத்தி வைத்துவிட்டார்கள். அப்படியான டெம்ப்ளட்களில் ஒன்று தான் இப்படியான கூட்டம், டெம்ப்ளட்டை உடைத்துக்கொண்டு ஒரு புது அரசியலை ஒருவன் முன் வைத்தால் அவன்  பைத்தியம், அவன் அரசியலுக்கு வரவவே கூடாது என்கிற நம்பிக்கையை  மக்கள் மனதில் வளர்த்து விட்டார்கள்.

எல்லா செய்திகளிலும், இதே இடத்தில், எடப்பாடி கூட்டம் நடத்தினார் 25000 பேர் அளவில் கூடியிருப்பார்கள் எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்கிறார்கள். ஊடங்களில் வெளியிட்ட படங்களை ஒப்பிட்டு பார்க்கையில், எடப்பாடிக்கு வந்ததை விட இரு மடங்கு கூட்டம் விஜயை காண சென்றிருந்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

ஏற்கனவே மற்ற அரசியல் தலைவர்கள் விமர்சித்து இருந்தது போல், இந்த கூட்டம் அரசியல் கூட்டம் இல்லை. இந்த கூட்டம் நடிகர் விஜயை காண வந்த கூட்டம். எடப்பாடியையோ ஸ்டாலினையோ உதயநிதியையோ எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்கிற எழுச்சி மக்களிடம் இருப்பதில்லை. எனக்கு தெரிந்த அளவில், மற்ற கட்சிகள் கூட்டம் கூட்டுகிறதிலையே ஒரு திட்டமிடல் இருக்கும், மாநாடுகள் எல்லாம் நடந்தால், கிராமங்களில் இருந்து பெண்களை பேருந்துகளில் அழைத்து வருவார்கள். நிர்வாகிகள் அவர்கள் பங்குகிற்கு அவர்களுடன் இருக்கின்ற பத்து பேர் அந்த பத்து பேருக்கு கீழ் இருக்கின்ற நூறு பேர் என்று, கூட்டம் கூட்டுவதே திட்டமிடப்பட்டதாக தான் இருக்கும். அதனால், அந்த கட்சிகளால் இத்தனை பேர் தான் வருவார்கள் என்று சரியாக சொல்லிவிட முடியும்.

விஜய்க்கு வந்த கூட்டம் அப்படியான கூட்டம் இல்லை. இருபதாயிரம் பேர் வரக்கூடும், என்று நினைக்கிற இடத்தில், முப்பதாயிரம் பேர் வரலாம். அந்த வழியில் செல்கிறவர்கள் ஏற்கனவே கூடிக்கொண்டிருக்கும் கூட்டத்தை கண்டு நாமும் இருந்து விஜயை பார்த்துவிட்டு செல்லாம் என்று நினைத்து இருக்கலாம்.

சாமானியர்கள் யாரும் அரசியல் பற்றி தெரிந்துகொள்ள பெரிய முனைப்பு காட்டுவதில்லை, முடிந்தவரையில் அவர்களுக்கு பிடித்த தலைவர்களுக்கு வாக்களிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். விஜய்க்கு வந்த கூட்டம் அப்படியொரு கூட்டம் தான். விஜய் என்ன பேசுகிறார் என்பதைத் தாண்டி விஜயை பார்க்க வேண்டும் அவ்வளவு தான். மற்ற கட்சிகளில், பேருந்து வைத்து கூட்டி வரப்படும் கூட்டமும் அரசியல் பற்றி தெரியாத கூட்டம் தான், ஆனால், அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்து பேருந்து வைத்து கூட்டி வருகின்ற கூட்டம் அரசியல் தெரிந்த கூட்டமாக இருக்கும். விஜய்யிடம் இது தான் இல்லை.

நாம், அரசியல் மாற்றம் தமிழகத்தில் நிகழ வேண்டுமென்றால் ரஜினி தான் அதற்கான கடைசி வாய்ப்பு என்று முன்பு எழுதியிருக்கிறோம். அப்போதே என்னிடம் சிலர்,ஏன் விஜய் வந்தால் முடியாதா?” என்று கேட்டிருக்கிறார்கள். நிச்சயம் முடியாது என்று சொல்லியிருக்கிறேன். அதற்கு காரணம் இருக்கிறது, இரண்டு திராவிட கட்சிகளின் நிர்வாக கட்டமைப்புக்கு எதிரான வலுவான கட்சி கட்டமைப்பை உருவாக்க முடிந்த ஒரு கூட்டம் ரஜினியிடம் இருந்தது. ரஜினி அரசியலுக்கு வந்தால், அவருக்காக கோடிகளில் பணம் செலவு செய்ய பெரு நிறுவனங்கள் காத்து இருந்தது, பாண்டே குறிப்பிட்டது போல ரஜினி தனக்கென்று ஒரு ஊடகம் வைத்துக்கொள்ள தேவை இல்லாத அளவு அரசியல் தெளிவு கொண்ட அவருக்காய் அரசியல் பேசுகிற ஒரு பெருங்கூட்டம் ஊடங்கங்களிலும் இருந்தது, முதிர்ந்த அனுபவம் உள்ள அரசியல்வாதிகள் அவரோடு கைகோர்க்க தயாராக இருந்தார்கள். கட்சியை அறிவிப்பதற்கு முன்னமே பூத் கமிட்டிக்கான நியமனங்கள் நடந்துகொண்டிருந்தது. இப்படி எல்லா நிலைகளிலும் அரசியல் களத்தில் ரஜினிக்கு ஆதரவு தரும் ஒரு பெரும் படை இருந்தது, 90 களில் இருந்து அரசியலை கவனித்து வந்த அந்த படைக்கு, ரசிகர்களாக இருக்கும் பொழுதே அரசியல் கட்சிகளுடன் மோதல் இருந்து வந்தது, ரஜினி அரசியலுக்கு வந்து விடுவாரோ என்கிற பயத்தில் 2017 க்கு முன்னம் இருந்தே நடிகர் ரஜினி மீது இருந்த அரசியல் விமர்சனங்களை அந்த படை எதிர்கொண்டு வந்தது. இத்தனை இருந்தாலும், ரஜினியின் படையும் கூட எப்படியானது என்றால்? ரஜினியின் படை பாஹுபலி மகிழ்மதி படை என்றால், அரசியலில் திராவிட கட்சிகளின் படை காலகேயர்களுக்கு ஒப்பானது. போராட்ட கலவரங்கள்.வாக்குசாவடி வன்முறைகள். பச்சை டிவியும் சிவப்பு டிவியும் நமக்கு மாறி மாறி காண்பித்து இருக்கிறது.

அப்படியே விஜய்க்கு வருவோம்.விஜயால் ஏன் முடியாது என்று நாம் நினைத்தோம் என்றால், விஜய்க்கு ரசிகர் படையில் பரந்த வரம்பும்(vast range) பன்முகத்தன்மையும் (diversity) இல்லை. பெரும் பணக்காரர்களில் இருந்து ஏழை வரை, சாப்ட்வேர் நிறுவனத்தின் முதலாளிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஆறிலிருந்து எண்பது வரை என்று விஜயின் படையில் அந்த பெரிய வரம்பு இல்லை. எல்லோரும் சாமானியர்கள், பெண்கள், அதிகமான ஜென் z  இளைஞர்கள். அரசியல் என்றாலே ஒதுக்கும், கட்சிகள் என்றாலே அச்சம் கொள்ளும் சாமானியர்கள். நாமளும் கூட ஒரு கட்சியின் உறுப்பினர் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் ஆர்வத்தில் ஆசையில் தங்களை இணைத்துக்கொண்ட சாமானியர்கள்,

 மேல்மட்டத்திலும் கூட, ஆதவ் அர்ஜுனா தவிர்த்து கட்சியை வழி நடத்துகிற ஆற்றலும் வலிமையும் தெளிவும் கொண்ட ஒருவரும் இருப்பதாக தெரியவில்லை.விஜய்யிடம் IAS அதிகாரிகள் இருக்கலாம், படித்தவர்கள் இருக்கலாம், ஒரு வேளை விஜய் ஆட்சிக்கு வந்தால், நிர்வாக அரசியலுக்கு இவர்கள் பயன்படலாம்.ஆனால், ஒரு கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிராக சமர் செய்ய தெரிந்த ஆளுமைகள் இல்லை. இது .வே.கவில் இருக்கும் பெரிய குறை.வட்டார வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் பிள்ளைப்பூச்சிகளை வைத்துக்கொண்டு போருக்கு செல்ல முடியாது.ஆனால், வந்துவிட்டார் அதன் கோர விளைவுகளையும் கண்டுவிட்டார்.

அதோடு, விஜயின் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு திரைப்படத்திற்கு டிக்கெட் எடுத்து உள்ளே சென்று திரை முன்னர் ஆடும் தியேட்டர் மெண்டாலிட்டியில் (theatre mentality) தான் இருக்கிறார்கள். அதை நாம் செய்திகளிலும்  பார்க்க முடிந்தது. ஒரு மரக்கிளையிலோ மின்சார கம்பத்திலோ கூரையிலோ ஏறினால் அதனால் ஏற்படுத்தும் விபரீதங்களை பற்றி யோசிக்கும் அளவிற்கு முதிர்ச்சியில்லாத இளைஞர்கள். அதனால், தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை விட மற்றவர்களுக்கு என்ன ஆபத்து நேரும் என்பதை பற்றிய அறிவு இல்லாதவர்கள். குறுகிய சாலைகளில் வேகமாக இரு சக்கர வாகனங்களில் முண்டியடித்துக்கொண்டு செல்லும் மனநிலை கொண்டவர்கள் அதனால், சாலையில் செல்லும் மற்றவர்களுக்கு என்ன ஆபத்து நேரலாம் என்பதை பற்றி துளியும் அறியாதவர்கள்.

கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தும் சமயங்களில் இந்த தியேட்டர் மெண்டாலிட்டியை தூண்டும் விதமாகவே தான் செயல்படுகிறார். விஜய்யும் கூட அதை சரியாக கண்டித்திருக்கவில்லை. மற்ற தலைவர்கள் கூட்டம் முடிந்ததும் அவர் அடுத்து எங்கு எப்படி செல்லுகிறார் என்பதில் பெரிய ஆர்ப்பாட்டம் இருக்காது. மாநாட்டிற்கு வந்த பொழுதெல்லாம் விஜய் அப்படி தான் வந்து சென்றார் என்று சொல்கிறார்கள். ஆனால், சாலை கூட்டங்களின் பொழுது அவரும் கூட இந்த கூட்டத்தை தூண்டுகிற சில வேலைகளை செய்தார் என்கிற  விமர்சனங்களை மறுக்க முடியாது. அனாவசியமாக சைக்கிளில் சென்று பரபரப்பை கிளப்பியவர் தானே! அப்போதும் அவர் சைக்கிளில் வரப்போவது முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததை போல் வீட்டில் தொடங்கி கேமராவும் வாகனங்களும் அவரை பின் தொடர்ந்தது.

 ஒரு இடத்தில் கூட்டம் முடிந்து விட்டது என்றால், அங்கிருந்து எப்படி எந்த வழியாக செல்லுகிறோம் என்பதில் ஆரவாரம் காட்டாமல் இருந்திருக்கலாம். இந்த தொடர் பேரணியில் அவர் அந்த தவறை செய்தார், சில ஊடங்கள் இதை சுட்டிக்காட்டவும் செய்தது. கரூரிலும் அது தான் நடந்து இருக்கிறது. தன் வாகனத்தை பின் தொடரும் வாகனங்களை வர வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். இந்த போக்கு ஒரு இடத்தில் அவர் வருவதற்கு முன் சேரும் கூட்டத்தோடு இன்னொரு கூட்டத்தை சேர்ப்பது போல் ஆகிவிடுகிறது.

மற்ற கட்சிகளில் இருக்கின்ற ஒரு கீழ்ப்படிதல் .வெ.கவில் காண முடியவில்லை. மற்ற கட்சிகளில் கூட்டங்கள் நடக்கும் பொழுது, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் என்று கட்சி கட்டமைப்பில் இருக்கும் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கு கீழும் அணி அணியாக ஆட்கள் இருந்து வேலை செய்வார்கள். ஒவ்வொரு சிறிய அணிக்கு அறிவிக்கப் படாத ஒரு தலைமை இருக்கும் அவர்கள் தங்களுக்குள் தங்களை ஒருங்கிணைத்துக்கொள்வார்கள்.அவர்கள், அவர்களுக்கு மேல் இருக்கும் ஒன்றிய நிர்வாகிகளுக்கு கீழ்படிவார்கள். ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளுக்கு கீழ்படிவார்கள்.

ஆனால், .வெ. வில் அது இல்லை. மச்சான் அங்க நின்னு பார்த்தா தெரியாது இங்கு வந்து பாரு ரெண்டு ஜோடி புறா ஜோய்ன்னு போகுது மாதிரியான முதிர்ச்சியற்ற இளைஞர்களை அதிகம் பார்க்க முடிந்தது. இவர்களோடு விஜயை பார்த்துவிட வேண்டும் என்று சேர்ந்து கொண்ட குழந்தைகளும் பெண்களும்.

தியேட்டர் போன்றோ, பேருந்துகளில் போன்றோ மற்ற பொது இடங்களில் போன்றோ, பெண்களுக்கு என்று தனி வரிசை தனி இடமெல்லாம் கிடையாது, இப்படி முந்தியடித்துக்கொள்பவர்களோடு தான் அவர்களும் நின்று விஜயை பார்க்க வேண்டும்.  இந்த ஆர்வ கோளாறு ரசிகர்களை சரியாக ஒருங்கிணைத்து வழி நடத்த பல்வேறு கட்டங்களில் இருந்திருக்க வேண்டிய கட்சி நிர்வாகிகள் .வெ..விடம் இருந்ததாக தெரியவில்லை.

 “அப்படி போய் பெண்கள் குழந்தைகள் விஜயை பார்க்க வேண்டுமா?” என்கிற கேள்விகளை குற்றச்சாட்டுகளை என்னால் ஏற்க முடியவில்லை. மரபணு ரீதியாகவே நாம் இப்படி ஏதோ ஒரு புதுமையை எப்போதும் நேரில் கண்டுவிடுவதில் ஆர்வம் காட்டியிருக்கிறோம். சரி! விஜய் நடத்திய பேரணி இல்லை ஏதோ ஒரு கோவில் திருவிழா கூட்டம் என்று வைத்துக்கொள்வோமே அப்போதும், பெண்கள் குழந்தைகள் வந்திருக்க கூடாது என்று தான் பேசுவோமா?

 மக்களாகிய நாம் எல்லாவற்றிக்கும் மக்களையே குறை சொல்லி பழகிவிட்டோம். சாமானியர்களுக்கு எதற்கு அரசியல்? அனுபவம் இல்லாமல் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் (ஒருத்தன் புதிதாக வரும் பொழுது தான் இந்த கேள்வி அதிகமாக எழுப்பப்படுகிறது அரசியல் வாரிசுகள் அரசியலுக்கு வரும் பொழுது இப்படி கேள்விகள் எழுவதில்லை). மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள். மக்கள் ஏன் அப்படி விஜயை காண செல்கிறார்கள் என்று எல்லா நேரங்களிலும் மக்கள்! மக்கள்! என்று நாம் குறை சொல்லும் பொழுது நம்மை நாமே தான் குறை சொல்லுகிறோம். இது எல்லாவற்றிலும் நம்மை ஆள்கின்ற அரசியல்வாதிகளின் மீது இருக்கும் குறையை குற்றத்தை நாம் உதாசீனப்படுத்திவிடுகிறோம். அவர்களும் மக்களில் ஒருவர் தான் என்றாலும் அவர்கள் மக்கள் என்கிறதில் இருந்து வேறுபட்டு பத்து படி மேலே தான் இருக்கிறார்கள்.

.வெ.. நிறைய விஷயங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படியான கூட்டங்களை முன்னெடுக்கும் முன், கட்சியின் நிர்வாக கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். கட்சி உறுப்பினர்களுக்கும்  நிர்வாகிகளுக்குமான கண்டிப்பான விதிமுறைகளை ஏற்படுத்தி பின்பற்றச்செய்ய வேண்டும். தமிழக அரசியலில் இதை விபத்தாகவோ சதியாகவோ எடுத்துக்கொண்டாலும், இதைவிட  பெரிய நிகழ்வுகளை, இழப்புக்களை, வன்முறைகளை சந்திக்க நேரலாம் என்பதை கருத்தில் கொண்டு  சரியான விழிப்புணர்வோடு அதற்கேற்ற திட்டமிடலுடன்  அதை கையாள முடிகிற அளவில் வலிமையான நிர்வாகிகளுடன் தான் களமிறங்க வேண்டும். மற்ற கட்சிகள் இப்படி பேரணிகள் நடத்துவதற்கு முன்னர் பல்வேறு நிலைகளில் கட்சிக்குள்ளையே பல்வேறு கூட்டங்களை நடத்துவார்கள். ஆனால், இந்த கட்சியில் விஜயை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் மட்டுமே தான் எல்லா நிலைகளில் மேலோங்கி இருந்தது போல தெரிகிறது. இந்த பிள்ளை பூச்சிகளுக்கு அரசியல் பயற்சி தேவை. இவர்களை மேய்க்கிற சரியான மேய்ப்பர்கள் தேவை. போரில் இழப்புக்களை சந்திக்கும் ஒரு தலைவன் மீண்டும் களத்திற்குள் வரும் முன்னர் தன் படையை பலப்படுத்திக்கொண்டு தான் வர வேண்டும். அந்த வேலைகள் ஆரவாரமின்றி நடக்க வேண்டும். வெற்று ரசிக கூட்டத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது. காலாட்படை குதிரை படை தேர்ப்படை என்று ஒவ்வொரு படைக்கும் பல்வேறு திறமையான வலிமையான காலகேயர்களை எதிர்கொள்ள முடிகிற சேனாதிபதிகள் வேண்டும்.

இதெல்லாம் த.வெ.க.வின் நிர்வாக குறைபாடுகள் தான் என்றாலும், நடந்த நிகழ்வுக்கு அவர்களை பொறுப்பாக்க பார்ப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. ரசிகர்களோ மக்களோ அவர்களிடம் ஒரு ஒழுங்கு இல்லை என்றே வைத்துக்கொள்வோம். இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்ய தான் நிர்வாகம் இருக்கிறது. ஆனால், அந்த நிர்வாக தலைமையில் இருக்கும் துணை முதல்வர் விஜய் தான் பொறுப்பு என்று ஒரு தனிநபரை பொறுப்பாக்குவது கண்டத்திற்குரியது. விஜய் வருவதற்கு வெகு நேரம் முன்னதாகவே அங்கு கூட்டம் கூடியதாகவும் பாடல்கள் ஒலிக்கப்ட்டதாகவும் தெரிகிறது. அந்த கூட்டங்களை காவல் துறையினர் ஒரு அறிவிப்பு மூலம் கலைத்து போக செய்திருக்கலாம்.விஜய் வருவதற்கு வேண்டுமென்றே தாமித்தார் என்கிறார்கள். இப்படியான பேரணி மட்டும் தொடர் கூட்டங்கள் நடக்கும் பொழுது ஒரு இடத்தில் இருந்து அடுத்து இடத்திற்கு செல்ல தாமதம் ஆவது இயல்பு அநேகமான தலைவர்கள் வருகையின் பொழுது, ஆளே இல்லாத பாலங்களில் சாலைகளில் எல்லாம் கூட போலீசார் குவிக்கப்பட்டு வெயிலில் நிற்பதை நாம் கண்டிருக்கிறோம்.

ஒப்பீட்டளவில் அரசியல் தலைவர்கள் வருகைக்கு தேவைக்கு அதிகமாக பணியமர்த்தப்படுகிற காவலர்களை விட மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தேவைக்கு குறைவாகவே தான் காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். விஜய் வருவதற்கு முன்னமே கூட்டம் கூடியது. விஜய் வரும் பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த கூட்டம். ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு பயணப்பட ஏற்பட்ட தாமதம் இதெல்லாம் காவல்துறைக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏற்கனவே ஒரு திட்டமிடல் காவல் துறையிடம் இருந்திருந்தாலும், சூழலுக்கேற்ப சில முடிவுகளை எடுத்து திட்டங்களை மேம்படுத்தியிருக்க வேண்டும். தெரியாது! எதிர்பார்க்கவில்லை! விஜய் தாமித்தது எங்களுக்கு எப்படி தெரியும் என்றால்! அவசர நிலையிலும் இந்த நிர்வாகம் எங்களுக்கு தெரியாது இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் திட்டமிட்டதை விட அதிக கூட்டம் கூடியது என்று சொல்லுமா? அப்படி சொல்வது காவல் துறை தங்கள் மீதே குறை சொல்வதை போன்றதாகாதா!. இது அவர்கள் திட்டத்தில் இருந்த குறைபாட்டை தான் காட்டுகிறது.

இது ஒரு அரசியல் நிகழ்வாக இருக்க போய் எல்லோரும் விஜயை பொறுப்பாக்க பார்க்கிறோம். வேறொரு நிகழ்வு அல்லது மக்கள் போராட்டம் அப்போதும் யாரை குறை சொல்வோம்.இதை நம் சிஸ்டம் எப்படி எதிர்கொள்ளும்? எப்போதும் போல். எல்லாம் நடத்த பின் எல்லாம் சரியாக தான் இருந்தது. ஆனால், அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று சொல்லுமா! சிவகாசி தீ விபத்துகளில் இந்த சிஸ்டம் அப்படி பதிலை தான் தந்தது.விஜய் பக்கம் குறை இருக்கிறது என்றாலும் அவரை இதற்கு எந்த வகையிலும் பொறுப்பாக்க முடியாது, கூடாது. அப்படி செய்தால், நாம் நிர்வாக குறைகளை எப்போதும் சரி செய்து கொள்ள மாட்டோம். அனுமதி தருவது பாதுகாப்பு தருவது கூட்டத்தை கட்டுப்படுத்துவது, கூட்டத்தில் ஏற்படும் அவசர நிலைகளை நிர்வகிப்பது இவையெல்லாம் நிர்வாகத்தின் பொறுப்பு. இதை எந்த அரசியல் கட்சிகளும் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. வேண்டுமென்றால், இந்த அரசியல் கட்சிகளிடம் இதற்கான செலவுகளின் ஒரு பகுதியை செலுத்தச் சொல்லலாம். அந்த கட்சியின் பொருளாதார நிலைக்கேற்ற கட்டணங்களை நிர்ணியக்கலாம்.

ஆம்புலன்ஸ் போக்குவரத்தில் சில ஒழுங்குகள் கொண்டுவரப்பட வேண்டும்.எங்கிருந்து எங்கு சென்றது, என்ன காரணத்திற்காக என்று அரசு ஒரு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். ஆம்புலன்ஸ்கள் தவறான காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க அதுவே அதான் சிறந்த வழி. எதிர்க்கட்சி கூட்டங்களில் மட்டும் அதிகம் தென்படும் ஆளில்லா ஆம்புலன்ஸ்கள், அதன் நோக்கத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்துகிறது. அதுவே அதன் போக்குவரத்தில் சில ஒழுங்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று நம்மை சிந்திக்க வைக்கிறது.

அரசு, தெருக்களிலோ சாலைகளிலோ கூட்டம் கூட அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். அது அனாவசியமானது. போன வாரம், எடப்பாடி கூட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்கிறார்கள். அரசியல் வரலாற்றில் எந்த அரசியல் கூட்டத்திலும் இப்படி நிகழ்ந்ததில்லை என்கிறார்கள். எல்லாம் சரி! ஆனால், அரசியல் பேரணிகள் கூட்டங்கள் ஏன் சாலைகளில் நடக்க வேண்டும். மக்கள் போராட்டங்களுக்கும் கூட பொது இடங்களில் அனுமதி மறுக்கப்பட வேண்டும். இவையெல்லாமே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒன்று தான்.சிந்தித்து பாருங்கள், அந்த கூட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று எடுத்துக்கொள்வோம், தீடீரன்று அந்த கூட்டத்தில், ஒருவருக்கு மருத்துவ அவசரம், என்ன செய்வார்கள்? அரசியல் கூட்டங்கள் பிரத்தேயக இடங்களில் நடப்பதற்கு மட்டுமே தான் அனுமதி தர வேண்டும். வெளியூர்களில் இருந்து ஆட்கள் சேர்ப்பதை சேர்வதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய முடியும் என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு  அது தேவைப்படும் என்று செய்ய மாட்டார்கள். திருவிழாக்களோ, மற்ற நிகழ்ச்சிகளோ காவல் துறையினரை தாண்டி மனித போக்குவரத்தை நெறிப்படுத்தி கட்டுப்படுத்த நிறைய தன்னார்வலர்களை நியமித்து பழக வேண்டும். இந்த வழியே மட்டும் தான் வரலாம், வெளியில் செல்லும் பொழுது எத்தனை வழிகளில் பிரித்து அனுப்பலாம் எந்தெந்த சாலைகள் வரை நெரிசல் ஏற்படும் என்பது வரை அனுமானித்து ஒரு திட்டத்தை வரைவு செய்து பின் அதை ஆய்வுக்குட்படுத்தி செயல்படுத்த வேண்டும். இந்த திட்டமிடல் எல்லாம் கூட்டம் கூடுவதற்கென ஏற்படுத்தப்படும் பிரத்தேயக இடங்களுக்கானதாக நாம் குறிப்பிடுகிறோம். சாலைகளில், தெருக்களில் கூட்டம் கூட்டுவதை அனுமதிக்கவே கூடாது.

இதை படிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள், மாணவர்களுக்கு பொறுமையை கற்றுக்கொடுங்கள், வரிசையில் முந்தியடிக்க எந்த அவசியமும் இல்லை என்று கற்றுக்கொடுங்கள், ஒரு பேருந்து கூட்டமாக இருந்தால், நின்று அடுத்து பேருந்தில் செல்லலாம் ஒன்று பிழையில்லை என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். ஒரு சாலை நெரிசலில் வண்டிகள் நின்று கொண்டிருந்தால்,நாம் மட்டும் செல்வதற்கு வழியிருக்கிறதா என்று தேடாமல், மற்றவர்களை வழியை நாம் மறைக்காமல் இருக்கிறோமா என்பது தான் முக்கியம் என்று சொல்லுங்கள்.சாலை நெரிசல்களில் ஹார்ன் அடிக்க அவசியமில்லை என்று சொல்லுங்கள்.கடைகளில் லிப்ட்களில் பெரியவர்களுக்கு குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சொல்லுங்கள். பொது இடங்களில் கூடும் பொழுது நம்முடைய செயல்கள் மற்றவர்களை பாதிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். விமானம் தரை தொட்டவுடன் எழுந்திருப்பதற்கு ஒரு அவசரமும் இல்லை முன்னிருக்கையில் இருப்பவர்கள் வெளியேறும் வரை காத்திருக்கலாம் என்று சொல்லிக்கொடுங்கள்.தெருக்களில் குறுகிய சாலைகளில் வேகமாக வண்டி ஓட்டுவது வீரமில்லை அது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கோழைத்தனம் என்று சொல்லிக்கொடுங்கள்.இனி வரும் தலைமுறையேனும் இந்த தவறுகளை செய்யாமல் இருக்கட்டும். நிதானமான தலைமுறையாக வளரட்டும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *