கேம் ஆஃப் த்ரோன்ஸ்‘ (Game of Thrones) என்று ஒரு ஆங்கிலத் தொடர், சிலர் பார்த்திருப்பீர்கள், பலர் பார்த்திருக்க மாட்டீர்கள். அதில் ஒரு வசனம் வருகிறது: “ஒரு அரசன், நான் தான் அரசன் என்று (சொல்லால்) சொல்லிக்கொண்டிருக்க மாட்டான்.”

“Any man who must say ‘I am the king’ is no true king.”

மிக சாதாரணமான, ஆழமான வசனம். ஒரு உண்மையை நாம் சொற்களால் நிறுவத் தேவையில்லை. உண்மை எப்போதும் உண்மைதான். சிந்தித்துப் பாருங்கள், அமெரிக்கா எப்போதேனும், “வல்லரசு அமெரிக்காஎன்கிற பெயரில் விழா எடுத்து, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) போன்றவர்களை வரவழைத்து, “அமெரிக்காவின் கே.எஃப்.சி சிக்கன் உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பியிருக்கிறது, அதன் சுவை ஒன்றே போதும் அமெரிக்கா வல்லரசு என்று நிறுவுவதற்குஎன்கிற கோமாளித்தனங்களைச் செய்திருக்கிறார்களா? அவர்கள் அப்படிச் செய்யத் தேவையில்லை. அவர்கள் பல்வேறு துறைகளில் தங்களை வளர்த்துக்கொண்டு, தவிர்க்க முடியாத ஒரு ஆதிக்க சக்தியாக இன்று இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு விளம்பர விழாக்கள் ஒன்றும் தேவையில்லை.

சிறந்த கல்வியைத் தருகிற அரசின் ஆளுகைக்குட்பட்ட நிலம், அல்லது கல்வியில் சிறந்த ஒரு சமூகம் தமிழகத்தைப் போன்று இருக்குமா?

உடனே, புள்ளியியல் தரவுகளைக் கொண்டு வராதீர்கள். “நாங்கள் பீகாரை விட கல்வியில் சிறந்து விளங்குகிறோம், கேரளாவை விடப் பட்டம் படித்த மாணவர்களை அதிகம் கொண்டுள்ளோம்என்று வராதீர்கள். கல்வியில் சிறந்த சமூகம் இப்படியான கீழான ஒப்பீடுகளுக்குப் பின்னால் தன்னை ஒளித்துக்கொண்டு ஒரு தேக்க நிலையில் இருக்காது.

இந்த ஒப்பீடுகள் எப்படியானது என்றால், 30 பேர் இருக்கும் வகுப்பில் ஒருவன் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண் மட்டுமே எடுக்கிறான். அவனை, “ஏன் இவ்வளவு குறைவான மதிப்பெண் எடுத்தாய்?” என்று கேட்டால், “மூன்று பேர் மட்டும்தான் 35 மதிப்பெண்ணைத் தாண்டினார்கள்என்று பதில் சொன்னானாம். அந்த முட்டாளின் ஒப்பீட்டைப் போன்றதுதான், இங்கே அரசியல்வாதிகள் நமக்குள் திணிக்கும்நாங்கள் பீகாரை விட அப்படி இருக்கிறோம், இப்படி இருக்கிறோம்என்பதெல்லாம்.

சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும், இந்த அகண்ட பாரத நிலப்பரப்பின் தற்போதைய எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரியான சவால்களைக் கொண்டிருக்கவில்லை. ஒப்பீட்டளவில் வட மாநிலங்களுக்கு இருந்த அளவிலான சவால்கள் தென் மாநிலங்களுக்கு இருக்கவில்லை. நாம் நம்மைத் தென் மாநிலங்களோடு ஒப்பீடு செய்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. அதிலும் கூட வெறும் புள்ளியியல் தரவுகளை வைத்துக்கொண்டு ஒப்பீடு செய்வது முட்டாள்தனமானது. கல்வியில் சிறந்த சமூகம் அதனைச் செய்யாது.

எந்த ஒரு அரசின் ஆளுகைக்குட்பட்ட நிலவரையறையில் சிறப்பான கல்வி கிடைக்கிறதோ, அங்கே வன்முறைக்குப் பெரிதாக இடம் இருக்காது. அந்தச் சமூகம் பொது விஷயங்களில் முட்டாள்தனமான கண்ணோட்டம் கொண்டிருக்காது. அந்தச் சமூகம் தன் மனித வளத்தை வீணாக்காது. அந்தச் சமூகம் எல்லா விஷயத்திலும் விஸ்தாரமான பார்வையைத் கொண்டிருக்கும். அரசியல்வாதிகள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாய் அது இருக்காது. அரசியல்வாதிகள் தூண்டுதலால் போராட்டங்களில் இறங்காது.

இதெல்லாம் தமிழகத்தில் நடக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. நான் முன்பு சொன்னது போல், பீகாரைத் தூக்கிக்கொண்டு வராதீர்கள். உங்களுக்காக ஒன்று சொல்லுகிறேன், பாரத சமூகம் மொத்தமாகக் கல்வியில் மேம்பட வேண்டிய தேவை இருக்கிறது. இங்கே எந்த மாநிலமும் கல்வியில் ஒரு சிறப்பான நிலையை எய்துவிடவில்லை.

கணக்கு படித்தவர் கல் உடைக்கிறார். பொறியியல் படித்தவர் வங்கியில் வேலை செய்கிறார். கல்வியில் சிறந்த சமூகத்தில் இப்படி ஒரு முட்டாள்தனம் எப்படி நடக்கும்? நீங்கள் ஒரு பொறியாளரை உருவாக்க உழைப்பு, நேரம் எல்லாவற்றையும் செலவழித்து அவர்களைப் படம் எடுக்கவும் (Content creation), வங்கி வேலைக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள். இது முட்டாள்தனம் தானே. மெழுகு மட்டும் தேவைப்படுகிற இடத்திற்குக் கச்சா எண்ணெயை அனுப்புவது போன்ற முட்டாள்தனத்தைக் கல்வியில் சிறந்த சமூகம் செய்யுமா?

சமீபத்தில், வட மாநில இளைஞர் தாக்கப்பட்டது தொடர்பாக எல்லோரும் அவர்கள் மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் நிறைய பேர், இது புதுப் பிரச்சனை கிடையாது என்று அவரவர் அனுபவங்களை எழுதியிருந்தார்கள். அவர்களின் அனுபவமும், சமீபத்திய வன்முறைச் சம்பவமும் வெளிப்படுத்தும் முக்கியமான பிரச்சனை, இங்கே சட்டத்தை யாரும் மதிப்பதே இல்லை என்பதுதான். மதிப்பதில்லை என்றால் சட்டத்தை மீறுவது என்று மட்டும் ஆகாது. வட மாநில இளைஞர் தாக்கப்பட்டது போன்ற பல சம்பவங்கள் அல்லது அதற்கு நிகரான சற்றே இலகுவான வன்முறைகள் நடந்திருக்கின்றன. யாரும் புகாரளிக்கவில்லை. (NO ONE COMPLAINED ABOUT LIGHTER VIOLENCE THEY EXPERIENCED).

சரிதான்! நம் சமூகம் இப்படியான வன்முறைகளைச் சகித்துக்கொண்டு விலகியே தான் சென்றிருக்கிறது. ஒரு பெண் அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் அவருடைய அனுபவத்தை எழுதியிருந்தார். இந்தச் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் போன்றவர்கள் எப்போதும் தொந்தரவு தருபவர்களாக இருந்திருக்கிறார்கள்; அந்தப் பெண்ணையும் கூடக் கேலி செய்து ஆபாசமாகப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார். இப்படிப் பலரும் தங்கள் அனுபவங்களை எழுதியிருந்தார்கள். கல்வியில் சிறந்த சமூகம் இப்படியான சட்ட மீறல்களைச் சகித்துக்கொண்டு விலகிச் செல்லாது.

இப்படியான புகார்களைக் காவல்துறை பெரிதாகக் கருத்தில் கொள்ளாதுஎன்பீர்கள். சரிதான்! அதே பிரச்சனைதான், சரியான கல்வியைப் பெற்ற  காவலர்களை கொண்ட சமூகம் அப்படி இருக்காது. இதற்காக நாம் நம் மாநில அரசை மட்டுமோ அல்லது குறிப்பிட்ட கட்சியையோ மட்டும் சாடவில்லை.

நாம் நம் கண்களைத் திறந்து பார்க்க வேண்டும். தமிழகம் என்று இல்லை, பாரத சமூகமாகவே நாம் ஒன்றும் கல்வியில் சிறந்த சமூகம் இல்லை. கல்வியில் சிறந்த சமூகத்தின் கவனம் மேம்பட்டதாக இருக்கும். நீங்கள் கவனித்திருப்பீர்கள், சிறார்கள் பலர் காவல்துறையினரிடம் வம்பிழுப்பது, அல்லது அவர்களைச் சுட்டித் தரக்குறைவாகப் பேசி வீடியோ வெளியிடுவது, அதன் பின்னர் அவர்களைக் காவல்துறை மன்னிப்புக் கேட்கச் செய்து வீடியோ வெளியிடச் செய்வது என்று இது ஒரு முறை (Pattern) போன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், “மன்னிப்புக் கேட்க வேண்டும் அவ்வளவுதானேஎன்கிற அசட்டைதான் மீண்டும் யாரோ ஒருவர் எங்கோ அப்படி ஒரு தவறைச் செய்ய ஒரு துணிவைத் தருகிறது. கல்வியில் சிறந்த சமூகம் இப்படியிருக்காது.

அந்தப் பையன் முறைத்ததால் வெட்டினார்கள்என்று வழக்கு சம்பந்தமான விவரங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட காவல்துறை உயரதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். அவர் என்ன செய்கிறார் என்றால், ஒரு தீவிரமான சூழலின் தாக்கத்தைச் சமப்படுத்தி குறைக்கப் பார்க்கிறார். கல்வியில் சிறந்த சமூகத்தில், சிறந்த கல்வியைத் தருகின்ற அரசின் கீழ் இருக்கிற காவல்துறை அதிகாரி இப்படிப் பேச மாட்டார். இந்த சமீபத்திய வன்முறை நிகழ்வில் பல சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு, “பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார், அவர் முறைத்ததால் வெட்டினார்கள்என்பது இந்த இடத்தில் அவசியமற்ற ஒன்று. இது சமூகத்தில், தைரியமாக இப்படித் தவறு செய்பவர்கள் மத்தியில் ஒரு மோசமான செய்தியைக் கடத்துகிறது. “அவன் என்னை முறைத்தான் வெட்டினேன் என்றோ, அவன் என்னை அடித்தான் வெட்டினேன் என்றோ சொல்லிக்கொள்ளலாம்என்கிற பொதுப் புத்தியை இது வளர்க்கக்கூடும். பொதுவாக இரு நபர்களுக்கோ அல்லது இரு தரப்புக்கோ இடையில் ஒரு சிக்கல் ஏற்பட்டால் அவர்கள் சட்டத்தைத்தானே அணுக வேண்டும்? கல்வியில் சிறந்த சமூகத்தில் அதுதான் நடக்கும்.

ஆனால், இந்தச் சமூகம் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது? வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பித் கட்டாமல் புரட்சி செய்யலாம்; கேட்டால்பணக்காரர்கள் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தினார்களா?” என்று கேட்கலாம். ஆனால், இந்தப் பணக்கார கார்ப்பரேட்களிடம் இருந்து எவ்வளவு கடன்களை அரசாங்கம் திரும்ப வசூலித்திருக்கிறது, அவர்களை எப்படி முடக்கியிருக்கிறது என்று தெரியாது. இது எப்படி கல்வியில் சிறந்த சமூகத்தின் அணுகுமுறையாகும்?

பேருந்து நடத்துனரோடு ஒரு பிரச்சனையா? ஊர் கூடிப் பேருந்தை நிறுத்தி நடத்துனரையும் ஓட்டுநரையும் அடிக்கப் பாயலாம், யார் கேட்பார்கள்?! பயணிகளே கூடக் கேட்க மாட்டார்கள். இதெல்லாம் சட்ட மீறல்கள், இதை அனுமதிக்கக் கூடாது என்பதைக் கல்வியில் சிறந்த சமூகம் அறிந்திருக்கும்.

இங்கே சாலையில் நாம் செல்லும் பாதையில் நெரிசல் அதிகமாக இருக்கிறதா? அதனால் என்ன! எதிர் திசை வழிதான் சும்மா இருக்கிறதே என்று அதில் சென்று எதிர் திசையில் நெரிசலை ஏற்படுத்தலாம். தேவையில்லாமல் ஹார்ன் அடித்துக் கொண்டிருக்கலாம். இரு சக்கர வாகனம் புக வழியிருந்தால் யாருடைய வழிக்கும் இடையில் புகுந்து வண்டியைத் திருப்பலாம். யார் கேட்பார்கள்? இப்படியெல்லாம்தான் நாம் இருக்கிறோம். கல்வியில் சிறந்த சமூகம் சாலை விதிகளை, விதிக்கப்பட்டது போலவே மதிக்கும்.

இங்கே சட்டத்தை மீறுவது என்பது சமூகத்தின் வழக்கமான செயலாகிவிட்டது.Breaking Law has become habitual action of this coiety. அது ஒரு வழக்கமான செயல் ஆகிவிட்டது என்பதைத் தாண்டி, சட்ட மீறல்களுக்கு ஒரு நாயக பிம்பத்தைப் பல இடங்களில் இந்தச் சமூகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதெல்லாம் நம்மையே தாக்கும் பொழுது நாம் எதிர்வினையாற்றுகிறோம். We are reacting when this habit of breaking laws affect us personally.

இந்த சமீபத்திய வன்முறை தொடர்பாகப் பலரும் பல கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் சிலர்பரிதாபங்கள்கோபிசுதாகர்வடக்கன்நகைச்சுவையைச் சாடியிருந்தார்கள். சிலர் வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களைச் சாடியிருந்தார்கள்.

எனக்கு மிக பிடித்த இயக்குநர்களில் முதன்மையானவர் வெற்றிமாறன். காரணம், ‘ஆடுகளம்திரைப்படம். அவருடைய அநேகமான கதைகளில் யாருமே கெட்டவர்கள் கிடையாது. ஆனால், சூழல்கள் சில நேரங்களில் மனிதர்களைச் சில தவறுகளைச் செய்ய வைக்கின்றன. அவருடைய கதைகள் இப்படியாகத் தான் இருக்கும். இத்தனை முதிர்ச்சியான அவரின் எழுத்தை நினைத்துதான் அவரின் ரசிகரானேன். ஆனால், அவரோ ஐபிஎல்க்கு எதிரான போராட்டத்தில் இறங்கிய இயக்குநர்களில் ஒருவராக இருந்தார். ‘நாளைய இயக்குனர்நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பொழுது, “கருப்பாக இருக்கிறவன் தான் தப்பு செய்வான் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், நீங்கள் அதையே செய்திருக்கிறீர்கள்என்று ஒரு போட்டியாளரை ஏகத்துக்கும் சாடியிருந்தார். தன்னுடைய எழுத்தில், எல்லா தரப்புகளின் நியாய அநியாயங்களை எடுத்துச் சொல்லி, சூழல்களால் மனிதர்கள் செய்யும் தவறுகளைப் பேச முடிகிற முதிர்ச்சியான ஒருவர், எதார்த்தத்தில் ஒரு பக்கமாக இருக்கிறாரே என்கிற ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டதுண்டு. சினிமா, கிரிக்கெட் இரண்டும் பொழுதுபோக்குதான். அரசியல் பிரச்சனைக்காகக் கிரிக்கெட் போட்டிக்கு எதிராகக் கிளம்பிய இயக்குநர்கள், ஒரு வாரம் திரையரங்குகளை மூடுங்கள் என்று போராடவில்லை; கேட்டால்வேலைவாய்ப்புஎன்பார்கள். அதே கிரிக்கெட்டிலும் உண்டு. அவர்கள் கிரிக்கெட்டுக்கு எதிராகப் போராடி அன்று ஒரு ஆட்டோக்காரருக்குக் கிடைத்திருக்க வேண்டிய ஒரு 500 ரூபாயைத் தடுத்திருப்பார்கள்.

சிலர் சாடுவது போல், வெற்றிமாறன் படம்தான் இப்படி வன்முறைகளுக்குக் காரணமா என்றால், முழுமையாக அத்தகைய திரைப்படங்களை நாம் குற்றம் சாட்ட முடியாது. அநேகமான கதைகள் சமூகத்தின் பிம்பங்களாகத் தான் இருக்கின்றன. இந்தக் கதைகள் என்ன செய்கின்றன? சமயங்களில் தவறான ஒருவனின் வசனத்தையோ செயலையோ சமூகம் குறிப்பிட்டுத் கொண்டாடும் ஒரு வாய்ப்பைத் தந்து, ஆங்காங்கே நடக்கும் தவறுகளை ஒரு உணர்வின் கீழ் ஒருங்கிணைக்கின்றன. ‘மாமன்னன்படத்தில், ஃபகத் ஃபாசில் கதாபாத்திரத்தை மெச்சி, அந்தப் பாத்திரத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்தான் இங்கே அதிகமாக இருக்கிறார்கள். நல்லது கெட்டது இரண்டும் ஒரு கதையில் இருந்தாலும், கெட்டதுதான் பரவலாகப் போற்றிப் பின்பற்றப்படுகிறது. கல்வியில் சிறந்த சமூகத்தில் இது எப்படி நடக்கும்?

முழுமையாகத் திரைப்படங்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால், இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல நினைக்கிறேன். யாரும் இங்கே நிறத்தை வைத்தோ தோற்றத்தை வைத்தோ இவர்கள் தவறு செய்கிறார்கள் என்று பொதுமைப்படுத்த நினைக்கவில்லை. ஆனால், நிர்வாணமான குற்றங்களைத் தைரியமாகச் செய்கிறவர்கள், அவர்களுக்கென்று ஒரு தோற்றத்தை வரையறுத்து வைத்திருக்கிறார்கள். அதுவேதான் சில கதைகளில், படங்களில் பிரதிபலிக்கப்பட்டது. நீங்களே கூட உங்கள்வடசென்னைதிரைப்படத்தில் சொன்னது போல, அரசியல்வாதிகள் சமூகத்தின் ஒரு சாராரைத் தங்களின் நலனுக்காக வன்முறைவாதிகளாக வைத்திருக்க நினைக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவங்கள். அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்களேதான் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள் என்று சொல்லியிருந்தீர்கள்.

மொழி, சாதி, நிற பேதங்களை விட்டுவிடுவோம். அந்த வட மாநில இளைஞனும் அவனை வெட்டியவர்களும் பொருளாதார அடிப்படையில் ஒரே நிலையை அல்லது பின்னணியைச் சேர்ந்தவர்கள்தான். சில நேரங்களில் பாதிக்கப்படுகிறவர்கள் கொஞ்சம் மேம்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பல புலம்பல்களைப் படிக்க முடிகிறது. “ஆம், அவன் அப்படித்தான் இருக்கிறான், அவனை நாம் மாற்ற வேண்டும்என்று நினைக்காமல், “அவனையே தப்பு சொல்லாதீங்கஎன்கிற வாதங்களை எல்லாம் கல்வியில் சிறந்த சமூகத்தில் பார்க்க முடியாது.

முடிவாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். கல்வியில் சிறந்த சமூகம் தன் நிலையை யாரோ பறித்துக்கொள்வார்கள் என்று பதற்றம் கொள்ளாது. “ஐயோ வடக்கன் உன் வேலையைப் பறிக்கிறான்என்று சொன்னால், அது நம்பாது. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையிலும், பிழைப்பைப் பொறுத்தவரையிலும் மனிதன் இடம்பெயர்ந்து கொண்டேதான் இருக்கிறான். நம் மக்கள் வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வேலை செய்கிறார்கள். வெளி மாநில மக்கள் நம் மாநிலத்திற்கு வந்து வேலை செய்கிறார்கள். இங்கிருந்து வெளியே செல்பவர்களோ அல்லது வெளியில் இருந்து உள்ளே வருகிறவர்களோ யாருடைய வாய்ப்பையும் பறிப்பதில்லை. மாறாக இவர்கள், தாங்கள் சார்ந்த இரண்டு மாநிலத்திற்கும் அல்லது இரண்டு நாடுகளுக்கும் தங்கள் உழைப்பின் மூலம் பயன்படுகிறார்கள்.

ஒரு தொழிலாளி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும்போது, அவர் தனது உழைப்பின் மூலம் அந்த மாநிலத்தின் உற்பத்தியைப் பெருக்குகிறார். அதே சமயம், அவர் ஈட்டும் வருமானம் அவரது சொந்த மாநிலத்தின் குடும்பப் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிற

கல்வியில் சிறந்த சமூகம் உழைப்பு சார் புலம்பெயர்தலை இவ்வாறாகவே புரிந்து கொள்ளும்..

கஞ்சா புழக்கத்தைக் குறைத்துவிட்டோம்என்கிறார் ஒரு அமைச்சர். “மற்ற மாநிலங்களில் வளர்க்கப்பட்டு, தமிழக வளர்ச்சி பிடிக்காமல் இங்கே வந்து விற்கிறார்கள்என்கிறார் சபாநாயகர். கல்வியில் சிறந்த சமூகமும் அதன் தலைவர்களும் உள்ளதை உள்ளபடியே அணுகுகிறவர்களாக இருப்பார்கள். மேற்கத்திய நாடுகள் கஞ்சாவின் மருத்துவப் பயன்கள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. சித்த மருத்துவத்திலும் கூட அதன் பயன்கள் பேசப்பட்டிருக்கின்றன. வளர்ப்பதும் விற்பதும் பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது. இதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மருந்து போல அணுக வேண்டும். கல்வியில் சிறந்த சமூகம் எதையும் நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தும். கடத்தி வரப்பட்டாலும் மாநிலத்திற்குள் எப்படிச் சட்டத்திற்குப் புறம்பாகப் பரவலாக்கப்பட்டுச் சட்ட ஒழுங்கில் பிரச்சனை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து சரி செய்யும். இதையெல்லாம் செய்யாத சமூகம் எப்படி கல்வியில் சிறந்த சமூகமாக இருக்கும்?

கல்வியில் சிறந்த சமூகத்திற்கு, உழைப்பு மற்றும் மற்றவர்களைப் பாதிக்காத அளவான கேளிக்கை தவிர்த்து, வேறு எந்த மோசமான செயல்களையும் செய்வதற்கு நேரமிருக்காது.இங்கே மோசமான வீணான செயல்களை செய்வதற்கு பெரும்பாலானவர்களுக்கு நேரமிருக்கிறது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பார்க்கக் கூடாத விஷயங்களையெல்லாம் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் படம் எடுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கல்வியில் சிறந்த சமூகத்தில் இது நடக்குமா?

இது குறித்து நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இளஞ்சிறார் நீதிச் சட்டம் (Juvenile Justice Act, 2015) ஏற்கனவே திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்கொடிய குற்றங்களில்” (Heinous Crimes – கொலை, பாலியல் வன்கொடுமை போன்றவை) ஈடுபட்டால், அவர்களைப் பெரியவர்களாகக் கருதி விசாரணை நடத்தச் சட்டத்தில் இடமுண்டு என்றாலும். 16 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு என்று நாம் சட்டத்தில் தனியான சில வரையறைகளைக் கொண்டு வர வேண்டும். பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்களால் பதிவிடப்படும் உள்ளடக்கங்களை நாம் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். எல்லாப் பதிவுகளுக்கும் அப்படி ஒரு கண்காணிப்பு தேவைதான். சமூகம் எதைப் பார்க்க வேண்டும், எது சார்ந்து சிந்திக்க வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்ட சமூகம் தான் கல்வியில் சிறந்த சமூகம்.

நாம் இந்த ஆங்கிலப் புத்தாண்டு முதல் தீர்மானம் எடுத்துக்கொண்டு அதைப் பின்பற்றுவோம். “நுணுக்கமானதாக இருந்தாலும் நான் சட்டத்தை மீறமாட்டேன்என்கிற தீர்மானம்தான் நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய தீர்மானம். சட்டத்தை மதிப்பதை நாம் சமூகப் பழக்கமாக்குவோம்.

புத்தாண்டு வாழ்த்துகள்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *