இந்த நாட்டில், தங்கமும் வெள்ளியும் கலாச்சாரத்தோடு ஒன்றிவிட்ட ஒன்று. விலை ஏறிக்கொண்டே இருந்தாலும், விற்பனை எந்தக் குறையும் இல்லாது இருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்துவதில், தங்கமும் வெள்ளியும் எத்தனை பெரிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவு தங்கம், வெள்ளியும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் இடமளித்து வந்து இருக்கிறது.

கலாச்சாரத்தில் தங்கமும் வெள்ளியும் ஒன்றிவிட்டது போல, சுரண்டலும் ஒன்றிவிட்டது. அதை மக்களும் சகித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். வெங்காயம் வாங்காதவர்கள் கூட தங்கமும் வெள்ளியும் வாங்கியிருப்பார்கள் அல்லது அதில் முதலீடுகள் செய்திருப்பார்கள். இந்தச் சந்தையில், இந்த இரண்டையும் வைத்துப் பல சுரண்டல்கள் நடந்து கொண்டிருந்தது, இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

ஹால்மார்க் முத்திரைகளை அரசு கட்டாயமாக்குவதற்கு முன்பு வரை, இந்த நகை வியாபாரிகளில் அநேகமானவர்கள் 916 நகைகளுக்கு என்று தனி விலை சொல்லுவார்கள்; KDM நகைகளுக்குத் தனி விலை சொல்லுவார்கள். ஒரு கிராம் தங்கத்தின் விலை என்று நாம் அன்றாடம் செய்திகளில் பார்ப்பது 91.6 சதவீதம் தங்கமும் மீதம் செம்பும் கலக்கப்பட்ட தங்கத்தின் விலை. 99.9 தங்கத்தின் விலை தனியாக நிர்ணயிப்பார்கள். ஹால்மார்க் முத்திரை கட்டாயப்படுத்துவதற்கு முன்பு, 916 நகைக்குத் தனி விலை என்றால், 91.6 சதவீதத்தை விடவும் குறைவான தங்கத்தைக் கொண்ட நகைகளை 916 தங்கத்தின் விலைக்கு நம் தலையில் கட்டிவிடுவார்கள். நீங்கள் திரும்பி அதே நகையை அதே கடைக்கு எடுத்துச் சென்றால் ஆயிரம் நொட்டை சொல்லி அதில் எவ்வளவு தங்கம் இருக்கிறதோ அதற்கு மட்டும் விலை பேசி வாங்கிக்கொள்வார்கள்.

மத்திய அரசாங்கம் என்ன செய்தது? 2020-ம் வருடம் வாக்கில், நகைகளுக்கு BIS ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்கிற அரசாணையைப் பிறப்பித்துவிட்டது. சில விஷயங்களை நெறிப்படுத்தும் பொழுது, அதுவரை அதில் சுகம் கண்டவர்கள் அதை எதிர்க்கத்தானே செய்வார்கள்? அப்படியான எதிர்ப்புகளும் கிளம்பவே செய்தது. நீங்கள் சிந்தியுங்கள், 2020-க்கும் முன்பு இந்தியாவில் எத்தனை கோடி பேர் 22 காரட் தங்கத்திற்கான விலையைக் கொடுத்து 20 காரட், 18 காரட், 14 காரட் நகைகளை வாங்கியிருப்பார்கள்? இதில் கொஞ்சம் கொஞ்சமாக நகை வாங்கிச் சேர்க்கும் பொருளாதார ரீதியில் அடித்தட்டில் இருக்கும் மக்களும் நடுத்தர மக்களும்தான் பெரிய சந்தையாக இருந்தார்கள். அத்தனை கோடி பேரின் உழைப்பு சமூகத்தின் ஒரு சிறு கூட்டமான நேர்மையில்லாத நகை வியாபாரிகளால் எத்தனை சுரண்டப்பட்டு இருக்கும்? சுரண்டப்பட்டதா என்று ஆச்சரியமாகக் கேட்பீர்கள் என்றால், ஆம் நிச்சயமாக.

2020-க்கு முன்பு வரை நீங்கள் செலுத்திய ஒரு கிராம் தங்கத்திற்கான விலைக்கு ஒரு கிராம் செம்பு வழங்கப்பட்டு இருக்கும். 100 கிராம் 916 நகையில் 91.6 கிராம் தங்கம் இருக்க வேண்டும்; அதில் 83.3 சதவீதம் மட்டும் இருந்தாலே அது எத்தனை பெரிய திருட்டு? மன்னிக்கவும், ‘White Collar Robbery’. தங்கம் ஒரு வகையில் சொத்து. அதில் நடக்கும் வியாபாரம், வாங்குகிறவர் விற்கின்றவர் என்று இருவருக்கும் லாபகரமானதாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு நகை வியாபாரியிடம் மக்கள் நகை வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் நஷ்டமடையவே தான் செய்து இருக்கின்றார்கள்.

நாம் யாருமே 2020 வரையில் கேள்வி கேட்டதே இல்லை? “உன்கிட்ட வாங்கின நகையை உன்கிட்ட திரும்பக் கொடுக்கிறேன்; செய்கூலி சேதாரம் எல்லாம் வேண்டாம்; எத்தனை கிராம் நகையோ அதற்கான நிகரான தங்கத்தின் விலையைக் கொடு” என்று. அதெப்படித் தருவாங்க என்கிற மனநிலையில்தான் மக்கள் இருந்தார்கள்.

சரி! 2020-க்கு பின் நிலைமை சரியாகிவிட்டதா? நிச்சயமாக இல்லை. இன்னும் தங்க விற்பனையில் என்ன ஊழல் நடக்கிறதோ தெரியாது. ஆனால், BIS ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பின் தங்கத்தின் வியாபாரத்தில் நடந்து வந்த முறைகேடுகள் பெரும் அளவில் குறைந்து இருக்கின்றது. ஆனால், வெள்ளியை வைத்து இன்னுமும் திருடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் நேர்மையற்ற வியாபாரிகள்.

வீட்டில் ஒரு வெள்ளி கொலுசு வாங்கினார்கள். அந்த கொலுசு கொஞ்சம் பழசாகிப் போனது. கடைக்கு எடுத்துக்கொண்டு போய் மாற்றிக்கொண்டு வரலாம் என்று சென்றால், 100 கிராமில் 20 கிராம் கழித்துக்கொண்டு அதற்கு நிகரான பணமோ வெள்ளி நகையோ பாத்திரமோ நீங்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். ‘சிவாஜி’ என்கிற திரைப்படத்தில் வரும் ரஜினி மாதிரி “இந்த பஜார்ல எதாவது ஒரு மூலையில் நேர்மை கொஞ்சம் பாக்கி இருக்காது? அதைத் தேடுறேன்” என்று ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். எல்லா கடைகளிலும் அதே பதில்.

“வாங்கின கடைக்கே எடுத்துப் போகலாம்” என்று மனைவி சொன்னவுடன் அங்கே சென்றோம். கூடுமான வரையில் எந்த ஒரு விமர்சனத்தை வைக்கும் பொழுதும் பண்புடனும் வரம்பு மீறாமலும் இருக்க வேண்டும் என்கிற தீர்மானத்தோடு இருப்பதால், கெட்ட வார்த்தைகள் இங்கே தவிர்க்கிறேன். அங்கும் அதே பதில். நான் என் மனைவியைப் பார்த்தேன். அதை அவர் அங்கே வாங்கிய தேதியில் வெள்ளியின் விலை என்னவாக இருந்ததோ அதை விட அதிக விலைக்கு விற்று, இதை நீங்கள் திருப்பிக்கொண்டு வந்தால், அன்றைய தேதியில் வெள்ளி விலை என்னவோ அதற்கே எடுத்துக்கொள்வதாக உத்தரவாதம் அளித்து இருந்தார்கள். என்னுடைய கோபம் அந்த கடை முழுதும் நிறைந்து இருந்தது. ‘அந்த ஒரு கடையில் மட்டும்தான் இது நடக்கிறதா?’ என்றால் நிச்சயமாக இல்லை.

நடிகர் விஜய் விளம்பரப்படுத்திய கடை ஒன்றில், நம்முடைய உறவுக்காரர் ஒருவரின் குழந்தைக்கு ஏதேனும் வாங்க வேண்டும் என்று சமீபத்தில் சென்றிருந்தேன். என்ன வாங்குவது என்று தீர்மானிக்காமல், முடிவாக வெள்ளியில் ஒரு கிண்ணம் வாங்கினோம். செய்கூலி சேதாரம் எல்லாம் இல்லை. எத்தனை பெரிய மனசு! இல்லை? இல்லை. வெள்ளியும் தங்கமும் வியாபாரம் செய்யும் இடங்களில் சுரண்டல்களே தான் அதிகம் நடந்து இருக்கிறது.

“சரி! வெள்ளிப் பொருளுக்கெல்லாம் ஹால்மார்க் கிடையாதா?” அடுத்த கேள்வியைக் கேட்டேன். “இருக்கு சார்!” “சரி! அங்க வெள்ளி விலை போட்டு இருக்கீங்களே, அதெப்படி 916? அந்த மாதிரி வெள்ளியில் என்ன Grade வெள்ளியோட விலை?” என்று கேட்டேன். “வெள்ளில அதை யாரும் பார்க்கமாட்டாங்க சார்!” என்றார். “சரி! விடுங்கண்ணே இதுக்கும் எதாவது சட்டம் கொண்டு வந்தாதான் கொஞ்சம் திருந்துவாய்ங்க” என்று சலித்துக்கொண்டு, 80 சதவீதம் மட்டுமே வெள்ளி கலந்திருக்கும் ஒரு கிண்ணத்திற்கு 100 சதவீத வெள்ளிக்கான விலையைக் கொடுத்து வாங்கி வந்தேன்.

இதை அன்றே அந்த சில நிமிடங்களிலேயே என்னால் மாற்றிவிட முடியாது. இந்தப் பாராளுமன்றத்தால் அதை மாற்ற முடியும். நாம் வாங்கும் வெள்ளி நகை, பொருள் எல்லாவற்றிலும் 80 சதவீதம் மட்டுமே தான் வெள்ளி இருக்கும். நீங்கள் 100 கிராம் வெள்ளிப் பொருள் ஒன்றை இன்றைய விலையான 35,000 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால், ஒரு வியாபாரி அதற்கான விலையை நிர்ணயிக்கும் பொழுது, 80 X 350 = 28,000 என்று 80 கிராம் வெள்ளிக்கான மதிப்போடு அவர்களின் செய்கூலி, சேதாரம், நடிகர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தை சர்வீஸ் சார்ஜ் என்றெல்லாம் கூடச் சேர்த்துக்கொள்ளலாம். அதுதான் முறையாக இருக்கும். ஆனால், என்ன நடக்கிறது? 100 X 350 = 35,000 ரூபாய் பிளஸ் ஜி.எஸ்.டி-யோடு மக்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். அரசாங்கம் வெள்ளி விற்பனைக்கும் ஒரு ஒழுங்கைக் கொண்டுவர வேண்டும். வெள்ளியின் தரத்தைப் பொறுத்து மட்டுமே அதற்கான விலை தீர்மானிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதில் இன்னொரு அநீதி அல்லது ஆலோசிக்கப்படாத சிக்கல் என்னவென்றால், ஒரு நகை வியாபாரி, வெள்ளியோ தங்கமோ கொள்முதல் செய்யும் பொழுது அங்கே ஒரு ஜி.எஸ்.டி விதிக்கப்படும், 100 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை அவர் விற்பனை செய்யும் பொழுது வாங்குபவரிடம் 200 ரூபாய் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது என்றால், அந்த வியாபாரி அரசாங்கத்திற்கு 100 ரூபாய் செலுத்தினால் போதும். அதை Input Tax Credit என்கிறார்கள். மக்களுக்கு இந்த Input Tax Credit கிடைக்கிறதா? நிச்சயமாக இல்லை. சட்டத்தில் அதற்கு வழியும் இல்லை. பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு மட்டுமே தான் அந்த Input Tax Credit கிடைக்கிறது. பழைய நகையைக் கொடுத்து புதிய நகையை நாம் வாங்கும் பொழுதோ, பழைய நகையை விற்கும் பொழுதோ அங்கே ஒரு வர்த்தகம் நடக்கிறது. ஒரு வியாபாரிக்குக் கிடைக்கும் Input Tax Credit ஏன் தனிநபருக்குக் கிடைக்கக்கூடாது?

நபர் ஒருவர் பழைய நகையைக் கொடுத்து புதிய நகை வாங்கும்போது, ஏற்கனவே பழைய நகைக்கு வரி கட்டியிருக்கிறார். இப்போது புதிய நகைக்கும் முழு வரியும் கட்டுகிறார். பழைய நகை மூலப்பொருளாகக் கடைக்காரருக்குச் செல்லும்போது, ஏன் நுகர்வோருக்கு அந்த வரிச் சுமை குறையக்கூடாது?

பழைய நகையின் மதிப்பைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகைக்கு (Differential Amount) அல்லது செய்கூலிக்கு (Making charges) மட்டும் வரி விதிப்பதே நுகர்வோருக்குச் செய்யப்படும் நியாயமாகும். இதுதான் உண்மையானமதிப்பு கூட்டப்பட்ட வரி‘ (Value Added Tax) தத்துவமும் கூட

இங்கே சிக்கல் என்னவென்றால், தனி நபருக்கு Input Tax Credit கொடுக்கலாம் என்றால், வியாபாரிகள் இன்னும் பல முறைகேடுகளைச் செய்ய அது வழிவகுக்கக் கூடும். அவர்கள், வரி செலுத்தாமல் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவந்த நகைகளைப் பழைய நகைகளாகக் கணக்குக் காட்டி அதற்கு ஜி.எஸ்.டி கட்டியதாகக் கணக்குக் காண்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

நாம் என்ன செய்யலாம்? நாம் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும். அதில் எல்லோரும் வைத்திருக்கும் தங்கம் பதிவு செய்து கொள்ளும்படி நாம் செய்ய வேண்டும் (தங்க இருப்புப் பதிவேடு). நான் ஒரு கடையில் 10 கிராம் தங்கம் வாங்கினால், அந்தத் தங்கம் எந்தக் கடையில் இருந்து நான் வாங்கினேன் என்கிற பதிவை என் பெயரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்தத் தங்கத்தை நான் ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன் என்றால், அது யாருக்குப் போகிறது என்பதையும் பதிவு செய்யும் ஏற்பாடு கொண்டு வர வேண்டும். வங்கிப் பரிமாற்றங்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்வதைப் போல இதைச் செய்ய வேண்டும். ஆனால், ‘Blockchain’ தொழில்நுட்பம் மூலம் இதைச் சாத்தியப்படுத்த வேண்டும். ஒரு தங்கம் எங்கிருந்து எங்கெல்லாம் சென்றது என்கிற பதிவைக் கொண்டிருக்க வேண்டும்.

இப்படித் தங்கத்தின் இருப்பையும் பரிவர்த்தனைகளையும் பதிவு செய்கிற பொழுது, சேதாரத்தையும் பதிவு செய்ய வழி செய்ய வேண்டும். அதுவும் தணிக்கைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால், சேதாரம் என்கிற பெயரில் நடக்கும் முறைகேடுகளையும் நாம் தடுக்க முடியும். இப்படியான ஒரு ஏற்பாடு இருக்கும் பொழுது, வியாபாரிகளும் கூட தனிநபர்களிடம் தங்கம் வாங்கினால் அதற்கும் ஒரு பதிவு இருக்கும். இந்த முறை கொண்டு வரப்பட்டால், திருட்டு நகைகளை விற்பது தடுக்கப்படலாம். என்னுடைய பெயரில் எந்தத் தங்கமும் பதிவு செய்யப்படாத பொழுது நான் எப்படி ஒரு தங்கத்தை விற்பனை செய்ய முடியும்? மறைமுகமாக இது தங்கத்திற்காக நடக்கும் கொலை, கொள்ளை போன்ற வன்முறைகளைத் தடுக்கும். அதோடு, இப்படியொரு பதிவு முறை இருந்தால் வெளிநாடுகளில் இருந்து வரி செலுத்தாமல் வியாபாரிகள் தங்கத்தை இறக்குமதி செய்ய முடியாது.

இதனால் ஏற்படும் நன்மைகள்:

  1. திருட்டுத் தடுப்பு: ஒரு நகையைத் திருடுபவன் அதை எங்கே உருக்கி விற்றாலும், அவனது கணக்கில் ‘இருப்பு’ (Balance) காட்டப்பட வேண்டும். அவரிடம் தங்கம் வாங்கியதற்கான ஆதாரம் இல்லையென்றால், அவர் ‘சப்ளையர்’ ஆக முடியாது.

  2. நேர்மையான வரிவிதிப்பு: கடைக்காரர்கள் தங்கள் லாபத்தை மறைக்க முடியாது. எவ்வளவு தங்கம் உள்ளே வந்தது, எவ்வளவு வெளியே சென்றது என்பது ஒரு டிஜிட்டல் தராசு போலத் துல்லியமாகத் தெரியும்.

     

  3. கடத்தல் தங்கம் (Smuggled Gold): வரி செலுத்தாமல் உள்ளே வரும் தங்கம் சந்தைக்குள் நுழைய முடியாது. ஏனென்றால், விற்பனை செய்யும்போது “இந்தத் தங்கம் எங்கே இருந்து வந்தது?” என்ற கேள்விக்கு டிஜிட்டல் பதில் இருக்காது.

     

  4. கணக்கில் வராத விற்பனை (Black Money): கடைகளில் நடக்கும் ‘பில் இல்லாத’ விற்பனையை இது முற்றிலுமாகத் தடுக்கும்.

இப்படி ஒரு முறையை நாம் கொண்டு வரும் பொழுது இதை மக்களுக்குச் சுமையாக அல்லாமல், தங்கம் விற்பனை சார்ந்து நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கப் பயன்படும்படி செய்ய வேண்டும். இந்தப் பதிவுக்குக் கட்டணம், வரி என்றெல்லாம் இருந்தால், மக்கள் இதை ஆதரிக்க மாட்டார்கள். நம்முடைய தேசத்திற்கு என்று நாம் ஒரு “Digital Gold Wallet” தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். அது இந்தியப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும். நுகர்வோர் ஏமாற்றப்படுவதையும், தங்கம் சார்ந்த குற்றங்களையும் தடுக்க இது ஒரு மிகச்சிறந்த ஆயுதமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *