நாம் எப்பொழுதும் சிக்கல்களில் உள்ள நுட்பங்களைத் தொட்டு அதற்கான சாத்தியமான தீர்வுகளை எழுதி வந்திருக்கிறோம். இன்று நாம் அப்படித் தொடத் துணிந்த சிக்கல்களுக்கான தீர்வுகளும்கூடப் பல விஷயங்களின் வலைப்பின்னல் போன்ற சிக்கலாக இருக்கிறது.

உறவினர் ஒருவர் பக்கவாதம் வந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த உறவினருக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். அவரைப் பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்துகொள்ளக் காத்திருந்த பொழுது, இருபத்தி மூன்று வயது வாலிபர் ஒருவரை அதே பக்கவாத சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கிறார்கள். இதுதான் நாம் இன்று தொட்டிருக்கும் சிக்கல்.

இருபத்தி மூன்று வயது வாலிபருக்குப் பக்கவாதம் எப்படி நடக்கிறது என்று நாம் சிந்திப்பதில்லை. பத்தொன்பது வயது வாலிபருக்கு மாரடைப்பு ஏற்பட்டும் நாம் பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் நாம் ஒரு சமூகமாக, அரசாகச் சாதாரணமாகக் கடந்து கொண்டிருக்கிறோம். அப்படிச் சாதாரணமாகக் கடப்பதற்கு நமக்கு நாமே சில நியாயங்களைச் சொல்லிக்கொள்கிறோம். வாழ்வியல் முறை மாறிவிட்டது, காலம் மாறிவிட்டது, காற்று மாசு அதிகரித்துவிட்டது என்று நியாயங்களைச் சொல்லி இவற்றையெல்லாம் ஏற்கப் பழகிவிட்டோம். நாம் எத்தனை மேம்பட்டாலும் எப்போதும் ஏதேனும் குறையோ பிரச்சனையோ இருந்துகொண்டுதான் இருக்கும்; நாம் அதற்குத் தீர்வு கண்டு மேலும் மேம்பட வேண்டும். அதைச் செய்யாமல் அந்தக் குறைகளோடும் பிரச்சனைகளோடும் வாழப் பழகிவிட்டால் அதுதான் பெரிய சிக்கல். அப்படியான சிக்கல் பாரத தேசத்தில் நிறைய இருக்கிறது. பல்வேறு குறைகளையும் பிரச்சனைகளையும் நாம் ஏற்றுக்கொண்டு வாழப் பழகிவிட்டோம்.

மிகச் சமீபத்தில் ஒரு செய்தி: ஒரு பள்ளியில் மூன்றரை வயதில் இருந்து நான்கு வயதிற்குள் இருந்த ஒரு குழந்தை ஆசிரியரின் கண்டிப்பிற்குப் பயந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது. நிச்சயமாக இப்படியொரு செய்தியை யாராலும் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஆனால், இந்தப் பிரச்சனையை நாம், குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும், பள்ளிகள் எப்படிச் செயல்பட வேண்டும், ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற வகையில் கொண்டுசென்று விடுவோம்.

இதே பிரச்சனையை மாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகுகிறபொழுது, அப்படியென்றால் இனி பிள்ளைகளை நாம் எதற்காகவும் கண்டிக்கவே கூடாது என்கிற ஒரு கேள்வி எழுகிறது.

பிரச்சனை குழந்தையின் பயமோ கண்டிப்போ கிடையாது.பிரச்சனை பெரியவர்களுக்கு வரும் பிரச்சன்னை குழந்தைகளுக்கும் வருகிறதே என்பது தான்.

அந்தச் சிறுவனின் மாரடைப்புக்குப் பின்னணியில் வேறு சில மருத்துவக் காரணங்கள் கூட இருந்திருக்கலாம்; ஆனால், இங்கு நமது விவாதத்தின் மையப்புள்ளி என்பது நமது ஒட்டுமொத்த சமூகத்தின் அடிப்படை ஆரோக்கியம் பற்றியதே ஆகும்

நண்பர் ஒருவரின் மகனுக்கு 7 வயது தான் ஆகிறது, அந்த 7 வயது சிறுவனுக்குச் சர்க்கரை நோய் இருப்பதாகக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் பொத்தாம்பொதுவாக வாழ்வியல் முறை மாறிவிட்டது என்று நாம் கடந்துவிடுகிறோம். ஆனால், இது அரசாங்கத்தின் பல்வேறு தளங்களிலான தோல்வியாக நான் பார்க்கிறேன். ஒரு சமூகம் தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்வதில் அடைந்த பெருந்தோல்வியாக நான் பார்க்கிறேன்.

வாழ்வியல் முறை மாறிவிட்டது, வாழ்வியல் முறை மாறிவிட்டது என்று மட்டும் கூப்பாடு போட்டு என்ன செய்ய? சில விஷயங்கள் நம்மைப் பாதிப்பது தெரிகிறது என்றால் தீர்வைத் தேடுவதுதானே புத்திசாலித்தனம். ஆனால், இங்கே இந்தச் சமூகம் இந்தச் சிக்கல்களோடு வாழப் பழகிவிட்டது.

சரி! வாழ்வியல் முறையில் என்ன மாறியிருக்கிறது? உடல் உழைப்பு குறைந்துவிட்டது, எல்லோரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பேசுவோம். அப்படிப் பேசும்பொழுது, உடற்பயிற்சி செய்வதற்கான நேரமும் இடமும் ஆடம்பரமானதாக இருப்பதையும், அது எல்லோருக்குமானதாக இல்லாததையும் நாம் பேசுவதில்லை. நகரமயமாக்கலுக்கு முன்னர் குழந்தைகள் விளையாடத் தனியாக இடம் தேவையாக இல்லை. நீச்சல் பழக நீச்சல் குளங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை. நகரமயமாக்கல் என்கிற பெயரில், இருக்கின்ற இடங்களையெல்லாம் நெருக்கித் திணித்து நகரங்களை உருவாக்கிய பொழுது இந்தச் சமூகம் குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களை, மைதானங்களைச் சரியான விகிதத்தில் ஒதுக்காமல் விட்டது மிகப்பெரிய பிழை. அந்தப் பிழையை நாம் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு குடியிருப்பை ஒட்டியும் உடற்பயிற்சி செய்ய ஏதுவான உபகரணங்கள், நடைப்பயிற்சி செய்வதற்கான பாதைகள், விளையாடுவதற்கான இடங்கள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியே தான் அவர்கள் அவர்களின் நகரங்களையும் குடியிருப்புகளையும் உருவாக்குகிறார்கள். இங்கே குடியிருப்புகள் உருவாகிறபொழுது அவசர ஊர்தி செல்லும் அளவிற்கு அகலமான வழிகள் கூட இல்லாத அளவில் சந்துகளைக் கொண்ட குடியிருப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

குடியிருப்புக்கான வீட்டடி மனைகள் உருவாக்குகிறபொழுது, பெயரளவில் ஒரு இடத்தைப் பூங்காக்களுக்கென்று ஒதுக்குகிறார்கள். அது ஒன்றுக்கும் உதவுவதில்லை.

நகரங்களை, குடியிருப்புகளை உருவாக்குவதில் நாம் எதைத் தவறவிட்டோம், எங்கு தோல்வியுற்றோம் என்பதைக் கொஞ்சம் உணர்ந்து இருப்பீர்கள்.

அரசு விளம்பரங்களை எடுத்துக்கொள்ளுங்கள், எப்பொழுதும் அது ஆளும் கட்சியின் விளம்பரமாகவேதான் இருந்திருக்கிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில், அவர்கள் அவர்களின் சுகாதாரம் சார்ந்த தரவுகளைக் கொண்டு சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு விளம்பரங்களை உருவாக்குவதிலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் முனைப்பு காட்டுகிறார்கள். உணவில் அதிகம் உப்பு சேர்த்துக்கொள்ளாதீர்கள், சிங்கப்பூரில் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, பிள்ளைகளுக்குத் தொலைபேசியைத் தராமல் வெளியில் விளையாடச் சொல்லுங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அந்த அரசு மக்களிடம் இப்படி விளம்பரங்களை வைப்பதற்கு முன்னமே பிள்ளைகள் வெளியில் விளையாடுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது. உணவில் சர்க்கரை அதிகம் சேர்க்காதீர்கள், சோடியம் குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்வதற்கு முன்னர், உணவு சார் விஷயங்களில் கடுமையான தரக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுகிறார்கள்.

அதே நாம் நம்முடைய சுகாதாரம் சார்ந்த தரவுகளை வைத்து என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எத்தனை பேர், என்னென்ன பிரச்சனைகளுக்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்? என்னென்ன மருத்துவ காரணங்களால் மரணம் நிகழ்கிறது? இதில் எத்தனை பேர் குறைந்த வயதிலேயே பாதிப்படைகிறார்கள்? இப்படித் தரவுகளை வைத்து நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எல்லாம் சாதாரணம் என்று கடந்து கொண்டிருக்கிறோமா? முதலில் நம்மிடம் அநேகமான தரவுகள் சரியானதாகக்கூட இருக்காது. தரவுகளைச் சேகரிப்பதில் இருக்கின்ற ஓட்டைகளை நாம் சரி செய்வதில்லை. நம்முடைய இந்தக் குற்றச்சாட்டு சுகாதாரம் சார்ந்த தரவுகள் பற்றியது மட்டும் இல்லை.

எப்படி உடற்பயிற்சி செய்வதற்கான நேரமும் இடமும் ஆடம்பரமானதாக ஆகிவிட்டதோ அதே போல் ஆரோக்கியமான குடிநீரும் ஆடம்பரமானதாகிவிட்டது. எல்லோருக்கும் ஆரோக்கியமான குடிநீர் விநியோகம் இன்னமும் செய்ய முடியாமல் இருப்பதும் நம்முடைய உள்கட்டமைப்பின் மிகப்பெரிய தோல்வி. இன்னமும்கூட, வீடுகள் உருவான பின்தான் அந்தந்தப் பகுதிகளுக்கான மற்ற வசதிகள் மந்தமாகச் செய்து தரப்படுகின்றன.

ஒரு குடியிருப்புப் பகுதி உருவாவதற்கு முன்னமே அங்கே அடிப்படை வசதிகள் இருக்கும்படி நாம் விதிகளை இறுக்கவில்லை. தான்தோன்றித்தனமாகக் குடியிருப்புகள் உருவான பின் சில வசதிகளை ஏற்படுத்தித் தருவதும்கூட அரசுக்குச் சிக்கலாகிவிடுகிறது.

ஆரோக்கியமான குடிநீர் ஆடம்பரம் ஆனதைப் போலவேதான் உணவும். கலப்படம் இல்லாத எண்ணெய் வாங்குவது ஆடம்பரமானதாகிப் போனது. உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய்தான் அநேகமான ஆரோக்கியப் பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறது. உணவு சார்ந்த விஷயங்களில் கலப்படங்களைத் தடுக்க அரசாங்கம் கடுமையான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. கடுமையான நடவடிக்கைகளைத் தாண்டி சில வழிகாட்டு நெறிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும். கொள்கை ரீதியாகச் சில முடிவுகள் எடுக்க வேண்டும்.

மேலைநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல விஷயங்கள், இங்கிருக்கிற மக்கள் உண்ணும் உணவாக இருக்கின்றன.  பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு அதிகம் இருக்கிறதென்று இந்தியாவில் இருந்து அனுப்பும் உணவுகளை மற்ற நாடுகள் திருப்பி அனுப்பும் செய்திகளைப் பள்ளிக்காலம் முதற்கொண்டு இப்பொழுது வரை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஏற்றுமதித் தரமே அந்த அளவில் இருக்கிறதென்றால், இங்கே நம் மக்கள் உண்ணும் உணவைப் பற்றித் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.

உடற்பயிற்சி, குடிநீர், உணவில் கலப்படம், உணவு உற்பத்தியில் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு – இதெல்லாம் மிகச் சாதாரணமாக ஆரோக்கியத்தோடு தொடர்பு இருக்கின்ற ஒன்று என்பதை எல்லோரும் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வித்தியாசமான ஒரு காரணியும் இருக்கிறது. திருமண வயது; தாமதமாகத் திருமணம் செய்து கொள்வதும்கூட ஆரோக்கியமற்ற குழந்தைகள் உருவாகக் காரணமாக அமையலாம். சூழல் இப்படியிருக்க, பெண்ணின் திருமண வயதை 21 ஆகச் செய்ய வேண்டும் என்று சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூகம் போகிற போக்கிற்குத் திருமண வயது முப்பதைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. அரசு 25 வயதிற்குள் திருமணம் செய்யவும், இளம் வயதில் ஆரோக்கியமாக இருக்கிறபொழுதே குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக வேலை நேரம். மேற்கத்திய நாடுகளில், மணியடித்து விட்டால் கோடி ரூபாய் கொடுத்தாலும் அவர்கள் வேலையைப் பற்றிச் சிந்திப்பதில்லை. மாறாக, இந்தியர்களின் சாபம், நடுராத்திரி இரண்டு மணி ஆனாலும் தேவையென்றால் எழுந்து வேலை செய்யப் பழகிவிட்டார்கள். அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம் என்பதற்காக மலிவாகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பது இந்தியாவின் மனித வளம்தான். இதுவும் அரசின் கொள்கை ரீதியிலான தோல்வியின் விளைவுதான்.

இது எல்லாவற்றிக்கும் மேல்,மருத்துவக் கணிப்புப் பிழைகள் – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த 23 வயது வாலிபருக்கு உண்மையாகவே மூளைப் பக்கவாதம்தானா (Stroke) என்கிற கேள்வியும் எழுகிறது. சில நேரங்களில் சாதாரண வைரஸ் தொற்றால் மூளை நரம்பில் ஏற்படும் வீக்கத்தால் ‘பெல்ஸ் பால்ஸி’ (Bell’s Palsy) எனப்படும் தற்காலிக முக வாதம் ஏற்படும். வாய் கோணுதல் போன்ற இதன் அறிகுறிகளைப் பார்த்துவிட்டு, இதையும் பக்கவாதம் என்று தவறாகக் கணித்துத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கிறார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டும். ஒருபுறம் நோய்கள் பெருகிக்கொண்டிருக்க, மறுபுறம் இப்படிப்பட்ட மருத்துவக் கணிப்புப் பிழைகளை (Medical Errors) நாம் எப்படிக் குறைக்கப் போகிறோம் என்பதும் அரசு தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய சிக்கலாகும்.

இப்படிப் பல்வேறு தளங்களில் நிர்வாகம் அடைந்திருக்கும் தோல்வியைப் போகிற போக்கில் வாழ்வியல் மாற்றம் என்று கடப்பது எப்படி நியாயமாகும்?

நாம் என்ன செய்ய வேண்டும் .

நகரமைப்புக் கொள்கை: புதிய குடியிருப்புகள் உருவாகும் முன்பே, அகலமான சாலைகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்குதல்.அடிப்படை வசதிகளை முன்கூட்டி ஏற்படுத்துதல்.

அடிப்படை வசதிகளில் சமரசம் இன்மை: பாதுகாப்பான குடிநீர் என்பது ஆடம்பரம் அல்ல, அது அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து குடிநீர் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல். நகரமைப்பு கொள்கையை சரி செய்துவிட்டால் எதிர்காலத்தில் அதை சரி செய்யவேண்டிய தேவை இருக்காது. ஏற்கனவே இருக்கும் நகர் பகுதிகளில் வசதிகளை ஏற்படுத்துவது தான் தற்போதைய சவால்.

தரவு சார்ந்த சுகாதார நிர்வாகம்: நோய்கள், வயது வாரியான இறப்புகள் குறித்த மருத்துவத் தரவுகளைத் துல்லியமாகச் சேகரித்து, அதனடிப்படையில் கொள்கைகளை வகுத்தல்.இது ஒரு தொடர்ச்சியான வேலையாக இருக்க வேண்டும். கொள்கை தொடர்ந்து சீர்திருத்தப்பட வேண்டும்

உணவுப் பாதுகாப்பில் கடும் சட்டம்: சமையல் எண்ணெய் என்றில்லை உணவு கலப்படம் மற்றும் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக் கடுமையான தரக்கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவதோடு தொடர் கண்காணிப்பும் இதில் தேவைப்படுகிறது.

மனித வளச் சுரண்டலைத் தடுத்தல்: இந்தியர்களின் உழைப்பு மலிவாகச் சுரண்டப்படுவதைத் தடுத்து, வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு (Work-life balance) இடையிலான நேர வரையறையைச் சட்டப்பூர்வமாக்குதல்.

திருமண வயதும் ஆரோக்கியமும்: திருமண வயதைத் தாமதமாக்குவது ஆரோக்கியமற்ற சமூகத்திற்கு வழிவகுக்கும் என்பதால், வெறும் சட்டத் திருத்தங்களை மட்டும் நம்பியிருக்காமல், 25 வயதிற்குள் திருமணம் செய்து ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பொருளாதார மற்றும் சமூகச் சூழலை உருவாக்கி அரசு ஊக்குவிக்க வேண்டும்.

முன்னேற்பாடான விழிப்புணர்வு: மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்பாக, அதனைச் செயல்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை (உதாரணம்: உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுத் திடல்கள்) அரசு முதலில் உருவாக்குதல்

இப்படி நிர்வாகம் இதையெல்லாம் திருத்திக்கொண்டு மேம்பட்டால், அரசியல் மேம்பட்டால் வாழ்வியல் மேம்படும் ;
ஆரோக்கியமான சமூகம் தானாக உருவாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *