உங்களுக்கு அஸ்வின் தெரியும் தானே! ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர். அவர் முன்னாள் வீரர் சேவாக் குறித்து ஒரு பேட்டியில் இப்படியாக நினைவுகூருகிறார். அதாவது, வலைப்பயிற்சியின் பொழுது சேவாக்கிற்கு என்ன மாதிரியான பந்தைதான் வீசினாலும் சேவாக் அதை துவம்சம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று உங்களுக்கு நான் எப்படித்தான் பந்து வீசுவது, எப்படி பந்து வீசினாலும் விளாசுகிறீர்களே என்று கேட்டதற்கு, சேவாக் ஆப் ஸ்பின்னர்களைப் பந்து வீச்சாளர்களாகவே மதிப்பதில்லை என்று சொன்னதாகச் சொன்னார். மேலும் பேசிய அஸ்வின், சேவாக் போன்ற சிறந்த பேட்ஸ்மேனை வீழ்த்த வேண்டுமென்றால், நான் துல்லியமாக நேர்த்தியாகப் பந்து வீசுவதை விட மோசமான ஒரு பந்தை வீச வேண்டும், அதுதான் எல்லா பந்துகளையும் தன்னால் விளாச முடியும் என்று நினைக்கும் ஒரு வீரரின் அகந்தையை உடைக்கும் என்று சொல்லியிருந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்ன அதே அந்த சூத்திரத்தைத்தான் இப்பொழுது முதல்வர் விஜய் கையிலெடுத்திருக்கிறார். திமுகவிற்கு எதிராக களம் காணுகிற பொழுது, மிக நேர்த்தியான மாண்புமிக்க அரசியல் விளையாட்டுகளை விளையாட முடியாது.
அரசியலில் மதிப்பிற்குரியவராக விளங்கிய மூப்பனார், காமராஜர் போன்றவர்களையெல்லாம் கூட திமுக எத்தனை தரம் தாழ்த்தி விமர்சித்திருக்கிறார்கள் என்பதை இங்கே நாம் மீண்டும் நினைவுகூர வேண்டியதாக இருக்கிறது.
அப்படி ஒரு கட்சியை விஜய் கையாளுகின்ற விதம், கட்சிகளுக்கு இடையே நிகழ்கின்ற அரசியல் யுத்தத்தில் சரியானதே! முதல்வர் விஜயின் நிர்வாக அரசியல் சார்ந்த அணுகுமுறையில் உள்ள விமர்சனங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதுதான் என்றாலும், அதற்காக ஒருபொழுதும் திமுக சிறந்த நிர்வாகத்தை தந்த கட்சி ஆகிவிடாது.
விஜய் அல்லது த.வெ.க. அவர்கள் கட்சியை நிலைநிறுத்திக்கொள்ள அவர்கள் கட்சி குறித்து விஜய் குறித்து பொய்யான பல கதைகளை கட்டமைத்து பரவ விடுகிறார்கள் என்பது உண்மையே! ஆனால், எந்த கட்சி அதைச் செய்யாமல் இருந்தது?
திமுக பொய்களை உண்மைகளாய் நிறுவுவதில் வல்லவர்களாக இருந்தார்கள். சிறு குறு கூட்டங்கள், இயக்கங்களை அவர்களே இயக்கிக் கொண்டு மறைமுகமாக சில கருத்துக்களை பரப்பி வந்தார்கள். எட்டு வழி சாலைக்கு எதிராக நின்றுகொண்டிருந்தவர்களெல்லாம் பரந்தூர் விமான நிலையம் வந்திருக்க வேண்டியது குறித்து பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பரந்தூர் விமான நிலையம் குறித்து நம்முடைய தனிப்பட்ட பார்வை ஏன் எல்லாம் இன்னமும் சென்னையிலேயே நொட்ட வேண்டும் என்பது தான். அது பரந்தூரில் வருவதாக இருந்தாலும், பட்டினப்பாக்கத்தில் வருவதாக இருந்தாலும் எதற்கு ஒரே நகரத்தில் இரண்டு விமான நிலையங்கள்? ஏன் அதை கோவை, மதுரை, திருச்சி என்று ஏதேனும் ஒரு ஊரில் கொண்டுவரக் கூடாது என்பது தான். நிர்வாக அணுகுமுறையில் எப்போதும் ஆயிரம் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.அதற்காக இப்போது நிகழ்ந்திருக்கும் மாற்றத்தை மோசமான கடந்த கால கட்சிகளின் ஆட்சியை நியாயப்படுத்த பயன்படுத்துவது நியாயமே கிடையாது.
கட்சிகளுக்கு எதிரான அரசியல் என்று வருகிற பொழுது விஜய் செய்கிற விஷயங்கள் ஒரு பக்கம் திமுகவை பலப்படுத்துவது போல இருந்தாலும், அவர் செய்வது சரியே என்பதே நம்முடைய வாதம். நீங்கள் உங்கள் நினைவுகளை புரட்டிப் பாருங்கள், திமுக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளாத பொழுது என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அது குறித்து பெரிய அச்சத்தை மக்கள் மத்தியில் வளர்த்திருப்பார்கள். அதை இல்லையென்று சொல்லி அந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து மற்றவர்கள் விவரித்துக் கொண்டிருப்பார்கள். இன்று திமுக ஒவ்வொன்றாய் விவரித்து கொண்டிருக்கிறது. விஜய் திமுகவை நோக்கி மோசமான பந்துகளை வீசிக்கொண்டிருக்கிறார். திமுக மற்றவர்களுக்கு செய்ததை திமுகவிற்கே செய்கிறார்.
வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக கொடி பிடித்த உடன்பிறப்புகள் அதெல்லாம் தேவை என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாண்பை மீறி தனி மனித தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த திமுக மாண்புகள் குறித்து பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது. பொய்களை உண்மையென கட்டமைத்து கொண்டிருந்த திமுக த.வெ.க. பொய் சொல்கிறது என்று கதறிக் கொண்டு இருக்கிறது. விஜய்யின் இந்த போக்கு, த.வெ.க.வின் இந்த அணுகுமுறை திமுகவிற்கு பாதகமாக முடியுமோ சாதகமாக முடியுமோ தெரியாது! ஆனால், இவர்களை இப்படி நடத்த வேண்டும், இவர்களிடம் இப்படித் தான் அரசியல் செய்ய வேண்டும்.
இன்றைய அரசியலில் ஒரு ஆபத்தான போக்கு நிலவுகிறது. த.வெ.க. அரசின் அணுகுமுறைகள் திமுக ஏதோ ஆகச் சிறந்த ஆட்சியை கொடுத்தது என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அல்லது நிலவும் சூழலை சாதகமாக்கி அப்படி ஒரு பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் முன்பு ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியது போல, நாம் தற்போதைய அரசின் நிர்வாக அணுகுமுறைகள் குறித்து விமர்சிக்கலாம். மாற்றுக்கருத்துக்களை எடுத்து வைக்கலாம், ஆனால் ஒருபொழுதும் இந்த அரசிற்கு அனுபவமில்லை என்பதை ஒரு பிரச்சனையாக்கக் கூடாது. ஒருபொழுதும் இவர்களுக்கு திமுக பரவாயில்லை என்கிற கருத்தை வளரவிடக் கூடாது.
விஜயை விட ஒரு வயது சிறியவரான தி.மு.க. தலைவர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அவரின் 44வது வயதில் மக்களவை உறுப்பினராக்கப்படுகிறார். 43 வயதில் உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்டார், 46 வயதில் துணை முதல்வர் ஆக்கப்பட்டார். இவர்களுக்கெல்லாம் என்ன அனுபவம் இருந்தது? அவர்கள் குடும்பத்தை சேர்ந்த கனிமொழிக்குக் கூட இன்னும் தரப்படாத வாய்ப்பு, அனுபவம் இல்லாத உதயநிதிக்கு வழங்கப்பட்டது. 39 வயதில் மக்களவை உறுப்பினர் ஆக்கப்பட்ட ஓ.பி.எஸ் மகனுக்கு என்று இவர்கள் எல்லாம் வாய்ப்பு பெற்ற பொழுது, அனுபவமின்மை குறித்து ஒரு பேச்சும் எழவில்லை. இப்போது அதை பேசுவது மக்களுக்குத் தான் நல்லதில்லை. நாளை புதிதாக எவன் ஒருவன் வாய்ப்பு கேட்டாலும் அனுபவம் இல்லை என்று கூறி மீண்டும் இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையே உள்ளே வெளியே ஆட வேண்டிய சூழலை அது ஏற்படுத்திவிடும். அனுபவம் குறித்த விமர்சனங்கள் நம்மை அதை நோக்கித் தான் இட்டுச் செல்லும்.
ஸ்டாலினும் திமுகவும் மக்கள் தெரியாமல் த.வெ.க.விற்கு வாக்களித்து விட்டார்கள் என்கிற ஒரு எண்ணத்தை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். கதிர் ஆனந்த், ரவீந்திரநாத் குமார்களையெல்லாம் கூட தேர்தலுக்கு முன்பு வரை மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
இது தெரிந்தே நடந்த ஒரு மாற்றம் தான். அதிமுகவின் எழுச்சிக்கு பின்னர், 96 தேர்தல் தவிர்த்து எப்பொழுதெல்லாம் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறதோ அந்த குழப்பம் தான் திமுகவை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது. நடுநிலை வாக்காளர்களின் முதல் தேர்வாக திமுக எப்பொழுதும் இருந்ததில்லை. அதிமுகவின் தற்போதைய பலவீனம், தினகரன் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற குழப்பம், எடப்பாடியை தாண்டி கவர்ச்சியான மூன்றாவது தேர்வாக வந்து நின்ற விஜய்; இப்படி பல காரணங்கள் சேர்ந்து தான் இந்த மாற்றத்தை கொண்டுவந்து இருக்கிறது.
மீண்டும் ஒரு தேர்தல் வந்தாலும் கூட தற்போது இருக்கின்ற எந்த கட்சியும் இனி பெருபான்மை பெறுமா என்பது சந்தேகமே!
சட்டமன்றத்தில் இப்படி பேசியிருக்க கூடாது அப்படி பேசியிருக்க கூடாது என்றெல்லாம் கூட்டாக வரும் விமர்சனங்களை பார்க்கிற பொழுது, சட்டமன்றத்தில் இருந்து சட்டையை கிழித்துக்கொண்டு மட்டும் வெளியே வரலாமா? அவைத்தலைவர் இருக்கையைச் சூழ்ந்து கொள்ளலாமா? ஆளுநரை அவமதிப்பதெல்லாம் மாண்பா?
அரசியலை பொறுத்தவரையில் பல உண்மைகளுக்கு ஆதாரம் இருப்பதில்லை.அரசியலில் ஊழல் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாருக்கும் தண்டனை கிடைப்பதில்லை. காரணம் ஆதாரங்கள் இல்லாமல் இருப்பதால் இல்லை, ஆதாரங்கள் அமுக்கப்படுவதால்.ஆதாரங்கள் இல்லாமல் ஆக்கப்படுவதால்.
2ஜி வழக்கு, கூட்டணி பேரத்திற்காக இழுத்தடிக்கப்பட்டது, ஆவணங்கள் தொலைந்து போனது. இப்படி ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகளில் அநேகமான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும், நிரூபணம் செய்யப்பட்ட சில குற்றச்சாட்டுகள் பொய்யாக இருக்கும்; இது தான் அரசியல்.
மிசா காலத்து ஸ்டாலின் கைதை இவர்கள் மிகைப்படுத்த ஒரே காரணம், அதை ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததற்கான தகுதியாக உருவாக்கியதால் தான். அது திமுகவின் ஆரம்பகாலம், இப்பொழுது போல் உடனே மகனுக்கு பதவி அளிக்க முடியாது. தற்போது மிசா குறித்து பேசிய துரை வைகோ, மிசா சட்டத்தில் திமுகவில் முதல் ஆளாக கைதாகி கடைசி ஆளாக வெளியானது வைகோ தான். ஸ்டாலின் அந்த சமயத்தில் கைது செய்யப்பட்டார், ஆனால் மிசாவில் கைது செய்யப்படவில்லை, அரசியல் மாண்பு கருதி இது குறித்து மேலும் பேசவில்லை என்கிறார்.
உண்மைகள் இப்படித்தான் ஆதாரம் இல்லாமல் அமிழ்ந்து போகிறது. உண்மையில் மிசாவில் கைதான மற்ற தலைவர்கள் ஒருவரும் இந்த அளவிற்கு மிசா கைதை தூக்கிப் பிடித்துக் காட்டிக் கொண்டதில்லை.
மிசாவில் கைதகவில்லையென்றாலும் மிசா காலத்தில் ஸ்டாலின் கைதானதை அரசியலுக்காக சிறுமை படுத்தக்கூடாது என்கிறார்கள். உண்மையாகவே மிசாவில் கைதான வாஜ்பாய், வைகோ போன்றவர்களை விட, ஸ்டாலின் தனது கைதை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தி பின்னர் உடனே சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து காங்கிரஸோடு கூட்டணி வைத்துக்கொண்டால் அது சிறுமைப்படுத்தப்படத் தான் செய்யும்.
ஸ்டாலினின் அரசியல் மூலதன பர்னீச்சரையே சட்டமன்றத்தில் உடைத்து விட்டதால் தான் திமுக பதறுகிறது.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட உடனே திமுக ஆட்சி கவிழ்க்கப்படவில்லை. அதுவும் கட்டமைக்க பட்ட கதை தான்.ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆட்சி முடிவதற்கு ஐம்பது நாள் இருக்கும் பொழுது தான் அது கலைக்கப்பட்டது. மிசாவில் ஏன் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்படவில்லை? அப்படியென்ன தலைவராக முதல்வராக இருந்த கருணாநிதி பேசாததை, செய்யாததை ஸ்டாலின் செய்தார்? இந்த கேள்விகளுக்கு விடை தேடினால் இதற்கு பின்னால் இருக்கின்ற உண்மை புரியும்.
அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆட்சி கலைக்கப்பட்டு அதற்கு பின் 1980இல் நடந்த தேர்தலில் ஏன் திமுக சரி பாதி இடங்களை காங்கிரஸ்க்கு அளித்து கூட்டணி அமைத்தது? எந்த கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்ததோ, எந்த கட்சியின் ஆட்சியை காங்கிரஸ் கலைத்ததோ அதே கட்சியோடு ஏன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது? அதுவும் எம்.ஜி.ஆரின் ஆட்சியை கலைத்துவிட்டு ஏன் அதை செய்தது?
ஆதாரம் இல்லை என்பதற்காக திமுக, காங்கிரஸ் எல்லாம் உத்தம கட்சிகளாகிவிடாது. அனுபவத்தை கொண்டு ஆதாரம் இல்லாமல் ஆட்டையைப் போடுவது எப்படி என்று இருந்த ஆட்சிகளுக்கு மாற்றாக ஒரு ஆட்சி அமைத்திருப்பது நல்ல விஷயம். தற்போதைய ஆட்சியாளர்கள் சரியில்லை என்றால் மீண்டும் ஒரு புதிய பாதையைத் தான் மக்கள் தேட வேண்டுமே தவிர பழைய குருடி கதவை திறடி என்று பழைய நிலைக்குத் திரும்பக் கூடாது.
விஜயை பொறுத்தவரையில், அவர் முன்பு சொன்னது போன்று அந்த மூன்று பைல்களில் என்ன இருந்தது என்பது குறித்து ஆய்ந்து அறிந்து, நடந்த முறைகேடுகளை பற்றி பேசியிருந்தால் இந்த சர்ச்சைகளுக்கு இடம் இருந்திருக்காது.
எல்லா கட்சிகளையும் போன்று பூச்சாண்டி வேலையைத் தான் அவரும் செய்கிறார். காங்கிரஸ் எப்படி ஊழல் குற்றச்சாட்டை திமுகவை ஆட்டுவிக்க பயன்படுத்தியதோ, பாஜக எப்படி ஜெயலலிதா இருந்த வரை அவர் மீது இருந்த வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருந்ததோ அதே வழியைத் தான் விஜய்யும் பின்பற்றுகிறார் என்று தோன்றுகிறது.திமுக கட்டமைத்து வைத்திருக்கின்ற பிம்பத்தை உடைக்க வேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருக்கிறது. அதை சரியாக செய்யாமல் பூச்சாண்டிகாட்டிக்கொண்டிருந்தால் அது திமுகவிற்கு சாதகமாக கூட முடியலாம்.
உதயநிதியும் அண்ணாமலையும்கூட த.வெ.க. அமைச்சர்களின் ஊழல் குறித்த ஆதாரங்கள் இருக்கிறது என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த பூச்சாண்டிகளுக்கு மதிப்பளிக்கக் கூடாது.
உதயநிதி, அண்ணாமலை, விஜய் யாராக இருந்தாலும் உங்களிடம் ஒரு கட்சி அல்லது நபர் செய்த ஊழல் குறித்த ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுத்து தண்டனை பெற்றுக்கொடுங்கள். நாம் இவர்களில் யார் ஒருவரின் ஆதரவாளராக இருந்தாலும் ; இவர்களை அதை நோக்கி தான் தள்ள வேண்டும்.
முதல்வர் விஜய் சட்டம் ஒழுங்கு குறித்து அளித்த பதிலும் கூட திருப்திகரமாக இல்லை. தனிநபர் ஒழுக்கம் வேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார், அதையும் கூட இந்த அரசு எப்படி கொண்டு வரும் என்பது குறித்து பேசியிருக்கலாம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பொறுத்தவரையில் இதுவரை இருந்த எந்த அரசும் திருப்திகரமான பதில் அளித்ததில்லை.
நடக்கின்ற பிரச்சனையை குறைக்க என்ன வழி, தடுக்க என்ன வழி, இனிமேல் நடக்காமல் தடுக்க என்ன வழி, எதிர்காலத்தில் சமூகத்தில் கொலை, கொள்ளை நடக்காமல் இருக்க என்ன நீண்ட கால திட்டத்தை இந்த அரசு வைத்திருக்கிறது என்று இதற்கு முன்னிருந்த அரசுகளும் கூட பேசியதில்லை தான். கொலை, கொள்ளை தடுக்க உடனடி நடவடிக்கைகள் என்ன எடுக்கப்படுகிறது, எதிர்கால திட்டம் என்ன, நீண்ட கால திட்டம் என்ன? இதையெல்லாம் தான் நாம் விஜய்யிடம் கேட்க வேண்டும். இதற்கு முன்னர் தர்மராஜர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்ததைப் போல முந்தைய ஆட்சியாளர்களை ஒப்பீட்டு குற்றம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு ஆபத்தான போக்கு. அது திராவிட கட்சிகள் உத்தம கட்சிகள் என்கிற பிம்பத்தை வளர்த்தெடுக்கும்.
உண்மைதான், இந்த அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமிழைத் தவறாக வாசிக்கிறார்கள். விஜய் புகழ் பாடுகிறார்கள். முதிர்ச்சியில்லாமல் இருக்கிறார்கள். அதெல்லாம் விமர்சனம் செய்ய வேண்டியது தான். ஆனால், இதற்கு முன்னர் சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்றாவது நமக்குத் தெரியுமா? ஸ்டாலின் சட்டையை யார் கிழித்தார்கள் என்றாவது தெரியுமா? ஆனா ஊனா வெளிநடப்பு என்று கிளம்புவார்களே ஏன் என்று தெரியுமா?
உள்ளே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது நமக்கு முழுமையாக தெரிவதே ஒரு நல்ல முன்னேற்றம்தான். சபாநாயகர் நடுநிலை போல் தெரிகிறார், சமயங்களில் நடுநிலை தவறுகிறார். த.வெ.க. ஆதரவாளர்கள் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு ரீல்ஸ் போடுகிறார்கள் எல்லாம் உண்மை தான். விஜயகாந்திற்கு என்ன செய்தார்கள், நாக்கை துருத்தியதை மட்டும் மீண்டும் மீண்டும் போட்டுக் காண்பித்தார்கள். இன்று அதையே இவர்களுக்கு செய்கிற பொழுது வலிக்கத்தானே செய்யும்.
த.வெ.க மீது விமர்சனம் வைப்பது வேறு, வெறுப்பை உமிழ்ந்து இவர்களுக்கு திமுக பரவாயில்லை என்று கட்டமைக்கப்படுகிற பிம்பத்திற்கு துணை போவது என்பது வேறு. இரண்டிற்குமான வித்தியாசத்தை அரசியல் பார்வையாளர்கள் உணர வேண்டும்.
நாம் நம்முடைய விமர்சனங்களில் அனுபவமின்மை குறித்த கருத்துக்களை ஒதுக்க வேண்டும். அது இனி புதிதாக யார் ஒருவர் தலையெடுப்பதையும் தடுத்துவிடும். பழைய கட்சிகள் பரவாயில்லை என்கிற கருத்துக்களை அறவே தவிர்க்க வேண்டும். நாம் இதுவரை எப்போதும் இப்போதும் கெட்டவர்களில் யார் கொஞ்சம் நல்லவர்கள் என்று தான் தேர்வு செய்துகொண்டிருந்தோம். இனியும் நாம் அதை தொடர வேண்டிய சூழலில் தான் அரசியல் இருக்கிறது. அதனால் சில ஒப்பீடுகளை நாம் தவிர்ப்பது தான் நல்லது.