நம் நாடு , சுதந்திரத்திற்கு பின்னான குடியாட்சியில் எந்த மதத்திற்கும் எதிரானதாக இருந்ததில்லை இருக்க முடிவதும் இல்லை. அப்படியிருக்க பல சமயங்களில், தேச மக்களிடையே வேற்றுமை எண்ணங்கள் அரசியல் லாபங்களுக்காகவே நம்மில் புகுத்தப்படுத்துவது தெளிவாகிறது. அப்படி ஏற்படுத்துப்படும் எண்ணங்களுக்கு நாம் இடம் கொடுக்காத வரையில் எந்த சிக்கலும் இன்றி நாட்டின் ஒருங்கிணைப்பை நம்மால் பலப்படுத்த முடியும், சமூக நல்லிணக்கத்திற்கு கேடில்லாமல் காக்க முடியும். இன்றும் அரசியல் கலக்காத இடங்களில் அந்த நல்லிணக்கம் நல்ல ஆரோக்கியத்தோடு தான் இருக்கின்றது. அரசியலிலும் கூட அது தொடர வேண்டும் என்பதே நம் எண்ணம்.
சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளை நாம் அலசிய போது எழுந்த எண்ணங்களே இந்த கட்டுரை.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் தமிழகத்தில் இருந்து டெல்லி சென்று சமீபத்திய நோய்த் தொற்றுக்கு ஆளான இஸ்லாமியர்கள் குழு டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது வந்த புகார்களை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் டெல்லி முதல்வருக்கு எழுதும் கடிதத்தில் டெல்லியில் சிகிச்சையில் இருக்கும் அல்லது முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமியர்களை முறையாக கவனித்துக்கொள்ள வலியுறுத்தி அவர்களிடம் இருந்து வந்த புகார்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
2020 ஏப்ரல்- 25ம் தேதி இது சம்மந்தமான செய்தியானது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருக்கின்றது.
சென்ற வாரம் (2020 ஜூலை 7ம் தேதி) முஹமது இம்ரானுல்லாஹ் என்பவர் தி ஹிந்து ஆங்கில வலைத்தளத்தில் பதிவிட்ட கட்டுரையின் படி தமிழக காவல் துறை டி.ஜி.பி. உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தகவலின் படி நோய்த் தொற்று பரவலோடு இஸ்லாமியர்களை தொடர்ப்புப்படுத்தி சமூக வெறுப்பை தூண்டுபவர்கள் என்று சட்டப்பிரிவுகள் 356 , 159 ன் படி வழக்கு பதியப்பட்டதாக அறியப்படுகிறது. அது மட்டும் இன்றி அரசாங்கம் மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி சமூகத்தின் எந்த பிரிவினரையும் குறிப்பிட்டு செய்தி வெளியிடக் கூடாது என்று ஊடகங்கள் பணிக்கப்படுகின்றன.
இப்படி இந்திய சமூகமும், முன்னாள் தேச தலைவர்கள் மற்றும் அம்பேத்கர் போன்ற அறிஞர்கள் வகுத்து கொடுத்த சட்டத்தின் படி இயங்கும் இந்திய அரசாங்கமும் ஆட்சியில் யார் இருந்தாலும் எந்த ஒரு சமூக பிரிவுகளின் மீதான வெறுப்புகளையும் ஏற்பதில்லை. இதை இந்தியர் ஒவ்வொவொருவரும் புரிந்து கொள்ளும் பட்சத்தில் அரசியல் லாபங்களுக்காக நம் மீது திணிக்கப்படும் அச்ச உணர்வுகளையும் வெறுப்பு எண்ணங்களையும் தவிர்த்து ஒரே சமூகமாக நாம் அனைவருக்கும் உண்டான பொது பிரச்சனைகளை களைய நேரம் கிடைக்கும்.
2020 ஜூலை 10ம் தேதி தி ஹிந்து தமிழில் வெளியிடப்பட்ட செய்தியின் படி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று(10ஜூலை 2020 அன்று) வெளியிட்ட அறிக்கை என்று அறியப்படும் அறிக்கை கீழே :
//
“தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 முஸ்லிம்களை தமிழக அரசு கைது செய்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பிறகு இவர்களுக்குப் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் இவர்கள் சைதாபேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பிணை வழங்கப்பட்ட நிலையில் இவர்களில் 98 நபர்கள் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தமிழக அரசு இந்த சிறார் சிறையை விசா விதிமுறை மீறல் செய்தவர்களை அடைப்பதற்கான சிறப்பு முகாம் என்று அறிவித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் 12 அன்று 31 வெளிநாட்டவர்களுக்குப் பிணை வழங்கியதுடன் இவர்கள் விசா விதிமுறை மீறலுக்காக போதுமான அளவு தண்டனை அனுபவித்து விட்டார்கள் என்றும் இவர்கள் கரோனாவை பரப்பவில்லை என்றும் அவர்களது வழக்கை முடித்து அவர்கள் தம் சொந்த நாடுகளுக்குத் திரும்பத் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே வெளிநாட்டு முஸ்லிம்கள் இந்த கொடுமையை அனுபவித்து வருகின்றார்கள். தமிழகத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களை விடுவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பின் சார்பிலும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் புழல் சிறையில் உள்ள வெளிநாட்டு முஸ்லிம்கள் அங்கிருந்து ஆரோக்கியமான இடத்திற்கு மாற்ற வேண்டுமென்றும் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் மீதான வழக்குகள் உடனடியாக முடிக்கப்பட்டு அவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப வழிவகுக்க வேண்டுமென்று விடுத்த வேண்டுகோளுக்கும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.
கொரோனா பரவும் புழல் சிறையில் வெளிநாட்டு முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 30 நபர்கள் தங்கும் வசதி கொண்ட இடத்தில் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வழி வகுக்காமல் 129 பேரை அடைத்து வைத்திருக்கின்றனர்.
தமிழக அரசின் மனிதநேயமற்ற செயலை கண்டித்தும். இவர்கள் அனைவரது வழக்கையும் உடனடியாக முடித்து அவர்களைத் தாயகம் அனுப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும். இதர ஊர்களில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் முன்பும் வரும் செவ்வாய்க்கிழமை ஜூலை 14 காலை 11 மணிக்கு முற்றுகை போராட்டம் நடைபெறும்.
சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முகக் கவசம் அணிந்தும் உலகளாவிய அளவில் தமிழர்களின் விருந்தோம்பல் மாண்பிற்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அநீதிக்கு எதிராக அனைவரும் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்”.
//
நோய்த் தொற்றுக்கு எதிராக எல்லா நாடுகளும் போராடிக்கொண்டிருக்கும் கடினமான சூழலில் இத்தகைய போராட்டத்தின் அவசியம் என்ன என்கிற கேள்வி எழாமல் இல்லை .
இந்த அறிக்கையின் மூலம் தெளிவாகும் ஒரு விஷயம் ஆன்மீகம் என்கிற சொல் எல்லா சமயத்தவருக்கும் பொதுவானது என்று. ரஜினி முன்னெடுக்கும் ஆன்மீக அரசியலும் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்க முடியும் என்று அறிய முடிகிறது.ஆனாலும் கூட சிலர் ஆன்மீக அரசியல் என்றால் மேலே இருக்கும் அறிக்கையை வெளியிட்ட தலைவரின் ஆதரவான அரசியலா என்று சிலர் கேட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
போராட்டத்திற்கான தேவை இருப்பதாக வைத்துக்கொண்டாலும் இங்கே சமயத்தின் துணை தேடும் போக்கு சரியானதா என்று கேள்வியும் தோன்றுகிறது. வெளிநாட்டவர் என்பதோடு நிறுத்தியிருக்கலாம் என்பது வெகுஜனங்களின் கருத்தாக இருக்கக்கூடும் .
காரணம் மேலே குறிப்பிட்ட இரண்டு செய்திகளின் படி இசுலாமியர் என்று இல்லாமல் சமுகத்தின் எந்த பிரிவினர் மீதும் வெறுப்புணர்வு பரப்படுவதை இந்தியா ஒரு சமுகமாகவும் சட்ட ரீதியாகவும் அனுமதிக்காத போது விசா நீடிப்பில்லாமல் தங்கிய வெளிநாட்டவர்களை வெளிநாட்டவர் என்றே அடையாளப்படுத்தியிருக்க வேண்டும்
வெளிநாட்டவர்கள் சிறையில் இருப்பதை பற்றி அந்த அந்த நாட்டின் தூதரங்கள் நம் அரசாங்கத்திடம் இது சம்மந்தமாக எதுவும் பேச்சு வார்த்தை நடித்தியிருக்கிறதா என்பதை பற்றி தகவல் கிடைக்கவில்லை. அறிக்கையின் படி அப்படி எதுவும் நடந்தாக தெரியவில்லை.
போராட்டத்திற்கான அழைப்பு வைப்பதை விடுத்து நீதிமன்றம் மூலகமாவே தமிழக அரசிடம் விளக்கம் கேட்க சட்ட ரீதியிலான வழிகள் இருக்கக் கூடும் . அதுவே சரியானதும் கூட.
சமூக பிரிவுகளினூடே இருக்கும் ஆரோக்கியமான நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு, அரசியல் லாபங்களுக்காக வேற்றுமை எண்ணங்களை திணிப்பவர்கள் எந்த பிரிவில் இருந்தாலும் அந்தப் பிரிவை சேர்ந்தவர்களே அதை சுட்டிக்காட்டி சரி செய்வதே ஆகும். அதை நோக்கி நகர்வது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றது.