இராவண அரசியல் என்று நாம் எழுதி வரும் இந்த தொடரில் திருவள்ளுவரை பற்றி எழுத முனைந்தற்கு சமீபத்திய நிகழ்வுகளே காரணம்.

நம் இராவண அரசியல் தொடரின் நோக்கமானது எவ்வாறு தமிழர்கள்  போற்றிய பின்பற்றிய அல்லது அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி விட்ட விஷயங்களை தமிழர்களுக்கு எதிரானதாக சித்தரித்து வருகிறார்கள் என்பதையும்; இராவணன் போன்ற நம் கலாச்சாரத்தில் வில்லனாக காட்டப்பட்ட குறியீடுகளை தமிழர்களின் அடையாளமாக மாற்ற முற்படும் அரசியலையும் அலசுவதே ஆகும். அதன் ஒரு பகுதியாக திருவள்ளுவர் சார்ந்த விஷயங்களில் இந்த திராவிட அரசியல் உருவகப்படுத்தியிருக்கும் சில விஷயங்களை பேசுவதே இந்த கட்டுரை.

குறிப்பு: எந்த கட்சியின் செயல்பாட்டையும் தோ எதிர்ப்பதோ நம் நோக்கமன்று.உண்மைகளை ஆராய்வதே நம் நோக்கம்.

நிகழ்வு 1: திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய பா.ஜ .க.

நிகழ்வு2:சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில், காவி உடையுடன் புரோகிதர் போல் திருவள்ளுவரின் படம்.

செய்தி: “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில், காவி உடையுடன் புரோகிதர் போல் திருவள்ளுவரின் படம் இடம்பெற்றதற்கு வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் படத்தின் சித்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் இந்தியமாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.”

வைரமுத்து அவர்களின் கண்டனம்:“உலகப் பொதுமறை திருக்குறள்; உலகப் பொதுமனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ண அடையாளம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம்”

வைரமுத்து அவர்களின் கருத்துக்கான பதில் கேள்விகள்:

அனைவருக்கும் பொதுவான இறைவனை, அவர் அவர் நம்பிக்கைக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு வழிபடும் போது. அங்கே சென்று  கடவுள் யாவருக்கும் பொதுவானவர் ஆகையால் இந்த அடையாளங்ககளிலும் வழிமுறைகளிலும் கடவுளை வழிபடுவது தவறு என்று வாதிட முடியுமா?

பொதுவான வண்ணம் என்று ஒரு வண்ணம் இருக்கிறதா?

உங்கள் மனதில் காவி ஒன்றைக்குறிப்பது போன்ற தோற்றம் இருக்கும் அதே வேளையில் வெண்மை எதனையும் குறிப்பிடவில்லை என்று சொல்லிவிட முடியுமா?

நெற்றியில் திலகமிடுவது என்பது நம் பரம்பிரியமாக இருந்து, இன்று மத அடையாளங்களுக்குள் அடைக்கப்பட்டுவிட்ட வேளையில் . அத்தகைய திலகமிடாமல் இருப்பதும் கூட ஒரு மத அடையாளம் தானே?

நீங்கள் சிலரை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க உங்களுக்கு நேரம் கிடைக்குமா?

புதிதாக வள்ளுவருக்கு  காவி சாயம் பூசப்பட்டதா?

வள்ளுவர் வாழ்ந்த காலத்தை பற்றி அதிகம் குறிப்புகள் நமக்கு கிடைக்காமல் போனது என்பது நாம் அறிந்ததே. அப்படியிருக்க அவர் எப்படியிருந்திருப்பார்  (தோற்றம்) என்பதை  பற்றி யாரும் ஒரு உறுதியான முடிவிற்கு வந்துவிட முடியாது.

திராவிட இயக்கங்கள் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்னர் திருவள்ளுவர் பலவகைகளில் சித்தரிக்கப்பற்றிருக்கின்றார்:

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த நாணயத்தின் ஒரு புறம் திருவள்ளுவரின் உருவமும் மற்றொரு புறம் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்பவர் பெயரிலிலேயே மதுரையில் எல்லிஸ் நகர் பெயரிடப்பட்டது. இந்த எல்லிஸ் மற்றும் கால்டுவெல் போன்றவர்களின், நம் கலாச்சாரத்தை பற்றிய புரிதல் அல்லாத ஆய்வகளை தான் திராவிட இயக்கங்கள் இன்று வரை பிடித்துக்கொண்டு இருக்கின்றது. இவர்களை திராவிட இயக்கங்ககளின் தந்தைகள் என்று சொல்லுமளவிற்கு இவர்களின், இவர் போன்றவர்களின் கூற்றுகளை திராவிட இயக்கங்கள் கேள்விகள் இல்லாமல் ஏற்றுக்கொண்டதினாலேயே இவர்களின் ஆய்வுகள் மற்றும் கூற்றுகள் சரி என்று கொள்ள முடியாது.

இந்த எல்லிஸ் என்பவர் வெளியிட்ட நாணயத்தில் திருவள்ளுவர் ஒரு சமணரை போன்று உருவக படுத்தப்பட்டு இருக்கின்றார்.

திருவள்ளுவரை உருவகப்படுத்த, எந்த உருவத்தையும் எல்லிஸ் மாதிரிக்கு எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. “இவரை உருவகப்படுத்தியவர்கள், இவரை ஒரு சமண முனிவர் என்று கருதியுள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது.

திருக்குறளில் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று வரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலுவான சான்றுகள் ஆகும்” என்கிறார் இது குறித்து எழுதியுள்ள கல்வெட்டு ஆய்வாளரான ஐராவதம் மகாதேவன்.

1904 இல், கோ. வடிவேலு செட்டியார் என்பவர், ‘திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்’ என்ற நூலை வெளியிட்டார் அதில் அவர் திருவள்ளுவரை ஜடா முடியுடனும் நெற்றியில் பட்டை மற்றும் குங்குமம் கையில் ஜின் முத்திரையுடன் இருக்கும் உருவம் தந்து ‘நாயனார் சொரூபஸ்துதி’ என்ற பாடலை அடிப்படையாக வைத்தே இந்த உருவம் திருவள்ளுவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்னும் விளக்கத்தையும் அந்த நூலில் கொடுத்துள்ளார்.

கோ. வடிவேலு செட்டியார் வெளியிட்ட நூலில் இருந்த திருவள்ளுவரின் உருவப்படம்.

திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் என்கிற நூலின் ஆங்கில பதிப்பில் வந்த படங்களை அநேகமானோர் தங்கள் வீடுகளில் வைத்து வணங்கியதாக சொல்லப்படுகிறது.

திருக்குறள் ஆங்கிலப் பதிப்பில் இருந்த திருவள்ளுவரின் உருவப்படம்.

1950களுக்கு முன் வெளியிடப்பட்ட படங்களில் திருவள்ளுவர் பூணூலுடனும் இருந்திருக்கின்றார்.

தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1952ல் வெளியிட்ட திருக்குறள் நூல் நயம் புத்தகத்தின் அட்டையில் திருவள்ளுவர்.


1950களில் திராவிட இயக்கங்ககளோடு தீவிரமாக இணைந்து பணியாற்றிய பாவேந்தர் பாரதிதாசன் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமச்செல்வன் என்பவரோடு சேர்ந்து, திருநீற்று பட்டை மற்றும் குங்குமம் போன்றைவைகளை கலாச்சார அடையாளமாக அல்லாமல் மத அடையாளமாகவும் ஆரிய திணிப்பாகவும் எண்ணி, இதெல்லாம் இல்லாமல் இருந்தால் தான் தமிழர் என்னும் முன்முடிவுடன் எடுத்த முயற்சியின் விளைவே நாம் இன்று திருவள்ளுவர் இப்படி தான் இருப்பார் என்று நம்பிக்கொண்டிருக்கும் திருவள்ளுவரின் படம்.எல்லிஸ் என்பவரின் எண்ணத்தில் இருந்து பெரிதும் வேறுப்பட்டதல்ல இவர்களின் எண்ணம். எல்லிஸ் கால்டுவெல் போன்றவர்கள் சமஸ்கிருதத்திற்கும் தமிழர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று மொழிந்த அதே தொனியிலானாது தான் பாரதிதாசன் மற்றும் ராம்செல்வன் அவர்களின் முயற்சி.இந்த இருவரும் கோபால் சர்மா என்பவரை அணுகி அவரால் வரையப்பட்டதே தற்போதைய திருவள்ளுவர் படம்.

கே.ஆர். வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் படம்.

திராவிட இயக்கத்தின் உந்துதலால் வரையப்பட்ட, ஆய்வுகளின் அடிப்படியில் அல்லாமல் யூகத்தின் அடிப்படையிலான இந்த படம் தான் திராவிட கழகங்களின் நீட்சியான அரசியல் கட்சியால் சட்டமன்றத்துக்குள் நிறுவப்பட்டு, பின் அவர்கள் ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்டு அவர்களாலேயே பிரபலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. நாமும் திருவள்ளுவர் இப்படி மட்டும் தான் இருந்திருக்க கூடும் என்று நம்பிக்கொண்டிருக்கின்றோம்.

இங்கு நாம் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்
*நாயனார் சொரூபஸ்துதி’ என்ற பாடலை அடிப்படையாக வைத்து கொடுக்கப்பட்ட உருவம் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கு திராவிட இயக்கங்களிடம் எந்த காரணமும் இருந்திருக்கவில்லை.
*பட்டையும் ருத்ராச்ச மாலையும் மத அடையாளங்களாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.காரணம்,அவைகள் நம் நாட்டின் கலாச்சாரத்தோடு எப்போதும் தொடர்பு கொண்டிருந்ததே.

மதசார்பின்மை என்பது நம் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு இருக்கின்றது.
“ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
பலவென் றுரைக்கிற் பலவேயாம்” என்ற கம்பரின் கடவுள் வாழ்த்து பாடலின் வரிகளே சான்று. கீதையிலும் கூட உருவம் கொண்ட மற்றும் உருவமற்ற வழிபாடுகளை பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது.கடவுளாக யாரை ஏற்றுக்கொண்டாலும்; எப்படி கொண்டாடினாலும் நம் சமூகம் ஏற்றுக்கொண்டே இருக்கின்றது,மாதா கோவிலில் பொங்கல் வைத்து விளக்கேற்றி வழிபடுவதும் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாக்கள் நடப்பதும் நம் ஊரில் மட்டுமே.
சந்தனம், குங்குமம், விளக்கு, பட்டை போன்ற குறியீடுகள் நம் தேச கலாச்சாரத்தோடு கலந்துவிட்டவை.
அப்படியிருக்க எல்லிஸ் மற்றும் கால்டுவெல் போன்றவர்களின் நீட்சியான திராவிட கழகங்கள் திருவள்ளுவர் உருவம் இப்படியெல்லாம் இருக்க கூடாது என்ற முடிவோடு உருவாக்கிய படம் நம் கலாச்சார குறியீடுகளை மழுங்கச்செய்யும் முயற்சிகளில் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும்.
புறக்கோலங்களுக்கு முக்கியம் தரவேண்டியதில்லை என்பதை வள்ளுவரும் கூட பறைசாற்றி இருக்கின்றார்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
ஆனால், இந்த புறக்கோலங்கள் பற்றிய எதிர்ப்புகள் அவற்றை மாற்றியமைத்த திராவிட கூடாரங்களில் இருந்து வருவதற்கு பதிலாக சில சான்றுகளை எடுத்துவைக்காமல் இருக்க நம்மால் முடியவில்லை.
நம் கலாச்சாரத்தை ஒட்டிய எத்தகைய வடிவிலும் வள்ளுவர் இருந்திருக்க கூடும். அந்த வகையில் எல்லிஸ் வெளியிட்ட நாணயத்தில் இருந்த வள்ளுவர்,வடிவேலு செட்டியார் வெளியிட்ட படத்தில் இருந்த வள்ளுவர், திராவிட கழகம் உருவாக்கிய வள்ளுவர், தற்போது காவி சாயம் பூசப்பட்ட வள்ளுவர்,புரோகிதர் போன்று உருவகப்படுத்தப்பட்ட வள்ளுவர் என்று வள்ளுவர் எப்படியும் இருந்திருக்க கூடும். எதையும் எதிர்க்க வேண்டியதில்லை.
வள்ளுவரை நம் கலாச்சாரத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் ஒரு ஜப்பானிய அல்லது சீன துறவி போன்றோ மேற்கத்திய உடைகளிலோ இல்லை ஆப்பிரிக்கா சமூகத்தை போன்றவராகவோ சித்தரித்தால் ஒரு வேலை எதிர்க்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
வள்ளுவரை சுற்றி திராவிட கூடாரம் ஏற்படுத்திவைத்து இருக்கும் இன்னும் சில மாயைகளை அடுத்தடுத்த தொடரில் அலசுவோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *